Sunday, April 25, 2010

கருடன் கொண்டு வந்த விமானம்

தேரழுந்தூரில் சகாவாக கருடன்


ஆமருவியப்பன்

கருடனும் பெருமாளும் ஒன்றாக சேவை சாதிக்கும் தலங்களில் அடுத்ததாக நாம் காணப்போகும் திவ்ய தேசம் தேரழுந்தூர். இத்தலத்தில் பெருமாள் தேவாதிராஜனாக நின்ற கோலத்தில் சங்கு சக்கரம், பத்ம முத்திரையுடன் சேவை சாதிக்கின்றார். பெருமாளுக்கு இடப்பக்கத்தில் மிக்க பக்திமையுடன் கருடன் உடன் சேவை சாதிக்கின்றார். இவ்வாறு பெருமாளுடன் கருடாழ்வார் உடன் சேவை சாதிக்க என்ன காரணம் என்று தெரிந்து கொள்ள ஆர்வமாக உள்ளதா வாருங்கள் அடியேனுடன் ?

தேவேந்திரன் ஒரு சமயம் ஒரு விமானத்தையும் வைர முடியையும் அளித்து இவற்றை எந்தெந்த பெருமாளுக்கு உகந்ததோ அங்கு சம்ர்பித்து விடு என்று பணித்தான். கருடனும் வைர முடியை கர்நாடக மாநிலத்தில் மைசூர் அருகில் உள்ள திருநாராயண புரத்தில் செல்லபிள்ளை சம்பத்குமாரரருக்கும் விமானத்தை தேரழுந்தூரில் ஆமருவியப்பனுக்கும் சமர்பித்தான். எனவே இத்தலத்தின் விமானம் கருட விமானம் ஆகும். விமானம் சாம்ர்பித்த கருடனுக்கு “ என்ன வரம் வேண்டும்? என்று வினவ , கருடனும் அர்ச்சை நிலையில் தேவரீர் இருக்க அடியேன் எதிரே நின்று எல்லா இடங்களிலும் சேவிக்கிறேன். ஆனால் அருகிலே நின்று அடியேன் தேவரீரின் பொன்னடிகளைச் சேவிக்க வேண்டும் என்று வரம் வேண்ட பெருமாளும் கருடனை அருகில் இருத்தி கொண்டதாக ஐதீகம்.

 ஸ்ரீ ஆளவந்தார் தன் ஸ்தோத்ர ரத்தினத்தில்
தாஸ ஸகா வாஹன ஆஸனம் த்வஜோ யஸ்தே விதாநம் வ்யஜனம், த்ரயீமய என்று கருடனின் ரூபங்களை விவரிக்கும்பக்ஷத்தில் ஸகாவான (தோழன்) நிலையை இந்த திவ்ய தேசத்தில், சேவிக்கலாம்.

பிரகலாதன் - பெருமாள் - கருடன்

கருட விமானமாகிய விதானத்தின் கீழ் நாச்சியார் (சத்யபாமா) இடத்தை தான் எடுத்துக்கொண்டு கருடனும் பெருமாளுக்கு சரி சமமாக பக்தியுடன் உயிரோட்டத்துடன், விரித்த அழகிய சிறகுகளுடனும், அஷ்ட நாகங்கள் திருமேனியெங்கும் விளங்க கூரிய நகங்களுடனும், சீரிய நோக்குடனும், முக மலர்ச்சியுடன் கரம் குவித்து
சந்தோகா! பௌழியா! தைத்திரியா! சாமவேதியனே! நெடுமாலே!
எனப்பாடப்பெற்ற பெருமாளுக்கு, வேத சொரூபனான வைநதேயன் தன் சிறகுகளால் விசிறிக்கொண்டு , பிற ஒலிகள் கேட்கா வண்ணம் சாம கானம் பாடிக்கொண்டிருக்கிறார். மற்ற இடங்களில் பிராட்டியின் சொல் கேட்டு அருள் புரியும் எம்பெருமான் இங்கே தன் நண்பனின் சொல் கேட்டு அருள் செய்து கொண்டிருக்கின்றான். எனவேதான் "புனிதா புட்கொடியாய் நெடுமாலே" என்கிறார் மங்கை மன்னன்.

பெருமாளுக்கு வலப்பக்கத்தில் பிரகலாழ்வானும் வணங்கியபடி இருக்கின்றான். இரணியனை அழித்த பிரகலாதனுக்கு அருள் புரிந்த நரசிம்ம மூர்த்தியின் உருவத்தைக் கண்டு அஞ்சாமல் அருகில் வந்த பிரகலாதனின் பக்தியை மெச்சி அவனுடைய வேண்டுகோளுக்கிணங்கி கண்ணனாக ஆமருவியப்பனாக சேவை சாதித்தார். மேலும் முக்திப்பேறு வேண்டி தொழுத மார்க்கண்ட முனிவர் கருவறையில் பெருமாளுக்கு அருகில் வலப்புறத்தில் குக்குடாசனம் என்ற ஆசன நிலையில் அமர்ந்தபடி சடைமுடியுடன் அஞ்சலி செய்த வண்ணம் தவக்கோலத்தில் இருக்கின்றார். மேலும் அகத்தியரின் சாபம் தீர கங்கையினும் புனிதமான காவிரித்தாயாரும் பெருமாளை நோக்கி தவக்கோலத்தில் இருக்கின்றாள்.

தேரழுந்தூரில் தற்போது திருப்பணிகள் நடந்து கொண்டிருக்கின்றன. வரும் மே மாதம் இருபத்திநான்காம் தேதியன்று ( 24-05-2010 ) விக்ருதி வருடம் வைகாசி மாதம் 10ம் நாள் அன்று சிறப்பாக சம்ப்ரோக்ஷணம் நடைபெற உள்ளது, அன்பர்கள் முடிந்தால் அன்று அங்கு சென்று பெருமாளின் அருள் பெறுமாறு வேண்டுகின்றேன். இனி இவ்வாறு சுபர்ணன் சாம கானத்தால் ஆமருவியப்பனை குளிர்விக்கும் இத்திருக்கோவிலின் சில சிறப்புகளைப் பற்றி காண்போமா?

ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப்பட்ட திவ்ய தேசங்களுள் 24வது திவ்யதேசம் திருவழுந்தூர் எனப்படும் தேரழுந்தூர். சோழநாட்டு நாற்பது திவ்ய தேசங்களிலும் இது 24வது திவ்யதேசம். மயிலாடுதுறை கும்பகோணம் மார்கத்தில் உள்ள குத்தாலம் என்ற ஊரில் இருந்து சுமார் 3 கி. மீ தூரத்தில் அமைந்துள்ளது இந்த திவ்ய தேசம். பெருமாள் சதுர்புஜத்துடன், அருகே ருக்மணி, சத்யபாமா முதலியோருடன், பசுங்கன்றுகளுடனும் சாட்சாத் க்ருஷ்ணனாக சேவை சாதிக்கின்றார். கவிசக்கரவர்த்தி கம்பர் பிறந்த தலம். கரிகால் சோழன் தலைநகராகவும் திகழ்ந்திருக்கின்றது இத்தலம் ஒரு காலத்தில். மூலவர் : தேவாதிராஜன்; வடமொழியில் கோசகன். இதன் தமிழாக்கமே ஆமருவியப்பன் என்பதாகும். சாளக்கிராம திருமேனி; கிழக்கு நோக்கிய திருமுக மண்டலம், நின்ற திருக்கோலம். சிற்பக்கலையின் உச்சி நிலைக்கும் மேம்பட்ட வடிவழகு. மூலவரின் திருமேனியில் நரம்புகள், நகங்கள், அழகு செய்யும் திருமுகம் சேவிக்க சேவிக்க தெவிட்டாதது. அவரது எழில் எழுத முடியாதது அதனால் தானே திருமங்கை மன்னன் ஆமருவியப்பனைக் " திருவுக்கும் திருவாகிய செல்வா " என்று கண்டு சொக்கி நின்று தன்னை பரகால நாயகியாக பாவித்து பாசுரங்கள் பாடினார்.
திருவுக் கும்திரு வாகிய செல்வா! தெய்வத் துக்கர சே! செய்ய கண்ணா! உருவச் செஞ்சுட ராழிவல் லானே! உலகுண்ட ஒரு வா! திருமார்பா!
ஒருவற் காற்றியுய் யும்வகை யின்றால், உடன்நின் ரைவர்என் னுள்புகுந்து ஒழியா தருவித் தின்றிட, அஞ்சிநின் னடைந்தேன் – அழுந்தூர் மேல்திசை நின்ற அம்மானே!
எழில் கொஞ்சும் ஆமருவியப்பன்

உற்சவர்: உபய நாச்சியார்களுடன் ஆமருவியப்பன். திருவுக்கும் திருவாகிய செல்வனாக, பட்டு பீதக ஆடை மிளிர பொன்னிற்கும் அழகு தரும் பேரொளி மேனியுடன், மனித குலத்தின் அடையாளமான பசு “அந்தோ நின்னடியின்றி மற்றறியேன் என்று கூறுவது போல ஆமருவியப்பனின் திருவடிகளை தன் நாவினால் தடவ,“ஆ ஆ என்றடியேற்கு இறையிரங்காய்” என்றுரைப்பது போல கன்றுக்குட்டி பெருமாள் திருமுகம் நோக்க கோசகனாய் திருமகளும் , புவிமகளும் உடனிருப்ப எழிலாக சேவை சாதிக்கின்றார். இவரது சௌந்தர்யத்தில் மயங்கி திருமங்கையாழ்வார் பரகாலநாயகியாகி மங்களாசாசனம் செய்துள்ளார்.

செங்கமலவல்லித்தாயார்

தாயார் : செங்கமலவல்லி. அகலகில்லேன் இறையும் என்று அலர்மேல் மங்கை உறை மார்பா” என்றபடி விளங்குபவள் பெரிய பிராட்டியார் என்கிற திருமகள். இத்தலத்தில் தாயார் இரு புறமும், ஆனைகள் மாலை கொண்டு வழிபடும் நிலையில் செழுந்திருக்கோலம் கொண்டு சேவை சாதிக்கின்றாள். பிராட்டியின் அழகையும் கருணையையும் திருமங்கையாழ்வார், ’செங்கமல திருமகளும் புவியும்’ என்று தொடங்கும் பாசுரத்தில் குறிப்பிட்டிருக்குன்றார். மூலவருக்கு முன்னால் உற்சவர் “சுவர்ண ரஜஸ்ருதாம்” என்ற படி பொன்னணிகள் திருமேனியெங்கும் மிளிர வெள்ளியாலான மண்டபத்தில் செல்வம் அளிக்கும் திருமகள் சேவை சாதிக்கின்றாள். அடியவர்களின் வேண்டுதலுக்கு உடனே அருள் புரிபவள் தாயார். தாயாரின் முன் மண்டபத்தில் அஷ்ட லக்ஷ்மிகளின் சுதை சிற்பங்கள் வாகனங்களுடன் சிறப்பாக அமைக்கப்பட்டுள்ளன.

தீர்த்தம் : தர்சன புஷ்கரிணி, காவேரி , கஜ புஷ்கரிணி.
  விமானம்: கருட விமானம்
  ப்ரத்யக்ஷம்: தர்மதேவதை, உபரிசரவஸு, காவேரி, கருடன், அகத்தியர். மங்களாசாசனம் : திருமங்கையாழ்வார்.

  தந்தை காலில் பெருவிலங்கு தாளவிழ நள்ளிருட்கண் வந்த 
 எந்தை பெருமானார் மருவி நின்ற ஊர் போலும் 
முந்தி வானம் மழை பொழிய மூவா உருவுன் மறையாளர்
அந்தி மூன்றும் அனலோம்பும் அணியார் வீதி அழுந்தூரே. என்பது ஆலி நாடன் முதல் பாசுரம்.

யமுனைியிலிருந்து கண்ணன் தேரழுந்தூருக்கு எழுந்தருளிய வரலாறு. கோகுலத்தில் ஒரு நாள் ஸ்ரீ கிருஷ்ணர் ஆநிரைகளை மேய்த்துக் கொண்டிருந்தான். அப்போது நீர் பருக கண்ணன் சில நண்பர்களுடன் யமுனை ஆற்றுக்கு சென்ற போது நான்முகன் அந்த ஆநிரைகளை கள்ளத்தனமாக ஓட்டிக்கொண்டு வந்து தேரழுந்தூரிலே மறைத்து வைத்தான். திரும்பி வந்து பசுக்கூட்டங்களை காணாத மாயம் செய்யும் மாலவன் நொடிப்பொழுதில் பிரம்மனின் செயலை அறிந்து புதியதொரு ஆநிரையை உருவாக்கி ஆயர்களை மகிழ்வித்தான். ஒரு வருட காலம் இவ்வாறு தானே அனைத்துமாக மாயம் காட்டினான் கண்ணன், தன் தோல்வியை உணர்ந்து நான்முகன் கண்ணனின் அடிபணிந்து வணங்கி, மாலே! மணிவண்ணா! நெடியானே! கமலக்கண்ணா! விண்ணவர்க்கு மேலாய்!, அடியேனின் பிழை பொறுத்து, அறியாமையினால் நான் ஒளித்து வைத்த ஆநிரைகளுடன் தேரழுந்தூருக்கு எழுந்தருளி திருக்கோயில் கொள்ள வேண்டும் என்று வேண்ட, கண்ணன், தானே பரமபதத்தில் விளங்கும் மாலவன் என்பதை உலகத்தினருக்கு உணர்த்த நான்கு திருக்கரங்களுடன் சங்கு சக்கரம் தாங்கி , ஆமருவி, நிரை மேய்க்கும் நிலையில் இன்றும் எழிலாக சேவை சாதிக்கின்றார்.
செங்கமலவல்லித்தாயார்
பெருமாள் இங்கு கோஸகனாக வந்ததற்கு இன்னொரு வரலாறும் உண்டு. ஒரு சமயம் திருமாலும் சிவபெருமானும் சொக்கட்தான் ஆடினார்கள். உமையம்மை ஆட்ட நடுவராக இருந்தாள். ஆட்டம் முடிந்தது. திருமாலே வென்றதாக உமை கூற சிவபெருமான் சினம் கொண்டார், அன்னையை பசுவாக மாறும்படி சபித்தார். உமையைப் பிரிந்த சிவபெருமான் அந்தணர் வேடம் பூண்டு சந்தன மரத்தின் கீழ் வேதம் ஓதி வந்தார். சிவபெருமான் வேதபுரீசர் ஆனார். பசுவைக் காக்க வேண்டியவராக இருந்த பெருமாள், கோஸகனாக, ஆமருவியப்பனாக ஆனார். இவ்வாறு கௌரியின் சாபம் தீரும் வரை காப்பது தன் கடமை என்று தன்னருகிலேயே வைத்துக் கொண்தார் பெருமாள். கண்ணன் பசு மேய்த்த் ஐதம் மேய்த்த மங்கலம்( மேக்கிரி மங்கலம்), தொழுவம் இருந்த இடம் தொழுதலாங்குடி என்றும், பசுக்கள் நிறைந்த பகுதி என்பதால் கோமல் என்றும் ஆ நான்கு ஊர்களில் மலிந்த பகுதி ஆனாங்கூர் என்றும், ஆ- ஆடுகின்ற காவிரித்துறை ஆடுதுறை என்றும் உமையாகிய பசு முக்தி பெற்ற தலம் கோமுத்தீச்சுரம்- திருவாவடுதுறை என்றும் இப்ப்குதியில் உள்ள ஊர்களின் பெயர்கள் அமைந்துள்ளன. இவ்வரலாற்றை நினைவு படுத்தும் வகையில் மாசிப் புனர்பூச நாள் மாலை பெருமாள் வில்லேந்திய இராமனாகத் திருக்கோலம் கொண்டு, வேதபுரீசருக்கு சேவை சாதிக்கும் நிகழ்ச்சி இன்றும் நடைபெறுகின்றது.

இனி இத்தலத்திற்கு தேரழுந்தூர் எனப்பெயர் வர என்ன காரணம் என்று பார்ப்போமா? உபரிசரவஸு என்னும் மன்னன், வானில் உலா வரும் தேரினைப் பெற்றிருந்தான். அவன் பெற்ற வரத்தின் விளைவால், அவனது தேரின் நிழல் எந்த உயிர்களின் மீது பட்டாலும் அவ்வுயிர்கள் துன்பம் அடைந்து வந்தன. இதானால் ஆணவம் கொண்டிருந்த மன்னன் ஒரு சமயம் ஆமருவியப்பர் ஆநிரை மேய்த்துக் கொண்டிருந்த போது மேலே தன் தேரிலே சென்றான், அத்தேரின் நிழல் பட்டு பசுக்கள் துன்பம் அதைந்தன, மன்னனின் செருக்கை ஒடுக்க கண்ணன் அந்த நிழல் மீது தன் திருவடி விரலை அழுத்த அடுத்த கணமே அந்த தேர் கீழே அழுந்திற்று, தேர் மட்டுமா அழுந்தியது? மன்னனின் ஆணவமும்தான். அவன் கண்ணன் தாள் பணிந்து பிழை பொறுக்க வேண்டினான். பின் அகத்திய முனிவரின் ஆலோசனைப்படி தர்ஷபுஷ்கரிணியில் நீராடி அதன் கரையில் அமர்ந்து எம்பெருமானின் அருளை வேண்டி தவம் செய்ய பெருமாள் அவனுக்கு ப்ரத்யக்ஷமாகி சேவை சாதித்தார். இவ்வாறு உபரிர்சவஸு என்ற மன்னனின் தேர் இங்கே அழுந்தப்பெற்றமையால் தேரழுந்தார் என்ற பெயர் வந்தது.

அதே போல இத்தலத்திற்கு திருவழுந்தூர் என்ற பெயரும் உள்ளது. திரு – திருமகள், அழுந்துதல் – நிலைபெற்றிருத்தல் என்ற பொருளில் திருமகளாகிய மஹாலக்ஷ்மித் தாயார் நிலை பெற்ற ஊர் என்று கூறப்படுகின்றது. இத்தலத்தின் புராணப்பெயர் கிருஷ்ணாரண்யம் ( கிருஷ்ணன் காடு) ஆகும். காவிரியின் தென் கரையில் அமைந்த திவ்ய தேசங்களில் இது பத்தாவது திவ்ய தேசம்.
மற்றொரு வரலாறும் உண்டு. உபரிசவஸு தன் மனைவியுடன் புஷ்பக விமானத்தில் சென்று கொண்டிருந்த போது தேரழுந்தூருக்கு வந்ததும் அரசி கீழே இறங்கி தேவராஜனை வணங்க விரும்பினாள். அரசன் மமதையுடன் “ இவன் என்ன என்னைவிதப்பெரிய ராஜனோ!” என்று சொல்லி விமானத்தை இறக்க மறுத்தான். தேவாதிராஜன் அரசனை திருத்த எண்ணினான். உடனே கருடன் விமானத்தின் நிழலை தன் கால் பெருவிரலால் தொட்டார். விமானம் கோயிலின் முன்பு உள்ள குளத்தில் விழுந்தது. அரசன் நீந்தி வந்து அங்கு தவம் புரியும் அகத்தியரை வணங்கி உய்யும் வழி வேண்டினான். அவர் சொல்படி தவ்ம் புரிந்து என்பெருமான் தரிசனம் பெற்றான். இரண்டு வரங்களையும் வேண்டினான். குளத்தில் விழுந்த விமானம் மேலே வரவும், இக்குளத்தில் நீராடி தேவாதிராஜனை தரிசிக்கும் பக்தர்களுக்கு வேண்டிய வரங்களை கொடுக்கும் படியும் வேண்டினான். ஆகவே இன்றும் தன்னை தரிசிக்கும் பக்தர்களுக்கு எல்லா நலங்களையும் வளங்களையும் அருளுகின்றார் ஆமருவியப்பன்.

பெருமாளை சேவித்தும் மன்னன் ஆணவம் அடங்கவில்லை. எனவே ஆமருவியப்பன் “மன்னனே! நீ செய்த பிழைக்கு பரிகாரமாக எமக்கு அன்று கடைந்த வெண்ணெய் நிரம்பிய ஆயிரம் குடங்களைக் காணிக்கையாக அர்ப்பணிக்க வேண்டும்” என்று கேட்க மன்னனும் தன் செல்வ செருக்கால், நம்மால் முடியாததா? என்று நினைத்து அவ்வாறே செய்வதாக உறுதி கூறினான். தன் அரசு பதவிகளை பயன்படுத்தி குறிப்பட்ட நாளில் 999 குடங்களைப் பெர்று விட்டான். ஒரு குடம் வெண்ணெய் மட்டும் கிடைக்கவில்லை. இப்போதாவது தன் இயலாமையை எம்பெருமானிடம் தெரிவித்திருக்கலாம் ஆனால் ஆணவம் தடுத்தது, ஒரு குடம் தானே! மூடி வைத்து விட்டால் எம்பெருமான் ஒவ்வொன்றாகவா பார்க்கப்போகிறான் என்று எண்ணி வெண்ணெய் குடங்களுக்கிடையில் வெறும் குடத்தையும் வைத்து விட்டான். எல்லாம் அறிந்த மாயன் மன்னனின் அறியாமையை நீக்க எல்லா குடத்திலிருந்த வெண்ணையையும் மறையுமாறு செய்து விட்டார். எந்த குடத்தை திறந்து பார்த்தாலும் வெண்ணெய் இருக்கவில்லை. மன்னன் தான்து தவறை உணர்ந்தான். பெருமாள் வெண்ணெய்க்காக வரவில்லை தன்னைத் திருத்தி பணிகொள்ள வந்தான் என்று உணர்ந்து வெட்கி நின்று எம்பெருமானின் திருவடியில் புகல் அடைந்து நின்றான். இந்நிகழ்ச்சி நடைபெற்றது தை அமாவாசை. அன்றுதான் உபரிசரவசு தை அமாவாசையன்று திருக்குளத்தில் நீராடி அருள் பெற்றதால் இக்குளம் தரிச புஷ்கரணி என்று அழைக்கப்படுகின்றது. தரிசம் என்றால் அமாவாசை. எனவே தை அமாவாசையன்று பெருமாளை வழிபடுவது மிகவும் சிறந்தது. அன்று பெருமாள் வெள்ளி கருட வாகனத்தில் திருவீதி உலா வந்து அருள் பாலிக்கின்றார். மேலும் சித்திரை அட்சய திருதியையன்று காலை, வைகாசி பிரம்மோற்சவத்தின் 4ம் நாள் இரவு, புரட்டாசி திருவோணம் ஸ்ரீ தேசிகர் திருநாள் காலை, ஐப்பசி திருவோணம் பவித்ரோத்சவம் காலை என்று வருடத்தில் ஐந்து முறை ஓடி வரும் புள்ளில் அமர்ந்து கருட சேவை அருளுகின்றார்.

அகத்திய முனிவர் வாதாபி என்னும் அசுரனை உண்டு ஜீரணம் செய்த பாவம் தீர தென்னழுந்தையில் மன்னிநின்ற ஆமருவியப்பனின் அடிபணிந்து வீடுபேறடைந்தார். இவ்வரலாற்றுக்கு ஆதாரமாக அகத்தியர் ஸ்ரீ வாசுதேவர் சன்னதியில் காட்சி தருகின்றார்.

பிரகலாதன் நரசிம்ம அவதாரத்தை கண்டு பயந்து பெருமாளின் சாந்த சொரூபத்தை காட்ட வெண்டும் என்று வேண்ட சினம் தணிந்த சிங்க பெருமானாக சேவை சாதிக்க பிரகலாதன் அச்சம் குறையாதிருக்க இந்த தலத்தில் அமர்ந்துள்ள ஆமருவியப்பனாக சேவை சாதித்ததால் இத்தலத்தில் பெருமாளுடன் பிரகலாதனும் இடம்பெற்று நித்ய பூஜைகள் பெறுகின்றார்.

அகத்திய மாமுனிவர் ஒரு சமயம் காவிரித்தாயை அணுகி தன்னை மணந்து கொள்ள விண்ணபிக்க காவிரி அதனை மறுக்க, இதனால் கோபமடைந்த அகத்தியர் காவிரியைக் குடத்தில் அடைக்க, ஒரு சமயம் தரையில் வைக்கப்பட்ட அக்குடத்தை காகமாக விநாயகர் சாய்க்க காவிரி வழிந்தோடியது இதனால் சினம் கொண்ட அகத்திய முனிவர் காவிரியால் வளம் பெரும் பகுதியில் உள்ளோர் அனைவரும் துன்பமுற்று வறுமையுறட்டும் என்று சாபம் தர, இச்சாபத்தை போக்க காவிரித்தாய் தேரழுந்தூரில் தேவாதி ராஜனை குறித்து தவமிருந்து இந்த சாபத்தை துடைத்தாள் என்பது ஐதீகம். எனவே தான் கருவறையில் காவிரித்தாயும் தவநிலையில் எழுந்தருளியுள்ளாள்.

கம்பன் பிறந்தவூர், காவேரி தங்கும் ஊர், கும்பமுனி சாபம் குலைந்த ஊர்” என்னும் பழம் பாடல் இவ்வரலாற்றை இயம்புகின்றது.

ஆமருவிநிரை மேய்த்த அமரர் கோமான் அணி அழுந்தூர் நின்றான் என்று திருநெடுந்தாண்டகத்தில் மங்களாசாசனம் செய்துள்ளார் திருமங்கையாழ்வார். குன்றால்மாரி தடுத்தவனைக் குலவேழம் அன்று
பொன்றாமை அரனுக்கு அருள் செய்த போரேற்றை அன்றாலின் நறுநெய் அமர்ந்துண்ண அணியழுந்தூர் நின்றானை அடியேன் கண்டு கொண்டு நிறைந்தேனே.

இந்த திவ்ய தேசத்தில் அமைந்துள்ள மற்ற சன்னதிகள் வாசுதேவர் சன்னதி, நரசிம்மர் சன்னதி, இராமர் சன்னதி, விஷ்வக்சேனர் சன்னதி, தேசிகர் சன்னதி, ஆழ்வார்கள் சன்னதி, ஆண்டாள் சன்னதி, கம்பர் சன்னதி மற்றும் அனுமன் சன்னதி ஆகும். கம்பரும் அவரது மனைவியும் பெருமாளை வணங்கிய நிலையில் காட்சி தருகின்றனர்.

திருமங்கையாழ்வார் 45 பாசுரங்களினால் அணியழுந்தூர் நின்ற கோவை மங்களாசாசனம் செய்துள்ளார். தேமருவு பொழிலிடத்து மலர்ந்த போதைத் –தேனதனை வாய்மடுத்து உன் பெடையும் நீயும் பூ மருவியினிதமர்ந்து பொறியில் ஆர்ந்த – அறுகால சிறுவண்டே தொழுதேன் உன்னை ஆமருவி நிரைமேய்த்த அமரர் கோமான் அணி அழுந்தூர் நின்றானுக்கு இன்றே சென்று, நீமருவி அஞ்சாதே நின்று ஒருமாது நின் நயந்தாள் என்று இரையே இயம்பிக்காணே.!
“நீலமேனி ஐயோ! நிறை கொண்டது! என் நெஞ்சினையே என்று அரற்றி எப்படியாவது எம்பெருமானிடம் தன் காதலை சொல்லவேண்டும் எனத்தவிக்கிறாள். அப்போது ரீங்காரம் செய்து கொண்டு தன் பெடையுடன் கூடி இருக்கும் வண்டைக் கண்டு, இவ்வண்டு பெருமாளின் திருமார்பை அலங்கரிக்கும்துழாய் மாலையில் அமரக்கூடியது என்பதையறிந்து ஆழ்வார் வண்டை தூது விடுகின்றார். எனவே தேன் வெள்ளம் மிகுந்திருக்கும் மலர்களில் மதுவுண்டு, உன் பெடையொடு உறவாட மகிழ்ந்து வரும் ஆறுகால்களையுடைய சிறு வண்டே! உன்னை முதலில் வணங்குகிறேன் என்று கூறினார். ( ஞான வெள்ளம் நிறைந்தோர்களினூடே சென்று அறிவைப்பெற்ற்ர் வரும் ஆசாரியர்களாகிய குருவையும், குருவியின் மனைவியையும், குருவின் மகனையும் வணங்குகிறேன் என்பது உள்ளுறை கருத்து). உன்னை முன்னிலையாக ஒன்று வேண்டுகின்றேன். பசுக் கூட்டங்களை விரும்பி மேய்ப்பவனும், அணியழுந்தூரிலே நின்று காப்பவனும் ஆகிய எம் தலைவனிடம் இப்போதே சென்று அஞ்சாமல் அதோ உன்னை விரும்பி என் அருளுக்காக ஏங்கி, நின்னை நயந்து நிற்கின்றாள் ஒரு பேதை என்று மட்டும் சொல்லிவா என்கிறாள் பரகாலநாயகி. ( வண்டாகிய குருவின் மூலம் ஒரு வார்த்தை சொன்னால் போதும் பெருமாள் உடனே அருள் புரிவான் என்பது கருத்து). மேலும் மணவாள மாமுனிகளும் இத்தலத்து தேவாதிராஜனை மங்களாசாசனம் செய்துள்ளார்.

வருடம் முழுவதும் திருவிழாதான் இத்தலத்தில் சித்திரையில் வருடப்பிறப்பு, ஸ்ரீராம நவமி, வசந்த உற்சவம், அட்சய திரிதியை கருட சேவை, உடையவர் உற்சவம், வைகாசி திருவோணத்தை தீர்த்த நாளாகக் கொண்டு பத்து நாள் பெருவிழா, ஆடியில் சிறப்பாக ஆடிப்பூரம், பதினெட்டாம் பெருக்கு, தாயாருக்கு வெள்ளிகிழமைகளில் சிறப்பு திருமஞ்சனம், ஜேஷ்டாபிஷேகம். ஆவணியில் ஸ்ரீஜெயந்தி உறியடி உற்சவம், புரட்டாசியில் தேசிகர் உற்சவம், தாயாருக்கு நவராத்திரி உற்சவம். ஐப்பசியில் திரு பவித்திர உற்சவம். கார்த்திகை கலியன் உற்சவம். மார்கழியில் பகல் பத்து, பத்தாம் நாள் இரவு திருமங்கையாழ்வார் திருவடி தொழுதல், மோகினி அவதாரம், வைகுண்ட ஏகாதசி இராப்பத்து. தை பொங்கல் செல்வர் திருமஞ்சனம், கனு பார் வேட்டை, நான்காம் நாள் ஏகாசன சேவை. அமாவாசை பெரிய திருமஞ்சனம் கருட சேவை, வெள்ளிக்கிழமைகளில் தாயார் திருமஞ்சனம். மாசி புனர் பூசம் பெருமாள் இராமபிரானாக திருக்கோலம் கொண்டு வேதபுரீசருக்கு காட்சி தருதல். பங்குனி உத்திரம் 10 நாள் உற்சவம், உத்திரத்தன்று காலை தீர்த்தவாரி மாலை திருக்கல்யாணம்.

முன்னமே கூறியது போல வரும் மே மாதம் இருபத்திநான்காம் தேதியன்று (24-05-2010) விக்ருதி வருடம் வைகாசி மாதம் 10ம் நாள் அன்று சிறப்பாக சம்ப்ரோக்ஷணம் நடைபெற உள்ளது, அன்பர்கள் முடிந்தால் அன்று அங்கு சென்று பெருமாளின் அருள் பெறுமாறு வேண்டுகின்றேன்