Saturday, February 23, 2008

பார்த்தசாரதிப் பெருமாள் மாசி மக கருட சேவை

"ப்ளீஸ்॥ப்ளீஸ்... கண்டிப்பாக 21ம் தேதி பார்த்தசாரதியின் கருட சேவை படத்தைப் போடுங்கள்... நேரில் பார்த்து 4 வருடங்களாகின்றது.."

என்ற அன்பரின் வேண்டுகோளுக்காக பார்த்தசாரதிப்பெருமாளின் மாசி மக தீர்த்தவாரி கருட சேவை கோப்புப் படங்கள்.


புகைப்படங்கள் நன்றி எனது நண்பர் திரு S.A நரசிம்மன் அவர்கள்.

பார்த்தசாரதிப் பெருமாள்
கருட வாகனத்தில் சேவை சாதிக்கும் பெருமாள்
மெரீனாக் கடற்கரையில் பெருமாள்
தீர்த்தவாரி
பெருமாள் ஏகாந்த சேவை
இரவு சேஷ வாகன சேவை
சேஷ வாகன சேவை ( Close up)

Thursday, February 14, 2008

திருவல்லிக்கேணி கருட சேவை

பார்த்தசாரதிப்பெருமாள் கருட வாகனத்தில்

பெருமாள் கையில் சக்கரம் இல்லாமல், முறுக்கு மீசையுடன் வேங்கட கிருஷ்ணர் என்ற திரு நாமத்துடனும், பாரதப் போரில் அர்ச்சுனனுக்கு தேரோட்டியாக, பார்த்தசாரதியாக தேர் ஓட்டிய போது பீஷ்மரின் அம்புகளால் பட்ட காயங்களின் வடுக்களுடன் இந்த கலி யுகத்திலும் சேவை உற்சவராக சேவை சாதிக்கும் திவ்ய தேசம் இரவியின் கதிர்கள் நுழைந்தறியாத திருவல்லிக்கேணி. இத்தலத்தில் பெருமாள் வேங்கட கிருஷ்ணர், தெள்ளிய சிங்கர், கஜேந்திர வரதர், அரங்க நாதர், சக்கரவர்த்தித்திருமகன் என்று ஐந்து கோலங்களில் சேவை சாதிக்கின்றார். ஐந்து பெருமாள்களுக்கும் பிரம்மோற்சவம் சிறப்பாக நடைபெறுகின்றது. ” சித்திரையில் ஸ்ரீ பார்த்தசாரதிப் பெருமாள் பிரம்மோற்சவம். வைகாசையில் ஸ்ரீ கஜேந்திர வரதர் பிரம்மோற்சவம். 

தெள்ளிய சிங்கர் கருட வாகன சேவை (Close up)

ஆனியில் ஸ்ரீ அழகிய சிங்கர் பிரம்மோற்சவம்
பங்குனியில் இராம நவமியை ஒட்டி இராமருக்கு பிரம்மோற்சவம்.
பிரம்மோற்சவத்தின் மூன்றாம் நாள் காலை தங்க கருட சேவை சிறப்பாக நடைபெறுகின்றது. காலை 5:30 மணியளவில் கோபுர தரிசனம் சிறப்பு , பின் பெரிய மாடவீதியுலா வருகின்றார் பெருமாள். மண்டகப்படி நடைபெறுகின்றது பெருமாளுக்கு, பட்டுப் பீதாம்பரங்கள் வந்து மலையாக குவிகின்றன.
சிறுவர்கள் தங்களுடைய சிறிய(miniature) கருட வாகன பெருமாளை ஏழப்பண்ணிக் கொண்டு வருவது சிறப்பு.  ஆனி பௌர்ணமியன்று கஜேந்திர மோக்ஷம்.
தெள்ளிய சிங்கர் கருட சேவை
மாசி மகத்தன்று அதிகாலை சமுத்திரக் கரைக்கு கருட வாகனத்தில் பார்த்தசாரதிப் பெருமாள் எழுந்தருளி தீர்த்தவாரி கண்டருளுகிறார். இவ்வருடம் 21-02-08 அன்று மாசி மகம், பெருமாள் அருள் இருந்தால் அவரின் தீர்த்தவாரி கருட சேவையை அன்பர்களுக்கு அளிக்க முயற்சி செய்கின்றேன்.

Thursday, February 7, 2008

திருநாங்கூர் பதினொரு கருட சேவை- 4

பதினொரு பெருமாள்களின் மங்களாசாசனமும் கருட சேவையும்

அரங்கனே நடத்தி வைத்த மஞ்சள் குளி, மணிகர்ணிகையாற்றில் கண்ட ஆழ்வாரும் குமுதவல்லி நாச்சியாரும், சிந்தனைக்கினியானும் திருமணிமாடக் கூடத்தில் ஆஸ்தானத்தில் இரவில் எழுந்தருளுகின்றனர். கருடசேவையன்று காலை முதலில் ஆழ்வார் முன் திருப்பாவை சாற்றுமுறை செய்யப்படுகின்றது. கருடசேவைக்காக மற்ற பத்து திவ்ய தேசத்து பெருமாள்களும் பல்லக்கில் திருமணிமாடக்கூடத்திற்க்கு எழுந்தருளுகின்றனர். ஒவ்வொரு பெருமாளுக்கும் ஒவ்வொரு வித அலங்காரம். தன் அன்பனைக் காண அற்புத அலங்காரத்தில் வருகின்றனர் பெருமாள்கள் அனைவரும். அவர்கள் வந்த அழகைக் காணுங்களேன்.வேடார் திருவேங்கடம் மேய விளக்கான திருவெள்ளக்குளம் அண்ணன் பெருமாள் பட்டுப் பீதாம்பரங்கள் தொங்க எழிலாக பல்லக்கில் வந்தார் திருமணிமாடக் கூட கோவில் மற்றும் புஷ்கரிணிக்கு இடையில் அமைக்கப்பட்டுள்ள பிரம்மாண்ட பந்தலுக்கு.திருசெம்பொன்செய் கோயிலினுள்ளே அல்லிமாமலராள் த்ன்னொடும் அஞ்சனக்குன்றம் நின்றதொப்ப ஹேமரங்கர் திருமேனி முழுவது செம்பொன்னாக மின்ன வந்தார் .

 
மின்னனைய நுண்மருங்குல் மெல்லியற்கா இலங்கை வேந்தன் முடியொருபதும் தோளிருபதும் போயுதிர தன்னகரிற் சிலை வளைத்து அன்று இலங்கை பொடி செய்த திருவைகுந்த விண்ணகரத்து வைகுண்ட நாதர் ஆதி சேஷன் குடை பிடிக்க அழகாக அம்ர்ந்து வந்தார் பல்லக்கில்

அங்கையால் அடி மூன்று நீரேற்று அயன் அலர் கொடு தொழுதேத்த கங்கை போதரக்கால் நிமிர்த்தருளிய திருவண்புருடோத்தமத்து புருடோத்தமர் செங்கோல் தாங்கி செழுமையாக வந்தார் அன்ன நடையிட்டு.

  கன்றதனால் விளவெறிந்து கனியுதிர்த்த காளை காமருசீர் முகில் வண்ணன், காலிகள் முன் காப்பான் குன்றதனால் மழை தடுத்த திருஅரிமேய விண்ணகத்து குடமாடு கூத்தர் கூத்தாடி வந்தார் எழிலாக.

 
இவ்வாறு மெல்ல மெல்ல எல்லா திவ்ய தேசத்துப் பெருமாள்களும் எழுந்தருளுகின்றனர் பந்தலுக்கு முதலில் சிறிதாக் இருந்த மக்கள் கூட்டம் பெரிதாகிக் கொண்டே போகின்றது, ஒவ்வொரு பெருமாளாக வர வர மலர்களை நாடி வண்டுகள் செல்வது போல பக்தர்களின் கூட்டம் அப்பெருமாளை சேவிக்க நகர்ந்து செல்கின்றனர். புகைப்படம் எடுப்பவர் சிலர், வீடியோப் படம் எடுப்பவர் சிலர், பாசுரம் சேவிப்போர் சிலர், பெருமாளை கண்ணாரக் கண்டு சேவிப்போர் பல்ர் என்று தமிழகத்தின் அனைத்து பிரதேசங்களிலிருந்து வந்த பக்தர்கள் குழுமுகின்றனர் பந்தலில். சுமார் பன்னிரண்டு மணியளவில் அனைத்து பெருமாள்களும் வந்து சேர அவர்களை மங்களாசாசனம் செய்ய எழுந்தருளுகின்றார் குமுதவல்லி மணாளர் மணவாள மாமுனிகளுடன்.


 
பின் மங்களாசாசனம் துவங்குகின்றது ஒவ்வொரு பெருமாளாக ஆழ்வாருக்கு சேவை சாதிக்கும் போது அந்தப் பெருமாளை ஆழ்வார் மங்களாசாசனம் செய்கிறார் அந்த திவ்ய தேசத்து பாசுரத்தின் முதல் பாடலை பக்தர்கள் அனைவரும் சேவிக்கின்றனர். பின் ஆழ்வார் பெருமாளை வலம் வருகின்றார், ஆழ்வாருக்கு அந்தந்த திவ்ய தேசங்களிலிருந்து வந்த பரிவட்டம் கட்டப்பட்டு மரியாதை செய்யப்படுகின்றது. பதினோரு திவ்ய தேசப் பெருமாள்களின் மங்களாசாசனம் நிறைவுற்றதும் மணவாள மாமுனிகள் எழுந்தருளுகின்றார். 
அவர் தம் ஆச்சார்யராம் திருமங்கையாழ்வாரை தாம் திருமங்கையாழ்வாரின் வடிவழகிலீடுபட்டு அருளிய வடிவழகு சூர்ணிகையும் மற்றும்


வேலணைத்தமார்பும், விளங்கு திருவெட்டெழுத்தை
மாலுரைக்கத்தாழ்த்த வலச்செவியும்,
தாளிணைத் தண்டையும், தார்க்கலையன் நன்முகமும்
கண்டு களிக்குமென்கண்

என்று மற்ற தனியன்களாலும் மங்களாசாசனம் செய்கின்றார். அப்போது பகதர்களும் அந்த தனியன்களை சேவிக்கின்றனர். பின் அனைத்து பெருமாள்களும் மணிமாடக்கோவிலின் உள்ளே எழுந்தருளுகின்றனர்.
மாலை 4 மணி அளவில் பதினொரு திவ்ய தேசத்து எம்பெருமான்களுக்கும் திருமங்கை ஆழ்வாருக்கும் ஏக காலத்தில் திருமஞ்சனம் நடைபெறுகின்றது. திருமங்கையாழ்வாரின் சிறப்பு ததியாரதனை ( அன்ன தானம்) என்பதால் அனைத்து திவ்ய தேசங்களிலும் ததியாராதானை சிறப்பாக நடைபெறுகின்றது. கருட சேவைக்கு செல்பவர்கள் உணவைப் பற்றி கவலைப்படத்தேவையில்லை.

மாலை 6 மணியளவில் திருமஞ்சனம் முடிந்து பெருமாள்கள் அனைவரும் கருட வாகனத்திலும் ஆழ்வார் ஹம்ஷ வாகனத்திலும் எழுந்தருளுகின்றனர். பின்னர் அலங்காரம் துவங்குகின்றது. மாலைகள் வர ஆரம்பிக்கின்றன. மாலைகள் மேல் மாலைகள் அமர்கின்றன, நடு நடுவே பட்டு பீதாம்பரங்கள் வருகின்றன அவையும் பெருமாள்களுக்கு சார்த்தப்படுகின்றன. பதினொரு கருட சேவையைக் காண வரும் பக்தர்கள் கூட்டம் அதிகரித்துக் கொண்டே செல்கின்றது , கூட்டம் அலை மோதுகின்றது என்றுதான் சொல்ல வேண்டும். அலை அலையாக பக்தர்கள் ஒவ்வொரு பெருமளாக சென்று சேவித்து புறப்பாட்டிற்க்காக காத்து நிற்கின்றனர். பெருமாளின் கருட சேவையை கண்டு களியுங்கள்.

ஹம்ச வாகனத்தில் குமுதவல்லி நாச்சியாருடன் 
திருமங்கையாழ்வார். திருமணிக்கூட வரதராஜப் பெருமாள்
 திருத்தேவனார்தொகை மாதவப்பெருமாள் திருஅரிமேய விண்ணகரம் குடமாடு கூத்தர் திருதெற்றியம்பலம் பள்ளி கொண்ட பெருமாள் திருமணிமாடக்கோவில் நாராயணப் பெருமாள் திருத்தேவனார்தொகை மாதவப்பெருமாள் திருவெள்ளக்குளம் அண்ணன் பெருமாள்
அன்று நள்ளிரவு மணவாள மாமுனிகள் முன் செல்ல, ஹம்ச வாகனத்தில் திருமங்கையாழ்வாரும் குமுத வல்லித் தாயாரும் தொடர, ஏகாதச பெருமாள்களும் எம்பெருமானை எப்போதும், எல்லா காலத்திலும் தாங்கும் பேறு பெற்ற பெரிய திருவடியாம், வேத சொரூபன் கருட வாகனத்தில் எழுந்தருளி சேவை சாதிக்க திருவீதிப் புறப்பாடு நடைபெறுகின்றது. பதினோரு பெருமாள்களும் தெய்வப்புள்ளேறி ஒரே சமயத்தில் திருநாங்கூரின் நான்கு மாட வீதிகளையும் சுற்றி வரும் அந்த அழகைக் காண கண் கோடி வேண்டும். பூர்வ ஜன்ம புண்ணியத்தால் மட்டுமே அந்த தெய்வீக அழகைக் காணும் பேறு நமக்கு கிட்டும். புறப்பாடு நிறைவு பெற அதிகாலை ஆகி விடும். 

திருமங்கையாழ்வாரின் முக அழகு


அடுத்த நாள் காலை ஆழ்வாருக்கு திருமஞ்சனம் திருப்பாவை சாற்றுமறை நடைபெறுகின்றது. மாலை திருநாங்கூரிலிருந்து புறப்பட்டு, திருவெள்ளக்குளத்து ஸ்ரீ அண்ணன் பெருமாளை இடர் களைய சரணம் புகுகிறார், பிறகு வரிவண்டு தேதென என்று இசைபாடும் அழ்கை திருத்தேவனார் தொகையில் ஸ்ரீ மாதவனை அனுபவித்து மங்களாசாசனம் செய்கிறார் நீலன். பிறகு திருவாலி எழுந்தருளி ஸ்ரீ லக்ஷ்மி நரசிம்மரை மங்களாசாசனம் செய்கின்றார் ஆழ்வார். திருநகரியை அடையும் போது பெரிய திருவடியில் வயலாலி மணவாளன் ராஜ கோபுரத்தின் முன்னே ஆழ்வாரை எதிர் கொள்ள காத்திருக்கின்றார். பின் ஆழ்வார் அங்கு அடைந்தவுடன் , பெருமாளும் ஆழ்வாரும் திருக்கோவிலில் செல்வதுடன் திருனாங்கூர் பதினோரு கருட சேவை இனிதே நிறைவு பெறுகின்றது. அப்போது   கற்றார் பற்றறுக்கும் பிறவிப் பெருங்கடலே 
பற்றா வண் தடியேன் பிறந்தேன் பிறந்த பின்னை
 வற்றா நீர் வயல் சூழ் வயலாலி அம்மானைப் 
பெற்றேன் பெற்றதுவும் பிறவாமை பெற்றேன்.

என்ற பாசுரசாற்று மறையுடன் இந்த தெய்வீக விழா இனிதே நிறைவடைகின்றது. பெருமாளை கருட வாகனத்தில் சேவை சாதிக்கக் காண்போருக்கு மறு பிறவி கிடையாது என்பது ஐதிகம். ஆகவே நாம் அனைவரும் உய்ய பதினோரு திவ்ய பெருமாள்களும் தரும் கருட சேவையை காணவும், ஆழ்வாரை நெல் வயல்களின் நடுவே நெற்கதிர்களை சாய்த்து மிதித்துக் கொண்டு பக்தர்கள் ஏழப்பண்ணி கொண்டு செய்யும் அழகையும் கண்டு களிக்க எத்தனை கோடி தவம் செய்திருக்க வேண்டுமோ, எனவே கிளம்பிவிட்டீர்களா திருநாங்கூருக்கு? சென்று வந்து உலகளந்த ஊழி பிரானாம், உம்பர் தொழும் திருமாலின் அருள் பெற பிரார்த்திக்கின்றேன். * * * * * *

திருநாங்கூர் பதினொரு கருட சேவை- 3


இத்திருவிழாவின் முதல் நாள் நிகழ்ச்சியாக தை அமாவாசையன்று திருமங்கையாழ்வாருக்கு "மஞ்சள் குளி திருவிழா" நடைபெறுகின்றது. திருவரங்கத்தில் திருமங்கையாழ்வார் தங்கியிருந்த போது அரங்கநாதர் முன் திருநெடுந்தாண்டகம் சேவித்தார், அதனால் மிகவும் பிரசன்னமான பெருமாள் ஆழ்வாரை ஏதாவது வரம் வேண்டுமாறு கூற, அவரும் புரட்டாசி மாதம் நடைபெறுகின்ற அத்யயன உற்சவத்தின் போது வேதங்களுடன், நம்மாழ்வாரின் திருவாய்மொழியும் சாற்றுமுறை செய்ய அருள் புரிய வேண்டும் என்று வேண்ட பெருமாளும் அவ்வண்ணமே அருளிச் செய்தார். அன்று முதல் நாலாயிர திவ்விய பிரபந்தமும் அத்யயன உத்சவத்தின் போது சாற்றுமுறை செய்யப்படலாயிற்று. ஆழ்வாரின் இந்த பக்திக்காக, பெருமாள் ஆழ்வாரை சிறப்பிக்க வேண்டி தனக்கு நடை பெறும் மஞ்சள் குளி இனி அவருக்கும் நடைபெற வேண்டும் என்று அருள் பாலித்தார். திருமங்கை ஆழ்வாருக்கு ஒவ்வொரு வருடமும் வட காவேரியாம் கொள்ளிடக் கரையில் மஞ்சள் குளி நடைப்பெற்றது, முதல் குளியலை நம்பெருமாளே, தானே தன் கையால் நடத்தி வைத்தார். 

ஆழ்வாரின் அந்திம காலத்திற்குப் பிறகு அவரது சகோதரியின் கணவர், திருவரங்கத்தை விடுத்து ஆழ்வாரின் அவதாரத் தலமான திருக்குறையலூர் வந்து தங்கினார். ஆழ்வாரின் மூர்த்திக்கு நாங்கூரை ஒட்டி ஓடும் மணிகர்ணிகை ஆற்றங்கரையில் அவர் மஞ்சள் குளியல் உற்சவத்தை 8ம் நூற்றாண்டிலே தொடங்கினார் அன்று முதல் இன்று வரை அது தொடர்கிறது.


  கருட சேவைக்கு குமுதவல்லி நாச்சியாருடன் புறப்படும் திருமங்கையாழ்வார்


வயல்களில் பயிர்களை மிதித்துக் கொண்டு வரும் ஆழ்வார்தை அமாவாசையன்று அதிகாலை 3 மணிக்கு திருவாலி திருநகரியிலிருந்து திருமங்கையாழ்வார், தன் தர்ம பத்தினி குமுத வல்லி நாச்சியாருடன் , அவர் ஆராதித்த சிந்தனைக்கினியான் பெருமாளும், உபய நாச்சியார்களுடன் ( புதிருக்கு விடை கிடைத்து விட்டதா?) பல்லக்கில் புறப்பாடு கண்டருளி வயல் வழியில் இறங்கி பயிரை மிதித்துக்கொண்டு முதலில் திருக்குறையலூர் ஸ்ரீ உக்ர நரசிம்மப் பெருமாள் கோவிலை அடைந்து அவரை மங்களாசாசனம் செய்கின்றார்.

அடுத்து ஸ்ரீ வீர நரசிம்மப் பெருமாள் கோவிலை அடைந்து அவரை மங்களாசாசனம் செய்கின்றார் பரகாலர்.
திருநாங்கூரில் உள்ள திருக்காவளாம்பாடி ஸ்ரீ கோபாலனை , "காவளம்பாடி மேய கண்ணனே! களை கண் நீயே" என்று சேவிக்கின்றார் கலிகன்றி.
பின் திருமணிக்கூடத்தில் உள்ள ஸ்ரீ வரதராஜப்பெருமாளை "திருமகள் மருவும் நாங்கூர்த் திருமணிக் கூடத்தானே" என்று மங்களாசாசனம் செய்கின்றார் பரகாலன்.

அன்று நிறைவாக திருபார்த்தன் பள்ளி ஸ்ரீ பார்த்த சாரதியை பரகால நாயகியின் தாயாய் "பவள வாயாள் என் மடந்தை பார்த்தன்பள்ளி பாடுவாளே" என்று மங்களாசாசனம் செய்கின்றார் ஆலி நாடன்.
உச்சிக் காலத்திற்கு முன் மணிகர்ணிகை ஆற்றை அடைகிறார். பக்தர்கள் அனைவரும் பக்தி பரவசத்துடன் இடுப்பளவு தண்­ணிரில் ஆழ்வாரின் பெரிய திருமொழியில் இருந்து ஆழ்வாரின் ஆச்சாரியரான திரு நறையூர் நம்பியையும், திருவரங்கத்து அழகிய மணவாளானையும் மங்களா சாசனம் செய்து ஆழ்வார் பாடிய பாசுரங்களை சேவிக்கின்றனர். இவ்விரு திவ்ய தேசங்களில் இருந்து கொண்டுவரப்பட்ட மாலை மற்றும் பீதாம்பரங்களினால் பரிவட்டம் கட்டபெற்று ஆழ்வாருக்கு மரியாதை செய்யப்படுகின்றது.

மஞ்சள் குளியலின் போது திருமங்கை ஆழ்வார் சிந்தனைக்கினியானுடன் 

பின் மஞ்சள் குளியல் மண்டபத்தில் எழுந்தருளும் ஆழ்வாருக்கு சஹஸ்ர தாரா மஞ்சள் குளி என்னும் திருமஞ்சனம் நடை பெறுகின்றது. சஹஸ்ர தாரை தட்டில் ஆழ்வார் வழிபட்ட சிந்தனைக்கு இனியன் என்னும் பெருமாளின் திருமூர்த்ததிற்க்கு செய்யப்படும் மஞ்சள் நீர் முதலில் பெருமாளுக்கு திருமஞ்சனம் ஆகி பின் ஆழ்வாருக்கும் திருமஞ்சனம் ஆகின்றது. பின் திருப்பாவை சாற்று மறை நடைபெறுகின்றது. மாலையில் அலங்கரிக்கப்பட்ட ஆழ்வார் திருமணிமாடக்கோவில் ஸ்ரீ நாராயணப் பெருமாளை "மணிமாடக் கோயில் வணங்கு என்மனனே" என்று மங்களாசாசனம் செய்கின்றார் அருள்மாரி. 


  திருமணிமாடக்கோவிலில் ஆழ்வார் ஆஸ்தானம்

பின், நல்ல வெந்தழல் மூன்று நால் வேதம் ஐவேள்வியோடு ஆறங்கம் வல்ல அந்தணர் வாழும் திருவண்புருடோத்தமத்தில் ஸ்ரீ புருஷோத்தமனை மங்களாசாசனம் செய்கின்றார் மான வேற் கலியன். திருவைகுந்த விண்ணகரத்தில் ஸ்ரீ வைகுந்த நாதனை நாங்கூர் "வைகுந்த விண்ணகரம் வணங்கு மடநெஞ்சே" என்று மங்களாசாசனம் செய்கிறார் வாள் கலியன். திருசெம்பொன்செய் கோவிலில் அல்லி மாமலராளுடன் ஸ்ரீ செம்பொன் செய் அரங்கரை "நாங்கை நன்னடுவுள் செம்பொன் செய் கோயிலினுள்ளே கடல்நிறவண்ணன் தனனை நான் அடியேன் கண்டுகொண்டு உய்ந்தொழிந்தேனே" என்று மங்களாசாசனம் செய்கிறார் நம் கலியன். ஒரு கிளி மற்றொரு கிளிக்குக் கல்வி கற்பித்ததை திருத்தெற்றியம்பலத்தில் ஸ்ரீ பள்ளிகொண்ட பெருமாளை "திருத்தெற்றியம்பலத்து என் செங்கண்மாலே" என்று வணங்குகிறார் குமுதவல்லி மணாளர். பின்னர் அரிமேய விண்ணகரத்தில் குடங்களை எடுத்தேறவிட்டு கூத்தாடிய கோவை "அண்டமுறும் அலைகடலினொலி திகழும் நாங்கூர் அரிமேய விண்ணகரம் வணங்கு மடநெஞ்சே" என்றுஅனுபவிக்கின்றார் ஆழ்வார். அன்றைய தினம் இறுதியாக திருமணிமாடக் கோவிலில் ஆஸ்தானம் கண்டருளுகிறார் ஆழ்வார். இங்கு அர்த்த ஜாம பூஜை நடைபெறுகின்றது.

Tuesday, February 5, 2008

திருநாங்கூர் பதினொரு கருட சேவை- 2

திருநாங்கூர் ஏகாதச திவ்ய தேச பெருமாள் தரிசனம்

திருநறையூர் (நாச்சியார் கோவில்) பெருமாளால் வைணவராக சமஸ்ராணம் செய்யப் பெற்ற, திருமங்கை மன்னன், பரகாலன், நீலன், ஆலிநாடன், கலிகன்றி, மங்கையர் கோன், மங்கை வேந்தன், கலியன் என்றெல்லாம் அழைக்கப்படும் திருமங்கை ஆழ்வார் இந்த திவ்ய தேசங்களில் திருக்குறையலூரிலேதான் அவதரித்தார். மணக் கோலத்தில் பெரிய பிராட்டியாரோடு வந்த பெருமாளால் திருமணங்கொல்லையில் அஷ்டாத்திர மந்திரோபதேசமும் பெற்றார், இந்த பதினோரு திவ்ய தேசங்களையும் இவர் மட்டுமே மங்களாசாசனமும் செய்துள்ளார். திருமங்கையாழ்வாரோடு பெரிதும் தொடர்புடையவை இத்திவ்ய தேசங்கள். 

  இத்தகைய சிறப்புகளைக் கொண்ட திருநாங்கூர் திவ்ய தேசங்களாவன:

1. திருமணி மாடக் கோவில்:

மூலவர்-நாராயணன், நந்தா விளக்கு அமர்ந்த திருக்கோலம்,
உற்சவர்- நாராயணன், அளந்தற்கரியான்,
தாயார்- புண்டரீக வல்லி,
தீர்த்தம்- இந்திர புஷ்கரிணி, ருத்ர புஷ்கரிணி,
விமானம்- பிரணவ விமானம்.

நந்தா விளக்கே! அளத்தற்கு அரியாய்! நரநாராயணனே! கருமாமுகில் போல்
எந்தாய்! எமக்கே அருளாயென நின்று இமையோர் பரவும் இடம் எத்திசையும்
கந்தாரம் அந்தேன் இசைபாடமாடே களிவண்டுமிழற்ற நிழல்துதைந்து
மந்தாரம் நின்று மணமல்குநாங்கூர் மணிமாடக்கோயில் வணங்கு என் மனனே!

2.திருவைகுந்த விண்ணகரம் :

மூலவர்- திருவைகுந்த நாதன், தாமரைக் கண்ணுடைய பிரான் உபய நாச்சியார்களுடன் அமர்ந்த திருக்கோலம்,
தாயார்- வைகுந்த வல்லி.
தீர்த்தம்- லக்ஷ்மீ புஷ்கரிணி, உதங்க புஷ்கர்ணி, விரஜா தீர்த்தம்,
விமானம்-அனந்த சத்யா வர்த்த விமானம்.

சலங்கொண்ட இரணியனது அகல்மார்வம் கீண்டு
தடங்கடலைக்கடைந்து அமுதம் கொண்டுகந்தகாளை
நலங்கொண்ட கருமுகில்போல் திருமேனி அம்மான்
நாள்தோறும்மகிழ்ந்து இனிதுமருவியிறை கோயில்
சலங்கொண்டுமலர் சொரியும் மல்லிகைஒண்செருந்தி
சண்பகங்கள் மணம் நாறும் வண்பொல்ழிலினூடே
வலங்கொண்டு கயலோடிவிளையாடுநாங்கூர்
வைகுந்தவிண்ணகரம் வணங்குமடநெஞ்சே!

3.திரு அரிமேய விண்ணகரம் :

மூலவர்- குடமாடுங் கூத்தர் அமர்ந்த திருக்கோலம்,
உற்சவர்- சதுர் புஜ கோபாலர்,
தாயார்- அம்ருத கட வல்லி.
தீர்த்தம்- கோடி தீர்த்தம், அமுத தீர்த்தம்,
விமானம்- உச்ச சிருங்க விமானம்.

திருமடந்தைமண்மடந்தை இருபாலும் திகழ
தீவினைகள்போயகலஅடியவர்கட்கு என்றும்
அருள்நடந்து இவ்வேழுலகத்தவர்பணிய வானோர்
அமர்ந்தேத்தஇருந்தஇடம் பெரும்புகழ்வேதியர் வாழ்
தரும்இடங்கள்மலர்கள்மிகுகைதைகள்செங்கழுநீர்
தாமரைகள்தடங்கள்தொறும் திகழ
அருவிடங்கள்பொழில்தழுவி எழில்திகழும்நாங்கூர்
அரிமேய விண்ணகரம் வணங்குமடநெஞ்சே!

4.திருத் தேவனார் தொகை :

மூலவர்- தெய்வ நாயகன் நின்ற திருக்கோலம்,
உற்சவர்- மாதவப் பெருமாள்,
தாயார்-கடல் மகள் நாச்சியார்.
தீர்த்தம்- சோபன தீர்த்தம்,
விமானம்- சோபன விமானம்.
போதலர்ந்தபொழிற்சோலைப் புறமெங்கும்பொருதிரைகள்
தாதுதிரவந்தலைக்கும் தடமண்ணிதென்கரைமேல்
மாதவன்தானுறையுமிடம் வயல்நாங்கை வரிவண்டு
தேதெனவென்றுஇசைபாடும்திருத்தேவனார்தொகையே.

5.திருவண் புருடோத்தமம் :

மூலவர்- புருடோத்தமன் நின்ற திருக்கோலம்,
தாயார்- புருடோத்தம நாயகி.
தீர்த்தம்- திருப்பாற் கடல் தீர்த்தம்,
விமானம்- சஞ்žவி விமானம்.
கம்பமாகடலடைத்துஇலங்கைக்குமன் கதிர்முடியவை பத்தும்
அம்பினாலறுத்து அரசுஅவன்தம்பிக்குஅளித்தவனுறை கோயில்
செம்பலாநிரைசண்பகம்மாதவி சூதகம்வாழைகள்சூழ்
வம்புலாம்கமுகோங்கியநாங்கூர் வண்புருடோத்தமமே.
6.திருச்செம்பொன் செய்கோவில் :
மூலவர்- பேரருளாளன், ஹேம ரங்கர்,செம் பொன் செய் அரங்கர், தாமோதரன் நின்ற திருக்கோலம்,
உற்சவர்-ஹேமாங்கர்(செம்பொன் அரங்கர்),
தாயார்- அல்லி மாமலர் நாச்சியார்.
தீர்த்தம் - ஹேம புஷ்கரிணி,
விமானம்- கனக விமானம்.
பேரணிந்துஉலகத்தவர்தொழுதேத்தும் பேரர்ளானன்எம்பிரானை
வாரணிமுலையாள்மலர்மகளோடு மண்மகளும்உடன்நிற்க
சீரணிமாடநாங்கைநன்னடுவுள் செம்பொன்செய்கோயிலினுள்ளே
காரணிமேகம்நின்றதொப்பானைக் கண்டுகொண்டுஉய்ந்தொழிந்தேனே.
7.திருத்தெற்றியம்பலம் :
மூலவர்-செங்கண்மால்,அரங்கநாதர், லக்ஷ்மிரங்கர் புஜங்க சயன திருக்கோலம்,
தாயார்- செங்கமலவல்லி
தீர்த்தம்- சூரிய புஷ்கரிணி,
விமானம்- வேத விமானம்.
மாற்றரசர்மணிமுடியும்திறலும்தேசும்
மற்றவர்தம்காதலிமார் குழையும் தந்தை
கால்தளையும்உடன்கழலவந்துதோன்றிக்
கதநாகம்காத்தளித்த கண்ணர்கண்டீர்
நூற்றிதழ்கொளரவிந்தம்நுழைந்தபள்ளத்து
இளங்கமுகின்முதுபாளைபகுவாய்நண்டின்
சேற்றழையில்வெண்முத்தம்சிந்தும் நாங்கூர்த்
திருத்தெற்றியம்பலத்துஎன்செங்கண்மாலே.
8.திருமணிக்கூடம் : மூலவர்-மணிக்கூட நாயகன், வரதராசப் பெருமாள்,
தாயார்- திருமாமகள் நாச்சியார்.
தீர்த்தம்- சந்திர புஷ்கரிணி,
விமானம் சாம்பூந்தம் என்ற பொன்னாலானது.
தூம்புடைப்பனைக்கைவேழம் துயர்கெடுத்தருளி மன்னு
காம்புடைக்குன்றமேந்திக் கடுமழைகாத்தஎந்தை
பூம்புனற்பொன்னிமுற்றும்புகுந்து பொன்வரண்ட எங்கும்
தேம்பொழில்கமழும்நாங்கூர்த் திருமணிக்கூடத்தானே.
9.திருக்காவளம்பாடி :

மூலவர்-கோபாலகிருஷ்ணன்(இராஜ கோபாலன்) ருக்மணி சத்ய பாமையுடன் நின்ற திருக்கோலம்,
தாயார் -மடவரல் மங்கை, செங்கமல வல்லி.
தீர்த்தம்- தடமலர்ப் பொய்கை,
விமானம்- சுயம்பு விமானம்.
தாவளந்துஉலகமுற்றும் தடமலர்ப்பொய்கைபுக்கு
நாவளம்நவின்றங்கேத்த நாகத்தின்நடுக்கம்தீர்த்தாய்!
மாவளம்பெருகி மன்னுமறையவர்வாழும்நாங்கை
காவளம்பாடிமேய கண்ணனே! களைகண் நீயே.
10.திருவெள்ளக்குளம்(அண்ணன் கோவில்):
மூலவர்- ஸ்ரீநிவாசன், கண்ணன், நாராயணன், அண்ணன் பெருமாள், நின்ற திருக்கோலம்,
தாயார்- அலர்மேல் மங்கை.
தீர்த்தம்-வெள்ளைக்குளம்,
விமானம்-தத்துவ விமானம்.
இத்தலத்திலே தான் திருமங்கை ஆழ்வாரின் தர்ம பத்தினி குமுத வல்லி நாச்சியார் கண்டெடுக்கப்பட்டார்.
கண்ணார்கடல்போல் திருமேனிகரியாய்!
நண்ணார்முனை வென்றிகொள்வார் மன்னு நாங்கூர்
திண்ணார்மதிள்சூழ் திருவெள்ளக்குளத்துள்
அண்ணா! அடியேனிடரைக்களையாயே.
11. திருப்பார்த்தன் பள்ளி :

மூலவர்: தாமரையாள் கேள்வன்,
உற்சவர்- பார்த்தசாரதி,
தாயார்- தாமரை நாயகி.
தீர்த்தம் - சங்கசரஸ் கங்கைத் தீர்த்தம்,
விமானம்- நாராயண விமானம்.
கவளயானைக்கொம்பொசித்த கண்ணனென்றும் காமருசீர்
குவளைமேகமன்னமேனிகொண்டகோன் என்னானை யென்றும்
தவளமாடுநீடுநாங்கைத் தாமரையாள்கேள்வனென்றும்
பவளவாயாள்என்மடந்தை பார்த்தன்பள்ளி பாடுவாளே.


இவ்வாறு பொன்னி நதி பாய்ந்து வளம் சிறக்கும் திருநாங்கூர்ப்பதிகளை மங்களாசாசனம் செய்த இந்த திவ்ய தேசப் பெருமாள் அனைனவரும், திருமங்கையாழ்வரும் கலந்து கொள்ளும் மிக சிறப்பு வாய்ந்த ஏகாதச கருட சேவை திருவிழா வெகு சிறப்பாக ஒவ்வொரு வருடமும் தை அமாவாசைக்கு அடுத்த நாள் நடைபெறுகின்றது. அந்த தெய்வீக அனுபவத்தை தாங்களும் பெற தங்களை என்னுடன் வருமாறு தங்களை அழைக்கின்றேன். " பெருமாளை பெரிய திருவடியாம் கருட வாகனத்தில் சேவித்தால் மறு பிறவி கிடையாது என்பது ஐதீகம்", இங்கு பதினோரு பெருமாள்களையும் ஒரே நேரத்தில் சேவிக்கும் அற்புதமான வாய்ப்பு கிடைக்கின்றது. அடுத்த பதிவில் அந்த தெய்வீக அனுபவத்தை பெருமாள் கொடுத்த சேவையை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.
புதிருக்கான விடை அடுத்த பதிவில்.

Monday, February 4, 2008

திருநாங்கூர் பதினொரு கருட சேவை- 1

நாராயணனும் நம் கலியனும்

(பதிவின் இறுதியில் ஒரு புதிர் கேள்வி உள்ளது)

பாற்கடலிலே திருமகளும், நிலமகளும், நீளா தேவியும், நித்திய சூரிகளும் புடை சூழ பர வாசுதேவனாக மாயத் துயில் கொண்டுள்ள அந்த மாயன், வைகுண்டத்திலே வியூக நிலையிலே அமர்ந்த கோலத்தில் எழுந்தருளி சேவை சாதிக்கின்றார். அவரே தீயவர்களை அழித்து நல்லவர்களைக் காக்க அவதாரங்கள் எடுத்து விபவ ரூபமாக அருள் வழங்கினார், அந்த பரம்பொருளே அந்தர்யாமியாக எல்லா ஜீவ ராசிகளிலும் விளங்குகின்றார். நாம் எல்லோரும் உய்யும் பொருட்டு , ஒரு பெயரும், ஒரு உருவமும் இல்லாத அந்த பரம் பொருள் அர்ச்சாவதாரமாக பூவுலகிலே பல் வேறு தலங்களிலே எழுந்தருளி சேவை சாதிக்கின்றார். இந்த ஐந்து நிலைகளுக்கும் உரியவன் அவன் ஒருவனே.

அத்தகைய திருக்கோவில்களில், மயர்வற மதி நலம் பெற்ற ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப் பெற்றவை திவ்ய தேசங்கள் எனப்படுகின்றன. இந்த திவ்ய தேசங்களுள் வான் பொய்ப்பினும் தான் பொய்யா மலைத்தலைய கடற் காவிரி புனல் பரந்து பொன் கொழிக்கும் தஞ்சை தரணியிலே 40 திவ்ய தேசங்கள் உள்ளன, அவற்றுள் சீர்காழியிலிருந்து 8 கி.மீ து‘ரத்தில் அமைந்துள்ள திருநாங்கூர் திருத்தலத்தை சுற்றி பதினோரு திவ்ய தேசங்கள் உள்ளன. இவை திருநாங்கூர் திவ்ய தேசங்கள் எனப்படுகின்றன. சோழநாட்டுத் திருப்பதிகளில் நடு நாயகமாக இந்த திருநாங்கூர் திவ்ய தேசங்கள் விளங்குகின்றன. இந்த திவ்ய தேசங்களின் தனி சிறப்பு என்னவென்றால் வைணவ சம்பிரதாயத்தில் முக்கிய கருதப்படும் மூன்று சுலோகங்களும் எம்பெருமானாலேயே இத்திவ்ய தேசங்களில் உபதேசிக்கப்பட்டன. முதலாவதான " ஒம் நமோ நாராயணா " என்னும் நலம் தரும் அஷ்டாத்திர மந்திரத்தை ஆழ்வார்களில் கடைக்குட்டியான திருமங்கை ஆழ்வாருக்கு திருமணி மாடக் கோவில் நாராயணப் பெருமாளால் உபதேசிக்கப்பட்டது.

இரண்டாவதான " ஸ்ரீமத் நாராயண சரணௌ சரணம் பிரபத்தயே ஸ்ரீமதே நாராயணாய நமஹ " என்ற த்வைய மந்திரத்தை ஸ்வேத ராஜனுக்கு திருவெள்ளக்குளம் அண்ணன் பெருமாள் உபதேசித்தார். கீதையிலே " ஸர்வ தர்மாந் பரித்யஜ்ய மாம் ஏகம் சரணம் வ்ரஜ அஹம் த்வா ஸர்வ பாபேப்யோமோட்ச யிஷ்யாமி மாசுச " என்னையே தஞ்சம் சரணமடைந்து விடு நான் உன்னை எல்லா பாவங்களிலிருந்து மோட்சத்தை அளிப்பேன் என்று கீதோபதேசத்தின் போது கூறிய சரம சுலோகத்தை பார்த்தன்பள்ளியிலே கண்ணன் அர்ஜுனனுக்கு மீண்டும் உபதேசித்தார். இந்த திவ்ய தேசங்களின் மற்றொரு சிறப்பு, பிரளய காலத்திலும் அழியாமல் இருந்தது. பாலச வனத்தில் வடக்கே மண்ணியாற்றையும், தெற்கே திருவரங்கக் காவிரியாற்றையும் கிழக்கே பூம்புகார் கடலையும், மேற்கே தரங்கம்பாடியையும் எல்லையாகக் கொண்ட இந்த நாகபுரி ஷேத்ரம் என்னும் திருநாங்கூரைச் சுற்றிய இந்தப் பகுதி மட்டும் பிரளய காலத்தும் அழியாமல் இருந்தது.

இந்த ஷேத்ரத்தில் வைணவ மற்றும் சைவ சமயங்களின் ஏகாதச திருக்கோவில்கள் உள்ளன. இவ்வாறு சைவம் மற்றும் வைணவத்தின் பதினொரு கோவில்கள் உள்ளதற்கான ஐதீகம் என்னவென்றால், மஹா பிரளயத்திற்கு பிறகு தட்சன் ஒரு யாகம் நடத்தினான் அதில் கலந்து கொள்ள சிவபெருமானுக்கு ஆணவத்தால் அவன் அழைப்பிதழ் அனுப்பவில்லை. தட்சன் மகளான தாட்சாயணியும் அங்கு சென்று அவமானப்பட்டு, பின் சிவலோகம் செல்ல விருப்பமில்லாமல் பலசவனம் வந்து, மதங்க மகரிச்ஷியின் மகளாக பூங்கோதை என்ற திருநாமத்துடன் வளர்ந்து வரும் காலத்தில், சிவபெருமானும் மண்ணியாற்றங்கரையில் வந்து தக்ஷ’ணா மூர்த்தியாக யோகத்திலாழ்ந்தார். மஹா விஷ்ணுவும் வைகுந்தத்தை விடுத்து பூலோகம் வந்தார். சிவனும், விஷ்ணுவும் இல்லாததால் அசுரர்களிடமிருந்து தங்களை காப்பாற்றுவாரில்லாமல் கவலையடைந்த தேவர்கள் மதங்க முனிவரிடம் வந்து வேண்ட, மதங்க முனிவரின் பிரார்த்தனைக்கிரங்கி பத்ரிகாசரமத்திலிருந்த பெருமாள், நான்கு வேதங்களே நான்கு குதிரைகளாகவும், சந்திர, சூரியர்களையே தேர்க்காலாகவும் கொண்ட திவ்ய திருத்தேரிலே நாங்கூரில் உள்ள இந்திர புஷ்கரணியிலே சேவை சாதித்தார். ஞான திருஷ்டியால் பூங்கோதைதான் பார்வதி என்பதை அறிந்த மஹா விஷ்ணு, யோகத்திலிருந்த சிவபெருமானுக்கு அதை உணர்த்தி அவர்களுக்கு திருமணம் நடத்தி வைத்தார். பின்னர் சிவபெருமான் பதினோரு ருத்ர வடிவம் எடுத்தும், மஹா விஷ்ணுவும் அதே போல் பதினோரு அர்ச்சாவதாரங்கள் எடுத்து இருவரும் இனைந்து அசுரர்களை அழித்து தேவர்களைக் காத்தனர். பின் அதே ரூபத்தில் இருவரும் பதினோரு திருக்கோவில்களில் அமர்ந்தருளினர் என்பது ஒரு ஐதீகம். எனவே தான் திருநாங்கூரைச் சுற்றி பதினோரு சைவ மற்றும் வைணவ திருக்கோவில்கள் அமைந்துள்ளன.
இந்த நாங்கூரைச் சுற்றி ஏகாதச சைவ மற்றும் வைணவ திருத்தலங்கள் இருப்பதற்கான மற்றொரு ஐதீகமானது.

 ஒரு சமயம் ஆணவம் கொண்ட பிரம்மாவின் ஒரு தலையை சிவன் கொய்ததால் அவரை பிரமஹத்தி தோஷம் பற்றியது. அந்த தோஷத்தைப் போக்க சிவ பெருமான் ஏகாதச ருத்ர அவதாரங்கள் எடுத்து ஏகாதச ருத்ர அசுவமேத யாகம் செய்தார், யாகத்தின் இறுதியில் பெருமாள் ஸ்ரீ தேவி, பூதேவியுடன் சேவை சாதித்து சிவபெருமானுக்கு அபய பிரதானம் அளித்து சாபம் நீங்க அருள் செய்தார். இந்த திவ்ய தேசங்களில் வந்து வணங்குவோர்களுக்கும் அதே போல கருணை புரிய வேண்டும் என்ற சிவ பெருமானின் வேண்டுகோளுக்கிணங்கி ஏகாதச திவ்ய தேசங்களில் அர்ச்சாவதார மூர்த்தியாக கோவில் கொண்டருளினார் பெருமாள். சிவ பெருமானும் எகாதச தலங்களில் கோவில் கொண்டருளினார்.

பரகாலர்

இந்த பதினோறு திவ்ய தேசங்களையும் திருமங்கையாழ்வார் மங்களாசாசனம் செய்துள்ளார் என்பது தனி சிறப்பு. தமது பெரிய திருமொழியில் திருநாங்கூர் திருப்பதிகள் என்றே பரகாலர் இந்த திவ்ய தேசங்களை மங்களாசாசனம் செய்துள்ளார். அவருக்காக நடைபெறும் 11 கருட சேவையை விரிவாக வரும் பதிவுகளில் காண்போம்.


  புதிர் கேள்வி: ஆழ்வார் அருகே அவர் ஆராதித்த பெருமாள் உள்ளதை படத்தில் காணலாம். அவர் பெயர் என்ன?

விடையை அடுத்த பதிவில் காணலாம் .

Sunday, February 3, 2008

கருட சேவை - 6

திருமலை கருட சேவை
பாசுரங்களின் எண்ணிக்கப்படி திருவரங்கத்திற்கு அடுத்தபடி பாசுரங்கள் பாடப்பெற்ற திவ்ய தேசம் திருப்பதி - திருமலை. பெருமாள் கண்கண்ட தெய்வமாய் கலியுக வரதனாய் செடியாய வல்விணைகள் தீர்க்கும் திருமாலாய் , நெடியானாய் வேங்கடவனாய் சேவை சாதிக்கும் தலம்.
மதுரகவியார், தொண்டரடிப்பொடியாழ்வார் தவிர மற்ற பத்து ஆழ்வார்களும் மங்களாசாசனம் செய்த திவ்ய தேசம்
.
திருமலையின் ஏழு மலைகள் சேஷாசலம், வேதாசலம், கருடாசலம், அஞ்சனாசலம், ஸ்ரீ வேங்கடாசலம், ரிஷபாசலம், அனந்தாசலம் ஆகியவை ஆகும்.

ஆதி சேஷன் ரூபத்தில் இருப்பதால் - சேஷாசலம்.

வேதங்களால் நிறைந்திருப்பதால் - வேதாசலம்.

கருடனால் வைகுண்டத்திலிருந்து பூலோகத்திற்கு கொண்டு வரப்பட்டதால் - கருடாசலம்.

விருஷாபாசுரனை சம்ஹரித்து அவனுக்கு மோக்ஷம் கொடுத்ததால் - விருஷபாத்ரி.

திரேதா யுகத்தில் அஞ்சனா தேவி தவம் இருந்து அனுமனைப் பெற்றதால் -அஞ்சனாத்ரி.

துவாபர யுகத்தில் ஆதிசேஷனையும் வாயு பகவானையும் தூண்டி அனந்த பர்வதத்திஅயும் கொண்டு வந்ததினால் - அனந்தாத்ரி.

சர்வ பாவங்களும் தஹிக்கப்பட்ட புண்ணிய ஷேத்திரமானதால் - வேங்கடாத்ரி
.
இத்தலத்தில் கருடனுக்கு இன்னுமொரு சிறப்புமுண்டு. கோவிலின் அருகில் உள்ள கோனேரியை (திருக்குளத்தை), கருடன் தான் வைகுண்டத்து விரஜா நதியில் இருந்து உருவாக்கினான்! .

வேங்கடம் என்றால் இரண்டு அர்த்தங்கள் உண்டு அதாவது வேம்- அழிவில்லாத கடம் - ஐஸ்வர்யம் நீங்காத செல்வம் நிறைந்திருக்கும் தலம். வாஸ்து சாஸ்திரத்திற்கு ஒரு நல்ல உதாரணம் திருமலைக் கோவில்.

வேம்- பாவம் கடம்- எரித்தல் அதாவது நமது பாவங்களை எல்லாம் எரிக்கும் தலம் திருவேங்கடம்.

பிரம்மோற்சவத்தின் ஐந்தாம் நாள் மாலை கருட சேவையின் ஒரு தனி சிறப்பு கருட சேவையன்று மூலவர் வேங்கடேசருக்கு அணிவிக்கப்படும் மகர கண்டியும், லக்ஷ்மி ஹாரமும் கருட சேவையன்று மட்டும் உற்சவர் மலையப்பசாமிக்கு அணிவிக்கப்படுகின்றன. சூடிக் கொடுத்த சுடர்க்கொடியாளின் திருமாலையை அணிந்து கொண்டு சேவை சாதிக்கின்றார் பெருமாள் இன்று. கருடசேவைக்காகவே ஒரு மாலையை அணிந்து அனுப்புகின்றாள், கூடவே தான் தாங்கியிருந்த கிளியையும் அனுப்புகிறாள் கோதை நாச்சியார்.


சங்கமாகடல்கடைந்தான் தண்முகில்காள்! வேங்கடத்துச்
செங்கண்மால்சேவடிக்கீழ் அடிவீழ்ச்சிவிண்ணப்பம்
கொங்கைமேல்குங்குமத்தின் குழம்பழியப்புகுந்து ஒருநாள்
தங்குமேல் என்னாவிதங்குமென்றுரையீரே.

என்று அந்த குளிரருவி கோவிந்தனுக்காகவே கனவு கண்ட கோதை நாச்சியார் .

பிரம்மோற்சவம் தவிர பெருமாள் கருட சேவை தந்தருளும் நாள் தை மாத இரத சப்தமி நாள். அன்று அதிகாலை சூரியப் பிரபை வாகனத்தில் சேவை சாதிக்கும் பெருமாள் மாலை சந்திரப்பிரபை வாகனத்தில் சேவை சாதிக்கின்றார். மேலும் பெரிய திருவடியாம் கருடன், சிறிய திருவடியாம் அனுமனிலும் சேவை சாதிக்கின்றார் பெருமாள். ஒரு வருடம் இரத சப்தமியன்று பெருமாளின் கருட சேவையை தரிசனம் செய்யும் பாக்கியம் கிட்டியது அதை அன்பர்களாகிய உங்களுடன் பகிர்ந்து கொள்கின்றேன்.


மலையப்ப சுவாமிக்கு கற்பூர ஹாரத்தி

மலையப்ப சுவாமியின் திருமுடிமுதல் திருவடிவரை அருமையாக சேவியுங்கள


சிறிய திருவடியில் மலையப்ப சுவாமி

திருமழிசைப் பிரானின் ஒரு பாசுரம்

புள்ளதாகிவேதநான்கும் ஓதினாய் அதன்றியும்
புள்ளின்வாய்ப்பிளந்து புட்கொடிப்பிடித்தபின்னரும்
புள்ளையூர்தியாதலால் அதென்கொல்? மின்கொள்நேமியாய்!
புள்ளின்மெய்ப்பகைக் கடல்கிடத்தல் காதலித்தே.

புள் என்றால் பறவை அதை திருமழிசைபிரான் எவ்வாறு எடுத்து ஆண்டிருக்கின்றார் பாருங்களேன்.

புள்ளதாகி வேத நான்கும் ஓதினாய் - அன்னமாகி நான்கு வேதங்களும் ஓதிய பெருமாளே.

புள்ளின் வாய்ப் பிளந்து - கொக்காக வந்த பகாசுரனின் வாயைப் பிளந்த பெருமாளே.

புட்கொடி பிடித்த - கருடக் கொடியைக் கொண்ட பெருமாளே.

புள்ளையூர்தியாதலால் - வேத சொரூபியான கருடனில் உலா வரும் பெருமாளே.

புள்ளின்மெய்ப்பகை - கருடனின் பகைவனான பாம்பணையில் பாற்கடலில் மாய்த்துயில் கொண்ட பெருமாளே.

08-02-02 அன்று திருநாங்கூரிலே 11 ( ஏகாதச) கருட சேவை எனவே அடுத்த பதிவிலிருந்து திருநாங்கூர் கருட சேவை பற்றிய பதிவுகள் வந்து சேவியுங்கள்.

திருவேங்கடமுடையானின் திருப்பள்ளியெழுச்சியை பொருளுடன் படிக்க சொடுக்குக சுப்ரபாதம்