Wednesday, January 1, 2014

திருப்புளியங்குடி காய்சினவேந்தர் கருடசேவை

ஆழ்வார் திருநகரி ஒன்பது கருட சேவை -8


இத்தலத்தை நம்மாழ்வார் திருப்புளிங்குடி என்று மங்களாசாசனம் செய்துள்ளார்தற்போது திருப்புளியங்குடி என்று அழைக்கப்படுகின்றதுஇந்த திவ்ய தேசத்தைப் பற்றிய குறிப்புகள்  பிரம்மாண்ட புராணத்திலும்,  தாமிரபரணி தல புராணத்திலும் உள்ளனதண்பொருநை நதி பாய்வதால் அழகான குளங்களையும்வயல்வெளியும் சூழ்ந்த  தலம். திருநெல்வேலியிலிருந்து 32 கிலோமீட்டர் தூரத்திலும்  திருவரகுணமங்கையில் இருந்து கிழக்கில் சுமார்  1 கிலோமீட்டர் தூரத்திலும் இத்தலம் அமைந்துள்ளது. 108 திவ்யதேசங்களில் 83 ஆவது.  நவ திருப்பதிகளில் இது 3 வது திருப்பதி. நவகிரகங்களில் இது புதன் தலம்

மூலவர் :காசின வேந்தன், காய்சினவேந்தன், பூமிபாலகர்,  ஆதிசேஷனில் பள்ளி கொண்ட கோலம், தாயார் இருவருடன்  கிழக்குப் பார்த்த திருமுக மண்டலம்.
உற்சவர்: எம் இடர் கடிவான்.
தாயார் :மலர்மகள் நாச்சியார், பூமகள் நாச்சியார்(தனி சன்னதி இல்லை) உற்சவர் – புளியங்குடிவல்லி
விமானம்: வேதசார  விமானம்.
தீர்த்தம் : வருணநிருதி தீர்த்தம், தேவ புஷ்கரணி.
பிரத்யட்சம் : வருணன், நிருதி, தர்மராஜா.
ஆகமம் : வைகானஸம் – சம்பிரதாயம்: தென்கலை.
மங்களாசாசனம்:நம்மாழ்வார் 12 பாடல்களால் மங்களாசாசனம் செய்துள்ளார். 
கிரகம்: புதன் ஸ்தலம்.பூமி பாலகர் : முன்பொரு சமயம்  பகவான் பெரிய பிராட்டியாருடன் கருடனில் ஆரோகணித்து உலகை சுற்றி வரும் போது தண்பொருநை நதிக்கரையில் படிப்படியான அழகான மணற்பரப்பைக் கண்டு அங்கேயே  இறங்கி மலர்மகளுடன் மகிழ்ந்து காலம் கழித்தார். இதைக்கண்டு கோபம் கொண்ட பூமிபிராட்டி பாதாள லோகம் சென்றாள். உடனே உலகமும் வறண்டு விட்டது. இதனால் சகல ஜீவராசிகளும் துன்பமடைந்தனர். இதைக்கண்ட தேவர்கள் பகவானிடம் முறையிட்டனர். பகவான் அவர்களை தேற்றி விடை கொடுத்தனுப்பினான். பின்பு பாதாள லோகம் சென்று பூமி தேவியை சமாதானம் செய்து இங்கு அழைத்து வந்தார். பின்னர் நாச்சியார்கள் இருவரும் இணக்கமாக இருந்தனர். இத்திருப்புளிங்குடியில் பெருமாள் கிடந்த கோலத்தில் மண்மகள், மலர்மகள் இருவருடனும் திருக்கோயில் கொண்டார்.  எனவே இவர் “காசின வேந்தர்” (பூமி பாலகர்) என்று அழைக்கப்படுகின்றார். காய்சின வேந்தே! கதிர்முடியானே! கலிவயல் திருப்புளிங்குடியாய் என்று நம்மாழ்வார் மங்களாசாசனம் செய்தபடி “காய்சின வேந்தர்” என்றும் அழைக்கப்படுகின்றார். 


காய்சினப்பறவையூர்ந்துபொன்மலையின் மீமிசைக்கார்முகில்போல்
மாசினமாலிமாலிமாலிமானென்று அங்குஅவர்படக்கனன்றுமுன் நின்ற
காய்சினவேந்தேகதிர்முடியானேகலிவயல் திருப்புளிங்குடியாய்!
காய்சினவாழிசங்குவாள்வில் தண்டேந்தி எம்மிடர்கடிவானே!

மேருமலையின் மீது தங்கும் நீருண்ட மேகம் போலே,  கோபம் கொண்டு தாக்க வல்ல கருடப்பறவையின் மேல் ஆரோகணித்து வந்து மிக்க சினம் கொண்டு மாலி, சுமாலி என்னும் இரு அரக்கர்களை அழிந்துபோகும்படி தாக்கி வதைத்தாய். ( இதனால் காய்சின வெந்தன் என்னும் பெயர் பெற்றாய்) காய்சின வேந்தே! ஒளி மிகுந்த திருமுடி உடையவனே! வளம் மிகுந்த வயல்கள் சூழப்பட்ட திருப்புளிங்குடியில் பள்ளி கொண்டவனே! காய்கின்ற சினம் கொண்ட சக்கரம், சங்கு, வாள், வில், தண்டு ஆகியவற்றைத் தாங்கிக் கொண்டு காட்சி தரும் நீ என் துயரத்தை நீக்குபவன் அன்றோ! அருள் புரிவாயாக?   

பெருமாளை அரக்கர்களை அழிக்கும் காய்சின வேந்தராகவும், கருடனை அவருக்கு அதி உதவி புரியும் காய்சின பறவையாகவும், மற்றும் பெருமாளின் பஞ்சாயுதங்களையும் காய்சின ஆழி சங்கு வாள் வில் தண்டு என்றும், இவற்றால் நம் இடர் களைபவர் என்று உற்சவரின் திருநாமத்தையும் சேர்த்து ஒரே பாசுரத்தில் மங்களாசாசனம் செய்துள்ளார் காரிமாறப்பிரான்.


இந்திரன் பிரம்மஹத்தி தோஷம் நீங்கியது : ஒரு சமயம் இமயமலையிலுள்ள தாமரைத் தடாகத்தில் இந்திரன் தனது பத்னி இந்திராணியுடன் விளையாடிக் கொண்டிருந்தான். அருகே  அப்பொழுது ஒரு ரிஷி தன் பத்னியுடன் மான் உருவில் ரமித்துக்கொண்டிருந்தார். உண்மையறியாத இந்திரன்  வஜ்ராயுதத்தால் மாற்றுருவில் இருந்த ரிஷியை அடிக்க அவரும் அதனால் இறந்தார். இதனால் இந்திரனுக்கு பிரம்மஹத்தி தோஷம் பிடித்தது. பின்னர் தேவர்கள் எல்லாரும் தங்கள் குரு வியாழ பகவானை வேண்ட அவர் ஆலோசனையின் படி இந்திரன் திருப்புளியங்குடி  வந்து ஒரு தடாகத்தில் நீராடி   பூமிபாலகரை வணங்க  ஆதவனைக் கண்ட பனி போல  அவன் பிரம்மஹத்தி தோஷம் நீங்கியது. தேவர்கள் அநுமதியின் பேரில் முனிவர்கள் பலர் அதில் நீராடினர். அவர்கள் அன்றுமுதல்  அந்தத் தடாகம் ’இந்திர தீர்த்தம்”  என்று வழங்கப்படும் என்று வரம் கொடுத்தனர்.


யக்ஞ சர்மா மேல் வீடு பெற்றது: தனது சாப விமோசனத்தினால் மனம் மகிழ்ந்த இந்திரன் திருமாலை நோக்கி ஒரு பெரிய யாகம் துவக்கினான். அதை ஒரு அரக்கன் இடர் செய்தான். அரக்கனால் துன்புற்ற இந்திரன்  பூமிபாலகரை நோக்கி பிரார்த்தனை செய்ய, அவரும் அங்கு தோன்றி தனது கதையால் அவனை அடிக்க அவனும் மரணமடைந்தான். ஆயினும் முற்பிறவில் யக்ஞ சர்மா என்ற அந்தணனாக இருந்த அவன் வேள்வி செய்வித்த வசிஷ்ட புத்திரர்களுக்கு பணத்தின் ஆசையால் தக்ஷிணை கொடுக்காமல் அவர்களின் சாபத்தினால் அரக்கனானான். சாப விமோசனம் பெருமாளின் கதையால் அடிபடும் போது  கிட்டும் என்றனர். எனவே திருப்புளிங்குடியில் அவனுக்கு சாபம் தீர்ந்தது, மேலுலகமும் கிட்டியது. இந்திரனும் வேள்வியை இனிதாக முடித்தான்.   கொடுவினைப் படைகள் வல்லையாய் அமரர்க்கிடர்கெட அசுரர்கட்கிடர்செய்
கடுவினைநஞ்சே! என்னுடையமுதே! கலிவயல் திருப்புளிங்குடியாய்!
வடிவினையில்லா மலர்மகள் மற்றை நிலமகள்பிடிக்கும் மெல்லடியை
கொடுவினையேனும் பிடிக்கநீயொருநாள் கூவுதல்வருதல் செய்யாயே.

பெருமானே! உன் பகைவரிடத்தே அடியார்களுக்காக ஆயுதம் எடுக்க வல்லவனே! தேவர்கள் துன்பம் தொலைவதற்காக  அசுரர்களைத் தாக்கி அழிப்பவனே! அவர்களுக்குக் கடுமையான  நஞ்சு போன்றவனே! எனக்கோ இனிய அமுதமாக இருப்பவனே!  வளமான வயல்கள் நிறைந்த திருப்புளிங்குடி தலத்திலே  நீ பள்ளி கொண்டு காட்சி தருகின்றாய். இணையற்ற வடிவழகு கொண்ட பெரிய பிராட்டியாரும், மற்றும் பூமி பிராட்டியாரும் உன் மெல்லிய திருவடிகளை வருடியபடி பிடிக்கிறார்கள். அவர்களைப் போலவே கொடிய வினையேனாகிய அடியேனும் உன் திருவடிகளைப் பிடிக்க விரும்புகிறேன். அதற்காக என்னை நீ ஒரு நாள் அழைத்துக் கூப்பிட்டுக் கொள்ள வேண்டும். என்னை அங்கே  அழைத்துக்கொள்ளாவிடிலும் எனக்காக நீ இங்கேயாவது வர வேண்டும்.
சுமார் மூன்று ஏக்கர் நிலப்பரப்பளவில் இரண்டு பிரகாரங்களுடன் இத்தலம் அமைந்துள்ளது. புஜங்க சயனத் திருக்கோலத்தில் இருக்கும் பெருமாளின்    திருமேனி 12 அடிதிருப்பாதத்தையும் தாயார்களையும்  வெளியே உள்ள சாளரம் வழியாகத் தரிசிக்கலாம்தமிழ்நாட்டு  திவ்யதேசங்களில் வேறெங்கும் இல்லாத அமைப்பு!.   இத்தகைய பெரிய திருமேனியைக் கொண்ட பெருமாளுக்கு எண்ணைகாப்பு சாத்துவதற்கு 120 படி எண்ணெய் தேவைப்படுகிறது. இங்குள்ள இலக்குமி   தேவிபூமிப்பிராட்டிநாச்சியார்களின் திரு உருவங்கள் வேறெங்கும்   காணமுடியாத அளவிற்கு மிக மிகப் பெரியவை! பொதுவாகப் பெருமாளின் நாபிக்கமலத்திலிருந்து செல்லும்   தாமரைத் தண்டின் மலரில்தான் பிரம்மா அமர்ந்திருப்பது வழக்கம்இங்கு பெருமாளின் திருவயிற்றிலிருந்து செல்லும்   தாமரைக் கொடி சுவற்றில் உள்ள பிரம்மாவின் தாமரையோடு சேர்ந்து கொள்வது அரிதான காட்சி!. இங்கு குழந்தை பேறுக்காக செய்யப்படும் பிரார்த்தனைகள் பொய்ப்பதில்லை.  இனி வரும் பதிவில் இரட்டைத் திருப்பதி திருதொலைவில்லி மங்கலம் அரவிந்த லோசனர்  கருட சேவையைக் காணலாம்.