Sunday, August 30, 2015

கருட யாத்திரை -2

திருநறையூர் கல் கருடன்
திருவெள்ளியங்குடியில் நான்கு கருடனை  சேவித்தபின் அடியோங்கள் சேவிக்கச் சென்றது நாச்சியர் கோவில் கல் கருடன் ஆகும்.  வாருங்கள் இந்த திவ்ய தேசத்தின் சிறப்புகளை இப்பதிவில் காணலாம். 

   நாச்சியார் கோவில் என்று தாயாரின் பெயரால் அழைக்கப்படும் திருநறையூர் திவ்ய தேசத்தின் சிறப்புக்கள் இரண்டு. ஒன்று இத்தலத்தில் தாயாருக்குத்தான் முதலிடம். இரண்டாவது கல் கருடன்.  திருநறையூரிலே கல் கருட சேவை மார்கழி வைகுண்ட ஏகாதசியை பிரம்மோற்சவத்தின் போதும்  மற்றும் பங்குனி உத்திர பிரம்மோற்சவத்தின் போதும்  நான்காம் நாள் மாலை  நடைபெறுகின்றது. வருடத்தில்  இரு முறை  கல் கருடனில் பெருமாளும் அன்ன வாகனத்தில் வஞ்சுளவல்லித் தாயாரும் புறப்பாடு கண்டருளுகின்றனர்.

இத்தலத்தில் தாயாருக்குத்தான் முதலிடம், அபிஷேகம், நைவேத்யம் எல்லாம் முதலில் தாயாருக்குதான். அது ஏன் என்பதற்கான வரலாறு. ஆதி காலத்தில் இத்தலத்தில் மேதாவி என்ற முனிவர் ஸ்ரீ மஹாலக்ஷ்மித் தாயாரே தனக்கு மகளாக பிறக்க வேண்டுமென்று கடும் தவம் செய்தார். தாயாரும் மனமிரங்கி ஒரு பங்குனி உத்திர நட்சத்திரத் திருநாளில் ஒரு வஞ்சுள மரத்தடியில் (நீர் நொச்சி) குழந்தையாக அவதாரம் செய்தாள். முனிவரும் அன்னையை எடுத்து உச்சி முகர்ந்து சீராட்டி வஞ்சுளவல்லி என்று திருநாமமிட்டு வளர்த்து வந்தார். தாயாரும் சீராக வளர்ந்து திருமணப் பருவத்தை அடைந்தார்.


கல் கருடன்

அங்கே வைகுண்டத்தில் திருமாலை விட்டுத் திருமகள் பிரிந்ததால் தேவலோகமே ஓளியிழந்தது, அசுரர்களின் கை ஓங்கியது. தேவர்கள் துன்பப்பட்டனர். பிரம்மாவின் தலைமையில் மஹாவிஷ்ணுவை சரணடைந்தனர். அப்போது திருமகளைத் தேட வேண்டுமே என்று கவலைப்பட்டார் பெருமாள். அருகிலிருந்த பெரிய திருவடி விண்ணப்பம் செய்தார். தாங்கள் இராமசந்திர மூர்த்தியாக அவதாரம் செய்த போது அன்னை சீதா பிராட்டியுடன் தங்களை சேர்த்து வைத்த பெருமை அனுமனுக்கு கிட்டியதுஅதே போல எனக்கும் பேறு கிட்ட, பிராட்டியார் எங்கிருக்கிறார் என்று  தேடிக் கண்டு வர எனக்கு அனுமதி  கொடுங்கள் என கருடன் கேட்க திருமாலும் அனுமதி அளித்தார்.

மகிழ்ச்சியோடு கிளம்பிய கருடன், திருநறையூர் தலத்தில் மணிமுத்தாறு நதிக்கரையில் மேதாவி முனிவரின் ஆசிரமத்தில் மஹாலக்ஷ்மி தாயார் வளர்வதை கண்டு பூரிப்படைந்தார். திருமாலிடம்  தகவலைச் சொல்லி  மகிழ்ச்சியில் ஆழ்த்தினார்.

தாயாரை விட்டு பிரிந்து இருந்த மஹா விஷ்ணு, அவரைக் கைத்தலம் பற்ற பூலோகம் வந்தார். வந்தவர் ஒருவராக வரவில்லை, வாசுதேவன், சங்கர்ஷணன், ப்ரத்யும்னன், அநிருத்தன், புருஷோத்தமன் என்று ஐந்து வியூக மூர்த்திகளாக வந்தார். சுய ரூபத்தில் வராமல் மானிட ரூபத்தில் அதிதியாக வந்தனர் ஐவரும். வந்த அதிதிகளை வரவேற்று அன்னமளித்தார் மேதாவி முனிவர், அவர்கள் கை கழுவ செல்லும் போது தண்ணீர் ஊற்ற சென்றார் வஞ்சுள வல்லித்தாயாரும் வந்த விருந்தினர்களை சரியாக கவனிக்க வேண்டுமல்லவா? அதற்காக. எல்லோரும் கையைக் கழுவிக்கொண்டு சென்று விட வாசுதேவன் மட்டும் தாயாரின் கையைப் பற்றினார். இவ்வாறு அதிதியாக வந்தவர் அடாத செயல் செய்ய வஞ்சுளவல்லி சத்தமிட மேதாவி முனிவர் ஓடி வந்து பார்த்த போது ஐவரையும் காணவில்லை அங்கே மஹா விஷ்ணு சேவை சாதித்துக் கொண்டு நின்றார். தான் பெற்ற பாக்கியத்தினால் தன் முன் மஹா விஷ்ணுவே நிற்பதை கண்ட மேதாவி முனிவர் பெருமாளே வேண்டுவது என்ன என்று வினவ, "தங்கள் புதல்வி வஞ்சுளவல்லியை எனக்கு கன்னிகாதானம் செய்து தரவேண்டும் என்று வேண்டினார்.

 அதற்கு மேதாவி முனிவர் மூன்று நிபந்தனைகள் விதித்தார். (இப்போது காலம் மாறி விட்டது பாருங்கள் அக்காலத்தில் பெண்ணைப் பெற்றவர்கள்தான் மாப்பிளைக்கு நிபந்தனை போட்டனர்) 
1.   தமக்கு மோக்ஷம் அளிக்க வேண்டும்
2.    பெருமாளே இந்த ஊருக்கு மருமகனாக வருவதால் இவ்வூரில் உள்ள அனைவருக்கும் மோக்ஷம் அளிக்க வேண்டும். 
3.    இத்தலத்தில் தன் பெண்ணுக்கே எல்லாவற்றிலும் முதலிடம் பெற வேண்டும்.

கருட வாகனரும் நிபந்தனைகளை ஏற்றுக்கொண்டு வஞ்சுளவல்லித்தாயாரை மணம் புரிந்து நாம் எல்லோரும் உய்ய கோவில் கொண்டு அருளினார். கர்ப்பகிரகத்தில் தாயார் ஒரு அடி முன்னால் நிற்க பெருமாள் மணக்கோலத்தில் சேவை சாதிக்கின்றார். கருவறையில் பெருமாள் வலப்பக்கம் நான்முகன் மற்றும் சங்கர்ஷணனையும், இடப்பக்கம் அநிருத்தன், பிரத்தியும்னன், மற்றும் சாம்பன் எனும் புருஷோத்தமனையும் கொண்டு, நின்ற திருக்கோலத்தில் பஞ்சவியூகமாக காட்சி தருகின்றபடியால் இத் திருத்தலம் பஞ்சவியூகத் திருத்தலம் என்றும் அழைக்கப்படுகிறது. தாயாரின் திருமணம் கருடாழ்வார் முன்னர் நடந்தது. அப்போது பெருமாள் கருடனிடம் நான் இத்தலத்தில் மனைவி சொல் கேட்பவனாக இருப்பேன். எனவே நீ இங்கேயே இருந்து  நான் பக்தர்களுக்கு அருளுவது போல அருள் வழங்க வேண்டும்  என்று ஆணையிட கருடனும் தனி சன்னதியில் பிரதான சன்னதியில் சேவை சாதிக்கின்றார்.  

திருநறையூர் என்றால் திருவாகிய லக்ஷ்மிக்கு தேன் போல் இனிக்கும் இடம் என்று பொருள். நறுமணம் மிக்க திருத்தலம் என்றும் பொருள். தாயாரின் பெயரால் நாச்சியார் கோயில் என்றே அழைக்கப்படுகின்றது. மூன்று திவ்ய தேசங்களில் தாயார் பிரதானம் அவையாவன திருநறையூர் ஸ்ரீதேவி, ஓப்பிலியப்பன் கோயில் பூமி தேவி, ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள், நீளா தேவி அம்சம் என்பர் பெரியோர்கள்.

உறையூரில் கமலவல்லி தாயாரின் கோயிலைப் போலவே இத்தலமும் நாச்சியார் கோயில் என்றழைக்கப்படுகின்றது. ஸ்ரீவில்லிபுத்தூர் நாச்சியார் மாளிகை என்றழைக்கப்படுகின்றது.

பாரை ஊரும் பாரம் தீரப் பார்த்தன்தன்
தேரை ஊரும் தேவதேவன் சேரும் ஊர்
தாரை ஊரும் தண் தளிர் வேலி புடை சூழ
நாரை ஊரும் நல் வயல் சூழ்ந்த நறையூரே  என்று திருமங்கையாழ்வார் மங்களாசாசனம் செய்த திருநறையூர் என்றழைக்கப்படும் இத்தலத்திற்கு சுகந்தவனம், சுகந்தகிரி என்ற பெயர்களும் உண்டு. சண்டன், ஹேமன் என்ற இரண்டு அரக்கர்கள் மக்களுக்கு துன்பம் விளைவித்து வந்தனர். இதைக் கண்ட இந்திரன், கருடனை அழைத்து அந்த அரக்கர்களை வதம் செய்யுமாறு கேட்டுக்கொண்டார். கருடன் மிகுந்த வாசனையுள்ள மேருமலையின் முடியைப் பெயர்த்தெடுத்து அரக்கர்கள் மீது வீசியெறிந்து கொன்றார். வாசனை உள்ள மரங்களைக் கொண்ட மலைச்சிகரம் திருநறையூரில் விழுந்ததால் இது சுகந்தவனம், சுகந்தகிரி என்றழைக்கப்படுகின்றது. பெருமாளும் சுகந்தவனநாதன் என்றும் அழைக்கப்படுகின்றார்.கோப்பெருஞ்சோழன்  மிகவும் நேர்மையான அரசனாக திகழ்ந்தான். ஒரு சமயம் அவன் வெளியூர் சென்றிருந்த போது எதிரிகள் அவனது நாட்டை கைப்பற்றிக் கொண்டனர். பின்னர் முனிவர்களின் ஆலோசனைப்படி மன்னன் மணிமுத்தாறில் நீராடி வாசுதேவனை சரணடைய, பெருமாள் அனுகிரகத்தினால் மணிமுத்தாற்றிலிருந்து உடைவாளும், குதிரையும் பெற்று எதிரிகளை துவம்சம் செய்து இழந்த இராச்சியத்தை பெற்றான். ஈசனுக்கு 76  மாடக்கோயில் அமைத்த அவன் அதே மாடக்கோவில்  அமைப்பில்  யாழி சிற்பங்களுடன் இக்கோவிலை அமைத்தான்.  இராஜ கோபுரத்தில் நாம் நின்று கர்ப்பகிரகத்தில் உள்ள  பெருமாளை சேவிக்கும் வண்ணம் இவ்வாலயம் அமைந்துள்ளது என்பது சிறப்பு. திருமங்கையாழ்வார் மணி மாடக்கோவில் என்று மங்களாசாசனம் செய்துள்ளார். 

மணிமுத்தாறு முதலில் சாதாரண நதியாகத்தான் இருந்தது. ஒரு சமயம் திருப்பாற்கடலிலிருந்து திருநாராயணபுரத்தில் உள்ள எம்பெருமானுக்கு சமர்ப்பணம் செய்வதற்காக  வைர முடியை  கருட பகவான் எடுத்துச்  சென்ற போது  அதிலிருந்து வைரமும், முத்துக்களும் சிதறி இவ்வாற்றில் விழுந்தமையால் மணிமுத்தாறு என்று பின்னர் புகழ் பெற்றது என்றொரு கதையும் வழக்கத்தில் உள்ளதுஇவ்வளவு சிறப்புப்பெற்ற இத்தலத்தின்

மூலவர்   : திருநறையூர் நம்பி, ஸ்ரீநிவாசன், சுகந்தவன நாதர்
தாயார்    : வஞ்சுளவல்லி, நம்பிக்கை நாச்சியார்,
உற்சவர்   : இடர்கடுத்த திருவாளன்
தல விருட்சம் : வகுளம் (மகிழம்
தீர்த்தம் : மணி முத்தா ஆறு, சங்கர்ஷணம், பிரத்யும்னம், அனிருத்தம்,                   சாம்ப           தீர்த்தம்


வஞ்சுளவல்லித்தாயார்  திருநறையூர் நம்பி 

தனது வலக் கரத்தில் வரத முத்திரையையும், இடக் கரத்தை தனது தொடையில் வைத்தபடியும், மற்ற இரு கரங்களில் சங்கு, சக்கரத்தையும் முன்னே கொண்டு திருமங்கையாழ்வாருக்கு இலச்சினை இடும் கோலம்  கொண்டு, கருவறையில் தனக்கு அருகிலேயே நின்றிருக்கும் பிரம்ம தேவரால் நாள்தோறும் பூஜிக்கப்படுபவர் இத் தல நாயகன்.  தாயார் வஞ்சுளவல்லி, வலக் கையில் வரத முத்திரையுடனும், இடக் கையை ஒயிலாகத் தொங்க விட்டுக்கொண்டு மணப்பெண்ணுக்கே உரிய திருக்கோலத்துடன் மூலவருடன் கருவறையிலேயே சேவை சாதிக்கின்றார். மூலவருடன் தாயாரை கருவறையிலேயே வேறு எந்த திருத்தலங்களிலும் தரிசனம் செய்ய முடியாது. இத்திருக்கோயில் அனைத்து சன்னதிகளுக்கும் தனி விமானம் கொண்டு மொத்தம் 7 விமானங்களையும், 4 கோபுரங்களையும் கொண்டுள்ளது. மூலவர் விமானம் இராஜ கோபுரம் போல இருப்பது ஒரு தனி சிறப்பு.  பெரிய மதில்

கல் கருட சேவை 

 பெருமாளின் திருநாமங்கள் திருநறையூர் நம்பி, ஸ்ரீநிவாசன், வாசுதேவன். தாயாரின் திருநாமங்கள் வஞ்சுள வல்லி, நம்பிகை நாச்சியார். தாயாரின் பெயரால் இத்திவ்ய தேசம் நாச்சியார் கோவில் என்று அழைக்கப்படுகின்றது மேதாவி முனிவருக்கு அன்று கொடுத்த வாக்கை காப்பற்ற வேண்டி புறப்பாட்டின் போது தாயார் தான் முன்னே செல்கின்றார், பெருமாள் பின்னே தொடர்கின்றார்பெருமாள் இத்திவ்ய தேசத்தில் உபய நாச்சிமார்கள் இல்லாமல் ஸ்ரீதேவி அம்சமான வஞ்சுளவல்லித் தாயாருடன் மட்டுமே சேவை சாதிக்கின்றார். எனவே முதலில் அன்ன வாகனத்தில் தாயார் புறப்பாடு கண்டருளும் அழகையும், , பெருமாள் கல் கருடனிலும் ஒன்றாக சேவை சாதிக்கும் அழகையும் காணலாம்.


பெருமாள்   தாயாருடன்
கல் கருடன்


இத்திவ்ய தேசத்தில் மட்டுமே உள்ள ஒரு புதுமை, கல் கருடன் சன்னதி பெருமாளுக்கு எதிராக இல்லாமல் தனி சன்னதியாக அமைந்துள்ளது. எனவே கோபுர வாசலில் இருந்து நேராக நாம் பெருமாளை தரி்சிக்க முடியும்.  ஆண்டாளின் தகப்பனாரன பெரியாழ்வார் இவரது சொரூபமே. இச்சன்னதியில் பெரிய திருவடி "சிலா ரூப கல்கருடனாய்" , வலது காலை முழங்காலிட்டு இடது காலை மடித்து, கரங்களை விரித்து, அழகிய சிறகுகள் விரிந்த நிலையில் விளங்க வலது கர கங்கணமாக குளிகனும், இடது கர கங்கணமாக  ஆதி சேஷனும், வாசுகியை பூணூல் கயிறாகவும், தட்சனை அரை ஞாண் கயிறாகவும், கார்கோடகனை மாலையாகவும், பத்மனை வலது காதணியாகவும்,  மஹாபத்மனை இடது காதணியாகவும், குளிகனை திருமுடி ஆபரணமாகவும் அலங்கரிக்க    அற்புதமாக எழுந்தருளி அருள் பாலிக்கின்றார். கருடன் சந்நிதிக்கு எதிரேதான் சொர்க்க வாசல் அமைந்துள்ளது.

எல்லா கருடனிலும் அஷ்ட நாகங்கள் ஆபரணமாக விளங்கும் ஆனால் இந்த கல் கருடனில் ஒன்பது நாகங்கள் ஆபரணமாக உள்ளன, ஒன்பதாவது நாகம் கருடனின் வாளை அலங்கரிக்கின்றது.

பெரிய திருவடியாகிய கருடன் பெருமாளுக்கு எப்படி எப்படியெல்லாம் சேவை செய்கின்றார் பாருங்கள். பெருமாள் அசுரர்களை கொல்லும் போது மேலாப்பாய், குளிர்ந்த விசிறியாக எம்பெருமானின் வெற்றிக் கொடியாக காய்சினப் பறவையாய் பெருமாளின் பகைவர்களுக்கு தானே எதிரியாக குதிரை பூட்டாத தேராய் பெருமாளுக்கு வாகனமாய்  புறக்கணிக்க முடியாத அடியவராய்  இவ்வாறு பல் வேறு நிலைகளிலும் பெருமாளுக்கு வேறு துணை வேண்டாத துணையாய் திகழ்பவன்தான் கருடன். கருடனில் வந்து யானையின் துயரம் திருநறையூர் நம்பி தீர்த்த அழகை அவரிடம் பஞ்ச சமஸ்காரம் பெற்று திருவைஷ்ணவர் என்று முத்திரை பெற்ற திருமங்கையாழ்வார் இவ்வாறு பாடுகின்றார்.

தூவாய புள்ளுர்ந்து வந்து துறை வேழம்
மூவாமை நல்கி முதலை துணித்தானை
தேவாதி தேவனைச் செங்கமலக் கண்ணானை
 நாவாயுளானை நறையூரில் கண்டேனே. ( பெ.தி 6-8-3)

பொருள்: பரிசுத்தமான வாயை உடைய கருடாழ்வாரை வாகனமாகக் கொண்டு மடுவின் கரையிலே வந்து சேர்ந்து கஜேந்திராழ்வான்  துன்பம் அடையாதபடி அருள்புரிந்து முதலையை இரு துண்டமாக்கி ஒழித்தவனும், நித்திய சூரிகளுக்கு தலைவனும், செந்தாமரை போன்ற திருக்கண்களையுடையவனும், திருநாவாய் என்னும் திருப்பதியில் இருப்பவனுமான எம்பெருமானை திருநறையூரில் கண்டேன்.

தமக்கு சங்கு சக்கர இலச்சினை இட்டு ஆச்சார்யனாக விளங்கும் பெருமாள் என்பதால் திருமங்கையாழ்வார் இவரை 100 நூறு பாசுரங்களுக்கு மேலாக மங்களாசாசனம் செய்துள்ளார்.

இனி சிறப்பு மிக்க  கல் கருடன் இத்தலத்திற்கு வந்த வரலாறு. அருகில் இருந்த ஒரு கிராமத்தில் ஒரு சிற்பி கல்லினால் கருடன் செதுக்கி சிறகுகளை அமைத்து பிராணப்பிரதிஷ்டை செய்த போது அந்த கல் கருடன் திடீரென்று பறக்க ஆரம்பித்து விட்டதாம், அதைக்கண்ட சிற்பி ஒரு கல்லை வீச அது கருடனின் அலகை தாக்க கருடன் திருநறையூரில் விழுந்ததாம். பெருமாள் கருடனை இங்கேயே இருக்க வரம் அளித்தார். எனவே கல் கருடன் தனி சன்னதியில் எழுந்தருளி அருள் பாலிக்கின்றார்.


வஞ்சுளவல்லித் தாயார்

இவர் விநாயகர் போல மோதகப்பிரியர் இவருக்கு அமிர்த கலசம் என்னும் மோதகம் நைவேத்யம் செய்யப்படுகின்றது, இவ்வாறு மோதகம் படைத்து வழிபடுபவர்களுக்கு நீண்ட ஆயுள், நல்ல ஆரோக்கியம், மற்றும் எல்லா செல்வங்களும் அருளுகின்றார் இவர்.  இவருக்குரிய கஸ்தூரி, குங்குமப்பூ, புனுகுச்சட்டம் முதலியவைகளை வாழை இலையில் கலந்து இவரது திருமேனியில் சாற்றினால், சாற்றுவோர் அனைத்து வித இஷ்ட சித்திகளையும் பெறுவர்.  இவருக்கு பட்டு முதலிய வஸ்திரங்களை சார்த்த நினைத்தவை நடந்திடும். ஆடி மாத சுக்கில பஞ்சமி திதியில் இவரை வணங்க நன் மகப்பேறு கிடைக்கும். மணமாகாத, திருமணம் தடை பட்டு வரும் கன்னிப் பெண்களுக்கு திருமணம் கை கூடி வரும். இவரது ஜென்ம நட்சத்திரமான சுவாதி நட்சத்திரத்தில் இவரை அர்ச்சிப்பது மிகச் சிறந்த பலனைத் தரும். இவரை நினைத்து வணங்கினால் விஷ ஜந்துக்களிடமிருந்து, முக்கியமாக பாம்புகளிடமிருந்து காத்தருள்வார். வியாழக் கிழமைகள் மாலை வேளைகளும், சனிக் கிழமைகள் காலை வேளைகளும் இவரை தரிசனம் செய்ய சிறந்த காலங்களாகும்.

நவ சர்ப்பங்களை தன்னுடலில் தரித்து பிரார்த்தனாவாதியாய், கண் கண்ட தெய்வமாய் விளங்கும் இங்குள்ள கல்கருட பகவானுக்கு தொடர்ந்து ஏழு வியாழக்கிழமைகள் அர்ச்சனை செய்து ஏழாவது வாரம் அமிர்த கலசம் செய்விக்க திருமணம் கை கூடல், உத்தியோக உயர்வு, குழந்தை பாக்கியம், தொழில், வியாபார அபிவிருத்தி போன்ற பிரார்த்தனைகள் நிறைவேறுகின்றன. ஆனி மாத கருட ஜயந்தியன்று பெருமாள் தாயாருடன்  இவர் சன்னதிக்கு எழுந்தருளி அருள் பாலிக்கின்றார்.

கருடரால் சிறப்புப்பெற்ற இத்தலத்தில் சில வருடங்களுக்கு முன்பு வரை உச்சிக்கால பூஜையில் இரண்டு கருடன்கள் வந்து நைவேத்யத்தை  சுவீகரித்துக்கொண்டிருந்தன. இவற்றின் மறைவிற்குப்பிறகு  பிரகாரத்தில் அவைகளுக்கென தொரு சிறு சன்னதி அமைக்கப்பட்டிருக்கின்றதுஅங்கு மோட்ச தீபம் ஏற்றி வழிபடுகின்றனர்.

பிரகாரத்தில்  சக்கரத்தாழ்வார் கீழே நவகிரகங்கள் மேலே தசாவதாரங்கள் பொறிக்கப்பட்டிருக்க அதன் மத்தியில் பிரயோக கோலத்தில் சேவை சாதிக்க மேதாவி முனிவர் அவரை வணங்கியபடி உள்ளார்.   108 திவ்ய தேச திருத் தலங்களின் பெருமாள்களையும் ஒரு சேர இங்குள்ள கருட மண்டபத்தில் தரிசிக்கலாம். இந்த மண்டபத்தில் எழுந்தருளியிருக்கும் 108 திவ்ய தேச பெருமாள்களுக்கும் ஒவ்வொரு மாதம் சிரவணத்தன்று திருமஞ்சனம் சிறப்பாக நடைபெறுகின்றது.

"மடல் அங்கே மதில் இங்கே" என்று ஒரு  பழமொழி திருவரங்கத்தில்    கூறுவார்கள். திருமங்கையாழ்வார் திருவரங்கத்தில் மதில் கட்டினார். ஆனால் மடல்களை திருநறையூர் நம்பிக்கே அர்ப்பணித்தார். மடலேறுதல் என்பது சங்ககால தமிழர் மரபு. தலைவியை அடைய முடியாத தலைவன் தன் காதலை உலகிற்கு உணர்த்த பனை மடலால் குதிரை செய்து, காதலியின் உருவத்தை  கொடியில் வரைந்து கண்ணீர் சிந்தி குதிரை மீது வலம் வருதல் மடலேறுதல் எனப்படும். ஆண்கள்தான் மடலேறுவார்கள், ஆனால் இங்கு திருமங்கையாழ்வார் தன்னை பரகால நாயகியாக பாவித்து, தனக்கு திருநறையூர் நம்பி திருமுகங்காட்டாதிருந்தால் மடலூர்வேன் என்று தன் காதலை வெளிப்படுத்த இரு மடல்களை இடுகின்றார். மரபை மாற்றி தலைவி மடலேறுவதாக புதுமை செய்துள்ளார்.

சிறிய திருமடலில் செங்கண்மாலை தெருவில் கண்ட தலைவி, அவனை பார்த்த மாத்திரத்தில் அவளின் மணி நிறமும் கை வளையும் நீங்கியதால், கட்டுவிச்சியை அழைத்து  தாயார்  குறி கேட்க அவள் சுளகில் சிறிது நெல்லை வீசி, நும் மகளை நோய் செய்தவன் இவன் என திருமாலின் அவதாரப்பெருமைகளை தொகுத்துக்கூறும் முறையில் பாடியுள்ளார்.


பெரிய திருமடலில் பரகால நாயகியின் பெண்மை நலன் திருமாலின் நுகர்வுக்குரியது. நுகரப்படாத கொடி மலர் போல அது வீணாகி விடக்கூடாது. தலைவி மூப்படைவதாலும் அவள் அழகு நலன் பயனற்று போய் விடும். அவள் மூப்படையாதிருக்க மருந்து உண்டா? மருந்தறிவார் யார்? என்னும் தேடுதலாக பெரிய திருமடல் அமைந்துள்ளது. இதில் ஆழ்வார் அந்த திருமால் உறையும் பல்வேறு திவ்யதேசங்களையும் பட்டியலிடுகின்றார். இவ்வாறு மடல் பெற்ற சிறப்புப் பெற்றது கல் கருடன் அருள் பாலிக்கும் திருநறையூர்.

அத்தா! அரியே என்று உன்னை அழைக்க
பித்தா என்று பேசுகின்றார் பிறர் என்னை
முத்தே! மணிமாணிக்கமே! முளைக்கின்ற
      வித்தே! உன்னை எங்ஙனம் நான் விடுகேனே?

என்று பரகாலன் மங்களாசாசனம் செய்த வரும் பதிவில்  இத்தலத்தில் நடைபெறும் சிறப்பு கல் கருட சேவையை சேவிக்கலாம் அன்பர்களே.