Tuesday, July 15, 2008

கருடாழ்வார்

அஹோபிலம் பாவன நரசிம்மர் சன்னதி கருடாழ்வார்

ஆழ்வார்கள் எம்பெருமானின் திருவருளினால் மயர்வற மதிநலம் பெற்று திருமாலாகிய அவரின் பேர் எழிற் பொய்கையுள் ஆழ மூழ்கிக் கவி பாடியவர்கள். ஆழ்வார்கள் திவ்ய சூரிகள். ஆழ்வார்களுடைய அருட்பாசுரங்கள் தென் தமிழ் நாட்டில் தென் கலை மரபை தோற்றுவித்தன என்றால் மிகையாகாது. ஆழ்வார்களின் அருளிச் செயல்களான திவ்ய பிரபந்தங்கள் உபய வேதாதங்கள் ஆகும். இவ்வாறு எம்பெருமானின் கல்யாண குணங்களில் ஆழ்ந்து பாசுரங்கள் பாடிய ஆழ்வார்கள் பன்னிருவர் ஆயினும் ஆழ்வார் என்று அழைக்கப்படுபவர்கள் இன்னும் சிலரும் உண்டு. இவர்கள் கருடாழ்வார், இளையாழ்வான், பிரகலாதாழ்வான், கஜேந்திராழ்வான் ஆகியோர் ஆவர். இப்பதிவில் பெருமாளின் வாகனமாகவும், கொடியாகவும் விளங்கும் பெரிய திருவடியாம் கருடன் எவ்வாறு கருடாழ்வார் என்னும் சிறப்புப் பெற்றார் என்பதை காண்போம்.

அதற்காக நாம் அஹோபிலம் செல்ல வேண்டும், செல்வோமா? கிருத யுகத்தில் இந்த அஹோபிலம்தான் ஹிரண்ய கசிபுவின் அரண்மனை, தன் தமையனாகிய ஹிரண்யாக்ஷனை வதம் செய்து விஷ்ணு பகவான் பூமிப்பிராட்டியாரை மீட்டதால் கோபம் கொண்ட ஹிரண்ய கசிபு அவர் மேல் கடும்கோபம் கொண்டிருந்தான், மேலும் அரிய வரங்கள் பெற்று தானே கடவுள் என்றும் யாரும் விஷ்ணுவை வணங்கக்கூடாது என்று கொடுங்கோலனாக ஆண்டு கொண்டிருந்தான். ஆனால் இறைவனின் திருவுள்ளப்படி அவன்து மகனாக பரம ப்க்தனாக , தாயின் கர்பத்தில் இருக்கும் போதே நாரத மஹரிஷியின் மூலம் "ஓம் நமோ நாராயணாய" என்னும் மந்திர உபதேசம் பெற்றவனாக பிறந்தான் பிரகலாதன். அவன் வளர வளர அவன்து விஷ்ணு பக்தியும் வளர்ந்தது. அவனைக் கண்டு ஹிரண்யகஷிபுவின் கோபமும் வளர்ந்தது. மகன் என்று கூடப் பாராமல் பல் வேறு வழிகளில் அவனைக் கொல்லப் பார்த்தான் ஆனால் ஒவ்வொரு முறையும் நாராயணன் தன் பக்தனைக் காப்பாறினார். இறுதியாக ஒரு நாள் கோபம் தலைக்கேறி "எங்கிருக்கிறான் உன் நாராயணன்" என்று ஆணவத்துடன் கேட்டான் ஹிரண்ய கசிபு . ஆக்ரோஷத்துடனும், ஆணவத்துடனும் தன் எதிரே பயமுறுத்தும் விதத்தில் நின்று மிரட்டிய தன் தந்தையானவனை கண்டு சிறிதும் கலங்காமல் திட பிரக்ஞனாய் அந்த சர்வேஸ்வரன் மேல் கொண்ட பக்தியால் அவர் எப்படியும் தன்னை காப்பார் என்ற நம்பிக்கையுடன் பிரகலாதன் அமைதியாக அவர் "தூணிலும் இருப்பார் துரும்பிலும் இருப்பார்" என்று பதிலிறுத்தான். மூர்க்கமாக தன் கதாயுதத்தால் ஒரு தூணை தாக்கினான் ஹிரண்யன். "அண்டமெல்லாம நடுக்கும் படி அந்த தூண் பிளந்தது அதிலிருந்து சிங்க முகமும், மனித உடலும் வஜ்ர நகங்களும் கொண்டு சிங்கப்பெருமான் ஆவிர்பவித்தார்" அதே க்ஷணத்தில் பெருமாள் தன் அன்பன் சொன்ன சொல்லை மெய்பிக்க, இந்த அற்புதத்தை பெரியாழ்வார் இவ்வாறு பாடுகின்றார்

அளந்திட்டதூணை அவன் தட்ட ஆங்கே
வளர்ந்திட்டு வாளுகிர்ச்சிங்கவுருவாய்
உளந்தொட்டிரணியன் ஒண்மார்வகலம்
பிளந்திட்ட கைகளால் சப்பாணி பேய்முலையுண்டானே! சப்பாணி .


ஜ்வாலா நரசிம்மர்

ஹிரண்யன் பெற்ற வரத்தின் படி, மனிதனாகவோ, மிருகமாகவோ, பறவையாகவோ, தேவராகவோ இல்லாத பெருமாள், உள்ளேயோ வெளியேயோ இல்லாமல் வாசற்படியில் அம்ர்ந்து ஆகாயத்திலோ, பூமியிலோ இல்லாமல் தன்து மடியில் ஹிரண்யனை போட்டுக் கொண்டு பகலோ இரவோ அல்லாத சந்தியா காலத்தில் ஆயுதமே அல்லாத தனது கூரிய நகங்களால் அவனது மார்பைக் கிழித்து அவன்து குடலை மாலையாகப் போட்டு ஜ்வாலா நரசிம்மராக அவனை வதம் செய்தார் ஓம் நமோ நாராயணா என்னும் நாமத்தின் மகிமையையும் பிரகலாதாழ்வானின் பக்தியின் பெருமையையும் நிலை நாட்டினார் பெருமாள். பெருமாளின் சீற்றம் கண்டு சகல தேவர்களும் நடுங்கி நிற்க பிரகலாதன் மட்டும் தனக்காக அவதாரம் எடுத்த பெருமாளை பக்தியுடன் நோக்கி அவரை சாந்தமதையும்படி வேண்டி பெருமாளை சாந்தப்படுத்தினான். இவ்வாறு பெருமாளின் பக்தியிலே ஆழ்ந்ததால்தான் பிரகலாதன் பிரகலாதாழ்வான் என்று போற்றப்படுகின்றான்.

என்னடா கருடாழ்வானைப்பற்றிக் கூறுகின்றேன் என்று ஆரம்பித்து பிரகலாதாழ்வானைப் பற்றி கூறிக்கொண்டிருக்கிறேனே என்று யோசிக்கிறீர்களா? சற்று பொறுங்கள் இரண்டுக்கும் உள்ள சம்பந்தம் புரியும்.

ப்ரகலாதாழ்வான் சொன்ன வார்த்தையை மெய்பிக்க பெருமாள் அதே நொடியில் ஹிரண்யனின் அரண்மணை தூணில் அவதாரம் செய்ததால் அவர் கருடன் மேல் எழுந்தருளி வராமல், கருடனை விடுத்து தனியாக வந்தார். அதனால் மிகவும் துக்கம் கொண்ட கருடன், பெருமாளிடம் தனக்கு நரசிம்ம அவதார சேவையை காட்டி அருளுமாறு வேண்டினான். கருடனின் பெருமையை உலகத்தோர்க்கு அறிய செய்ய திருவுளம் கொண்ட பெருமாள் நீ அஹோபிலம் சென்று தவம் செய் தக்க சமயத்தில் நான் வந்து சேவை சாதிக்கின்றேன் என்று அருளினார். பெருமாள் “கூடாவிரணியனைக் கூருகிரால மார்பிட” அவதாரம் செய்த புண்ணிய பூமியாகிய அஹோபிலத்தில் வந்து கருடன் பெருமாளின் தரிசனம் வேண்டி தவம் செய்ய ஆரம்பித்தான். அவ்வளவு கடுமையாக தவம் செய்தான் கருடன், அவனுடைய தவத்தீயால் பூலோகம் ஸ்தம்பித்தது, தேவலோகத்தையும் அது விடவில்லை . தேவேந்திரனுக்கு பயம் பிடித்துக் கொண்டு விட்டது, ஒரு காலத்தில் தேவ லோகம் வந்து தேவர்கள் அனைவரையும் தோற்கடித்து அமிர்தத்தை எடுத்து சென்றவனல்லாவா கருடன்? எனவே இந்திரன் கருடனின் தவத்தை அறிந்து தன் லோகத்துக்கு தீங்கு வந்துவிடுமே என்று ஐயம் கொண்டான். நான்கு பக்கங்களிலும் கண்ணைச் செலுத்தினான். அழகாலே எல்லாரையும் மயக்கும் இயல்பு பெற்றுக் கர்வம் கொண்ட ஊர்வசி அவனருகில் நின்றாள். அவளைப் பார்த்தும் மனத்தில் ஒரு தீர்மானத்துக்கு வந்த இந்திரன், "ஊர்வசியே! தேவர்களின் நன்மைக்காக உடனடியாக ஒரு தந்திரம் செய்ய வேண்டும். கருடன் முனிவேடம் தரித்து அஹோபிலத்தில் தவம் புரிவது உனக்குத் தெரிந்ததே. அங்கே சென்று பல விலாசங்களைக் காட்டி அவனை உன்மீது மையல் கொள்ளச் செய்யவேண்டும். அவனது தவத்தைக் கெடுக்க வேண்டும். மகரிஷிகளும், உன் மோக வலையில் சிக்கினவர்கள். கருடனும் உன் மீது மோகம் கொள்வான் என்பதில் சந்தேகம் இல்லை, என்று சொல்லி அனுப்பினான்."


ஊர்வசியும் இந்திரனின் உத்திரவின்படி பல அப்ஸர ஸ்த்ரீகளுடன் அஹோபிலம் என்னும் மலைக்கு வந்து சேர்ந்தாள். மதுரமான வார்த்தைகளை பேசத்தொடங்கினாள். அழகிய கீதங்களையும் பாடினாள். தன்னுடன் வந்த பெண்மணிகளோடு நர்த்தனம் செய்யவும் ஆரம்பித்தாள். கருடன் அவளை பார்க்கவும் இல்லை. மதிக்கவும் இல்லை. 'இந்திரன் அனுப்பி வந்தவள் நான். ஊர்வசி என்பது என் பெயர். ஒரே கணத்தில் எல்லோரையும் என் வசமாக்க சக்தி உடையவள். என் கண்ணுக்கு இலக்கானவர்கள் எல்லோருமே எல்லா துன்பங்கினின்றும் விடுபட்டவர்கள் ஆவார்கள். பெண்ணின் உருவத்தை நேரில் பார்த்ததும், அதை ஆதரிக்காமல் வேறு பொருளை விரும்புகிறவன் மிக்க தாகத்தோடு இருந்தும் கையில் கிடைத்திருக்கும் தண்ணீரைவிட்டு ஆகாயத்தில் உள்ள மேகத்தை எதிர்பார்ப்பவனுக்கு சமானமாகிறான்' என்று பரிவுடன் கூடிய ஆயிரக்கணக்கான வார்த்தைகளால் கச்யபருடைய புதல்வனான கருடனை ஏமாற்ற முயன்றாள். "இத்தகைய அபத்தமான கேவல ஆடம்பரம் உபயோகமற்றது. தீமையைக் கொடுக்கக்கூடியது. கேட்பவர்களுக்கும் முரணானது' என்று நினைத்து முதலில் கருடன் பேசாமல் இருந்துவிட்டான்.பிறகு மறுபடியும் இரக்கத்தால் கருடன் சில வார்த்தைகளைச் சொல்லத் தொடங்கினான்; "ஏ ஊர்வசியே! கொடிய பெண்ணே! நீ உன் இருப்பிடம் செல். உன்னுடைய விருப்பம் என்னிடத்தில் பயன் பெறாது. கொட்டு மழையால் தாக்குண்டாலும் மலைகள் எப்படித் துன்பத்தை அடைவதில்லையோ அதுபோல் பகவானிடத்தில் மனத்தைச் செலுத்தியவர்கள் எந்தவிதத்திலும் துன்பப்படமாட்டார்கள். அச்சுதனிடத்தில் ஈடுபட்ட மஹா மனஸ்விகளின் உயர்ந்த குணம் எங்கே? பெண், புதல்வன், மனைவி, பணம் இவ்விஷயத்தில் அறிவிலிகள் கொள்ளும் பற்றுதல் எங்கே? தம் விருப்பப்படி இந்தப் பூலோகத்தில் ஏற்படும் சுகங்களில் ஈடுபட்டு நன்மை தீமை ஒன்றும் அறியாத ஆண்களுக்குத் தீங்கும் இன்பமாகப் படுகிறது. கையில் சிரங்கு வந்த போது அதை சொறிந்தால் மேல் தீமை ஏற்படும் என்றறிந்தும் தற்காலத்தில் உண்டாகும் இன்பத்துக்காக சொறிவது போல் உள்ளது மக்களின் செயல். ஆக தீங்கும் இன்பமாகத் தோன்றும். "பவவ்யதா ஸுகாயதே" ஆகையினாலன்றோ மாமிசம், ரத்தம் முதலியவற்றின் சேர்க்கையைப் பெற்ற கொடிய அழுக்கு உடம்பினிடம் மூடர்கள் ஆசை காட்டுகின்றனர்! இப்படிப் பட்டவர்கள் நரகத்திடமும் ஈடுபாடு கொள்வார்கள். வெறுப்புக் காட்டமாட்டார்கள். பெண்கள் சிலரிடத்தில் சிநேகம் பாராட்டுவார்கள். சிலரை மயக்குவார்கள்; ஓரிடத்திலும் நிலையுடன் இருக்கமாட்டார்கள். இவர்களுடைய மனத்திலேயே ஒரு நிச்சயமும் ஏற்படாது. இப்படிப் பலவகையில் வினதையின் சிறுவனான கருடன் ஊர்வசியை கடிந்து கூறி, ஹரியின் திருவடிகளில் மனத்தைச் செலுத்தி பெருமாளை ந்ருஸிம்ஹராய் தரிசிக்க வேண்டி ஒரே மனதுடன்

ஆடியாடி அகம்கரைந்து இசை பாடிப்பாடிக் கண்ணீர் மல்கி எங்கும் நாடிநாடி நரசிங்கா!
என்று ஊனும் உள்ளமும் உருக கடும் தவத்தை தொடர்ந்தான் வைனதேயன்.
ஊர்வசியும் வெட்கத்தால் முகந்தாழ்ந்து தேவேந்திரனிடம் திரும்பிச் சென்றாள். இந்திரனைப் பார்த்து "ஓ புரந்தரா! முன்பு பல இடங்களுக்கு என்னை அனுப்பியிருக்கிறாய். தபோ லோகத்திலோ, ப்ரம்ம லோகத்திலோ, அதற்கும் மேலான உலகத்திலோ, பாதாளம் முதலிய உலகங்களிலோ, என்னுடைய திறமையைக் காட்டி உன் விருப்பத்தை நிறைவேற்றிக் கொடுத்திருக்கிறேன். ஆனால் இந்த கருடனிடம் என் முயற்சி பலன் அளிக்கவில்லை. மதங்கொண்ட யானையைத் தாமரைத் தண்டின் நூலால் எப்படிக் கட்ட முடியாதோ, உக்ரமான க்ரணங்களை உடைய சூரியனை இருட்டால் எப்படி அழிக்க இயலாதோ, சமுத்ர ஜலத்தால் பாடவாக்கினியை (வடவைக் கனலை) எப்படி அணைக்க முடியாதோ, சமுத்ரத்தின் ஒலியை தவளையின் கூச்சலால் எப்படி அடக்கமுடியாதோ, அவ்வாறே பகவானிடத்தில் எல்லா புலன்களையும் செலுத்தி பேரறிவைப்பெற்ற மகான்களின் மனத்தை அழிக்க முடியாது" என்றாள். மேலும், "கருடன் தேவ லோகத்தையோ உன்னுடைய பதவியையோ ப்ரம்மாவின் ஸ்தானத்தையோ விரும்பித் தவம் புரியவில்லை. பகவானின் திருவடித்தாமரைகளை காணவேண்டும் என்று விரும்பியே தவம் புரிகின்றான். இதை நான் நன்கு அறிவேன்" என்று சொல்லி இந்திரனுடைய பயத்தை ஒருவாறு போக்கினாள் ஊர்வசி.

கருடனின் திட பக்தியைக் கண்டு மகிழ்ந்த பெருமாள் சத்திய சொரூபனாய் மலைக்குகையில் நெருப்பின் உக்ரத்தோடு அவன் விரும்பியபடியே உக்ர நரசிம்மராய் அன்று எவ்வாறு இருந்தாரோ அது போலவே சேவை சாத்தித்தார். பிரகலாதன் கை கூப்பி நிற்க ஹிரணியணை மடியில் போட்டுக் கொண்டு உக்ரமாய் அவனது மார்பைப் பிளக்கும் கோலத்தில் முன் நரசிங்கமதாகி அவுணன் முக்கியத்தை முடிப்பான் என்ற படி பெருமாள் கருடாழ்வாருக்கு சேவை சாதித்தார். சங்கம், சக்கரம், கதை முதலிய ஆயுதங்களை தரித்தவரும், நான்கு கைகளை உடையவரும், இந்திரன் முதலிய தேவ கணங்களால் பூஜிக்கப்பட்டு நீர் கொண்ட மேகத்திற்கு ஒப்பானவரும் செந்தாமரைக்கண்ணை உடையவரும் ஒரே சமயத்தில் உதித்த கோடிக்கணக்கான சூரியர்களின் ஒளியைப் பெற்ற க்ரீடத்தால் விளங்கியவரும், அழகிய உன்னதமான மூக்குடன் கூடியவரும் கருத்த கேசங்களுடன் கூடியவரும் அழகிய தளிர் போன்றவரும், குண்டலதாரியாய் கெளஸ்துபம் உடையவரும், பீதாம்பரதாரியுமான பகவானை கருடன் தன் கண்களால் கண்டு ஆனந்த பரவசனாய் நின்றான். நக்ஷத்திர மண்டலத்தோடு கூடிய சந்திரன் போலவும், மேருமலையின் நடுவிலுள்ள சூரியன் போலவும், அநந்தன் முதலிய சுரகணங்களோடு சேவை அளிக்கும் பகவான், கருடனின் முன் வந்து அழகிய வார்த்தை சொல்லத் தொடங்கினார். "குழந்தாய்! விநதையின் மனத்துக்கு இனியவனே! உனது உக்கிரமான தவத்தால் மகிழ்ச்சியுற்றேன். எழுந்திருப்பாய். உன் விருப்பம் என்ன? நான் அதை நிறைவேற்றுகிறேன்" என்றார். இதைக் கேட்டதும் கருடன் பலதடவை பகவானை வணங்கி அபூர்வமான அவரது ரூபத்தைக் கண்டு மலர்ந்த கண்களைப் பெற்றவனாய் உடல் முழுவதும் மயிர்க்கூச்சலடைந்தவனாய் கடவுளை துதி செய்ய ஆரம்பித்தான்.

"எல்லா உலகத்தையும் ஆக்கவும், நிலைபெறுக்கவும், அழிக்கவும், திறமைப்பெற்ற உன்னை நமஸ்கரிக்கிறேன். காரிய காரண ரூபனான உன்னை நமஸ்கரிக்கிறேன். பல ரூபங்களை எடுத்து எங்கும் வியாபித்த உன்னை வணங்குகிறேன். சார்ங்கம் முதலிய ஆயுதங்களை ஏந்திய உன்னை வணங்குகிறேன். அடியவர்களிடத்தில் இரக்கமுள்ளவனே! உன் மகிமையைச் சொல்லி துதிசெய்ய யாருக்குத்தான் சக்தி உண்டு? ஜகத்குருவே! மந்தமதியுள்ளவனான நான் எப்படித் துதிப்பேன்?என் நாக்கு எப்படி முன் வரும் ?. என்று கருட பகவான் துதி செய்து விநயத்துடன் நின்றான்.

மிகத் தெளிவு பெற்ற முகத்துடன் பகவான் கருடனைப் பார்த்து சொல்லத் தொடங்கினான்: "விநதையின் புதல்வா! நான் உன் தவத்தை மெச்சுகிறேன். உனக்கு எல்லா மங்களங்களும் உண்டாகட்டும். உன் விருப்பம் என்ன? சொல்லாய்! அதை நான் நிறைவேற்றி வைக்கிறேன்." என்றார். கருடன் "தேவ தேவா! நான் பூமியிலோ மூன்று உலகங்களிலோ ஜயம் பெற விரும்பி தவம் புரியவில்லை. இன்று முதல் வாகனமாக எனது தோளில் தேவரீர் அமர வேண்டும். இதுதான் எனக்கு மகிழ்ச்சியைக் கொடுக்கக் கூடியது. எல்லாவற்றுக்கும் ஆதாரனான உனக்கு நான் ஆதாரமாக வேண்டும். இந்த மகிமை எவற்கும் கிடைக்கத் தகுந்ததன்று. இந்த பெரும் பாக்கியம் எனக்கு கிட்டவேண்டும்" என்றான். பின்பு அவன் மேலும் சொல்லத் தொடங்கினான். "புருஷோத்தமா! இந்த மலையில் இருந்துகொண்டு நான் கடும் தவம் புரிந்தேன். இங்கே என் தவம் வெற்றி அடைந்தது. உன்னை தரிசிக்கும் பாக்யத்தை கொடுத்தபடியால் இந்த மலைக்கு ஒரு பெருமை ஏற்பட்டுள்ளது. எனவே, இதற்கு கருடமலை என்ற பெயர் வழங்க வேண்டும் தாங்களும் இந்த கருடாசலத்தில் எனக்கு சேவை சாதித்தது போலவே எப்போதும் சேவை சாதிக்க வேண்டும் . இந்த இரு வரங்களையும் கொடுக்க வேண்டும்" என்று கேட்டுக் கொண்டான்.

பகவான், "கருடா! நீ இளம்பிராயம் உள்ளவனாக இருந்த போதிலும் புத்தியால் பெரியவனாக விளங்குகிறாய். உன்னைக்காட்டிலும் உயர்ந்தவன் யாரும் இல்லை. பல முனிவர்கள் தவம் புரிந்தனர். நானும் அவர்களுக்கு ஸேவை தந்தேன். அவர்கள் வேறு எதையோ பலனாக விரும்பி வேண்டிக் கொண்டார்களே தவிர தங்களை எனக்கு வாகனமாக்கிக் கொள்ள விரும்பவில்லை. நீ விரும்பியபடி இரு வரமும் தந்தேன். உன்னை கருடன் என்றும், ஸர்ப்பங்களுக்கு சத்ரு என்றும், வேத ஸ்வரூபி என்றும், பக்ஷீராஜன் என்றும், நாராயண ரதம் என்றும் சொல்லி அழைப்பார்கள்" என்று சொல்லி, பகவான் அங்கேயே அந்தர்த்தியாமானார்.

இன்றும் கருடாத்ரியில் ஒரு குகையில் பெருமாள் அஹோபில நவ நரசிம்மர்களுள் முக்கியமானவராக அஹோபில நரசிம்மராக, உக்ர நரசிம்மராக இன்றும் சேவை சாதிக்கின்றார். குகையில் பெருமாளுக்கு எதிரே கருடன் தவ நிலையில் சேவை சாதிக்கின்றார். இவ்வாறு பெருமாள் அவதாரம் செய்த தலத்தில் நாம் எல்லோரும் உய்ய பெருமாள் கோவில் கொள்ள காரணமாக இருந்தார் கருடன். இவ்வறு மாறாத பக்தி கொண்டு பகவான் சேவையே பிரதானம் என்று அவரிடம் பூரண சரணாகதி அடைந்ததால் அவரது திருவடிகளைத் தாங்கும் பேறு பெற்றதால் , கருடாழ்வார் என்று போற்றப்படுகின்றார் விநதையின் சிறுவன்.


இந்த சிங்கவேள் குன்றத்தின் சிறப்பை திருமங்கையாழ்வார் இவ்வாறு பாடுகின்றார்.
அங்கண்ஞாலம்அஞ்ச அங்குஓராளரியாய் அவுணன்
பொங்காஆகம்வள்ளுகிரால் போழ்ந்தபுனிதனிடம்
பைங்கணானைக்கொம்புகொண்டு பத்திமையால் அடிக்கீழ்ச்
செங்கணாளிஇட்டிறைஞ்சும் சிங்கவேள் குன்றமே. அலகு இரு இறக்கைகள் என மூன்று சிகரங்களாக காட்சி அளிக்கும் கருடாத்ரி

பெருமாள் அவ்தாரம் செய்த உக்ர ஸ்தம்பத்திலிருந்து கருடாத்ரியைப் பார்த்தால் அப்படியே கருடன் தன் இரு சிறகுகளையும் விரித்து மத்தியில் உயர்ந்த அலகுடனும் மூன்று பகுதிகளாகவும் அஞ்சலி ஹஸ்தத்துடன் ( கை கூப்பிய நிலையில்) நிற்பதை இன்றும் காணலாம். அஹோபிலத்தில் இன்று கருடாத்ரிக்கும் வேதாத்ரிக்கும் இடையே பிறவிப் பிணியை நீக்கும் பவ நாசினி ஆறு ஓடுகின்றது. கருடாத்ரியில் தான் நவநரசிம்மரில் இன்னொரு நரசிம்மரான பாவன நரசிம்மரும் தாயார் செஞ்சு லக்ஷ்மித்தாயாருடன் லக்ஷ்மி நரசிம்மராக சேவை சாதிக்கின்றார். இவ்வளவு பெருமைகள் பெற்ற அஹோபிலம் செல்ல வாய்ப்பு கிடைத்தால் சென்று தரிசனம் செய்து விட்டு வாருங்கள்.


கருடாழ்வரின் கூப்பிய கரங்கள்


இனி அஹோபில ஷேத்திரத்தின் சிறப்புகள் சில

அஹோபிலே கருடசைல மத்யே க்ருபா வசாத் கல்பித ஸந்நிதாநம் லக்ஷ்ம்யா ஸமாலிங்கித வாம பாகம் லக்ஷ்மி ந்ருஸிம்ஹம் சரணம் பிரபத்யே

என்றபடி அஹோபில ஷேத்திரத்தில் கருட மலையின் கர்பத்தில் கருணையின் காரணமாக கோவில் கொண்டு இடது பக்கத்தில் பெரிய பிராட்டியாரை அனைத்த வண்ணம் சேவை சாதிக்கும் லக்ஷ்மி ந்ருஸிம்ஹரை சரணம் அடைகின்றேன்.

அஹோபிலம் நவநரசிம்மர்கள்
இவ்வாறு எப்போதும் அகலகில்லேன் இறையும் என்று அலர்மேல மங்கை மஹாலக்ஷ்மியுடன் சேர்ந்தே இருக்கும் மாலோலனாகவும் மற்றும் எட்டு கோலங்களிலும் பெருமாள் எழுந்தருளி அருள் பாலிக்கும் தலம் தான் அஹோபிலம். திருமங்கையாழ்வார் தம் பாசுரத்தில் ஒரு பாடலில் "தெய்வங்களால் மட்டுமே சென்று தரிசிக்க முடியும்" என்று சிங்கவேள் குன்றம் என்று பாடிய தலம். காசியில் ஆயிரம் யுகங்கள், ப்ரயாகையில் இருபது யுகங்கள், கயையில் நூறு யுகங்கள் வாழும் பயனை அஹோபில ஷேத்திரத்தில் ஒரு நாள் வாசம் செய்தால் கிட்டும் எனது அஹோபிலத்தின் சிறப்பு. இராமாவாதாரத்தில் இராமருக்கு இளையவராக பிறந்து அவர் சேவை ஒன்றையே எப்போதும் சிந்தித்து இராமரை இணை பிரியாது எப்போதும் தொண்டு செய்து பின் கிருஷ்ணாவதாரத்திலே அவருக்கு மூத்தவராக பலராமராக அவதாரம் செய்து, இக்கலிகாலத்தில் இராமானுஜராக அவதாரம் செய்த பெருமாளின் பாம்பணையாம் அயிரம் பணங்களார்ந்த ஆதி சேஷன் இளையாழ்வான் என்று கொண்டாடபப்டுகிறான். மேற்கு தொடர்ச்சி மலையே ஆதி சேஷன் என்பது ஐதீகம். அந்த ஆதிசேஷனின் தலை - திருவேங்கடம், முதுகு- ஸ்ரீ சைலம் வால்- அஹோபிலம் ஆகும்.

மேலும் அஹோபில திவய தேசத்தின் தரிசனம் பெற இங்கே செல்க

இனி கஜேந்திராழ்வானைப் பற்றி ஒரு சிறு குறிப்பு ஆயிரம் வருடங்கள் தன் பலத்தின் மீதும் மற்ற தன் கூட்டத்தின் மீதும் நம்பிக்கை வைத்து போராடிக்கொண்டிருந்த போது அவனுக்கு பெருமாள் உதவ முன்வரவில்லை. ஆனால் அதையெல்லாம் விடுத்து எப்போது அவன் அந்த ஆதிமூலத்திடம் பூரண சரணாகதி அடைந்த போது அடுத்த நொடியே கருடன் மேல் ஆரோகணித்து வந்து கஜேந்திரனுக்கு அருளினார் பெருமாள். எனவேதான் பராசர பட்டர் தமது போற்றியில் தங்களது கருணையை விட தங்களது அந்த வேகத்திற்காக தலை வணங்குகின்றேன் என்று பாடுகின்றார்.

இவையனைத்திலும் நாம் கற்கும் பாடம் கண்னன் கீதையிலே கூறிய படி
ஸர்வ தர்மாந் பரித்யஜ்ய மாம் ஏகம் சரணம் வ்ரஜ
அஹம் த்வா ஸர்வ பாபேப்யோ மோக்ஷயிஷ் யாமி மாசுச

அதாவது மோடசத்திற்கு உதவும் மற்ற எல்லா தர்மங்களையும் விடுத்து என்னை மட்டுமே உபாயமாக பற்றினால் உன்னை சகல பாவங்களிலும் விடுத்து உன்னை கடைத்தேற்றுவேன் என்று அருளிய படி பூரண சரணாகதி ஒன்றே நாம் உய்யும் வழி.

ஓம் நமோ நாராயணாய.

Saturday, July 12, 2008

கருட கம்பம்

முந்நீர் ஞாலம் படைத்த முகில் வண்ணன், பூமன்னு மாது பொருந்திய மார்பன், மாமலர் மன்னிய மங்கை மகிழ்ந்துறை மார்பன், விஷ்ணு பகவானின் வாகனமான கருடனுக்கு மட்டும் ஒரு தனி சிறப்பு உண்டு அது என்னவென்றால வைஷ்ணவ ஆலயங்களில் கொடி மரம் கருட கம்பம் என்று அழைக்கப்படுகின்றது. பெருமாள் ஆலயங்களில் துவஜஸ்தம்பங்களில் பெரிய திருவடி நித்ய வாஸம் செய்வதால் அவை கருடஸ்தம்பம் என்றும் அழைக்கப்படுகின்றன என்பது ஐதீகம் . பெருமாள் கருடனை வாகனமாக ஏற்ற போது வெற்றிக்கு அறிகுறியாக நீ எனது கொடியிலும் விளங்குவாய் என்று வரக் கொடுத்தார் எனவே எம்பெருமானின் கொடியிலும் கருடனே விளங்குகின்றான்.

மேலும் சுப நிகழ்ச்சிகள் நடைபெறுவதை அறிவிக்கும் ஆற்றலும் கருடனுக்கே உள்ளது. கருட தரிசனம் மங்களகரமானது என்று கருடனின் பெருமைகளைச் சொல்லிக் கொண்டே போகலாம்.

சபரி மலையில் மகர ஜோதிக்காக ஐயப்பனுக்கு அணிவிக்க பந்தள இராஜா அர்பணித்த திருவாபரணங்கள் கொண்டு வரப்படும் போது கருடன் வட்டமிட்டு வருவதை எல்லோரும் அறிவோம். அது போலவே பெரிய திருக்கோவில்களின் கும்பாபிஷேகம் நடக்கும் போது கருடன் வந்து வட்டமிடும் என்பது உண்மை. ஒரு முறை திருமயிலை கபாலீச்சுரத்தில் கும்பாபிஷேகம் நடைபெற்றவுடன் மூன்று கருடன் வந்து இராஜ கோபுரத்தின் உயரே கருடன் வந்து வட்டமிட்டதை அடியேன் அனுபவித்துள்ளேன். இவ்வாறு மங்கள்த்திற்கு அறிகுறியாக விளங்குபவர் கருடன்.

மையோ! மரகதமோ, மறிகடலோ, மழை முகிலோ ஐயோ! இவன் வடிவழகென்பதோர் அழகுடைய எம்பெருமானின் எதிரே சேவை சாதிப்பவர் தான் கருடன். எவ்வாறு நிலைக் கண்ணாடி தன் எதிரே உள்ள பிம்பத்தை பிரதிபலிக்கின்றதோ அது போல எம்பெருமானின் திவ்ய சொரூபத்தை, திவ்ய கல்யாண குணங்களை காட்டியருள்பவர் கருடன்.

ஆகமம் என்றால் வருகை என்று பொருள். உபதேச வழியாக வருபவை அவை. ஆன்மாக்கள் மோட்சம் அடைய மல நாசம் செய்பவை ஆகமங்கள். திருக்கோவில் கட்டுவதற்கு நிலம் தேர்ந்தெடுப்பது முதல் பூஜை முறைகள் முடிய அனைத்தும் ஆகமங்களில் கூறப்பட்டுள்ளன. ஆகமங்களின் படி ஐந்து நாட்களுக்கு மேற்பட்ட திருவிழாக்களின் போது கொடியேற்றம் அவசியம். எனவே வைணவத்தலங்களில் பிரம்மோற்சவத்தின் போது என்பெருமானுடைய கொடியாகிய கருடக்கொடி ஏற்றப்படுகின்றது. அது ஏற்றப்படும் கொடிக்கம்பம் கருட கம்பம் என்றும் அழைக்கப்படுகின்றது. திருமலையில் அகலகில்லேன் இறையும் என்று அலர்மேல் மங்கை உரை மார்பன் மலையப்ப சுவாமியின் பிரம்மோற்சவத்தின் முதல் நாள் கருடக்கொடி கருட கம்பத்தில் ஏற்றும் அழகைக் காணுங்கள்.


சில தலங்களில் இராஜ கோபுரத்திற்க்கு வெளியே எந்தப் பறவையும் பறக்க முடியாத உயரத்தில் பறக்கும் கருடனுக்கு ஒரு ஸ்தம்பத்தின் மேல் உயர்ந்த சன்னதி அமைக்கின்றனர். இவையும் கருட கம்பம் என்றே அழைக்கப்படுகின்றன. இவ்வாறு அமைக்கப்பட்ட இரண்டு உயர்ந்த கருட கம்பங்களை தரிசனம் செய்யலாம்.


பூவராகர் - ஸ்ரீமுஷ்ணம்

மிக உயர்ந்த கருட கம்பத்தை நாம் ஸ்ரீ முஷ்ணத்தில் தரிசிக்கலாம். நமக்கும் பூவின் மிசை நங்கைக்கும் இன்பன், பந்திருக்கும் மென் விரலாள் பனி மலராள் வந்திருக்கும் மார்பன், எம்பெருமான் பூவராகராக எழுந்த்ருளி அருள் பாலிக்கும் அபிமான ஷேத்திரம்தான் ஸ்ரீமுஷ்ணம். இரண்யாக்ஷனை வதைத்து பூமி பிராட்டியாரை மீட்ட பெருமாள் இங்கே முஸ்லீம்களும் வணங்கும் பெருமாளாய் சேவை சாதிக்கின்றார் இத்தலத்தில். பெருமாளையும் ஏழு நிலை இராஜ கோபுரத்தின் உயரத்திற்கு இனையாக ஓங்கி உயர்ந்திருக்கும் கருட கம்பம்.


அதன் உச்சியில் உள்ள கருட மண்டபத்தில் கருடன் சேவை சாதிக்கின்றார்

. அந்த கருட கம்பத்தின் அழகைத்தான் கண்டு களியுங்களேன்.

 
சிறிய திருவடியான ஆஞ்சனேயர் ஸ்ரீஇராமாவதாரத்தின் போது இராமரின் தூதராக இலங்கைக்கு ஸ்ரீ சீதா பிராட்டியாரிடம் சென்றது போல, பெரிய திருவடியான ஸ்ரீ கருடன் கிருஷ்ணாவதாரத்தில் தாயாரான ஸ்ரீ ருக்மணி பிராட்டியார் எழுதிக் கொடுத்த ஓலையை எடுத்துக் கொண்டு எம்பெருமானான ஸ்ரீ கிருஷ்ணனிடம் தூது சென்றவன் கருடன்.

பெருமாள் ருக்மிணி பெருமாட்டியாருடன் ஸ்ரீ வித்யா இராஜ கோபாலராய் கையில் செண்டாயுதம் ஏந்தி ஒய்யாரமாய் எழில் கொஞ்சும் குழந்தையாக எழுந்தருளி சேவை சாதிக்கும் இராஜ மன்னார்குடி அபிமான ஷேத்திரத்தில் உள்ள கருட கம்பம் இரண்டாவது உயரமான கருட கம்பம் ஆகும்.

மன்னார்குடி கருட கம்பத்தையும் கண்டு களியுங்கள்.

பாடும் குயில்காள்! ஈதென்ன பாடல்? நல்வேங்கட
நாடர்நமக்கொருவாழ்வு தந்தால் வந்துபாடுமின்
ஆடும்சுருளக்கொடியுடையார் வந்தருள் செய்து
கூடுவாராயிடில் கூவி நும்பாட்டுக்கள் கேட்டுமே.
அடுத்த பதிவில் கருடன் கருடாழ்வான் ஆன சரிதத்தைக் காண்போம்.

Monday, June 23, 2008

கருட சேவை-7

தக்ஷிண பத்ராசலம் மேற்கு மாம்பலம்
கோதண்டராமர் கருடசேவை
வையத்தெவரும் வணங்க அணங்கெழு மாமலை போல
தெய்வப்புள் ஏறிவருவான் சித்திரக்கூடத்துள்ளானே - திருமங்கையாழ்வார்

தெய்வப்புள்ளான கருட பகவான் ஒப்பற்ற மேன்மையுடையவர். மஹாவிஷ்ணுவுடைய இரண்டாவது வியுகமான ஸ்ரீ சங்கர்ஷண மூர்த்தியின் அம்சமாக விளங்குபவர்.

மனித உடலிலுள்ள ஐந்து வாயுக்களான ப்ராணன், அபாநன், வ்யானன்,உதானன், ஸமானன் என்பவற்றுக்கு ஸத்யர், ஸுபர்ணர், கருடர், தார்க்ஷ்யர். விஹகேஸ்வரர் என்னும் ஐந்து மூர்த்திகளாய் விளங்குகின்றார்.

இவர் ஞானம், சக்தி, பலம், ஐச்வர்யம், வீர்யம், தேஜஸ் என்னும் ஆறு குணங்கள் நிரம்பப்பெற்றவர்.

 ஏழு சுரங்களையுடைய சாம வேதத்தின் வடிவமானவர். அணிமா, மஹிமா, லகிமா,கரிமா,வசித்வம்,ஐச்வர்யம், ப்ராப்தி, ப்ராகாம்யம் என்னும் அட்டமஹா சித்திகள் பெற்றவர்.

கருடன் வேறு, பகவான் வேறு என்று நினைக்க வேண்டாம். பகவானே கருடனாக அவதரித்து விஷ்ணு என்றும் கருடன் என்றும் பெயர் பெற்றார் என்று மஹாபாரதம் கூறுகின்றது.

கருடன் எம்பெருமானின் வாகனமாக எவ்வாறு ஆனார் என்பதற்கு இரு ஐதீகங்கள் வழங்குகின்றது அவை என்ன என்று பார்ப்போமா? சப்த ரிஷிகளில் ஒருவரான காசயபர் ஒரு சமயம் ஒரு மாபெரும் வேள்வியை நடத்தினார். அதற்கு பல மஹரிஷிகள் எழுந்தருளியிருந்தனர். ஒவ்வொரு மஹரிஷியும் தங்களது சக்திகேற்ப அவ்வேள்விக்கு உதவி புரிந்தனர். இம்மஹரிஷிகளில் வாலகில்யகர்கள் என்று சொல்லப்படும் மஹரிஷிகளும் இருந்தனர். இவர்கள் அறிவிலும், தவத்திலும் சிறந்தவர்கள் ஆனால் உருவத்தில் மிக மிகச் சிறியவர்கள். இவர்கள் வேள்விக்காக சிறு ஸமித்துக்களை எடுத்துக் கொண்டு வரும்போது குளம்படியளவுள்ள நீர்த்தேக்கத்தை கண்டு அதை கடக்க முடியாமல் நின்ற போது , அவ்வழியில் தேவராஜன் இந்திரன் ஐராவதத்தில் அவ்வழியாக சென்ற்வன் இவர்களைப் பார்த்து கேலியாக சிரித்தான். இதனால் கோபமடைந்த இவர்கள் இப்படி செருக்குடன் செல்லும் இந்திரனே உனனையும் அடக்கி ஆளக்கூடிய மாவீரன் ஒருவன் பிறப்பான் அவனால் உனக்கு படுதோல்வி ஏற்படக் கடவது என்று சாபம் கொடுத்தனர். பிறகு வால்கிய மஹரிஷிகள் பெரும் தவம் இயற்றி அத்தவத்தின் பயனாய்த் கச்யபர் விநதைக்கு மகனாக கருட பகவான் பிறந்தார்.

கொற்றப்புள்ளொன்றேறி மன்றூடே வருகின்ற
காரைக்கால் திருமலைராயன் பட்டிணம் வீழி வரதராஜப் பெருமாள்

இரண்டாவது ஐதீகம் , தன் தாயாரை அடிமைத்தளையிலிருந்து விடுவிக்க தேவலோகம் சென்ற கருடன் இந்திரனை தோற்கடித்து அமிர்த குடம் பெற்று திரும்பி வரும் போது ஒரு மரத்தல் வேகமாக உட்கார்ந்தான். அப்போது அம்மரத்தில் தூங்கிக்கொண்டிருந்த வாலகிய முனிவர்கள் மரம் ஆடிய வேகத்தில் விழுந்து விட்டனர், இதைக் கண்ட கருடன், வெகு கரிசனத்துடன் அவர்களை தூக்கி மரத்தின் மேல் விட்டான். இதனால் மகிழ்ச்சி அடைந்த மஹரிஷிகள் கருடனை நீ பகவானின் வாகனமாகும் பேறு பெருவாய் என்று வாழ்த்தி வரம் கொடுத்தனர். இவ்வாறு வீரம், பலம், கருணை, சாதுர்யம், ஞானம், வேகம், நிதானம், அழகு மிகுந்த கருடன் பெருமாளின் வாகனமானார்.

கருடனுக்கு ருத்ரை, ஸுகீர்த்தி என்று இரு மனைவியர்கள். இவரது நட்சத்திரம் சுவாதி. பெருமாளுக்கு எப்போதும் சேவை புரியும் நித்ய சூரிகளில் ஒருவர் கருடன்.
தூவாய புள்ளூர்ந்து வந்து துறை வேழம்
மூவாமை நல்கி முதலை துணித்தானை
தேவாதி தேவனை செங்கலமலக் கண்ணானை
நாவாயுளானைநறையூரில் கண்டேன்

கெண்டையும் குறளும் புள்ளும் கேழலும் அரியும் மாவும்அண்டமும் சுடரும் அல்லாவாற்றலும் ஆய எந்தை ஆதி கேசவர் கருட சேவை



பெரும்பாலும் திருக்கோவில்களில் கருடன் நின்ற கோலத்தில் தான் பிரதிஷ்டை செய்யப்பட்டிருப்பார். சில தலங்களில் அமர்ந்த கோலத்திலும் பிரதிஷ்டை செய்யப்பட்டிருக்கிறார். மிகக்குறைவான திருத்தலத்தில் கையில் அமிர்த குடத்துடன் உள்ள கோலத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளார். இவ்வாறு கருடன் எழுந்தருளி அருள் பாலிக்கும் தலங்களைப்பற்றி இன்னொரு பதிவில் காண்போம்.
கருட சேவை தொடரும்...............

Friday, June 20, 2008

ஸ்ரீநிவாசர் கருட சேவை

சென்னை திருமயிலை வேதாந்த தேசிகர் தேவஸ்தானம்
ஸ்ரீநிவாசர் ஏகாந்த ஸேவை


நமது இந்து மதத்தில் ஒவ்வொரு தெய்வத்திற்கும் ஒரு வாகனம் உண்டு. மஹா விஷ்ணுவின் வாகனம் தான் கருடன். திருக்கோவில்களில் பிரம்மோற்சவ காலங்களின் பெருமாள் காலையும் மாலையும் பல்வேறு வாகனங்களில் கோவிலுக்கு வெளியே வந்து , கோவிலுக்குள் வந்து வழிபட முடியாதவர்களான முதியவர்கள், முடியாதவர்கள், நோய் வாய்ப்பட்டவர்கள் ஆகியோருக்கு தரிசனம் அளிக்க எளி வந்த கருணையால் தானே கோவிலுக்கு வெளியே திருவீதியில் வெளியே வந்து தரிசனம் அளிப்பார். சில கோவில்களில் மூலவருக்கு சமனான சிதம்பரம் நடராஜர், திருவாரூர் தியாகராஜர் ஆகியோர் யதாஸ்தானத்தை விடுத்து தெருவில் வெளியே வந்து தரிசனம் அளித்து அருளுவார்கள். இவ்வாறு பல்வேறு வாகனங்களில் சிறப்பான ஆபரண, மலர் அலங்காரங்களுடன் இறைவன் தானே வந்து தரிசனம் தருவது "வாகன சேவை" எனப்படும்.

பொன்மலை மேல் கரும்புயல்

மஹா விஷ்ணுவானவர் தனது வாகனமும் கொடியுமான கருடனில் இவ்வாறு ஊர்வலம் வந்து தரிசனம் தருவது கருட சேவை எனப்படும் என்பது சாதாரணமான விளக்கம். எம்பெருமானை கருட வாகனத்தில் தரிசனம் செய்தவர்களுக்கு மறு பிறவி கிடையாது என்பது ஐதீகம் எனவே கருட சேவை காண்பது புண்ணியமானதாக கருதப்படுகின்றது அது ஏன் அவ்வாறு என்பதின் உள்ளார்த்தத்தை உணர்த்துவதுதான் இப்பதிவு.

இனி கருட சேவையின் தத்துவ விளக்கம் என்ன என்று காண்போம். " தாஸ:, ஸகா, வாஹனம் ". என்றபடி பெருமாளுக்கு 1. சேவை புரியும் அடிமையாக, எப்போது அவரது திருவடிகளை தாங்கி இருக்கின்ற பெரிய திருவடியாகவும், 2. தோழனாகவும், எப்போதும் பெருமாளின் அருகில் இருப்பவர்.

ஆழ்வார்கள் இதனால் கருடனை காய்சினப்பறவை என்று குறிப்பிடுகின்றனர்.  

பவளநண்படர்க்கீழ்சங்குறைபொருநல் தண்திருப்புளிக்கிடந்தாய்! கவளமாகளிற்றினிடர்கெடத் தடத்துக் காய்சினப்பறவையூர்ந்தானே!

அது என்ன காய்சினப்பறவை? [கொத்தி புரட்டி எடுத்துவிடும் கோபம் கொண்ட பறவை (கருடன்). ஆனால் யாரை கொத்தும் பக்தர்களையா? இல்லை! இல்லை! பெருமாள் பக்தர்களை காப்பவர் அல்லவா? அவர்களை கருடன் ஒன்றும் செய்யாது. ஆனால் பெருமாளின் பகைவர்களை பெருமாளுக்கு சிரமம் கொடுக்காமல் தானே முதலில் சென்று கொத்தி புரட்டிப் போட்டுவிடும்.

ஸ்ரீநிவாசர் கருட சேவை அருகாமையில்

இவ்வாறு கருடனில் ஆரோகணித்து பெருமாள் வரும் அழகை வேதம் தமிழ் செய்த மாறன்  நம்மாழ்வார் எவ்வாறு பாடுகின்றார் பாருங்கள்.

காய்சினப்பறவையூர்ந்து பொன்மலையின் மீமிசைக்கார்முகில்போல் மாசினமாலிமாலிமானென்று அங்குஅவர்படக்கனன்றுமுன்நின்ற
காய்சின வேந்தே! கதிர்முடியானே! கலிவயல்திருப்புளிங்குடியாய்! காய்சினவாழிசங்கு வாள் வில் தண்டேந்தி எம்மிடர்கடிவானே!


கோபப்பறவையான கருடனில் ஒய்யாரமாக அமர்ந்து ஜிவ்வென்று பறந்து பெருமாள் வரும் அழகானது பொன் மலை மீது ஒரு கார்முகில் அமர்ந்திருப்பது போல் இருக்குமாம். எம்பெருமானும் கோபமாக சென்று தன் எதிரிகளை அழிப்பவன், தீ உமிழும் கோப சக்கரமும், சங்கும், தண்டமும் ஏந்தி பக்தர்கள் துன்பங்களைக் களைபவன்.

ஆழ்வார்கள் மட்டுமா? முருகனை ( மால் மருகனை)ப் பாடிய அருணகிரி நாதரும் இவ்வாறு பாடுகின்றார்.

கருடன் மிசைவரு கரிய புயலென கமல மணியென...

கருடன் மேல் ஆரோகணித்து வருகின்ற கருமேகப் புயல் என்று அருணகிரி நாதரும் பாடுகின்றார்.

 ஆகவே கருட சேவைப்பதிவுகளைப்பார்க்கும் போது இப்படி கற்பனை செய்து பாருங்கள் அந்த ஆனந்தம் உங்களுக்கு புரியும்.

3. வாகனமாகவும் கொடியாகவும் விளங்குபவர்தான் கருடன். எம்பெருமானின் ஆசனமும் கருடன். எங்கே பெருமாள் செல்ல வேண்டுமென்றாலும் தயார் நிலையில் அமர்ந்திருப்பவர். ஆதீ மூலமே என்று கஜேந்திரன் அலறிய மறு நொடி இந்த ஓடும் புள்ளேறி ( பறவை) எம்பருமான் யானைக்கு மோக்ஷம் கொடுக்க பறந்து வந்தான். இது எம்பெருமான் எப்போதும் தன் பக்தர்களுக்கு உதவ காத்திருக்கும் எளிமையைக் குறிக்கின்றது. இவ்வாறு தன் பக்தர்களிடம் பெருமாள் வருவதைக் குறிக்க கொடி.

குலத்தலையமதவேழம்பொய்கைபுக்குக் கோள்முதலைபிடிக்கஅதற்குஅனுங்கிநின்று நிலத்திகழும்மல்ர்சுடரேய்சோதீ! என்ன நெஞ்சிடர்தீர்த்தருளிய என்நின்மலன் காண்மின்         

  என்று பாடுகின்றார் திருமங்கையாழ்வார்.

தன்னுடைய தாய் மாற்றாந்தாயிடம் அடிமையாக இருப்பதைக்கண்டு மனம் பொருக்க முடியாமல் அமிர்தம் கொண்டு வர இந்திர லோகம் சென்று பெருமாளுடனும் சண்டையிட்டு தன் வீரத்தையும் மாத்ரு பக்தியையும்( தாய்ப்பாசம்) உணர்த்தியவன் கருடன்


தங்க கருடன்- பொன் மலை


அமிர்தம் கொண்டு வரும் போது எம்பருமானுக்கும் கருடனுக்கும்  கடும் போர் ஏற்பட்டது இதில் கருடனுக்கே வெற்றி ஏற்பட்டது. கருடனின் வீரத்தை பகவான் மிகவும் புகழ்ந்து , 'நீயொரு வரம் கேள் கொடுக்கிறேன் என்றார்". கருடன் கேட்பதற்கு முன்பாகவே எம்பெருமானே, " நீ எனக்கு வாகனமாக இருக்க வேண்டும். அதே போல எனது கொடியில் எப்போதும் இருந்து கொண்டு வெற்றியைப் பெற்றுத்தர வேண்டும்" என்றார். எனவே கருடத்வஜனான எம்பெருமானுக்கு என்றும் தோல்வியே கிடையாது.


பெருமாளின் கொடியாக கருடன் விளங்குவதை ஆழ்வார்கள் இவ்வாறு அனுபவிக்கின்றனர்.

புட்கொடியாய்! 
சுருளக்கொடியொன்றுடையீர்!
புள்ளூர் கொடியானே
சுருளப்புட்கொடி சக்கரப்படை வான நாடன்.


இனி எவ்வாறு கருட சேவையை காண்பது முக்திக்கு வழி வகுக்கும் என்பதைக் காணலாம். சில தலங்களில் கருட சேவையின் போது ஒரு வெள்ளைத்துணியை கருட வாகனத்தின் அலகால் கிழித்து நான்கு திசைகளிலும் திசைக்கு ஒன்றாக தூக்கி எறிவார்கள். இது மனிதனின் மும்மலங்கள் அவனிடமிருந்து கிழிக்கப்பட்டு திசைக்கு ஒன்றாக வீசப்பட்டு அவன் தூயமையாவதைக் குறிக்கின்றது.

எனவே கருட சேவையை காணும் போது நம்மிடம் உள்ள ஆணவம், கன்மம், மாயை ஆகிய மும்மலங்கள் நீங்கும்( நீக்க நாம் முயற்சி செய்தால்) இவ்வாறு மலங்கள் நீங்கும் போது மனிதன் நிர்மலன் ஆகின்றான். இவ்வாறு ஆணவத்தை தொலைத்தால் சீவனில் உள்ள ஆணவமாகிய சுழி இறங்கும் போது சீவன் சிவன் ஆகிறான். அவன் தன்னை உணர்கிறான். இறை தரிசனம் கிட்டும்.முக்திக்கு வழி பிறக்கும் எனவே தான் பெருமாளின் கருட சேவையைக் காண்பதால் மோக்ஷம் கிட்டும் என்பது ஐதீகம்.

மோக்ஷபேறு என்பதற்கான இன்னொரு விளக்கம். கருடன் வேதமயமானவன், அதாவது "வேத சொரூபன்". விநதையின் புதல்வனான கருடனின் ஒவ்வொரு அவயமமும் வேதத்தின் பகுதி. "ஸ்தோமம்" என்னும் ஸாம வேத பாகமே அவரது ஆத்மஸ்வரூபம். "காயத்ரம்" என்கிற ஸாமம் அவருக்கு கண்கள். "த்ரிவ்ருத்" என்ற ஸாமம் அவருக்கு சிரசு. யஜுர் வேதங்கள் அவருடைய திருநாமங்கள். சந்தஸ்ஸுக்கள் அவரது திருக்கரங்கள். "திஷ்ண்யம்" எனப்படும் வேள்வி மேடைகள் அவரது திருப்பாதங்கள். "வாமதேவ்யம்" என்கிற ஸாமம் அவரது திருமேனி, "ப்ருஹத்" , "ரதந்தரம்" என்னும் ஸாமங்கள் அவருடைய இரு சிறகுகள். "யஜ்ஞாயஜ்ஞியம்" என்கிற ஸாமம் அவருக்கு வால். இவ்வாறு வேத பாகங்களெல்லாம் கருடனுடைய திருமேனிகளாய் விளங்குவதால் கருடனை "வேதஸ்வரூபன்" என்கிறார்கள் பெரியோர்.

கருட சேவை பின்னழகு

இவ்வாறு பெரிய திருவடி என்றும் புள்ளரையன் என்றும் காகேந்திரன் என்றும் போற்றப்படும் பக்ஷிராஜனான கருடன் மேல் பெருமாள் ஆரோகணித்து பவனி வரும்போது நாம் காண்பது என்ன? கருட வேதசொரூபி. எம்பெருமான் அவ்வேதத்தினால் அறியப்படுபவன், போற்றப்படுபவன், எனவே பெருமாள் கருட சேவை தந்து எழுந்தருளும் பொது "மறை போற்றும் இறை" இவனே என்றும். "மறைமுடி" இவனே என்றும் காட்டித்தருகின்றது. அந்த வேதச்செழும் பொருளை நாம் உணர்ந்தால் நமக்கு மோட்சம் தானே எனவே தான் கருட வாகனத்தில் பெருமாளை தரிசித்தவர்களுக்கு மறு பிறவி கிடையாது என்பது ஐதீகம்.

கருட வாகனத்தில் பெருமாள் திருவீதி புறப்பாடு

எனவே அடுத்த தடவை கருட சேவையைக் காணும் போது ( நேரிலோ அல்லது இப்பதிவிலோ) மும்மலம் நீக்கி. முக்தி தா பெருமாளே என்று வேண்டிக்கொண்டு சேவியுங்கள். நமது தர்ம நெறியின் ஒவ்வொரு விதிக்கும் விஞ்ஞான பூர்வமான ஓர் அர்த்தம் உண்டு என்று உணர்ந்து இறைவனை வேண்டினால் முக்தி நிச்சயம் என்பதை மனதில் கொள்ளவும்.

இப்பதிவில் இடப்பட்டுள்ள கருட சேவைப் படங்கள் எல்லாம் சென்னை திருமயிலை வேதாந்த தேசிகர் தேவஸ்தானத்தில் தற்போது நடந்த பிரம்மோற்சவத்தின் காட்சிகள். மேலும் மற்ற உற்சவங்களின் படங்களைக் காண செல்லுங்கள் SVDD
கருட சேவை இன்னும் தொடரும்.............