Sunday, April 25, 2010

கருடன் கொண்டு வந்த விமானம்

தேரழுந்தூரில் சகாவாக கருடன்


ஆமருவியப்பன்

கருடனும் பெருமாளும் ஒன்றாக சேவை சாதிக்கும் தலங்களில் அடுத்ததாக நாம் காணப்போகும் திவ்ய தேசம் தேரழுந்தூர். இத்தலத்தில் பெருமாள் தேவாதிராஜனாக நின்ற கோலத்தில் சங்கு சக்கரம், பத்ம முத்திரையுடன் சேவை சாதிக்கின்றார். பெருமாளுக்கு இடப்பக்கத்தில் மிக்க பக்திமையுடன் கருடன் உடன் சேவை சாதிக்கின்றார். இவ்வாறு பெருமாளுடன் கருடாழ்வார் உடன் சேவை சாதிக்க என்ன காரணம் என்று தெரிந்து கொள்ள ஆர்வமாக உள்ளதா வாருங்கள் அடியேனுடன் ?

தேவேந்திரன் ஒரு சமயம் ஒரு விமானத்தையும் வைர முடியையும் அளித்து இவற்றை எந்தெந்த பெருமாளுக்கு உகந்ததோ அங்கு சம்ர்பித்து விடு என்று பணித்தான். கருடனும் வைர முடியை கர்நாடக மாநிலத்தில் மைசூர் அருகில் உள்ள திருநாராயண புரத்தில் செல்லபிள்ளை சம்பத்குமாரரருக்கும் விமானத்தை தேரழுந்தூரில் ஆமருவியப்பனுக்கும் சமர்பித்தான். எனவே இத்தலத்தின் விமானம் கருட விமானம் ஆகும். விமானம் சாம்ர்பித்த கருடனுக்கு “ என்ன வரம் வேண்டும்? என்று வினவ , கருடனும் அர்ச்சை நிலையில் தேவரீர் இருக்க அடியேன் எதிரே நின்று எல்லா இடங்களிலும் சேவிக்கிறேன். ஆனால் அருகிலே நின்று அடியேன் தேவரீரின் பொன்னடிகளைச் சேவிக்க வேண்டும் என்று வரம் வேண்ட பெருமாளும் கருடனை அருகில் இருத்தி கொண்டதாக ஐதீகம்.

 ஸ்ரீ ஆளவந்தார் தன் ஸ்தோத்ர ரத்தினத்தில்
தாஸ ஸகா வாஹன ஆஸனம் த்வஜோ யஸ்தே விதாநம் வ்யஜனம், த்ரயீமய என்று கருடனின் ரூபங்களை விவரிக்கும்பக்ஷத்தில் ஸகாவான (தோழன்) நிலையை இந்த திவ்ய தேசத்தில், சேவிக்கலாம்.

பிரகலாதன் - பெருமாள் - கருடன்

கருட விமானமாகிய விதானத்தின் கீழ் நாச்சியார் (சத்யபாமா) இடத்தை தான் எடுத்துக்கொண்டு கருடனும் பெருமாளுக்கு சரி சமமாக பக்தியுடன் உயிரோட்டத்துடன், விரித்த அழகிய சிறகுகளுடனும், அஷ்ட நாகங்கள் திருமேனியெங்கும் விளங்க கூரிய நகங்களுடனும், சீரிய நோக்குடனும், முக மலர்ச்சியுடன் கரம் குவித்து
சந்தோகா! பௌழியா! தைத்திரியா! சாமவேதியனே! நெடுமாலே!
எனப்பாடப்பெற்ற பெருமாளுக்கு, வேத சொரூபனான வைநதேயன் தன் சிறகுகளால் விசிறிக்கொண்டு , பிற ஒலிகள் கேட்கா வண்ணம் சாம கானம் பாடிக்கொண்டிருக்கிறார். மற்ற இடங்களில் பிராட்டியின் சொல் கேட்டு அருள் புரியும் எம்பெருமான் இங்கே தன் நண்பனின் சொல் கேட்டு அருள் செய்து கொண்டிருக்கின்றான். எனவேதான் "புனிதா புட்கொடியாய் நெடுமாலே" என்கிறார் மங்கை மன்னன்.

பெருமாளுக்கு வலப்பக்கத்தில் பிரகலாழ்வானும் வணங்கியபடி இருக்கின்றான். இரணியனை அழித்த பிரகலாதனுக்கு அருள் புரிந்த நரசிம்ம மூர்த்தியின் உருவத்தைக் கண்டு அஞ்சாமல் அருகில் வந்த பிரகலாதனின் பக்தியை மெச்சி அவனுடைய வேண்டுகோளுக்கிணங்கி கண்ணனாக ஆமருவியப்பனாக சேவை சாதித்தார். மேலும் முக்திப்பேறு வேண்டி தொழுத மார்க்கண்ட முனிவர் கருவறையில் பெருமாளுக்கு அருகில் வலப்புறத்தில் குக்குடாசனம் என்ற ஆசன நிலையில் அமர்ந்தபடி சடைமுடியுடன் அஞ்சலி செய்த வண்ணம் தவக்கோலத்தில் இருக்கின்றார். மேலும் அகத்தியரின் சாபம் தீர கங்கையினும் புனிதமான காவிரித்தாயாரும் பெருமாளை நோக்கி தவக்கோலத்தில் இருக்கின்றாள்.

தேரழுந்தூரில் தற்போது திருப்பணிகள் நடந்து கொண்டிருக்கின்றன. வரும் மே மாதம் இருபத்திநான்காம் தேதியன்று ( 24-05-2010 ) விக்ருதி வருடம் வைகாசி மாதம் 10ம் நாள் அன்று சிறப்பாக சம்ப்ரோக்ஷணம் நடைபெற உள்ளது, அன்பர்கள் முடிந்தால் அன்று அங்கு சென்று பெருமாளின் அருள் பெறுமாறு வேண்டுகின்றேன். இனி இவ்வாறு சுபர்ணன் சாம கானத்தால் ஆமருவியப்பனை குளிர்விக்கும் இத்திருக்கோவிலின் சில சிறப்புகளைப் பற்றி காண்போமா?

ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப்பட்ட திவ்ய தேசங்களுள் 24வது திவ்யதேசம் திருவழுந்தூர் எனப்படும் தேரழுந்தூர். சோழநாட்டு நாற்பது திவ்ய தேசங்களிலும் இது 24வது திவ்யதேசம். மயிலாடுதுறை கும்பகோணம் மார்கத்தில் உள்ள குத்தாலம் என்ற ஊரில் இருந்து சுமார் 3 கி. மீ தூரத்தில் அமைந்துள்ளது இந்த திவ்ய தேசம். பெருமாள் சதுர்புஜத்துடன், அருகே ருக்மணி, சத்யபாமா முதலியோருடன், பசுங்கன்றுகளுடனும் சாட்சாத் க்ருஷ்ணனாக சேவை சாதிக்கின்றார். கவிசக்கரவர்த்தி கம்பர் பிறந்த தலம். கரிகால் சோழன் தலைநகராகவும் திகழ்ந்திருக்கின்றது இத்தலம் ஒரு காலத்தில். மூலவர் : தேவாதிராஜன்; வடமொழியில் கோசகன். இதன் தமிழாக்கமே ஆமருவியப்பன் என்பதாகும். சாளக்கிராம திருமேனி; கிழக்கு நோக்கிய திருமுக மண்டலம், நின்ற திருக்கோலம். சிற்பக்கலையின் உச்சி நிலைக்கும் மேம்பட்ட வடிவழகு. மூலவரின் திருமேனியில் நரம்புகள், நகங்கள், அழகு செய்யும் திருமுகம் சேவிக்க சேவிக்க தெவிட்டாதது. அவரது எழில் எழுத முடியாதது அதனால் தானே திருமங்கை மன்னன் ஆமருவியப்பனைக் " திருவுக்கும் திருவாகிய செல்வா " என்று கண்டு சொக்கி நின்று தன்னை பரகால நாயகியாக பாவித்து பாசுரங்கள் பாடினார்.
திருவுக் கும்திரு வாகிய செல்வா! தெய்வத் துக்கர சே! செய்ய கண்ணா! உருவச் செஞ்சுட ராழிவல் லானே! உலகுண்ட ஒரு வா! திருமார்பா!
ஒருவற் காற்றியுய் யும்வகை யின்றால், உடன்நின் ரைவர்என் னுள்புகுந்து ஒழியா தருவித் தின்றிட, அஞ்சிநின் னடைந்தேன் – அழுந்தூர் மேல்திசை நின்ற அம்மானே!
எழில் கொஞ்சும் ஆமருவியப்பன்

உற்சவர்: உபய நாச்சியார்களுடன் ஆமருவியப்பன். திருவுக்கும் திருவாகிய செல்வனாக, பட்டு பீதக ஆடை மிளிர பொன்னிற்கும் அழகு தரும் பேரொளி மேனியுடன், மனித குலத்தின் அடையாளமான பசு “அந்தோ நின்னடியின்றி மற்றறியேன் என்று கூறுவது போல ஆமருவியப்பனின் திருவடிகளை தன் நாவினால் தடவ,“ஆ ஆ என்றடியேற்கு இறையிரங்காய்” என்றுரைப்பது போல கன்றுக்குட்டி பெருமாள் திருமுகம் நோக்க கோசகனாய் திருமகளும் , புவிமகளும் உடனிருப்ப எழிலாக சேவை சாதிக்கின்றார். இவரது சௌந்தர்யத்தில் மயங்கி திருமங்கையாழ்வார் பரகாலநாயகியாகி மங்களாசாசனம் செய்துள்ளார்.

செங்கமலவல்லித்தாயார்

தாயார் : செங்கமலவல்லி. அகலகில்லேன் இறையும் என்று அலர்மேல் மங்கை உறை மார்பா” என்றபடி விளங்குபவள் பெரிய பிராட்டியார் என்கிற திருமகள். இத்தலத்தில் தாயார் இரு புறமும், ஆனைகள் மாலை கொண்டு வழிபடும் நிலையில் செழுந்திருக்கோலம் கொண்டு சேவை சாதிக்கின்றாள். பிராட்டியின் அழகையும் கருணையையும் திருமங்கையாழ்வார், ’செங்கமல திருமகளும் புவியும்’ என்று தொடங்கும் பாசுரத்தில் குறிப்பிட்டிருக்குன்றார். மூலவருக்கு முன்னால் உற்சவர் “சுவர்ண ரஜஸ்ருதாம்” என்ற படி பொன்னணிகள் திருமேனியெங்கும் மிளிர வெள்ளியாலான மண்டபத்தில் செல்வம் அளிக்கும் திருமகள் சேவை சாதிக்கின்றாள். அடியவர்களின் வேண்டுதலுக்கு உடனே அருள் புரிபவள் தாயார். தாயாரின் முன் மண்டபத்தில் அஷ்ட லக்ஷ்மிகளின் சுதை சிற்பங்கள் வாகனங்களுடன் சிறப்பாக அமைக்கப்பட்டுள்ளன.

தீர்த்தம் : தர்சன புஷ்கரிணி, காவேரி , கஜ புஷ்கரிணி.
  விமானம்: கருட விமானம்
  ப்ரத்யக்ஷம்: தர்மதேவதை, உபரிசரவஸு, காவேரி, கருடன், அகத்தியர். மங்களாசாசனம் : திருமங்கையாழ்வார்.

  தந்தை காலில் பெருவிலங்கு தாளவிழ நள்ளிருட்கண் வந்த 
 எந்தை பெருமானார் மருவி நின்ற ஊர் போலும் 
முந்தி வானம் மழை பொழிய மூவா உருவுன் மறையாளர்
அந்தி மூன்றும் அனலோம்பும் அணியார் வீதி அழுந்தூரே. என்பது ஆலி நாடன் முதல் பாசுரம்.

யமுனைியிலிருந்து கண்ணன் தேரழுந்தூருக்கு எழுந்தருளிய வரலாறு. கோகுலத்தில் ஒரு நாள் ஸ்ரீ கிருஷ்ணர் ஆநிரைகளை மேய்த்துக் கொண்டிருந்தான். அப்போது நீர் பருக கண்ணன் சில நண்பர்களுடன் யமுனை ஆற்றுக்கு சென்ற போது நான்முகன் அந்த ஆநிரைகளை கள்ளத்தனமாக ஓட்டிக்கொண்டு வந்து தேரழுந்தூரிலே மறைத்து வைத்தான். திரும்பி வந்து பசுக்கூட்டங்களை காணாத மாயம் செய்யும் மாலவன் நொடிப்பொழுதில் பிரம்மனின் செயலை அறிந்து புதியதொரு ஆநிரையை உருவாக்கி ஆயர்களை மகிழ்வித்தான். ஒரு வருட காலம் இவ்வாறு தானே அனைத்துமாக மாயம் காட்டினான் கண்ணன், தன் தோல்வியை உணர்ந்து நான்முகன் கண்ணனின் அடிபணிந்து வணங்கி, மாலே! மணிவண்ணா! நெடியானே! கமலக்கண்ணா! விண்ணவர்க்கு மேலாய்!, அடியேனின் பிழை பொறுத்து, அறியாமையினால் நான் ஒளித்து வைத்த ஆநிரைகளுடன் தேரழுந்தூருக்கு எழுந்தருளி திருக்கோயில் கொள்ள வேண்டும் என்று வேண்ட, கண்ணன், தானே பரமபதத்தில் விளங்கும் மாலவன் என்பதை உலகத்தினருக்கு உணர்த்த நான்கு திருக்கரங்களுடன் சங்கு சக்கரம் தாங்கி , ஆமருவி, நிரை மேய்க்கும் நிலையில் இன்றும் எழிலாக சேவை சாதிக்கின்றார்.
செங்கமலவல்லித்தாயார்
பெருமாள் இங்கு கோஸகனாக வந்ததற்கு இன்னொரு வரலாறும் உண்டு. ஒரு சமயம் திருமாலும் சிவபெருமானும் சொக்கட்தான் ஆடினார்கள். உமையம்மை ஆட்ட நடுவராக இருந்தாள். ஆட்டம் முடிந்தது. திருமாலே வென்றதாக உமை கூற சிவபெருமான் சினம் கொண்டார், அன்னையை பசுவாக மாறும்படி சபித்தார். உமையைப் பிரிந்த சிவபெருமான் அந்தணர் வேடம் பூண்டு சந்தன மரத்தின் கீழ் வேதம் ஓதி வந்தார். சிவபெருமான் வேதபுரீசர் ஆனார். பசுவைக் காக்க வேண்டியவராக இருந்த பெருமாள், கோஸகனாக, ஆமருவியப்பனாக ஆனார். இவ்வாறு கௌரியின் சாபம் தீரும் வரை காப்பது தன் கடமை என்று தன்னருகிலேயே வைத்துக் கொண்தார் பெருமாள். கண்ணன் பசு மேய்த்த் ஐதம் மேய்த்த மங்கலம்( மேக்கிரி மங்கலம்), தொழுவம் இருந்த இடம் தொழுதலாங்குடி என்றும், பசுக்கள் நிறைந்த பகுதி என்பதால் கோமல் என்றும் ஆ நான்கு ஊர்களில் மலிந்த பகுதி ஆனாங்கூர் என்றும், ஆ- ஆடுகின்ற காவிரித்துறை ஆடுதுறை என்றும் உமையாகிய பசு முக்தி பெற்ற தலம் கோமுத்தீச்சுரம்- திருவாவடுதுறை என்றும் இப்ப்குதியில் உள்ள ஊர்களின் பெயர்கள் அமைந்துள்ளன. இவ்வரலாற்றை நினைவு படுத்தும் வகையில் மாசிப் புனர்பூச நாள் மாலை பெருமாள் வில்லேந்திய இராமனாகத் திருக்கோலம் கொண்டு, வேதபுரீசருக்கு சேவை சாதிக்கும் நிகழ்ச்சி இன்றும் நடைபெறுகின்றது.

இனி இத்தலத்திற்கு தேரழுந்தூர் எனப்பெயர் வர என்ன காரணம் என்று பார்ப்போமா? உபரிசரவஸு என்னும் மன்னன், வானில் உலா வரும் தேரினைப் பெற்றிருந்தான். அவன் பெற்ற வரத்தின் விளைவால், அவனது தேரின் நிழல் எந்த உயிர்களின் மீது பட்டாலும் அவ்வுயிர்கள் துன்பம் அடைந்து வந்தன. இதானால் ஆணவம் கொண்டிருந்த மன்னன் ஒரு சமயம் ஆமருவியப்பர் ஆநிரை மேய்த்துக் கொண்டிருந்த போது மேலே தன் தேரிலே சென்றான், அத்தேரின் நிழல் பட்டு பசுக்கள் துன்பம் அதைந்தன, மன்னனின் செருக்கை ஒடுக்க கண்ணன் அந்த நிழல் மீது தன் திருவடி விரலை அழுத்த அடுத்த கணமே அந்த தேர் கீழே அழுந்திற்று, தேர் மட்டுமா அழுந்தியது? மன்னனின் ஆணவமும்தான். அவன் கண்ணன் தாள் பணிந்து பிழை பொறுக்க வேண்டினான். பின் அகத்திய முனிவரின் ஆலோசனைப்படி தர்ஷபுஷ்கரிணியில் நீராடி அதன் கரையில் அமர்ந்து எம்பெருமானின் அருளை வேண்டி தவம் செய்ய பெருமாள் அவனுக்கு ப்ரத்யக்ஷமாகி சேவை சாதித்தார். இவ்வாறு உபரிர்சவஸு என்ற மன்னனின் தேர் இங்கே அழுந்தப்பெற்றமையால் தேரழுந்தார் என்ற பெயர் வந்தது.

அதே போல இத்தலத்திற்கு திருவழுந்தூர் என்ற பெயரும் உள்ளது. திரு – திருமகள், அழுந்துதல் – நிலைபெற்றிருத்தல் என்ற பொருளில் திருமகளாகிய மஹாலக்ஷ்மித் தாயார் நிலை பெற்ற ஊர் என்று கூறப்படுகின்றது. இத்தலத்தின் புராணப்பெயர் கிருஷ்ணாரண்யம் ( கிருஷ்ணன் காடு) ஆகும். காவிரியின் தென் கரையில் அமைந்த திவ்ய தேசங்களில் இது பத்தாவது திவ்ய தேசம்.
மற்றொரு வரலாறும் உண்டு. உபரிசவஸு தன் மனைவியுடன் புஷ்பக விமானத்தில் சென்று கொண்டிருந்த போது தேரழுந்தூருக்கு வந்ததும் அரசி கீழே இறங்கி தேவராஜனை வணங்க விரும்பினாள். அரசன் மமதையுடன் “ இவன் என்ன என்னைவிதப்பெரிய ராஜனோ!” என்று சொல்லி விமானத்தை இறக்க மறுத்தான். தேவாதிராஜன் அரசனை திருத்த எண்ணினான். உடனே கருடன் விமானத்தின் நிழலை தன் கால் பெருவிரலால் தொட்டார். விமானம் கோயிலின் முன்பு உள்ள குளத்தில் விழுந்தது. அரசன் நீந்தி வந்து அங்கு தவம் புரியும் அகத்தியரை வணங்கி உய்யும் வழி வேண்டினான். அவர் சொல்படி தவ்ம் புரிந்து என்பெருமான் தரிசனம் பெற்றான். இரண்டு வரங்களையும் வேண்டினான். குளத்தில் விழுந்த விமானம் மேலே வரவும், இக்குளத்தில் நீராடி தேவாதிராஜனை தரிசிக்கும் பக்தர்களுக்கு வேண்டிய வரங்களை கொடுக்கும் படியும் வேண்டினான். ஆகவே இன்றும் தன்னை தரிசிக்கும் பக்தர்களுக்கு எல்லா நலங்களையும் வளங்களையும் அருளுகின்றார் ஆமருவியப்பன்.

பெருமாளை சேவித்தும் மன்னன் ஆணவம் அடங்கவில்லை. எனவே ஆமருவியப்பன் “மன்னனே! நீ செய்த பிழைக்கு பரிகாரமாக எமக்கு அன்று கடைந்த வெண்ணெய் நிரம்பிய ஆயிரம் குடங்களைக் காணிக்கையாக அர்ப்பணிக்க வேண்டும்” என்று கேட்க மன்னனும் தன் செல்வ செருக்கால், நம்மால் முடியாததா? என்று நினைத்து அவ்வாறே செய்வதாக உறுதி கூறினான். தன் அரசு பதவிகளை பயன்படுத்தி குறிப்பட்ட நாளில் 999 குடங்களைப் பெர்று விட்டான். ஒரு குடம் வெண்ணெய் மட்டும் கிடைக்கவில்லை. இப்போதாவது தன் இயலாமையை எம்பெருமானிடம் தெரிவித்திருக்கலாம் ஆனால் ஆணவம் தடுத்தது, ஒரு குடம் தானே! மூடி வைத்து விட்டால் எம்பெருமான் ஒவ்வொன்றாகவா பார்க்கப்போகிறான் என்று எண்ணி வெண்ணெய் குடங்களுக்கிடையில் வெறும் குடத்தையும் வைத்து விட்டான். எல்லாம் அறிந்த மாயன் மன்னனின் அறியாமையை நீக்க எல்லா குடத்திலிருந்த வெண்ணையையும் மறையுமாறு செய்து விட்டார். எந்த குடத்தை திறந்து பார்த்தாலும் வெண்ணெய் இருக்கவில்லை. மன்னன் தான்து தவறை உணர்ந்தான். பெருமாள் வெண்ணெய்க்காக வரவில்லை தன்னைத் திருத்தி பணிகொள்ள வந்தான் என்று உணர்ந்து வெட்கி நின்று எம்பெருமானின் திருவடியில் புகல் அடைந்து நின்றான். இந்நிகழ்ச்சி நடைபெற்றது தை அமாவாசை. அன்றுதான் உபரிசரவசு தை அமாவாசையன்று திருக்குளத்தில் நீராடி அருள் பெற்றதால் இக்குளம் தரிச புஷ்கரணி என்று அழைக்கப்படுகின்றது. தரிசம் என்றால் அமாவாசை. எனவே தை அமாவாசையன்று பெருமாளை வழிபடுவது மிகவும் சிறந்தது. அன்று பெருமாள் வெள்ளி கருட வாகனத்தில் திருவீதி உலா வந்து அருள் பாலிக்கின்றார். மேலும் சித்திரை அட்சய திருதியையன்று காலை, வைகாசி பிரம்மோற்சவத்தின் 4ம் நாள் இரவு, புரட்டாசி திருவோணம் ஸ்ரீ தேசிகர் திருநாள் காலை, ஐப்பசி திருவோணம் பவித்ரோத்சவம் காலை என்று வருடத்தில் ஐந்து முறை ஓடி வரும் புள்ளில் அமர்ந்து கருட சேவை அருளுகின்றார்.

அகத்திய முனிவர் வாதாபி என்னும் அசுரனை உண்டு ஜீரணம் செய்த பாவம் தீர தென்னழுந்தையில் மன்னிநின்ற ஆமருவியப்பனின் அடிபணிந்து வீடுபேறடைந்தார். இவ்வரலாற்றுக்கு ஆதாரமாக அகத்தியர் ஸ்ரீ வாசுதேவர் சன்னதியில் காட்சி தருகின்றார்.

பிரகலாதன் நரசிம்ம அவதாரத்தை கண்டு பயந்து பெருமாளின் சாந்த சொரூபத்தை காட்ட வெண்டும் என்று வேண்ட சினம் தணிந்த சிங்க பெருமானாக சேவை சாதிக்க பிரகலாதன் அச்சம் குறையாதிருக்க இந்த தலத்தில் அமர்ந்துள்ள ஆமருவியப்பனாக சேவை சாதித்ததால் இத்தலத்தில் பெருமாளுடன் பிரகலாதனும் இடம்பெற்று நித்ய பூஜைகள் பெறுகின்றார்.

அகத்திய மாமுனிவர் ஒரு சமயம் காவிரித்தாயை அணுகி தன்னை மணந்து கொள்ள விண்ணபிக்க காவிரி அதனை மறுக்க, இதனால் கோபமடைந்த அகத்தியர் காவிரியைக் குடத்தில் அடைக்க, ஒரு சமயம் தரையில் வைக்கப்பட்ட அக்குடத்தை காகமாக விநாயகர் சாய்க்க காவிரி வழிந்தோடியது இதனால் சினம் கொண்ட அகத்திய முனிவர் காவிரியால் வளம் பெரும் பகுதியில் உள்ளோர் அனைவரும் துன்பமுற்று வறுமையுறட்டும் என்று சாபம் தர, இச்சாபத்தை போக்க காவிரித்தாய் தேரழுந்தூரில் தேவாதி ராஜனை குறித்து தவமிருந்து இந்த சாபத்தை துடைத்தாள் என்பது ஐதீகம். எனவே தான் கருவறையில் காவிரித்தாயும் தவநிலையில் எழுந்தருளியுள்ளாள்.

கம்பன் பிறந்தவூர், காவேரி தங்கும் ஊர், கும்பமுனி சாபம் குலைந்த ஊர்” என்னும் பழம் பாடல் இவ்வரலாற்றை இயம்புகின்றது.

ஆமருவிநிரை மேய்த்த அமரர் கோமான் அணி அழுந்தூர் நின்றான் என்று திருநெடுந்தாண்டகத்தில் மங்களாசாசனம் செய்துள்ளார் திருமங்கையாழ்வார். குன்றால்மாரி தடுத்தவனைக் குலவேழம் அன்று
பொன்றாமை அரனுக்கு அருள் செய்த போரேற்றை அன்றாலின் நறுநெய் அமர்ந்துண்ண அணியழுந்தூர் நின்றானை அடியேன் கண்டு கொண்டு நிறைந்தேனே.

இந்த திவ்ய தேசத்தில் அமைந்துள்ள மற்ற சன்னதிகள் வாசுதேவர் சன்னதி, நரசிம்மர் சன்னதி, இராமர் சன்னதி, விஷ்வக்சேனர் சன்னதி, தேசிகர் சன்னதி, ஆழ்வார்கள் சன்னதி, ஆண்டாள் சன்னதி, கம்பர் சன்னதி மற்றும் அனுமன் சன்னதி ஆகும். கம்பரும் அவரது மனைவியும் பெருமாளை வணங்கிய நிலையில் காட்சி தருகின்றனர்.

திருமங்கையாழ்வார் 45 பாசுரங்களினால் அணியழுந்தூர் நின்ற கோவை மங்களாசாசனம் செய்துள்ளார். தேமருவு பொழிலிடத்து மலர்ந்த போதைத் –தேனதனை வாய்மடுத்து உன் பெடையும் நீயும் பூ மருவியினிதமர்ந்து பொறியில் ஆர்ந்த – அறுகால சிறுவண்டே தொழுதேன் உன்னை ஆமருவி நிரைமேய்த்த அமரர் கோமான் அணி அழுந்தூர் நின்றானுக்கு இன்றே சென்று, நீமருவி அஞ்சாதே நின்று ஒருமாது நின் நயந்தாள் என்று இரையே இயம்பிக்காணே.!
“நீலமேனி ஐயோ! நிறை கொண்டது! என் நெஞ்சினையே என்று அரற்றி எப்படியாவது எம்பெருமானிடம் தன் காதலை சொல்லவேண்டும் எனத்தவிக்கிறாள். அப்போது ரீங்காரம் செய்து கொண்டு தன் பெடையுடன் கூடி இருக்கும் வண்டைக் கண்டு, இவ்வண்டு பெருமாளின் திருமார்பை அலங்கரிக்கும்துழாய் மாலையில் அமரக்கூடியது என்பதையறிந்து ஆழ்வார் வண்டை தூது விடுகின்றார். எனவே தேன் வெள்ளம் மிகுந்திருக்கும் மலர்களில் மதுவுண்டு, உன் பெடையொடு உறவாட மகிழ்ந்து வரும் ஆறுகால்களையுடைய சிறு வண்டே! உன்னை முதலில் வணங்குகிறேன் என்று கூறினார். ( ஞான வெள்ளம் நிறைந்தோர்களினூடே சென்று அறிவைப்பெற்ற்ர் வரும் ஆசாரியர்களாகிய குருவையும், குருவியின் மனைவியையும், குருவின் மகனையும் வணங்குகிறேன் என்பது உள்ளுறை கருத்து). உன்னை முன்னிலையாக ஒன்று வேண்டுகின்றேன். பசுக் கூட்டங்களை விரும்பி மேய்ப்பவனும், அணியழுந்தூரிலே நின்று காப்பவனும் ஆகிய எம் தலைவனிடம் இப்போதே சென்று அஞ்சாமல் அதோ உன்னை விரும்பி என் அருளுக்காக ஏங்கி, நின்னை நயந்து நிற்கின்றாள் ஒரு பேதை என்று மட்டும் சொல்லிவா என்கிறாள் பரகாலநாயகி. ( வண்டாகிய குருவின் மூலம் ஒரு வார்த்தை சொன்னால் போதும் பெருமாள் உடனே அருள் புரிவான் என்பது கருத்து). மேலும் மணவாள மாமுனிகளும் இத்தலத்து தேவாதிராஜனை மங்களாசாசனம் செய்துள்ளார்.

வருடம் முழுவதும் திருவிழாதான் இத்தலத்தில் சித்திரையில் வருடப்பிறப்பு, ஸ்ரீராம நவமி, வசந்த உற்சவம், அட்சய திரிதியை கருட சேவை, உடையவர் உற்சவம், வைகாசி திருவோணத்தை தீர்த்த நாளாகக் கொண்டு பத்து நாள் பெருவிழா, ஆடியில் சிறப்பாக ஆடிப்பூரம், பதினெட்டாம் பெருக்கு, தாயாருக்கு வெள்ளிகிழமைகளில் சிறப்பு திருமஞ்சனம், ஜேஷ்டாபிஷேகம். ஆவணியில் ஸ்ரீஜெயந்தி உறியடி உற்சவம், புரட்டாசியில் தேசிகர் உற்சவம், தாயாருக்கு நவராத்திரி உற்சவம். ஐப்பசியில் திரு பவித்திர உற்சவம். கார்த்திகை கலியன் உற்சவம். மார்கழியில் பகல் பத்து, பத்தாம் நாள் இரவு திருமங்கையாழ்வார் திருவடி தொழுதல், மோகினி அவதாரம், வைகுண்ட ஏகாதசி இராப்பத்து. தை பொங்கல் செல்வர் திருமஞ்சனம், கனு பார் வேட்டை, நான்காம் நாள் ஏகாசன சேவை. அமாவாசை பெரிய திருமஞ்சனம் கருட சேவை, வெள்ளிக்கிழமைகளில் தாயார் திருமஞ்சனம். மாசி புனர் பூசம் பெருமாள் இராமபிரானாக திருக்கோலம் கொண்டு வேதபுரீசருக்கு காட்சி தருதல். பங்குனி உத்திரம் 10 நாள் உற்சவம், உத்திரத்தன்று காலை தீர்த்தவாரி மாலை திருக்கல்யாணம்.

முன்னமே கூறியது போல வரும் மே மாதம் இருபத்திநான்காம் தேதியன்று (24-05-2010) விக்ருதி வருடம் வைகாசி மாதம் 10ம் நாள் அன்று சிறப்பாக சம்ப்ரோக்ஷணம் நடைபெற உள்ளது, அன்பர்கள் முடிந்தால் அன்று அங்கு சென்று பெருமாளின் அருள் பெறுமாறு வேண்டுகின்றேன்

Thursday, December 3, 2009

மாப்பிள்ளைத் தோழன் கருடன்

ஸ்ரீ வில்லிபுத்தூர்

அன்ன வாகனமேறி எழிலாக உலா வரும்
 கோதை நாச்சியார்

கருடன் வேத ஸ்வரூபர் மட்டுமல்ல நாத ஸ்வரூபரும் கூடத்தான். ஷடகம், ரிஷபம், காந்தாரம், மத்யமம், பஞ்சமம், தைவதம், நிஷாதம் என்னும் ஸப்த ஸ்வர வடிவானவர் கருடன். பெரிய திருவடியான இவர் இராமாவதாரத்தில் இந்திரஜித் விடுத்த நாக பாசத்தினால் கட்டுண்டு கிடந்த இளைய பெருமாளையும் மற்ற வானர சேனைகளையும் விடுவித்து பெருமாளுக்கு கைங்கர்யம் புரிந்தார். அது போலவே அவர் கிருஷ்ணாவதாரத்தில் பிராட்டியான ஸ்ரீருக்மணியிடமிருந்து அவர் அழகாக எழுதிக் கொடுத்த மடலை எடுத்துக்கொண்டு சென்று ஸ்ரீ கிருஷ்ணரிடம் கொடுத்து கைங்கர்யம் செய்தார், இவ்வாறே பல்வேறு திவ்ய தேசங்களிலும் கருடன் செய்த கைங்கரியங்களினால் அவர் பெருமாளுடன் சமமாக நின்று சேவை சாதிக்கும் பேறு பெற்றார். அத்தகைய திவ்ய தேசங்களுள் முதலாவதானது ஸ்ரீவில்லிபுத்தூர்.

கோதை பிறந்தவூர் கோவிந்தன் வாழுமூர்
சோதி மணிமாடந் தோன்றுமூர்
நீதியால் நல்லபத்தர் வாழுமூர் நான்மறைகளோதுமூர்
வில்லிபுத்தூர் வேதக்கோனூர்  என்று இத்தனை பெருமைகளைக் கொண்ட தலம் இத்தலம்.
ஏக சிம்மாசன சேவை

சூடிக்கொடுத்த சுடர்க் கொடியாள், திருஅவதாரம் செய்து, ஆயனுக்காக கனா கண்டு, அரங்கனைக் கைப்பிடித்த மென்னடையன்னம் பரந்து விளையாடும் ஸ்ரீவில்லிபுத்தூரில் ஆண்டாள் , கருடன் மற்றும் ரங்க மன்னார் மூவரும் ஒரே சிம்மாசனத்தில் நின்ற கோலத்தில் சேவை சாதித்து அருளுகின்றனர்.
ஆண்டாள் நாச்சியாரின் திருஅவதாரம் வராக அவதார காலத்திலேயே முடிவு செய்யப்பட்டது என்பர் பெரியோர்கள். ஹிரண்யாக்ஷன் பூமிப் பிராட்டியரை எடுத்துக் கொண்டு போய் பாதாளத்தில் ஒளித்து வைத்து விட பெருமாள் வராக அவதாரம் எடுத்து ஹிரண்யாக்ஷனை அழித்து பூமிதேவி நாச்சியாரை தனது கோரைப் பற்களின் மேலாக மூக்கில் வைத்துக் கொண்டு வரும் போது தாயார்  மூன்று பிரதிக்ஞை செய்தார் அவையாவன

1.பெருமாளின் திருவடிகளில் இட்டு அர்ச்சனை செய்வது.
2.அவர் நாமத்தை உரக்கச் சொல்லுவது.
3. அவர் திருவடிகளிலே ஆத்ம சமர்ப்பணம் செய்வது.

கோதை நாச்சியாராக இப்பூவுலகில் பிறந்த போது இந்த பிரதிக்ஞைகளை நிறைவேற்றினார் பூமி பிராட்டியார்.

கீதா சாரத்தை பாமரரும் புரிந்து கொள்ளும் வண்ணம் சொல்லி உலகத்தில் உள்ளவர்களை திருத்தவும், மேற் சொன்ன பிரதிக்ஞைகளை நிறைவேற்றவும், மின்னனைய நுண்ணிடையார் விரிகுழல் மேல் நுழைந்த வண்டு இன்னிசைக்கும் ஸ்ரீ வில்லிபுத்தூரில் கருடனின் அம்சமான, பெருமாளுக்கே வாத்ச்ல்ய பாவத்துடன் திருப்பல்லாண்டு பாடிய பெரியாழ்வாரின் புஷ்ப நந்தவனத்தில் ஒரு துளசிச்செடியின் அருகில் ஆடிப் பூரத்தன்று குழந்தையாய் தோன்றினாள் தாயார். உளம் மகிழ்ந்த பெரியாழ்வார் அக்குழந்தையை உச்சி மோந்து எடுத்து கோதை என்று பெயரிடப்பட்டு வளர்‘ந்து வரும் காலத்தில் அவளுக்கு கிருஷ்ண பக்தி என்னும் அமுதினை அளித்தார். நாச்சியாரும் கருவுடை முகில் வண்ணன் காயா வண்ணன், கருவிளை போல் வண்ணன், கமல வண்ணன் ஒருவனையே தன் நாயகனாக வரித்து மானிடவர்க்கென்று பேச்சுப்படில் வாழகில்லேன் கண்டாய் மன்மதனே, என்று

மத்தளம் கொட்ட வரிசங்கம் நின்றூத
முத்துடைத்தாமம் நிரைதாழ்ந்த பந்தற்கீழ்
மைத்துனன் நம்பி மதுசூதனன் வந்து
கைத்தலம் பற்றக் கனாக் கண்டேன் தோழி! நான்
என்று வேயர் புகழ் வில்லிபுத்தூர்க்கோன் கோதை சீராக வளர்ந்து வந்தாள்.

சூடிக்கொடுத்த சுடர்க்கொடியாள்

ஒரு நாள் பெரியாழ்வார் பெரிய பெருமாளுக்காக தொடுத்து வைத்திருந்த மலர் மாலையை கோதை அணிந்து அழகு பார்ப்பதைக் கண்டு பதைத்து. வேறு ஒரு மாலை கட்டி பெருமாளுக்கு சம்ர்பித்தார். அன்று இரவு பெரியாழ்வாரின் கனவில் தோன்றிய பெருமாள். ஆண்டாள் அணிந்த மாலையே தனக்கு மிகவும் உகந்தது என்று உணர்த்தினார். அன்று முதல் நாச்சியாரும் "சூடிக் கொடுத்த சுடர்க்கொடியாள்" என்னும் திருநாமம் பெற்றார்.

ரங்க மன்னார் திருக்கோலம்
(சென்னை மேட்டுப்பாளையம், மேற்கு மாம்பலம் பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோவில்)

இவ்வாறு தன்னை ஒரு கோபிகையாக பாவித்து, பெரிய பெருமாளை கிருஷ்ணராகவும், கோவிலையே நந்தகோபன் மாளிகையாகவும், ஸ்ரீவில்லிபுத்தூரை ஆயர்ப்பாடியாகவும் பாவித்து பாவை நோன்பு நோற்பதற்காக திருப்பாவை 30 பாடல்கள் பாடினார். இதில் முதல் பத்தில் பெருமாளின் நாமங்களை போற்றுகின்றாள், இரண்டாம் பத்தில் அவரது உயர்வான திருவடிகளில் அர்ச்சனை செய்கின்றாள், மூன்றாம் பத்தில் எற்றைக்கும் ஏழேழ் பிறவிக்கும் உன் தன்னோடு உற்றோமே யாவோம் உனக்கே நாமாட் செய்வோம் என்று ஆத்ம சமர்ப்பணம் செய்து பிரதிக்ஞ்னைகளை நிறைவேற்றுகின்றாள். இவ்வாறு பூமாலையும், பாமாலையும் சூடிக் கொடுத்தாள் நாச்சியார்.
ஸ்ரீ வில்லிபுத்தூர் வடபத்ரசாயி

திருமண வயதடைந்த ஆண்டாள், ‘அரங்கனைத் தவிர வேறு எவருக்கும் மாலையிட மாட்டேன்!’ என்றாள். பெரியாழ்வார் குழம்பினார். மீண்டும் அவரது கனவில் தோன்றிய பெருமாள், ‘ஆண்டாள் தெய்வப் பிறவி. அவளை ஸ்ரீரங்கத்துக்கு அழைத்து வா!’ என்று அருளி மறைந்தார். அதன்படி ஸ்ரீரங்கம் வந்த கோதை, காவிரிக்கரையை அடைந்ததும், தன் கணவன் இருக்குமிடத்தில் பல்லக்கில் செல்வது அவருக்கு மரியாதை தருவதாக இருக்காது என எண்ணினாள் ஆண்டாள். எனவே, தன்னை ஆட்கொள்ளும்படி ரெங்கமன்னாரிடம் வேண்டினாள். ரெங்கமன்னாரும் அவளை தன்னுடன் வரவழைத்துக் கொண்டார். இதனிடையே, தன் மகளைக்காண பல்லக்கிற்குள் பார்த்தார் பெரியாழ்வார். ஆனால் ஆண்டாள் அங்கில்லாததைக் கண்டு திகைப்படைந்தார். கோதை தனக்குத் திருவடிச் சேவை செய்வதை பெரியாழ்வாருக்குக் காட்டினார் பெருமாள்.

ஆனால், ஸ்ரீவில்லிப்புத்தூர் வந்துதான் கோதையை மணம் முடிக்க வேண்டுமென்று பெரியாழ்வார் பெருமாளை வேண்டினார். அதன்படி ஸ்ரீவில்லிப்புத்தூரில் எழுந்தருளி ஒரு பங்குனி உத்திர நன்னாளில் கோதையை திருமணம் செய்து கொண்டார் பெருமாள் என்கிறது தல புராணம். இப்படி கோதை ஆண்டவனை ஆட்கொண்டதால் ஆண்டாள் எனச் சிறப்பிக்கப்பட்டாள். இதன் அடிப்படையில் பங்குனி உத்திரத்தன்று ஆண்டாள், ரெங்கமன்னார் திருக்கல்யாணமும், தேர்த்திருவிழாவும் நடக்கின்றது.

இனி ஏன் கருடனுக்கு சம ஆசனம் என்று யோசிக்கின்றீர்களா? அதற்கும் ஆண்டாள் அரங்கர் கல்யாணத்திற்கும் சம்பந்தம் இருக்கின்றது. குறித்த நேரத்திற்கு அரங்கர் திருமணத்திற்கு வர முடியாமற் போய் விட்டது, பெரியாழ்வார் உட்பட திருக்கல்யாணத்திற்காக கூடியிருந்த அனைவரும் மிகவும் எதிர்பார்ப்புடன் காத்திருக்க, அனைவரின் நிலையை உணர்ந்த கருடன் விரைந்து சென்று காலம் தாழ்த்தாமல் பெருமாளை பிராட்டியாரிடம் சேர்த்தான். இதற்கு கைமாறாக ஆண்டாள் ரங்கமன்னாரிடன் பரிந்துரைக்க பெருமாளும் தங்களுடன் கருடனும் சரி சமமாக நின்று சேவை சாதிக்கும் பேற்றை அளித்தார். கருடாழ்வார் திருவரங்கத்திலிருந்து பெருமாளை அழைத்து வந்ததால் மாப்பிள்ளைத் தோழனாகவும் விளங்குகின்றார் என்பது ஐதீகம். மேலும் எப்போதும் கருடன் பெருமாளையும் பிராட்டியாரையும் வணங்க விருப்பப்பட்டதாலும் எப்போதும் அருகில் இருப்பதாகவும் ஐதீகம்.

திருமயிலை ஆதி கேசவர் ரங்கமன்னார் -ஆண்டாள் திருக்கோலம்
(முன்னழகும் பின்னழகும்)


அர்த்த மண்டபத்தில் தங்க முலாம் மஞ்சத்தில், வலப்புறம் கோதை நாச்சியாரும், நடுவில் ரங்க மன்னாரும், இடப்புறம் கருடன் என மூவரும் ஒன்றாக சேவை சாதிக்கின்றனர். ரங்கமன்னார் நின்ற கோலத்தில் வலக்கையில் பெந்து கோல் (தற்காப்புக் கோல்), இடக்கையில் செங்கோல், இடையில் உடைவாள், கால்களில் திருப்பாதுகைகள் என்று இராஜாங்க கோலத்தில் சேவை சாதிக்கின்றார். ஆண்டாள் இடக்கரத்தில் கிளியை தாங்கி, வலக்கரம் திருவடிகளை சுட்டிக் காட்ட வைர மூக்குத்தி மின்ன எழிலாக சேவை சாதிக்கின்றாள். கருடன் அஞ்சலி ஹஸ்தத்துடன் திவ்ய தம்பதிகளை வணங்கும் நிலையிலும் நின்று சேவை சாதிக்கும் அழகே அழகு. ஓம் என்னும் பிரணவத்தின் வடிவாக சேவை சாதிக்கின்றனர் மூவரும்.
ஓம் என்னும் பிரணவ கோலம்

அ + உ + ம் = ஓம் அல்லவா? இதில் அ = பெருமாள் என்னும் பரமாத்மா, ம = ஆண்டாள் நாச்சியார் , ஜீவாத்மா, சரணாகதியின் மூலம் இருவரையும் பாலமாக இனைக்கும் கருடபகவான் = உ. இதன் மூலமும் நாம் கற்பது சரணாகதி தான். எல்லாவற்றையும் பெருமாளின் காலடியில் விடுத்து சரணமடைய அவர் மோட்சம் அளிப்பார் என்பது சத்தியம்.

கணவன் எப்படிப்பட்ட உயரிய பதவியில் இருந்தாலும் மனைவி விரும்பியதை நிறைவேற்றித்தான் ஆக வேண்டும் என்பதற்கு உதாரணமாக பெருமாள் திகழ்கின்றார்.

 கண்ணனையே தன் நாயகனாக அடைய வேண்டும் என்று வேயர் குல விளக்கு விரும்பியதால் ரங்க மன்னாரே கிருஷ்ணர், ஆண்டாள் ருக்மணி, கருடன் சத்யபாமா என்று அருளுகின்றனர்.

கருடாழ்வார் இத்தலத்தில் ரங்கமன்னாருக்கு மாமனார் (பெரியாழ்வார் அம்சம்), மாப்பிள்ளை தோழன், சத்தியபாமா (பெருமாள் கிருஷ்ணன் என்பதால்) என மூன்று பதவிகளுடன் இருக்கிறார்.

என்னங்க இந்த திவ்ய தேசத்தில் கருட சேவை சிறப்பாக இல்லையா அதைப்பற்றி எதுவும் சொல்லவில்லையே என்று சந்தேகம் எழுகின்றதா? இத்தலத்தில் ஐந்து கருட சேவை சிறப்பாக நடைபெறுகின்றது வருடத்தில் இரு முறை கோதை நாச்சியாரின் திருஅவதார தினமான ஆடிப்பூர உற்சவத்தின் ஐந்தாம் நாளன்றும், பங்குனி உத்திர திருக்கல்யாண உற்சவத்தின் ஐந்தாம் நாளன்றும் ஐந்து கருட சேவை சிறப்பாக நடைபெறுகின்றது. இன்னும் ஐந்து கருட சேவை நேரில் சேவிக்கும் பாக்கியம் சித்திக்கவில்லை எனவே விஸ்தாரமாக எழுத முடியவில்லை.
ரங்க மன்னார் கருட சேவை

ஐந்து கருட சேவையில் பெரிய பெருமாள் வடபத்ர சாயி, ரங்க மன்னார், காட்டழகர் கோவில் சுந்தரராஜ பெருமாள், திருவில்லிபுத்தூருக்கு அருகில் உள்ள திருவண்ணாமலை திருவேங்கடமுடையான், மற்றும் அருகில் உள்ள திவ்ய தேசமான திருத்தண்கால் அப்பன்

ஐந்து கருட சேவைக்கு எழுந்தருளும்
திருத்தண்கால் அப்பன்.

ஆகிய பெருமாள்கள் காலையில் எழுந்தருளி பெரியாழ்வாரின் மங்களாசாசனம் கேட்டருளுகின்றனர். பின்னர் மாலையில் பெரியாழ்வாரும் ஆண்டாளும் அன்ன வாகனத்தில் எழுந்தருள பெருமாள்கள் ஐவரும் கருட சேவை சாதிக்கின்றனர்.

இப்பதிவில் கருடன் கோதை நாச்சியார் திருமணத்திற்காக பெருமாளை விரைந்து கொண்டு வந்து சேர்த்த கைங்கரியத்திற்காக பெருமாளுடனும் பிராட்டியாருடனும் சேவை சாதிக்கும் அழகைக் கண்டோம் இனி அடுத்த ஒரு திவ்ய தேசத்தில் பெருமாளுடன் கருடன் சேவை சாதிக்கும் அழகைக் காண்போமா அன்பர்களே.

Sunday, November 8, 2009

பெருமாளுடன் கருடாழ்வார் – பத்ரிநாத்

வேத ஸ்வரூபன் கருடன்

கருடன் வேத ஸ்வரூபன் என்று பார்த்தோமல்லவா? அது ஏன் என்று தற்போது முக்கூர் சுவாமியின் மட்டப்பல்லியில் மலர்ந்த மறை பொருள் என்ற புத்தகத்தில் படிக்க நேர்ந்தது அதை அன்பர்களாகிய உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.

ஸூபர்ணோஸி கருத்மாந் த்ரிவ் ருத்தே சிரோ
காயத்ரம் சஷீஸ்ஸ்தோம ஆத்மா ஸாம தே
தநுர் ப்ரஹத்ரதந்தரே யஜ்ஞாயஜ்ஞியம்
புச்சம் - என்பது யஜுர் வேத வ்யாக்யானம்.

ஸ்ரீ வைநதேயனின் திருமேனியில் ஒவ்வொரு அவயமும் வேதத்தின் பகுதியாகவே உள்ளது. “ஸ்தோமம்” என்கிற சாமவேத பாகமே அவருக்கு ஆத்ம சொரூபம், “காயத்ரம்” என்கிற சாமம் அவருக்கு கண்ணாய் விளங்குகின்றது. “த்ரிவ்ருத்” என்கிற சாமம் அவருக்கு தலையாக இருக்கின்றது. யஜுர் வேதங்கள் அவருடைய பெயர்களாகின்றன. சந்தஸ்ஸுகள் அவருடைய திருக்கரங்கள். “த்ஷ்ண்யம்என்று சொல்லப்படும் வேள்வி மேடைகள் அவருடைய திருக்கால் பாதங்களாகின்றன. “வாமதேவ்யம்” என்கிற சாமம் அவருடைய திருமேனியாகவும், “ப்ருஹத்”, “ரதந்த்ரம்” என்னும் ஸாமங்கள் அவருக்குச் சிறகுகளாகின்றன. “யஜ்ஞாயஜ்ஞியம்” என்ற சாமம் அவருக்கு வாலாகின்றது. இப்படி வேத பாகங்களெல்லாம் கருடனுடைய திருமேனியி்ன் பகுதிகளாய் விளங்குவதால் கருடனை வேதஸ்வரூபன் என்கிறார்கள் மஹான்கள்.

 இப்படி வேத ஸ்வரூபனான கருடனில் பச்சைப்புயலென பெருமாள் வரும் போது அதைப் பார்த்து அதன் தாத்பர்யத்தை உணர்ந்து பூரண சரணாகதி அடைந்தால் மோக்ஷம் நிச்சயம். எனவே கருட சேவையைப் பார்த்தால் மறுபிறவி கிடையாது என்று கூறினார்கள் நம் முன்னோர்கள்.

மோட்சம் தரும் கருட சேவை - ஆதி கேசவர் பல்லக்கு சிற்பம்

சென்ற பதிவில் பெருமாள் நித்ய கருட சேவை சாதிக்கும் திருவல்லிக்கேணி ஷேத்திரம் பற்றிப்பார்த்தோம். இப்பதிவில் பெருமாளுடன் தோளோடு தோள் இனைந்து கருடன் சேவை சாதிக்கும் சில ஷேத்திரங்களைப் பற்றிப் பார்ப்போமா அன்பர்களே.
ஆதி சங்கரர் அமைத்த சிம்மத் துவாரம்

நாம் முதலில் பார்க்கப்போகின்ற ஸ்தலம் நமது பாரத தேசமெங்கும் உள்ள அனைத்து தலங்களிலும், நான்கு திசைகளிலும் உள்ள பரம பவித்ரமான ஸ்தலங்கள் “சார் தாம்” என்று அழைக்கப்படுகின்றன. அவையாவன வடக்கே பத்ரிநாதம், கிழக்கே ஜகந்நாதம், தெற்கில் இராமேஸ்வரம், கிழக்கில் துவாரகை ஆகிய நான்கு தலங்களே இவை. இவற்றுள் பார்வதி தேவியை மகளாகப் பெற்ற பனி படர்ந்த இமயமலையில் அமைந்துள்ள பத்ரிநாத்தில் தான் பெருமாள் கருடனுன் நமக்கு சேவை சாதிக்கின்றார். இந்த பத்ரிநாதத்தின் சில பெருமைகளைப் பற்றிக் காண்போமா?

மஹாலக்ஷ்மித் தாயாருக்கு மிகவும் உகந்த தலம். பத்ரி எனப்படும் இலந்தை மரத்தினடியில் மஹாலக்ஷ்மித் தாயார் தவம் செய்ய அதற்கு பிரசன்னமாகி பெருமாள் அதே இலந்தை மரத்தடியில் சேவை சாதித்து நமக்கு முக்தி வழங்கும் முக்தி தாம். அஷ்டாத்திர மந்திரத்தை உபதேசம் செய்த தலம். பெருமாள் நர நாராயணகர்களாக அவதாரம் செய்து தவம் செய்து நாம் எல்லோரும் உய்ய நலம் தரும் தானே குருவாகவும், சீடனாகவும் ஒம் நமோ நாராயணா என்னும் திருமந்திரத்தை அருளிய தலம். அலக்நந்தா நதிக்கரையில் அமைந்துள்ள தலம். சங்கராச்சாரியருக்கு பெருமாள் நரசிங்கமூர்த்தியாக சேவை சாதித்த தலம்.

தந்தத்தை உடைத்து முழுமுதற் கடவுள் விநாயகப் பெருமான் மஹா பாரதம் எழுதிய தலம். இந்த பூவுலகில் பெருமாள் பிரத்யக்ஷமாக ஆச்சாரியனாக சேவை சாதிக்கும் தலம்.

புத்தர் காலத்தில் குளத்தில் வீசிய இந்த சாலக்கிராம மூர்த்தியை ஆதி சங்கரர் கண்டெடுத்து இக்கோவிலில் புனர் பிரதிஷ்டை செய்தார். பனிக் காலத்தில் ஆறு மாதங்கள் திருக்கோவில் மூடியிருக்கும், அப்போது உற்சவ மூர்த்தி ஜோஷிமட் நரசிம்மர் ஆலயத்தில் இருப்பார். அப்போது பத்ரி நாதரை நாரதர் பூஜை செய்வதாக ஐதீகம். திருக்கோவில் மூடும் போது ஏற்றப்பட்ட விளக்கு ஆறு மாதம் கழித்து மீண்டும் திறக்கும் போது அப்படியே அனையாமல் இருக்கும் அற்புதம் நடக்கும் தலம்.
இரண்டு அடி உயரத்தைக் கொண்ட – சாலக்கிராம மூர்த்தமான பத்ரி நாராயணர், ஜடா முடியோடு சதுர்புஜனாய், சங்கு சக்கரம் ஏந்தி மடியில் மற்ற இரு கரங்களை யோக முத்திரையுடன் வைத்து பத்மாசன கோலத்தில்- தியான ரூபத்தில் பிரதான சந்நிதியில் சேவை சாதிக்கின்றார். நாரத முனிவர் மண்டியிட்டு அமர்ந்துள்ள நிலையில் சேவை சாதிக்கின்றார். இடப் புறத்தில் , குபேரன், விநாயகரின் மூர்த்திகளைப் சேவிக்கலாம். அவரது வலப்புறத்தில் உத்தவர், நர, நாராயண முனிவர்களின் மூர்த்திகள், நின்ற கோலத்தில் சேவை சாதிக்கின்றார்.

மகாவிஷ்ணுவின் வாகனமும் கொடியுமான கருடபகவன் நின்ற கோலத்தில் சேவை சாதிக்கின்றார். பெருமாளை வணங்கும் கோலத்தில் பெருமாளுடன் கர்ப்பகிரகத்தில் எழுந்தருளி அருள்பாலிப்பது ஒரு தனிச்சிறப்பாகும். வெள்ளிக் கவசம் சார்த்தியுள்ளனர். காலையில் பெருமாளுக்கு திருமஞ்சனம் ஆகும்போகு இவர்க்கும் திருமஞ்சனமாகி தங்க கிரீடத்துடன் அலங்காரம் சிறப்பாக நடைபெறுகின்றது.


தாயாரின் பெயர் அரவிந்தவல்லி தனி சன்னதியில் அருள் பாலிக்கின்றாள். ஆதி சங்கரருக்கும் தனி சன்னதி உள்ளது. தீர்த்தம் வெந்நீர் குண்டமான தப்தகுண்டம் அதன் கரையிலும் கருடாழ்வார் சேவை சாதிக்கின்றார். கடல் மட்டத்திலிருந்து சுமார் 3113 அடி உயரத்தில் அமைந்துள்ளது இத்தலம். நர நாராயண மலை சிகரங்களுக்கிடையில் அமைந்துள்ளது , பிண்ணனியில் நீலகண்ட சிகரத்தை தரிசனம் செய்யலாம்.

பத்ரிநாதர் ஆலயத்தின் அருகில் ஐந்து புனித பாறைகள் உள்ளன. அவையாவன நாரத ஷிலா, கருட ஷிலா, மார்க்கண்டேய ஷிலா, வராஹ ஷிலா, நரசிங்க ஷிலா ஆகும். இவற்றுள் கருடன் கந்தமாதன பர்வதத்தில் இந்த பாறையில் அமர்ந்து கடும் தவம் செய்தார். பெருமாளும் பிரசன்னராகி கங்கையை வரவழைக்க கருடனும் பெருமாளுக்கு பாத பூஜை செய்தார். பின்னர் கருடன் வேண்ட அவருக்கு வாகனமாகவும், கொடியாகவும் இருக்க வரமளித்தார். மேலும் தான் தவம் செய்த பாறையை தரிசிப்பவகளின் பாவம் எல்லாம் மறைய  வேண்டும் என்று வேண்ட பெருமாளும் அவ்வாறே வரம் அளித்தார்.



 இவ்வதரி திவ்ய தேசத்தை திருமங்கையாழ்வார் 22 பாசுரங்களால் மங்களாசாசனம் செய்துள்ளார் அவற்றுள் இரண்டு பாசுரங்களை சேவிப்போம்.

நர நாராயணர் மலைச்சிகரங்கள்

எய்த்தசொல்லோடு ஈளையேங்கி இருமியிளைத்து உடலம்
பித்தர்போலச் சித்தம்வேறாயப் பேசி அயராமுன் 
அத்தன் எந்தை ஆதிமூர்த்தி ஆழ்கடலைக் கடைந்த 
மைத்தசோதி எம்பெருமான் வதரி வணங்குதுமே. என்றும்

ஏனமுனாகி இருநிலமிடந்து அன்று இனையடி இமையவர் வணங்க தானவனாகம் தரணியில் புரளத் தடஞ்சிலை குனித்தவென் தலைவன் தேனமர் சோலைக் கற்பகம் பயந்த தெய்வநல்நறுமலர் கொணர்ந்து வானவர் வணங்கும் கங்கையின் கரைமேல் வதரியாசிரமத்துள்ளானே.

அவர் அருள் இருந்தால் வதரி சென்று பத்ரி நாராயணரை சேவிக்குமாறு வேண்டுகிறேன். அடுத்த பதிவில் பெருமாளுடன் கருடாழ்வார் சேவை சாதிக்கும் இன்னும் சில தலங்களுடன் சந்திப்போமா?

Monday, October 26, 2009

நித்ய கருட சேவை


சென்றால் குடையாம் இருந்தால் சிங்காதனமாம்
நின்றால் மரவடியாம் நீள்கடலுள் – என்றும்
புணையாம் மணிவிளக்காம் பூம்பட்டாம்புல்கும்
அணையாம் திருமாற்கு அரவு.

என்று ஆதிசேஷனாகிய நாகம் திருமாலுக்கு செய்யும் சேவைகளை பட்டியலிடுகின்றார் பொய்கையாழ்வார். அது போல யாரும் பெரிய திருவடியாம் கருடன் செய்யும் சேவையை பாடவில்லையென்றாலும் நாம் அவை என்னவென்று பார்ப்போமா?

திருவல்லிக்கேணி தெள்ளிய சிங்கர் கருட சேவை

அவுணரை கொல்ல செல்கையில் மேலப்பாம்
வெற்றிக் கொடியாம் குளிர் விசிறியாம் – காய்சின
பறவையாம் பரி பூணாத இரதமாம்
உற்ற துணைவனாம் திருமாற்கு புள்ளரையன்.

என்றபடி பெருமாள் அசுரரை கொல்லச் செல்லும் போது, "மேலால் பரந்த வெயில் காப்பான் வினதை சிறுவன் சிறகென்னும் மேலாப்பின் கீழ் வருவானை" என்று ஆண்டாள் நாச்சியார் பாடியபடி அவருக்கு குடையாய் நிழல் தருபவனும், தனது பெரிய சிறகுகளால் பெருமாளூக்கு ஆலவட்ட கைங்கரியம் செய்து அவரை குளிர்விப்பவனும், அவரது திருவடிகளை தாங்கும் வாகனமாயும், அவரது தலைக்கு மேலே வெற்றிக் கொடியாகவும், பல சமயங்களில் பெருமாளுக்கு சிரமம் தராமல் தானே சென்று பகைவர்களை கொத்தி புரட்டி எடுத்து விடுகின்ற காய்சினப் பறவையாகவும், ( பரனூர் மகான் பெருமாள் இதை நகைச்சுவையாக பெருமாள் பல சமயம் கருடனை அனுப்பி விட்டு தான் ஹாயாக அமர்ந்து விடுவார் எல்லாவற்றையும் கருடன் கவனித்துக் கொள்வான் என்று கூறுவார்), பெருமாள் எங்கு செல்ல விழைகின்றாறோ அங்கு அவரை அந்த க்ஷணமே கூட்டிச் செல்கின்ற குதிரை பூட்டாத நாராயண ரதமாகவும், பெருமாள் எங்கு சென்றாலும் அவருக்கு உற்ற துணைவனாயும் விளங்குபவன் சுபர்ணன் என்னும் அழகிய சிறகுகளை உடைய கருடன்.

பார்த்தசாரதிப்பெருமாள் கருட சேவை

அநேகமாக அனைத்து தலங்களிலும் நின்ற கோலத்தில் அஞ்சலி ஹஸ்தத்துடன் ( பெருமாளை வணங்கிய நிலையில்) பெருமாளுக்கு எதிரில் கருடன் பிரதிஷ்டை செய்யப்பட்டிருப்பார். மிக சில ஸ்தலங்களில் மட்டும்தான் பெருமாளுடன் கருவறையிலேயே தோளோடு தோள் இணைந்து தோழனாய் கருடன் சேவை சாதிக்கின்றான். அவ்வாறு கருடன் சேவை சாதிக்கும் சில ஸ்தலங்களை அடுத்து வரும் பதிவுகளில் காணலாம்.

"நித்ய கருட சேவை" என்று பெயரிடப்பட்டுள்ளதால் பெருமாள் கருட வாகனத்தில் மேலிருந்து கஜேந்திர வரதனாக தினமும் சேவை சாதிக்கும் ஒரு திவ்ய தேசத்தைப்பற்றி பார்ப்போம். அந்த திவ்ய தேசம் தான் திருவல்லிக்கேணி. திருமங்கையாழ்வார் மங்களாசாசனம் செய்த பெருமாள் இவர்.

இத்திவ்ய தேசத்தில் நெடியானாய் நின்ற கோலத்தில், சாரதிக்கு உரிய முறுக்கு மீசையுடன் வலக்கையில் சங்கமேந்தி சக்கரம் இல்லாமல் வேங்கட கிருஷ்ணன் என்று மூலவராயும், திருமுக மண்டலத்தில் பீஷ்மரின் அம்பு காயங்களுடன் பார்த்தசாரதி என்று உற்சவராயும், வால்மிகி முனிவர் வணங்கும் இராமனாய், மைதிலி மற்றும் தம்பி இலக்குவனோடும் சக்கரவர்த்தி திருமகனும், பள்ளி கொண்ட ஸ்ரீமந்நாதராய் அரங்கனாகவும், பிரகலாதனுக்கு அருள் புரிந்து யோக நிலையில் அமர்ந்த தெள்ளிய சிங்கராகவும், நித்ய கருட சேவை வழங்கும் கஜேந்திர வரதராகவும் பெருமாள் ஐந்து கோலங்களில் சேவை சாதிக்கின்றார்.

கஜேந்திர வரதர் சன்னதி உள் பிரகாரத்தில் தென் கிழக்கு மூலையில் தனி சன்னதியாக அமைந்துள்ளது. இவருக்கு வருடாந்திர பிரம்மோற்சவம் வைகாசி திருவோணத்தை ஒட்டி பத்து நாள் நிகழ்ச்சியாக நடைபெறுகின்றது. வைகானச ஆகமப்படி உற்சவங்கள் நடைபெறுவதால் மூன்றாம் நாள் அதிகாலை கோபுர வாசல் தரிசனத்துடன் கருட சேவை எல்லா பெருமாள்களின் பிரம்மோற்சவத்தின் போதும் நடைபெறுகின்றது. கஜேந்திர வரதர் ஹஸ்த நட்சத்திரத்தன்று் மாலை புறப்பாடு கண்டருளுகிறார். கஜேந்திர மோக்ஷ உற்சவம் ஆடி கருடன் என்று ஆடிப் பௌர்ணமியன்று நடைபெறுகின்றது. பங்குனி உற்சவ திருக்கல்யாண உற்சவத்தின் போது மாலை ஸ்ரீரங்கநாத சுவாமி கண்ணாடி கருட சேவை தந்தருளுகின்றார்

இவ்வாறு நித்ய கருட சேவை தந்தருளும் கஜேந்திர வரதரை திருமங்கையாழ்வார் இவ்வாறு மங்களாசாசனம் செய்துள்ளார்

மீனமர் பொய்கை நான்மலர்கொய்வான் வேட்கையினோடு சென்றிழிந்த
கானமர் வேழம் கையெடுத்தலற கராஅதன்காலினைகதுவ
ஆனையின் துயரம் தீரப்புள்ளூர்ந்து சென்றுநின்று ஆழிதொட்டானை
தேனமர்சோலை மாடமாமயிலைத் திருவல்லிக்கேணி கண்டேனே.

கஜேந்திர மோக்ஷ சிற்பம் ( ஆதி கேசவப்பெருமாள் பல்லக்கு)

பெருமாளின் புஷப கைங்கர்யத்திற்காக வேண்டி, கயல் மீன்கள் துள்ளி விளையாடும் தடாகத்திலிருந்து தினம் தாமரை மலர்களை பறித்து வந்த, காட்டில் உற்சாகமாகச் சுற்றித் திரியும், கஜேந்திரன் என்ற யானையின் காலை, ஒரு சமயம் புலால் உண்ணும் முதலையொன்று கவ்வ, அப்போது அந்த கஜேந்திரன் தன் தும்பிக்கையைஉயர்த்தி, "ஆதிமூலமே" என்று பெருங்குரலெடுத்து அலற, கருடனில் விரைந்து பறந்து வந்த பெருமாள், தன் சக்ராயுதத்தை வீசி முதலையை அழித்து, அந்த யானையை துயரிலிருந்துக் காத்தார். இவ்வாறு அடியவர் துயர் தீர்க்கும் அப்பேர்ப்பட்ட வரதராஜப் பெருமாளை, தேன் மலர்கள் பூத்துக் குலுங்கும் சோலைகள் சூழ்ந்த, மாடங்கள் மிகு மாமயிலைக்கு அருகில் உள்ள, திருவல்லிக்கேணியில்நான் கண்டேனே ! என்று மயிலாப்பூரில் உள்ள திருவல்லிக்கேணியென்று பாடுகிறார் திருமங்கை மன்னன்.

குறிப்பு: : “ஆழி தொட்டானை' என்பதற்கு 'யானைக்கு பாதிப்பு இல்லா வண்ணம், முதலை மட்டும் அழியும்படியாக திருச்சக்கரத்தை வீசிய எம்பெருமான்” என்றுபொருள் கொள்க !


கண்ணாடி கருடனில் அரங்கநாதர்


பாசுரச் சிறப்பு: முக்கூரார், தனது உபன்யாசத்தின் போது கஜேந்திரனைக் காக்கபெருமாள் கொண்ட அவசரத்தை சுவைபட இவ்வாறு கூறுவார் ! 'ஆதிமூலமே' என்ற கஜேந்திரனின் அலறலைக் கேட்ட மாத்திரத்தில், வைகுண்டத்தில்பிராட்டியுடன் அளவளாவிக் கொண்டிருந்த பெருமாள் அவசர அவசரமாகக்கிளம்ப யத்தனித்தபோது, அவரது உத்தரீயம் (மேல் துணி) தாயாரின் கையில்சிக்கிக் கொள்ள, பெருமாளின் எண்ணம் புரிந்த கருடன் அவரை விட வேகமாகபறந்து வந்து அவர் முன் நிற்க, சக்ராயுதமானது, பெருமாள் கருடன் மேலேறிபயணத்தைத் தொடங்கி விட்டபடியால், தானாகவே பறந்து வந்து அவரது வலதுதிருக்கரத்தில் சரியாக அமர்ந்து கொள்ள, பகவான் அதிவிரைவில் சென்று, கஜேந்திரனுக்கு அபயம் அளித்ததாக அழகாக பாசுர விளக்கம் கூறுவார் !
திருவல்லிக்கேணி சக்கரவர்த்தி திருமகன் கருடசேவை

தன்னை வேண்டி அழைத்த அடியவரைக் காக்க விரைந்த பெருமாளுக்கு, கருடனின் உதவியோ, சக்கரத்தின் தேவையோ தோன்றவே இல்லை ! அபயம்அளிப்பது ஒன்றே குறி ! அப்பேர்ப்பட்ட கருணாமூர்த்தி எம்பெருமான் ஆவார் ! கீழே விழுந்து அடிபட்டு அழும் குழந்தையை, கையில் ஏந்தி ஆசுவாசப்படுத்திஆறுதல் சொல்ல எப்படி ஒரு தாய் அவசரமாக ஓடி வருவாளோ, அது போலவே, எம்பெருமான் ஓடோடி வந்து, தன் அடியாரின் துயர் தீர்த்து அபயம் அளிப்பார் என்பது திண்ணம். வேண்டியதெல்லாம் பூரண சரணாகதி ஒன்றுதான், நான், எனது என்றிருக்கும் வரையில் அவர் அருள் கிட்டாது. நீயே சரணம் என்று சரணமடைவதே உய்ய வழி .

சோள சிம்ம புரம் என்னும் திருக்கடிகையில் காஞ்சி வரதர் தனது அன்பரான தொட்டாச்சாரியாருக்கு வைகாசி கருட சேவை காட்சியை தக்கான் குளக்கரையை அளித்ததை அனைவரும் அறிவோம், அறியாதவர்கள் இங்கு கிளிக்கவும்.
இவ்வாறு கச்சி வரதன் அளித்த அற்புத கருட சேவையை எப்போதும் அனைவரும் சேவிக்கும் பொருட்டு தக்கான் குளக்கரையில் வரதர் ஆலயம் உள்ளது. அங்கும் நாம் தினமும் மோட்சமளிக்கும் கருடசேவையை தரிசிக்கலாம்.


அடுத்த பதிவில் கருடன் பெருமாளுடன் சேவை சாதிக்கும் சில ஸ்தலங்களுடன் சந்திப்போமா அன்பர்களே.