Tuesday, July 20, 2010

வைர முடி கருட சேவை

மேல் கோட்டை திருநாராயணன்

இப்பதிவில் நாம் காணப்போகும் கருடசேவை மிகவும் சிறப்பு வாய்ந்த ஒரு கருட சேவை. ஆம் இந்த கருட சேவையின் போது பெருமாள் கருடனே கொண்டு வந்து பெருமாளுக்கு சமர்பித்த வைரமுடி அணிந்து கொண்டு வேத சொரூபனாம் கருடனில் ஆரோகணித்து அனைவருக்கும் அருள் பாலிக்கின்றார் செல்லப்பிள்ளை.

 இந்த வைரமுடி சேவை நடைபெறும் தலம் கர்நாடகாவில் உள்ள மேல் கோட்டை என்னும் திருநாராயணபுரம் வடக்கில் உள்ள பத்ரிகாஸ்ரமம் போல இத்தலம் தெற்கில் உள்ள பத்ரிகாஸ்ரமம். காரேய் கருணை இராமானுஜருடன் நெருங்கிய தொடர்புடையது இத்தலம். செல்வோமா மேல்கோட்டையின் சிறப்புகளையும் இத்தலத்தில் இராமானுஜரின் கைங்கர்யங்களையும் இறுதியாக வைரமுடி மற்றும் இராஜமுடி சேவையையும் காண வாருங்கள் கைகூப்பி அழைக்கின்றேன்.

வைரமுடி சேவைக்கு முன் எழுந்தருளுகிறார் உடையவர்

தேவேந்திரன் ஒரு சமயம் ஒரு விமானத்தையும் வைர முடியையும் அளித்து இவற்றை எந்தெந்த பெருமாளுக்கு உகந்ததோ அங்கு சம்ர்பித்து விடு என்று பணித்தான். கருடனும் வைர முடியை கர்நாடக மாநிலத்தில் மைசூர் அருகில் உள்ள திருநாராயண புரத்தில் செல்லபிள்ளை சம்பத்குமாரரருக்கும் விமானத்தை தேரழுந்தூரில் ஆமருவியப்பனுக்கும் சமர்பித்தான் இக்கதையை இப்பதிவில் படியுங்கள்



வைரமுடி மாண்டியா கருவூலத்திலிருந்து பல்லக்கில் வரும் காட்சி

அந்த கருடன் கொண்டு வந்த வைரமுடியில் கருடனில் பெருமாள் பங்குனி மாதம் புஸ்ய நட்சத்திரத்தன்று சேவை சாதிப்பதே மேல்கோட்டை வைர முடி சேவை என்று சிறப்பித்து கூறப்படுகின்றது

. இனி இந்த திருநாராயணபுரத்தின் சிறப்புகளை முதலில் காண்போமா?
புராணங்களில் மேல் கோட்டை 1. பத்மகூடா, 2. புஷ்கரா, 3. புத்மசேகரா ,4.அனந்தமாயா , 5. யாதவகிரி, 6. நாராயணாத்ரி, 7. வேதாத்ரி ,8. வித்யா (ஞான) மண்டல், 9. தக்ஷிணபத்ரி என்று பல பெயர்களில் அழைக்கப்பட்டுள்ளது. இத்தலம் தென் இந்தியாவில் கர்னாடக ராஜ்யம், மாண்ட்யா மாவட்டம், பெங்களுரிலிருந்து சுமார் 140 கி.மீ, மைசூரிலிருந்து சுமார் 40 கி.மீ. தொலைவில் உள்ளது. பெங்களூர் மைசூர் ரயில் பாதையில் பாண்டவபூர் ரயில் நிலையத்திலிருந்து சுமார் 20 கி.மீ. உள்ளது. யதுகிரி பர்வதத்தில் அமைந்துள்ள இத்தலம் ஒரு மலை வாசஸ்தலம். சமுத்திர மட்டத்திலிருந்து 1200 மீட்டர் உயரத்தில்அமைந்துள்ள இத்தலத்தில் இரண்டு முக்கிய கோயில்கள்., பல மடங்கள், புனித தீர்த்தங்கள், மற்றும் பல தர்ம சாலைகளும் உள்ளன.

பெருமாள் தம் கருணையினால் அர்ச்சா ரூபமாக எழுந்தருளி அருள் பாலிக்கும் நான்கு திருத்தலங்கள் தென்னிந்தியாவில் நாற்கோணமாக அமைந்துள்ளன அவையாவன:
1. தெற்கு திசை ஸ்ரீரங்கம் - கருணா நிவாசன் (தமிழ்நாடு) ஸ்ரீ ரங்கநாதன்.
2. கிழக்கு திசை - காஞ்சீபுரம், (தமிழ்நாடு) ஸ்ரீ வரதராஜன்.
3. வடதிசை - திருமலை / திருப்பதி (ஆந்திரா) திருவேங்கடவவன்.
4. மேற்கு திசை - மேல் கோட்டை (கர்னாடகம்) யதுசைல ரூபம் - திருநாராயணபுரம்.

வைரமுடியும் இராஜ முடியும்

இவ்வளவு சிறப்புப் பெற்ற இந்த திவ்யஸ்தலம் திருநாராயணபுரம் நான்கு யுகங்களும் ப்ரஸித்தி பெற்றது. க்ருத யுகத்தில் ஸநத்குமாரரால் நாராணாத்ரி என்றும், த்ரேதா யுகத்தில் தத்தாத்ரேயரால் வேதாத்ரி என்றும் த்வாபர யுகத்தில் ஸ்ரீ பலராமன் கிருஷ்ணரால் யாதவாத்ரி என்றும் வழங்கப்பட்டது. இக்கலியுகத்தில் யதிராஜரால் யதிஸ்தலமென்றும் வழங்கப்படுகிறது

 மேலும் ஸ்ரீரங்கத்தை - போக மண்டபமென்றும்,
திருமலையை புஷ்பமண்டபமென்றும்
பெருமாள் கோயிலை - தியாக மண்டபமென்றும்
திருநாராயணபுரத்தை - ஞான மண்டபமென்றும் பெரியோர்கள் கூறுவர்.

மேலும் "நடை அழகு" ஸ்ரீரங்கம் எம்பெருமானுக்கு ப்ரஸித்தம்.
திருவேங்கடமுடையான் அமுது செய்யும் ப்ரஸாதங்களில் வடை ப்ரஸித்தம்.
பெருமாள் கோயிலில் பேரருளாளனுக்கு ஸமர்ப்பிக்கப்படும் " குடை" மிகப் பெரியது.
திருநாராயணனுக்கே முடி (கிரீடம்) உரிய அழகுப் பொருத்தமாக விளங்குகிறது.
செல்லப்பிள்ளை இராமப்பிரியன் யதிராஜ சம்பத்குமரன்

இந்த ராமாநுஜரின் அபிமான ஸ்தலத்தில் இரண்டு திருக்கோவில்கள் மலை மேல், கோட்டையில் அமைந்துள்ளன அவையாவன நரசிம்மர் ஆலயம், இரண்டாவது நாராயணர் ஆலயம். நாராயணர் ஆலயத்தில்

மூலவர் :- திருநாராயணன் / திருநாரணன் சங்க சக்ர, கதை, முதலியவைகளுடன் நின்ற திருக்கோலம், மேற்கே திருமுக மண்டலம், சரணங்களில் பீபீ நாச்சியார் (வெள்ளி கவசத்துடன்) சரணங்களில் வணங்கிய முடி.
உத்ஸவர் :- ஸம்பத்குமாரர், இதரபெயர்கள் - ராம ப்ரியர், செல்வ பிள்ளை, செல்வ நாராயணன்.
தாயார் :- யதுகிரி நாச்சியார், மேலும் பூமி தேவி, வரநந்தினி நாச்சியார்.
தீர்த்தம் :- கல்யாணி தீர்த்தம், வேத புஷ்கரிணி, தனுஷ் கோடி தீர்த்தம், முதலிய 8 தீர்த்தங்கள்.
விமானம் :- ஆனந்தமய விமானம்
ப்ரத்யக்ஷம் :- கருட பகவான்
இத்தலத்தில் எழுந்தருளியிருக்கும் இதர மூர்த்திகள் :
வண்புகழ் நாரணன் :- ஸ்நபனபேரர், (நாராயண பகவான் பக்கத்தில்) நித்ய திருமஞ்ஜனம் கண்டருளிகிறார்.
வாழ் புகழ் நாரணன், பலி செல்வர், செல்வப் பிள்ளை ஸந்நிதியில் ஸேவை ஸாதிக்கிறார்.
நம்மாழ்வாரின் திருவாய்மொழியில் செல்வ நாரணன், திருநாரணன். வண்புகழ்நாரணன், வாழ்புகழ்நாரணன் என்று நான்கு திருநாமங்களையும் அனுபவிக்கலாம்.

இராமானுஜர்

கிருமி கண்ட சோழன் என்ற அரசன் சைவ மதப்பற்றினால் ஸ்ரீவைஷ்ணவ துவேஷியானான். அதனால் ஸ்ரீரங்கத்தில் இருந்த ராமானுஜருக்கு பல தொல்லைகள் கொடுத்தான். இதனால் கூரத்தழ்வாரின் ஆலோசனைப்படி இராமானுஜர் வெள்ளை சாத்தி, தமிழ்நாட்டைவிட்டு கர்நாடக தேசத்துக்கு சத்தியமங்கலம் வழியாக தொண்டனூர் வந்தார். அப்போது ஜைன மதத்தை ஆதரித்து வந்த பிட்டிதேவன் என்ற மன்னன் இந்த இடத்தை ஆண்டு வந்தான். அவனது மகளுக்கு சித்தபிரம்மை பிடித்திருந்தது. அதனை நீக்க ஜைனத் துறவிகளால் முடியாமல் போக, ராமானுஜர் உதவியால் அது நீங்கியது. இதைக் கண்ட பிட்டிதேவன் ஜைன மதத்தைத் துறந்து, ஸ்ரீவைஷ்ணவன் ஆனான். ராமானுஜர் அவனுக்கு விஷ்ணுவர்தனன் என்ற பெயரைச் சூட்டினார். இந்த மன்னன் மேல்கோட்டை கோயிலுக்குப் பல உதவிகள் செய்துள்ளான்.

உதயகிரி மலையில் திருக்கோவிலைக் கட்டியவன் இவனே.
வைரமுடி சேவை
வைரமுடி சேவை முன்னழகு

மேல்கோட்டையிலிருந்து 20 கிமீ தூரத்தில் இருக்கும் தொண்டனூர் ஏரி ராமானுஜர் ஏற்படுத்தியது. அவர் தொண்டனூரில் வசித்து வந்த போது அவரது நெற்றியில் அணியும் திருமண் தீர்ந்துவிட, அன்று இரவு அவர் கனவில் பெருமாள் தோன்றி, திருநாராயணபுரத்துக்கு செல்லும் வழியைச் சொல்லி அங்கு ஒரு புற்றில் இருக்கிறேன் என்றும் தன்னை வெளியே கொண்டு வரவேண்டும் என்று கூறினார். ராமானுஜர் பெருமாள் சொன்ன வழியாக திருநாராயணபுரத்துக்கு அங்கு வேதபுஷ்கரணியில் குளித்துவிட்டு திருமண் அணிந்துக்கொண்டு, கல்யாணி குளத்துக்கு பக்கத்தில் இருந்த எரும்புப் புற்றை, ஊர் மக்கள் உதவியுடன் பால், மற்றும் தீர்த்தத்தைக் கொண்டு கரைத்தார். திருநாராயணர் திவ்ய மங்கள விக்ரஹத்தை ராமானுஜர் பிரதிஷ்டை செய்தார். ராமானுஜருக்கு இங்கே திருமண் கிடைத்தால் இன்றும் மேல்கோட்டையில் திருமண் விஷேசமாக விற்கப்படுகிறது.

பக்கவாட்டுத்தோற்றம்
(வைரமுடியைத் தெளிவாகக் காணலாம்)

முன்பொரு காலத்தில் முகம்மதிய படையெடுப்பின் போது டில்லி சுல்தான் கோயிலை இடித்து விக்ரகங்களையும், பொன் பொருள் எல்லாவற்றையும் கொள்ளையடித்துச் சென்றான் என்றும், திருநாராயணனின் உற்சவமூர்த்தியும் சுல்தானிடம் தான் இருக்கிறதென்றும் அவ்வூர் மக்கள் மூலம் அறிந்தார் இராமானுஜர். மன்னன் உதவியுடன் சில சீடர்களை உடன் அழைத்துக் கொண்டு டில்லி சுல்தானை நேரில் கண்டு உற்சவ மூர்த்தியைத் திரும்பத் தருமாறு கேட்டுக் கொண்டார். சுல்தானுக்கு இராமானுஜரைக் கண்டு வியப்பும் ஆச்சரியமும் ஏற்பட்டது. அவரைப் பற்றி முன்னரே கேள்விப்பட்டிருந்தான். தன் மகள் ஆசைப்பட்டாள் என்பதற்காக அந்த விக்ரகத்தை அவளுக்கு விளையாடக் கொடுத்திருந்தான். அதைத் திரும்பப் பெறுவதென்பது அவ்வளவு எளிதல்ல. அதனால் ஒரு நிபந்தனையுடன் அதை எடுத்துச் செல்லலாம் என்றான். நிபந்தனை இதுதான். இராமானுஜர் உற்சவமூர்த்தியை அழைக்க வேண்டும. விக்ரகம் தானாகவே அவரிடம் வந்து சேரவேண்டும் என்றான். உடனே இராமானுஜர் ஒரு குழந்தையை அழைப்பதுபோல் ''என் செல்லப் பிள்ளாய் வருக'' என்று குழைவாக அழைத்தார். என்ன ஆச்சரியம்! சிலைவடிவில் இருந்த இராமப்பிரியன் விக்ரகம் மாறி ஒரு குழந்தை வடிவில் சலங்கை சல் சல் என்று ஒலிக்க அனைவரும் வியந்து நோக்க நடந்து வந்து அவர் மடியில் அமர்ந்து கொண்டு மீண்டும் சிலையாயிற்று. சுல்தான் மலைத்துப் போனான். நிபந்தனைப்படியே உற்சவ மூர்த்தியை எடுத்துப்போக அனுமதித்து அத்துடன் பொன்னும் பொருளும் தந்து அனுப்பி வைத்தான். எனவே மேல்கோட்டை உற்சவமூர்த்தி 'செல்லப்பிள்ளை' என்றும் "யதிராஜ சம்பத்குமாரன் " என்றும் அழைக்கப்படுகின்றார். செல்வப்பிள்ளை திருநாராயணபுரம் வந்த நாளான மாசி கேட்டை டில்லி உத்சவம் என்று இன்றும் கொண்டாடப்படுகிறது.

வைரமுடி கருட சேவை

சுல்தானின் மகள் சிலையைப் பிரிந்திருக்க முடியாமல் மேல்கோட்டையைத் தேடி ஓடி வந்து உற்சவமூர்த்தியை ஆரத்தழுவிக் கொண்டாள். அடுத்த நிமிடம் அந்த சிலையுடன் ஐக்கியமாகி விட்டாள். அவள் அன்பைப் பாராட்டி அவளைப் போலவே ஒரு சிலை செய்து 'பீபீ நாச்சியார்'' என்ற பெயரில் நாராயணனுக்கருகில் அமர்த்தி விட்டார் இராமானுஜர்.

இது மட்டுமா? டில்லி சுல்தானிடமிருந்து சிலையைக் கொண்டு வரும் வழியில் வழிப்பறிக் கொள்ளைக்காரர்கள் அவரை எதிர்த்து சிலையையும், சுல்தான் கொடுத்த பொன் பொருள் ஆகியவற்றையும் கவர்ந்து கொள்ள முயன்ற போது உடன் வந்தவர்கள் அலற, இராமானுஜர் ''அவனைக் காப்பாற்றிக் கொள்ள அவனுக்குத் தெரியும்'' என்று சொல்லி அமைதிப்படுத்தினார். அருகிலிருந்த சேரிமக்கள் இவர்கள் அலறல் கேட்டு திரளாக ஓடிவந்து கொள்ளைக்காரர்களை விரட்டி, இராமானுஜரையும் மற்றவர்களையும் ஊரின் எல்லை வரைக்கும் கொண்டுவந்து சேர்த்தனர். கோயிலுக்குள் நுழைய தங்களுக்கு அனுமதியில்லை என்று சொல்லி விடை பெற்றுக்கொள்ள முயன்ற போது, இராமானுஜர் இறைவனைக் காப்பாற்றிய அவர்களுக்குத்தான் உண்மையிலேயே அதிக உரிமை உண்டு என்று சொல்லி அவர்களையும் கோயிலுக்குள் அழைத்துச் சென்றார். ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே சேரி மக்கள் என்று தாழ்த்தப்பட்ட நிலையில் ஒதுக்கி வைக்கப்பட்டிருந்தவர்களை ஆலயப் பிரவேசம் செய்து இராமானுர் அக்காலத்திலேயே ஒரு புரட்சியை செய்துள்ளார்.

ராமானுஜர் மேல்கோட்டையில் 12 வருஷம் இருந்துவிட்டுத் திரும்ப ஸ்ரீரங்கம் புறப்பட்டபோது, அங்கிருந்த அவரது சீடர்கள் துயரமாக இருப்பதைக்கண்டு அவரை மாதிரியே ஒரு விக்ரஹம் செய்து அதை அவர்களுக்குத் தன் நினைவாகக் கொடுத்துவிட்டுச் சென்றார். இது இன்றும் தமர் உகந்த திருமேனி என்று போற்றப்படுகிறது. ஊர் மக்கள், அவரைப் பார்த்தால் உங்களிடம் பேசுவது போல இருப்பதால், இந்த விக்ரஹத்தைப் பேசும் ராமானுஜர் என்று அழைக்கிறார்கள். ஸ்ரீபெரும்புதூரில் உள்ளது "தானுகந்த திருமேன”, திருவரங்கத்தில் உள்ளது "தானான திருமேனி".

மேல்கோட்டை நாராயணபுரத்தில் பங்குனி மாதத்தில் நடைபெறும் கருடன் கொண்டு வந்த 'வைரமுடி சேவை' விழா தனிச்சிறப்புடையது. இராமானுஜர் சந்நிதிக்கு முன்னாள் உற்சவ மூர்த்தியை நாச்சியாருடன் எழுந்தருளச் செய்து வைரமுடி அணிவித்து விழா கொண்டாடுகின்றனர். இராமன் முடிசூட்டு விழாவைக் காண தசரதருக்குக் கிடைக்காத பேறு இராமானுஜருக்கு கிடைத்தது. வைர முடி சேவை பங்குனி மாதம் புஷ்ய நக்ஷத்ரத்தில் மிக விமர்சையாக அனுஷ்டிக்கப்படுகிறது. பக்தர்கள் பல்வேறு இடங்களிலிருந்து வருகின்றனர். இதைத் தவிர ராஜமுடி, (க்ருஷ்ண ராஜமுடி) சேவையும் கொண்டாடப்படுகிறது.

ஸ்ரீதேவி மற்றும் பூதேவித்தாயார்களுடன்
கருடனில் பெருமாள் வைரமுடியுடன்

(படத்தை பெரிதாக்கினால் கருடனை தெளிவாகக் காணலாம்)

பங்குனி புஷ்ய நாளில் அரை வட்ட வடிவ இரட்டை யாளி முகம் கொண்ட பிரபையின் நடுவில் உபய நாச்சியார்களுடன் வேத ஸ்வரூபனான கருடனில், அவன் கொண்டு வந்த வைர முடியுடன் பெருமாள் பவனி வரும் அழகை என்ன என்று சொல்ல .

வைரமுடி கருட சேவை

முதலில் கருடாழ்வார் கோயிலைச் சுற்றி வலம் வருகின்றார். பிறகு வைரமுடி என்று அழைக்கப்படும் கிரீடம் பல்லக்கில் ஏற்றப்பட்டு கோயிலைச் சுற்றி வருகின்றது. இந்த வைரமுடி என்ற வைரம் பதிக்கப்பட்ட கிரீடத்தை மாண்டயா கஜானாவிலிருந்து சகல மரியாதையுடன் கலெக்டர் கொண்டு வருவார். வருடத்துக்கு ஒரு முறை இந்த விலை உயர்ந்த கிரீடம் சில மணி நேரம் மட்டுமே பெருமாளுக்கு அணிவிக்கப்படுகிறது.

வைரமுடி திரும்பச்செல்கின்றது

மாலை சுமார் 7:30 மணிக்கு பெருமாள் கருடன் கொண்டு வந்த அற்புத வைரமுடியை அணிந்து கொண்டு பல்லக்கில் வெளியே வருகிறார் உபய நாச்சியார்களுடன் சம்பத் குமாரர். தாயார்களுடன் பெருமாளின் கருட சேவை சாதிப்பது இங்கு ஒரு தனி சிறப்பு. எல்லாத் திசைகளிலும் பெருமாளை அழைத்து செல்லுகிறார்கள். யாராவது நான் பெருமாளைச் சேவிக்கவில்லை என்று சொன்னால் அவர் நிச்சயம் பொய் சொல்கிறார் என்று சொல்லிவிடலாம். பிறகு விடியற்காலை கிட்டதட்ட 2 மணிக்கு திரும்பவும் பெருமாள் கோயிலுக்கு எதிரில் உள்ள மண்டபத்துக்குச் செல்கிறார் அங்கே வைரமுடி கழட்டப்பட்டு பெட்டியில் சீல் செய்கிறார்கள். பிறகு ராஜ முடி அணிந்துசேவை சாதிக்கின்றார் செல்லப்பிள்ளை.

இராஜமுடி(கிருஷ்ணராஜ முடி) சேவை

மைசூர் அரச பரம்பரையில் வந்த மன்னர்களில் கிருஷ்ணராஜ உடையார் வைரமுடியைப் போலவே மற்றொரு கிரீடத்தை அளித்தார். இதை கிருஷ்ணராஜ முடி என்று புத்தகங்கள் சொன்னாலும், கூட்டம் ராஜ முடி என்று அழைக்கிறது. ராஜ முடி அணிந்துக்கொண்டு நிஜமாகவே அவர் இளவரசன் போல நடந்து செல்கிறார் டெல்லியிலிருந்து இராமானுர் கூப்பிடக்குரலுக்காக ஒடி வந்த இராமப்பிரியர் . நம்மாழ்வார் சொன்னகிளர் ஒளி இளமை கெடுவதன் முன்னம்” என்றபடி இளமையிலேயே வைர முடி, ராஜமுடி நிச்சயம் பார்க்க வேண்டிய ஒன்று.

வைர முடி சேவையைத் தவிர குழந்தை இல்லாதவர்களுக்கு அருளும் விதமாக ஐப்பசி மாத சுக்லபட்ச தசமி திதியன்று அஷ்டதீர்த்த உற்சவத்தை நடத்துகின்றனர் இத்தலத்தில். குழந்தையில்லாதவர்கள் விரதம் மேற்கொண்டு குளக்கரையில் ஒரு பழுத்த சுமங்கலியின் கையால் மஞ்சள், குங்குமம் இட்டுக் கொண்டு, ஒரு தேங்காய், ஒன்பது வாழைப் பழங்கள், இரண்டு கர்ஜீர்காய், வெற்றிலை, பாக்கு ஆகியவற்றை சுமங்கலி கையால் பெற்றுக் கொண்டு, அதைத் தங்கள் புடவைத் தலைப்பில் இறுக முடிந்து கொண்டு சடாரி தீர்த்தமாடிய பின் கல்யாணி புஷ்கரணியில் நீராடுகின்றனர். பின்பு கல்யாணி புஷ்கரணிக்கு மஞ்சள், குங்குமமிட்டு, கற்கண்டு, தேங்காய், வாழைப்பழம் ஆகிய வற்றை நைவேத்யம் செய்து, அங்குள்ள இரண்டு சுமங்கலிகளுக்கு வெற்றிலை, பாக்கு, பழத்துடன் தருகிறார்கள். விரதமிருக்கும் பெண்கள் - அதாவது, பிள்ளை வரம் வேண்டும் என்று வேண்டிக் கொண்டு விரதமிருப்பவர்கள் ஒவ்வொரு தீர்த்தத்திலும் தங்கள் மடியில் கட்டியுள்ளவற்றுடன் நீராடியபின் மஞ்சள், குங்குமமிட்டு கற்கண்டு நைவேத்யம் செய்து இரு சுமங்கலிகளுக்குக் கொடுக்க வேண்டும்.


இப்படி அஷ்ட தீர்த்தங்களில் சடாரி நீராட்டம் முடிந்தபின், தொட்டில் மடுவிற்கு சடாரியை எழுந்தருளச் செய்து திரு ஆராதனம் செய்தபின், பெருமாள் பிரசாதமாக கதம்பமும் தயிர்சாதமும் பக்தர்களுக்குத் தருவார்கள். விரதப் பெண்கள் மட்டும் இதனைக் கண்டிப்பாக சாப்பிடக் கூடாது. பிரசாதம் வழங்கியபின் சடாரியுடன் அனைவரும் இரண்டரை மணி நேரத்தில் திருநாராயணமலையை வலம் வருவார்கள். பின் சடாரியை கோவிலுக்கு எழுந்தருளப் பண்ணுவார்கள். விரதப் பெண்கள் நேரே மலைமீதுள்ள யோக நரசிம்மர் சந்நிதிக்குச் சென்று தன் மடியில் உள்ளவற்றைத் தட்டில் வைத்து அர்ச்சகர் மூலம் மூலவரிடம் சேர்ப்பித்து, பின் எம்பெருமாளைச் சேவித்து விட்டு பிரதட்சிணம் செய்துவிட்டு வரவேண்டும். அப்போது சந்நிதியில் இவர்களுக்கு வெண் பொங்கல், நான்கு வாழைப்பழங்கள் தருவார்கள்.

வைரமுடி சேவை பின்னழகு

இதனை விரதப் பெண்கள் வீணாக்காமல், கீழே போடாமல், யாருக்கும் தராமல் எல்லாவற்றையும் அவர்களே சாப்பிட வேண்டும். பின் விரதம் முடித்து வீடு திரும்ப வேண்டும். வீட்டிற்குச் சென்று அன்று வேறு எதுவும் சாப்பிடக் கூடாது. இப்படி முறைப்படி விரதம் மேற்கொள்ளும் பெண்கள் அனைவரும் தகுந்த பலன் பெற்றுள்ளனர். நம்பிக்கையை மனதில் இருத்தி விரதத்தை வெற்றிகரமாக முடிப்பவர்களுக்கு எம்பெருமாள் கட்டாயம் பலன் தருவார் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை!

இவ்வளவு சிறப்புகள் உள்ள வைரமுடி கருடசேவையைக் காண இப்போதே முடிவு செய்துவிட்டீர்களா? தவறாமல் அடுத்த தடவை சென்று சேவியுங்கள். புகைப்பட உதவிக்கு நன்றி திரு. தனுஷ்கோடி அவர்களே.

Wednesday, June 16, 2010

கள்வனை திருத்திய கருட சேவை

வேடுபறி உற்சவம்


பன்னிரு ஆழ்வார்களுள் கடைகுட்டி திருமங்கையாழ்வார், அதிகமான திவ்ய தேசங்களில் உள்ள அர்ச்சா மூர்த்திகளை மங்களாசாசனம் செய்த பெருமை இவருக்கு உண்டு, அதல்லாமல் மற்ற ஆழ்வார்களைப் போல் இல்லாமல் இவருக்கு உள்ள ஒரு தனி சிறப்பு பெருமாளிடமே திருமந்திர உபதேசம் பெற்றதுதான், இவ்வைபவம் ஆண்டு தோறும் பங்குனி உத்திரத்தின் போது வேடுபறி உற்சவம் என சிறப்பாக திருவாலி திருநகரி திவ்ய தேசத்தில் சிறப்பாக நடைபெறுகின்றது. இந்த அற்புத வைபவத்தின் சில காட்சிகள் இப்பதிவில் கண்டு களியுங்கள். முழுக்கதையையும் படிக்க இங்கே செல்லுங்கள் வேடுபறி உற்சவம்



திருவாலி-திருநகரி இரண்டும் தனித் தனி ஆலயங்கள் என்றாலும் இரண்டும் இனைந்து ஒரு திவ்ய தேசமாக கருதப்படுகின்றது. ஆலிங்கனபுரம் என்று அழைக்கப்படும் திருவாலியில் பெருமாள் லக்ஷ்மி நரசிம்மராக சேவை சாதிக்கின்றார். இத்தலம் பஞ்ச நரசிம்ம ஷேத்திரங்களில் ஒன்று. இத்தலத்தில் வலத்தொடையில் பெருமாளை வணங்கிய கோலத்தில் பெரிய பிராட்டியார் சேவை சாதிக்கும் அற்புத தரிசனத்தை சுதை வடிவில் காணுகின்றீர்கள் இங்கே.

திருநகரியில் இருந்து கல்யாண ரங்கநாதரும் அம்ருதவல்லித்தாயாரும் கள்வனாக இருக்கும் திருமங்கை மன்னனை திருத்திப் பணிகொள்ள திருவாலிக்கு திருமணக் கோலத்தில் எழுந்தருளி அருள் பாலிக்கும் அழகு. வேடுபறி உற்சவத்தின் ஒரு முக்கிய நிகழ்ச்சி திவ்ய தம்பதியரின் திருக்கல்யாணம் தான்.

திருக்கல்யாண கோலத்தில் திவ்ய தம்பதிகள்

பெருமாளின் பின்னழகு

திருவாலியில் சிறப்பாக நாம் எல்லோரும் உய்ய திருக்கல்யாணம் நடைபெறுகின்றது. புது திருமாங்கல்யத்துடன் அமிர்தவல்லித் தாயார் சேவை சாதிக்கும் அழகு.

பங்குனி உற்சவ திருவிழா 10 நாள் திருவிழாவாக நடைபெறுகின்றது. இத்திருவிழாவின் 9ம்நாள் இரவு வேடுபறி உற்சவம். பகலில் திருவாலியில் திருக்கல்யாணம் நடைபெறுகின்றது. இரவு வேடுபறி உற்சவம். மறுநாள் காலையில் பங்குனி உத்திரத்தன்று பெருமாளும் ஆழ்வாரும் தனித்தனித் தேரில் சேவை சாதித்தருளுகின்றனர் பின் தீர்த்தவாரி கண்டருளுகின்றனர் .

பல்லக்கில் புதுமணக்கோலத்தில் திவ்ய தம்பதிகள்

திருக்கல்யாணம் முடிந்து பல்லக்கில் உடல் மறைத்து முகமண்டலம் மட்டும் காட்டி கள்வனிடமிருந்து தங்களைக் காப்பாற்றிக்கொள்ள ( கள்வனாக உள்ள நீலனைத் திருத்திப் பணி கொள்ள அல்லவா?) பெருமாளும் தாயாரும் தங்கள் திருப்பாதம் பூமியில் பட நடந்து வந்தனர், இன்று அவர்கள் பல்லக்கில் வரும் காட்சி. பெருமாள் வேதராஜ புரம் என்னும் கிராமத்தில் வந்து தங்குகின்றார். இங்கே திருநகரியில் கருடசேவைக்காக தங்க கருடன் தயாராக உள்ளான் அதே சமயம் திருமங்கை மன்னர் தமது ஆடல்மா என்னும் பஞ்ச கல்யாணி குதிரையில் காட்டு வழியில் வருபவர்களை கொள்ளையடிக்க தயாராக உள்ளார்.

திருநகரி தங்க கருடன்


நள்ளிரவில் திருமங்கை மன்னனின் தோழர்களான நீர் மேல் நடப்பான், நிழலிலொதுங்குவான், தாளூதுவான், தோலாவழக்கன் ஆகிய நால்வரும் புதுமணத்தம்பதிகள் நிறைய நகைகளுடன் வந்து கொண்டிருப்பதை தயாராக காத்திருக்கும் நீலனிடம் வந்து இவ்வாறு கூறுகின்றார்.

ஜெயவிஜயி பவா, ஆலி நாடா பராக், மங்கை மன்னா பராக், குமுத வல்லி மனதிற்கு பிரியமானவரே, மங்கை மன்னரே காட்டு வழியில் புதுமணத்தம்பதிகள் நிறைய வைணவர்களுடன் வந்து தங்கியுள்ளனர் . அவர்கள் மேனி முழுவதும் தங்க நகைகளாக மின்னுகின்றது, தாங்கள் வந்து கொள்ளையடித்தால் ததியாரதனைக்கு ஆகும் என்று தூது கூறுகின்றனர்.

ஆடல்மாவின் முன்னழகு

உடனே ஆயிரக்கணக்கான தீவட்டிகளின் ஒளியில் ஆடல்மாவில் கொள்ளைக்கு திருமங்கை மன்னர் புறப்படுகின்றார். திருநகரி கிராம இளைஞர்கள் அனைவரும் தீவட்டி தாங்கி, ஆ! ஆ! ஊ! ஊ! என்று சத்தம் எழுப்பிக் கொண்டு முன் செல்ல பின்னர் கையில் ஈட்டி தாங்கி பின் செல்கின்றார் மங்கை மன்னர்.

வித விதமான தீவட்டிகள் முன் செல்கின்றன.

திருமங்கை மன்னரின் வடிவழகு

அணைத்த வேலும், தொழுத கையும், அழுந்திய திருநாமமும்,
ஓம் என்ற வாயும், உயர்ந்த மூக்கும், குளிர்ந்த முகமும்,
பரந்த விழியும், பதித்த நெற்றியும், நெறித்த புருவமும்
சுருண்ட குழலும், வடிந்த காதும் அசைந்த காது காப்பும்,
தாழ்ந்த செவியும், சரிந்த கழுத்தும், அகன்ற மார்பும்,
திரண்ட தோளும் நெளித்த முதுகும், குவிந்த இடையும்,
அல்லிக்கயிறும், அழுந்திய சீராவும், தூக்கிய கருங்கோவையும்
தொங்கலும் தனி மாலையும், தளிருமிளிருமாய் நிற்கிற நிலையும்
சாற்றிய திருத்தண்டையும், சதிரான வீரக்கழலும்,
தஞ்சமான தாளினையும், குந்தியிட்ட கனைக்காலும்,
குளிர வைத்த திருவடி மலரும், வாய்த்த மணங்கொல்லையும்,
வயலாளி மணவாளனும், வாடினேன் வாடி (என்று)
வாழ்வித்தருளிய , நீலிக்கலிகன்றி, மருவலர்தம் உடல் துணிய
வாள் வீசும் பரகாலன், மங்கை மன்னனான வடிவே.

ஆடல் மாவில் ஆலி நாடரின் அற்புத சேவை

ஆடுகின்றதா ஆடல்மா??

ஆழ்வாரை ஏழப்பண்ணும் அன்பர்கள் அப்படியே குதிரையில் டக் டக் என்று ஆழ்வார் செல்வது போலவே பரிகதியில் ஏழப்பண்ணும் அழகை சொல்வதா, ஆயிரக்கணக்கான தீவட்டிகள் சாலையின் இருபுறமும் அணிவகுத்து செல்லும் அழகைச் சொல்வதா? பட்டர்கள் இருவர் ஆழ்வாருக்கு கவரி வீசும் அழகைச் சொல்வதா? ஆழ்வார் ஆடி வரும் அழகை வார்த்தைகளில் வர்ணிப்பது சாத்தியமல்ல நேரில் சென்று தரிசித்தால் தான் அந்த அற்புத உணர்வைப்பெற முடியும். அப்படியே குதிரை ஒடும் போது எப்படி முன்னும் பின்னும் அதில் அமர்ந்திருப்பவர் ஆடுவாரோ அது போல முழு நிலவு மேலே தனது பதினாறு கலைகளுடன் ஒளிர ஆயிரம் தீவட்டிகளின் ஒளியில் முகம் சிவந்து ஒய்யாரமாக வருகின்றார் மங்கை மன்னர் .

ஆடல்மாவின் பின்னழகு


ஆழ்வாரின் பின்னழகு

அந்த கொண்டையும், சடையும் அதில் மலர்களும். மேலங்கியின் அழகும், அற்புத நவரத்ன நகைகளும் இடையில் வாளும், கட்டாரியும், முதுகில் கேடயமும். கையில் வில்லும், திருப்பாதங்களில் இராஜ பாதுகைகளும் விளங்க, ஒரு கரத்தில் பஞ்ச கல்யாணிக் குதிரையை செலுத்தும் பாங்கும், மறு கையில் ஈட்டியும் விளங்க, நீல நிற ரத்ன அங்கியில் நீலன் வரும் அழகை எப்படி வர்ணிப்பது. தாங்களே பார்த்து அனுபவியுங்கள் என்று எல்லா கோணங்களிலும் படும் எடுத்து தந்துள்ளார் அன்பர், அடியேன் நண்பர் திரு தனுஷ்கோடி அவர்கள்.

அற்புதமாக ஆடல்மாவில் ஆலிநாடன் வந்து கொண்டிருக்கும் போது அங்கே வேதராஜபுரம் என்னும் இடத்தில் ஒரு பெரிய மைதானத்தில் உள்ள ஒரு மண்டபத்தில் பெருமாளும் தாயாரும் கருடனும் காத்திருக்கின்றனர். கூடவே திருமாலடியார்களின் கூட்டமும் வழி மேல் விழி வைத்துக் காத்துக்கொண்டிருக்கின்றனர் எப்போது ஆழ்வார் வருவார் என்று.


நகைகளை மறைக்க முகம் மட்டும் காட்டும் திவ்ய தம்பதிகள்


திவ்ய தம்பதிகள் தங்கியிருக்கும் தற்போதைய வேதராஜபுரத்தை ( அன்று திருமணங்கொல்லை) அடைய அடைய ஆலி நாடனின் வேகம் அதிகமாகின்றது, மைதானத்தில் நுழையும் போது அப்படியே ஒரு புயல் வேகத்தில் வருகின்றார் மங்கை மன்னன். வேக வேகமாக பெருமாளை சுற்றத் தொடங்குகிறார். உடனே அருமையான வாணவேடிக்கைகள் ஆரம்பமாகின்றது. மிக வேகமாக இரண்டாவது சுற்று வரும் போது பெருமாள் மண்டபத்தில் இருந்து இறங்கி வந்து மந்திரோபதசம் தர இறங்கி வருகின்றார். மூன்று சுற்றுகள் முடித்ததும் நடந்தது என்ன என்று பார்ப்பதற்கு முன் அன்று என்ன நடந்தது என்று பார்ப்போமா?


புது மணத்தம்பதிகளாக திருமேனி முழுவதும் நகைகளுடன் மற்ற சுற்றத்தார்களுடன் திருப்பாதம் மன்ணில் பட பெருமாளும் பெரிய பிராட்டியாரும் நடந்து வரும்போது ஆடல்மாவில் வேகமாக வந்த ஆலி நாடன் வாள் கொண்டு அவர்களை மிரட்டுகின்றார். எல்லா நகைகளையும் கழற்றிக்கொடுக்குமாறு, மங்கை மன்னரின் மிடுக்கையும் மிரட்டும் தொனியையும் கண்டு பயந்தவர் போல் பெருமாள் எல்லா நகைகளையும் கழற்றிக் கொடுத்து தன் மனைவியையும் அவ்வாறே செய்யச் சொல்கின்றார். பெருமாள் கால் விரலில் உள்ள மெட்டி மட்டும் அப்படியே இருக்கின்றது, அதையும் விட மனமில்லாமல் கழற்றிக் கொடுக்க ஆனையிடுகின்றார். மணமகனோ, நீயே கழற்றிக் கொள் என்று கூற கையால் கழற்ற முடியாத்தால் வாயால் கடித்து கழற்றுகிறார். அதைக் கண்டு பெருமாள் அவரை கலியன் என்று அழைக்கிறார் ஆலி நாடருக்கு பெருமாளின் திருவடி சேவையும் கிட்டுகின்றது. பின் எல்லா நகைகளை மூட்டையாகக் கட்டி தூக்க முயன்ற போது அவரால் தூக்க முடியவில்லை என்பதால் . மணமகனை பார்த்து என்ன மந்திரம் போட்டாய்? என்று வெருட்ட மந்திரம் உபதேசம் செய்யத்தானே வந்திருக்கின்றேன் என்று அவர் காதில் "ஓம் நமோ நாராயணா" என்னும் அஷ்டாத்திர மந்திரத்தை உபதேசிக்கின்றார் பெருமாள். மந்திரோபதசம் பெற்ற கள்வன் ஆழ்வாராக மாறுகின்றார். அன்றிலிருந்து பெருமாளுக்கு தன் சேவையை தொடங்குகின்றார். திவ்ய தேசங்கள் தோறும் சென்று பெருமாளை மங்களாசாசம் செய்யத் தொடங்குகின்றார். ஆழ்வாருக்கு அர்ச்சாவதாரத்திலே மிகவும் ஈடுபாடு.

மங்கை மன்னன் இரண்டாம் சுற்று வரும் போது பெருமாள் மண்டபத்தில் இருந்து இறங்கி மைதானத்தின் நடுவே வந்து நிற்கின்றார். வேக வேகமாக சுற்றி வந்த ஆலி நாடன் வாள் கொண்டு வெருட்டுவது போல முன்னும் பின்னும் ஆவேசமாக செல்கின்றார். மூன்றாவது இவ்வாறு செல்லும் போது பல்லக்கிடம் அப்படியே சிறிது குனிந்து மந்திரோபதேசம் பெறுகின்றார் ஆழ்வார். பின்னர் ஆழ்வார் ஒரு மண்டபத்திற்கு சென்று பெருமாள் கருடனில் வருவதற்காக காத்திருக்கின்றார்.

கள்வனைத் திருத்திய கருட சேவை
இந்த வேடுபறி உற்சவ கருட சேவையின் ஒரு தனி சிறப்பு தாயாரும் பெருமாளும் ஒன்றாக சேர்ந்து திருகல்யாணக் கோலத்தில் சேவை சாதிப்பதுதான். முதல் தடவையாக அடியேன் தாயார் மற்றும் பெருமாளின் கருட சேவையை கண்டு மகிழ்ந்தேன் இதைக் காணும் தாங்களும் பேறு பெற்றவர்கள் என்பதில் எந்த வித ஐயமும் இல்லை.
திவ்ய தம்பதிகளின் திவ்ய கருட சேவை
பெருமாளை கருட வாகனத்தில் ஏழப்பண்ணி அலங்காரம் செய்யும் நேரத்தில் ஆழ்வார் ஒரு தனி மண்டபத்தில் சென்று தங்குகின்றார். மைதானத்தில் இருந்த திருமாலடியார்கள் அங்கு சென்று ஆழ்வாரை சுற்றி வந்து சேவித்து ஆழ்வாரின் சௌந்தர்யத்தில் திளைக்கின்றனர். தாங்கள் கீழே காணும் ஆழ்வாரின் திருக்காட்சிகள் மண்டபத்தில் எடுக்கப்பட்டவை. ஆழ்வாரின் திருமுக மண்டலத்தில் சாந்த ஸ்வரூபம் இப்போது தெரிகின்றதா?

பெருமாள் கருடவாகனத்தில் தாயாருடன் சேவை சாதித்து வரும் போது ஆழ்வார் அன்ன நடை போட்டு அவர்களை சுற்றி வந்து சேவித்து நிற்கின்றார். இப்போது அவர் திருமுக மண்டலம் சாந்தமாக விளங்குவதைக் கண்கூடாகக் காணலாம். முன்பு வேக வேகமாக பாய்ந்து ஆடல்மாவில் வந்த ஆழ்வார் இப்போது மெதுவாக வருகின்றார். தாம் இந்த பூவுலகில் வந்த நோக்கத்தை தானே தந்து திவ்ய தம்பதிகள் உணர்த்திய பிறகு மெய்ப்பொருளுணர்ந்து

வாடினேன் வாடி வருந்தினேன் மனத்தால்
பெருந்துயரிடும்பையில் பிறந்து
கூடினேன் கூடி இளையவர் தம்மோடு
அவர்தரும் கலவியே கருதி
ஓடினேன் ஓடி உய்வதோர் பொருளால்
உணர்வெனும் பெரும்பதம் தெரிந்து
நாடினேன் நாடிக் கண்டு கொண்டேன்
நாராயணாவென்னும் நாமம்
என்று பாசுரங்கள் பாடத் தொடங்கி வடமொழி வேதங்கள் நான்குக்கொப்பான நம்மாழ்வாரின் அருளிச் செயல்களுக்கு ஆறு அங்கங்கள் போன்று பெரிய திருமொழி, திருகுறுந்தாண்டகம், திடுநெடுந்தாண்டகம், திருவெழுகூற்றிருக்கை, சிறிய திருமடல், பெரிய திருமடல் என்னும் ஆறு திவ்விய நூல்களை அருளினார்.

ஆகவே வைணவர்கள் அனைவரும் ஆழ்வாரின் முதல் பாசுரத்திலிருந்து தொடங்கி சேவித்துக்கொண்டே திருநகரி வந்தடைகின்றனர். இவ்வாறு வேடுபறி உற்சவம் ஆண்டு தோறும் சிறப்பாக பத்து நாள் திருவிழாவாக சிறப்பாக திருவாலி- திருநகரியில் நடைபெறுகின்றது. தங்களுக்கும் ஒரு சந்தர்ப்பம் கிடைத்தால் சென்று வேடுபறி சேவித்து விட்டு வாருங்கள் நிச்சயம் அந்த தெய்வீக உணர்வை தங்கள் வாழ்நாளில் மறக்க மாட்டீர்கள்.

திருத்தேரில் பரிமள ரங்கநாதர்.
வேடு பறி உற்சவத்திற்காக எங்களை அழைத்து சென்றவர் சென்னை நங்கநல்லூரை சேர்ந்த திருமலை சுவாமி இராமானுஜ தாசர் அவர்கள். வேடுபறி அன்று அதிகாலை சென்னையிலிருந்து கிளம்பி புவனகிரியில் இராகவேந்தரின் அவதார ஸ்தலத்தை சேவித்து பின் தில்லை சித்ரக்கூடத்தில் தில்லை கோவிந்தர், பார்த்த சாரதி, சித்ரகூடத்துள்ளனை திவ்யமாக சேவித்து, சீர்காழியில் தடாளனை ( சேவிக்க முடியவில்லை) திவ்ய தேசம் சென்று பின் திருநகரி அடைந்து இராமானுஜ கூடத்தில் அமுதுண்டு திருவாலியில் லக்ஷ்மி நரசிம்மரை சேவித்து. வயலாளி மணவாளன் அம்ருதவல்லித் தாயார் திருக்கல்யாணம் சேவித்து அங்கிருந்து திருத்தேவனார்தொகைசென்று மாதவப்பெருமாளை சேவித்து, அடுத்து வெள்ளக்குளம் சென்று அண்ணன் பெருமாளை சேவித்து பின்னர் திருமங்கையாழ்வார் நாள் தோறும் ஆயிரம் வைணவர்களுக்கு ததியாராதனம் செய்த மங்கைமடம் வந்து உபய நாச்சியார்களுடன் சேவை சாதிக்கும் வீரநரசிம்மரை சேவித்து அங்கே வாளும், கேடயமும் கொண்டு வீராவேசமாக சேவை சாதிக்கும் ஆழ்வாரையும் சேவித்து. பின் அங்கிருந்து ஆழ்வாரின் அவதார ஸ்தலமான திருக்குறையலூர் சென்று அங்கு ஆஹ்வான முத்திரையுடன் நம்மை அழைத்து நம் குறைகளை களையும் உக்ர நரசிம்மரையும் சேவித்து பின் திரு நகரி வந்து அங்கு சேவை சாதிக்கின்ற ஆழ்வார் ஆராதித்த ஹிரண்ய நரசிம்மரையும், யோக நரசிம்மரையும் சேவித்து பஞ்ச நரசிம்ம தரிசனம் ஒரே நாளில் கண்டோம். நள்ளிரவில் வேடுபறி சேவை சேவித்து, பின் மாயவரம் வந்து தங்கினோம். மறுநாள் காலை திருஇந்தளூரில் பரிமள ரங்கநாதரை திருத்தேரில் சேவித்து, அங்கிருந்து கிளம்பி தேரழுந்தூர் வந்து ஆமருவியப்பன் சௌந்தரியம் கண்டு சேவித்து அங்கிருந்து நாச்சியார் கோவில் வந்து திருத்தேரோட்டம் சேவித்து அங்கிருந்து பஞ்ச சார ஷேத்திரமான திருச்சேறை சென்று சாரநாதரை சேவித்து திரும்பிவந்து ஒப்பிலியப்பனின் திவ்ய தரிசனமும் பெற்று பின் திருவரங்கம் கிளம்பினோம்.
உபய நாச்சியார்களுடன் பரிமளரங்கநாதர்

ஒப்பிலியப்பன் கோவில் தங்க கருடன்

நாச்சியார் கோவில் திருத்தேர்

திருவரங்கத்தில் பங்குனி உத்திரத்தன்று ஒரு முக்கியமான உற்சவம் நடைபெறுகின்றது. அது வருடத்தில் ஒரு நாள் மட்டுமே கிடைக்கும் பெருமாள் தாயார் சேர்த்தி சேவை. திருவரங்கத்தில் நம்பெருமாள் அரங்கநாயகித்தாயார் சேர்த்தியையும் திவ்யமாக மிக அருகில் சென்று சேவித்து அன்றிரவே சென்னை திரும்பினோம். கீழே சில சேர்த்தி படங்கள்

 
இவ்வாறு பஞ்ச நரசிம்மர் தரிசனம், வேடுபறி உற்சவம் திருவரங்கம் சேர்த்தியுடன் ஒரு சிறிய சோழநாட்டு திருப்பதிகளின் திவ்ய யாத்திரையும் அமைத்துக் கொடுத்த திருமலை நம்பி சுவாமிகளுக்கும், அதை படங்களில் அழகாக பிடித்துக்கொடுத்த தனுஷ்கோடி அவர்களுக்கும், சேர்த்தி படங்கள் கொடுத்து உதவிய திரு. S.A. நரசிம்மன் அவர்களுக்கும் இதையெல்லாம் வந்து சேவித்த தங்களுக்கும் மிக்க நன்றிகள். வரும் பதிவில் இன்னொரு கருட சேவையுடன் சந்திப்போம்.