Saturday, October 31, 2015

கருட யாத்திரை - 13

திருநாங்கூர் ஏகாதச கருட சேவை


குமுதவல்லி நாச்சியார் திருமங்கையாழ்வார்

இந்த சிறப்பு கருட யாத்திரையின் நிறைவு நாளன்று அதி காலை மயிலாடுதுறையில்  திருஇந்தளூரில் பரிமளரங்கநாதரை சேவித்தோம். பின்னர் திருநாங்கூர் திவ்ய தேசங்கள் அனைத்தையும் திருவாலி-திருநகரி திவ்ய தேசத்தையும் சேவித்தோம். பின்னர் சென்னை திரும்பினோம். திருமணிமாடக்கோவிலில் அமர்ந்த கோல  கருடனையும் சேவித்தோம். திருநாங்கூர் பதினோறு கருடசேவையைப் பற்றி இப்பதிவில் காணலாம். 

பாற்கடலிலே திருமகளும், நிலமகளும், நீளா தேவியும், நித்திய சூரிகளும் புடை சூழ பரவாசு தேவனாக மாயத் துயில் கொண்டுள்ள அந்த மாமாயன், வைகுண்டத்திலே வியூக நிலையிலே அமர்ந்த கோலத்தில் எழுந்தருளி சேவை சாதிக்கின்றார். அவரே தீயவர்களை அழித்து நல்லவர்களைக் காக்க அவதாரங்கள் எடுத்து விபவ ரூபமாக அருள் வழங்கினார், அந்த பரம் பொருளே அந்தர்யாமியாக எல்லா ஜீவ ராசிகளிலும் விளங்குகின்றார். நாம் எல்லோரும் உய்யும் பொருட்டு , ஒரு பெயரும், ஒரு உருவமும் இல்லாத அந்த பரம் பொருள் அர்ச்சாவதாரமாக பூவுலகிலே பல் வேறு தலங்களிலே எழுந்தருளி சேவை சாதிக்கின்றார். இந்த ஐந்து நிலைகளுக்கும் உரியவன் அவன் ஒருவனே.



அத்தகைய திருக்கோவில்களில், மயர்வற மதி நலம் பெற்ற ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப் பெற்றவை திவ்ய தேசங்கள் எனப்படுகின்றன. இந்த திவ்ய தேசங்களுள் வான் பொய்ப்பினும் தான் பொய்யா மலைத்தலைய கடற் காவிரி புனல் பரந்து பொன் கொழிக்கும் தஞ்சை தரணியிலே 40 திவ்ய தேசங்கள் உள்ளன, அவற்றுள் சீர்காழியிலிருந்து 8கி.மீ தூரத்தில் அமைந்துள்ள திருநாங்கூர்  திருத்தலத்தை சுற்றி பதினோரு திவ்ய தேசங்கள் உள்ளன. இவை திருநாங்கூர் திவ்ய தேசங்கள் எனப்படுகின்றன. சோழநாட்டுத் திருப்பதிகளில் நடு நாயகமாக இந்த திருநாங்கூர் திவ்ய தேசங்கள் விளங்குகின்றன. இந்த திவ்ய தேசங்களின் தனி சிறப்பு என்னவென்றால் வைணவ சம்பிரதாயத்தில் முக்கிய கருதப்படும் மூன்று சுலோகங்களும் எம்பெருமானாலேயே இத்திவ்ய தேசங்களில் உபதேசிக்கப்பட்டன. முதலாவதான "ஒம் நமோ நாராயணா"  என்னும் நலம் தரும் அஷ்டாத்திர மந்திரத்தை ஆழ்வார்களில் கடைக்குட்டியான திருமங்கை ஆழ்வாருக்கு திருமணி மாடக் கோவில் நாராயணப் பெருமாளால் உபதேசிக்கப்பட்டது.

இரண்டாவதான "ஸ்ரீமத் நாராயண சரணௌ சரணம் பிரபத்யே ஸ்ரீமதே நாராயணாய நமஹ" என்ற த்வைய மந்திரத்தை ஸ்வேத ராஜனுக்கு திருவெள்ளக்குளம் அண்ணன் பெருமாள் உபதேசித்தார்.

கீதையிலே  "ஸர்வ தர்மாந் பரித்யஜ்ய மாம் ஏகம் சரணம் வ்ரஜ
 அஹம் த்வா ஸர்வ பாபேப்யோ மோக்ஷ யிஷ்யாமி  மாசுச: "
என்னையே தஞ்சம் சரணமடைந்து விடு நான் உன்னை எல்லா பாவங்களிலிருந்து மோட்சத்தை அளிப்பேன் என்று கீதோபதேசத்தின் போது கூறிய சரம சுலோகத்தை பார்த்தன் பள்ளியிலே கண்ணன் அர்ஜுனனுக்கு மீண்டும் உபதேசித்தார்.

வைகுந்தப்பெருமாள்

இந்த திவ்ய தேசங்களின் மற்றொரு சிறப்பு, பிரளய காலத்திலும் அழியாமல் இருந்தது. பாலச வனத்தில் வடக்கே மண்ணியாற்றையும், தெற்கே திருவரங்கக் காவிரியாற்றையும் கிழக்கே பூம்புகார் கடலையும், மேற்கே தரங்கம்பாடியையும் எல்லையாகக் கொண்ட இந்த நாகபுரி ஷேத்ரம் என்னும் திருநாங்கூரைச் சுற்றிய இந்தப் பகுதி மட்டும் பிரளய காலத்தும் அழியாமல் இருந்தது.

இப்பகுதியில் வைணவ மற்றும் சைவ சமயங்களின் ஏகாதச திருக்கோவில்கள் உள்ளன. இவ்வாறு சைவம் மற்றும் வைணவத்தின் பதினொரு கோவில்கள் உள்ளதற்கான ஐதீகம் என்னவென்றால், மஹா பிரளயத்திற்கு பிறகு தட்சன் ஒரு யாகம் நடத்தினான் அதில் கலந்து கொள்ள சிவபெருமானுக்கு ஆணவத்தால் அவன் அழைப்பிதழ் அனுப்பவில்லை. தட்சன் மகளான தாட்சாயணியும் அங்கு சென்று அவமானப்பட்டு, பின் சிவலோகம் செல்ல விருப்பமில்லாமல் பலசவனம் வந்து, மதங்க மகரிஷியின் மகளாக பூங்கோதை என்ற திருநாமத்துடன் வளர்ந்து வரும் காலத்தில், சிவபெருமானும் மண்ணியாற்றங்கரையில் வந்து க்ஷிணாமூர்த்தியாக யோகத்திலாழ்ந்தார். மஹா விஷ்ணுவும் வைகுந்தத்தை விடுத்து பூலோகம் வந்தார். சிவனும், விஷ்ணுவும் இல்லாததால் அசுரர்களிடமிருந்து தங்களை காப்பாற்றுவாரில்லாமல் கவலையடைந்த தேவர்கள் மதங்க முனிவரிடம் வந்து வேண்ட, மதங்க முனிவரின் பிரார்த்தனைக்கிரங்கி பத்ரிகாசரமத்திலிருந்த பெருமாள், நான்கு வேதங்களே நான்கு குதிரைகளாகவும், சந்திர, சூரியர்களையே தேர்க்காலாகவும் கொண்ட திவ்ய திருத்தேரிலே நாங்கூரில் உள்ள இந்திர புஷ்கரணியிலே சேவை சாதித்தார். ஞான திருஷ்டியால் பூங்கோதைதான் பார்வதி என்பதை அறிந்த மஹா விஷ்ணு, யோகத்திலிருந்த சிவபெருமானுக்கு அதை உணர்த்தி அவர்களுக்கு திருமணம் நடத்தி வைத்தார். பின்னர் சிவபெருமான் பதினோரு ருத்ர வடிவம் எடுத்தும், மஹா விஷ்ணுவும் அதே போல் பதினோரு அர்ச்சாவதாரங்கள் எடுத்து இருவரும் இனைந்து அசுரர்களை அழித்து தேவர்களைக் காத்தனர்.  பின் அதே ரூபத்தில் இருவரும் பதினோரு திருக்கோவில்களில் அமர்ந்தருளினர் என்பது ஒரு ஐதீகம். எனவே தான் திருநாங்கூரைச் சுற்றி பதினோரு சைவ மற்றும் வைணவ திருக்கோவில்கள் அமைந்துள்ளன.


இவ்வாறு பத்ரிநாராயணர் சிவபெருமானின் இங்கு  வந்த  போது கருடன் மேல் வராமல் தேரில் வந்ததால், கருடன் சுவாமியை சுமக்க வாய்ப்புத் தரும்படி வேண்டினார். இதனை உணர்த்தும் விதமாக சுவாமியின் திருப்பாதத்திற்கு நேராக இருக்க வேண்டிய கருடன்  இங்கு கொடிமரத்திற்கு அருகில் அமர்ந்த கோலத்தில் சுவாமியின் பாதத்திற்கு கீழே உள்ளார். கருடனின் வேண்டுகோளுக்கு இரங்கி பெருமாள் 11 மூர்த்திகளாக இருந்து  தை அமாவாசைக்கு மறுநாள் கருடசேவை சாதிப்பதாக ஐதீகம்

அன்ன வாகனத்தில் ஆழ்வார் 

இந்த நாங்கூரைச் சுற்றி ஏகாதச சைவ மற்றும் வைணவ திருத்தலங்கள் இருப்பதற்கான மற்றொரு ஐதீகமானது, ஒரு சமயம் ஆணவம் கொண்ட பிரம்மாவின் ஒரு தலையை சிவன் கொய்ததால் அவரை பிரமஹத்தி தோஷம் பற்றியது. அந்த தோஷத்தைப் போக்க சிவ பெருமான் ஏகாதச ருத்ர அவதாரங்கள் எடுத்து ஏகாதச ருத்ர அசுவமேத யாகம் செய்தார், யாகத்தின் இறுதியில் பெருமாள் ஸ்ரீ தேவி, பூதேவியுடன் சேவை சாதித்து சிவபெருமானுக்கு அபய பிரதானம் அளித்து சாபம் நீங்க அருள் செய்தார். இந்த திவ்ய தேசங்களில் வந்து வணங்குவோர்களுக்கும் அதே போல கருணை புரிய வேண்டும் என்ற சிவ பெருமானின் வேண்டுகோளுக்கிணங்கி ஏகாதச திவ்ய தேசங்களில் அர்ச்சாவதார மூர்த்தியாக கோவில் கொண்டருளினார் பெருமாள். சிவ பெருமானும் எகாதச தலங்களில் கோவில் கொண்டருளினார்.

அண்ணன் பெருமாள்


இந்த பதினோறு திவ்ய தேசங்களையும் திருமங்கையாழ்வார் மங்களாசாசனம் செய்துள்ளார் என்பது தனி சிறப்பு. தமது பெரிய திருமொழியில் திருநாங்கூர் திருப்பதிகள் என்றே பரகாலர் இந்த திவ்ய தேசங்களை மங்களாசாசனம் செய்துள்ளார். 

திருநறையூர் (நாச்சியார் கோவில்) பெருமாளால் வைணவராக சமஸ்ராணம் செய்யப் பெற்ற, திருமங்கை மன்னன், பரகாலன், நீலன், ஆலிநாடன், கலிகன்றி, மங்கையர் கோன், மங்கை வேந்தன், கலியன் என்றெல்லாம் அழைக்கப்படும் திருமங்கை ஆழ்வார் இந்த திவ்ய தேசங்களில் திருக்குறையலூரிலேதான் அவதரித்தார். மணக் கோலத்தில் பெரிய பிராட்டியாரோடு வந்த பெருமாளால் திருமணங்கொல்லையில் அஷ்டாக்ஷர  மந்திரோபதேசமும் பெற்றார், இந்த பதினோரு திவ்ய தேசங்களையும் இவர் மட்டுமே மங்களாசாசனமும் செய்துள்ளார். திருமங்கையாழ்வாரோடு பெரிதும் தொடர்புடையவை இத்திவ்ய தேசங்கள். 



இத்தகைய சிறப்புகளைக் கொண்ட திருநாங்கூர் திவ்ய தேசங்களாவன:

1. திருமணி மாடக் கோவில்,  2. திருவைகுந்த விண்ணகரம், 3. திரு அரிமேய விண்ணகரம், 4. திருத்தேவனார் தொகை,  5. திருவண் புருடோத்தமம், 6. திருச்செம்பொன் செய்கோவில், 7. திருத்தெற்றியம்பலம், 8. திருமணிக்கூடம், 9. திருக்காவளம்பாடி, 10. திருவெள்ளக்குளம்(அண்ணன் கோவில்) இத்தலத்திலே தான் திருமங்கை ஆழ்வாரின் தர்ம பத்தினி குமுத வல்லி நாச்சியார் கண்டெடுக்கப்பட்டார், 11. திருப்பார்த்தன் பள்ளி.

இவ்வாறு பொன்னி நதி பாய்ந்து வளம் சிறக்கும் திருநாங்கூர்ப்பதிகளை மங்களாசாசனம் செய்த திருமங்கையாழ்வரும், இந்த திவ்ய தேசப் பெருமாள் அனைனவரும் கலந்து கொள்ளும் மிக சிறப்பு வாய்ந்த ஏகாதச கருட சேவை திருவிழா வெகு சிறப்பாக ஒவ்வொரு வருடமும் தை அமாவாசைக்கு மறு நாள் நடைபெறுகின்றது. "கண்ணனை கடல் கடைந்தமுதங்கொண்ட  அண்ணலை அச்சுதனை அனந்தனை  மாலை பெருமாளை பெரிய திருவடியாம் கருட வாகனத்தில் சேவித்தால் மறு பிறவி கிடையாது என்பது ஐதீகம்", இங்கு பதினோரு பெருமாள்களையும் ஒரே நேரத்தில் கருட வாகனத்தில்  சேவிக்கும் அற்புதமான வாய்ப்பு கிடைக்கின்றது.


இத்திருவிழாவின் முதல் நாள் நிகழ்ச்சியாக தை அமாவாசையன்று திருமங்கையாழ்வாருக்கு "மஞ்சள் குளி திருவிழா"  நடைபெறுகின்றது. திருவரங்கத்தில் திருமங்கையாழ்வார் தங்கியிருந்த போது அரங்கநாதர் முன் திருநெடுந்தாண்டகம் சேவித்தார், அதனால் மிகவும் பிரசன்னமான பெருமாள் ஆழ்வாரை ஏதாவது வரம் வேண்டுமாறு கூற, அவரும் புரட்டாசி மாதம் நடைபெறுகின்ற அத்யயன உற்சவத்தின் போது வேதங்களுடன், நம்மாழ்வாரின் திருவாய்மொழியும் சாற்றுமுறை செய்ய அருள் புரிய வேண்டும் என்று வேண்ட பெருமாளும் அவ்வண்ணமே அருளிச் செய்தார். அன்று முதல் நாலாயிர திவ்விய பிரபந்தமும் அத்யயன உற்சவத்தின் போது சாற்றுமுறை செய்யப்படலாயிற்று. ஆழ்வாரின் இந்த பக்திக்காக, பெருமாள் ஆழ்வாரை சிறப்பிக்க வேண்டி தனக்கு நடை பெறும் மஞ்சள் குளி இனி அவருக்கும் நடைபெற வேண்டும் என்று அருள் பாலித்தார்.

திருமங்கை ஆழ்வாருக்கு ஒவ்வொரு வருடமும் வட காவேரியாம் கொள்ளிடக் கரையில் மஞ்சள் குளி நடைப்பெற்றது, முதல் குளியலை நம்பெருமாளே, தானே தன் கையால் நடத்தி வைத்தார். ஆழ்வாரின் அந்திம காலத்திற்குப் பிறகு அவரது சகோதரியின் கணவர், திருவரங்கத்தை விடுத்து ஆழ்வாரின் அவதாரத் தலமான திருக்குறையலூர் வந்து தங்கினார். ஆழ்வாரின் மூர்த்திக்கு நாங்கூரை ஒட்டி ஓடும் மணிகர்ணிகை ஆற்றங்கரையில் அவர் மஞ்சள் குளியல் உற்சவத்தை 8ம் நூற்றாண்டிலே தொடங்கினார் அன்று முதல் இன்று வரை அது தொடர்கிறது. 


தை அமாவாசையன்று அதிகாலை 3 மணிக்கு திருவாலி திருநகரியிலிருந்து திருமங்கையாழ்வார், தன் தர்ம பத்தினி குமுத வல்லி நாச்சியாருடன் , அவர் ஆராதித்த உபய நாச்சியார்களுடன்  சிந்தனைக்கினியான் பெருமாளும், பல்லக்கில் புறப்பாடு கண்டருளி வயல் வழியில் இறங்கி பயிரை மிதித்துக்கொண்டு முதலில் திருக்குறையலூர் ஸ்ரீ உக்ர நரசிம்மப் பெருமாள் கோவிலை அடைந்து அவரை மங்களாசாசனம் செய்கின்றார். அடுத்து ஸ்ரீ வீர நரசிம்மப் பெருமாள் கோவிலை அடைந்து அவரை மங்களாசாசனம் செய்கின்றார் பரகாலர். திருநாங்கூரில் உள்ள  திருக்காவளாம்பாடி ஸ்ரீ கோபாலனை , "காவளம்பாடி மேய கண்ணனே! களை கண் நீயே" என்று சேவிக்கின்றார்  கலிகன்றி.

உச்சிக் காலத்திற்கு முன் மணிகர்ணிகை ஆற்றை அடைகிறார். பக்தர்கள் அனைவரும் பக்தி பரவசத்துடன் இடுப்பளவு தண்­ணிரில் ஆழ்வாரின் பெரிய திருமொழியில் இருந்து ஆழ்வாரின் ஆச்சாரியரான திருநறையூர் நம்பியையும், திருவரங்கத்து அழகிய மணவாளானையும் மங்களாசாசனம் செய்து ஆழ்வார் பாடிய பாசுரங்களை சேவிக்கின்றனர். இவ்விரு திவ்ய தேசங்களில் இருந்து கொண்டுவரப்பட்ட மாலை மற்றும் பீதாம்பரங்களினால் பரிவட்டம் கட்டபெற்று ஆழ்வாருக்கு மரியாதை செய்யப்படுகின்றது.


பின் மஞ்சள் குளியல் மண்டபத்தில் எழுந்தருளும் ஆழ்வாருக்கு சஹஸ்ர தாரா மஞ்சள் குளி என்னும் திருமஞ்சனம் நடை பெறுகின்றது. சஹஸ்ர தாரை தட்டில் ஆழ்வார் ஆராதித்த சிந்தனைக்கு இனியான் என்னும் பெருமாளின் திருமூர்த்ததிற்க்கு செய்யப்படும் மஞ்சள் நீர் முதலில் பெருமாளுக்கு திருமஞ்சனம் ஆகி பின் ஆழ்வாருக்கும் திருமஞ்சனம் ஆகின்றது. பின் திருப்பாவை சாற்று மறை நடைபெறுகின்றது.

மாலையில் அலங்கரிக்கப்பட்ட அருள்மாரி  திருமணிமாடக்கோவில் ஸ்ரீ நாராயணப் பெருமாளை "மணிமாடக் கோயில் வணங்கு என் மனனே" என்று மங்களாசாசனம் செய்கின்றார்.  திருமணிமாடக் கோவிலில் ஆழ்வார் ஆஸ்தானம் பின், நல்ல வெந்தழல் மூன்று நால் வேதம் ஐவேள்வியோடு ஆறங்கம் வல்ல அந்தணர் வாழும் திருவண்புருடோத்தமத்தில் ஸ்ரீ புருஷோத்தமனை மங்களாசாசனம் செய்கின்றார் மான வேற் கலியன்.  திருவைகுந்த விண்ணகரத்தில் ஸ்ரீ வைகுந்த நாதனை நாங்கூர் "வைகுந்த விண்ணகரம் வணங்கு மடநெஞ்சே" என்று மங்களாசாசனம் செய்கிறார் வாள் கலியன். திருசெம்பொன்செய் கோவிலில் அல்லி மாமலராளுடன் ஸ்ரீ செம்பொன் செய் அரங்கரை "நாங்கை நன்னடுவுள் செம்பொன் செய் கோயிலினுள்ளே கடல்நிறவண்ணன் தனனை நான் அடியேன் கண்டுகொண்டு உய்ந்தொழிந்தேனே" என்று மங்களாசாசனம் செய்கிறார் நம் கலியன். ஒரு கிளி மற்றொரு கிளிக்குக் கல்வி கற்பித்ததை  திருத்தெற்றியம்பலத்தில் ஸ்ரீ பள்ளி கொண்ட பெருமாளை  "திருத்தெற்றியம்பலத்து என் செங்கண்மாலே" என்று வணங்குகிறார் குமுதவல்லி மணாளர். பின்னர் அரிமேய விண்ணகரத்தில் குடங்களை எடுத்தேற விட்டு கூத்தாடிய கோவை " அண்டமுறும் அலைகடலினொலி திகழும் நாங்கூர் அரிமேய விண்ணகரம் வணங்கு மடநெஞ்சே" என்று அனுபவிக்கின்றார் ஆழ்வார். அரங்கனே நடத்தி வைத்த மஞ்சள் குளி, மணிகர்ணிகையாற்றில் கண்ட ஆழ்வாரும் குமுதவல்லி நாச்சியாரும், சிந்தனைக்கினியானும் திருமணிமாடக் கூடத்தில் ஆஸ்தானத்தில் இரவில் எழுந்தருளுகின்றனர். இங்கு அர்த்த ஜாம பூஜை நடைபெறுகின்றது.


பதினோரு கருடசேவையன்று காலை முதலில் ஆழ்வார் முன் திருப்பாவை சாற்றுமுறை செய்யப்படுகின்றது. கருடசேவைக்காக மற்ற பத்து திவ்ய தேசத்து பெருமாள்களும் பல்லக்கில் திருமணிமாடக்கூடத்திற்கு எழுந்தருளுகின்றனர். ஒவ்வொரு பெருமாளுக்கும் ஒவ்வொரு வித அலங்காரம். தன் அன்பனைக் காண அற்புத அலங்காரத்தில் வருகின்றனர் பெருமாள்கள் அனைவரும். அவர்கள் வந்த அழகு இவ்வாறு இருந்தது.

திருமணிமாடக் கூட கோவில் மற்றும் புஷ்கரிணிக்கு இடையில் அமைக்கப்பட்டுள்ள  பிரம்மாண்ட  பந்தலுக்கு வேடார் திருவேங்கடம் மேய விளக்கான  திருவெள்ளக்குளம் அண்ணன் பெருமாள் பட்டுப் பீதாம்பரங்கள் தொங்க எழிலாக பல்லக்கில் வந்தார். திருசெம்பொன்செய்  கோயிலினுள்ளே அல்லிமாமலராள் தன்னொடும் அஞ்சனக்குன்றம் நின்ற தொப்ப  ஹேமரங்கர் திருமேனி முழுவது செம்பொன்னாக மின்ன வந்தார் .

மின்னனைய நுண்மருங்குல் மெல்லியற்கா இலங்கை வேந்தன் முடியொருபதும் தோளிருபதும் போயுதிர தன்னகரிற் சிலை வளைத்து அன்று இலங்கை பொடி செய்த  திருவைகுந்த விண்ணகரத்து வைகுண்ட நாதர் ஆதி சேஷன் குடை பிடிக்க அழகாக பல்லக்கில் அமர்ந்து வந்தார்.

அங்கையால் அடி மூன்று நீரேற்று அயன் அலர் கொடு தொழுதேத்த கங்கை போதரக்கால் நிமிர்த்தருளிய  திருவண்புருடோத்தமத்து புருடோத்தமர் செங்கோல் தாங்கி அன்ன நடையிட்டு செழுமையாக வந்தார்.

கன்றதனால் விளவெறிந்து கனியுதிர்த்த காளை காமருசீர் முகில் வண்ணன், காலிகள் முன் காப்பான் குன்றதனால் மழை தடுத்த திருஅரிமேய விண்ணகத்து குடமாடு கூத்தர்  எழிலாக கூத்தாடி வந்தார்.


இவ்வாறு மெல்ல மெல்ல எல்லா திவ்ய தேசத்துப் பெருமாள்களும் எழுந்தருளுகின்றனர் பந்தலுக்கு முதலில் சிறிதாக இருந்த பக்தர் கூட்டம் பெரிதாகிக் கொண்டே போகின்றது, ஒவ்வொரு பெருமாளாக வர வர மலர்களை நாடி வண்டுகள் செல்வது போல பக்தர்களின் கூட்டம் அப்பெருமாளை சேவிக்க நகர்ந்து செல்கின்றனர். புகைப்படம் எடுப்பவர் சிலர், வீடியோப் படம் எடுப்பவர் சிலர், பாசுரம் சேவிப்போர் சிலர், பெருமாளை கண்ணாரக் கண்டு சேவிப்போர் பலர் என்று தமிழகத்தின் அனைத்து பிரதேசங்களிலிருந்து வந்த பக்தர்கள் பந்தலில் குழுமுகின்றனர். சுமார் பன்னிரண்டு மணியளவில் அனைத்து பெருமாள்களும் வந்து சேர அவர்களை மங்களாசாசனம் செய்ய மணவாள  மாமுனிகளுடன் திருமங்கையாழ்வார்  எழுந்தருளுகின்றார்.

மங்களாசாசனம் துவங்குகின்றது ஒவ்வொரு பெருமாளாக ஆழ்வாருக்கு சேவை சாதிக்கும் போது அந்தப் பெருமாளை ஆழ்வார் மங்களாசாசனம் செய்கிறார் அந்த திவ்ய தேசத்து பாசுரத்தின் முதல் பாடலை பக்தர்கள் அனைவரும் சேவிக்கின்றனர். பின் ஆழ்வார் பெருமாளை வலம் வருகின்றார், ஆழ்வாருக்கு அந்தந்த திவ்ய தேசங்களிலிருந்து வந்த பரிவட்டம் கட்டப்பட்டு மரியாதை செய்யப்படுகின்றது. பதினோரு திவ்ய தேசப் பெருமாள்களின் மங்களாசாசனம் நிறைவுற்றதும் மணவாள மாமுனிகள்  எழுந்தருளுகின்றார்.   அவர் தம் ஆச்சார்யராம் திருமங்கையாழ்வாரை தாம் திருமங்கையாழ்வாரின் வடிவழகிலீடுபட்டு அருளிய வடிவழகு சூர்ணிகையும் மற்றும்

வேலணைத்தமார்பும், விளங்கு திருவெட்டெழுத்தை
மாலுரைக்கத்தாழ்த்த வலச்செவியும்,
தாளிணைத் தண்டையும், தார்க்கலையன் நன்முகமும்
கண்டு களிக்குமென்கண்

என்று மற்ற தனியன்களாலும் மங்களாசாசனம் செய்கின்றார். அப்போது பகதர்களும் அந்த தனியன்களை உடன்  சேவிக்கின்றனர். பின் அனைத்து பெருமாள்களும் மணிமாடக்கோவிலின் உள்ளே எழுந்தருளுகின்றனர்.



மாலை 4 மணி அளவில் பதினொரு திவ்ய தேசத்து எம்பெருமான்களுக்கும் திருமங்கை ஆழ்வாருக்கும் ஏக காலத்தில் திருமஞ்சனம் நடைபெறுகின்றது. திருமங்கையாழ்வாரின் சிறப்பு ததியாரதனை (அன்ன தானம்) என்பதால் அனைத்து திவ்ய தேசங்களிலும் ததியாராதானை சிறப்பாக நடைபெறுகின்றது. கருட சேவைக்கு செல்பவர்கள் உணவைப் பற்றி கவலைப்படத்தேவையில்லை.

மாலை 6 மணியளவில் திருமஞ்சனம் முடிந்து பெருமாள்கள் அனைவரும் கருட வாகனத்திலும் ஆழ்வார் அன்ன  வாகனத்திலும் எழுந்தருளுகின்றனர். பின்னர் அலங்காரம் துவங்குகின்றது. மாலைகள் வர ஆரம்பிக்கின்றன. மாலைகள் மேல் மாலைகள் அமர்கின்றன, நடு நடுவே பட்டு பீதாம்பரங்கள் வருகின்றன அவையும் பெருமாள்களுக்கு சார்த்தப்படுகின்றன. பதினொரு கருட சேவையைக் காண வரும் பக்தர்கள் கூட்டம் அதிகரித்துக் கொண்டே செல்கின்றது , கூட்டம் அலை மோதுகின்றது என்றுதான் சொல்ல வேண்டும். அலை அலையாக பக்தர்கள் ஒவ்வொரு பெருமளாக சென்று சேவித்து புறப்பாட்டிற்காக காத்து நிற்கின்றனர்.


அன்று நள்ளிரவு மணவாள மாமுனிகள் முன் செல்ல, அன்ன  வாகனத்தில் திருமங்கையாழ்வாரும் குமுத வல்லித் தாயாரும் தொடர, ஏகாதச பெருமாள்களும் எம்பெருமானை எப்போதும், எல்லா காலத்திலும் தாங்கும் பேறு பெற்ற பெரிய திருவடியாம், வேத சொரூபன் கருட வாகனத்தில் எழுந்தருளி சேவை சாதிக்க திருவீதிப் புறப்பாடு நடைபெறுகின்றது. பதினோரு பெருமாள்களும் தெய்வப்புள்ளேறி ஒரே சமயத்தில் திருநாங்கூரின் நான்கு மாட வீதிகளையும் சுற்றி வரும் அந்த அழகைக் காண கண் கோடி வேண்டும். பூர்வ ஜன்ம புண்ணியத்தால் மட்டுமே அந்த தெய்வீக அழகைக் காணும் பேறு நமக்கு கிட்டும். புறப்பாடு நிறைவு பெற அதிகாலை ஆகி விடும்.

மறு நாள் காலை ஆழ்வாருக்கு திருமஞ்சனம் திருப்பாவை சாற்றுமுறை நடைபெறுகின்றது. மாலை திருநாங்கூரிலிருந்து புறப்பட்டு, திருவெள்ளக்குளத்து ஸ்ரீ அண்ணன் பெருமாளை இடர் களைய சரணம் புகுகிறார், பிறகு வரிவண்டு தேதென என்று இசைபாடும் அழகை திருத்தேவனார் தொகையில் ஸ்ரீ மாதவனை அனுபவித்து மங்களாசாசனம் செய்கிறார் நீலன். பிறகு திருவாலி எழுந்தருளி ஸ்ரீ லக்ஷ்மி நரசிம்மரை மங்களாசாசனம் செய்கின்றார் ஆழ்வார். திருநகரியை அடையும் போது பெரிய திருவடியில் வயலாலி மணவாளன் ராஜ கோபுரத்தின் முன்னே ஆழ்வாரை எதிர் கொள்ள காத்திருக்கின்றார். பின் ஆழ்வார் அங்கு அடைந்தவுடன் , பெருமாளும் ஆழ்வாரும் திருக்கோவிலில் செல்வதுடன் திருனாங்கூர் பதினோரு கருட சேவை இனிதே நிறைவு பெறுகின்றது. அப்போது

கற்றார் பற்றறுக்கும் பிறவிப் பெருங்கடலே
பற்றா வண் தடியேன் பிறந்தேன் பிறந்த பின்னை
வற்றா நீர் வயல் சூழ் வயலாலி அம்மானைப்
பெற்றேன் பெற்றதுவும் பிறவாமை பெற்றேன். ( பெ.தி 8-9-8)


பொருள்கற்றுணர்ந்த விவேகிகள் இதன் தொடர்பே நமக்கு வேண்டாம் என்று வெறுத்து ஒழிக்கும்படியான சம்சாரமாகிய பெருங்கடலையே இனிமையாகப் பற்றி இங்கு அடியேன் வந்து பல பிறப்பும் பிறந்தேன். இப்படி பிறந்து வருமளவில், வற்றாத நீர்வளமுடைய வயல்களால் சூழப்பட்ட வயலாளி என்று திருநாமம் பெற்ற திருவாலியில் எழுந்தருளியிருக்கின்ற பெருமானைப் பெற்றேன். அவரைப் பெற்றதால் மறுபிறவி இல்லாமை பெற்றேன்என்ற பாசுர சாற்று மறையுடன் இந்த தெய்வீக விழா இனிதே நிறைவடைகின்றது

இப்பதிவுடன் அடியோங்களது கருட யாத்திரை நிறைவு பெற்றது. இது வரை வந்து சேவித்த அன்பர்கள் அனைவருக்கும் வைநதேயன் மற்றும் பெருமாளின் பூரண ஆசிகள் கிட்ட வேண்டுகின்றேன். 

Monday, October 12, 2015

கருட யாத்திரை - 12

ஊத்துக்காடு காளிங்க நர்த்தன கிருஷ்ணர் சம்ப்ரோக்ஷணம் 

கண்ணன் செய்த பால லீலைகள் பலவற்றுள் காளிங்க நர்த்தனமும் ஒன்று. யமுனையை அசுத்தப்படுத்தி வந்த காளிங்கனை அடக்கி அதன் தலை மீது நின்று  அதன் விஷத்தை நீக்கி அவனை கடலுக்கு ஓட்டினான் கண்ணன்.  அந்த காளீங்க நர்த்தனராக உற்சவராக, சுயம்புவாக கண்ணன் எழுந்தருளி அருள் பாலிக்கும் தலம்தான் கும்பகோணத்திற்கு அருகில் உள்ள ஊத்துக்காடு. 



குழலூதி மனமெல்லாம்  கொள்ளை கொண்டபின்னும்
குறையேதும் எனக்கேதடீ! சகி! குறையேதும் எனக்கேதடீ!

 போன்ற அருமையான கீர்த்தனைகளை ஊத்துக்காடு வேங்கட சுப்பையர் இந்த காளிங்க நர்த்தனரின் தரிசனம் பெற்ற பின் பாடியுள்ளார். 



இத்திருக்கோவில் தற்போது புதிதாக கட்டப்பட்டு விரைவில்  சம்ப்ரோக்ஷணம் நடைபெறவுள்ளது. முடிந்த அன்பர்கள் கலந்து கொள்ளவேண்டுமாய் பிரார்தித்துக்கொள்கின்றேன். 


காமதேனுவின் கன்றுகளான நந்தினி மற்றும் பட்டிக்காக சுயம்புவாக பெருமாள் காலில் காளியன் தீண்டிய காயங்களுடனும், அற்புதமாக காளியனின் வாலில் ஒரு விரல் மட்டும் தொட்டுக்கொண்டிருக்க அற்புத சிலையாக தானே தோன்றியதாக ஐதீகம்,  வேங்கடகவியும் நாரதரின் மறு அவதாரம் என்பது ஐதீகம். 



நடைபெறும் திருப்பணிகளிலும் அன்பர்கள் பங்கு கொள்ள வேண்டுகிறேன். 


கருட யாத்திரையின் நிறைவாக திருநாங்கூர் திவ்ய தேசங்களை சேவித்தோம் அதை அடுத்த பதிவில் காணலாம் அன்பர்களே. 







Monday, October 5, 2015

கருட யாத்திரை - 11

தேரழுந்தூரில் சகாவாக கருடன்


ஆமருவியப்பன்

கருடனும் பெருமாளும் ஒன்றாக சேவை சாதிக்கும் தலங்களில் அடுத்ததாக நாம் காணப்போகும் திவ்ய தேசம் தேரழுந்தூர். இத்தலத்தில் பெருமாள் தேவாதிராஜனாக நின்ற கோலத்தில் சங்கு சக்கரம், பத்ம முத்திரையுடன் சேவை சாதிக்கின்றார். பெருமாளுக்கு இடப்பக்கத்தில் மிக்க பக்திமையுடன் கருடன் உடன் சேவை சாதிக்கின்றார். இவ்வாறு பெருமாளுடன் கருடாழ்வார் உடன் சேவை சாதிக்க என்ன காரணம் என்று தெரிந்து கொள்ள ஆர்வமாக உள்ளதா வாருங்கள் அடியேனுடன் ?

தேவேந்திரன் ஒரு சமயம் ஒரு விமானத்தையும் வைர முடியையும் அளித்து இவற்றை எந்தெந்த பெருமாளுக்கு உகந்ததோ அங்கு சம்ர்பித்து விடு என்று பணித்தான். கருடனும் வைர முடியை கர்நாடக மாநிலத்தில் மைசூர் அருகில் உள்ள திருநாராயண புரத்தில் செல்லபிள்ளை சம்பத்குமாரரருக்கும் விமானத்தை தேரழுந்தூரில் ஆமருவியப்பனுக்கும் சமர்பித்தான். எனவே இத்தலத்தின் விமானம் கருட விமானம் ஆகும். விமானம் சாம்ர்பித்த கருடனுக்கு “ என்ன வரம் வேண்டும்? என்று வினவ , கருடனும் அர்ச்சை நிலையில் தேவரீர் இருக்க அடியேன் எதிரே நின்று எல்லா இடங்களிலும் சேவிக்கிறேன். ஆனால் அருகிலே நின்று அடியேன் தேவரீரின் பொன்னடிகளைச் சேவிக்க வேண்டும் என்று வரம் வேண்ட பெருமாளும் கருடனை அருகில் இருத்தி கொண்டதாக ஐதீகம்.

 ஸ்ரீ ஆளவந்தார் தன் ஸ்தோத்ர ரத்தினத்தில்
தாஸ ஸகா வாஹன ஆஸனம் த்வஜோ யஸ்தே விதாநம் வ்யஜனம், த்ரயீமய   என்று கருடனின் ரூபங்களை விவரிக்கும்பக்ஷத்தில் ஸகாவான (தோழன்) நிலையை இந்த திவ்ய தேசத்தில், சேவிக்கலாம்.

பிரகலாதன் - பெருமாள் - கருடன்

கருட விமானமாகிய விதானத்தின் கீழ் நாச்சியார் (சத்யபாமா) இடத்தை தான் எடுத்துக்கொண்டு கருடனும் பெருமாளுக்கு சரி சமமாக பக்தியுடன் உயிரோட்டத்துடன், விரித்த அழகிய சிறகுகளுடனும், அஷ்ட நாகங்கள் திருமேனியெங்கும் விளங்க கூரிய நகங்களுடனும், சீரிய நோக்குடனும், முக மலர்ச்சியுடன் கரம் குவித்து
சந்தோகா! பௌழியா! தைத்திரியா! சாமவேதியனே! நெடுமாலே!
எனப்பாடப்பெற்ற பெருமாளுக்கு, வேத சொரூபனான வைநதேயன் தன் சிறகுகளால் விசிறிக்கொண்டு , பிற ஒலிகள் கேட்கா வண்ணம் சாம கானம் பாடிக்கொண்டிருக்கிறார். மற்ற இடங்களில் பிராட்டியின் சொல் கேட்டு அருள் புரியும் எம்பெருமான் இங்கே தன் நண்பனின் சொல் கேட்டு அருள் செய்து கொண்டிருக்கின்றான். எனவேதான் "புனிதா புட்கொடியாய் நெடுமாலே" என்கிறார் மங்கை மன்னன்.

பெருமாளுக்கு வலப்பக்கத்தில் பிரகலாழ்வானும் வணங்கியபடி இருக்கின்றான். இரணியனை அழித்த பிரகலாதனுக்கு அருள் புரிந்த நரசிம்ம மூர்த்தியின் உருவத்தைக் கண்டு அஞ்சாமல் அருகில் வந்த பிரகலாதனின் பக்தியை மெச்சி அவனுடைய வேண்டுகோளுக்கிணங்கி கண்ணனாக ஆமருவியப்பனாக சேவை சாதித்தார். மேலும் முக்திப்பேறு வேண்டி தொழுத மார்க்கண்ட முனிவர் கருவறையில் பெருமாளுக்கு அருகில் வலப்புறத்தில் குக்குடாசனம் என்ற ஆசன நிலையில் அமர்ந்தபடி சடைமுடியுடன் அஞ்சலி செய்த வண்ணம் தவக்கோலத்தில் இருக்கின்றார். மேலும் அகத்தியரின் சாபம் தீர கங்கையினும் புனிதமான காவிரித்தாயாரும் பெருமாளை நோக்கி தவக்கோலத்தில் இருக்கின்றாள். இனி இவ்வாறு சுபர்ணன் சாம கானத்தால் ஆமருவியப்பனை குளிர்விக்கும் இத்திருக்கோவிலின் சில சிறப்புகளைப் பற்றி காண்போமா?

ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப்பட்ட திவ்ய தேசங்களுள் 24வது திவ்யதேசம் திருவழுந்தூர் எனப்படும் தேரழுந்தூர். சோழநாட்டு நாற்பது திவ்ய தேசங்களிலும் இது 24வது திவ்யதேசம். மயிலாடுதுறை கும்பகோணம் மார்கத்தில் உள்ள குத்தாலம் என்ற ஊரில் இருந்து சுமார் 3 கி. மீ தூரத்தில் அமைந்துள்ளது இந்த திவ்ய தேசம். பெருமாள் சதுர்புஜத்துடன், அருகே ருக்மணி, சத்யபாமா முதலியோருடன், பசுங்கன்றுகளுடனும் சாட்சாத் க்ருஷ்ணனாக சேவை சாதிக்கின்றார். கவிசக்கரவர்த்தி கம்பர் பிறந்த தலம். கரிகால் சோழன் தலைநகராகவும் திகழ்ந்திருக்கின்றது இத்தலம் ஒரு காலத்தில். மூலவர் : தேவாதிராஜன்; வடமொழியில் கோசகன். இதன் தமிழாக்கமே ஆமருவியப்பன் என்பதாகும். சாளக்கிராம திருமேனி; கிழக்கு நோக்கிய திருமுக மண்டலம், நின்ற திருக்கோலம். சிற்பக்கலையின் உச்சி நிலைக்கும் மேம்பட்ட வடிவழகு. மூலவரின் திருமேனியில் நரம்புகள், நகங்கள், அழகு செய்யும் திருமுகம் சேவிக்க சேவிக்க தெவிட்டாதது. அவரது எழில் எழுத முடியாதது அதனால் தானே திருமங்கை மன்னன் ஆமருவியப்பனைக் " திருவுக்கும் திருவாகிய செல்வா " என்று கண்டு சொக்கி நின்று தன்னை பரகால நாயகியாக பாவித்து பாசுரங்கள் பாடினார்.
திருவுக் கும்திரு வாகிய செல்வா! தெய்வத் துக்கர சே! செய்ய கண்ணா!உருவச் செஞ்சுட ராழிவல் லானே! உலகுண்ட ஒரு வா! திருமார்பா!
ஒருவற் காற்றியுய் யும்வகை யின்றால், உடன்நின் ரைவர்என் னுள்புகுந்து ஒழியா தருவித் தின்றிட, அஞ்சிநின் னடைந்தேன் – அழுந்தூர் மேல்திசை நின்ற அம்மானே!
எழில் கொஞ்சும் ஆமருவியப்பன்

உற்சவர்: உபய நாச்சியார்களுடன் ஆமருவியப்பன். திருவுக்கும் திருவாகிய செல்வனாக, பட்டு பீதக ஆடை மிளிர பொன்னிற்கும் அழகு தரும் பேரொளி மேனியுடன், மனித குலத்தின் அடையாளமான பசு “அந்தோ நின்னடியின்றி மற்றறியேன் என்று கூறுவது போல ஆமருவியப்பனின் திருவடிகளை தன் நாவினால் தடவ,“ஆ ஆ என்றடியேற்கு இறையிரங்காய்” என்றுரைப்பது போல கன்றுக்குட்டி பெருமாள் திருமுகம் நோக்க கோசகனாய் திருமகளும் , புவிமகளும் உடனிருப்ப எழிலாக சேவை சாதிக்கின்றார். இவரது சௌந்தர்யத்தில் மயங்கி திருமங்கையாழ்வார் பரகாலநாயகியாகி மங்களாசாசனம் செய்துள்ளார்.

செங்கமலவல்லித்தாயார்

தாயார் : செங்கமலவல்லி. அகலகில்லேன் இறையும் என்று அலர்மேல் மங்கை உறை மார்பா” என்றபடி விளங்குபவள் பெரிய பிராட்டியார் என்கிற திருமகள். இத்தலத்தில் தாயார் இரு புறமும், ஆனைகள் மாலை கொண்டு வழிபடும் நிலையில் செழுந்திருக்கோலம் கொண்டு சேவை சாதிக்கின்றாள். பிராட்டியின் அழகையும் கருணையையும் திருமங்கையாழ்வார், ’செங்கமல திருமகளும் புவியும்’ என்று தொடங்கும் பாசுரத்தில் குறிப்பிட்டிருக்குன்றார். மூலவருக்கு முன்னால் உற்சவர் “சுவர்ண ரஜஸ்ருதாம்” என்ற படி பொன்னணிகள் திருமேனியெங்கும் மிளிர வெள்ளியாலான மண்டபத்தில் செல்வம் அளிக்கும் திருமகள் சேவை சாதிக்கின்றாள். அடியவர்களின் வேண்டுதலுக்கு உடனே அருள் புரிபவள் தாயார். தாயாரின் முன் மண்டபத்தில் அஷ்ட லக்ஷ்மிகளின் சுதை சிற்பங்கள் வாகனங்களுடன் சிறப்பாக அமைக்கப்பட்டுள்ளன.

தீர்த்தம் : தர்சன புஷ்கரிணி, காவேரி , கஜ புஷ்கரிணி.
  விமானம்: கருட விமானம்
  ப்ரத்யக்ஷம்: தர்மதேவதை, உபரிசரவஸு, காவேரி, கருடன், அகத்தியர்.மங்களாசாசனம் : திருமங்கையாழ்வார்.

  தந்தை காலில் பெருவிலங்கு தாளவிழ நள்ளிருட்கண் வந்த 
 எந்தை பெருமானார் மருவி நின்ற ஊர் போலும் 
முந்தி வானம் மழை பொழிய மூவா உருவுன் மறையாளர்
அந்தி மூன்றும் அனலோம்பும் அணியார் வீதி அழுந்தூரேஎன்பது ஆலி நாடன் முதல் பாசுரம்.

யமுனைியிலிருந்து கண்ணன் தேரழுந்தூருக்கு எழுந்தருளிய வரலாறு. கோகுலத்தில் ஒரு நாள் ஸ்ரீ கிருஷ்ணர் ஆநிரைகளை மேய்த்துக் கொண்டிருந்தான். அப்போது நீர் பருக கண்ணன் சில நண்பர்களுடன் யமுனை ஆற்றுக்கு சென்ற போது நான்முகன் அந்த ஆநிரைகளை கள்ளத்தனமாக ஓட்டிக்கொண்டு வந்து தேரழுந்தூரிலே மறைத்து வைத்தான். திரும்பி வந்து பசுக்கூட்டங்களை காணாத மாயம் செய்யும் மாலவன் நொடிப்பொழுதில் பிரம்மனின் செயலை அறிந்து புதியதொரு ஆநிரையை உருவாக்கி ஆயர்களை மகிழ்வித்தான். ஒரு வருட காலம் இவ்வாறு தானே அனைத்துமாக மாயம் காட்டினான் கண்ணன், தன் தோல்வியை உணர்ந்து நான்முகன் கண்ணனின் அடிபணிந்து வணங்கி, மாலே! மணிவண்ணா! நெடியானே! கமலக்கண்ணா! விண்ணவர்க்கு மேலாய்!, அடியேனின் பிழை பொறுத்து, அறியாமையினால் நான் ஒளித்து வைத்த ஆநிரைகளுடன் தேரழுந்தூருக்கு எழுந்தருளி திருக்கோயில் கொள்ள வேண்டும் என்று வேண்ட, கண்ணன், தானே பரமபதத்தில் விளங்கும் மாலவன் என்பதை உலகத்தினருக்கு உணர்த்த நான்கு திருக்கரங்களுடன் சங்கு சக்கரம் தாங்கி , ஆமருவி, நிரை மேய்க்கும் நிலையில் இன்றும் எழிலாக சேவை சாதிக்கின்றார்.
செங்கமலவல்லித்தாயார்
பெருமாள் இங்கு கோஸகனாக வந்ததற்கு இன்னொரு வரலாறும் உண்டு. ஒரு சமயம் திருமாலும் சிவபெருமானும் சொக்கட்தான் ஆடினார்கள். உமையம்மை ஆட்ட நடுவராக இருந்தாள். ஆட்டம் முடிந்தது. திருமாலே வென்றதாக உமை கூற சிவபெருமான் சினம் கொண்டார், அன்னையை பசுவாக மாறும்படி சபித்தார். உமையைப் பிரிந்த சிவபெருமான் அந்தணர் வேடம் பூண்டு சந்தன மரத்தின் கீழ் வேதம் ஓதி வந்தார். சிவபெருமான் வேதபுரீசர் ஆனார். பசுவைக் காக்க வேண்டியவராக இருந்த பெருமாள், கோஸகனாக, ஆமருவியப்பனாக ஆனார். இவ்வாறு கௌரியின் சாபம் தீரும் வரை காப்பது தன் கடமை என்று தன்னருகிலேயே வைத்துக் கொண்தார் பெருமாள். கண்ணன் பசு மேய்த்த் ஐதம் மேய்த்த மங்கலம்( மேக்கிரி மங்கலம்), தொழுவம் இருந்த இடம் தொழுதலாங்குடி என்றும், பசுக்கள் நிறைந்த பகுதி என்பதால் கோமல் என்றும் ஆ நான்கு ஊர்களில் மலிந்த பகுதி ஆனாங்கூர் என்றும், ஆ- ஆடுகின்ற காவிரித்துறை ஆடுதுறை என்றும் உமையாகிய பசு முக்தி பெற்ற தலம் கோமுத்தீச்சுரம்- திருவாவடுதுறை என்றும் இப்ப்குதியில் உள்ள ஊர்களின் பெயர்கள் அமைந்துள்ளன. இவ்வரலாற்றை நினைவு படுத்தும் வகையில் மாசிப் புனர்பூச நாள் மாலை பெருமாள் வில்லேந்திய இராமனாகத் திருக்கோலம் கொண்டு, வேதபுரீசருக்கு சேவை சாதிக்கும் நிகழ்ச்சி இன்றும் நடைபெறுகின்றது.

இனி இத்தலத்திற்கு தேரழுந்தூர் எனப்பெயர் வர என்ன காரணம் என்று பார்ப்போமா? உபரிசரவஸு என்னும் மன்னன், வானில் உலா வரும் தேரினைப் பெற்றிருந்தான். அவன் பெற்ற வரத்தின் விளைவால், அவனது தேரின் நிழல் எந்த உயிர்களின் மீது பட்டாலும் அவ்வுயிர்கள் துன்பம் அடைந்து வந்தன. இதானால் ஆணவம் கொண்டிருந்த மன்னன் ஒரு சமயம் ஆமருவியப்பர் ஆநிரை மேய்த்துக் கொண்டிருந்த போது மேலே தன் தேரிலே சென்றான், அத்தேரின் நிழல் பட்டு பசுக்கள் துன்பம் அதைந்தன, மன்னனின் செருக்கை ஒடுக்க கண்ணன் அந்த நிழல் மீது தன் திருவடி விரலை அழுத்த அடுத்த கணமே அந்த தேர் கீழே அழுந்திற்று, தேர் மட்டுமா அழுந்தியது? மன்னனின் ஆணவமும்தான். அவன் கண்ணன் தாள் பணிந்து பிழை பொறுக்க வேண்டினான். பின் அகத்திய முனிவரின் ஆலோசனைப்படி தர்ஷபுஷ்கரிணியில் நீராடி அதன் கரையில் அமர்ந்து எம்பெருமானின் அருளை வேண்டி தவம் செய்ய பெருமாள் அவனுக்கு ப்ரத்யக்ஷமாகி சேவை சாதித்தார். இவ்வாறு உபரிர்சவஸு என்ற மன்னனின் தேர் இங்கே அழுந்தப்பெற்றமையால் தேரழுந்தார் என்ற பெயர் வந்தது.

அதே போல இத்தலத்திற்கு திருவழுந்தூர் என்ற பெயரும் உள்ளது. திரு – திருமகள், அழுந்துதல் – நிலைபெற்றிருத்தல் என்ற பொருளில் திருமகளாகிய மஹாலக்ஷ்மித் தாயார் நிலை பெற்ற ஊர் என்று கூறப்படுகின்றது. இத்தலத்தின் புராணப்பெயர் கிருஷ்ணாரண்யம் ( கிருஷ்ணன் காடு) ஆகும். காவிரியின் தென் கரையில் அமைந்த திவ்ய தேசங்களில் இது பத்தாவது திவ்ய தேசம்.
மற்றொரு வரலாறும் உண்டு. உபரிசவஸு தன் மனைவியுடன் புஷ்பக விமானத்தில் சென்று கொண்டிருந்த போது தேரழுந்தூருக்கு வந்ததும் அரசி கீழே இறங்கி தேவராஜனை வணங்க விரும்பினாள். அரசன் மமதையுடன் “ இவன் என்ன என்னைவிதப்பெரிய ராஜனோ!” என்று சொல்லி விமானத்தை இறக்க மறுத்தான். தேவாதிராஜன் அரசனை திருத்த எண்ணினான். உடனே கருடன் விமானத்தின் நிழலை தன் கால் பெருவிரலால் தொட்டார். விமானம் கோயிலின் முன்பு உள்ள குளத்தில் விழுந்தது. அரசன் நீந்தி வந்து அங்கு தவம் புரியும் அகத்தியரை வணங்கி உய்யும் வழி வேண்டினான். அவர் சொல்படி தவ்ம் புரிந்து என்பெருமான் தரிசனம் பெற்றான். இரண்டு வரங்களையும் வேண்டினான். குளத்தில் விழுந்த விமானம் மேலே வரவும், இக்குளத்தில் நீராடி தேவாதிராஜனை தரிசிக்கும் பக்தர்களுக்கு வேண்டிய வரங்களை கொடுக்கும் படியும் வேண்டினான். ஆகவே இன்றும் தன்னை தரிசிக்கும் பக்தர்களுக்கு எல்லா நலங்களையும் வளங்களையும் அருளுகின்றார் ஆமருவியப்பன்.

பெருமாளை சேவித்தும் மன்னன் ஆணவம் அடங்கவில்லை. எனவே ஆமருவியப்பன் “மன்னனே! நீ செய்த பிழைக்கு பரிகாரமாக எமக்கு அன்று கடைந்த வெண்ணெய் நிரம்பிய ஆயிரம் குடங்களைக் காணிக்கையாக அர்ப்பணிக்க வேண்டும்” என்று கேட்க மன்னனும் தன் செல்வ செருக்கால், நம்மால் முடியாததா? என்று நினைத்து அவ்வாறே செய்வதாக உறுதி கூறினான். தன் அரசு பதவிகளை பயன்படுத்தி குறிப்பட்ட நாளில் 999 குடங்களைப் பெர்று விட்டான். ஒரு குடம் வெண்ணெய் மட்டும் கிடைக்கவில்லை. இப்போதாவது தன் இயலாமையை எம்பெருமானிடம் தெரிவித்திருக்கலாம் ஆனால் ஆணவம் தடுத்தது, ஒரு குடம் தானே! மூடி வைத்து விட்டால் எம்பெருமான் ஒவ்வொன்றாகவா பார்க்கப்போகிறான் என்று எண்ணி வெண்ணெய் குடங்களுக்கிடையில் வெறும் குடத்தையும் வைத்து விட்டான். எல்லாம் அறிந்த மாயன் மன்னனின் அறியாமையை நீக்க எல்லா குடத்திலிருந்த வெண்ணையையும் மறையுமாறு செய்து விட்டார். எந்த குடத்தை திறந்து பார்த்தாலும் வெண்ணெய் இருக்கவில்லை. மன்னன் தான்து தவறை உணர்ந்தான். பெருமாள் வெண்ணெய்க்காக வரவில்லை தன்னைத் திருத்தி பணிகொள்ள வந்தான் என்று உணர்ந்து வெட்கி நின்று எம்பெருமானின் திருவடியில் புகல் அடைந்து நின்றான். இந்நிகழ்ச்சி நடைபெற்றது தை அமாவாசை. அன்றுதான் உபரிசரவசு தை அமாவாசையன்று திருக்குளத்தில் நீராடி அருள் பெற்றதால் இக்குளம் தரிச புஷ்கரணி என்று அழைக்கப்படுகின்றது. தரிசம் என்றால் அமாவாசை. எனவே தை அமாவாசையன்று பெருமாளை வழிபடுவது மிகவும் சிறந்தது. அன்று பெருமாள் வெள்ளி கருட வாகனத்தில் திருவீதி உலா வந்து அருள் பாலிக்கின்றார். மேலும் சித்திரை அட்சய திருதியையன்று காலை, வைகாசி பிரம்மோற்சவத்தின் 4ம் நாள் இரவு, புரட்டாசி திருவோணம் ஸ்ரீ தேசிகர் திருநாள் காலை, ஐப்பசி திருவோணம் பவித்ரோத்சவம் காலை என்று வருடத்தில் ஐந்து முறை ஓடி வரும் புள்ளில் அமர்ந்து கருட சேவை அருளுகின்றார்.

அகத்திய முனிவர் வாதாபி என்னும் அசுரனை உண்டு ஜீரணம் செய்த பாவம் தீர தென்னழுந்தையில் மன்னிநின்ற ஆமருவியப்பனின் அடிபணிந்து வீடுபேறடைந்தார். இவ்வரலாற்றுக்கு ஆதாரமாக அகத்தியர் ஸ்ரீ வாசுதேவர் சன்னதியில் காட்சி தருகின்றார்.

பிரகலாதன் நரசிம்ம அவதாரத்தை கண்டு பயந்து பெருமாளின் சாந்த சொரூபத்தை காட்ட வெண்டும் என்று வேண்ட சினம் தணிந்த சிங்க பெருமானாக சேவை சாதிக்க பிரகலாதன் அச்சம் குறையாதிருக்க இந்த தலத்தில் அமர்ந்துள்ள ஆமருவியப்பனாக சேவை சாதித்ததால் இத்தலத்தில் பெருமாளுடன் பிரகலாதனும் இடம்பெற்று நித்ய பூஜைகள் பெறுகின்றார்.

அகத்திய மாமுனிவர் ஒரு சமயம் காவிரித்தாயை அணுகி தன்னை மணந்து கொள்ள விண்ணபிக்க காவிரி அதனை மறுக்க, இதனால் கோபமடைந்த அகத்தியர் காவிரியைக் குடத்தில் அடைக்க, ஒரு சமயம் தரையில் வைக்கப்பட்ட அக்குடத்தை காகமாக விநாயகர் சாய்க்க காவிரி வழிந்தோடியது இதனால் சினம் கொண்ட அகத்திய முனிவர் காவிரியால் வளம் பெரும் பகுதியில் உள்ளோர் அனைவரும் துன்பமுற்று வறுமையுறட்டும் என்று சாபம் தர, இச்சாபத்தை போக்க காவிரித்தாய் தேரழுந்தூரில் தேவாதி ராஜனை குறித்து தவமிருந்து இந்த சாபத்தை துடைத்தாள் என்பது ஐதீகம். எனவே தான் கருவறையில் காவிரித்தாயும் தவநிலையில் எழுந்தருளியுள்ளாள்.

கம்பன் பிறந்தவூர், காவேரி தங்கும் ஊர், கும்பமுனி சாபம் குலைந்த ஊர்”என்னும் பழம் பாடல் இவ்வரலாற்றை இயம்புகின்றது.

ஆமருவிநிரை மேய்த்த அமரர் கோமான் அணி அழுந்தூர் நின்றான் என்று திருநெடுந்தாண்டகத்தில் மங்களாசாசனம் செய்துள்ளார் திருமங்கையாழ்வார். குன்றால்மாரி தடுத்தவனைக் குலவேழம் அன்று
பொன்றாமை அரனுக்கு அருள் செய்த போரேற்றை அன்றாலின் நறுநெய் அமர்ந்துண்ண அணியழுந்தூர் நின்றானை அடியேன் கண்டு கொண்டு நிறைந்தேனே.


இந்த திவ்ய தேசத்தில் அமைந்துள்ள மற்ற சன்னதிகள் வாசுதேவர் சன்னதி, நரசிம்மர் சன்னதி, இராமர் சன்னதி, விஷ்வக்சேனர் சன்னதி, தேசிகர் சன்னதி, ஆழ்வார்கள் சன்னதி, ஆண்டாள் சன்னதி, கம்பர் சன்னதி மற்றும் அனுமன் சன்னதி ஆகும். கம்பரும் அவரது மனைவியும் பெருமாளை வணங்கிய நிலையில் காட்சி தருகின்றனர்.

திருமங்கையாழ்வார் 45 பாசுரங்களினால் அணியழுந்தூர் நின்ற கோவை மங்களாசாசனம் செய்துள்ளார். தேமருவு பொழிலிடத்து மலர்ந்த போதைத் –தேனதனை வாய்மடுத்து உன் பெடையும் நீயும் பூ மருவியினிதமர்ந்து பொறியில் ஆர்ந்த – அறுகால சிறுவண்டே தொழுதேன் உன்னை ஆமருவி நிரைமேய்த்த அமரர் கோமான் அணி அழுந்தூர் நின்றானுக்கு இன்றே சென்று,நீமருவி அஞ்சாதே நின்று ஒருமாது நின் நயந்தாள் என்று இரையே இயம்பிக்காணே.!
“நீலமேனி ஐயோ! நிறை கொண்டது! என் நெஞ்சினையே என்று அரற்றி எப்படியாவது எம்பெருமானிடம் தன் காதலை சொல்லவேண்டும் எனத்தவிக்கிறாள். அப்போது ரீங்காரம் செய்து கொண்டு தன் பெடையுடன் கூடி இருக்கும் வண்டைக் கண்டு, இவ்வண்டு பெருமாளின் திருமார்பை அலங்கரிக்கும்துழாய் மாலையில் அமரக்கூடியது என்பதையறிந்து ஆழ்வார் வண்டை தூது விடுகின்றார். எனவே தேன் வெள்ளம் மிகுந்திருக்கும் மலர்களில் மதுவுண்டு, உன் பெடையொடு உறவாட மகிழ்ந்து வரும் ஆறுகால்களையுடைய சிறு வண்டே! உன்னை முதலில் வணங்குகிறேன் என்று கூறினார். ( ஞான வெள்ளம் நிறைந்தோர்களினூடே சென்று அறிவைப்பெற்ற்ர் வரும் ஆசாரியர்களாகிய குருவையும், குருவியின் மனைவியையும், குருவின் மகனையும் வணங்குகிறேன் என்பது உள்ளுறை கருத்து). உன்னை முன்னிலையாக ஒன்று வேண்டுகின்றேன். பசுக் கூட்டங்களை விரும்பி மேய்ப்பவனும், அணியழுந்தூரிலே நின்று காப்பவனும் ஆகிய எம் தலைவனிடம் இப்போதே சென்று அஞ்சாமல் அதோ உன்னை விரும்பி என் அருளுக்காக ஏங்கி, நின்னை நயந்து நிற்கின்றாள் ஒரு பேதை என்று மட்டும் சொல்லிவா என்கிறாள் பரகாலநாயகி. ( வண்டாகிய குருவின் மூலம் ஒரு வார்த்தை சொன்னால் போதும் பெருமாள் உடனே அருள் புரிவான் என்பது கருத்து). மேலும் மணவாள மாமுனிகளும் இத்தலத்து தேவாதிராஜனை மங்களாசாசனம் செய்துள்ளார்.

வருடம் முழுவதும் திருவிழாதான் இத்தலத்தில் சித்திரையில் வருடப்பிறப்பு, ஸ்ரீராம நவமி, வசந்த உற்சவம், அட்சய திரிதியை கருட சேவை, உடையவர் உற்சவம், வைகாசி திருவோணத்தை தீர்த்த நாளாகக் கொண்டு பத்து நாள் பெருவிழா, ஆடியில் சிறப்பாக ஆடிப்பூரம், பதினெட்டாம் பெருக்கு, தாயாருக்கு வெள்ளிகிழமைகளில் சிறப்பு திருமஞ்சனம், ஜேஷ்டாபிஷேகம். ஆவணியில் ஸ்ரீஜெயந்தி உறியடி உற்சவம், புரட்டாசியில் தேசிகர் உற்சவம், தாயாருக்கு நவராத்திரி உற்சவம். ஐப்பசியில் திரு பவித்திர உற்சவம். கார்த்திகை கலியன் உற்சவம். மார்கழியில் பகல் பத்து, பத்தாம் நாள் இரவு திருமங்கையாழ்வார் திருவடி தொழுதல், மோகினி அவதாரம், வைகுண்ட ஏகாதசி இராப்பத்து. தை பொங்கல் செல்வர் திருமஞ்சனம், கனு பார் வேட்டை, நான்காம் நாள் ஏகாசன சேவை. அமாவாசை பெரிய திருமஞ்சனம் கருட சேவை, வெள்ளிக்கிழமைகளில் தாயார் திருமஞ்சனம். மாசி புனர் பூசம் பெருமாள் இராமபிரானாக திருக்கோலம் கொண்டு வேதபுரீசருக்கு காட்சி தருதல். பங்குனி உத்திரம் 10 நாள் உற்சவம், உத்திரத்தன்று காலை தீர்த்தவாரி மாலை திருக்கல்யாணம்.

இது ஒரு மறுபதிவு  அடுத்து அடியோங்கள் இந்த யாத்திரையின்  போது   சேவித்த ஊத்துக்காடு காளிங்க நர்த்தன கிருஷ்ணரின் வைபவத்தைப் பற்றிக்காணலாம்.  அடுத்த மாதம்  புணருத்தாரணம் செய்யப்ப்ட்ட இக்கோவிலின் சம்ப்ரோக்ஷணம் நடைபெறவுள்ளது எனவே இந்த தொடரில் இத்தலத்தை பற்றி எழுத விழைகின்றேன். 

Friday, October 2, 2015

கருட யாத்திரை - 10

சிறு புலியூர் சலச்சயனம் 




கருடனும் அனந்தனும் மாற்றாந்தாய் மக்கள், பெருமாளுக்கு பரமபதத்தில் கைங்கர்யம் செய்யும் நித்ய சூரிகள் ஆயினும் பகைவர்கள்.  இந்த சிறுபுலியூர் திவ்ய தேசத்தின் தல வரலாறு இந்த  கருட நாக பகைமையை அடிப்படையாக் கொண்டதேஇத்தலத்தைப் பற்றிய வரலாறு கருட புராணத்தில் பேசப்படுகிறது. பகவான் ஸ்ரீமந் நாராயணனை சயனத்தில் தாம் தாங்குவதாக ஆதிசேஷனுக்கும், எல்லா இடங்களிலும் அவரைச் சுமந்து செல்வதாக கருடனுக்கும் கர்வம் ஏற்பட்டது. இருவரும் இரு வேறு காலத்தே தாமே பகவானைத் தாங்குவதாக எண்ணம் கொண்டனர். விளைவு,  இருவருக்கும் போட்டியும் வெறுப்பும் வளர்ந்து பகையாக மாறியது. ஆதிசேஷன் இந்தப் பகை விலக எண்ணம் கொண்டு தவமிருந்தார். அவர் தவத்துக்கு இரங்கி மாசி மாதம் வளர்பிறை ஏகாதசி தினத்தன்று அவருக்கு சேவை சாதித்த  பெருமாள், ஆதிசேஷன் மடியில் அனந்த சயனம் கொண்டு சிறு குழந்தையாக பாலசயனக் கோலத்தில் கோயில் கொண்டார். அதாவது, பாற்கடலில் மிதக்கும் ஆதிசேஷன் மீது பள்ளிகொண்டிருக்கும் கோலம். கருடனுக்கு அபயமளித்த தலம். எனவே இத்தலத்தில்   உயரத்தில்   ஆதிசேடனுக்கும்  பூமிக்கு கீழ் கருடனுக்கும் சன்னதி அமைந்துள்ளது.   கருடா சௌக்கியமா? என்று கேட்டதற்கு அவரவர்கள் இருக்கவேண்டிய இடத்தில் இருந்தால் சௌக்கியம் என்று சொல்லப்பட்ட ஸ்தலம்.

 சலசயனம், பால வியாக்ரபுரம்,  என்றும் அழைக்கப்படுகின்றது. சல சயனன் -என்றது அது அவனுக்குத் திரு நாமமாய் ஜல சயனன் வர்த்திக்கிற இடம் சல சயனம் என்று ஊருக்கு பெயராகிறது  என்பது வியாக்கியான சக்ரவர்த்தி பெரியவாச்சான் பிள்ளை அவர்களின் வியாக்கியானம்   திருநாகையில் இருந்து மயிலாடுதுறை செல்லும் வழியில் இத்தலம் அமைந்துள்ளது. அடியோங்கள் வேறு வழியாக சென்றோம் எனவே இந்த யாத்திரையின் போது இத்தலம் செல்லவில்லை. படங்கள் முன்னர் ஒரு யாத்திரையின் போது எடுத்தவை. கருடனுடன் தொடர்புடைய தலம் என்பதால் இந்த யாத்திரையில் சேவிக்கலாம் என்பதால் இனைத்துள்ளேன்.

ஏழு நிலை இராஜகோபுரம் (உட்புறம்)


னி இத்தலம் சிறுபுலியூர் என்று ஏன் அழைக்கப்படுகின்றது என்பதைக் காணலாமா அன்பர்களே.  வியக்கிரபாதர் என்னும் முனிவர் சிதம்பரத்தில் தவமியற்றி தனக்கு மோட்சம் வேண்டுமென்று நடராஜரிடம் கேட்க, மோட்சம் கொடுக்க வல்லவர்மகாவிஷ்ணுவே என்று நடராஜர் கூற, அவ்வாறாயின் அதற்குரிய ஸ்தலத்தை எனக்கு காண்பியும் என்று முனிவர் வேண்ட நடராஜர் சிவலிங்க ரூபமாக வழிகாட்ட அவரை விரைந்து பின்பற்றுவதற்கு தாம் பெற்ற வலிமையால் விரைந்து செல்லும் புலியின் கால்களால் இத்தலத்திற்கு வந்து சேர்ந்து முக்திபெற்றதால் இதற்குச் சிறுபுலியூர் என பெயர் வந்ததென்பர். 

இரண்டாம்  சுற்று  கோபுரம் 

பெருமாள் தரிசனமும் கண்டபோது அந்த பிரமாண்ட தோற்றம் பார்த்து விக்கித்துப்  போனார்  வியாக்ரபாத முனிவர். இரண்டு கண்களுக்குள்ளும் விரித்த இரு கரங்களுக்குள்ளும் அடங்காத அந்தப் பரம்பொருளை எப்படி முழுமையாகக் கண்களால்  காண முடியும், எப்படி கரங்களால் தீண்டி இன்புற முடியும் என்று திகைத்துப் போனார் அவர். ஆமாம், திருவனந்தபுரம் திவ்ய தேசத்தில் பள்ளி கொண்டிருக்கும் பெருமாளை மூன்று வாசல்கள் வழியாக, தனித்தனியாக சிரம், நாபி, பாதம் என்று தரிசிப்பதுபோல நெடிய தோற்றம்! அவருடைய  தர்மசங்கடத்தைப் பார்த்த பெருமாள் அவருக்கு அருள் வழங்கும் வண்ணம் தன்னை அப்படியே சுருக்கிக் கொண்டார். புலியாருக்காக இப்படி சிறுவடிவினனாகப் பெருமாள் மாறியதாலும் இத்தலம் சிறுபுலியூர் என்று வழங்கப்பட்டிருக்கலாம். இந்தச் சிறு கோலத்திலும் இவர் தன் நாபிக் கமலத்தில் பிரம்மனைத் தாங்கியிருக்கிறார். திருவடிகளுக்கு அருகே ஸ்ரீதேவி-பூதேவியரோடு சிறு வடிவில் புலிக்கால் முனிவரும்  கன்வ முனிவரும் காட்சி தருகிறார்கள்.  இவர்களுக்கும் இங்கு வழிபாடுகள் நடக்கின்றன.

கள்ளம்மனம்விள்ளும்வகை கர்ருதிக்கழல்தொழுவீர்
வெள்ளம்முதுபரவைத் திரைவிரிய கரையெங்கும்
தெள்ளும்மணிதிகழும் சிறுபுலியூர்ச்சலசயனத்
துள்ளும் எனதுள்ளத்துள்ளும் உறைவாரைஉள்ளீரே.  (பெ.தி  7-9-1)

பொருள்: மனத்திலிருந்து வஞ்சகச்செயல் விட்டு நீங்க வேண்டும் வகையை விரும்பி இருப்பவர்களே! கடலின் அலைகளால் உண்டான வெள்ளமானது கரைகளில் எல்லாம் பரவ அதனால் கொழிக்கப்பட்ட இரத்தினங்கள் விளங்கும் சிறுபுலியூரில் சலசயனம் என்னும் சன்னதியிலும், என்னுடைய உள்ளத்திலும் நித்திய வாசம் செய்யும் பெருமானை சிந்தனை செய்யுங்கள் என்று இத்தலத்தில் வாசம் செய்யும் பெருமாளே தன் உள்ளத்திலும் வாசம் செய்கின்றார் என்று மங்களாசானம் செய்த இச்சிறுபுலியூர் தலத்தின்  

மூலவர்:  சலசயனப் பெருமாள், தெற்கே திருமுக மண்டலம்,   புஜங்க சயனம். 

உற்சவர்:   கிருபா சமுத்திரப் பெருமாள் (அருள்மாகடல்)

தாயார்:      திருமாமகள் நாச்சியார்,

உற்சவர்:      தயாநாயகி

தீர்த்தம்:     மானச புஷ்கரிணி

விமானம்:     நந்தவர்த்தனம்

தல விருட்சம் : வில்வம் 

பிரத்யக்ஷம் :  வியாசர், வியாக்ர பாதர்.

ஆழ்வார்களால் மங்களாசாஸனம் செய்யப்பெற்ற 108 வைணவத் திருப்பதிகளுள் ஒன்றான இந்தக் கோயில், 11வது தலமாக இடம்பெற்றுள்ளது. பெருமாள் புஜங்க சயனத்தில் தெற்கு நோக்கிய திருக்கோலத்தில் காட்சி தருகிறார். 108 திவ்ய தேசங்களில் பெருமாள் சயனக் கோலத்தில் தெற்கு நோக்கிக் காட்சி தருவதாக அமைந்த தலங்கள் இரண்டுதான். முதல் தலமான ஸ்ரீரங்கத்தில் பெருமாள் மிகப் பெரிய வடிவினனாக அனந்த சயனத்தில் சேவை சாதிக்கின்றார். இரண்டாவது தலமான இங்கே பெருமாள் பால சயனத்தில் குழந்தை வடிவினனாகக் சேவை சாதிக்கின்றார்.



ஏற்கெனவே பிரமாண்ட எழிலுடையவராகப் பெருமாளை வேறு திவ்ய தேசங்களில் தரிசித்தவர்களுக்கு இந்தச் சிறு வடிவம் வித்தியாசமான தோற்றமாகப்படுவதில் ஆச்சரியமில்லை. ஆனால் இதே ‘ஏமாற்றம்’ திருமங்கையாழ்வாருக்கும் ஏற்பட்டது என்பது தான் குறிப்பிடத்தக்கது. புலிக்கால் முனிவருக்காக அவர் இப்படி குறுந்தோற்றம் கொண்டார் என்றாலும் தனக்கு அது திருப்தியளிக்கவில்லை என்பதால், ஏக்கமும் ஏமாற்றமும் கொண்டார் ஆழ்வார். உடனே இவரையும் சமாதானப்படுத்தும் நோக்கத்துடன், பெருமாள் அசரீரியாக, ‘நீ பார்க்க விரும்பும் வடிவை திருக்கண்ணமங்கை திருத்தலத்தில் காண்பாயாக’ என்று அருளிச் செய்தார். திருவனந்தபுரம் போல தலையை இடது ஓரத்துக்கும், வலது ஓரத்துக்குமாக அசைத்து தரிசிக்க  வேண்டிய அவசியம் போல, திருக்கண்ணமங்கையில் தலையை கீழிருந்து மேலாகக் கழுத்தை வளைத்துப் பார்க்க வேண்டிய அவசியம்! 

ஆண்டாள் சன்னதி 

பகவானின் அண்ணாந்த தரிசனத்துக்கு முன்னால் கழுத்து வலி தெரியுமா என்ன? திருக்கண்ணபுரத்தில் வேறு அமைப்பில், பிரமாண்டமாகத் தனக்கு தரிசனம் தர உத்தரவாதம் அளித்திருக்கும் பெருமாளின் கருணையில் நெகிழ்ந்து  இந்த திருச்சிறுபுலியூர் பெருமாளை உள்ளம் உருகி 

                      
கருமாமுகிலுருவா! கனலுருவா! புனலுருவா! 
பெருமால்வரையுருவா! பிறவுருவா!  நினதுருவா!
திருமாமகள் மருவும் சிறுபுலியூர்ச்சலசயனத்து
அருமாகடலமுதே!  உனது அடியேசரணாமே.  (பெ.தி  7-9-9)

பொருள்: கரிய பெரிய மேக வண்ணனே! அன்பில்லாதார் அணுக முடியாதபடி நெருப்பைப் போலும் உருவமுடையவனே! நீர் போல குளிர்ந்த வடிவுடையவனே!  பெரிய மலை போன்றஉருவத்தை உடையவனே! மற்றுமுள்ள பொருள்களின் வடிவாக உள்ளவனே, அசாதரணமானவனே! திவ்விய மங்கள வடிவானவனே! பெரிய பிராட்டியார் பொருந்தி வாழும் சிறுபுலியூர்  சலசயனத்து அரிய கடலமுதம் போன்றவனே! உன்னுடைய திருவடிகளே அடியேனுக்கு புகலிடமாகும்  என்று அருமா கடலமுதே என்று பெருமாளையும், திருமாமகள் என்று தாயாரையும்  சிறுபுலியூர் சலச்சயனம் என்று தலத்தையும் ஒரே பாசுரத்தில்  மங்களாசாசனம் செய்திருக்கிறார் திருமங்கையாழ்வார்.

ஆண்டாள் சன்னதி   ஹனுமன் சன்னதி விமானங்கள் 

ஏழு நிலை  ராஜகோபுரத்துக்கு அடியிலேயே பால ஆஞ்சநேயர், பெருமாளின் பால சயனத் தோற்றத்துக்குக் கட்டியம் கூறுவது போல அமைந்துள்ளார். இடது பக்கம் ஆண்டாள் சந்நதி. இந்த ஆண்டாளுக்கு அருகில் பக்த அனுமன் விநயத்தோடு காட்சியளிக்கிறார். இவர்களுக்கு எதிரே யாகசாலையும் ஆழ்வார்கள் சந்நதியும் அமைந்துள்ளன. 

சிறு குழந்தை போல சல சயனத்தில் சேவை சாதிக்கும் மூலவரை தரிசித்துவிட்டு கருவறையை வலம் வந்தால், விநாயகரையும் அவர் முன் பலிபீடத்தையும் காணலாம்.  தொடர்ந்தால், ஒவ்வொரு திக்கை நோக்கியபடியும் அடுத்தடுத்து மஹாவிஷ்ணு விக்ரகங்கள் கோஷ்ட தெய்வங்களாகப் பரிமளிக்கின்றன.  கூடவே  விஷ்ணு துர்க்கை. தாயார் திருமாமகள் நாச்சியார் தனிச் சந்நதியில் அமர்ந்து அருள் பரிபாலிக்கிறார். இவரது உற்சவர் தயாநாயகி என்ற பெயரில் கருணையின்          மொத்த  உருவமாகத் திகழ்கிறார். பூமிக்குக் கீழே கருடன் தனி சந்நதியில் விளங்குகிறார். ஆதிசேஷனோ, ஆனந்த புஷ்கரணியின் கரையில் எழுந்தருளியிருக்கிறார்.  இவர் அனைத்து  வகையான நாக தோஷங்களையும் சர்ப்ப கிரகங்களால் ஏற்படும் பிரச்னைகளையும்  தீர்க்க வல்லவர்; மகப்பேறும் அருள்பவர். 


பெருமாள் இராஜகோபுரம் - மணவாள மாமுனிகள் இராஜகோபுரம்

கிழக்கு நோக்கி மணவாள மாமுனிக்கு மூன்று நிலை இராஜகோபுரத்துடன் தனி சன்னதி உள்ளது. பெருமாள் இராஜ கோபுரமும் ஆச்சார்யார் இராஜ கோபுரமும் அருகருகே இருக்கும் காட்சி அருமையாக உள்ளது. 


குழந்தை பாக்கியம் வேண்டி ஏராளமான பக்தர்கள் இந்தத் தலத்துக்கு வருகிறார்கள். மாங்கல்ய தோஷம், காலசர்ப்ப தோஷம், செவ்வாய் தோஷம், பாலாரிஷ்ட தோஷம்,  திருமணத்தில் தடை, நவக்கிரக பரிகாரம் என, பல்வேறு தடை சிரமங்களைச் சந்திப்பவர்களுக்கு இந்தப் பெருமான் அருள்புரிந்து ஆறுதல் தருகின்றார் என்பது நம்பிக்கை. தீராத நோய், மனநலம் பாதிக்கப்பட்டவர்களும், இங்கே வந்து, சிறப்பு  வழிபாடுகளைச்  செய்து, நலம் பல பெற்றுச் செல்கின்றனர்..  அடுத்து  தேரழுந்தூரில் ஆமருவியப்பனையும் அவருடன் கருடனையும் சேவிக்கலாம் அன்பர்களே.