பெரியாழ்வார் தம் பல்லாண்டில் பெருமாளை "பையுடை நாகப்பகைக் கொடியான்" என்று மங்களாசாசனம் செய்துள்ளார். அதாவது நாகங்களின் பகைவன் கருடன் ஏனென்பதை நாம் அறிவோம், தனது தாய் அடிமையாக காரணமாக இருந்தவை நாகங்கள் என்பதால் மாற்றான் தாய் மக்கள் என்றாலும் நாகங்கள் கருடனுக்கு பகை. ஆகையால் கருடன் நாகங்களை அடக்கி தனது மேனி முழுவதும் ஆபரணமாக அணிந்துள்ளான்.
பூணூல் : வாசுகி வலது கை கங்கணம்: குளிகன்
இடது கை கங்கணம் : ஆதி சேஷன்
அரையில் அணி: தட்சகன்
மாலை: கார்கோடகன்.
வலது காது குண்டலம்: பத்மன்
இடது காது குண்டலம் : மஹா பத்மன்
திருமுடியில் : சங்க பாலன்
நாக பாசத்தால் இந்திரஜித் இளையபெருமாளை கட்ட, அவர் மயங்கி விழுந்த போது அந்த கட்டிலிருந்து விடுவித்தவன் கருடன். அதற்காக இராம்பிரானின் தழுவுதல பெற்றவன் கருடன்.
"ககநகர கனககிரி கரிமதர நிகம்மய
நிஜ கருட கருதநில லவகளித விஷவதநக்ர கதந"
என்று ஸ்வாமி தேசிகன் இவ்வைபவத்தை பாடுகின்றார்.
பரம பக்தனான ப்ரகலாதனை கடிக்க ஹிரண்யகசிபு பாம்புகளை ஏவிய போது அப்பாம்புகளை துரத்தியவர் கருடன்.
பாம்பின் விஷத்தை நீக்கும் சக்தி கருடன் இறகு வீசும் காற்றுக்கு உண்டு.
பாம்பு தீண்டி இறந்த தில்லை வாழ் அந்தண சிறுவன் கம்பர் தமது இராமாயணத்தில் நாக பாச படலத்தை படித்தவுடன் உயிர் பெற்று எழுந்தான் என்று கூறுவர்.
எதிரிகளை வெல்ல, விஷங்களை முறிக்க, மந்திர தந்திர தீய சக்திகளை ஒடுக்க கருட மந்திரத்தை ஜபிக்கலாம்.
பாண்டவர்கள் முதலில் கருட வியூகம் அமைத்தபோது தான் வெற்றி பெறுகின்றனர்.
கார்கோடகன் என்னும் நாகத்தை மாலையாக அணிந்துள்ளதால் கருடன் சனி பகவானின் விளைவுகளை தடுக்கிறார்.
விடமுடைய பாம்பின் உடம்பையும் உயிரையும் உண்ணும் பறவை கருடன். அக்கருடனுடைய அரைக்கசையாக, கைகளில் தோள் வளைகளாக, முடி மேல், காது குண்டலங்களாக விளங்கும் ஆபரணங்கள் எல்லாம் பாம்பு, குடையும் பாம்பு என்று பரிபாடல் கூறுகின்றது.
.
விடமுடை அரவின் உடலுயிர் உருங்கு உவணம்
அவன்
மடிமேல் வலந்தது பாம்பு
பாம்பு தொடி பாம்பு தலைமேலது
பாம்பு
இறை தலையன
பாம்பு படிமதம் சாய்த்தோய் பசும் பூனலை
கொடிமேலிருந்தவன் தாக்கு இரையது பாம்பு - பரிபாடல்
கருடனின் மேனியை அலங்கரிக்கும் அஷ்ட நாகங்கள் இவை
வலது கங்கணம் - குளிகன் இடது கங்கணம் - அனந்தன் உதர பந்தனம் - வாசுகி அரைஞாண் - தட்சன் மாலை : கார்கோடகன் வலது குண்டலம் - பத்மா இடது குண்டலம் - மஹா பத்மா கிரீடம் - சங்க சூடன்
இவ்விரண்டு படங்களில் தெளிவாக கருடனின் ஆபரணமாக நாகங்கள் விளங்குவதை காணலாம்
கருடன் ஞானம், சக்தி, பலம், ஐஸ்வர்யம், வீர்யம், தேஜஸ் என்னும் ஆறு குணங்கள் உடையவர்.
ஏழு ஸ்வரங்கள் உடைய ஸாம வேத வடிவானவர்.
அனிமா- உடலை சிறிதாக்குதல், மஹிமா- உடலை பெரிதாக்குதல், லகிமா-உடலை லேசாக்குதல், கரிமா- உடலை பளுவுடையதாக்குதல், வசித்வம்- எல்லாவற்றையும் தன்வயமாக்குதல், ஐஸ்வர்யம்- எல்லாரையும் அடக்கியாளும் தலைவனாய் இருத்தல், பிராப்தி- தான் நினைத்ததைப்பெறுதல், ப்ரகாமம்- நினைத்தவிடம் செல்லுதல் என்னும் அஷ்டமா சித்திகளும் அடையப் பெற்றவர்.
இவரின் மேல் ஆரோகணித்துத்தான் பெருமாள் நம் துயர் துடைக்க கொற்றப்புள் ஏறி வருகின்றார்.
**********************
கருட சேவையின் அடுத்த பதிவு வெள்ளிப்பதிவு அதாவ்து 25வது பதிவு, அடியேன் இத்தொடரை ஆரம்பிக்கும் போது இவ்வளவு பதிவுகள் எழுத முடியுமென்று நினைக்கவில்லை கை வசம் இருந்தவை திருநாங்கூர் 11 கருட சேவையின் புகைப்படங்கள் மற்றும் சில திருக்கோவில்களின் கருட சேவை படங்கள் மட்டும்தான். செல்ல செல்ல பெருமாளே பல விஷயங்களை அடியேன் கண்ணில் பட வைத்தார் ஆகவே 25வது பதிவை ஒரு சிறப்புப்பதிவாக பதிய ஐயன் பணித்தார்.
இரண்டு சிறப்புக்கள் அப்பதிவில் இருக்கும் முதலாவதை அடியேனே சொல்லிவிடுகின்றேன், இரண்டாவது என்னவென்று ஊகித்து சொல்லுங்கள் அன்பர்களே.
முதலாவது சிறப்பு: கவிதாயினி கவிநயா அவர்கள் ஒரு சிறப்பு கவிதை எழுதித் தர ஒத்துக் கொண்டுள்ளார். எனவே கருட சேவையின் வெள்ளிப்பதிவு அவர் கவிதையுடன் வெளி வரும் .
அடுத்த சிறப்பு என்ன அன்பர்களே? யோசித்துப் பார்த்து சொல்லுங்கள் இல்லையென்றால்
பொறுத்திருங்கள்.
முன் பதிவில் பார்த்தோம் ஆனியில் சுவாதியன்று பெரியாழ்வார் எம்பருமானுக்கு பல்லாண்டு பாடியதை குறிக்கும் வகையில் கருட சேவை நடைபெறுவதை, அது போல பூரண சரணாகதி தத்துவத்தை உணர்த்தும் கஜேந்திர மோக்ஷத்தை உணர்த்தும் வகையில் ஆடி பௌர்ணமியன்று விஷ்ணுவாலயங்களில் கருட சேவை நடைபெறுகின்றது. திருமயிலை வேதாந்த தேசிகர் தேவஸ்தானம் கஜேந்திர மோக்ஷ கருட சேவையின் சில படங்கள் இப்பதிவில் கண்டு களியுங்கள்.
ஆனைக்காக பொலிந்த கருடன் மேல் வரும் கரியான்
எழிற்கோலம் காணக் கண் கோடி வேண்டும்
பூர்வாச்சாரியார்கள் கஜேந்திர மோக்ஷத்தைப் பற்றி கூறும் போது பெருமாளே தாங்கள் யாணையை முதலையிடமிருந்து காத்தது பெரிதல்ல ஆனால் வந்த வேகம்தான் அருமை என்று பூரண சரணாகதி செய்த க்ஷணமே நாம் அவனுடைய சொத்து என்று உணர்த்துகின்றனர்
.
ஆடும் பறவையில் எம்பெருமான் பின் கோலம்
ஓடும் புள்ளேறி
சூடும் தண் துழாய்
நீடு நின்று அவை
ஆடும் அம்மானே
பைங்கண் மால் யானை படுதுயரம் காத்தளித்த செங்கண் மால் திருவடிகளே சரணம்
அரிது அரிது மானிடராய் பிறப்பது அரிது என்று பாடியுள்ளார் ஔவையார். ஆம கிடைத்தற்கரியது மானிடப்பிறவி. நாம் முற்பிறவியில் செய்த புண்ணிய பாவங்களின் பயனாக இந்த கர்ம பூமியில் நமக்கு இறையருளால் மனிதப்பிறவி கிட்டுகின்றது. இவ்விதம் அமையும் பிறவியில் நமக்கு இறைவன் பால் ஆழ்ந்த பக்தியும் நம்பிக்கையும் தூய நெறியுடன் வாழவும் அவரது அருள் வேண்டும். அந்த அகிலாண்ட கோடி பிரம்மாண்ட நாயகனை அல்லும் பகலும் அனவரதமும் இதயக் கமலத்தில் நிறுத்தி பூஜிக்கவும், அவருடைய திவ்விய தரிசனத்தை பெறவும் நாம் முற்பிறவியில் நற்காரியங்கள் செய்திருக்க வேண்டும். மேலும் மறுமையில் முக்தி நிலை அடையவும் தூய நெறியில் வாழ்வது அவசியம். நமது தர்ம நெறியின் ஒவ்வொரு விதிக்கும் விஞ்ஞான பூர்வமான ஓர் அர்த்தம் உண்டு. இறைவனுக்கு அருகில் செல்ல உள்ளம் பக்குவப்பட வேண்டும், உள்ளம் பக்குவப்பட உடல் பக்குவப்பட வேண்டும், உடல் பக்குவப்பட உணவும் அதை உண்ணும் முறையும் பக்குவப்பட வேண்டும் இவ்வாறு உணவு, உடல் உள்ளம் மூன்றும் பதப்பட உதவுவனவே விரதங்கள்.
பெருமாள் கோவில்களின் காவலனும் கருட பகவானே
பெருமாளின் வாகனமாகவும், கொடியாகவும் விளங்கும் கருடனுக்கும் உகந்த விரதம் ஒன்று உண்டு. ஆடி மாதம் வளர்பிறை பஞ்சமியன்று இவ்விரதம் அனுஷ்டிக்கப்படுகின்றது. தமிழ் நாட்டில் கருட பஞ்சமி விரதம் மிகவும் பரவலாக அனுஷ்டிக்கப்படுவதில்லை என்றாலும் கருட சேவையைப் பற்றி எழுதி வருவதால் இவ்விரதத்தைப் பற்றி படித்த சில தகவல்களை அன்பர்களாகிய உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.
கருட பஞ்சமியன்று கருட தரிசனம் பெறுங்கள்
இந்த வருடம் நாக சதுர்த்தி 05/08/08 அன்றும், கருட பஞ்சமி 06/08/08 அன்றும் கொண்டாடப்படுகின்றது.
கருட பஞ்சமியன்று கருட வழிபாடும், விஷ்ணு வழிபாடும் கனிந்த வாழ்க்கையை அமைத்துக் கொடுக்கும்.
கருடனைப் போல பலசாலியும் புத்திமானாகவும், வீரனாகவும் மைந்தர்கள் அமைய அன்னையர்கள் கருட பஞ்சமியன்று விரதம் இருக்கின்றனர். அன்று ஆதி சேஷன் விக்கிரகம் வைத்து சிறப்பு பூஜைகள் செய்கின்றனர். இது என்ன கருட பஞ்சமியன்று ஆதிசேஷனுக்கு பூஜையா என்று வியக்கின்றீர்களா? வினதையின் மைந்தன் கருடனின் மாற்றாந்தாய் கத்ருவின் மைந்தர்கள்தானே நாகங்கள் அவர்கள் செய்த சூழ்ச்சியினால்தானே வினதை அடிமையாக நேர்ந்தது அன்னையின் அடிமைத்தளையை களைய கருடன் தேவ லோகம் சென்று அமிர்தம் கொண்டு வர நேர்ந்தது அப்போதுதான் பெருமாளுடன் கருடன் போரிடும் வாய்ப்பும் வந்தது பின் பெரிய திருவடியாக எப்போதும் பெருமாளை தாங்கும் பாக்கியமும் கிட்டியது எனவே கருட பஞ்சமியன்று ஆதி சேஷன் விக்கிரகம் வைத்து பூஜை செய்யப்படுவதாக ஐதீகம். மேலும் கருடனின் உடலில் எட்டு ஆபரணமாக விளங்குபவையும் அஷ்ட நாகங்களே. இனி கருட பஞ்சமி பற்றியும் நாக சதுர்த்தி பற்றியும் அடியேன் படித்த இரு ஐதீகங்கள் அவற்றை தாங்களும் படிக்க கிளிக்குக கீழே.
காசியில் பறக்காத கருடன்கள்காசியில் கருடன் பறப்பதில்லை பல்லி சொல்லுவதில்லை என்பது ஐதீகம். இது ஏன் அவ்வாறு என்று அறிந்து கொள்வோமா? ஸ்ரீ இராமர் இராவணனை கொன்றதால் அவரை பிரம்மஹத்தி தோஷம் பற்றிக்கொள்கின்றது. அப்பாவம் நீங்க அவர் சிவ பூஜை செய்ய வேண்டியது அவசியமாகின்றது. இராமேஸ்வரம் அடைந்தவுடன் சிவலங்கத்தை கொண்டு வர அனுமனை முக்தி நகரமாம் காசிக்கு அனுப்புகின்றார். காசியை அடைந்த அனுமனுக்கு அங்குள்ள ஆயிரமாயிரம் சிவலிங்களுள் எது சுயம்பு லிங்கம் என்று தெரியாமல் குழம்பி நின்றார். பூஜைக்கு குறித்த நேரமும் நெருங்குவதால் காசியின் காவல் தெய்வம் கால பைரவரிடம் அனுமதி பெறாமலேயே சுயம்பு லிங்கம் உள்ள இடத்தின் மேல் கருடன் வட்டமிட்டு குறிப்பிட்டுக் காட்ட பல்லியும் நல்லுரை சொல்லி சுயம்பு லிங்கத்தை அடையாளம் காட்டுகின்றது.
அனுமன் அந்த சுயம்பு சிவலிங்கத்தை எடுத்துக் கொண்டு கிளம்பும் போது பைரவர் அவரைக் கண்டு நிறுத்தினார். உண்மையை அனுமன் உணர்த்த, தேவர்களும் ஸ்ரீ இராமரின் சிவபூஜைக்குத்தான் அனுமன் சிவலிங்கத்தை எடுத்து செல்கின்றார் என்வே அவரை நிறுத்த வேண்டாக் என்று வேண்ட , அவரை சிவலிங்கத்துடன் செல்ல அனுமதித்த கால பைரவர் அனுமனுக்கு உதவிய பல்லிக்கும், கருடனுக்கும் சாபம் கொடுக்கின்றார். எனவே காசியில் பல்லி சொல்வதில்லை, கருடன் பறப்பதில்லை என்பது ஐதீகம். இவ்வாறு தாமதமானதால் சீதா தேவியார் மணலால் லிங்கம் அமைக்க இராமர் சிவபூஜை செய்ததும், பின்னர் அனுமன் வருத்தப்படக்கூடாது என்று அவர் காசியில் இருந்து கொண்டு வந்த லிங்கத்திற்கே இராமேஸ்வரத்தில் முதல் பூஜை என்று வரம் கொடுத்ததும் தாங்கள் அனைவரும் அறிந்ததே.
இந்த கருட பஞ்சமி நன்னாளில் கருட தரிசனம் கண்டு இன்புற்று வாழ பிரார்த்திக்கின்றேன்.
என்னங்க தலைப்புக்குப் பதிலா ஒரு சமன்பாட்டை போட்டு வைத்திருக்கின்றேன் என்று பார்க்கிறீர்களா? விடை என்ன என்று சரி பார்க்க பதிவின் இறுதிக்கு வரவும், அவசரமில்லை, மெதுவாக பெருமாளின் அழகையும் ஆழ்வாரின் அழகையும் கண்டு இரசித்து விட்டே வரவும்.
வாழ்த்தின் பயன் வாழ்த்து பெறுபவர்க்கு மட்டுமல்லாமல் வாழ்த்துபவர்களுக்கும் பயன்படுகின்றது. நம்மை விட பெரியவர்களை நாம் வாழ்த்தும் போது அவர்கள் மனமகிழ்ந்து நமக்கு வேண்டிய நன்மைகளை செய்கின்றனர். இவ்வாறே நாம் இறைவனை வாழ்த்தினால் அந்த கருணாமூர்த்தி நமது கவலைகளை போக்கி நமக்கு எல்லா நன்மைகளையும் அருளுவார் அல்லவா. இவ்வாறு அந்த ஆதி மூலனுக்கே பல்லாண்டு பாடியவர்தான் பெரியாழ்வார்.
ஸ்ரீ வில்லிபுத்தூரிலே வடபத்ர சாயிக்கு புஷ்ப கைங்கரியம் செய்து வந்தவர் பெரியாழ்வார். இவரே சூடிக்கொடுத்த சுடர்க்கொடியாள், ஆண்டாள் நாச்சியாரை வளர்க்கும் பேறு பெற்றார். அக்காலத்தில் மதுரையை ஆண்டு வந்த வல்லப தேவன் என்ற பாண்டிய மன்னன் ஒரு சடசு நடதினான். அதில் அவன் " யார் முழு முதற் கடவுள்" ? என்ற கேள்வியை மக்கள் முன் வைத்தான். அதற்கு பரிசாக தங்க நாணயங்கள் அடங்கிய பொற்கிழி ஒன்றை தனது தவத்திறமையினால் எந்த வித பிடிப்புமில்லாமல் ஆகாயத்தில் தொங்க விட்டான். தனது கேள்விக்கு யார் சரியான விடை அளிக்கின்றார்களோ அவரது காலடியில் இந்த பொற்கிழி தானாக விழும் என்றும் அறிவித்திருந்தான். இந்த சடசிலே அனைத்து சமயத்தினரும் கலந்து கொண்டார்கள் தங்கள் தெய்வமே சிறந்தவர் என்று வாதிட்டனர். அதிலே பெரியாழ்வாரும் கலந்து கொண்டு, வேதப்பகுதியை எடுத்துக்காட்டியே விஷ்ணு சித்தர் கூடல் மாநகரில் பலசமய சான்றோர்கள் கூடிய அந்த சபையில் தனது வாதத் திறமையால் அனைவரையும் தோற்க்கடித்து "விஷ்ணுவே முழுமுதற் கடவுள், வைணவ சமயமே மிகச்சிறந்த சமயம்" என்பதை நிருபித்தார். மன்னன் அறிவித்த பொற்கிழியையும் தானாக அவரது காலில் விழுந்தது .
யானை மேல் பெரியாழ்வார்
வெற்றி பெற்ற பெரியாழ்வாரை மன்னன் தனது பட்டத்து யாணை மேலே ஏற்றி நகர் வலம் வரச்செய்தான் வல்லப தேவன். அவ்வாறு பொற்கிழியுடன் அவர் வலம் வரும் போது, தன் அன்பன் வலம் வரும் அழகை காண்பதற்காக வானில் கூடலழகர், வானோர் தனித்தலைவர், அயர்வரும் அமரர்கள் அதிபதி, மூவேழுகுக்கும் நாதன், ஆராவாமுதமான திருமால், ஸ்ரீ தேவியுடன் கருடாரூடராக வருகின்றார். பெருமாளைக் கண்டவுடன் , "எங்கே பெருமாளின் திருவுருவத்திற்க்கும் பெருமைகளுக்கும் கண்ணேறு பட்டுவிடுமோ" என்று அஞ்சி அவரை வாழ்த்தி பரபரப்புடன் யானை மேலிருந்த மணிகளையே தாளமாகக் கொண்டு திருப்பல்லாண்டை பாடுகின்றார், தன்னை யசோதையாகவும், பெருமாளை கண்ணனாகவும் பாவித்து பாசுரங்கள் பாடிய விஷ்ணு சித்தர் என்னும் பெரியாழ்வார்
நீங்கள் இப்பதிவில் படித்த பெரியாழ்வார்தான்
இவர் கலி பிறந்த 47-வதான க்ரோதன வருடம் ஆனி மாதம், சுகல பக்ஷம், ஏகாதசி, ஞாயிற்றுக்கிழமை கூடிய சுவாதி நட்சத்திரத்தில், , வேயர் குலத்தில் புதுமையாருக்கும், முகுந்தாச்சார்யாருக்கும் புத்திரராக, கருடனின் அமசமாக அவதாரம் செய்தார்.
இவரது அவதார நட்சத்திரமான ஆனி சுவாதியன்று ஸ்ரீ வேதாந்த தேசிகர் தேவஸ்தானம் திருமயிலையில் இவ்விழா சிறப்பாக நடைபெற்றது. அந்த விழாவின் சில படங்களைஇப்பதிவில் கண்டீர்கள்.
ஆழ்வார்கள் எம்பெருமானின் திருவருளினால் மயர்வற மதிநலம் பெற்று திருமாலாகிய அவரின் பேர் எழிற் பொய்கையுள் ஆழ மூழ்கிக் கவி பாடியவர்கள். ஆழ்வார்கள் திவ்ய சூரிகள். ஆழ்வார்களுடைய அருட்பாசுரங்கள் தென் தமிழ் நாட்டில் தென் கலை மரபை தோற்றுவித்தன என்றால் மிகையாகாது. ஆழ்வார்களின் அருளிச் செயல்களான திவ்ய பிரபந்தங்கள் உபய வேதாதங்கள் ஆகும். இவ்வாறு எம்பெருமானின் கல்யாண குணங்களில் ஆழ்ந்து பாசுரங்கள் பாடிய ஆழ்வார்கள் பன்னிருவர் ஆயினும் ஆழ்வார் என்று அழைக்கப்படுபவர்கள் இன்னும் சிலரும் உண்டு. இவர்கள் கருடாழ்வார், இளையாழ்வான், பிரகலாதாழ்வான், கஜேந்திராழ்வான் ஆகியோர் ஆவர். இப்பதிவில் பெருமாளின் வாகனமாகவும், கொடியாகவும் விளங்கும் பெரிய திருவடியாம் கருடன் எவ்வாறு கருடாழ்வார் என்னும் சிறப்புப் பெற்றார் என்பதை காண்போம்.
அதற்காக நாம் அஹோபிலம் செல்ல வேண்டும், செல்வோமா? கிருத யுகத்தில் இந்த அஹோபிலம்தான் ஹிரண்ய கசிபுவின் அரண்மனை, தன் தமையனாகிய ஹிரண்யாக்ஷனை வதம் செய்து விஷ்ணு பகவான் பூமிப்பிராட்டியாரை மீட்டதால் கோபம் கொண்ட ஹிரண்ய கசிபு அவர் மேல் கடும்கோபம் கொண்டிருந்தான், மேலும் அரிய வரங்கள் பெற்று தானே கடவுள் என்றும் யாரும் விஷ்ணுவை வணங்கக்கூடாது என்று கொடுங்கோலனாக ஆண்டு கொண்டிருந்தான். ஆனால் இறைவனின் திருவுள்ளப்படி அவன்து மகனாக பரம ப்க்தனாக , தாயின் கர்பத்தில் இருக்கும் போதே நாரத மஹரிஷியின் மூலம் "ஓம் நமோ நாராயணாய" என்னும் மந்திர உபதேசம் பெற்றவனாக பிறந்தான் பிரகலாதன். அவன் வளர வளர அவன்து விஷ்ணு பக்தியும் வளர்ந்தது. அவனைக் கண்டு ஹிரண்யகஷிபுவின் கோபமும் வளர்ந்தது. மகன் என்று கூடப் பாராமல் பல் வேறு வழிகளில் அவனைக் கொல்லப் பார்த்தான் ஆனால் ஒவ்வொரு முறையும் நாராயணன் தன் பக்தனைக் காப்பாறினார். இறுதியாக ஒரு நாள் கோபம் தலைக்கேறி "எங்கிருக்கிறான் உன் நாராயணன்" என்று ஆணவத்துடன் கேட்டான் ஹிரண்ய கசிபு . ஆக்ரோஷத்துடனும், ஆணவத்துடனும் தன் எதிரே பயமுறுத்தும் விதத்தில் நின்று மிரட்டிய தன் தந்தையானவனை கண்டு சிறிதும் கலங்காமல் திட பிரக்ஞனாய் அந்த சர்வேஸ்வரன் மேல் கொண்ட பக்தியால் அவர் எப்படியும் தன்னை காப்பார் என்ற நம்பிக்கையுடன் பிரகலாதன் அமைதியாக அவர் "தூணிலும் இருப்பார் துரும்பிலும் இருப்பார்" என்று பதிலிறுத்தான். மூர்க்கமாக தன் கதாயுதத்தால் ஒரு தூணை தாக்கினான் ஹிரண்யன். "அண்டமெல்லாம நடுக்கும் படி அந்த தூண் பிளந்தது அதிலிருந்து சிங்க முகமும், மனித உடலும் வஜ்ர நகங்களும் கொண்டு சிங்கப்பெருமான் ஆவிர்பவித்தார்" அதே க்ஷணத்தில் பெருமாள் தன் அன்பன் சொன்ன சொல்லை மெய்பிக்க, இந்த அற்புதத்தை பெரியாழ்வார் இவ்வாறு பாடுகின்றார்
ஹிரண்யன் பெற்ற வரத்தின் படி, மனிதனாகவோ, மிருகமாகவோ, பறவையாகவோ, தேவராகவோ இல்லாத பெருமாள், உள்ளேயோ வெளியேயோ இல்லாமல் வாசற்படியில் அம்ர்ந்து ஆகாயத்திலோ, பூமியிலோ இல்லாமல் தன்து மடியில் ஹிரண்யனை போட்டுக் கொண்டு பகலோ இரவோ அல்லாத சந்தியா காலத்தில் ஆயுதமே அல்லாத தனது கூரிய நகங்களால் அவனது மார்பைக் கிழித்து அவன்து குடலை மாலையாகப் போட்டு ஜ்வாலா நரசிம்மராக அவனை வதம் செய்தார் ஓம் நமோ நாராயணா என்னும் நாமத்தின் மகிமையையும் பிரகலாதாழ்வானின் பக்தியின் பெருமையையும் நிலை நாட்டினார் பெருமாள். பெருமாளின் சீற்றம் கண்டு சகல தேவர்களும் நடுங்கி நிற்க பிரகலாதன் மட்டும் தனக்காக அவதாரம் எடுத்த பெருமாளை பக்தியுடன் நோக்கி அவரை சாந்தமதையும்படி வேண்டி பெருமாளை சாந்தப்படுத்தினான். இவ்வாறு பெருமாளின் பக்தியிலே ஆழ்ந்ததால்தான் பிரகலாதன் பிரகலாதாழ்வான் என்று போற்றப்படுகின்றான்.
என்னடா கருடாழ்வானைப்பற்றிக் கூறுகின்றேன் என்று ஆரம்பித்து பிரகலாதாழ்வானைப் பற்றி கூறிக்கொண்டிருக்கிறேனே என்று யோசிக்கிறீர்களா? சற்று பொறுங்கள் இரண்டுக்கும் உள்ள சம்பந்தம் புரியும்.
மிகத்தெளிவுபெற்றமுகத்துடன்பகவான்கருடனைப்பார்த்துசொல்லத்தொடங்கினான்: "விநதையின்புதல்வா! நான்உன்தவத்தைமெச்சுகிறேன். உனக்குஎல்லாமங்களங்களும்உண்டாகட்டும். உன்விருப்பம்என்ன? சொல்லாய்! அதைநான்நிறைவேற்றிவைக்கிறேன்." என்றார்.கருடன் "தேவதேவா! நான்பூமியிலோமூன்றுஉலகங்களிலோஜயம்பெறவிரும்பிதவம்புரியவில்லை. இன்றுமுதல்வாகனமாகஎனதுதோளில்தேவரீர்அமரவேண்டும். இதுதான்எனக்குமகிழ்ச்சியைக்கொடுக்கக்கூடியது. எல்லாவற்றுக்கும்ஆதாரனானஉனக்குநான்ஆதாரமாக வேண்டும். இந்தமகிமைஎவற்கும்கிடைக்கத்தகுந்ததன்று. இந்தபெரும்பாக்கியம்எனக்குகிட்டவேண்டும்" என்றான். பின்புஅவன்மேலும்சொல்லத்தொடங்கினான். "புருஷோத்தமா! இந்தமலையில்இருந்துகொண்டுநான்கடும்தவம்புரிந்தேன். இங்கேஎன்தவம்வெற்றிஅடைந்தது. உன்னைதரிசிக்கும்பாக்யத்தைகொடுத்தபடியால்இந்தமலைக்குஒருபெருமைஏற்பட்டுள்ளது. எனவே, இதற்குகருடமலைஎன்றபெயர்வழங்கவேண்டும் தாங்களும் இந்த கருடாசலத்தில் எனக்கு சேவை சாதித்தது போலவே எப்போதும் சேவை சாதிக்க வேண்டும் . இந்தஇருவரங்களையும்கொடுக்கவேண்டும்" என்றுகேட்டுக்கொண்டான்.
இந்த சிங்கவேள் குன்றத்தின் சிறப்பை திருமங்கையாழ்வார் இவ்வாறு பாடுகின்றார்.
அங்கண்ஞாலம்அஞ்ச அங்குஓராளரியாய் அவுணன்
பொங்காஆகம்வள்ளுகிரால் போழ்ந்தபுனிதனிடம்
பைங்கணானைக்கொம்புகொண்டு பத்திமையால் அடிக்கீழ்ச்
செங்கணாளிஇட்டிறைஞ்சும் சிங்கவேள் குன்றமே.
அலகு இரு இறக்கைகள் என மூன்று சிகரங்களாக காட்சி அளிக்கும் கருடாத்ரி
பெருமாள் அவ்தாரம் செய்த உக்ர ஸ்தம்பத்திலிருந்து கருடாத்ரியைப் பார்த்தால் அப்படியே கருடன் தன் இரு சிறகுகளையும் விரித்து மத்தியில் உயர்ந்த அலகுடனும் மூன்று பகுதிகளாகவும் அஞ்சலி ஹஸ்தத்துடன் ( கை கூப்பிய நிலையில்) நிற்பதை இன்றும் காணலாம். அஹோபிலத்தில் இன்று கருடாத்ரிக்கும் வேதாத்ரிக்கும் இடையே பிறவிப் பிணியை நீக்கும் பவ நாசினி ஆறு ஓடுகின்றது. கருடாத்ரியில் தான் நவநரசிம்மரில் இன்னொரு நரசிம்மரான பாவன நரசிம்மரும் தாயார் செஞ்சு லக்ஷ்மித்தாயாருடன் லக்ஷ்மி நரசிம்மராக சேவை சாதிக்கின்றார். இவ்வளவு பெருமைகள் பெற்ற அஹோபிலம் செல்ல வாய்ப்பு கிடைத்தால் சென்று தரிசனம் செய்து விட்டு வாருங்கள்.
என்றபடி அஹோபில ஷேத்திரத்தில் கருட மலையின் கர்பத்தில் கருணையின் காரணமாக கோவில் கொண்டு இடது பக்கத்தில் பெரிய பிராட்டியாரை அனைத்த வண்ணம் சேவை சாதிக்கும் லக்ஷ்மி ந்ருஸிம்ஹரை சரணம் அடைகின்றேன்.
அஹோபிலம் நவநரசிம்மர்கள்
இவ்வாறு எப்போதும் அகலகில்லேன் இறையும் என்று அலர்மேல மங்கை மஹாலக்ஷ்மியுடன் சேர்ந்தே இருக்கும் மாலோலனாகவும் மற்றும் எட்டு கோலங்களிலும் பெருமாள் எழுந்தருளி அருள் பாலிக்கும் தலம் தான் அஹோபிலம். திருமங்கையாழ்வார் தம் பாசுரத்தில் ஒரு பாடலில் "தெய்வங்களால் மட்டுமே சென்று தரிசிக்க முடியும்" என்று சிங்கவேள் குன்றம் என்று பாடிய தலம். காசியில் ஆயிரம் யுகங்கள், ப்ரயாகையில் இருபது யுகங்கள், கயையில் நூறு யுகங்கள் வாழும் பயனை அஹோபில ஷேத்திரத்தில் ஒரு நாள் வாசம் செய்தால் கிட்டும் எனது அஹோபிலத்தின் சிறப்பு. இராமாவாதாரத்தில் இராமருக்கு இளையவராக பிறந்து அவர் சேவை ஒன்றையே எப்போதும் சிந்தித்து இராமரை இணை பிரியாது எப்போதும் தொண்டு செய்து பின் கிருஷ்ணாவதாரத்திலே அவருக்கு மூத்தவராக பலராமராக அவதாரம் செய்து, இக்கலிகாலத்தில் இராமானுஜராக அவதாரம் செய்த பெருமாளின் பாம்பணையாம் அயிரம் பணங்களார்ந்த ஆதி சேஷன் இளையாழ்வான் என்று கொண்டாடபப்டுகிறான். மேற்கு தொடர்ச்சி மலையே ஆதி சேஷன் என்பது ஐதீகம். அந்த ஆதிசேஷனின் தலை - திருவேங்கடம், முதுகு- ஸ்ரீ சைலம் வால்- அஹோபிலம் ஆகும்.
மேலும் அஹோபில திவய தேசத்தின் தரிசனம் பெற இங்கே செல்க
இனி கஜேந்திராழ்வானைப் பற்றி ஒரு சிறு குறிப்பு ஆயிரம் வருடங்கள் தன் பலத்தின் மீதும் மற்ற தன் கூட்டத்தின் மீதும் நம்பிக்கை வைத்து போராடிக்கொண்டிருந்த போது அவனுக்கு பெருமாள் உதவ முன்வரவில்லை. ஆனால் அதையெல்லாம் விடுத்து எப்போது அவன் அந்த ஆதிமூலத்திடம் பூரண சரணாகதி அடைந்த போது அடுத்த நொடியே கருடன் மேல் ஆரோகணித்து வந்து கஜேந்திரனுக்கு அருளினார் பெருமாள். எனவேதான் பராசர பட்டர் தமது போற்றியில் தங்களது கருணையை விட தங்களது அந்த வேகத்திற்காக தலை வணங்குகின்றேன் என்று பாடுகின்றார்.
இவையனைத்திலும் நாம் கற்கும் பாடம் கண்னன் கீதையிலே கூறிய படி
ஸர்வ தர்மாந் பரித்யஜ்ய மாம் ஏகம் சரணம் வ்ரஜ
அஹம் த்வா ஸர்வ பாபேப்யோ மோக்ஷயிஷ் யாமி மாசுச
அதாவது மோடசத்திற்கு உதவும் மற்ற எல்லா தர்மங்களையும் விடுத்து என்னை மட்டுமே உபாயமாக பற்றினால் உன்னை சகல பாவங்களிலும் விடுத்து உன்னை கடைத்தேற்றுவேன் என்று அருளிய படி பூரண சரணாகதி ஒன்றே நாம் உய்யும் வழி.