Wednesday, January 30, 2008

கருட சேவை - 2 கருடன் சரிதம்

கருட சரிதம்
மாலாய்ப்பிறந்தநம்பியை மாலே செய்யும்மணாளனை


  1. ஏலாப்பொய்களுரைப்பானை இங்கேபோதக்கண்டீரே?

மேலால்பரந்தவெயில் காப்பான் வினதைசிறுவன்சிறகென்னும்
மேலாப்பின்கீழ்வருவானை விருந்தாவனத்தேகண்டோமே
.
என்று சூடிக் கொடூத்த சுடர்க் கொடியாள் பாடிய படி எம்பெருமானுக்கு வெயில் படாதபடி தன் பரந்து விரிந்த சிறகால காப்பவன் விநதை சிறுவன் கருடன். கருடன் வைநதேயன் என்றும் அழைக்கப்படுகின்றான். அவனது சரிதத்தை சுருக்கமாக காண்போமா?
சப்த ரிஷிகளில் ஒருவர் காஷ்யபர், அவருக்கு இரண்டு மனைவிகள் முதலாமவள் விநதை, இரண்டாமவள் கத்ரு. நல்லவளான விநதைக்கு இரண்டு மகன்கள் மூத்தவன் அருணன், இளையவன் கருடன். அருணன் சூரியனின் தேரோட்டி. கத்ருவின் மகன்கள் நாகங்கள். ஒரு சமயம் பொறாமையினால் கத்ரு ஒரு சூழ்ச்சி செய்தாள். அவள் விநதையை ஒரு போட்டிக்கு அழைத்தாள். அந்த போட்டியில் யார் தோற்றுப் போகின்றார்களோ அவ்ர் வெற்றி பெற்றவரின் அடிமையாக இருக்க வேண்டும் என்பதே போட்டியின் நிபந்தனை. அந்த போட்டி என்ன ? இந்திரனின் வெள்ளைக் குதிரையான உச்சைர்வத்தின் வாலின் நிறம் என்ன என்பதே போட்டி. விநதை தூய வெள்ளை நிறக் குதிரையான உச்சைர்வத்தின் வாலின் நிறம் வெள்ளை என்று கூற, கத்ரு கறுப்பு என்று கூறினாள். பின் போட்டி ந்டைபெற்ற போது தந்திரமாக கத்ரு தனது மகன்களான நாகங்களை அழைத்து உச்சர்வத்தின் வாலை சுற்றிக் கொள்ளக் க்றுகிறாள். எனவே அவர்கள் பார்த்த போது உச்சர்வத்தின் வால் கருப்பாக தோன்றியது. இவ்வாறு சூழ்ச்சியால தோற்ற விநதை கத்ருவின் அடிமையாக ஆகின்றாள்.
தன் அன்னை , சிற்றன்னைக்கு அடிமையாக சேவை செய்து வருவதைக் கண்டு பொறுக்க முடியாமல் கருடன் தன் அன்னையிடம் அவரது இந்த நிலைக்கான காரணத்தை கூற வேண்டுகிறான். விநதையும் நடந்ததைக் கூறுகின்றாள். கருடன் தன் சிறிய தாயாரிடம் சென்று தன் தாய்க்கு விடுதலை அளிக்குமாறு வேண்டுகின்றான். அலட்சியமாக கத்ருவும் தேவ லோகத்திலிருந்து அமிர்தம் கொண்டு வா? உன் தாயை விடுதலை செய்கின்றேன் என்று ஆணவத்துடனும், அந்த காரியம் முடியாதது என்ற நம்பிக்கையுடனும் பதிலிறுக்கின்றாள்.
தன் தாயின் துயர் தீர்க்க யாரால் முடியாததையும் செய்ய தாயிடம் ஆசி பெற்று புறப்பட்டான் கருடன். இந்திர லோகத்தை தன் பறக்கும் சக்தியினால சுலபமாக அடைந்து விடுகின்றான் கருடன். அமிர்த குடத்தை நெருங்கும் கருடனுக்கும் தேவர்களுக்கும் இடையே பெரும் போர் நடை பெறுகின்றது. தேவர்களை வெற்றி பெற்று நின்ற கருடனுடன் போரிட இந்திரனே வந்தான், ஆயினும் அவனாலும் கருடனை வெல்ல முடியாமல் இறுதியாக வஜ்ராயுதத்தை எய்கின்றான், கருடன் அப்போது வஜ்ராயுதத்தை வணங்கி தான் அமிர்தம் பெற வந்ததற்கான உண்மையான நோக்கத்தை கூறுகின்றான்.
அமிர்த கலசத்துடன் கருடன்
கருடனின் வீரம், மற்றும் தாய் பாசத்தைக் கண்டு மகிழ்ச்சி கொண்ட இந்திரன் அவனை மெச்சி அமிர்தத்தை கருடனுக்கு தந்து அனுப்புகின்றான். ஆணவத்தால் அறிவிழந்த சிற்றன்னையிடம் அமிர்தத்தை அளித்து தன் தாயின் அடிமைத்தனத்தை நீக்கி தன்னை பெற்றவளின் வயிற்றை குளிரச் செய்கின்றான் கருடன். அன்று முதல் சிற்றன்னைக்கு துனண சென்ற நாகங்கள் எல்லாம் கருடனுக்கு பகைவன் ஆகின்றன. ஆயினும் தனது தமையனான அருணன் வேண்டிக் கொண்டதற்காக நாகங்களைக் கொல்லாமல் அவற்றை எல்லாம் வென்று தன் உடலில் சிரசுமாலை, காதுக் குண்டலங்கள், தோள் மாலை, கை கங்கணம், கால் சிலம்பு என்று ஆபரணமாக அணிந்து கொள்கிறான் கருடன்.
எந்தப் பறவையும் பறக்காத உயரத்தில் பறக்க கூடியது கருடன். எழிலானது, கம்பீரமானது, கருடனது வலிமை, வீரம், பொறுமை, வேகம்,அழகு,கோபம் ஆகியவ்ற்றுக்கு மெச்சி மஹா விஷ்ணு கருடனை தனது வாகனமாக ஆக்கிக் கொள்கின்றான். அன்று முதல் இன்று வரை அந்த விநதை சிறுவன் மேல் ஆரோகணித்து பெருமாள் நினைத்த நொடியில் தன் பக்தர்கள் இருக்கும் இடம் சென்று அவர்கள் துயர் துடைத்து வருகின்றான்.
* * * * * *
சுவாமி வேதாந்த தேசிகருக்கு ஹயக்ரீவ மந்திரத்தை உபதேசித்தவன் கருடன். வேதாந்த தேசிகர் ஔஷத கிரியில் தனது குரு உபதேசித்த கருட மந்திரத்தை உபாசிக்க கருடன் தோன்றி ஹயக்ரீவ மந்திரத்தை உபதேசித்து அர்ச்சா மூர்த்தியான யோக ஹயக்ரீவரையும் அளித்தான்.
ஹயக்ரீவரை உபாசித்து தேசிகர் ஹயக்ரிவர் அருள் பெற்று ஹயக்ரீவ ஸ்தோத்திரம் இயற்றினார். கருடன் மேல் சுவாமி தேசிகர் இரு ஸ்தோத்திரங்கள் இயற்றியுள்ளார். அவையாவன கருட தாண்டகம், கருட பஞசாசத். இவற்றில் கருடனை போற்றி தேசிகர் பாடிய சில போற்றிகள் வைநதேயன் - விந்தையின் குமாரன்.

பக்ஷிராஜன் - வேத ஸ்வரூபன்.
கருத்மான் - அழகிய இறகுகளை உடையவன்.
தார்விகாரி - நாகப்பகையோன்
. பத்ரிநாடா - பறவைகளின் யஜமானன்.
ஆசிவிகாரி - நாகங்களின்(விஷ) பகைவன். காகேந்திரன் - பறவைகளின் அரசன்.
அருண அனந்தரன்- அருணனின் இளையோன்.
பக்ஷிஇந்திரன் - பறவைகளின் அரசன்.

கருட சேவை இன்னும் தொடரும்.........

No comments: