Sunday, February 3, 2008

கருட சேவை - 5

திருவரங்கம் கருட சேவை


அழகிய மணவாளர் நம்பெருமாள் ஆன கதை

அனைத்து ஆழ்வார்களும் ( தன் ஆச்சாரியரை மட்டுமே பாடிய மதுரகவியாழ்வார் தவிர ) மங்களாசாசனம் செய்த திவ்ய தேசம் திருவரங்கம் ஆகும். இத்தலத்தில் கஜேந்திர மோக்ஷம் சித்திரை பௌர்ணமியன்று காவிரி நதிக்கரையில் அம்மாமணி மண்டபத்தருகில் நடைபெறுகின்றது. பெருமாள் அன்று தங்க கருடனில் சேவை சாதிக்கின்றார். மேலும் தை மாசி பங்குனி மாத உற்சவங்களின் போதும் நம்பெருமாள் கருட சேவை தந்தருளுகிறார். இவற்றுள் மாசி கருட சேவை மிகவும் சிறப்பு பெற்றது. மாசி கருடன் காசிக்குப் போனாலும் கிடைக்காது என்பது வழக்கு அக்கருட சேவையை கண்டு மகிழுங்கள்.

ஸ்ரீரங்க விமானம் திருப்பாற்கடலில் இருந்து வெளி வந்த போது அதை ஏந்தி வந்தவன் ஸ்ரீ கருடன். அமர்ந்த கோலத்தில் உள்ள அதிசய கருடனை நாம் நான்காவது பிரகாரத்தில் சேவிக்கலாம் திருவரங்கத்தில்.

திவ்ய தேசங்களுள் முதன்மையானது, வைணவர்களுக்கு கோவில் என்றளவிலே குறிக்கப்படுவது. "பூலோக வைகுண்டம்" என்றும் குறிக்கப்படுவது. காவரிக்கும் கொள்ளிடத்திற்க்கும் இடையில் ஏற்பட்ட அரங்கத்தில் பச்சை மா மலை போல் மேனியுடனும், பவள வாய் கமல செங்கண்ணுடனும் தெற்கு நோக்கி எம்பெருமான் அனந்தாழ்வார் மேல் பள்ளி கொண்டிருக்கும் திருவரங்கம். அந்த திருவரங்கத்து உற்சவர் அழகிய மணவாளப் பெருமாள். திருக்கையிலே பிடித்த திவ்யாயுதங்களுடனும் அஞ்சல் என்ற கையும் , கவித்த முடியும், பிரசன்ன முகமும், முறுவலும், ஆசன பத்மத்திலே அழுத்தின திருவடிகளுமாய் நிற்கிற நிலையிலே அருட் காட்சி தருகின்ற அந்த அழகிய மணவாளப் பெருமாள் நம் பெருமாள் என்று அழைக்காபடுவதற்க'ன ஆதாரமான நிகழ்ச்சி மிகவும் சுவையானது.

அது நமது சனதான தர்மமாம் இந்து மதத்திற்கு கடுமையான சோதனைக் காலம். மிலேச்சர்கள் வட நாட்டை கைப்பற்றி இந்து கோவில்களை எல்லாம் கொள்ளையடித்து அழித்து தங்கள் பார்வையை தெற்கு பக்கம் திருப்பினர். மல்லிகாபூரின் படைகள் கண்ணனு‘ரில் வந்து தண்டு இறங்கியிருந்தன அதைக்கண்ட சலவைத் தொழிலாளிகள் வந்து அறிவிக்க, மிலேச்சர்களின் படையெடுப்பிலிருந்து பெரிய பெருமாளைக் காப்பாற்ற கல் சுவர் எழுப்பி மூலவரை மறைத்து விட்டனர். உற்சவரான அழகிய மணவாளரை தாயார்களிடமிருந்து பிரித்து தனியே ஒரு பல்லக்கிலே எழுந்தருளச் செய்து எடுத்து சென்றனர். திருவரங்கத்தை சேர்ந்த 12000 இளைஞர்கள் காவலுக்கு நின்றனர். ஆனால் மிலேச்சர்களின் முன்னால் அவர்களால் ஈடு கொடுக்க முடியவில்லை. அடுத்த நாள் நடந்த சண்டையிலே சுதர்சன ஆச்சாரியார் மற்றும் அவரது மகன்கள் கொல்லப்பட்டனர். வேதாந்த தேசிகர் இரத்தத்தை தனது உடலில் பூசிக் கொண்டு இறந்தவர் போல நடித்து உயிர் தப்பினார். பல பாஷ்யங்களை நமக்கு அளித்த பிள்ளை லோகாச்சாரியார் பெருமாளை ஜோதிக்குடி அழகர் கோவில் அருகில் உள்ள ஒரு குகையில் மறைத்து வைத்தார் தன் சிஷ்யர்களிடம் பெருமாளை பத்திரமாக திருவரங்கம் சேர்ப்போம் என்று சத்தியம் வாங்கிக் கொண்டு திரு நாடு ஏகினார். இந்த வருடம் பிள்ளை லோகாச்சாரியர் இவ்வாறு பெருமாளையும் தாயார்களையும் காப்பாற்றிய 800 வருடம் ஆகும். 48 வருடங்கள், மதுரை எட்டயபுரம், திருவனந்தபுரம், கோழிக்கோடு, மேல் கோட்டை, மைசூர், சத்யமங்கலம் காடுகள், திருமலை(அரஙக மண்டபம்) செஞ்சி(1377) என்று பல் வேறு இடங்களில் இருந்த பெருமாள் கடைசியாக திருவரங்கம் வந்து சேர்ந்தார். இதற்கிடையில் திருவரங்கத்தில் இருந்த அர்ச்சகர்கள் வேறு ஒரு பெருமாளை அங்கு ஸ்தாபிதம் செய்திருந்தனர். யார் உண்மையான பெருமாள் என்பதில் சர்ச்சை ஏற்பட்டது.

 இரு தரப்பினரும் தத்தம் பெருமாளே உண்மையான அழகிய மணவாள பெருமாள் என்று வாதிட்டனர். எப்படி இப்பிரச்சினையை தீர்ப்பது என்று எல்லோரும் கலங்கி நிற்க, அந்த அரங்கனாதரே 70 வயதான சலவை தொழிலாளிக்கு தன்னை வழிப்படுத்தும் வழியை காட்டியருளினார். எம்பெருமானின் துணிகளை இந்த சலவைத்தொழிலாளிதான் சலவை செய்து கொடுத்துக் கொண்டிருந்தார். அவரது வேண்டுகோளின்படி ஒரு பட்டு இரண்டு பெருமாளுக்கும் சார்த்தப்பட்டு திருமஞ்சனம் ஆகியது. அர்ச்சகர்கள் இரண்டு பட்டையும் அந்த சலவைத் தொழிலாளியிடம் கொடுக்க அதிலிருந்து வந்த தீர்த்தத்தை பருகிய அந்த சலவைத் தொழிலாளி உண்மையான பெருமாளின் தீர்த்ததை பருகியவுடன் ஆனந்த மிகுதியால் இவரே நம் பெருமாள் என்று ஆனந்தக் கூத்தாடினார். அன்று முதல் திருவரங்கம் உற்சவரான அழகிய மணவாளருக்கு நம் பெருமாள் என்ற திருநாமம் ஏற்பட்டது. உண்மையனான பெருமாள் கிடைத்தவுடன் தெய்வச் செயலால் அது வரை ஒரு வேப்ப மரத்தடியில் மறைந்து இருந்த தாயார் இருவரும் வெளிப்பட்டனர். அனைவரும் உண்மையை உணர்ந்தனர். மூலப்பெருமாள் கருவறையிலே சேர்ந்தார். பெருமாளுக்கும் அந்த சலவைத்தொழிலாளி அழைத்த நம் பெருமாள் என்ற திருநாமம் நிலை பெற்றது இன்றும் நம் பெருமாள் என்றே அழைக்கப்படுகின்றார்.

திருவரங்கத்தில் எல்லாம் பெரியதுதான் கோவில் - பெரிய கோவில், பேரும் பெரிது, ஊரும் பெரிது. பெருமாள் - இராம பெருமான் வழிபட்ட பெரிய பெருமாள், தாயார் - பெரிய பிராட்டி, ஊர் - பேரரங்கம். தளிகை - பெரிய அவசரம், வாத்யம் - பெரிய மேளம், பட்சணம் - பெரிய திருப்பணியாரம் என்று அனைத்துமே பெரியதுதான்.

பெரியாழ்வார் பாசுரம் ( கருடன் மற்றும் திருவரங்கம்)
செருவாளும்புள்ளானன்மண்ணாளன் செருசெய்யும்நாந்தகமென்னும்
ஒருவாளன் மறையாளனோடாத படையாளன் விழுக்கையாளன்
இரவாளன்பகலாளனென்னையாளன் ஏழுலகப்பெரும் புரவாளன்
திருவாளனினிதாகத் திருக்கண்கள் வளர்கின்றதிருவரங்கமே.

2 comments:

வடுவூர் குமார் said...

அட! இப்படி ஒரு விஷயம் இருக்கா?

S.Muruganandam said...

ஆம், வட நாட்டினரிர் போல் மிகவும் சேதம் இல்லை என்றாலும், தென் நாட்டிலும் பாதிப்புகள் ஏற்பட்டன அப்போது ஆயிரக்கணக்கோர் ஆண்டவணுக்காக எத்தனையோ தியாகம் செய்திருக்கின்றனர். அவர்களை நாம் நன்றி கூற வேண்டூம்.