Saturday, July 11, 2009

நங்க நல்லூர் பஞ்ச கருடசேவை

தருமமிகு சென்னை என்று வள்ளலார் சுவாமிகளால் சிறப்பிக்கப் பெற்ற சென்னை மாநகரம் வளர வளர சுற்றுப்புற பகுதிகள் எல்லாம் கான்க்ரீட் காடுகளாக மாற ஆரம்பித்தன. இவ்வாறு உருவான பகுதிதான் நங்கநல்லூர் பகுதி. தமிழர்கள் எங்கு சென்றாலும் தங்கள் பாரம்பரியத்தை மறப்பதில்லை. அது போல தாங்கள் வழிபடும் தெய்வங்களையும் மறப்பதில்லை. அவர்கள் குடியேறும் இடங்களில் தங்கள் தங்கள் தெய்வத்திற்க்கு புதுப் புது கோவில்களை கட்டி வழிபடுகின்றனர். அவ்வாறு பழவந்தாங்கல் என்னும் புகை வண்டி நிலையத்தை சுற்றி நங்கநல்லூர் பகுதி வளர்ந்தது. அப்பகுதி வளர வளர பலப்பல திருக்கோவில்களும் அப்பகுதிகளில் வந்தன, 32 அடி விஸ்வரூப ஆஞ்சனேயர் ஆலயம் மிகவும் சிறப்பு பெற்றது. மேலும் லக்ஷ்மி நரசிம்மர் ஆலயம், இராகவேந்திரர் அதிஷ்டானம், இராஜராஜேஸ்வரி ஆசிரமம் என்று பல்வேறு ஆன்மீக திருக்கோவில்கள் அமைக்கப்பட்டன. அது போலவே சுற்றியுள்ள மடிப்பாக்கம், ஆதம்பாக்கம், உள்ளகரம் ஆகிய பகுதிகளிலும் பல்வேறு ஆலயங்கள் அமைந்தன. இப்பகுதியில் உள்ள சில அன்பர்கள் இணைந்து நாங்கூரில் நடைபெறுவது

பஞ்ச கருட சேவை அறிவிப்புப் பலகை

பஞ்ச கருட சேவை என்றுதான் அறிவிப்பு வந்தது ஆனால் செல்லம்மாள் வித்யாலயா சென்ற போது ஒரு இன்ப அதிர்ச்சி ஆறு பெருமாள்கள் சேவை சாதித்தனர்.
ஓடாதவாளரியின் உருவாகி இரணியனை வாடாத வள்ளுகிரால் பிளந்தளந்த மால்

ஸ்ரீ லக்ஷ்மி ந்ருஸிம்ஹ பெருமாள்

நங்கநல்லூர்

கோடானு கோடி புண்ணீயம் செய்திருந்தால் மட்டுமே பெருமாளை பெரிய திருவடியாக் கருடனில் சேவிக்க முடியும் அதுவும் அவரே மனமுவந்து நம் அருகில் வந்து சேவை சாதிக்கின்றார் என்றார் எவ்வளவு பேறு பெற்றிருக்கின்றோம்.
*********
செடியாய வல்வினைகள் தீர்க்கும் திருமாலே! 
நெடியானே! வேங்கடவா! நின்கோயிலின் வாசல்
அடியாரும்வானவரும் அரம்பையரும் கிடந்தியங்கும்
படியாய்க்கிடந்து உன்பவளவாய் காண்பேனே.

ஸ்ரீ ஸ்ரீநிவாச பெருமாள்

கீழ்கட்டளை

புள்ளை ஊர்வான் பெருமாள், அவருடைய கொடியும் புள்ளே. கருடன் வேத ஸ்வரூபன், கருடனில் பெருமாள் வலம்வருவதால் பெருமாள் வேதத்தின் உட்பொருளாக விளங்குகின்றார்.
************
என்னப்பனெனக்காயிருளாய் என்னைப்பெற்றவளாய் பொன்னப்பன்மணியப்பன்முத்தப்பன் என்னப்பனுமாய் மின்னப்பொன்மதிள்சூழ் திருவிண்ணகர்சேர்ந்தவப்பன் தன்னொப்பாரில்லப்பன் தந்தனன்தனதாள்நிழலே.

ஸ்ரீ ஒப்பிலியப்ப பெருமாள்

இராம் நகர் -மடிபாக்கம்

கருடனில் பெருமாள் வருவது மிக்க விசேஷம், அருள் பாலிப்பதில் ஒரு நொடி கூட தாமதிப்பதில்லை எனவேதான் எல்லா திவ்ய தேசங்களிலும் கருடன் நின்ற கோலத்தில் எப்போதும் புறப்படத் தயாரான நிலையில் சேவை சாதிக்கின்றார்.
***********

ஆடியாடி அகம்கரைந்து இசை
பாடிப்பாடிக் கண்ணீர்மல்கி எங்கும் 
நாடிநாடி நரசிங்கா! என்று 
வாடிவாடும் இவ்வாணுதலே.


ஸ்ரீ லக்ஷ்மி ந்ருஸிம்ஹ பெருமாள்
ஆதம்பாக்கம்

நதியில் விழுந்த கட்டை எதைப்பற்றியும் கவலைப் படாமல் கடலை அடைவதைப் போல காய்சினப் பறவை ஏறி அருள் பாலிக்கும் பெருமாளை பற்றினால் நாமும் முக்தி அடையலாம்.

**************

மன்னுபுகழ்க்கௌசலைதன் மணிவயிறுவாய்த்தவனே! தென்னிலங்கைக்கோன்முடிகள் சிந்திவித்தாய்! செம்பொன்சேர் கன்னிநன்மாமதிள்புடைசூழ் கணபுரத்தென்கருமணியே! என்னுடையவின்னமுதே! இராகவனே! தாலேலோ!


ஸ்ரீ கோதண்டராமர்,   மடிப்பாக்கம்
*************

முனிஇவ்வுலகேழும் இருள்மண்டியுண்ண முனிவரொடுதானவர்கள்திசைப்ப வந்து மன்னுகலைநால்வேதப்பொருளையெல்லாம் பரிமுகமாய் அருளியஎம்பரமன் காண்மின்


ஸ்ரீ ஹயக்ரீவப் பெருமாள்
நங்கநல்லூர்
************
ஒப்பிலியப்பன் - கோதண்டராமர்

கைம்மானமதயானை இடர்தீர்த்தகருமுகிலை 
கைம்மானமணியை அணிகொள்மரகதத்தை
எம்மானைஎம்பிரானைஈசனை என் மனத்துள்
அம்மானை அடியேன் அடைந்துய்ந்துபோனேனே.

லக்ஷ்மி ந்ருஸிம்ஹர், ஸ்ரீநிவாசர், ஒப்பிலியப்பர்

கவளமாகதத்தகரியுய்யப் பொய்கைக் கராம் கொளக் கலங்கி உள்நினைந்து துவள மேல்வந்துதோன்றி வன்முதலை துணிபடர்ச்சுடுபடைதுரந்தோன்

அன்றிமன்றொன்றிலம்நின்சரணேயென்று அகலிரும் பொய்கையின்வாய் நின்றுதன்நீள்கழலேத்திய ஆனையின்நெஞ்சிடர்தீர்த்தபிரான்

ஒப்பிலியப்பர், லக்ஷ்மி ந்ருஸிம்ஹர், கோதண்ட ராமர்,


ஆறு பெருமாள்களும் ஒன்றாக சேவை சாதிக்கும் அழகு
பலபலவேயாபரணம் பேரும் பலபலவே
பலபலவேசோதி வடிவு பண்பெண்ணில் பலபலகண்டுண்டு கேட்டுற்றுமோந்தின்பம் பலபலவேஞானமும் பாம்பணை மேலாற்கேயோ


எப்படி இருந்ததுங்க எங்க ஊர் பஞ்ச கருட சேவை???


அடுத்த பதிவில் இன்னோரு திவ்ய தேசத்தின் கருட சேவையை தரிசக்கலாம்.

No comments: