Monday, September 7, 2009

ஸ்ரீ சத்ய நாராயணப் பெருமாள் கருட சேவை-2


சென்னை மேற்கு மாம்பலம் சத்ய நாராயணப் பெருமாள் திருக்கோவிலில் பௌர்ணமி தினத்தன்று நடை பெறும் சத்ய நாராயண பூஜை சிறப்பாக நடைபெறுகின்றது. அன்னவரத்தில் உள்ள சத்ய நாராயணப் பெருமாளே இங்கு எழுந்தருளி அருள் பாலிப்பதால் இப்பூசை மிகவும் சிறப்பு பெற்றது ஆகும். இப்பூஜையின் மகத்துவத்தைப் பற்றி அறிந்து கொள்வோமா?

பௌர்ணமியன்று காலையில் பெருமாளுக்கு திருமஞ்சனம் நடைபெறுகின்றது. பின் காலை பத்து மணியளவில் சத்ய நாராயண பூஜை நடைபெறுகின்றது. மாலை பெருமாள் புறப்பாடு நடைபெறுகின்றது. சத்ய நாராயண பூஜையின் போது பாராயணம் செய்யப்படும் கதைகளைப் பார்போமா?

ஒரு சமயம் நைமிசாரண்யத்திலே, சனகாதி முனிவர்கள் ஸூ பௌராணகரிடம், சுவாமி விரும்பிய பலத்தை வரத்தாலும் தபஸ்ஸாலும் விரைவில் பெரும் வகை என்ன? என்று வினவ, ஸூதரும் , எம்பெருமான் நாரத முனிவருக்கு கூறிய சத்ய நாராயண விரத மகிமையைப்பற்றி கூறுகின்றார்.

கருட சேவை க்கு முன்னர் ஊஞ்சல் சேவை
தந்தருளும் சத்யநாராயணப் பெருமாள்
கலியுகத்திலே பூலோகத்திற்கு வந்த நாரதர் அவர்கள் படும் துன்பத்தைக் கண்டு வருந்தி பிறர்க்கருள் புரிய நாரதர், " இவர்களது துன்பத்தைத் துடைக்கும் வழி என்ன"? என எம்பெருமானிடம் வினவ, மஹா விஷ்ணுவும், ' உன்னிடம் அன்பால் ஸத்ய நாராயண விரதத்தைப் பற்றி சொல்லுகின்றேன் கேள். ஏதேனும் ஒரு தினத்தில் சுற்றம் சூழ அந்தணர்களுடன் இவ்விரதத்தை செய்யலாம். பக்தியுடன் நிவேதனங்களை ஸமர்பிக்க வேண்டும். கோதுமை மாவு, அரிசிமாவு, பால், நெய், சர்க்கரை, பஷணங்கள், முதலியவற்றை நிவேதனம் செய்து, அந்தணனிடம் விரத மகிமையைக் கேட்டு தக்ஷிணை அளித்து அனைவருக்கும் போஜனம் செய்வித்து வீடு திரும்ப வேண்டும்'. "இந்த கலியுகத்திலே ப்ரதக்ஷ்யமாக பலனளிக்க வல்லதாம்" என்று கூறினார்.
ஒரு சமயம் காசி நகரில் ஒரு ஏழை அந்தணன் பசி தாகத்தினால் மிகவும் வாடி துன்பப்பட்ட போது அவனுக்காக இரங்கி பகவான் கிழரூபத்தில் வந்து, அந்த அந்தணனுக்கு சத்ய நாராயண பூஜையின் மகிமையும், அந்த விரதத்தை அனுஷ்டிக்கும் முறையையும் கூறி மறைய, அந்த அந்தணனும் விரதத்தை முறையாக செய்து முடித்தான். பின் பெருமாளின் அருளால் துயர் நீங்கி செல்வந்தன் ஆனான். இறுதியில் அவனுக்கு முக்தியும் கிட்டியது.

ஒரு சமயம் ஒரு ஏழை அந்தணனின் வீட்டில் நடை பெற்ற சத்ய நாராயண பூஜையில் ஒரு விறகு வெட்டியும் கலந்து கொண்டு, பிரசாதத்தையும் புசிக்க அடுத்த நாள் அணைத்து விறகுகளும் விற்று தீர்ந்து விட்டன. சத்ய நாராயண விரதத்தின் மகிமையை உணர்ந்த விறகு வெட்டி, பிராமணனிடம் இவ்விரதத்தை கடைப்பிடிக்கும் முறையைக் கேட்டு, தானும் பின் இப்பூஜையை செய்து செல்வந்தன் ஆனான் அவனுக்கும் மோட்சம் கிட்டியது.

ஊஞ்சல் சேவை பின்னழகு
உல்காமுகன் என்ற மன்னனின் இராணி சத்ய நாராயண விரதத்தை செய்வதை கண்ட ஒரு வணிகன் வந்து கேட்க சந்தான சம்பத்துக்களை விரும்பி செய்வதாக இராணியும் கூறினாள். வணிகனும் புத்ர பாக்கியம் உண்டானால் விரதம் இருப்பதாக கூற பெண் மகவும் பிறந்தது. அவனும் மணைவியிடம் பெண்ணுக்கு கல்யாணம் முடிந்தவுடன் பூஜை செய்வதாக கூறி மறந்து விட்டான். ஒரு நாள் மருமகனுடன் வியாபாரம் செய்ய ரத்ந்ஸார நகரம் சென்று ஒரு சத்திரத்தில் இரவு தங்கினான். அந்த இரவில் அரண்மனையில் கொள்ளையடித்த பொருட்களை அந்த சத்திரத்திலே போட்டு விட்டு கொள்ளையர்கள் சென்று விட, காலையில் காவலர்கள் இருவரையும் அரண்மணையில் கொள்ளையடித்ததாக கைது செய்து சிறையிலடைத்தனர். அங்கே மனைவியும் மகளும் எல்லா பொருள்களையும் களவு கொடுத்து உண்ண உணவின்றி தவித்தனர். ஒரு நாள் மகள் ஒரு பிராமணன் வீட்டில் சத்ய நாராயண பூஜை நடப்பதை பார்த்து , பிரசாதம் புசித்து வந்து தானும் பூஜை செய்ய , பகவான் மன்னன் கனவில் தோன்றி உண்மையைக் கூற இருவரும் விடுதலை அடைந்தனர்.

அரசன் கொடுத்த பொன்னையும், வெள்ளியையும் இருவரும் ஒரு ஓடம் ஏறி நகரம் செல்ல, பகவானும் ஒரு பிரம்மச்சாரி வேடத்தில் வந்து ஓடத்தில் என்ன என்று வினவ, எல்லாமே கொடி, இலை என்க, அவ்வாறே ஆகுக என. எல்லா தங்கமும் வெள்ளியும் இலையும் கொடியுமாகியது. மருமகன் பிரம்மச்சாரியை சரணடைந்து வேண்ட சரியாயிற்று.

லக்ஷ்மி ஹாரம் அணிந்து அஞ்சிறைப் புள் ஊர்ந்து
அருள் பாலிக்கும் சத்ய நாராயணப் பெருமாள்

நகர் சென்றதும், சத்ய நாராயண பூஜை செய்து கொண்டிருந்த மகள் மருமகன் வந்த செய்தி கேட்டவுடன் பிரசாதத்தை சுவீகரிக்காமல் மறக்க , பகவான் மருமகனுடன் ஒடத்தை மூழ்கும்படி செய்ய , அவளும் மூழ்க முயல, வணிகன் சத்ய நாராயண பூஜை செய்ய நேர்ந்து கொள்ள, வணிகனே உன் மகள் பிரசாதம் உட்கொள்ள மறந்து விட்டாள். அது பெரிய அபராதம். இவள் பிரசாதம் சுவீகரித்துக் கொண்டவுடன் தன் கணவனை காண்பாள் என்று அசரீரி கூற , அவ்வாறே அவளும் பிரசாதம் சுவிகரித்தவுடன் ஓடத்துடன் தன் கணவனைக் கண்டாள். சத்ய நாராயண பூஜை செய்வதால் இக மற்றும் பர சுகங்கள் இரண்டும் கிடைக்கின்றன. பௌர்ணமி மற்றும் சங்கராந்தி தினங்களில் செய்யும் பூஜை மிகவும் சிறந்தது.

துங்கத்வஜன் என்ற மன்னன் ஒரு சமயம் காட்டிலே வேட்டையாடசென்றபோது அங்கு இடையர்கள் சத்ய நாராயண பூஜை செய்வதை பார்த்தான். அவர்கள் பூஜை பிரசாதத்தை கொடுக்க மன்னன் அதை உதாžனம் செய்ய அவனுடைய 100 பிள்ளைகளும் உடனே மாண்டனர். அவனது தன தான்ய சம்பத்தும் அழிந்தது. தன் தவறை உணர்ந்த மன்னன் பின் சத்ய நாராண பூஜை செய்து சம்பத்தையும் புதல்வர்களையும் திரும்பப் பெற்றான். சத்ய நாராயண பூஜை செய்து அதன் சரித்திரத்தையும் ச்ரவணம் செய்பவன் ஸத்ய நாராயணர், ஸத்ய தேவர், சத்யர், காமி தேவன் என்று அன்புடன் அழைக்கப்படும் சுவாமியின் அனுகிரகம் பெற்று , ஏழ்மை விலகும், சிறை தண்டனை பெற்றவன் விடுதலை அடைவான், பயம் நீங்கும், விரும்பிய அனைத்தும் கிடைக்கும். இந்த ஆறு கதைகளும் சத்ய நாராயண பூஜையின் போது ச்ரவணம் செய்யப்படுகின்றன.

உம்பராலறியலாகா ஒளியுளார் ஆணைக்காகி
செம்புலாலுண்டு வாழும் முதலை மேல் சீறி வந்த
எம்பருமான் புண்டரீகப் பாவை சேர் மார்பன் கருட சேவை
இனி சத்ய நாராயண பூஜை செய்தவர்கள் அடுத்த பிறவியில் பெற்ற பேற்றைக் காண்போமா? அந்தணன் குசேலாராக ப்பிறந்து கிருஷ்ணரின் நன்பனும் ஆகி பெரும் பேறு பெற்றான். விறகு வெட்டி குகனாகப் பிறந்து இராம பிரானுக்கு சேவை செய்யும் பாக்கியம் பெற்ரான். உல்காமுகன் தசரத மஹாராஜாவாகப் பிறந்து அரங்கனாதரின் திவ்ய கடாக்ஷம் பெற்று முக்தியும் அடைந்தான். வணிகன் மோத்வஜனாக பிறந்து உடலை அறுத்துத் தந்து மோட்சலோகமும் போனான். துங்கத்வஜன் நான்முகனானன்.
-->
விண்ணுளார் வியப்பவந்து ஆனைக் கருளையீந்த 
கண்ணன் பன்றியாய் அன்று பாரகங்கீண்ட பாழியானாழியான்

கருட சேவையன்று எப்போதும் போல் முதலில் பக்தி உலாத்தல் கண்டருளி திருக்கோவிலிலிருந்து வாகன மண்டபத்திற்கு நடையலங்காரத்துடன் எழுந்தருளுகின்றார் சத்யநாராயணப் பெருமாள். பின் வாகன மண்டபத்தில் ஊஞ்சல் சேவை தந்தருளுகின்றார். அங்கு உபயதாரர்களுக்கு மரியாதையுன் செய்யப்படுகின்றது. பின் கருட வாகனத்தில் எம்பெருமானின் அலங்காரம் நடக்கின்றது. வெளியே புள்ளூர்தியில் பெருமாளை தரிசிக்க அன்பர்கள் தவம் கிடக்கின்றனர். அலங்காரம் முடிந்து திரை விலக்கப்படுகின்றது திவ்ய தரிசனம் கண்டு ஆனந்தம் அடைகின்றனர் அன்பர்கள். பின்னர் . ஆச்சாரியார் வேதாந்த தேசிகர் மூலவரின் லக்ஷ்மி ஹாரஹ்த்துடன் எழுந்தருளுகின்றார். பின்னர் லக்ஷ்மி ஹாரம் பெருமாளுக்கு சார்த்தப்பட்டு தீபாராதணை நடை பெறுகின்றது. பக்தர்கள் அனைவரும் ஆனந்த பராவசத்தில் கண்ணீர் மல்க பெருமாளை சேவிக்கின்றனர். இந்த வருடம் சிறப்பாக அஹோபில மட ஜீயர்களும் எழுந்தருளி சத்ய நாராயணப் பெருமாளை மங்களாசாசனம் செய்தனர்.

இப்புதிய தங்க முலாம் கருட வாகனத்தை அன்பர்கள் சென்ற சம்ப்ரோக்ஷணத்தின் போது சமர்பித்தனர். எல்லா உற்சவங்களும் வெகு சிறப்பாக இத்திருக்கோவிலில் நடைபெறும் சிறப்பை சமயம் கிடைத்தால் வந்து சேவித்து சத்ய ஸ்ரீ மஹா லக்ஷ்மி சமேத சத்ய நாராயணர் அருள் பெறுமாறு பிரார்த்திக்கின்றேன்.

கருட சேவை பின்னழகு
தாழைத்தண்ணாம்பல் தடம்பெரும் பொய்கைவாய் 
  வாழுமுதலை வலைப்பட்டு வாதிப்புண் 
  வேழந்துயர்கெட விண்ணோர் பெருமானாய்
ஆழிப்பணி கொண்டானாலின்று முற்றும் 
  அதற்கருள் செய்தானாலின்று முற்றும்.

6 comments:

கவிநயா said...

கண்ணையும் மனசையும் கொள்ளை கொள்கின்றன வண்ணப் படங்கள்! அத்துடன் சத்ய நாராயண விரத மகிமையையும் அருமையாக தந்தமைக்கு நன்றிகள்!

S.Muruganandam said...

அடியேன் அனுதினமும் சேவிக்கும் பெருமாள் இந்த சத்ய நாராயணப் பெருமாள். வந்து சேவித்ததற்கு நன்றி கவிநயா.

Niru said...

சத்யநாராயண விரத மகிமையையும் சத்ய நாராயண பூஜையின் போது பாராயணம் செய்யப்படும் கதைகளையும் அழகாகவும் விளக்கமாகவும் சொன்னமைக்கு மிக நன்றி.இவை எனக்கு புதிய தகவல்கள்.
படங்களுடன் இதைப்படித்தபோது நானே சத்யநாராயண பூஜை செய்ததுபோல் பரவசம் ஏற்பட்டது.
சத்ய நாராயண பெருமாள் உங்களை என்றென்றும் ஆசீர்வதிப்பாராக!

S.Muruganandam said...

//படங்களுடன் இதைப்படித்தபோது நானே சத்யநாராயண பூஜை செய்ததுபோல் பரவசம் ஏற்பட்டது.//

அனைத்தும் அந்த சத்ய நாராயணப் பெருமாளின் அனுக்கிரகம். அனைத்தும் அவரே ஆதாரம். நன்றி அவருக்கே செலுத்துங்கள் நீரு.

அஞ்சனை மைந்தனின் அழகு கண்டு களித்தேன்.

*இயற்கை ராஜி* said...

தங்களின் வலைப்பூவைப் பற்றிய விவரத்தை httப்://blogintamil.blogspot.com இங்கே தந்துள்ளேன்.நேரம் கிடைக்கும்போது வருகைதாருங்கள். நன்றி

S.Muruganandam said...

நன்றி இயற்கை மகள் அமர்க்களமாக இருக்கின்றது தங்கள் பதிவுகள்.