Tuesday, March 25, 2014

திருத்தொலைவில்லி மங்கலம் செந்தாமரைக் கண்ணன் கருடசேவை

                                 ஆழ்வார் திருநகரி ஒன்பது கருட சேவை -9





திருத்தொலைவில்லி மங்கலம் இரண்டு திருப்பதிகளை அருகருகே கொண்டுள்ளதால் இரட்டைத்திருப்பதி என்றும் அழைக்கப்படுகின்றது. தன்பொருநை நதியின் வடகரையில் திருப்புளியங்குடி திருப்பதியின் தென் கிழக்கிலும் நெற்பயிர்களும், மலர்களும் நிறைந்த இந்தத்தலம் திருப்பெருங்குளத்திற்கு மேற்கில் சுமார் 5 கி.மீ தூரத்தில்   இத்தலம் அமைந்துள்ளது.  திவ்ய தேசங்களுள் 84வது நவதிருப்பதிகளில் எட்டாவது மற்றும் ஒன்பதாவது. இத்திருத்தலங்களுக்கு மேற்கே  ஒன்றரை கி.மீ தூரத்தில் நம்மாழ்வாரின் அவதார ஸ்தலம் அப்பன் கோவில் உள்ளது. இதுவும் குக்கிராமம்தான் அதிக வீடுகள் கிடையாது. 

தெற்குக் திருக்கோவில்:

மூலவர்:  ஸ்ரீநிவாசன், உபய நாச்சியார்களுடன் நின்ற திருக்கோலம் கிழக்குப்பார்த்த திருமுக மண்டலம்.
உற்சவர்: தேவர் பிரான்
தாயார்: அலர்மேல் மங்கை, பத்மாவதி தனி சந்நிதி இல்லை.
விமானம்: குமுத விமானம்.
தீர்த்தம்: வருண தீர்த்தம், தாமிரபரணி
பிரத்யட்சம்: இந்திரன், வாயு, வருணன்.
ஆகமம் : வைகானஸம் – சம்பிரதாயம்: தென்கலை.
மங்களாசாசனம்: நம்மாழ்வார் 12 (6ம் பத்து -5ம் திருவாய் மொழி) பாடல்களால் மங்களாசாசனம் செய்துள்ளார். 
கிரகம்: இராகு ஸ்தலம்.



செந்தாமரைக் கண்ணன் கருட சேவை 

வடக்குத் திருக்கோயில்:

மூலவர் : அரவிந்த லோசனர் (அமர்ந்த திருக்கோலம்) கிழக்குப் பார்த்த திருமுக மண்டலம்.
உற்சவர்: செந்தாமரைக்கண்ணன்.
தாயார் : கருந்தடங்கண்ணித் தாயார்.
விமானம்: குமுத   விமானம்.
தீர்த்தம் : வருண தீர்த்தம்.
பிரத்யட்சம் : வருணன், இந்திரன், வாயு.
ஆகமம் : வைகானஸம் – சம்பிரதாயம்: தென்கலை.
மங்களாசாசனம்:நம்மாழ்வார் 12 (6ம் பத்து -5ம் திருவாய் மொழி) பாடல்களால் மங்களாசாசனம் செய்துள்ளார். 
கிரகம்: கேது ஸ்தலம்.




தேவர் பிரான் வைபவம். திருப்புளியங்குடி திவ்ய தேசத்தில் தென்கிழக்கில் அமைந்துள்ள இத்தலத்தில் நெற்பயிர்களும், மலர்களும் நிறைந்த கேதாரம் என்ற திருப்பதியில் ஆத்திரேய கோத்திரத்தில் உதித்த சுப்பரபர் என்ற முனிவர் இங்கு வந்தவுடன்  இவ்விடத்தின் பொலிவைப் பார்த்து ஒரு  வேள்வி இயற்ற  முடிவு செய்தார். யாக சாலைக்காக பூமியை உழுத போது அவருக்கு அவ்விடத்தில் ஒர் தராசையும் வில்லையும் கண்டு வியப்படைந்தார். பிறகு அவர் இவை யாருடையவை? எக்காலத்தில் இங்கு கொண்டுவரப்பட்டன என்று எண்ணிக்கொண்டு தன் கரங்களினால் அவற்றை தூக்க  தராசு ஒரு பெண்ணாகவும், வில் ஒரு ஆணாகவும் மாறினர். அவர்களைப் பார்த்து சுப்பரர் எவ்வாறு இப்படி மாறினீர்கள் என்று வினவ, அதற்கு அந்த ஆண், காமம், வெகுளி, மயக்கம் என்ற மூன்றையும் வென்ற முனிவர்களே! முற்பிறவியில் நான் ஒரு வித்யாதரன் என்ற தேவனாயிருந்தேன், இவள் என் பத்தினி, நான் இவளிடத்தில் மோகம் கொண்டு திகம்பரனாயிருந்த சமயத்தில் யாத்ரா மார்க்கமாக சென்ற குபேரன் பார்த்து விட்டான். அவன் மிகுந்த கோபம் கொண்டு எங்கள் இருவரையும்  வில்லாகவும், தராசாகவும் போகும்படி சபித்தான். நாங்கள் சாப விமோசனம் வேண்ட வெகு காலத்திற்குப்பிறகு சுப்பிரபர் என்ற முனி எங்கும் தம்து யாகம் சித்தியாகாமல்  முடிவில் இங்கு வந்து சேர்வார். அவர் யாகத்திற்காக பூமியை உழும் போது அவர் கரம் பட்டு உங்கள் சாபம் நீங்கும் என்று கூறிச்சென்றார். அது போலவே இன்று தங்கள் கரம் பட்டு எங்கள் சாபம் நீங்கியது என்றான். பின்னர் இருவரும் முக்தியும் அடைந்தனர்.


குழையும் வாள்முகத்தேழையைத் தொலைவில்லி மங்கலம் கொண்டு புக்கு
இழைகொள் சோதிச் செந்தாமரைக்கண் பிரான் இருந்தமை காட்டினீர்
மழைபெய்தாலொக்குங்கண்ணநீரினொடுஅன்று தொட்டும்மையாந்து  இவள்
நுழையுஞ்சிந்தயளன்னைமீர்! தொழும் அத்திசையுற்று நோக்கியே.

பெருமாளைக் கண்ட பின் வேறு எதுவும் நினைவில் இல்லாத பராங்குச நாயகியாய் தன்னை பாவித்து நம்மாழ்வார் பாடிய தோழிப் பாசுரம். 


பின் முனிவர்கள் ஒன்று கூடி யாகத்தை பூர்த்தி செய்து மஹாவிஷ்ணுவை ஆராதித்தனர். அங்கு ஆவீர்பவித்த தேவ பிரானை, தேவரீர் இந்த யாக சாலையில் ஸ்ரீநிவாசன் என்ற திருநாமத்துடன் எழுந்தருளியிருந்து  பக்தர்களுக்கு அருள் புரிய வேண்டும். இங்கு துலையும் வில்லும் முக்தியடைந்தபடியாலும், இங்கு யாவருக்கும் மங்களம் உண்டாகின்றபடியாலும் இவ்விடம் ’துலைவில்லி மங்கலம்’ என்ற பெயருடன் விளங்க வேண்டும் என்று விண்ணப்பிக்க சுப்பிரபர் பிரார்த்தனையை ஆங்கீகரித்தான் அயர்வறு அமரர்கள் அதிபதி. திருச்சீரங்கநாதன் பள்ளி திருச்சிராப்பள்ளியாகத் திரிந்தது போல திருத்துலைவில்லிமங்கலம், தொலைவில்லி மங்கலமானது (துலை – தராசு).  





வில் என்பது ஏக பத்னி விரதத்தை குறிக்கின்றது. ஸ்ரீ இராமபிரான், இப்பிறவியில் உன்னையல்லாம் வேறு ஒரு மாதரை கனவிலும் நினையேன் என்று சீதா பிராட்டிக்கு வரம் கொடுத்து ஏக பத்னி விரதனாக இருந்ததால்தான் அவர் சிவ தனுசை அநாசயமாக தூக்க முடிந்தது,  காகாசுரன், வாலி இராவணன் ஆகியோரை  வெல்ல முடிந்தது. தராசு எவ்வாறு தன் மேல் வைக்கப்படும் இரு பக்க பொருட்களின்  சம நிலையைக் காட்டுகின்றதோ அது போல நம்முடைய நல் வினைகள், தீவினைகளை பொறுத்து நமது வாழ்க்கை அமைகின்றது.  தேவர்பிரான் பூமிக்கு அதிபதியான இந்திரனுக்கும், மழைக்கு அதிபதியான  வருணனுக்கும், வாயு பகவானுக்கும் பிரத்யக்ஷம். நாம் உயிர் வாழ காற்று, நீர் மற்றும் உணவு விளைகின்ற பூமி ஆகிய மூன்றும்  இன்றியமையாதது  என்பதை உணர்த்துகின்றார் பெருமாள். இங்கு வில்லாளி சகல கல்யாண குணங்களையும் தன்னிடம் கொண்ட ஸ்ரீநிவாசப்பெருமாள். அவர் நின்ற கோலத்தில் உபய நாச்சியார்களுடன் சேவை சாதிக்கின்றார்.








காய்சினவேந்தரை அடுத்து இரட்டைத்திருப்பதிகளின் செந்தாமரைக் கண்ணன்  நம்மாழ்வாருக்கு சேவை சாதிக்கின்றார். அந்த புகைப்படங்களி இப்பதிவில் காணுகின்றீர்கள். அடுத்த பதிவில் தேவ்ர் பிரானின் கருடசேவையைக் காணலாம். 









        


2 comments:

அபயாஅருணா said...

தங்களின் திவ்ய தேச பதிவுகள் நன்றாக உள்ளன.
தொடரவும் .

S.Muruganandam said...

நாராயணன் அருளால் தொடர்கிறேன், தாங்களும் வந்து சேவித்து விட்டு செல்லுங்கள்.