Monday, June 9, 2014

மாசி மக தீர்த்தவாரி கருட சேவைகள்

இந்த வருடம் மாசி பௌர்ணமியன்று சென்னை கடற்கரைக்கு சென்று தீர்த்தவாரிகளை சேவிக்கும் பாக்கியம் கிட்டியது  அதில் கருட சேவை சாதித்த பெருமாள்களின் தொகுப்பே இப்பதிவு.


அதிகாலையிலேயே பெருமாள் கடற்கரைக்கு வருவதற்கு  முன்னரே பக்தர்களுக்கு தண்ணீரும், நீர் மோரும் வழங்கும் அன்பு உள்ளங்கள். அதையும் வருடா வருடம் தவறாமல் செய்து வரும் "காத்தன் செட்டியார் ட்ரஸ்ட்" அன்பர்களுக்கு  வாழ்த்துக்கள் மற்றும் நன்றி.


தங்க  கருட வாகனத்தில் பார்த்தசாரதி பெருமாள்


கடற்கரைக்கு எழுந்தருளுகிறார்

மாசி மாதம் முழுமதியும் மக நட்சத்திரமும் இணைந்து வரும் நன்னாளில் மாசி கடலாட்டு, மாசி மக  தீர்த்த வாரி, தீர்த்தம் கொடுத்தல், மாசி மகம் என்றெல்லாம் அழைக்கப்படும் இத்திருவிழா தமிழகமெங்கும் வெகு விமர்சையாக நடைபெறுகின்றது. கன்னியாகுமரி முதல் சென்னை வரை கடற்கரையோரம் அமைந்த திருக்கோவில்களின் அனைத்து உற்சவ மூர்த்திகளும் கடலுக்கு எழுந்தருளி தீர்த்தவாரி கண்டருளுகின்றனர். ஆற்றங்கரையில் அமைந்த திருக்கோவில்களின் மூர்த்திகள் ஆற்றுக்கு எழுந்தருளி தீர்த்தம் கொடுக்கின்றனர். மற்றும் பல் வேறு திருக்குளங்கள் முதலான நீர் நிலைகளில் மாசி மக தீர்த்தம் கொடுத்தல் சிறப்பாக நடைபெறுகின்றது. கும்பகோணத்தில் பன்னிரண்டு ஆண்டுகளுக்கு கொண்டாடப்படும் மஹாமகமும் இந்த மாசிமக விழாதான்.


ஒவ்வொரு மாதத்திற்கும் ஒவ்வொரு நட்சத்திரம் சிறந்தது போல, மாசியில் சிறந்து விளங்குவது மக நட்சத்திரம். ஏன் இப்படி என்று ஆராய்ந்தால், நமது முன்னோர்கள் ஒவ்வொரு தமிழ் மாதத்திலும் "பௌர்ணமி' திதி வரும் நன்னாளில் என்ன நட்சத்திரம் உள்ளதோ, அதையே அந்த மாதத்தின் பெயராகவும் வரும்படி அமைத்துள்ளார்கள். (உதாரணமாக சித்திரை மாதத்தில் வரும் பௌர்ணமி, சித்திரை நட்சத்திரத்தில் உதிப்பதால் அந்த மாதத்திற்கு "சித்திரை' என்று பெயர்). அந்த வரிசையில் மாசி மாதம் வரும் பௌர்ணமியில் மக நட்சத்திரம் பிறப்பதால், இந்தத் தமிழ் மாதம் "மாக மாதம்' (மாசி) என்று பெயர் பெற்றது.பெருமாளை சேவிக்கும் பக்தர்கள்


பொதுவாகவே ஆலயங்களிலே திருவிழாக்களைத் தொடங்குவது அல்லது விழாக்கள் கொண்டாடுவது ஒரு முழுமதி திகழும் நன்னாளாகவே அமையும். அவ்வகையில் இந்த மாசிமாதம் மக நட்சத்திரத்தில் நடைபெறும் மகத்திருவிழா, - தலம், மூர்த்தி, தீர்த்தம் என்ற மூன்றினில் தீர்த்தத்துக்கு முக்கியத்துவம் அளிக்கப் பெறும் விழாவாக அமைந்துள்ளது. இதனை "மாக ஸ்நானம்' என்று சிறப்பித்துக் கூறுவார்கள்.


பார்த்தசாரதிப் பெருமாளின் பின்னழகு 


கடலில் இறங்க தயாராகின்றார் பெருமாள்

புராணங்களும் இந்நன்னாளைப் போற்றுகின்றன. மனிதர்கள் தங்கள் பாவங்களைப் போக்கிக் கொள்ளும் வழிகளில் மாசி மகப் புனித நீராடலும் ஒன்று. மாசி மகத்தில் புண்ணிய தீர்த்தங்களைத் தரிசிப்பதும் தொடுவதும் பருகுவதும் அதில் நீராடுவதும் புண்ணியத்தைத் தரும்; பாவங்கள் தொலையும். இத்தினத்தில் தீர்த்தக் கரைகளில் தர்ப்பணம், பிதுர்க்கடன் ஆகியவை செய்தால், அவர்கள் பாவங்கள் நீங்கி நற்கதி பெறுவர் என்பது நம்பிக்கை.


பெருமாளுடன்  புனித தீர்த்தமாடிய  ஸ்ரீவைஷ்ணவர்கள்


 கடலாடிய சுதர்சனாழ்வார்

மாசி மக நட்சத்திரத்தன்று கோள்களின் அமைப்பின் காரணமாக ஈர்ப்புத் தன்மை காரணமாக பூமியில் காந்த சக்தி அதிகமாகி நீர் நிலைகளில் புதிய ஊற்று தோன்றி காந்த சக்தி கலக்கிறது. அதனால் அப்போது நதியில் நீராடுவதால் உடலிலும், மனதிலும் ஆரோக்கியம் அதிகரிக்கும் என்று விஞ்ஞானம் கூறுகிறது. எழும்பூர் ஸ்ரீநிவாசப்பெருமாள்


கருட சேவை

இம் மாதத்தில் எல்லா நாட்களிலும் புனித நீராடுவது பிரயாகை, கங்கை, நர்மதா, காவேரி, கோதாவரி, துங்கபத்திரா, தாமிரபரணி உள்பட 24 கோடி தீர்த்தங்களில் தொடர்ந்து 10 ஆண்டுகள் நீராடிய பலன் ஒரே நாள் நீராடுவதால் கிட்டும். முனி பத்தினியர்கள் சரஸ்வதி நதி தீரத்தில் மண்ணால் அம்பிகை விக்ரகம் அமைத்து மாசி மாதம் 30 நாட்களும் வழிபட்டு சுமங்கலி பேறு பெற்றனர். மாசியின் தேவதை மஹா விஷ்ணு. இம்மாதம் முழுவதும் திருமாலை நினைத்து துளசியால் அர்ச்சனை செய்து வழிபட மிகவும் நல்ல பலன் கிட்டும்.
ஸ்ரீநிவாசர் பின்னழகு 

இராயப்பேட்டை  ஸ்ரீநிவாசர் கருட சேவைசென்னையில் கடற்கரையெங்கும் பல இடங்களில் அனைத்துக் கோவில் திருமூர்த்தங்களும் எழுந்தருளி தீர்த்தக் கொடுக்கின்றனர்.  பெருமாளுடன் சக்கரத்தாழ்வாரும்  கடற்கரைக்கு எழுந்தருளுகிறார். பெருமாள் கடலுக்குள் சென்று வந்த பிறகு  சக்கரத்தழ்வார்  கடலில் வந்து நீராடும் போது அவருடன் பக்தர்களும் அவருடன் கடலில் நீராடி தங்கள் பாபங்களை போக்கிக்கொள்கின்றனர். பின்னர் கடற்கரையில் சக்கரத்தாழ்வாருக்கு , மஞ்சள் , திருமஞ்சனப்பொடி, சந்தனம், பால், தயிர், தேன், பன்னீர் அபிஷேகங்கள் நடைபெறுகின்றன பின்னர் சக்கரத்தாழ்வாருக்கும் பெருமாளுக்கும்  தீபாரதனை நடைபெறுகின்றது. இன்றைய தினம் சிறப்பு நைவேத்யம் வெள்ளரிக்காய், நீர்மோர் கோடைக் காலம் தொடங்கி விட்டதாலோ?


No comments: