Saturday, September 19, 2015

கருட யாத்திரை - 8


திருக்கண்ணபுரத்தில் கர்வம் தீர்ந்த கருடன்

நீலமேகப்பெருமாள்

தாயார்களுடன் சௌரிராஜப் பெருமாள் 

கண்ணனின் பெயரைத் தாங்கிய கிருஷ்ணாரண்யத் தலங்கள் தலங்கள் ஐந்து உள்ளன. அவையாவன திருக்கண்ணங்குடி, திருக்கண்ணமங்கை, திருக்கண்ணபுரம், கண்ணன் கவித்தலம், மற்றும் திருக்கோவிலூர் ஆகும். இந்து ஐந்து தலங்களில் திருக்கண்ணபுரத்திற்கு ஒரு தனி சிறப்பும் பெருமையும் உண்டு அது என்ன என்றால் இத்திருக்கோவிலில் எழுந்தருளியிருக்கின்ற சௌரிராஜன் என்னும் நீலமேகப்பெருமாள் மீனவர் குல ராஜகுமாரியை மணந்து, பரதவர் குல மருமகனாக திகழ்கின்றார். அந்த மீனவர்களும் பெருமாளை மாப்பிள்ளை சுவாமி!, மாப்பிள்ளை சுவாமி!” அன்பொழுக தங்கள் வீட்டுக்கு வந்த மருமகனை எப்படி கவனிப்போமோ அது போல கௌரவப்படுத்துகின்றனர். இவ்வாறு  உள்ளத் தூய்மையோடு இறைவனிடம் பக்தி செய்பவர்களுக்கு சாதி, மதமோ ஒரு தடை இல்லை  என்பதை நிரூபித்துக் கொண்டிருக்கிறார் சௌரிராஜப்பெருமாள்.

தல வரலாறு:  கண்டவர் தம் மனம் உருக்கும் திருக்கண்ணபுர தலத்தில் சில முனிவர்கள் உணவு, நீர் கொள்ளாமல் பெருமாளைக் குறித்துக் கடுந்தவம் மேற்கொண்டதால் நெற்கதிர்களைப் போன்று மெலிந்தனர். திருமாலிடம் எட்டெழுத்து மந்திரம் கற்ற உபரிசரவஸு என்ற மன்னன் இந்திரனின் யாகத்தை காக்க அசுரர்களை கொன்று  பூலோகத்திற்கு இந்திர விமானத்தில் வரும்போது, தூய நீரோடையையும் நெற்கதிர்களையும் கண்டு இறங்கி கதிர்களாய்த் தோற்றமளித்த முனிவர்களை அறுக்க முற்படும் போது இரத்தம் வந்தது தேஜோமயமான ஒரு  16 வயது சிறுவன்  தோன்றி  கதிர் அறுக்க வேண்டாம் என்று  எச்சரிக்கை செய்தான். மன்னன் அதை சட்டை செய்யாமல் இருக்க இருவருக்கும் போர் மூண்டது. போரிட்ட படைகளும், மன்னனும் களைத்தனர். இறுதியாக  நாராயணாஸ்திரத்தை ஏவினான் மன்னன். அஸ்திரம் சிறுவனின் தோளில்  மாலையாகியது. தன்னை எதிர்த்துப் போரிட்டது எம்பெருமான் என்று உணர்ந்த மன்னன் மன்னிப்பு வேண்டினான். பெருமாளும்  புஷ்கரணியில் நீராடி வா, உண்மை சொரூபம் காட்டுகின்றேன்என்றார். பின்னர் மன்னனுக்கு துளசி மாலையுடன், சங்கு சக்கரம் ஏந்தி கோடி சூரியப் பிரகாசத்துடன்   நீலமேகப் பெருமாளாகக் காட்சியளித்து அவன் விருப்பப்படி இங்கே கோயில் கொண்டார் திருமால்!.

இராஜ கோபுரம் 

இத்தலத்தின் மூலவர்: நீல மேகப்பெருமாள், சௌரிராஜன், நின்ற திருக்கோலம், கிழக்கு நோக்கிய திருமுக மண்டலம், பிரயோக சக்கரம்.

தாயார்: கண்ணபுரநாயகி

உற்சவர்: சௌரிராஜப்பெருமாள்

விமானம் : உத்பலாவதக  விமானம்

தீர்த்தம்:  நித்ய புஷ்கரிணீ


இத்தலத்தின் விமானம் உத்பலாவதக விமானம், பலம் என்றால் சதை, உத்பலம் என்றால் சதை இல்லாத முனிவர்கள் என்று பொருள்மஹா விஷ்ணுவை வணங்கி முனிவர்கள் தவம் செய்வதாக ஐதீகம், எனவே இங்கு விமானத்தை தரிசனம் செய்யமுடியாதபடி சுற்றி மதில் எழுப்பப்பட்டுள்ளது.

மன்னுபுகழ்க் கௌசலைதன் மணிவயிறு வாய்த்தவனே!
தென்னிலங்கைக் கோன்முடிகள் சிந்திவித்தாய்! செம்பொன்சேர்
கன்னிநன்மாமதிள்புடைசூழ் கணபுரத்தென்கருமணியே!
என்னுடையவின்னமுதே! இராகவனே! தாலேலோ!. ( பெரு. தி  8 – 1)

பொருள்: நிலைத்த புகழுடைய கோசலையின் அழகிய திருவயிற்றிலே பிள்ளையாக வந்து அவதரித்தவனே! தென்னிலங்கைக்கு இறைவனான  இராவணனுடைய பத்துத்தலைகளும் சிதறி ஓடும்படி செய்தவனே! செம்பொன்னிலே செய்யப்பட்டதாய் அழிவில்லாததாய், அழ்கான பெரிய திருமதில்களால் நாற்புறமும் சூழப்பட்ட திருக்கண்ணபுரத்தில் எழுந்தருளியிருக்கின்ற நீல மணி போன்ற எம்பெருமானே! எனக்கு இனிய அமுதாயிருப்பவனே! இராகவனே! தாலேலோ!”  என்று கணபுரத்தம்மானை குலசேகர ஆழ்வார் ஸ்ரீராமனாகவே எண்ணி  தன்னை கௌசலையாக பாவித்து தாலாட்டுப் பாடியிருக்கிறார்

முக்தி அளிக்கும் தலங்களான திருவரங்கம், ஸ்ரீமுஷ்ணம், திருவேங்கடம், வானமாமலை, சாளக்கிராமம், பத்ரிகாஸ்ரமம், நைமிசாரண்யம் இவற்றில் எட்டெழுத்துக்களின் ஒவ்வொரு எழுத்தாக இயங்கும் பெருமாள் மொத்த எழுத்துக்களாக அருளும் திருத்தலம்! இத்தலம். எனவே இத்தலம் அஷ்டாக்ஷ சித்தி தலம் என்று அழைக்கப்படுகின்றது. மேலும் நாதாய சௌரேய  நம:” என்னும் மந்திரத்தை பெருமாளே இங்கு அருளினார். விஷ்ணு சஹஸ்ரநாமத்தில் உள்ளசூர, சௌரி, ஜனேஸ்வரஎன்னும் நாமாக்கள் இப்பெருமாளை குறிக்கின்றன

சௌரிராஜப்பெருமாள் கருட சேவை 

தலம், வனம், நதி, கடல், நகரம், தீர்த்தம், விமானம் என்ற 7 புண்ணியங்களும் ஒருங்கே அமைந்துள்ள தலம். எனவே சப்த புண்ணிய க்ஷேத்திரம்ஆகும். இவ்வமைப்புள்ள இடத்தில்தான் அஷ்டாக்ஷர மந்திரம் சித்திக்கும் என்பது சூட்சுமம்

திருப்புட்குழியில் வறுத்த பயிறு, திருப்பதியில் லட்டு, ஸ்ரீரங்கத்தில் அரவணை (பாயாசம்) கும்பகோணத்தில் தோசை (பால் பாயாசம்) போன்று இங்கு முனையரைன் பொங்கல் சிறப்பு.

முனையதரையன் என்ற குறுநில மன்னன் பெருமாளை வணங்காமல் உணவு உண்பதில்லை  என்ற வழகத்தை கொண்டிருந்தார். ஒரு சமயம் அவர்  மன்னனுக்குத் திறை கூட செலுத்தாமல் அனைத்துப் பொருளையும் பெருமாள் திருப்பணியில் செலவிட்டதால்  மன்னன் அவரை  சிறையில் அடைத்தான். மன்னனின் கனவில் பெருமாள் தோன்றி விடுவிக்கச் சொன்னதால்  முனையதரையன் விடுவிக்கப்பட்டார். இரவில் வீடு திரும்பியவருக்கு உண்பதற்குப் பொங்கல் மட்டுமே இருந்தது. மானசீகமாகப் பெருமாளுக்குப் படைத்துவிட்டு உண்டார். மறுநாள் கோயிலைத் திறந்த அர்ச்சகருக்கு அதிர்ச்சி! பெருமாளின் உதட்டோரத்தில் பொங்கல்! ஆலயம் எங்கும் பொங்கல் மணம்! இன்றும் அர்த்த சாமத்தில் முனையதரையன் பொங்கல் பெருமாளுக்குப் படைக்கப்படுகிறது

நித்ய புஷ்கரிணி


முன் ஒரு காலத்தில் இவ்வாலயத்திற்கு ஏழு பிரகாரங்கள் இருந்துள்ளன. சோழ மன்னன் ஒருவன் இங்கிருந்த மதில்களை இடித்து சிவாலயம் கட்ட கற்களைக் கொண்டு சென்றான் இதுகண்டு வெகுண்ட அரையர் என்னும் பரமபக்தர், “பொருவரைமுன் போர் தொலைத்த பொன்னாழி மற்றொரு கைஎன்பது பொய்த்ததோ என்று தம் கைத்தாளத்தைப் பெருமானின் மீது விட்டெறிய, பெருமாள் தமது பிரயோகச் சக்கரத்தை ஏவி மன்னனைக் கொன்றார். இதனால் இப்பெருமானின் நெற்றியில் தாளம் பட்டுப் புண்ணானநெற்றி வடுஇன்றும் உள்ளதைக் காணலாம். 6 மதில்களை இடித்தது போக எஞ்சியிருப்பது இப்போது உள்ள மதில் ஒன்றுதான்!

108 திவ்ய தேசங்களுள் மேலை வீடு திருவரங்கம், வடக்கு வீடு - திருவேங்கடம் எனவும் தெற்கு வீடு திருமாலிருஞ்சோலை (அழகர் கோயில்) என அமைந்த வரிசையுள் கீழை வீடாகத் திருக்கண்ணபுரம் திகழ்கின்றது

இந்த ஊரில் கால் பட்டாலே வைகுந்தம் கிடைக்கும் என்பதால் சொர்க்க வாசல் இல்லாத திருத்தலம்!. நீராடுபவர்களின் பாவங்கள் அனைத்தையும் போக்கவல்லது இங்குள்ள நித்ய புஷ்கரணி!. உத்தராயண காலத்தில் மூன்று நாட்கள் இத்தீர்த்தத்தில் அனைத்து நதிகளும் நீராடி தங்கள் பாவத்தைப் போக்கிக்கொள்கின்றன. இதில் அமாவாசை தினத்தில் பித்ரு பூஜை செய்ய பித்ரு தோஷம் விலகும். இந்திரன் இத்தலத்திற்கு வந்து நவக்கிரக பிரதிஷ்டை செய்து பெருமாளை வணங்கி தோஷம் நீங்கப் பெற்றான். இந்திரன் பிரதிஷ்டை செய்த நவக்கிரகம் இராஜகோபுரத்திற்கு அடியில் மதிற்சுவரில் மேற்குப் பார்த்தப்படி இருக்கின்றது. இந்த நவக்கிரகம் சுற்றிலும் 12  இராசிகளுடன் இருப்பது ஒரு வித்தியாசமான அமைப்பாகும்.

 புஷ்கரிணி  கரையில் ஹனுமன் சன்னதி 

கர்ப்பகிரகத்தில்  சர்வாங்க சுந்தரனாக  காமனும் வியக்கும் அழகுடன் வலப்புறம் தண்டக முனிவரும்இடப்புறம் அஞ்சலி ஹஸ்தத்துடன் கருடனும்  உடன்  இருக்க அற்புதமாக கிழக்கு நோக்கிய திருமுக மண்டலத்துடன் நெடியோனாக நின்ற கோலத்தில்   சேவை சாதிக்கின்றார் நீலமேகப்பெருமாள். மற்ற தலங்களில் அபயக் காட்சியோடு பெருமாள் இருப்பார். இங்குள்ள பெருமாள் தானம் பெற்றுக் கொள்பவர் போல வரத ஹஸ்தத்துடன் சேவை சாதிக்கின்றார். இதன் பொருள் நம் கஷ்டங்களைப் பெருமாள் வாங்கிக் கொள்கிறார்!. விகடாக்ஷன் என்ற அசுரன் விலங்குரு கொண்டு கிருஷ்ணாயண்யத்தின் முனிவர்களை துன்புறுத்தினான் எம்பெருமான் குதிரை மேலேறி அசுரர்களை கொன்று விகடாக்ஷ்ரனையும் சக்கரத்தால்  நிக்ரஹம் செய்தார்.  மஹரிஷிகளின் பிரார்த்தனைப்படி சக்கரப்பிரயோகம் செய்த  கோலத்தில் இன்றும்  சேவை சாதிக்கின்றார்.

செய்வினை தோஷங்கள், சத்ருக்கள் தொல்லை, பொறாமையால் பிறர் தரும் துன்பங்கள் ஆகியவற்றை போக்கக்கூடிய வீரியம் பிரயோக சக்கரத்திற்கு உண்டு. இத்தலம், திருவெள்ளறை, திருவரங்க பிரணாவகர விமானம் ஆகிய இடங்களில் நாம் பெருமாளை பிரயோக சக்கரத்துடன் சேவிக்கலாம்.

இனி கருடன் பெருமாளுடன் சேவை சாதிக்க காரணம் என்னவென்று பார்க்கலாமா? தன் தாயை, சிற்றன்னையின் அடிமைத்தனத்திலிருந்து விடுவிக்க தேவ லோகம் சென்று இந்திரனை தோற்கடித்து  அமுதம் கவர்ந்து வந்தார்   இவ்வாறு   தேவர்களைத் தவிர யாருக்கும் கிடைக்காத  அமிர்தத்தை தேவர்களை வென்று கொண்டு வருவதை எண்ணி கருடன் மனம் கர்வம் கொண்டது. கர்வத்துடன் அவர் சென்றதால் தன் சக்தி இழந்து கடலில் வீழ்ந்தார். தவறை உணர்ந்த கருடன் மன்னிப்பு வேண்டி கடலினுள் இருந்த  ஒரு மலையின் மீது பெருமாளை வேண்டி தவம் செய்தார். விஷ்ணு அவரை மன்னித்து வாகனமாக ஏற்றுக்கொண்டார். ஆகவே இன்றும் பெருமாளை வணங்கிய நிலையில்  பெருமாளுக்கு இடப்பக்கத்தில்  கர்வம் தீர்ந்த கருடனை நாம் சேவிக்கலாம். வலப்பக்கத்தில் தண்டக மஹரிஷியை சேவிக்கலாம்.   மாசி மகத்தன்று  கடற்கரைக்கு எழுந்தருள்வது கருட பர்வதத்தை பார்வையிட என்று கூறுவாறும் உண்டு. சௌரிராஜப்பெருமாள் தங்க கருட வாகனத்தில் திருமலைராயன் பட்டினம் என்னும் மீனவ கிராமத்திற்கு எழுந்தருளி சேவை சாதிப்பது  இந்த திவ்யதேசத்திற்கே ஆன ஒரு சிறப்பு ஆகும். .     

விபீஷணுக்கு சேவை சாதித்த தலம் இது.. நீ கிடந்த அழகை திருவரங்கத்திலே கண்டேன். நின் நின்ற அழகையும் நடையழகையும் காண வேண்டும் என்று வீபிஷணர்  வேண்ட, கண்ணபுரத்தில் காட்டுவோம் வா என்று வீபீடணணுக்கு நடையழகு காட்டி அருளிய பெருமாள்!.  இன்றும் ஒவ்வொரு அமாவாசையிலும் மதியம் சௌரி முடியுடன் கைத்தல சேவையில்  நாம் நடையழகைக் காணலாம்! இத்திருத்தலத்தில் விபீஷணனுக்கு தனி சன்னதி உள்ளது. 


இவ்விடத்தில் பெருமாள் மும்மூர்த்திகளாக காட்சி அருளுகிறார். வைகாசி பிரம்மோத்ஸவத்தில் 7 ஆம் திருநாளில்ஸ்திதி காத்தருளும்நிலையில் மஹாவிஷ்ணுவாகவும், இரவு தர்ப்ப நாளங்களால் கட்டப்பட்டு தாமரைக்கு மத்தியில் படைப்பு நிலையில் பிரம்மாவாகவும், விடியற்காலையில் வெள்ளை சாத்தி ஒரு முகூர்த்த நேரம் அழிக்கும் ருத்ரனாகவும் (சிவனாகவும்) காட்சியளிக்கிறார். 108 திவ்யதேசங்களில் இது எங்கும் இல்லாத பெருஞ்சிறப்பு!. இப்பிரமோற்சவத்தின் 4ம் திருநாள் இரவு கருடசேவை தந்தருளுகின்றார் சௌரிராஜப்பெருமாள். 8ம் திருநாள் பத்மினித்தாயாருடன் திருக்கல்யாணம் நடைபெறுகின்றது

மதில் சுவர் 
 சௌரிராஜப் பெருமானிடம் திருமங்கையாழ்வார் இரண்டாவது  மந்திர உபதேசம் பெற்றார்நன்றிக்கடனாக ஆழ்வார் பெருமானைக் குறித்துப் பாடிய பாடல்கள் 100. திருநறையூருக்கு அடுத்து (110) திருமங்கை ஆழ்வார் பதிகம் அதிகம் மங்களாசாசனம் செய்தது   இவரைத்தான்

மற்றும் ஓர் தெய்வம் உளதென்று இருப்பாரோடு
உற்றிலேன் உற்றதும் உன்னடியார்க்கடிமை
மற்றெல்லாம் பேசிலும் நின் திருவெட்டெழுத்தும்
கற்றுநான் கண்ணபுரத்துறையம்மானே! ( பெ.தி 8 -10- 3)

பொருள்: கண்ணபுரத்துறையம்மானே! உன்னைக் காட்டிலும் வேறொரு தெய்வம் வணங்க உரியதாக உண்டு என்று நினைத்திருப்பவர்களோடு இணங்க மாட்டேன்.. உனது திருவஷ்டாட்சர மந்திரமானது அறிய வேண்டிய எல்லாப் பொருள்களையும் சொன்னாலும் அதை நான் கற்று அறிந்து கொண்ட பொருள் பாகவதர்களுக்கு அடிமையாக இருத்தலேயாகும்.  என்று அதைப் பாடுகின்றார் திருமங்கையாழ்வார். மேலும் நம்மாழ்வார்,  பெரியாழ்வார், குலசேகர ஆழ்வார், ஆண்டாள் ஆகிய ஆழ்வார்கள் இப்பெருமானை மங்களாசாசனம் செய்துள்ளனர்.

இவர் சௌரிராஜன் என்று அழைக்கப்படுவதற்கு ஒரு சுவையான கதை உண்டு. கோவிலுக்கு தரிசனத்திற்கு வந்த அரசனுக்கு  பிரசாதமாக அளிக்கப்பட்ட மலர் மாலையில் தலை முடி இருந்ததைக் கண்டு அரசன் கோபப்பட, அர்ச்சகரும் பெருமாள் திருமேனியில் தலையில் சௌரி இருப்பதாக சொல்லி சமாளித்தார். இதை சோதனை செய்ய அரசன் மீண்டும் வந்த போது, தன் பக்தனைக் காப்பாற்ற பெருமாள் தன் தலையில் கட்டி குடுமியோடு சேவை சாதித்தாராம். எனவே உற்சவருக்கு இத்தலத்தின் சிறப்பான கிரீடம் வைரம் அல்ல சௌரிதான்.


இக்கோவிலின் இன்னொரு சிறப்பம்சம், இத்தலத்தில் நான்கு தாயார்கள் அருள் பாலிக்கின்றனர், உபய நாச்சியார்களான ஸ்ரீதேவி, பூதேவியுடன், ஆண்டாளும், பத்மாவதி நாச்சியாரும் அருட் காட்சி தருகின்றனர்


சரணமாகும் தனதாள் அடைந்தார்க்கெல்லாம் 
மரணமானால் வைகுந்தம் கொடுக்கும் பிரான்
அரணமைந்த மதிள் சூழ் திருக்கண்ணபுரத்
தரணீயாளன் தனதன்பர்க்குாகுமே      திருவாய்மொழி(9-10-5)

பிறப்பாலோ, செயலாலோ, தாழ்ந்தவர்களாக இருந்தாலும் சௌரிராஜப்பெருமாளின் திருவடிகளை சரணமாக பற்றினால் பரமபதத்தையே கொடுக்கின்றான். ஒழிவில் காலமெல்லாம் உடனாய் மன்னி அடிமை செய்யும் பேற்றினை அருளுகின்றான். இதையே அழகிய மணவாளப் பெருமாள் நாயனார் என்னும் ஆச்சார்யர் " சரண்ய முகுந்தத்வம் உத்பலாவதகத்திலே பிரசித்தம் என்று தமது ஆசார்ய ஹ்ருதயம் என்னும் நூலில் அருளிச் செய்துள்ளார்.  எனவே நாமும் கண்ணபுரம் செல்வோம்; சௌரி முடி அழகில் ஈடுபட்டு அவர் திருவடியில் சரணடைந்து நிறைவாக கைங்கர்யத்தைப் பெறுவோம். அடுத்த பதிவில் இத்தலத்தின் சிறப்பு கருட சேவையான மாசி மக தீர்த்தவாரி பற்றிக் காணலாம் அன்பர்களே.  

2 comments:

Nagendra Bharathi said...

அருமை

S.Muruganandam said...

நன்றி, தொடர்ந்து வந்து சேவியுங்கள்.