Sunday, December 7, 2008

அலர்மேல் மங்கை தாயார் கருட சேவை

அகலகில்லேன் இறையும் என்று திருமாலின் திருமார்பில் நித்ய வாசம் செய்யும் திருச்சானூர்  அலர்மேல் மங்கைத்தாயாருக்கு கார்த்திகை பஞ்சமி திதியை தீர்த்த நாளாகக் கொண்டு பிரம்மோற்சவம் நடைபெறுகின்றது. அது போலவே   சென்னை திருமயிலை வேதாந்த தேசிகர் தேவஸ்தானத்திலும் தாயாருக்கு பிரம்மோற்சவம் சிறப்பாக நடைபெற்றது.

அப்பிரம்மோற்சவத்தின் மூன்றாம் நாள் மாலை தாயார் கருட வாகன சேவை தந்தருளுகின்றார். அன்னையின் அருட்கோலத்தின் சில காட்சிகள்.

விளக்கே திருவிளக்கே வேந்தன் உடன்பிறப்பே சோதி மணி விளக்கே சீதேவி பொன்மணியே அந்தி விளக்கே அலங்கார நாயகியே காந்தி விளக்கே காமாக்ஷித் தாயாரே பசும்பொன் விளக்கு வைத்துப் பஞ்சுத் திரிப்போட்டுக் குளம் போல எண்ணெய் விட்டு கோலமுடன் ஏற்றி வைத்தேன் ஏற்றினேன் நெய் விளக்கு எந்தன் குடிவிளக்கு வைத்தேன் திருவிளக்கு மாளிகையும் தான் விளங்க மாளிகையில் சோதியுள்ள மாதாவைக் கண்டு மகிழ்ந்தேன் யான் மாங்கல்யப் பிச்சை மடிப் பிச்சை தாரும் அம்மா சந்தான பிச்சையுடன் தனங்களும் தாரும் அம்மா பெட்டி நிறைய பூஷணங்கள் தாரும் அம்மா பட்டி நிறைய பால் பசுவை தாரும் அம்மா கொட்டகை நிறைய குதிரைகளைத் தாரும் அம்மா புகழுடம்பைத் தாரும் அம்மா பக்கத்தில் நில்லும் அம்மா அல்லும் புகழும் அண்டையிலே நில்லும் அம்மா.

கருட வாகனத்தில் அலர்மேல் மங்கைத் தாயார்


சேவித்து எழுந்திருந்தேன் தேவி வடிவம் கண்டேன்
வச்சிர கிரீடம் கண்டேன் வைடூரிய மேனி கண்டேன்
முத்துக்கொண்டை கண்டேன் முழுப்பச்சை மாலை கண்டேன்
உரிமுடி கண்டேன் தாழை மடல் சூடக்ண்டேன்

தாயாரின் அருட்கோல முன்னழகு்



பின்னழகு கண்டேன் பிறை போல நெற்றி கண்டேன்
சாந்துடன் நெற்றி கண்டேன் தாயார் வடிவம் கண்டேன்
கமலத்திருமுகத்தில் கஸ்தூரிப் பொட்டு கண்டேன்
மார்பில் பதக்கம் மின்ன மாலையசையக் கண்டேன்
கைவளையல் கலகலென்னக் கனையாழி மின்னக்கண்டேன்

தங்க ஒட்டியாணம் தகதகென ஜொலிக்கக் கண்டேன்
காலில் சிலம்பு கண்டேன் காலாழி பீலி கண்டேன்
மங்கள நாயகியை மனங்குளிரக் கண்டு மகிழ்ந்தேன் அடியாள் நான்
அன்னையே அருந்துணையே அருகிருந்து காரும் அம்மா
வந்த வினை அகற்றி மஹாபாக்கியம் தாரும் அம்மா
தாயாகும் உந்தன் தாளடியில் சரணம் என்றேன்
மாதாவே உந்தன் மலரடியில் நான் பணிந்தேன்.



* * * * * * * *
சென்னை சௌகார்பேட்டை ஜெனரல் முத்தையா முதலி தெரு பிரசன்ன வெங்கடேச பெருமாள் திருக்கோவிலில் தாயாரின் கார்த்திகை பிரம்மோற்சவத்தின் போது தாயார் பெண் கருட வாகனத்தில் சேவை சாதிக்கின்றார் பிரம்மோற்சவத்தின் ஆறாம் நாளன்று. அது போலவே பெண் சிறிய திருவடியில் எட்டாம் நாள் தாயார் சேவை சாதிக்கின்றார்.
பெண் கருட வாகனம்

இக்கோவிலைப்பற்றி படிக்க நேர்ந்தது, கருட சேவையன்று சென்று தரிச்சிக்கலாம் என்று அடியேன் நினைத்திருந்தேன், ஆனால் மழை காரணமாக செல்ல முடியவில்லை . இவ்வருடம் வெறும் பெண் கருட வாகனத்தை தரிசனம் செய்யலாம். சென்ற தாயார் கருட சேவையின் போது வட நாட்டில் மஹா லக்ஷ்மி தாயாருக்கு வாகனமாக கருதப்படுவது எது என்று கேட்டிருந்தேன், அதற்கான பதில் ஆந்தை, ஆமாம் நாம் அபசகுன பறவையாகக் கருதும் ஆந்தைதான் தாயாரின் வாகனமாக கருதபப்டுகின்றது. வங்காளத்தில் துர்கா பூஜையின் போது துர்க்கையம்மனுடன் மகள்களாக மஹாலக்ஷ்மியும், மஹா சரஸ்வதியும் எழுந்தருளும் போது ஆந்தை வாகனத்தை காணலாம்.

14 comments:

துளசி கோபால் said...

அருமையான சேவை.

அந்த கருடாழ்வார் கண்ணும் மூக்கும் அப்படியே அள்ளிக்கிட்டுப்போகுது!

நமக்குதான் ஆந்தை கெட்டதுன்னு சொல்றோம். ஆங்கிலக் கதைகளில் பார்த்தால் wise owl என்றுதான் இருக்கு.

மகளுக்கு அலர்மேல் மங்கை என்றுதான் ஜாதகப் பெயர் வச்சுருக்கோம். வீட்டில் அவள் அம்லு.

படங்கள் அருமை.

நன்றி கைலாஷி

S.Muruganandam said...

//அந்த கருடாழ்வார் கண்ணும் மூக்கும் அப்படியே அள்ளிக்கிட்டுப்போகுது!//

கருடன் என்றாலே உயரம், வலிமை, கம்பீரம் அல்லவா துளசியம்மா.


//மகளுக்கு அலர்மேல் மங்கை என்றுதான் ஜாதகப் பெயர் வச்சுருக்கோம். வீட்டில் அவள் அம்லு.//

அலர்மேல் மங்கைக்கு, தாயார்- பெருமாள் எல்லா நலங்களையும் வளங்களையும் அருள பிரார்த்திக்கின்றேன்.

//நமக்குதான் ஆந்தை கெட்டதுன்னு சொல்றோம். ஆங்கிலக் கதைகளில் பார்த்தால் wise owl என்றுதான் இருக்கு.//

நம்பிக்கைகள் மாறி மாறி உள்ளன. நாம் மூத்தவளூக்கு ஆந்தை வாகனம் என்று கொள்வதால் அபசகுனமானது என்று எண்ணுகிரோமோ?

Raghav said...

அற்புதமான சேவையை காண வைத்ததற்கு நன்றி கைலாஷி ஐயா..

சென்ற முறை சென்னை வந்த போது ஸ்ரீமத் வேதாந்த தேசிகர் ஆலயத்துக்கு செல்லலாம் என்று நினைத்தேன்.. முடியவில்லை.. சென்ற முறை நாச்சியார் கோவிலுக்கு செல்ல வேண்டியதைப் போல்.. தேசிகர் தரிசனத்திற்கும் வேண்டிக் கொள்கிறேன்..

சீரார் தூப்புல் திருவேங்கடமுடையான் திருவடிகளே சரணம்.

Raghav said...

பெண் கருட சேவை நான் கேள்விப்படாத ஒன்று.. இதற்குரிய விளக்கங்கள் ஏதும் உண்டா இல்லை தற்காலத்தில் ஏற்பட்ட வழக்கங்களில் ஒன்றா?

S.Muruganandam said...

//சென்ற முறை சென்னை வந்த போது ஸ்ரீமத் வேதாந்த தேசிகர் ஆலயத்துக்கு செல்லலாம் என்று நினைத்தேன்.. முடியவில்லை.. சென்ற முறை நாச்சியார் கோவிலுக்கு செல்ல வேண்டியதைப் போல்.. தேசிகர் தரிசனத்திற்கும் வேண்டிக் கொள்கிறேன்.//

தங்கள் வேண்டுதலை திருவேங்கடமுடியான் திருப்பாதங்களில் சமர்ப்பிக்கின்றேன். வேதாந்த தேசிகர் ஆலயத்தில் வெள்ளி இராமரும், சக்கரத்தாழ்வாரும் மிகவும் அருமை மறக்காமல் சேவிக்கவும்.

S.Muruganandam said...

//பெண் கருட சேவை நான் கேள்விப்படாத ஒன்று.. இதற்குரிய விளக்கங்கள் ஏதும் உண்டா இல்லை தற்காலத்தில் ஏற்பட்ட வழக்கங்களில் ஒன்றா?//

தாத்பர்யம் என்னவென்று தெரியவில்லை, அடுத்த தடவை அத்திருக்கோவில் செல்லும் போது விசாரித்து எழுதுகின்றேன் இராகவ் ஐயா.

Raghav said...

//தாத்பர்யம் என்னவென்று தெரியவில்லை, அடுத்த தடவை அத்திருக்கோவில் செல்லும் போது விசாரித்து எழுதுகின்றேன் இராகவ் ஐயா //

என்னது ராகவ் ஐயாவா????
நான் ஒரு சின்னப் பையன், என்னைய ஐயான்னு கூப்புடுறதா.. ராகவ்னே சொல்லுங்க :) இல்லன்னா ராகவான்னும் கூப்புடலாம்.

பெண் கருட சேவை பற்றி அறிய காத்திருக்கிறேன், நன்றி.

Geetha Sambasivam said...

//தாயார் பெண் கருட வாகனத்தில் சேவை சாதிக்கின்றார் பிரம்மோற்சவத்தின் ஆறாம் நாளன்று. அது போலவே பெண் சிறிய திருவடியில் எட்டாம் நாள் தாயார் சேவை சாதிக்கின்றார். ///

அட????? இது இன்னிக்குத் தான் தெரியும் பெண் கருட சேவை என்றே!!! ஆச்சரியம் தான், மற்றபடி ஆந்தை வாகனம் பார்க்கக் கிடைத்தது. நன்றி, அருமையான கருடசேவையைத் தந்தமைக்கு. ஜெயா தொலைக்காட்சியிலும் பார்க்கக் கிடைத்தது.

Kavinaya said...

//கருடன் என்றாலே உயரம், வலிமை, கம்பீரம்//

உண்மைதான். ரொம்ப அழகா இருக்கு தாயார் சேவை. பெண் கருடனும் வெகு அழகு. மிக்க நன்றி கைலாஷி.

//சேவித்து எழுந்திருந்தேன்//

எனக்குப் பிடிச்ச பாட்டு (ஸ்லோகம்?). பொருத்தமா இட்டிருக்கீங்க :)

S.Muruganandam said...

வெளியூர் சென்று விட்டதால் உடனடியாக பின்னூட்டம் இடமுடியவில்லை மன்னிக்கவும், கீதாம்மா, கவிநயா, ராகவ் அவர்களே.

S.Muruganandam said...

//பெண் கருட சேவை பற்றி அறிய காத்திருக்கிறேன், நன்றி.//


நிச்சயம் விசாரித்து எழுதுகின்றேன் இராகவ் அவர்களே.

S.Muruganandam said...

மிக்க நன்றி கீதாம்மா.

S.Muruganandam said...

//எனக்குப் பிடிச்ச பாட்டு (ஸ்லோகம்?).//

அடியேனுக்கும்தான்.

S.Muruganandam said...

//ஜெயா தொலைக்காட்சியிலும் பார்க்கக் கிடைத்தது.//

அடியேன் மிஸ் பண்ணிவிட்டேன்.