Saturday, October 11, 2008

நாச்சியார் கோவில் கல் கருட சேவை - 3

கல் கருட சேவையின் போது ஒரு அற்புதம் நடைபெறுகின்றது. அதாவது கருடனின் கனம் (எடை) அதிகமாகிக்கொண்டே போவதுதான். சன்னதியிலிருந்து வெளியே வரும்போது கருடனை நான்கு பேரால் ஏழப்பண்ண முடியும் அதுவே பிரகாரத்தை சுற்றி வரும்போது எட்டு பேர் வேண்டும், அடுத்து பதினாறு பேர், பின்னர் வெளியே வரும் போது முப்பத்திரெண்டு பேர் வெளியே வந்தவுடன் அறுபத்து நான்கு என்று நான்கின் மடங்கில் அதிகமாகிகொண்டே போகும் அதிசயம் நடைபெறும், அதே பெருமாள் திரும்பி வரும் போது அதே விகிதத்தில் எடை குறைந்து கொண்டே வரும்.


முனையார் சீயமாகி அவுணன் முரண் மார்வம் 
புனை வாளுகிரால் போழ்படஈர்ந்த புனிதனூர் 
சினையார் தேமாஞ் செந்தளிர் கோதிக்குயில் கூவும்
நனையார் சூழ்ந்த அழகான நறையூரே.

இப்பாசுரம் திருநறையூர் நம்பியையே ஆச்சாரியனாக பெற்ற திருமங்கையாழ்வார்  இந்த திவ்ய தேசத்தை மங்களாசாசனம் செய்த 110 பாசுரங்களுள் ஒன்று.


இவ்வாறு ஏன் நடைபெறுகின்றது. ஒரு விளக்கம் பெருமாள் மேதாவி முனிவருக்கு கொடுத்த வரம், தாயார் அன்ன வாகனத்தில் எழுந்தருளுகின்றாள் அன்னமோ நளினமான பறவை, பெருமாளோ கருடனில் எழுந்தருளுகின்றார். கருடன் பலம் மிகுந்த அதே சமயம் வேகமாக செல்லக்கூடிய பறவை. எனவே கருடன் அன்னத்தின் பின்னே செல்ல வேண்டுமல்லாவா? எனவே கல் கருடனின் எடை கூடிக்கொண்டே செல்கின்றது. ஆகவே இப்போதும் தாயாருக்கு முதலிடம் .

 இரண்டாவது விளக்கம். நாம் பெருமாளுடன் ஒன்றியிருக்கும் போது நம் வினைகளின் சுமை குறைவாக இருக்கும், அதுவே நாம் பெருமாளை விட்டு விலகி செல்லும் பொது அதுவே மிகப்பெரிய சுமையாகி விடுகின்றது என்பதை இது குறிப்பால் உணர்த்துகின்றது. அதாவது பூரண சரணாகதி ஒன்று தான் நாம் உய்ய ஒரே வழி என்பதைத்தான் இதுவும் உணர்த்துகின்றது.


அது போலவே பெருமாளை தாங்கி உலா வருவதால் கல் கருடன் முகத்தில் வியர்வை வரும் அதிசயத்தையும் காணலாம். ( தகவலுக்கு நன்று வல்லி சிம்ஹன் அம்மா)

திருநறையூர் நம்பியின் பேரெழிலை திருமங்கை மன்னன் பெரிய திருமடலில் பாடியவாறு

மன்னு மறையோர் திருநறையூர் மாமலைபோல் பொன்னியலு மாடக் கவாடம் கடந்து புக்கு என்னுடைய கண் களிப்ப நோக்கினேன் - நோக்குதலும் மன்னன் திருமார்பும் வாயுமடியிணையும் பன்னுகரதலமும் கண்களும் - பங்கயத்தின் பொன்னியல் காடு ஓர் மணிவரை மேல் பூத்தது போல் மின்னொளி படைப்ப வீழ்நானும் தோள் வளையும் மன்னிய குண்டலமும் ஆரமும் நீள் முடியும் துன்னுவெயில் விரித்த சூளாமணியிமைப்ப மன்று மரகதக்குன்றின் மருங்கே - ஓர் இன்னிளவஞ்சிக் கொடியொன்று நின்றதுதான் அன்னமாய் மானாய் அணி மயிலாய்......

பெருமாளின் ஓடும் புள்ளேறி ஊர்ந்து வரும் அழகைக் கண் களிப்ப நோக்கி களியுங்கள் அன்பர்களே.
பொங்கேறுநீள்சோதிப் பொன்னாழிததன்னோடும் சங்கேறுகோலத் தடக்கைப்பெருமானை கொங்கேறுசோலைக் குடந்தைகிடந்தானை நங்கோனைநாடி நறையூரில் கண்டேனே.

என்று நம் கலியன் அனுபவித்த ஸ்ரீநிவாசப்பெருமாளின் கல் கருட சேவை படங்களை அளித்த அன்பர் தனுஷ்கோடிக்கு ஆயிரம் நன்றிகள்.

17 comments:

துளசி கோபால் said...

இந்த எடை கூடும் விஷயம் எனக்குப் புதுசு. விளக்கம் (அதாவது பாவச்சுமை கூடிக் கனம் அதிகமாவது) ரொம்பப் பொருத்தமா இருக்கு.

படங்கள் வழக்கம்போல் அருமை.

அருமையான பதிவுக்கு நன்றி.

கவிநயா said...

கருடாழ்வாரின் அழகைச் சொல்லி முடியாது! எடை அதிகமாகிக் கொண்டே வருவதற்கான விளக்கமும் அருமை. உங்களுக்கும் தனுஷ்கோடி அவர்களுக்கும் நன்றிகள் பல!

S.Muruganandam said...

நம் முன்னோர்கள் சொல்லி விட்டுப்போன ஒவ்வொரு தாத்பர்யத்திற்கும் ஏதோ ஒரு காரணம் உண்டு, பல நமக்கு தெரிவதில்லை.

நன்றி துளசியம்மா.

S.Muruganandam said...

//உங்களுக்கும் தனுஷ்கோடி அவர்களுக்கும் நன்றிகள் பல!//

உண்மையில் பாக்கியம் செய்தவர் அவர் நேரில் கல் கருட சேவையுடன் சுமார் 10 சோழதேச திவ்ய தேசங்களையும் சேவித்து விட்டு வந்தார்.

மெளலி (மதுரையம்பதி) said...

தகவல் முன்னமே கேள்விப் பட்டிருக்கிறேன்..படங்கள் மிக அருமை. தரிசிக்க தந்தமைக்கு நன்றிகள் கைலாஷி ஐயா.

வடுவூர் குமார் said...

New info about weight diff.
Photos are nice.

S.Muruganandam said...

Thank you very much Vaduvur Kumar, you are coming after a long time.

Regards

வல்லிசிம்ஹன் said...

கைலாஷி, அழகாக எடுத்துரைத்தீர்கள்.

எங்கள் வீட்டில் சொல்லும் அர்த்தம்.
பெருமாளே கருடன் மீது அம்ர்ந்து கொள்வதால் எடை ஏறுவதாகவும், அதனாலயே கருடனுக்கு முகத்தில் வியர்வை வருவதாகவும் சொல்வார்கள்.
ஒரு தரம் கூட இந்தச் சேவைகளுக்குப் போக முடியவில்லை.
நீங்கள் புகைப்படங்களோடு கருடாழ்வாரைத் தரிசிக்க வைத்தீர்கள்.எத்தனை நன்றி சொன்னால் போதும்.!!!!

jeevagv said...

இரவில் பெருமான் தன்னொளியில் பிரகாசிக்கிறார்.
சேவித்துக்கொள்ளும் பேறினை வழங்கிய தங்களுக்கும், தனுஷ்கோடி அவர்களுக்கும் அன்பான நன்றிகள் பலப்பல!

S.Muruganandam said...

//எங்கள் வீட்டில் சொல்லும் அர்த்தம்.
பெருமாளே கருடன் மீது அம்ர்ந்து கொள்வதால் எடை ஏறுவதாகவும், அதனாலயே கருடனுக்கு முகத்தில் வியர்வை வருவதாகவும் சொல்வார்கள்//

இந்த செய்தியை அடியேன் படித்திருக்கின்றேன் ஆனால் எழுத மறந்து விட்டேன் ஞாபகப்படித்தியதற்கு நன்றி வல்லியம்மா.
(பின்னூட்டமிட சிறிது கால தாமதமாகிவிட்டது மன்னிக்கவும்)

S.Muruganandam said...

//தங்களுக்கும், தனுஷ்கோடி அவர்களுக்கும் அன்பான நன்றிகள் பலப்பல!//

அனைத்தும் நாராயணார்ப்பணம்.

Geetha Sambasivam said...

இன்னும் மிச்சம் இருக்கும் மாடக் கோயில்களில் ஒன்று. பாவச் சுமைகளைத் தான் அங்கே இருந்த பட்டாசாரியார் எங்களுக்குச் சொன்னார். திருமணம் ஆகி இத்தனை வருஷம் அந்தக் கோயில் இருக்கும் நாச்சியார் கோயில் ஊர் வழியாகவே எங்க மாமனார் ஊருக்குப் போய், வந்தும், கல் கருடன் தரிசனம் என்னமோ சமீபத்தில் தான் கிடைச்சது.

Geetha Sambasivam said...

//அது போலவே பெருமாளை தாங்கி உலா வருவதால் கல் கருடன் முகத்தில் வியர்வை வரும் அதிசயத்தையும் காணலாம். //

சொல்லி இருக்கார் என்னோட மாமனார். அவரோட பாட்டிக்குப் பிறந்த வீடு இந்த ஊர் தான். பெருமாள் கோயிலில் அறங்காவலராக இருந்திருக்கின்றார் தாத்தா, என் மாமனாரின் அப்பா இருவரும். எல்லாம் பழைய மலரும் நினைவுகள். இப்போ எங்க ஊர்ப் பெருமாள் கோயிலைத் திருப்பணி செய்ய வழி தெரியாமல் முழிச்சுட்டு இருக்கோம். பெருமாள் தான் மனசு வைக்கணும், ரொம்பவே நன்றி, அருமையான பதிவுக்கு. ரொம்ப நாட்கள் கழிச்சு வந்துட்டுப் புலம்பிட்டுப் போறதுக்கும் மன்னிக்கவும். :((((

S.Muruganandam said...

//இப்போ எங்க ஊர்ப் பெருமாள் கோயிலைத் திருப்பணி செய்ய வழி தெரியாமல் முழிச்சுட்டு இருக்கோம். பெருமாள் தான் மனசு வைக்கணும்//

மிக்க நன்றி கீதம்மா,

அடியேன் குல தெய்வம் கோவிலும் இவ்வாறுதான் 90 வருடங்களுக்கு அப்புறம் இப்போது புதுப்பிக்கப்படுகின்றது.

எல்லாம் அவன் செயல், நாம் அவரிடம் கோரிக்கைதான் வைக்க முடியும். அடியேனும் பெருமாளிடம் வேம்டிக்கொள்கிறேன்.

S.Muruganandam said...

//ரொம்ப நாட்கள் கழிச்சு வந்துட்டுப் புலம்பிட்டுப் போறதுக்கும் மன்னிக்கவும்.//

கீதாம்மா தாங்கள் வந்து பதிலிடுவதை பெரும் பாக்கியமாக எண்ணுகின்றேன். எனவே எப்போது சமயம் கிதைத்தாலும் வந்து தரிசனம் பெற்று செல்லுங்கள் அம்மா.

shram vir Ramadoss said...

கருடாழ்வாரின் அழகைச் சொல்லி முடியாது! எடை அதிகமாகிக் கொண்டே வருவதற்கான விளக்கமும் அருமை. உங்களுக்கும் தனுஷ்கோடி அவர்களுக்கும் நன்றிகள் பல!

by
C. RAMADOSS NAGAPATTINAM

S.Muruganandam said...

பல நாள் ஆனாலும் வந்து சேவித்து பின்னூட்டமும் இட்டதிற்கு மிக்க நன்றி
நாகை இராமதாஸ் NATIONAL AWARD WINNER FOR PETROLEUM ENGG, "INNOVATOR OF THE YEAR 2008"

தங்கள் சாதனை குறித்து மிக்க மகிழ்ச்சி. இன்னும் பல சாதனைகள் புரிய வாழ்த்துக்கள்.