Thursday, January 29, 2009

திருநாங்கூர் பதினொரு கருட சேவை-3 (2008)

பதினொரு பெருமாள்களின் மங்களாசாசனம்

ஆழ்வார் ஆராதித்த சிந்தனைக்கினியான் உபய நாச்ச்சியார்களுடன்

அரங்கனே நடத்தி வைத்த மஞ்சள் குளி, மணிகர்ணிகையாற்றில் கண்ட ஆழ்வாரும் குமுதவல்லி நாச்சியாரும், சிந்தனைக்கினியானுடன் திருமணிமாடக் கூடத்தில் ஆஸ்தானத்தில் இரவில் எழுந்தருளுகின்றனர்.
கருடசேவையன்று காலை முதலில் ஆழ்வார் முன் திருப்பாவை சாற்றுமுறை . கருடசேவைக்காக மற்ற பத்து திவ்ய தேசத்து பெருமாள்களும் பல்லக்கில் திருமணிமாடக்கூடத்திற்க்கு எழுந்தருளுகின்றனர். ஒவ்வொரு பெருமாளுக்கும் ஒவ்வொரு வித அலங்காரம். தன் அன்பனைக் காண அற்புத அலங்காரத்தில் வருகின்றனர் பெருமாள்கள் அனைவரும். அவர்கள் வந்த அழகைக் காணுங்களேன்.


வேடார் திருவேங்கடம் மேய விளக்கான திருவெள்ளக்குளம் அண்ணன் பெருமாள் பட்டுப் பீதாம்பரங்கள் தொங்க எழிலாக பல்லக்கில் வந்தார் திருமணிமாடக் கூட கோவில் மற்றும் புஷ்கரிணிக்கு இடையில் அமைக்கப்பட்டுள்ள பிரம்மாண்ட பந்தலுக்கு.


திருசெம்பொன்செய் கோயிலினுள்ளே அல்லிமாமலராள் தன்னொடும் அஞ்சனக்குன்றம் நின்றதொப்ப ஹேமரங்கர் திருமேனி முழுவதும் செம்பொன்னாக மின்ன வந்தார் .

மின்னனைய நுண்மருங்குல் மெல்லியற்கா இலங்கை வேந்தன் முடியொருபதும் தோளிருபதும் போயுதிர தன்னகரிற் சிலை வளைத்து அன்று இலங்கை பொடி செய்த திருவைகுந்த விண்ணகரத்து வைகுண்ட நாதர் ஆதி சேஷன் குடை பிடிக்க அழகாக அமர்ந்து வந்தார் பல்லக்கில்


அங்கையால் அடி மூன்று நீரேற்று அயன் அலர் கொடு தொழுதேத்த கங்கை போதரக்கால் நிமிர்த்தருளிய திருவண்புருடோத்தமத்து புருடோத்தமர் அபய கரத்துடன் வந்தார் அன்ன நடையிட்டு.


கன்றதனால் விளவெறிந்து கனியுதிர்த்த காளை காமருசீர் முகில் வண்ணன், காலிகள் முன் காப்பான் குன்றதனால் மழை தடுத்த திருஅரிமேய விண்ணகத்து குடமாடு கூத்தர் கூத்தாடி வந்தார் எழிலாக.

கஞ்சன் விட்ட வெஞ்சினத்த களிறடர்த்த காளை அண்டர் கோன் நாங்கை மன்னு மாயன் பார்த்தன் பள்ளி பார்த்த சாரதி பெருமாள் ஒயிலாக வந்தார் பல்லக்கில்.
மண்ணிடந்து ஏனமாகி மாவலி வலி தொலைப்பான், முனை முகத்து அரக்கன் மாள முடிகள் பத்த்ற்று வீழ சரம் வளைத்த திருகாவளம்பாடி கண்ணன் வந்தார் செண்டு கையில் ஏந்தி.
இந்திரனும், இமையவரும், முனிவர்களும் சதுர்முகனும், கதிரவனும், சந்திரனும் எந்தை என்று ஏத்தும் திருத்தேவனார் தொகை மாதவர் வந்தார் ஒய்யாரமாக கருட சேவைக்கு.
சிலம்பிடைச் சிறுபரல்போல் பெரிய மேரு திருக்குளம்பில் கண கணப்பத் திருவாகாரம் குலுங்க நிலமடந்தை தன்னை இடந்து புல்கிக் கோட்டிடை வைத்த திருதெற்றியம்பலம் ரங்கநாதர் வந்தார் எழிலாக.
இவ்வாறு மெல்ல மெல்ல எல்லா திவ்ய தேசத்துப் பெருமாள்களும் எழுந்தருளுகின்றனர் பந்தலுக்கு முதலில் சிறிதாக இருந்த மக்கள் கூட்டம் பெரிதாகிக் கொண்டே போகின்றது, ஒவ்வொரு பெருமாளாக வர வர மலர்களை நாடி வண்டுகள் செல்வது போல பக்தர்களின் கூட்டம் அப்பெருமாளை சேவிக்க நகர்ந்து செல்கின்றனர். புகைப்படம் எடுப்பவர் சிலர், வீடியோப் படம் எடுப்பவர் சிலர், பாசுரம் சேவிப்போர் சிலர், பெருமாளை கண்ணாரக் கண்டு சேவிப்போர் பல்ர் என்று தமிழகத்தின் அனைத்து பிரதேசங்களிலிருந்து வந்த பக்தர்கள் குழுமுகின்றனர் பந்தலில்.

சிந்தனைக்கினியானுடன் குமுதவல்லி சமேத திருமங்கையாழ்வார்

சுமார் பன்னிரண்டு மணியளவில் அனைத்து பெருமாள்களும் வந்து சேர அவர்களை மங்களாசாசனம் செய்ய எழுந்தருளுகின்றார் குமுதவல்லி மணாளர் மணவாள மாமுனிகளுடன்.


பின் மங்களாசாசனம் துவங்குகின்றது ஒவ்வொரு பெருமாளாக ஆழ்வாருக்கு சேவை சாதிக்கும் போது அந்தப் பெருமாளை ஆழ்வார் மங்களாசாசனம் செய்கிறார் அந்த திவ்ய தேசத்து பாசுரத்தின் முதல் பாடலை பக்தர்கள் அனைவரும் சேவிக்கின்றனர். பின் ஆழ்வார் பெருமாளை வலம் வருகின்றார், ஆழ்வாருக்கு அந்தந்த திவ்ய தேசங்களிலிருந்து வந்த பரிவட்டம் கட்டப்பட்டு மரியாதை செய்யப்படுகின்றது. பதினோரு திவ்ய தேசப் பெருமாள்களின் மங்களாசாசனம் நிறைவுற்றதும் மணவாள மாமுனிகள் எழுந்தருளுகின்றார்.

அவர் தம் ஆச்சார்யராம் திருமங்கையாழ்வாரை தாம் திருமங்கையாழ்வாரின் வடிவழகிலீடுபட்டு அருளிய வடிவழகு சூர்ணிகையும் மற்றும்
வேலணைத்தமார்பும், விளங்கு திருவெட்டெழுத்தை
மாலுரைக்கத்தாழ்த்த வலச்செவியும்,
தாளிணைத் தண்டையும், தார்க்கலையன் நன்முகமும்
கண்டு களிக்குமென்கண்
என்று மற்ற தனியன்களாலும் மங்களாசாசனம் செய்கின்றார். அப்போது பகதர்களும் அந்த தனியன்களை சேவிக்கின்றனர். பின் அனைத்து பெருமாள்களும் மணிமாடக்கோவிலின் உள்ளே எழுந்தருளுகின்றனர்.
மாலை 4 மணி அளவில் பதினொரு திவ்ய தேசத்து எம்பெருமான்களுக்கும் திருமங்கை ஆழ்வாருக்கும் ஏக காலத்தில் திருமஞ்சனம் நடைபெறுகின்றது. திருமங்கையாழ்வாரின் சிறப்பு ததியாரதனை ( அன்ன தானம்) என்பதால் அனைத்து திவ்ய தேசங்களிலும் ததியாராதானை சிறப்பாக நடைபெறுகின்றது. கருட சேவைக்கு செல்பவர்கள் உணவைப் பற்றி கவலைப்படத்தேவையில்லை. திருமஞ்சனம் முடிந்த பின் கருட சேவைக்கு முன் பெருமாள்களிம் அலங்காரக் கோலத்தைக் காணுங்கள்.

இரவு நடைபெறும் கருடசேவையை அடுத்த பதிவில் காணலாம்.
இப்பதிவை ஒட்டிய முந்தையப் பதிவுகள்
திருநாங்கூர் பதினொறு திவ்ய தேசங்களைப்பற்றி அறிய கிளிக்குக
திருமங்கையாழ்வார் மஞ்சக்குளி உற்சவம் பற்றி காண கிளிக்குக மஞ்சக்குளி
* * * * * *
தை அமாவாசை அன்று (26-01-09) சூரிய கிரகணம் வந்ததால் இவ்வருட திருநாங்கூர் கருட சேவை பௌர்ணமியன்று அதாவது 09-02-09 மற்றும் 10-02-09 அன்று நடைபெற உள்ளது
படங்கள் உதவி :
திரு. தனுஷ்கோடி அவர்கள்.
2008 கருட சேவையின் படங்கள்.

2 comments:

Kannabiran, Ravi Shankar (KRS) said...

திருமங்கை ஆழ்வார் தம் கைகளால் வழிபட்ட சிந்தனைக்கினியானையும் காட்டியமைக்கு நன்றி கைலாஷி ஐயா!

S.Muruganandam said...

நன்றி KRS ஐயா,
தங்களுக்காக சிந்தனிகினியானின் Close up ஒன்றையும் இப்போது இட்டுள்ளேன் பார்த்து பரவசம் அடையுங்கள்.