Friday, October 10, 2008

நாச்சியார் கோவில் கல் கருட சேவை - 1

நாச்சியார் கோவில் என்று தாயாரின் பெயரால் அழைக்கபடும் திருநறையூர் திவ்ய தேசத்தின் சிறப்புக்கள் இரண்டு. ஒன்று இத்தலத்தில் தாயாருக்குத்தான் முதலிடம். இரண்டாவது கல் கருடன். இதற்கான ஐதீகங்களையும் வஞ்சுள வல்லி சமேத ஸ்ரீநிவாசரின் சேவையும், மற்றும் தாயாரின் அன்ன வாகன சேவையும் இப்பதிவில் காண்போம் அடுத்த பதிவில் கல்கருடனையும், மூன்றாவது பதிவில் கல் கருடனில் ஸ்ரீநிவாச பெருமாள் பவனி வரும் அழகையும் காணலாம் அன்பர்களே. 

  

                    திருமஞ்சனம் கண்டருளும் வஞ்சுளவல்லித்தாயார் சமேத ஸ்ரீநிவாசர்


திருநறையூரிலே கல் கருட சேவை மார்கழி மற்றும் பங்குனி மாதங்களில் வருடத்தில் இரு முறை நடைபெறுகின்றது, . கருட சேவையன்று பெருமாளும் தாயாரும் திருமஞ்சனம் கண்டருளுகின்றனர் அப்படங்களைக் கண்டீர்கள் அன்பர்களே.


இத்தலத்தில் தாயாருக்குத்தான் முதலிடம், அபிஷேகம், நைவேத்யம் எல்லாம் முதலில் தாயாருக்குதான். அது ஏன் என்பதற்கான வரலாறு. ஆதி காலத்தில் இத்தலத்தில் மேதாவி என்ற முனிவர் ஸ்ரீ மஹாலக்ஷ்மித் தாயாரே தனக்கு மகளாக பிறக்க வேண்டுமென்று கடும் தவம் செய்தார். தாயாரும் மனமிரங்கி ஒரு நாள் ஒரு வஞ்சுள மரத்தடியில் ( நீர் நொச்சி) குழந்தையாக அவதாரம் செய்தாள். முனிவரும் அன்னையை எடுத்து உச்சி முகர்ந்து சீராட்டி வஞ்சுளவல்லி என்று திருநாமமிட்டு வளர்த்து வந்தார். தாயாரும் தக்க பருவத்தை அடைந்தார்.

தாயாரை விட்டு பிரிந்து இருந்த மஹா விஷ்ணு, அவரைக் கைத்தலம் பற்ற பூலோகம் வந்தார். வந்தவர் ஒருவராக வரவில்லை, வாசுதேவன், சங்கர்ஷணன், ப்ரத்யும்னன், அநிருத்தன், புருஷோத்தமன் என்று ஐந்து வியூக மூர்த்திகளாக வந்தார். சுய ரூபத்தில் வராமல் மானிட ரூபத்தில் அதிதியாக வந்தனர் ஐவரும். வந்த அதிதிகளை வரவேற்று அன்னமளித்தார் மேதாவி முனிவர், அவர்கள் கை கழுவ செல்லும் போது தண்ணீர் ஊற்ற சென்றார் வஞ்சுள வல்லித்தாயாரும் வந்த விருந்தினர்களை சரியாக கவனிக்க வேண்டுமல்லாவா? அதற்காக. எல்லோரும் கையைக்கழுவிக்கொண்டு சென்று விட வாசுதேவன் மட்டும் தாயாரின் கையைப்பற்றினார். இவ்வாறு அதிதியாக வந்தவர் அடாத செயல் செய்ய வஞ்சுளவல்லி சத்தமிட மேதாவி முனிவர் ஓடி வந்து பார்த்த போது ஐவரையும் காணவில்லை அங்கே மஹா விஷ்ணு சேவை சாதித்துக் கொண்டு நின்றார். தான் பெற்ற பாக்கியத்தினால் தன் முன் மஹா விஷ்ணுவே நிற்பதை கண்ட மேதாவி முனிவர் பெருமாளே வேண்டுவது என்ன என்று வினவ, "தங்கள் புதல்வி வஞ்சுளவல்லியை எனக்கு கன்னிகாதானம் செய்து தரவேண்டுன் என்று வேண்டினார்.

 அதற்கு மேதாவி முனிவர் மூன்று நிபந்தணைகள் விதித்தார். ( இப்போது காலம் மாறி விட்டது பாருங்கள் அக்காலத்தில் பெண்ணைப் பெற்றவர்கள்தான் மாப்பிளைக்கு நிபந்தணை போட்டனர்) 1. தமக்கு மோக்ஷம் அளிக்க வேண்டும். 2. பெருமாளே இந்த ஊருக்கு மருமகனாக வருவதால் இவ்வூரில் உள்ள அனைவருக்கும் மோக்ஷம் அளிக்க வேண்டும். 3. இத்தலத்தில் தன் பெண்ணுக்கே எல்லாவற்றிலும் முதலிடம் பெற வேண்டும். கருட வாகனனரும் நிபந்தனைகளை ஏற்றுக்கொண்டு வஞ்சுளவல்லித்தாயாரை மணம் புரிந்து நாம் எல்லோரும் உய்ய கோவில் கொண்டு அருளினார். கர்ப்பகிரகத்தில் தாயார் ஒரு அடி முன்னால் நிற்க பெருமாள் மணக்கோலத்தில் சேவை சாதிக்கின்றார். மற்ற வியூக மூர்த்திகளும் கர்ப்பகிரகத்தில் சேவை சாதிக்கின்றனர். 108 திவ்ய தேச எம்பெருமான்களையும் இங்கு தரிசிக்கலாம், பிரம்மாவும் நின்ற கோலத்தில் எழுந்தருளியுள்ளார்.

 பெருமாளின் திருநாமங்கள் திருநறையூர் நம்பி, ஸ்ரீநிவாசன், வாசு தேவன். தாயாரின் திருநாமங்கள் வஞ்சுள வல்லி, நம்பிகை நாச்சியார். தாயாரின் பெயரால் இத்திவ்ய தேசம் நாச்சியார் கோவில் என்று அழைக்கப்படுகின்றது புறப்பாட்டின் போது தாயார் தான் முன்னே செல்கின்றார், பெருமாள் பின்னே தொடர்கின்றார் மேதாவி முனிவருக்கு அன்று கொடுத்த வாக்கை காப்பற்ற வேண்டி. பெருமாள் இத்திவ்ய தேசத்தில் மற்ற உபய நாச்சிமார்கள் இல்லாமல் நீளா தேவி அம்சமான வஞ்சுளவல்லித் தாயாருடன் மட்டுமே சேவை சாதிக்கின்றார். எனவே முதலில் அன்ன வாகனத்தில் தாயார் புறப்பாடு கண்டருளும் அழகையும், தாயார் அன்ன வாகனத்திலும், பெருமாள் கல் கருடனிலும் ஒன்றாக சேவை சாதிக்கும் அழகையும் காணலாம்.



எழிலாக அன்ன வாகனத்தில் சேவை சாதிக்கும்
 வஞ்சுளவல்லித்தாயார்





அன்ன வாகனத்தில் தாயாரும்
 கல்கருட வாகனத்தில் பெருமாளும் சேவை


இத்திவ்ய தேசத்தில் மட்டுமே உள்ள ஒரு புதுமை, கருடன் சன்னதி பெருமாளுக்கு எதிராக இல்லாமல் தனி சன்னதியாக அமைந்துள்ளது. எனவே கோபுர வாசலில் இருந்து நேராக நாம் பெருமாளை தரி்சிக்க முடியும்.
*******

 சென்ற வருட கல் கருட சேவையின் படங்களை வழங்கிய அடியேனது நண்பர் திரு. தனுஷ் கோடி அவர்களுக்கும், கல் கருடன் சேவையை பற்றி எழுதுங்கள் என்று கேட்டுக்கொண்ட வல்லிசிம்ஹன் அம்மாவிற்கும் ஆயிரம் நன்றிகள்.

Saturday, October 4, 2008

மலையப்ப சுவாமி கருட சேவை

ஸ்ரீவாரி பிரம்மோற்சவத்தில் கருட சேவை


பிரம்மோற்சவமாம் பிரம்மோற்சவம் எங்கள் மலையப்ப சுவாமிக்கு பிரம்மோற்சவம்
புரட்டாசி மாதம் ஆனந்த பிரம்மோற்சவம் திருவோண நட்சத்திர பிரம்மோற்சவம். ( பிரம்மோ)


காலையும் மாலையும் கோலாகலம் வித வித வாகனங்களில் அற்புத ஊர்கோலம் சேஷ வாகனத்தில் வைகுந்த நாதன்
அன்ன வாகனத்தில் கலை மகள் கோலம் (பிரம்மோ)

சிம்ம வாகனத்தில் அவர் யோக நரசிம்மம் முத்துப்பந்தலில் புள்ளின் வாய் கீண்ட கோலம் கற்பக விருக்ஷத்தில் அவர் கலியுக வரதர் சர்வ பூபால வாகனத்தில் அவரே ஜகந்நாதர் (பிரம்மோ)

மோகினியாய் வருபவரும் அவரே தெய்வப்புள்ளின் மேல் மூலவராய் திருக்கோலம் சிறிய திருவடியில் ஸ்ரீராமர் அவரே தங்கத்தேரிலே அற்புத வீதி உலா (பிரம்மோ)

அத்தி வாகனத்திலே அற்புத சக்கரவர்த்தி சூரியப்பிரபையிலே சூரிய நாராயணர் சந்திரப்பிரபையிலே வெண்ணெய்த்தாழி கண்ணன் திருத்தேரிலே உல்லாச இரதோற்சவம் (பிரம்மோ)

பாயும் பரியிலே ஸ்ரீரங்கராஜா சுவாமி புஷ்கரணியில் சக்ரஸ்நானம் கோலாகலமாய் பிரம்மோற்சவம் பிரம்மன் நடத்தி வைத்த பிரம்மோற்சவம்.(பிரம்மோ)

புரட்டாசி மாதம் திருவோண நடசத்திரம் எம்பெருமான் கண்கண்ட தெய்வம் கலியுக வரதன் வேங்கடவனின் அவதாரத் திருநாள், அந்நாளை தீர்த்த நாளாக கொண்டு திருப்பதி திருமலையிலே எழுமலையானுக்கு, எங்கள் குல தெய்வத்திற்க்கு, பார் புகழும் பாலாஜிக்கு, பரந்தாமனுக்கு, ஸ்ரீநிவாசனுக்கு, மலையப்ப சுவாமிக்கு ஒன்பது நாள் கோலாகலமாக பிரம்மோற்சவம்.
வேங்கடாசலபதி மூலவர்

ஆனந்த நிலைய விமானம்

பெருகுமதவேழம் மாப்பிடிக்குமுன்னின்று
இருகணிள மூங்கில்வாங்கி - அருகிருந்த
தேன்கலந்து நீட்டும் திருவேங்கடம்கண்டீர்
வான்கலந்தவண்ணன் வரை.

பெரிய திருவடி கருடாழ்வார்

சிறிய திருவடி அனுமன்

திருமலையில் பிரம்மோற்சவத்தின் சில சிறப்புகள் 1) முதல் நாள் கொடியேற்றம் மாலையில் நடைபெறுவது, 2)இரண்டு தடவை சேஷ வாகன சேவை, 3) தங்கத்தேர். 4) கருட சேவையன்று மூலவராக உற்சவர் சேவைசாதிப்பது.


காலையும் மாலையும் வெவ்வேறு வாகனங்களில் மலையப்ப சுவாமி அற்புத அலங்காரத்தில், சர்வாபரண பூஷிதராக, விலையுயர்ந்த முத்தும், பொன்னும் மணியும், மாலைகளும் இலங்க நாம் எல்லோரும் உய்ய மாட வீதி வலம் வந்து சேவை சாதிக்கின்றார்.

எல்லா ஆலயங்களிலும் மோக்ஷமளிக்கும் கருட சேவை சிறப்பு, திருமலையில் இன்னும் சிறப்பு என்னவென்றால் கலியுகத்தில் பெருமாள் ஸ்ரீநிவாசராக திருப்பதி வந்த போது அவர் ஓடி விளையாட வைகுண்டத்தில் உள்ளது போல இயற்கை அழகு மிக்க இடம் வேண்டுமென்று பெருமாள் சொல்ல கருடன் வைகுண்ட மலையை பெயர்த்து பூலோகத்திற்கு கொண்டு வந்தார். ஏழு மலையும் சேர்ந்து பூலோகம் வந்தது. இதற்காக தன்னை தரிசிக்க வரும் பக்தர்கள் வாசலில் அமர்ந்திருக்கும் கருடனை தரிசித்த பின்னரே தன்னை வணங்க வேண்டும் என்று அருள் பாலித்தார். அதன்படி எல்லா பெருமாள் கோவில்களிலும் வாசலில் கருடனை தரிசிக்கலாம்.


புரட்டாசி பிரம்மோற்சவத்தின் ஐந்தாம் நாள் இரவு கருட சேவை. தங்க கருடனில் மலையப்ப சுவாமி மூலவராக சேவை சாதிக்கின்றார். மூலவருக்கு அணிவிக்கப்படும் லக்ஷ்மி ஹாரம், சகஸ்ரநாம ஹாரம், மகர கண்டி, சூடிக்கொடுத்த சுடர்க்கொடியாளின் மாலை, கிளி, வஜ்ர கிரீடம், அற்புத ஆபரணங்கள் அணிந்து ஆனந்த சேவை சாதிக்கின்றார் ஸ்ரீ வெங்கடாசலபதி. மூலவரே அன்று வெளியே வந்து சேவை சாதிப்பதாக ஐதீகம் என்பதால் ஒரு காலத்தில் கருட சேவை முடியும் வரை நடை அடைக்கப்பட்டது. தற்போது கூட்டம் கருதி சில நிமிடங்கள் மட்டுமே அடைக்கப்படுகின்றது. மலையப்பனை தெய்வப்புள் ஏறி வலம் வரும் போது தரிசித்தால் குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிட்டும், மேலும் சகஸ்ர நாம ஹாரம், லக்ஷ்மி ஹாரம், மகர கண்டி அணிந்து பல லட்சம் பேர் தரிசிக்க தானே வேங்கடாசலபதி வெளியே வருவதால் அவரை சேவிப்பதால் பீடை விலகி அஷ்ட ஐஸ்வர்யங்கள் ஒரு சேர கிடைக்கும் என்பதால்தான் திருமலையில் அன்று என்றுமில்லாத பக்தர் கூட்டம் கூடுகின்றது.

நேற்றைய கருட சேவையின் சில புகைப்படங்களை சேவியுங்கள் அன்பர்களே.


செடியாய வல்வினைகள் தீர்க்கும் திருமாலே!
நெடியானே! வேங்கடவா! நின் கோயிலின் வாசல்
அடியாரும்வானவரும் அரம்பையரும்கிடந்தியங்கும்
படியாய்க்கிடந்து உன் பவளவாய்காண்பேனே.

Thursday, October 2, 2008

தாயார் கருட சேவை ( வெள்ளிப்பதிவு )

திருச்சானூர் பத்மாவதித் தாயார் கருட சேவை
கிடைத்தற்கரியது மானிடப்பிறவி. நாம் முற்பிறவியில் செய்த புண்ணிய பாவங்களின் பயனால் இறையருளால் கிடைப்பதே இம்மானிடப்பிறவி. இவ்வாறு கிடைத்த பிறவியிலும் நமக்கு இறைவன் பால் ஆழ்ந்த பக்தியும் நம்பிக்கையும் கொண்டு தூய நெறியுடன் வாழ அவர் அருள் வேண்டும். அவனருளால்தான் அவன் தாழ் தொழவும் முடியும். அந்த அகிலாண்ட கோடி பிரம்மாண்ட நாயகனை சதா சர்வ காலமும் இதயக்கமலத்தில் எழுந்தருளப்பண்ணி பூஜிக்கவும் அவருடைய திவ்ய தரிசனத்தை அனுபவிப்பதற்க்கும் நாம் முற்பிறவியில் நற்காரியங்கள் செய்திருக்கவேண்டும். இனி வரும் பிறவியில் முக்தி நிலையை அடையவும் தூய நெறியில் வாழ்வது அவசியம்.

நமது தர்ம நெறியின் ஒவ்வொரு விதிக்கும் விஞ்ஞான பூர்வமான ஒரு அர்த்தமும் உண்டு. இவ்வாறு வேத சொரூபனான கருடனில் பெருமாள் பவனி வரும் மோக்ஷமளிக்கும் கருட சேவையின் தாத்பரியத்தையும் அவரது வாகனமும் கொடியுமான கருடாழ்வாரின் பெருமையும், எவ்வாறு கருட சேவையானது பூரண சரணாகதி தத்துவத்தை குறிக்கின்றது என்பதையும், பல்வேறு ஆலயங்களில் ஓடும் புள்ளேறி பெருமாள் எழிலாக பவனி வந்து அருள் பாலிக்கும் அழகையும் அன்பர்களாகிய தங்களுடன் கடந்த 24 பதிவுகளாக சேவித்துக் கொண்டு வருகிறீர்கள்.

முந்நீர் ஞாலம் படைத்த முகில் வண்ணன்,
அமலன்,
அளவிலா ஆரமுது,
அந்தியம் போதில் அரியுருவாகி அரியை அழித்த அருளாளன்,
பேருமோராயிரம் பிற்பலவுடைய வெம்பெருமான்,
வானோர் தலைவன்,
திருமகளார் தனிக்கேள்வன்,
பூவினில் நான்முகனைப் படைத்தவன்,
தேனும் பாலும் கனனலும் அமுதும் ஒத்தவன், ஆராவமுதமான எம்பெருமான்,
புள்ளின் மேல் ஆரோகணித்து வரும் பூவை வண்ணர்,
பைங்கண் மால் யானை படுதுயர் காத்தளித்த செங்கண்மால்,
இருஞ்சிறைப்புள் ஊர்ந்து வரும் அழகை வந்து சேவித்து செல்லும் அன்பர்கள் அனைவருக்கும் அவர் எல்லாவித நலங்களும் வழங்குமாறு பிரார்தித்து இந்த 25வது பதிவை அவரது திருச்சரணங்களில் சமர்ப்பிக்கின்றேன்.

முந்தைய பதிவில் கூறியிருந்தபடி இப்பதிவில் இரண்டு சிறப்புகள் உள்ளன.
முதலாவது கவிநயா அவர்களின் கவிதை
.
அடியேனுடைய வேண்டுகோளுக்கிணங்கி கருடசேவை பற்றி கவிதை எழுதிக் கொடுத்துள்ளார் அவருக்கு கோடி நன்றிகள்.

இரண்டாவது சிறப்பு தாயார் கருட சேவை.
புள்ளேறி வருகின்றான் வாசன் - கருட புள்ளேறி வருகின்றான் எங்கள் ஸ்ரீநி வாசன்
மின்னும் தங்க மலை யொன்று சிறகை விரிக்க விரிந் திருக்கும் சிற கிரண்டும் வானம் மறைக்க எடுத்து வைக்கும் அடி களிலே புவியும் அதிர உடுத்திக் கொண்ட நாகங் களும் அதிர்ந்தே நிமிர -
தா யடிமைத் தளை நீக்க அமிர்தம் கொணர்ந்தான் மா லவனின் மனம் மகிழ தினமும் சுமந்தான் காற்றை வெல்லும் வேக முடன் கடுகிப் பறப்பான் கார் முகிலின் வண்ண னுக்கு கொடியாய் இருப்பான் -
அந்த - புள்ளேறி வருகின்றான் வாசன் - ஜொலிக்கும் புள்ளேறி வருகின்றான் எங்கள் ஸ்ரீ நிவாசன்

காய் சினப் பறவை யதன் மீதேறி வருகின்றான் கரு மேகப் புயல் போல பாரெங்கும் நிறைகின்றான் தண் துழாய் சூடிக் கொண்டு தரணிவலம் வருகின்றான் வாசம் மிகு மலர் சூடி காசினிக்கு அருள்கின்றான்
திகிரி யுடன் சங் கேந்தி திருமலையான் வருகின்றான் திக் கற்ற அடி யவரின் திசைநோக்கி அருள்கின்றான் ஸ்ரீ லக்ஷ்மி தா யாரை தன்மார்பில் ஏந்தியவன் பதம் பணியும் பக்தர் களை பரிவோடு பேணும் அவன்
புள்ளேறி வருகின்றான் வாசன் - தங்க புள்ளேறி வருகின்றான் எங்கள் ஸ்ரீ நிவாசன்

தா யாரும் அவ னோடு திருக்காட்சி தருகின்றாள் தேடி வரும் பிள்ளை கட்கு தாயாக அருள்கின்றாள் பாற் கடலில் தோன்றி யவள் பாலமுதம் போலும் அவள் தெவிட் டாத தே னாக நெஞ்சுக்குள்ளே இனிக்கும்அவள்
பட்டாடை இடை உடுத்தி பூவாடை தோள் உடுத்தி தங்கத் திருமாங்கல்யம் சங்குக் கழுத்தில் தொங்க முத்து மணி யாரங்கள் மேனியினை அலங்கரிக்க நூபுரங்கள் ஒலித்திடவே நீள்நிலங்கள் போற்றிடவே
புள்ளேறி வருகின்றாள் தாயார் - கருட புள்ளேறி வருகின்றாள் எங்கள் ஸ்ரீ லக்ஷ்மி தாயார்!


வேதாந்த தேசிகர் தேவஸ்தானம்
அலர்மேல் மங்கைத்தாயார்


ஆம் அன்பர்களே அந்த இரண்டாவது சிறப்பு இப்பதிவில் தாயாரின் கருடசேவை. இதுவரை வந்த பதிவுகளில் எல்லாம் பெருமாளின் கருட சேவையைத்தான் சேவித்தோம் இச்சிறப்புப்பதிவில் தாயாரின் கருட சேவை. ஸ்ரீ, நித்யஸ்ரீ, அலைமகள், மஹாலக்ஷ்மி என்றெல்லாம் அழைக்கப்படும் பெரிய பிராட்டியாரின் சிறப்பை அவள் அவதரித்த பாற்கடல் முழுவதையும் மையாகக் கொண்டு எழுதினாலும் எழுத முடியாது. பெருமாளையே நாம் ஸ்ரீ:பதி என்றும் ஸ்ரீமந் நாராயணன், அதாவது ஜகன்மாதாவாகிய பெரிய பிராட்டியாரை தன் திருமார்பிலே அகலாதவளாக வைத்துள்ளார் கல்யாண குணநிதியான எம்பெருமான் என்று திருமகள் கேள்வராகத்தானே அடையாளம் காட்டுகின்றோம். வைணவ சம்பிரதாய்மும் ஸ்ரீ வைஷ்ணவம் என்று தாயார் பெயரால் தானே அறியப்படுகின்றது. தீந்தமிழில் பெருமாளை திருமால் என்று தாயாருடன் சேர்த்துதானே அன்புடன் அழைக்கின்றோம். நம்முடைய குற்றங்களையும் குணமாக எடுத்துக்கொண்டு பெருமாளிடம் புருஷாகாரம் செய்து மன்னிக்கவேண்டுபவள் தாயார்தானே. தாயார் கடைக்கண் பார்த்தாலே போதுமே, எல்லா சுபிக்ஷங்களும் மழையெனக்கொட்டும், கிருஷ்ணாவதாரத்தின் போது குசேலன் கொண்டு வந்த அவலை ஸ்ரீ கிருஷ்ணர் ருசித்த பின் அவர் வந்த திசை நோக்கி ருக்மணி பிராட்டியார் பார்த்ததுதான் தாமதம் அந்த திசை முழுவதுமே செல்வத்தில் நிறைந்தது. ஆதி சங்கரர் முடியாத ஏழ்மை நிலையிலும் நெல்லிக்கனி பிச்சையிட்ட பெண்மணியின் ஏழ்மை நீங்க கனகதாரா ஸ்தோத்திரம் பாடியபோது தங்க நெல்லிகனி மழை பொழிவித்தவள் அல்லவா ஸ்ரீ மஹாலக்ஷ்மித்தாயார். பெருமாளுக்கு உரியது கருட வாகனத்தில் தாயாரும் பவனி வருகின்றாள்.

நமஸ்தே(அ)ஸ்து மஹா மாயே ஸ்ரீ பீடேஸுர பூஜிதே சங்க சக்ர கதாஹஸ்தே மஹாலக்ஷ்மி நமோ(அ)ஸ்துதே

நமஸ்தே கருடாரூடே கோலஸுர பயங்கரி ஸர்வ பாப ஹரே தேவி மஹாலக்ஷ்மி நமோ(அ)ஸ்துதே

ஸர்வஜ்ஞே ஸர்வவரதே ஸர்வதுஷ்ட பயங்கரி ஸர்வ துஃகஹரே தேவி மஹாலக்ஷ்மி நமோ(அ)ஸ்துதே

ஸித்தி புத்திப்ரதே தேவி புக்தி முக்தி ப்ரதாயினி மந்த்ரமூர்த்தே ஸதாதேவி மஹாலக்ஷ்மி நமோ(அ)ஸ்துதே

ஆத்யந்த ரஹிதே தேவி ஆதிசக்தி மஹேஸ்வரி யோகஜ்ஞே யோகஸம்பூதே மஹாலக்ஷ்மி நமோ (அ)ஸ்துதே

ஸ்தூலஸூக்ஷ்ம மஹாரௌத்ரே மஹாசக்திமஹோதரே மஹா பாபஹரே தேவி மஹாலக்ஷ்மி நமோ(அ)ஸ்துதே

பத்மாஸன ஸ்த்திதே தேவி பரப்ரஹ்ம ஸ்வரூபிணி பரமேசி ஜகந்மாத: மஹாலக்ஷ்மி நமோ(அ)ஸ்துதே

ச்வேதாம்பரதரே தேவி நானாலங்கார பூஷிதே ஜகத்ஸ்த்திதே ஜகந்மாத: மஹாலக்ஷ்மி நமோ(அ)ஸ்துதே

மஹாலக்ஷ்ம்யஷ்டகம் ஸ்தோத்ரம் ய: படேத் பக்திமான் நர: ஸர்வஸித்தி மவாப்னோதி ராஜ்யம்ப்ராப்னோதி ஸர்வதா

ஏககாலே படேந் நித்யம் மஹாபாப விநாசனம் த்விகாலம் ய: படேந் நித்யம் தனதான்ய ஸமந்வித

த்ரிகாலம் ய: படேந் நித்யம் மஹாசத்ரு விநாசனம் மஹாலக்ஷ்மீர் பவேந் நித்யம் ப்ரஸன்ன வரதா சுபா

அகலகில்லேன் இறையும் என்று அலர்மேல் மங்கை உறை மார்பன் - என்றபடி பூவில் மணமும், சூரியனிடம் கிரணமும், இரத்தினத்தில் ஒளியும் அகலாதிருப்பது போல எம்பெருமானின் திருமார்பை விட்டு க்ஷண நேரம் கூட பிரியாமல் நித்ய வாசம் செய்பவள் பிராட்டி என்பதால் அநேகமாக அனைத்து ஆலயங்களிலும் கருட சேவையின் போது பெருமாள் தனியாகத்தான் சேவை சாதிக்கின்றார். திருக்கோட்டியூரில் பெருமாள் உபய நாச்சியார்களுடன் சேவை சாதிப்பதாக கேள்வி, சேவிக்கும் பாக்கியம் இன்னும் கிட்டவில்லை. ( அன்பர்கள் யாரிடமாவது படம் இருந்தால் அனுப்பி வைக்குமாறு விண்ணப்பித்துக்கொள்கின்றேன்). அது போலவே தாயாருக்கு தனி பிரம்மோற்சவம் அநேகமாக இல்லை. சிறப்பு வெள்ளியன்றும், தாயார் திருநட்சத்திரத்தன்றும் தாயாரின் உள் புறப்பாடு நடைபெறுகின்றது.

ஆயினும் திருச்சானூரில் பத்மாவதித்தாயாருக்கு கார்த்திகை பஞ்சமியை தீர்த்த நாளாகக் கொண்டு பிரம்மோற்சவம் சிறப்பாக நடைபெறுகின்றது. தாயாரும் பல்வேறு வாகனகங்களில் காலையும் மாலையும் சேவை சாதிக்கின்றாள். ஆறாம் நாள் மாலை பூமன்னு மாது, மாமலர் மன்னிய மங்கை , பந்திருக்கும் மெல் விரலாள் பனிமலராள், மைய கண்ணாள் மலர் மேல் உறைவாள் கருட சேவை கண்டருளுகிறாள். அன்னையின் கருட சேவையைக் காணக்கண் கோடி வேண்டும் திவ்யமாக சேவியுங்கள் அன்பர்களே.


திருச்சானூர் பத்மாவதித்தாயார் கருட சேவை


திருச்சானூர் போலவே திருமயிலை வேதாந்த தேசிகர் தேவஸ்தானத்திலும் பத்மாவதிதாயாருக்கு பிரம்மோற்சவம் நடைபெறுகின்றது. அலர் மேல் மங்கைத் தாயாரின் கருட சேவையின் சில அருட் காட்சிகள் இதோ.


சேவித்து எழுந்திருந்தேன் தேவி வடிவம் கண்டேன்
வச்சிர கிரீடம் கண்டேன் வைடூரிய மேனி கண்டேன்
முத்துக்கொண்டை கண்டேன் முழுப்பச்சை மாலை கண்டேன்
உரிமுடி கண்டேன் தாழை மடல் சூடக்ண்டேன்
பின்னழகு கண்டேன் பிறை போல நெற்றி கண்டேன்
சாந்துடன் நெற்றி கண்டேன் தாயார் வடிவம் கண்டேன்
கமலத்திருமுகத்தில் கஸ்தூரிப் பொட்டு கண்டேன்
மார்பில் பதக்கம் மின்ன மாலையசையக் கண்டேன்

கைவளையல் கலகலென்னக் கனையாழி மின்னக்கண்டேன்
தங்க ஒட்டியாணம் தகதகென ஜொலிக்கக் கண்டேன்
காலில் சிலம்பு கண்டேன் காலாழி பீலி கண்டேன்
மங்கள நாயகியை மனங்குளிரக் கண்டு மகிழ்ந்தேன் அடியாள் நான்




                                அன்னையே அருந்துணையே அருகிருந்து காரும் அம்மா
வந்த வினை அகற்றி மஹாபாக்கியம் தாரும் அம்மா
தாயாகும் உந்தன் தாளடியில் சரணம் என்றேன்
மாதாவே உந்தன் மலரடியில் நான் பணிந்தேன்.


ஜீவாத்மாக்களுக்கு பிறப்பும் இறப்பும் மாறி மாறி வரும், பிறவிப்பெருங்கடலை நீந்தி கரை சேர்ந்தால்தான் முக்தி கிட்டும்.முக்தி அடைய சரணாகதிதான் சிறந்த மார்க்கம். " ஜீவாத்மா பாவச்சுமையை அகற்றுவதற்கு இறைவனிடம் சரணாகதி அடைய வேண்டும் என்று பகவதகீதை கூறுகின்றது. சரணாகதி நெறியானது வேதம் முதலான நூல்களால் வித்தாக விதைக்கப்பட்டு இதிகாச புராணங்களால் வேர் ஊன்றப்பெற்று ஆழ்வார்களால் மரங்களாக்கப்பட்டு ஆச்சார்யார்களால் மலரச்செய்யப்பட்ட சரணாகதி நெறியைப்பின்பற்றி நாமும் உய்வோமாக.


நாம் மஹாலக்ஷ்மி தாயாருக்கு கருட வாகனம் என்கிறோம் ஆனால் வட நாட்டில் மஹாலக்ஷ்மி தாயாருக்கு என்ன வாகனம் என்று தெரியுமா? அன்பர்களே, தெரிந்தவர்கள் பின்னூட்டத்தில் கூறுங்கள் தெரியாதவர்கள் அடுத்த பதிவில் செடியாய வல்விணைகள் தீர்க்கும் நெடியானின் பிரம்மோற்சவ ஐந்தாம் நாள் இரவு கருட சேவையை தரிசிக்க வாரும்போது அறிந்து கொள்ளுங்கள் அன்பர்களே.

இப்பதிவை சுமார் ஒரு மாதத்திற்கு முன்பே பதிவிடலாம் என்று எண்ணியிருந்தேன் ஆனால் தாயாரின் எண்ணம் வேறாக இருந்தது ஆகவே புரட்டாசி சனிக்கிழமை மற்றும் நவராத்திரியில் நடுவில் மஹாலக்ஷ்மித்தாயாருக்குரிய நாளில் பதிவிட்டது அவளின் திருவுள்ளமே.

Saturday, September 13, 2008

அரவப் பகையோன்

அனந்த பத்மநாப சுவாமி கருட சேவை


புரட்டாசி நிறை சனிக்கிழமை



மாசி பிரம்மோற்ஸவம்


பெரியாழ்வார் தம் பல்லாண்டில் பெருமாளை "பையுடை நாகப்பகைக் கொடியான்" என்று மங்களாசாசனம் செய்துள்ளார். அதாவது நாகங்களின் பகைவன் கருடன் ஏனென்பதை நாம் அறிவோம், தனது தாய் அடிமையாக காரணமாக இருந்தவை நாகங்கள் என்பதால் மாற்றான் தாய் மக்கள் என்றாலும் நாகங்கள் கருடனுக்கு பகை. ஆகையால் கருடன் நாகங்களை அடக்கி தனது மேனி முழுவதும் ஆபரணமாக அணிந்துள்ளான்.

பூணூல் : வாசுகி

வலது கை கங்கணம்: குளிகன் 

இடது கை கங்கணம் : ஆதி சேஷன்

அரையில் அணி: தட்சகன்

மாலை: கார்கோடகன்.

வலது காது குண்டலம்: பத்மன்

இடது காது குண்டலம் : மஹா பத்மன்

 திருமுடியில் : சங்க பாலன்



நாக பாசத்தால் இந்திரஜித் இளையபெருமாளை கட்ட, அவர் மயங்கி விழுந்த போது அந்த கட்டிலிருந்து விடுவித்தவன் கருடன். அதற்காக இராம்பிரானின் தழுவுதல பெற்றவன் கருடன். "ககநகர கனககிரி கரிமதர நிகம்மய நிஜ கருட கருதநில லவகளித விஷவதநக்ர கதந" என்று ஸ்வாமி தேசிகன் இவ்வைபவத்தை பாடுகின்றார்.

 பரம பக்தனான ப்ரகலாதனை கடிக்க ஹிரண்யகசிபு பாம்புகளை ஏவிய போது அப்பாம்புகளை துரத்தியவர் கருடன். பாம்பின் விஷத்தை நீக்கும் சக்தி கருடன் இறகு வீசும் காற்றுக்கு உண்டு. பாம்பு தீண்டி இறந்த தில்லை வாழ் அந்தண சிறுவன் கம்பர் தமது இராமாயணத்தில் நாக பாச படலத்தை படித்தவுடன் உயிர் பெற்று எழுந்தான் என்று கூறுவர்.

 எதிரிகளை வெல்ல, விஷங்களை முறிக்க, மந்திர தந்திர தீய சக்திகளை ஒடுக்க கருட மந்திரத்தை ஜபிக்கலாம். பாண்டவர்கள் முதலில் கருட வியூகம் அமைத்தபோது தான் வெற்றி பெறுகின்றனர்.

 கார்கோடகன் என்னும் நாகத்தை மாலையாக அணிந்துள்ளதால் கருடன் சனி பகவானின் விளைவுகளை தடுக்கிறார்.

 விடமுடைய பாம்பின் உடம்பையும் உயிரையும் உண்ணும் பறவை கருடன். அக்கருடனுடைய அரைக்கசையாக, கைகளில் தோள் வளைகளாக, முடி மேல், காது குண்டலங்களாக விளங்கும் ஆபரணங்கள் எல்லாம் பாம்பு, குடையும் பாம்பு என்று பரிபாடல் கூறுகின்றது.

 . விடமுடை அரவின் உடலுயிர் உருங்கு உவணம் அவன்
 மடிமேல் வலந்தது பாம்பு பாம்பு தொடி பாம்பு தலைமேலது பாம்பு
 இறை தலையன பாம்பு படிமதம் சாய்த்தோய் பசும் பூனலை
 கொடிமேலிருந்தவன் தாக்கு இரையது பாம்பு - பரிபாடல்


கருடனின் மேனியை அலங்கரிக்கும் அஷ்ட நாகங்கள் இவை வலது கங்கணம் - குளிகன் இடது கங்கணம் - அனந்தன் உதர பந்தனம் - வாசுகி அரைஞாண் - தட்சன் மாலை : கார்கோடகன் வலது குண்டலம் - பத்மா இடது குண்டலம் - மஹா பத்மா கிரீடம் - சங்க சூடன்

இவ்விரண்டு படங்களில் தெளிவாக கருடனின் ஆபரணமாக நாகங்கள் விளங்குவதை காணலாம்

கருடன் ஞானம், சக்தி, பலம், ஐஸ்வர்யம், வீர்யம், தேஜஸ் என்னும் ஆறு குணங்கள் உடையவர்.

 ஏழு ஸ்வரங்கள் உடைய ஸாம வேத வடிவானவர்.

அனிமா- உடலை சிறிதாக்குதல், மஹிமா- உடலை பெரிதாக்குதல், லகிமா-உடலை லேசாக்குதல், கரிமா- உடலை பளுவுடையதாக்குதல், வசித்வம்- எல்லாவற்றையும் தன்வயமாக்குதல், ஐஸ்வர்யம்- எல்லாரையும் அடக்கியாளும் தலைவனாய் இருத்தல், பிராப்தி- தான் நினைத்ததைப்பெறுதல், ப்ரகாமம்- நினைத்தவிடம் செல்லுதல் என்னும் அஷ்டமா சித்திகளும் அடையப் பெற்றவர்.

 இவரின் மேல் ஆரோகணித்துத்தான் பெருமாள் நம் துயர் துடைக்க கொற்றப்புள் ஏறி வருகின்றார்.
**********************

கருட சேவையின் அடுத்த பதிவு வெள்ளிப்பதிவு அதாவ்து 25வது பதிவு, அடியேன் இத்தொடரை ஆரம்பிக்கும் போது இவ்வளவு பதிவுகள் எழுத முடியுமென்று நினைக்கவில்லை கை வசம் இருந்தவை திருநாங்கூர் 11 கருட சேவையின் புகைப்படங்கள் மற்றும் சில திருக்கோவில்களின் கருட சேவை படங்கள் மட்டும்தான். செல்ல செல்ல பெருமாளே பல விஷயங்களை அடியேன் கண்ணில் பட வைத்தார் ஆகவே 25வது பதிவை ஒரு சிறப்புப்பதிவாக பதிய ஐயன் பணித்தார். இரண்டு சிறப்புக்கள் அப்பதிவில் இருக்கும் முதலாவதை அடியேனே சொல்லிவிடுகின்றேன், இரண்டாவது என்னவென்று ஊகித்து சொல்லுங்கள் அன்பர்களே. முதலாவது சிறப்பு: கவிதாயினி கவிநயா அவர்கள் ஒரு சிறப்பு கவிதை எழுதித் தர ஒத்துக் கொண்டுள்ளார். எனவே கருட சேவையின் வெள்ளிப்பதிவு அவர் கவிதையுடன் வெளி வரும் . அடுத்த சிறப்பு என்ன அன்பர்களே? யோசித்துப் பார்த்து சொல்லுங்கள் இல்லையென்றால் பொறுத்திருங்கள்.

Monday, August 18, 2008

ஆடி கருடன் - கஜேந்திர மோக்ஷம்

குட்டத்து கோல் முதலை துஞ்சக் குறித்தெறிந்த
சக்கரத்தார் ஸ்ரீநிவாசர் (closeup)


முன் பதிவில் பார்த்தோம் ஆனியில் சுவாதியன்று பெரியாழ்வார் எம்பருமானுக்கு பல்லாண்டு பாடியதை குறிக்கும் வகையில் கருட சேவை நடைபெறுவதை, அது போல பூரண சரணாகதி தத்துவத்தை உணர்த்தும் கஜேந்திர மோக்ஷத்தை உணர்த்தும் வகையில் ஆடி பௌர்ணமியன்று விஷ்ணுவாலயங்களில் கருட சேவை நடைபெறுகின்றது. திருமயிலை வேதாந்த தேசிகர் தேவஸ்தானம் கஜேந்திர மோக்ஷ கருட சேவையின் சில படங்கள் இப்பதிவில் கண்டு களியுங்கள்.


ஆனைக்காக பொலிந்த கருடன் மேல் வரும் கரியான்
எழிற்கோலம் காணக் கண் கோடி வேண்டும்

பூர்வாச்சாரியார்கள் கஜேந்திர மோக்ஷத்தைப் பற்றி கூறும் போது பெருமாளே தாங்கள் யாணையை முதலையிடமிருந்து காத்தது பெரிதல்ல ஆனால் வந்த வேகம்தான் அருமை என்று பூரண சரணாகதி செய்த க்ஷணமே நாம் அவனுடைய சொத்து என்று உணர்த்துகின்றனர்
.

ஆடும் பறவையில் எம்பெருமான் பின் கோலம்
ஓடும் புள்ளேறி
சூடும் தண் துழாய்
நீடு நின்று அவை
ஆடும் அம்மானே

பைங்கண் மால் யானை படுதுயரம் காத்தளித்த செங்கண் மால் திருவடிகளே சரணம்

படங்களுக்கு நன்றி - http://www.svdd.com/

கஜேந்திர மோட்சம் பதிவைப் படிக்க கிளிக்குக இங்கே

Saturday, August 2, 2008

கருட பஞ்சமி விரதம்

வினதை சிறுவன் மேல் பவனி வரும் மலையப்பசுவாமி


அரிது அரிது மானிடராய் பிறப்பது அரிது என்று பாடியுள்ளார் ஔவையார். ஆம கிடைத்தற்கரியது மானிடப்பிறவி. நாம் முற்பிறவியில் செய்த புண்ணிய பாவங்களின் பயனாக இந்த கர்ம பூமியில் நமக்கு இறையருளால் மனிதப்பிறவி கிட்டுகின்றது. இவ்விதம் அமையும் பிறவியில் நமக்கு இறைவன் பால் ஆழ்ந்த பக்தியும் நம்பிக்கையும் தூய நெறியுடன் வாழவும் அவரது அருள் வேண்டும். அந்த அகிலாண்ட கோடி பிரம்மாண்ட நாயகனை அல்லும் பகலும் அனவரதமும் இதயக் கமலத்தில் நிறுத்தி பூஜிக்கவும், அவருடைய திவ்விய தரிசனத்தை பெறவும் நாம் முற்பிறவியில் நற்காரியங்கள் செய்திருக்க வேண்டும். மேலும் மறுமையில் முக்தி நிலை அடையவும் தூய நெறியில் வாழ்வது அவசியம். நமது தர்ம நெறியின் ஒவ்வொரு விதிக்கும் விஞ்ஞான பூர்வமான ஓர் அர்த்தம் உண்டு. இறைவனுக்கு அருகில் செல்ல உள்ளம் பக்குவப்பட வேண்டும், உள்ளம் பக்குவப்பட உடல் பக்குவப்பட வேண்டும், உடல் பக்குவப்பட உணவும் அதை உண்ணும் முறையும் பக்குவப்பட வேண்டும் இவ்வாறு உணவு, உடல் உள்ளம் மூன்றும் பதப்பட உதவுவனவே விரதங்கள்.
பெருமாள் கோவில்களின் காவலனும் கருட பகவானே

பெருமாளின் வாகனமாகவும், கொடியாகவும் விளங்கும் கருடனுக்கும் உகந்த விரதம் ஒன்று உண்டு. ஆடி மாதம் வளர்பிறை பஞ்சமியன்று இவ்விரதம் அனுஷ்டிக்கப்படுகின்றது. தமிழ் நாட்டில் கருட பஞ்சமி விரதம் மிகவும் பரவலாக அனுஷ்டிக்கப்படுவதில்லை என்றாலும் கருட சேவையைப் பற்றி எழுதி வருவதால் இவ்விரதத்தைப் பற்றி படித்த சில தகவல்களை அன்பர்களாகிய உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.

கருட பஞ்சமியன்று கருட தரிசனம் பெறுங்கள்


இந்த வருடம் நாக சதுர்த்தி 05/08/08 அன்றும், கருட பஞ்சமி 06/08/08 அன்றும் கொண்டாடப்படுகின்றது.

 கருட பஞ்சமியன்று கருட வழிபாடும், விஷ்ணு வழிபாடும் கனிந்த வாழ்க்கையை அமைத்துக் கொடுக்கும்.


கருடனைப் போல பலசாலியும் புத்திமானாகவும், வீரனாகவும் மைந்தர்கள் அமைய அன்னையர்கள் கருட பஞ்சமியன்று விரதம் இருக்கின்றனர். அன்று ஆதி சேஷன் விக்கிரகம் வைத்து சிறப்பு பூஜைகள் செய்கின்றனர். இது என்ன கருட பஞ்சமியன்று ஆதிசேஷனுக்கு பூஜையா என்று வியக்கின்றீர்களா? வினதையின் மைந்தன் கருடனின் மாற்றாந்தாய் கத்ருவின் மைந்தர்கள்தானே நாகங்கள் அவர்கள் செய்த சூழ்ச்சியினால்தானே வினதை அடிமையாக நேர்ந்தது அன்னையின் அடிமைத்தளையை களைய கருடன் தேவ லோகம் சென்று அமிர்தம் கொண்டு வர நேர்ந்தது அப்போதுதான் பெருமாளுடன் கருடன் போரிடும் வாய்ப்பும் வந்தது பின் பெரிய திருவடியாக எப்போதும் பெருமாளை தாங்கும் பாக்கியமும் கிட்டியது எனவே கருட பஞ்சமியன்று ஆதி சேஷன் விக்கிரகம் வைத்து பூஜை செய்யப்படுவதாக ஐதீகம். மேலும் கருடனின் உடலில் எட்டு ஆபரணமாக விளங்குபவையும் அஷ்ட நாகங்களே. இனி கருட பஞ்சமி பற்றியும் நாக சதுர்த்தி பற்றியும் அடியேன் படித்த இரு ஐதீகங்கள் அவற்றை தாங்களும் படிக்க கிளிக்குக கீழே.









காசியில் பறக்காத கருடன்கள் காசியில் கருடன் பறப்பதில்லை பல்லி சொல்லுவதில்லை என்பது ஐதீகம். இது ஏன் அவ்வாறு என்று அறிந்து கொள்வோமா? ஸ்ரீ இராமர் இராவணனை கொன்றதால் அவரை பிரம்மஹத்தி தோஷம் பற்றிக்கொள்கின்றது. அப்பாவம் நீங்க அவர் சிவ பூஜை செய்ய வேண்டியது அவசியமாகின்றது. இராமேஸ்வரம் அடைந்தவுடன் சிவலங்கத்தை கொண்டு வர அனுமனை முக்தி நகரமாம் காசிக்கு அனுப்புகின்றார். காசியை அடைந்த அனுமனுக்கு அங்குள்ள ஆயிரமாயிரம் சிவலிங்களுள் எது சுயம்பு லிங்கம் என்று தெரியாமல் குழம்பி நின்றார். பூஜைக்கு குறித்த நேரமும் நெருங்குவதால் காசியின் காவல் தெய்வம் கால பைரவரிடம் அனுமதி பெறாமலேயே சுயம்பு லிங்கம் உள்ள இடத்தின் மேல் கருடன் வட்டமிட்டு குறிப்பிட்டுக் காட்ட பல்லியும் நல்லுரை சொல்லி சுயம்பு லிங்கத்தை அடையாளம் காட்டுகின்றது.


அனுமன் அந்த சுயம்பு சிவலிங்கத்தை எடுத்துக் கொண்டு கிளம்பும் போது பைரவர் அவரைக் கண்டு நிறுத்தினார். உண்மையை அனுமன் உணர்த்த, தேவர்களும் ஸ்ரீ இராமரின் சிவபூஜைக்குத்தான் அனுமன் சிவலிங்கத்தை எடுத்து செல்கின்றார் என்வே அவரை நிறுத்த வேண்டாக் என்று வேண்ட , அவரை சிவலிங்கத்துடன் செல்ல அனுமதித்த கால பைரவர் அனுமனுக்கு உதவிய பல்லிக்கும், கருடனுக்கும் சாபம் கொடுக்கின்றார். எனவே காசியில் பல்லி சொல்வதில்லை, கருடன் பறப்பதில்லை என்பது ஐதீகம். இவ்வாறு தாமதமானதால் சீதா தேவியார் மணலால் லிங்கம் அமைக்க இராமர் சிவபூஜை செய்ததும், பின்னர் அனுமன் வருத்தப்படக்கூடாது என்று அவர் காசியில் இருந்து கொண்டு வந்த லிங்கத்திற்கே இராமேஸ்வரத்தில் முதல் பூஜை என்று வரம் கொடுத்ததும் தாங்கள் அனைவரும் அறிந்ததே.

இந்த கருட பஞ்சமி நன்னாளில் கருட தரிசனம் கண்டு இன்புற்று வாழ பிரார்த்திக்கின்றேன்.

Friday, July 18, 2008

ஆனி + சுவாதி + கருடன் = ? ? ?

ஸ்ரீநிவாசப்பெருமாள்

என்னங்க தலைப்புக்குப் பதிலா ஒரு சமன்பாட்டை போட்டு வைத்திருக்கின்றேன் என்று பார்க்கிறீர்களா? விடை என்ன என்று சரி பார்க்க பதிவின் இறுதிக்கு வரவும், அவசரமில்லை, மெதுவாக பெருமாளின் அழகையும் ஆழ்வாரின் அழகையும் கண்டு இரசித்து விட்டே வரவும்.

 
வாழ்த்தின் பயன் வாழ்த்து பெறுபவர்க்கு மட்டுமல்லாமல் வாழ்த்துபவர்களுக்கும் பயன்படுகின்றது. நம்மை விட பெரியவர்களை நாம் வாழ்த்தும் போது அவர்கள் மனமகிழ்ந்து நமக்கு வேண்டிய நன்மைகளை செய்கின்றனர். இவ்வாறே நாம் இறைவனை வாழ்த்தினால் அந்த கருணாமூர்த்தி நமது கவலைகளை போக்கி நமக்கு எல்லா நன்மைகளையும் அருளுவார் அல்லவா. இவ்வாறு அந்த ஆதி மூலனுக்கே பல்லாண்டு பாடியவர்தான் பெரியாழ்வார்.

ஸ்ரீ வில்லிபுத்தூரிலே வடபத்ர சாயிக்கு புஷ்ப கைங்கரியம் செய்து வந்தவர் பெரியாழ்வார். இவரே சூடிக்கொடுத்த சுடர்க்கொடியாள், ஆண்டாள் நாச்சியாரை வளர்க்கும் பேறு பெற்றார். அக்காலத்தில் மதுரையை ஆண்டு வந்த வல்லப தேவன் என்ற பாண்டிய மன்னன் ஒரு சடசு நடதினான். அதில் அவன் " யார் முழு முதற் கடவுள்" ? என்ற கேள்வியை மக்கள் முன் வைத்தான். அதற்கு பரிசாக தங்க நாணயங்கள் அடங்கிய பொற்கிழி ஒன்றை தனது தவத்திறமையினால் எந்த வித பிடிப்புமில்லாமல் ஆகாயத்தில் தொங்க விட்டான். தனது கேள்விக்கு யார் சரியான விடை அளிக்கின்றார்களோ அவரது காலடியில் இந்த பொற்கிழி தானாக விழும் என்றும் அறிவித்திருந்தான். இந்த சடசிலே அனைத்து சமயத்தினரும் கலந்து கொண்டார்கள் தங்கள் தெய்வமே சிறந்தவர் என்று வாதிட்டனர். அதிலே பெரியாழ்வாரும் கலந்து கொண்டு, வேதப்பகுதியை எடுத்துக்காட்டியே விஷ்ணு சித்தர் கூடல் மாநகரில் பலசமய சான்றோர்கள் கூடிய அந்த சபையில் தனது வாதத் திறமையால் அனைவரையும் தோற்க்கடித்து "விஷ்ணுவே முழுமுதற் கடவுள், வைணவ சமயமே மிகச்சிறந்த சமயம்" என்பதை நிருபித்தார். மன்னன் அறிவித்த பொற்கிழியையும் தானாக அவரது காலில் விழுந்தது .


யானை மேல் பெரியாழ்வார்

வெற்றி பெற்ற பெரியாழ்வாரை மன்னன் தனது பட்டத்து யாணை மேலே ஏற்றி நகர் வலம் வரச்செய்தான் வல்லப தேவன். அவ்வாறு பொற்கிழியுடன் அவர் வலம் வரும் போது, தன் அன்பன் வலம் வரும் அழகை காண்பதற்காக வானில் கூடலழகர், வானோர் தனித்தலைவர், அயர்வரும் அமரர்கள் அதிபதி, மூவேழுகுக்கும் நாதன், ஆராவாமுதமான திருமால், ஸ்ரீ தேவியுடன் கருடாரூடராக வருகின்றார். பெருமாளைக் கண்டவுடன் , "எங்கே பெருமாளின் திருவுருவத்திற்க்கும் பெருமைகளுக்கும் கண்ணேறு பட்டுவிடுமோ" என்று அஞ்சி அவரை வாழ்த்தி பரபரப்புடன் யானை மேலிருந்த மணிகளையே தாளமாகக் கொண்டு திருப்பல்லாண்டை பாடுகின்றார், தன்னை யசோதையாகவும், பெருமாளை கண்ணனாகவும் பாவித்து பாசுரங்கள் பாடிய விஷ்ணு சித்தர் என்னும் பெரியாழ்வார்
.
பையுடை நாகப்பகை கொடியான்
பெரிய திருவடியில்


இனி தலைப்பு புதிருக்கான விடை:
(ஆனி + சுவாதி + கருடன் = ? ? ? )

நீங்கள் இப்பதிவில் படித்த பெரியாழ்வார்தான் இவர் கலி பிறந்த 47-வதான க்ரோதன வருடம் ஆனி மாதம், சுகல பக்ஷம், ஏகாதசி, ஞாயிற்றுக்கிழமை கூடிய சுவாதி நட்சத்திரத்தில், , வேயர் குலத்தில் புதுமையாருக்கும், முகுந்தாச்சார்யாருக்கும் புத்திரராக, கருடனின் அமசமாக அவதாரம் செய்தார்.

இவரது அவதார நட்சத்திரமான ஆனி சுவாதியன்று ஸ்ரீ வேதாந்த தேசிகர் தேவஸ்தானம் திருமயிலையில் இவ்விழா சிறப்பாக நடைபெற்றது. அந்த விழாவின் சில படங்களைஇப்பதிவில் கண்டீர்கள்.

பல்லாண்டு பாடிய பெரியாழ்வார்

பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு
பல கோடி நூறாயிரம்
மல்லாண்ட திண்டோள் மணி வண்ணா! உன்
செவ்வடி செவ்விதிருக்காப்பு.

அடியோமோடும்நின்னோடும் பிரிவின்றியாயிரம் பல்லாண்டு
வடிவாய்நின்வலமார்பினில் வாழ்கின்ற மங்கையும் பல்லாண்டு
வடிவார் சோதி வலத்துறையும் சுடராழியும் பல்லாண்டு
படைப்போர்புக்குமுழங்கும் அப்பாஞ்சசன்னியமும் பல்லாண்டே.

என்று பெருமாளுக்கும், பெரிய பிராட்டிக்கும், சங்கு, சக்கரங்களுக்கும் பல்லாண்டு பாடிய பெரியாழ்வார் திருவடிகளே சரணம்.
கருட சேவை தொடரும்..........