Thursday, October 2, 2008

தாயார் கருட சேவை ( வெள்ளிப்பதிவு )

திருச்சானூர் பத்மாவதித் தாயார் கருட சேவை
கிடைத்தற்கரியது மானிடப்பிறவி. நாம் முற்பிறவியில் செய்த புண்ணிய பாவங்களின் பயனால் இறையருளால் கிடைப்பதே இம்மானிடப்பிறவி. இவ்வாறு கிடைத்த பிறவியிலும் நமக்கு இறைவன் பால் ஆழ்ந்த பக்தியும் நம்பிக்கையும் கொண்டு தூய நெறியுடன் வாழ அவர் அருள் வேண்டும். அவனருளால்தான் அவன் தாழ் தொழவும் முடியும். அந்த அகிலாண்ட கோடி பிரம்மாண்ட நாயகனை சதா சர்வ காலமும் இதயக்கமலத்தில் எழுந்தருளப்பண்ணி பூஜிக்கவும் அவருடைய திவ்ய தரிசனத்தை அனுபவிப்பதற்க்கும் நாம் முற்பிறவியில் நற்காரியங்கள் செய்திருக்கவேண்டும். இனி வரும் பிறவியில் முக்தி நிலையை அடையவும் தூய நெறியில் வாழ்வது அவசியம்.

நமது தர்ம நெறியின் ஒவ்வொரு விதிக்கும் விஞ்ஞான பூர்வமான ஒரு அர்த்தமும் உண்டு. இவ்வாறு வேத சொரூபனான கருடனில் பெருமாள் பவனி வரும் மோக்ஷமளிக்கும் கருட சேவையின் தாத்பரியத்தையும் அவரது வாகனமும் கொடியுமான கருடாழ்வாரின் பெருமையும், எவ்வாறு கருட சேவையானது பூரண சரணாகதி தத்துவத்தை குறிக்கின்றது என்பதையும், பல்வேறு ஆலயங்களில் ஓடும் புள்ளேறி பெருமாள் எழிலாக பவனி வந்து அருள் பாலிக்கும் அழகையும் அன்பர்களாகிய தங்களுடன் கடந்த 24 பதிவுகளாக சேவித்துக் கொண்டு வருகிறீர்கள்.

முந்நீர் ஞாலம் படைத்த முகில் வண்ணன்,
அமலன்,
அளவிலா ஆரமுது,
அந்தியம் போதில் அரியுருவாகி அரியை அழித்த அருளாளன்,
பேருமோராயிரம் பிற்பலவுடைய வெம்பெருமான்,
வானோர் தலைவன்,
திருமகளார் தனிக்கேள்வன்,
பூவினில் நான்முகனைப் படைத்தவன்,
தேனும் பாலும் கனனலும் அமுதும் ஒத்தவன், ஆராவமுதமான எம்பெருமான்,
புள்ளின் மேல் ஆரோகணித்து வரும் பூவை வண்ணர்,
பைங்கண் மால் யானை படுதுயர் காத்தளித்த செங்கண்மால்,
இருஞ்சிறைப்புள் ஊர்ந்து வரும் அழகை வந்து சேவித்து செல்லும் அன்பர்கள் அனைவருக்கும் அவர் எல்லாவித நலங்களும் வழங்குமாறு பிரார்தித்து இந்த 25வது பதிவை அவரது திருச்சரணங்களில் சமர்ப்பிக்கின்றேன்.

முந்தைய பதிவில் கூறியிருந்தபடி இப்பதிவில் இரண்டு சிறப்புகள் உள்ளன.
முதலாவது கவிநயா அவர்களின் கவிதை
.
அடியேனுடைய வேண்டுகோளுக்கிணங்கி கருடசேவை பற்றி கவிதை எழுதிக் கொடுத்துள்ளார் அவருக்கு கோடி நன்றிகள்.

இரண்டாவது சிறப்பு தாயார் கருட சேவை.
புள்ளேறி வருகின்றான் வாசன் - கருட புள்ளேறி வருகின்றான் எங்கள் ஸ்ரீநி வாசன்
மின்னும் தங்க மலை யொன்று சிறகை விரிக்க விரிந் திருக்கும் சிற கிரண்டும் வானம் மறைக்க எடுத்து வைக்கும் அடி களிலே புவியும் அதிர உடுத்திக் கொண்ட நாகங் களும் அதிர்ந்தே நிமிர -
தா யடிமைத் தளை நீக்க அமிர்தம் கொணர்ந்தான் மா லவனின் மனம் மகிழ தினமும் சுமந்தான் காற்றை வெல்லும் வேக முடன் கடுகிப் பறப்பான் கார் முகிலின் வண்ண னுக்கு கொடியாய் இருப்பான் -
அந்த - புள்ளேறி வருகின்றான் வாசன் - ஜொலிக்கும் புள்ளேறி வருகின்றான் எங்கள் ஸ்ரீ நிவாசன்

காய் சினப் பறவை யதன் மீதேறி வருகின்றான் கரு மேகப் புயல் போல பாரெங்கும் நிறைகின்றான் தண் துழாய் சூடிக் கொண்டு தரணிவலம் வருகின்றான் வாசம் மிகு மலர் சூடி காசினிக்கு அருள்கின்றான்
திகிரி யுடன் சங் கேந்தி திருமலையான் வருகின்றான் திக் கற்ற அடி யவரின் திசைநோக்கி அருள்கின்றான் ஸ்ரீ லக்ஷ்மி தா யாரை தன்மார்பில் ஏந்தியவன் பதம் பணியும் பக்தர் களை பரிவோடு பேணும் அவன்
புள்ளேறி வருகின்றான் வாசன் - தங்க புள்ளேறி வருகின்றான் எங்கள் ஸ்ரீ நிவாசன்

தா யாரும் அவ னோடு திருக்காட்சி தருகின்றாள் தேடி வரும் பிள்ளை கட்கு தாயாக அருள்கின்றாள் பாற் கடலில் தோன்றி யவள் பாலமுதம் போலும் அவள் தெவிட் டாத தே னாக நெஞ்சுக்குள்ளே இனிக்கும்அவள்
பட்டாடை இடை உடுத்தி பூவாடை தோள் உடுத்தி தங்கத் திருமாங்கல்யம் சங்குக் கழுத்தில் தொங்க முத்து மணி யாரங்கள் மேனியினை அலங்கரிக்க நூபுரங்கள் ஒலித்திடவே நீள்நிலங்கள் போற்றிடவே
புள்ளேறி வருகின்றாள் தாயார் - கருட புள்ளேறி வருகின்றாள் எங்கள் ஸ்ரீ லக்ஷ்மி தாயார்!


வேதாந்த தேசிகர் தேவஸ்தானம்
அலர்மேல் மங்கைத்தாயார்


ஆம் அன்பர்களே அந்த இரண்டாவது சிறப்பு இப்பதிவில் தாயாரின் கருடசேவை. இதுவரை வந்த பதிவுகளில் எல்லாம் பெருமாளின் கருட சேவையைத்தான் சேவித்தோம் இச்சிறப்புப்பதிவில் தாயாரின் கருட சேவை. ஸ்ரீ, நித்யஸ்ரீ, அலைமகள், மஹாலக்ஷ்மி என்றெல்லாம் அழைக்கப்படும் பெரிய பிராட்டியாரின் சிறப்பை அவள் அவதரித்த பாற்கடல் முழுவதையும் மையாகக் கொண்டு எழுதினாலும் எழுத முடியாது. பெருமாளையே நாம் ஸ்ரீ:பதி என்றும் ஸ்ரீமந் நாராயணன், அதாவது ஜகன்மாதாவாகிய பெரிய பிராட்டியாரை தன் திருமார்பிலே அகலாதவளாக வைத்துள்ளார் கல்யாண குணநிதியான எம்பெருமான் என்று திருமகள் கேள்வராகத்தானே அடையாளம் காட்டுகின்றோம். வைணவ சம்பிரதாய்மும் ஸ்ரீ வைஷ்ணவம் என்று தாயார் பெயரால் தானே அறியப்படுகின்றது. தீந்தமிழில் பெருமாளை திருமால் என்று தாயாருடன் சேர்த்துதானே அன்புடன் அழைக்கின்றோம். நம்முடைய குற்றங்களையும் குணமாக எடுத்துக்கொண்டு பெருமாளிடம் புருஷாகாரம் செய்து மன்னிக்கவேண்டுபவள் தாயார்தானே. தாயார் கடைக்கண் பார்த்தாலே போதுமே, எல்லா சுபிக்ஷங்களும் மழையெனக்கொட்டும், கிருஷ்ணாவதாரத்தின் போது குசேலன் கொண்டு வந்த அவலை ஸ்ரீ கிருஷ்ணர் ருசித்த பின் அவர் வந்த திசை நோக்கி ருக்மணி பிராட்டியார் பார்த்ததுதான் தாமதம் அந்த திசை முழுவதுமே செல்வத்தில் நிறைந்தது. ஆதி சங்கரர் முடியாத ஏழ்மை நிலையிலும் நெல்லிக்கனி பிச்சையிட்ட பெண்மணியின் ஏழ்மை நீங்க கனகதாரா ஸ்தோத்திரம் பாடியபோது தங்க நெல்லிகனி மழை பொழிவித்தவள் அல்லவா ஸ்ரீ மஹாலக்ஷ்மித்தாயார். பெருமாளுக்கு உரியது கருட வாகனத்தில் தாயாரும் பவனி வருகின்றாள்.

நமஸ்தே(அ)ஸ்து மஹா மாயே ஸ்ரீ பீடேஸுர பூஜிதே சங்க சக்ர கதாஹஸ்தே மஹாலக்ஷ்மி நமோ(அ)ஸ்துதே

நமஸ்தே கருடாரூடே கோலஸுர பயங்கரி ஸர்வ பாப ஹரே தேவி மஹாலக்ஷ்மி நமோ(அ)ஸ்துதே

ஸர்வஜ்ஞே ஸர்வவரதே ஸர்வதுஷ்ட பயங்கரி ஸர்வ துஃகஹரே தேவி மஹாலக்ஷ்மி நமோ(அ)ஸ்துதே

ஸித்தி புத்திப்ரதே தேவி புக்தி முக்தி ப்ரதாயினி மந்த்ரமூர்த்தே ஸதாதேவி மஹாலக்ஷ்மி நமோ(அ)ஸ்துதே

ஆத்யந்த ரஹிதே தேவி ஆதிசக்தி மஹேஸ்வரி யோகஜ்ஞே யோகஸம்பூதே மஹாலக்ஷ்மி நமோ (அ)ஸ்துதே

ஸ்தூலஸூக்ஷ்ம மஹாரௌத்ரே மஹாசக்திமஹோதரே மஹா பாபஹரே தேவி மஹாலக்ஷ்மி நமோ(அ)ஸ்துதே

பத்மாஸன ஸ்த்திதே தேவி பரப்ரஹ்ம ஸ்வரூபிணி பரமேசி ஜகந்மாத: மஹாலக்ஷ்மி நமோ(அ)ஸ்துதே

ச்வேதாம்பரதரே தேவி நானாலங்கார பூஷிதே ஜகத்ஸ்த்திதே ஜகந்மாத: மஹாலக்ஷ்மி நமோ(அ)ஸ்துதே

மஹாலக்ஷ்ம்யஷ்டகம் ஸ்தோத்ரம் ய: படேத் பக்திமான் நர: ஸர்வஸித்தி மவாப்னோதி ராஜ்யம்ப்ராப்னோதி ஸர்வதா

ஏககாலே படேந் நித்யம் மஹாபாப விநாசனம் த்விகாலம் ய: படேந் நித்யம் தனதான்ய ஸமந்வித

த்ரிகாலம் ய: படேந் நித்யம் மஹாசத்ரு விநாசனம் மஹாலக்ஷ்மீர் பவேந் நித்யம் ப்ரஸன்ன வரதா சுபா

அகலகில்லேன் இறையும் என்று அலர்மேல் மங்கை உறை மார்பன் - என்றபடி பூவில் மணமும், சூரியனிடம் கிரணமும், இரத்தினத்தில் ஒளியும் அகலாதிருப்பது போல எம்பெருமானின் திருமார்பை விட்டு க்ஷண நேரம் கூட பிரியாமல் நித்ய வாசம் செய்பவள் பிராட்டி என்பதால் அநேகமாக அனைத்து ஆலயங்களிலும் கருட சேவையின் போது பெருமாள் தனியாகத்தான் சேவை சாதிக்கின்றார். திருக்கோட்டியூரில் பெருமாள் உபய நாச்சியார்களுடன் சேவை சாதிப்பதாக கேள்வி, சேவிக்கும் பாக்கியம் இன்னும் கிட்டவில்லை. ( அன்பர்கள் யாரிடமாவது படம் இருந்தால் அனுப்பி வைக்குமாறு விண்ணப்பித்துக்கொள்கின்றேன்). அது போலவே தாயாருக்கு தனி பிரம்மோற்சவம் அநேகமாக இல்லை. சிறப்பு வெள்ளியன்றும், தாயார் திருநட்சத்திரத்தன்றும் தாயாரின் உள் புறப்பாடு நடைபெறுகின்றது.

ஆயினும் திருச்சானூரில் பத்மாவதித்தாயாருக்கு கார்த்திகை பஞ்சமியை தீர்த்த நாளாகக் கொண்டு பிரம்மோற்சவம் சிறப்பாக நடைபெறுகின்றது. தாயாரும் பல்வேறு வாகனகங்களில் காலையும் மாலையும் சேவை சாதிக்கின்றாள். ஆறாம் நாள் மாலை பூமன்னு மாது, மாமலர் மன்னிய மங்கை , பந்திருக்கும் மெல் விரலாள் பனிமலராள், மைய கண்ணாள் மலர் மேல் உறைவாள் கருட சேவை கண்டருளுகிறாள். அன்னையின் கருட சேவையைக் காணக்கண் கோடி வேண்டும் திவ்யமாக சேவியுங்கள் அன்பர்களே.


திருச்சானூர் பத்மாவதித்தாயார் கருட சேவை


திருச்சானூர் போலவே திருமயிலை வேதாந்த தேசிகர் தேவஸ்தானத்திலும் பத்மாவதிதாயாருக்கு பிரம்மோற்சவம் நடைபெறுகின்றது. அலர் மேல் மங்கைத் தாயாரின் கருட சேவையின் சில அருட் காட்சிகள் இதோ.


சேவித்து எழுந்திருந்தேன் தேவி வடிவம் கண்டேன்
வச்சிர கிரீடம் கண்டேன் வைடூரிய மேனி கண்டேன்
முத்துக்கொண்டை கண்டேன் முழுப்பச்சை மாலை கண்டேன்
உரிமுடி கண்டேன் தாழை மடல் சூடக்ண்டேன்
பின்னழகு கண்டேன் பிறை போல நெற்றி கண்டேன்
சாந்துடன் நெற்றி கண்டேன் தாயார் வடிவம் கண்டேன்
கமலத்திருமுகத்தில் கஸ்தூரிப் பொட்டு கண்டேன்
மார்பில் பதக்கம் மின்ன மாலையசையக் கண்டேன்

கைவளையல் கலகலென்னக் கனையாழி மின்னக்கண்டேன்
தங்க ஒட்டியாணம் தகதகென ஜொலிக்கக் கண்டேன்
காலில் சிலம்பு கண்டேன் காலாழி பீலி கண்டேன்
மங்கள நாயகியை மனங்குளிரக் கண்டு மகிழ்ந்தேன் அடியாள் நான்
                                அன்னையே அருந்துணையே அருகிருந்து காரும் அம்மா
வந்த வினை அகற்றி மஹாபாக்கியம் தாரும் அம்மா
தாயாகும் உந்தன் தாளடியில் சரணம் என்றேன்
மாதாவே உந்தன் மலரடியில் நான் பணிந்தேன்.


ஜீவாத்மாக்களுக்கு பிறப்பும் இறப்பும் மாறி மாறி வரும், பிறவிப்பெருங்கடலை நீந்தி கரை சேர்ந்தால்தான் முக்தி கிட்டும்.முக்தி அடைய சரணாகதிதான் சிறந்த மார்க்கம். " ஜீவாத்மா பாவச்சுமையை அகற்றுவதற்கு இறைவனிடம் சரணாகதி அடைய வேண்டும் என்று பகவதகீதை கூறுகின்றது. சரணாகதி நெறியானது வேதம் முதலான நூல்களால் வித்தாக விதைக்கப்பட்டு இதிகாச புராணங்களால் வேர் ஊன்றப்பெற்று ஆழ்வார்களால் மரங்களாக்கப்பட்டு ஆச்சார்யார்களால் மலரச்செய்யப்பட்ட சரணாகதி நெறியைப்பின்பற்றி நாமும் உய்வோமாக.


நாம் மஹாலக்ஷ்மி தாயாருக்கு கருட வாகனம் என்கிறோம் ஆனால் வட நாட்டில் மஹாலக்ஷ்மி தாயாருக்கு என்ன வாகனம் என்று தெரியுமா? அன்பர்களே, தெரிந்தவர்கள் பின்னூட்டத்தில் கூறுங்கள் தெரியாதவர்கள் அடுத்த பதிவில் செடியாய வல்விணைகள் தீர்க்கும் நெடியானின் பிரம்மோற்சவ ஐந்தாம் நாள் இரவு கருட சேவையை தரிசிக்க வாரும்போது அறிந்து கொள்ளுங்கள் அன்பர்களே.

இப்பதிவை சுமார் ஒரு மாதத்திற்கு முன்பே பதிவிடலாம் என்று எண்ணியிருந்தேன் ஆனால் தாயாரின் எண்ணம் வேறாக இருந்தது ஆகவே புரட்டாசி சனிக்கிழமை மற்றும் நவராத்திரியில் நடுவில் மஹாலக்ஷ்மித்தாயாருக்குரிய நாளில் பதிவிட்டது அவளின் திருவுள்ளமே.

11 comments:

மெளலி (மதுரையம்பதி) said...

நன்றி கைலாஷி ஐயா....நேரில் சென்றாலும் இவ்வளவு தெளிவாக காணக் கிடைப்பது அறிது. வழங்கியமைக்கு நன்றிகள் பல.

வெங்கட ரமணா கோவிந்தா,
வைகுந்த வாசா கோவிந்தா,
லக்ஷ்மி ரமணா கோவிந்தா.

S.Muruganandam said...

எல்லாம் அவன் செயல் மதுரையம்பதி ஐயா.

கவிநயா said...

//நேரில் சென்றாலும் இவ்வளவு தெளிவாக காணக் கிடைப்பது அரிது.//

உண்மைதான் கைலாஷி. மிக அழகாக ஸ்லோகங்களுடன் சேர்த்து தொகுத்து தந்திருக்கிறீர்கள். தாயாரின் அழகே அழகு. சிறப்புப் பதிவில் என்னுடைய கவிதையை இடம் பெற வைத்தமைக்கும் மனமார்ந்த நன்றிகள்.

S.Muruganandam said...

அடியேன்தான் தங்களுக்கு நன்றி கூற வேண்டும், அன்புடன் கவிதை எழுதி தந்ததற்கு.

நவராத்திரி பிரம்மோற்சவ வாழ்த்துக்கள் கவிநயா.

ஓம் நமோ வேங்கடேசாய நம:

ESMN said...

ஐயா,
உங்கள் பதிவு மிகவும் அருமையாக இருந்தது. உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்.
திருவில்லிபுத்தூர் 5 பெருமாள் கருட சேவையும்,ஆழ்வார்திருநகரி 9 பெருமாள் கருட சேவையும் பார்க்க கண்கோடி வேண்டும்.
அவற்றை பற்றி நீங்கள் பதிவு போட்டால் மிகவும் அருமையாக இருக்கும்....
திருக்குறுங்குடி மலை மேல் நம்பி கோவிலில் ஆண்டு முழுவதும் எல்லா சனிகிழமைகளும்(52 வாரங்கள்)கருட செவை மிக சிறப்பாக நடைபெறும்.

S.Muruganandam said...

வாருங்கள் எருமைமாடு ஐயா( பெயர் ஏன் இப்படி வைத்துக்கொண்டீர்கள்).

//திருவில்லிபுத்தூர் 5 பெருமாள் கருட சேவையும்,ஆழ்வார்திருநகரி 9 பெருமாள் கருட சேவையும் பார்க்க கண்கோடி வேண்டும்.//

ஐயா,பெருமாள் இன்னும் ஸ்ரீ வில்லிபுத்தூர் மற்றும் ஆழ்வார் திருநகரி ஸேவையை சேவிக்கும் பாக்கியம் அருளவில்லை, அந்த பாகியம் கிட்டும் போது அன்பர்களுடன் நிச்சயம் பகிர்ந்து கொள்கிறேன்.

//திருக்குறுங்குடி மலை மேல் நம்பி கோவிலில் ஆண்டு முழுவதும் எல்லா சனிகிழமைகளும்(52 வாரங்கள்)கருட செவை மிக சிறப்பாக நடைபெறும்//

இந்த அருமையான தகவலை அளித்ததற்கு நன்றி, திருக்குறுங்குடி நம்பி பற்றியும் ஒரு பதிவு எழுதுகின்றேன் ஐயா.

மிக்க நன்றி.

Cevu said...

மிக்க மகிழ்ச்சி...
நன்றி நன்றி நன்றி..
ஒம் நமோ நாராயணாய..

Cevu said...

மிக்க மகிழ்ச்சி...
நன்றி நன்றி நன்றி..

ஒம் நமோ நாராயணாய..

S.Muruganandam said...

வருகைக்கும் சேவித்ததற்க்கும் மிக்க நன்றி cevu.

இராஜராஜேஸ்வரி said...

ஆனால் வட நாட்டில் மஹாலக்ஷ்மி தாயாருக்கு என்ன வாகனம் என்று தெரியுமா அன்பர்களே, தெரிந்தவர்கள் பின்னூட்டத்தில் கூறுங்கள் /

முதலை?? ஆந்தை??

S.Muruganandam said...

ஆந்தை என்பது சரிதான். முதலை கங்கா மாதாவின் வாகனம்.

வாருங்கள் இராஜராஜேஸ்வரி, விடாமல் அனைத்து பதிவுகளையும் எவ்வாறு சென்று படிக்க முடிகிறது. மற்ற பதிவுகளையும்கண்டு களியுங்கள் மிக்க நன்றி.