Friday, October 10, 2008

நாச்சியார் கோவில் கல் கருட சேவை - 1

நாச்சியார் கோவில் என்று தாயாரின் பெயரால் அழைக்கபடும் திருநறையூர் திவ்ய தேசத்தின் சிறப்புக்கள் இரண்டு. ஒன்று இத்தலத்தில் தாயாருக்குத்தான் முதலிடம். இரண்டாவது கல் கருடன். இதற்கான ஐதீகங்களையும் வஞ்சுள வல்லி சமேத ஸ்ரீநிவாசரின் சேவையும், மற்றும் தாயாரின் அன்ன வாகன சேவையும் இப்பதிவில் காண்போம் அடுத்த பதிவில் கல்கருடனையும், மூன்றாவது பதிவில் கல் கருடனில் ஸ்ரீநிவாச பெருமாள் பவனி வரும் அழகையும் காணலாம் அன்பர்களே. 

  

                    திருமஞ்சனம் கண்டருளும் வஞ்சுளவல்லித்தாயார் சமேத ஸ்ரீநிவாசர்


திருநறையூரிலே கல் கருட சேவை மார்கழி மற்றும் பங்குனி மாதங்களில் வருடத்தில் இரு முறை நடைபெறுகின்றது, . கருட சேவையன்று பெருமாளும் தாயாரும் திருமஞ்சனம் கண்டருளுகின்றனர் அப்படங்களைக் கண்டீர்கள் அன்பர்களே.


இத்தலத்தில் தாயாருக்குத்தான் முதலிடம், அபிஷேகம், நைவேத்யம் எல்லாம் முதலில் தாயாருக்குதான். அது ஏன் என்பதற்கான வரலாறு. ஆதி காலத்தில் இத்தலத்தில் மேதாவி என்ற முனிவர் ஸ்ரீ மஹாலக்ஷ்மித் தாயாரே தனக்கு மகளாக பிறக்க வேண்டுமென்று கடும் தவம் செய்தார். தாயாரும் மனமிரங்கி ஒரு நாள் ஒரு வஞ்சுள மரத்தடியில் ( நீர் நொச்சி) குழந்தையாக அவதாரம் செய்தாள். முனிவரும் அன்னையை எடுத்து உச்சி முகர்ந்து சீராட்டி வஞ்சுளவல்லி என்று திருநாமமிட்டு வளர்த்து வந்தார். தாயாரும் தக்க பருவத்தை அடைந்தார்.

தாயாரை விட்டு பிரிந்து இருந்த மஹா விஷ்ணு, அவரைக் கைத்தலம் பற்ற பூலோகம் வந்தார். வந்தவர் ஒருவராக வரவில்லை, வாசுதேவன், சங்கர்ஷணன், ப்ரத்யும்னன், அநிருத்தன், புருஷோத்தமன் என்று ஐந்து வியூக மூர்த்திகளாக வந்தார். சுய ரூபத்தில் வராமல் மானிட ரூபத்தில் அதிதியாக வந்தனர் ஐவரும். வந்த அதிதிகளை வரவேற்று அன்னமளித்தார் மேதாவி முனிவர், அவர்கள் கை கழுவ செல்லும் போது தண்ணீர் ஊற்ற சென்றார் வஞ்சுள வல்லித்தாயாரும் வந்த விருந்தினர்களை சரியாக கவனிக்க வேண்டுமல்லாவா? அதற்காக. எல்லோரும் கையைக்கழுவிக்கொண்டு சென்று விட வாசுதேவன் மட்டும் தாயாரின் கையைப்பற்றினார். இவ்வாறு அதிதியாக வந்தவர் அடாத செயல் செய்ய வஞ்சுளவல்லி சத்தமிட மேதாவி முனிவர் ஓடி வந்து பார்த்த போது ஐவரையும் காணவில்லை அங்கே மஹா விஷ்ணு சேவை சாதித்துக் கொண்டு நின்றார். தான் பெற்ற பாக்கியத்தினால் தன் முன் மஹா விஷ்ணுவே நிற்பதை கண்ட மேதாவி முனிவர் பெருமாளே வேண்டுவது என்ன என்று வினவ, "தங்கள் புதல்வி வஞ்சுளவல்லியை எனக்கு கன்னிகாதானம் செய்து தரவேண்டுன் என்று வேண்டினார்.

 அதற்கு மேதாவி முனிவர் மூன்று நிபந்தணைகள் விதித்தார். ( இப்போது காலம் மாறி விட்டது பாருங்கள் அக்காலத்தில் பெண்ணைப் பெற்றவர்கள்தான் மாப்பிளைக்கு நிபந்தணை போட்டனர்) 1. தமக்கு மோக்ஷம் அளிக்க வேண்டும். 2. பெருமாளே இந்த ஊருக்கு மருமகனாக வருவதால் இவ்வூரில் உள்ள அனைவருக்கும் மோக்ஷம் அளிக்க வேண்டும். 3. இத்தலத்தில் தன் பெண்ணுக்கே எல்லாவற்றிலும் முதலிடம் பெற வேண்டும். கருட வாகனனரும் நிபந்தனைகளை ஏற்றுக்கொண்டு வஞ்சுளவல்லித்தாயாரை மணம் புரிந்து நாம் எல்லோரும் உய்ய கோவில் கொண்டு அருளினார். கர்ப்பகிரகத்தில் தாயார் ஒரு அடி முன்னால் நிற்க பெருமாள் மணக்கோலத்தில் சேவை சாதிக்கின்றார். மற்ற வியூக மூர்த்திகளும் கர்ப்பகிரகத்தில் சேவை சாதிக்கின்றனர். 108 திவ்ய தேச எம்பெருமான்களையும் இங்கு தரிசிக்கலாம், பிரம்மாவும் நின்ற கோலத்தில் எழுந்தருளியுள்ளார்.

 பெருமாளின் திருநாமங்கள் திருநறையூர் நம்பி, ஸ்ரீநிவாசன், வாசு தேவன். தாயாரின் திருநாமங்கள் வஞ்சுள வல்லி, நம்பிகை நாச்சியார். தாயாரின் பெயரால் இத்திவ்ய தேசம் நாச்சியார் கோவில் என்று அழைக்கப்படுகின்றது புறப்பாட்டின் போது தாயார் தான் முன்னே செல்கின்றார், பெருமாள் பின்னே தொடர்கின்றார் மேதாவி முனிவருக்கு அன்று கொடுத்த வாக்கை காப்பற்ற வேண்டி. பெருமாள் இத்திவ்ய தேசத்தில் மற்ற உபய நாச்சிமார்கள் இல்லாமல் நீளா தேவி அம்சமான வஞ்சுளவல்லித் தாயாருடன் மட்டுமே சேவை சாதிக்கின்றார். எனவே முதலில் அன்ன வாகனத்தில் தாயார் புறப்பாடு கண்டருளும் அழகையும், தாயார் அன்ன வாகனத்திலும், பெருமாள் கல் கருடனிலும் ஒன்றாக சேவை சாதிக்கும் அழகையும் காணலாம்.எழிலாக அன்ன வாகனத்தில் சேவை சாதிக்கும்
 வஞ்சுளவல்லித்தாயார்

அன்ன வாகனத்தில் தாயாரும்
 கல்கருட வாகனத்தில் பெருமாளும் சேவை


இத்திவ்ய தேசத்தில் மட்டுமே உள்ள ஒரு புதுமை, கருடன் சன்னதி பெருமாளுக்கு எதிராக இல்லாமல் தனி சன்னதியாக அமைந்துள்ளது. எனவே கோபுர வாசலில் இருந்து நேராக நாம் பெருமாளை தரி்சிக்க முடியும்.
*******

 சென்ற வருட கல் கருட சேவையின் படங்களை வழங்கிய அடியேனது நண்பர் திரு. தனுஷ் கோடி அவர்களுக்கும், கல் கருடன் சேவையை பற்றி எழுதுங்கள் என்று கேட்டுக்கொண்ட வல்லிசிம்ஹன் அம்மாவிற்கும் ஆயிரம் நன்றிகள்.

4 comments:

கவிநயா said...

வஞ்சுள வல்லி தாயார் - பெயரே எவ்வளவு அழகு. (வஞ்சுள மரம்னா என்ன மரம்?) அன்ன வாகனத்தில் அன்னையின் அழகே அழகு. கல் கருட சேவையும் மிகவும் அருமை. உங்களுக்கும் வல்லிம்மாவிற்கும் நன்றிகள் பல.

S.Muruganandam said...

//வஞ்சுள மரம்னா என்ன மரம்?//

வகுள மரம் என்னும் மகிழ மரம் என்று நினைக்கிறேன்.

தவறாக இருந்தால் தெரிந்தவர்கள் திருத்தவும்.

இனி வரும் இரண்டு பதிவுகளையும் தவறாமல் தரிசிக்கவும்.

வல்லிசிம்ஹன் said...

கவிநயா அடுத்த பதிவில் அசந்து போகும் செய்தி ஒன்றைச் சொல்ல்க் காத்திருக்கிறார் கைலாஷி.


இந்த ஒரு தலத்திலும், மங்களகிரித் தலத்திலும் இறைவனின்

பெருமை,ஆத்திகத்தின் அருமைவெளிப்படுகிறது.
நன்றி கைலாஷி.

S.Muruganandam said...

நன்றிகள் வல்லிசிம்ஹன் அம்மா.