Monday, December 23, 2013

ஆழ்வார் திருநகரி ஒன்பது கருட சேவை -4

திருமஞ்சனம்   

ஆழ்வாரின் செந்தமிழ் பாசுரங்களை கேட்டு அனுபவித்த பின் பெருமாள்கள் அனைவரும் தங்களுடைய மண்டபங்களுக்கு எழுந்தருளினர். பின்னர் ஆழ்வாருக்கும் எல்லா பெருமாள்களுக்கும் திருமஞ்சனம் சிறப்பாக நடைபெற்றது. திருமஞ்சனம் நிறைவு பெற்ற பின் பெருமாளின் தீர்த்தம் அனைவருக்கும் கிட்டியது. பின்னர் எளிய அலங்காரத்தில் அனைத்து பெருமாள்களும் பக்தர்களுக்கு சேவை சாதித்தனர். நம்மாழ்வார் அருகே அன்பர்கள் திருப்பாவை, நாச்சியார் திருமொழி, மற்றும் திருவாய்மொழியின் நவதிருப்பதி திவ்ய தேசங்களின் 100 பாசுரங்கள் சேவித்தனர்.   சில பெருமாள்களின் அந்த அற்புத கோலத்தை இந்த பதிவில் காணலாமா அன்பர்களே  



தொலைவில்லி மங்கலம்(இரட்டைத் திருப்பதி) 
செந்தாமரைக் கண்ணன்


நோக்கும் பக்கம் எல்லாம் கரும்பொடு செந்நெல் ஓங்கு செந்தாமரை
வாய்க்கும் தண் பொரு நல்வடகரை வண் தொலைவில்லி மங்கலம்
நோக்கு மேல், அத்திசை அல்லால் மறு நோக்கு இலள்; வைகல் நாள் தொறும்
வாய்க் கொள் வாசகமும் நாமமுமே இவள் அன்னைமீர்!


 தாய்மார்களே! குளிர்ந்த தாமிரபரணியின் வடகரையில் அமைந்துள்ள தொலைவில்லி மங்கலம் என்னும் திருத்தலம் மிகவும் செழிப்பானதாகும். அங்கு இவள் பார்க்கும் இடங்கள் தோறும் கரும்புகளும், செந்நெல்லும், உயர்ந்த செந்தாமரைகளும் நிறைந்திருக்கின்றன. இவள் அத்தலத்தைப் பார்ப்பாளேயானால் அத்திசையையன்றி வேறு ஒரு திசையையும் பார்த்து அறியாள். அனு தினமும் இவள் வாயில் வைத்து பேசும் சொற்களும் நீலமணி வண்ணனின் திருப்பெயர்களே ஆகும்.  

இரட்டைத் திருப்பதி தேவர் பிரான் 

குமுறுமோசை விழவொலித் தொலைவில்லி மங்கலம் கொண்டுபுக்கு
அமுதமென்மொழியாளை நீருமக்குஆசையின்றியகற்றினீர்
திமிர்கொண்தாலொத்துநிற்கும் மற்றிவள் தேவதேவபிரானென்றே
நிமியும்வாயொடு கண்கள்நீர் மல்க நெக்கொசிந்து கசியுமே.


மதுர கவியாழ்வார்

நாவினால் நவிற்று இன்பம் எய்தினேன்
மேவினேன் அவன் பொன்னடி மெய்ம்மையே!
தேவு மற்று அறியேன் குருகூர் நம்பி
பாவின் இன்னிசை பாடித் திரிவனே.

என் வாயினால் நம்மாழ்வாரை துதித்து ஆனந்தத்தை பெற்றேன். அவருடைய அழகிய திருவடிகள் பொருந்த்ப்பெற்றேன்; இது சத்தியம். ஆழ்வாரைத் தவிர வேறொரு தெய்வத்தை அறியமாட்டேன். திருநகரிக்கு தலைவரான ஆழ்வாருடைய அருளிச்செயல்களின் இனிய இசையையே பாடிக்கொண்டு திரிவேன் அடியேன்.   

,  
திருக்கோளூர் நிக்ஷோபவித்தன்


பூவை பைங்கிளிகள் பந்து தூதை பூம் புட்டில்கள்
யாவையும் திருமால் திருநாமங்களே  கூவி எழும் என்
பாவை – போய் இனித் தண் பழனத் திருக்கோளூர்க்கே
கோவை வாய் துடிப்ப மழைக் கண்ணோடு என் செய்யுங்கொலோ?

என் மகள் தன்னுடன் விளையாட வைத்துக் கொண்ட பூவைகள், பச்சைக்கிளிகள், பந்து, சிறிய மரப்பாணை, பூங்கூடை ஆகியவற்றைப் புறக்கணித்து, அவற்றால்  வரும் இன்பம் எல்லாம் ’திருமால்” என்னும் நாமத்தை கூறுவதால் வருமென்று அதனையே கூறுகின்றாள். அதனால் ஏற்றம் அடையும் அவள் குளிர்ந்த வயல்கள் சூழ்ந்த திருக்கோளுர்க்குப் புறப்பட்டு சென்றாளே! அங்கு அடைந்திருப்பாளோ?  அங்கு சென்றதும் தன் கோவைக் கனிகள் ஒத்த  உதடுகள் துடிக்க தாரைதாரையாய் கண்ணீர் விழ என்ன செய்கின்றாளோ?   

ஆழ்வாரும் பெருமாளும் 

ஸ்ரீவைகுண்டம் கள்ளர் பிரான் 

நத்தம் எம் இடர் கடிவான்


                                                                           புளிங்குடி காய்சினவேந்தன் 



பவளம் போல் கனிவாய் சிவப்ப, நீ காண வந்த, நின் பல் நிலா முத்தம்
தவழ் கதிர் முறுவல் செய்து, நின் திருக்கண் தாமரை தயங்க நின்றருளாய்
பவள நன் படர்க்கீழ் சங்கு உறை பொருநல்  தண் திருப்புளிங்குடி கிடந்தாய்
கவள மா களிற்றின் இடர் கெடத் தடத்துக் காய்சின பறவை ஊர்ந்தானே!


கஜேந்திரன் என்னும் யாணையின் துன்பத்தை தீர்த்த பெருமானே! கவளமாக உணவு கொள்ளும் அந்த யானை தடாகத்துக் கரையில் முதலையால் துன்பம் அடையவும், அத்துன்பத்தை நீக்கச் சினம் கொண்ட கருடப் பறவியின் மீது ஊர்ந்து தோன்றியவனே! பவளக் கொடிகளின் கீழே சங்குகள் திரண்டு காணப்படும்  தாமிரபரணியின் கரையிலுள்ள திருப்புளிங்குடியில் பள்ளி கொண்டவனே! பவளம் போன்ற உன் உதடு சிவந்து தோன்ற பல்லாகிய வெண் முத்துக்கள் ஒளிபரப்ப, தாமரைக் கண்கள் விளங்கப் புன்னகை செய்தவாறு வந்து நீ அருள் செய்ய வேண்டும்.   


கள்ளர் பிரான் எம் இடர் கடிவான் காய்சினவேந்தன்  

கருட சேவை

கருட சேவை அலங்காரம் செய்த பட்டர்

ஆழ்வார் திருநகரியில் உள்ள சில அற்புத சிலைகள்

திருக்குருகூர் ஆலயம் ஒரு சிறந்த கலைக் கூடம், அற்புதமான கற்சிலைகள் ஆலயம்முழுவதும் நிறைந்துள்ளன. தாங்கள் மண்டபத்தின் தூண்களில் உள்ள சில அற்புத சிற்பங்களை இப்பதிவில் காணுகின்றீர்கள். கேரள நாட்டில் உள்லது போல் கை விளக்கேந்திய பெண் சிற்பங்கள் பல வித குரங்குகள் ஆகியவற்றை இக்கோவிலில் காணலாம்.   நம்மாழ்வார் சன்னதியில் உள்ள இராமாயண சிற்பங்கள் மிகவும அருமை. 






இரவு கருட சேவைக்காக பெரிய திருவடிகள் தயார் நிலையில் உள்ளனர்.  எல்லா ஆலயங்களிலும் ஒரு திருவாசி இருக்கும் இங்கு மட்டும் எல்லா கருட வாகனங்களிலும் சிறப்பாக  அலங்காரம் செய்வதற்காக இரண்டு திருவாசிகள் இருப்பதை கவனியுங்கள்.  நம்மாழ்வார் பவனி வர அன்ன(ஹம்ச) வாகனமும் தயார் நிலையில் உள்ளது.

பெரிய திருவடி



நம்மாழ்வாருக்கு ஹம்ச வாகனம் 

No comments: