Monday, December 30, 2013

திருவரகுணமங்கை(நத்தம்) எம் இடர் கடிவான் கருடசேவை

ஆழ்வார் திருநகரி ஒன்பது கருட சேவை -7

விஜயாசனர் 

ஸ்ரீவைகுண்டம் தலத்திற்கு கிழக்கே சுமார் மூன்று கி.மீ தூரத்தில் திருவரகுண மங்கை தலம் அமைந்துள்ளது. நத்தம் என்ற பெயரே வழங்கப்படுகின்றது. குக்கிராமம்தான் ஆனால் பேருந்து வசதி உள்ளது. ஆழ்வார்கள் மங்களாசாசனம் செய்த திவ்ய தேசங்களுள் 82வது தலம். நவதிருப்பதிகளில் இரண்டாவது திருப்பதி. நவகிரகத்தில் இது சந்திரன் ஸ்தலமாகும்.

மூலவர் : விஜயாசன பெருமாள் (வெற்றிருக்கைப் பெருமாள்), ஆதிசேஷன் குடை பிடிக்க அமர்ந்த திருக்கோலம், கிழக்குப் பார்த்த திருமுக மண்டலம்.
உற்சவர்: எம் இடர் கடிவான்.
தாயார் : வரகுணவல்லி, வரகுண மங்கை( தனி சன்னதி இல்லை)
விமானம்: விஜய கோடி விமானம்.
தீர்த்தம் : அக்னி தீர்த்தம், தேவ புஷ்கரணி.
பிரத்யட்சம் : அக்னி, உரோமச முனிவர், சத்தியவான்.
ஆகமம் : பஞ்சராத்ரம் – சம்பிரதாயம்: தென்கலை.
மங்களாசாசனம் : நம்மாழ்வார். 
கிரகம்: சந்திர ஸ்தலம்.கோபுர வாசல் சேவை ( கற்பூர ஆரத்தியுடன்)

செம்படவன் முக்தி பெற்றது: இந்த வரகுணமங்கை தலத்தில் ’ரோமசர்’ என்னும் முனிவர் தவம் செய்து வந்தார். அவருக்கு சத்தியவான் என்பவன் சீடனாயிருந்தான். அவன் ஒரு சமயம் அகநாச தீர்த்தத்தில் நீராடி திரும்புகையில், அந்த குளத்தில் ஒரு செம்படவன் வலை வீசி மீன் பிடித்துக் கொண்டிருந்த போது ஒரு நாகம் அவனைத் தீண்ட அவன் மரணமடைந்தான். நாகமும் மறைந்தது.  தேவலோகத்திலிருந்து கந்தவர்கள் கொண்டு வந்த விமானத்திலேற்றி சுவர்க்கம் அடைந்தான். அவனது சரீரத்தையும் பக்ஷிகள் புசித்தன.ஆடும்புட்கொடி அம்மான் எம் இடர் கடிவான் 

இதைக் கண்ட சத்தியவான், தனது குருவான ரோமசரிடம் சென்று சுவாமி! மகாபாவியான இந்த வலைஞனுக்கு என்ன புண்ணியத்தால் சொர்க்கம் கிட்டியது என்று வினவினான். அதற்கு ரோமசர், சத்தியவானே இந்த செம்படவன் கொடுந்தொழில் புரிந்த பாவியென்றாலும் "இந்த வரகுணமங்கை தலத்தில் உயிரை விட்டதால் அவன் நற்கதியடைந்தான்" என்று கூறினார். இவன் முற்பிறவியில் விதர்ப்பதேசத்து அரசன் மகன். முன் செய்த வினைப் பயனால் அவன் தீயவர்களுடன் நட்புக்கொண்டு தீயவழியில் வாழ்ந்தால் இப்பிறப்பு ஏற்பட்டது. ஒரு புண்ணிய விசேஷத்தால் வரகுணமங்கையில் வந்து பிறந்தான், அதனால் நற்கதியடைந்தான் என்றார்.


வரகுண மங்கை எம் இடர் கடிவான் கருட சேவை 

வேதவித் விண்ணுலகெய்தியது: மீண்டும் ரோமசர் தொடர்கிறார். என் பிரிய சிஷ்யனே! முன்னொரு காலத்தில் ரேவா நதிக்கரையில் புண்ணியகோசம் என்ற அக்ரஹாரத்தில் வேதவித் என்னும் அந்தணன் இருந்தான். அவன் மாத,பிதா, குரு மூவரையும் வழிபட்டு அவர்களுக்கு வேண்டிய பணிவிடைகளை செய்து திருமாலை நோக்கி ஆஸனதை என்னும் மந்திரம் ஜெபித்து தவமிருக்க பெருமாளும் கிழ உருவத்தில் தோன்றி வரகுண மங்கை தலத்திற்கு சென்று  தவம் செய் என்று கூறினார். அவரும் அதுபோலவே இங்கு வந்து தவம் செய்து  திருமாலின் அருள் பெற்று பரமபதம் அடைந்தார். எனவே இத்தலம் "மோக்ஷபுரி" என்றும் அழைக்கப்படுகின்றது.  இராமாயணத்தில் சீதா தேவியை இராமன் தீக்குளிக்க கூறிய போது அவள் தர்மத்தின் வழியில் நின்றதால் அக்னியால் ஒன்றும் செய்ய முடியவில்லை.  பிரமனின் கர்வத்தை அழித்த ரோமசமுனிவருக்கும், சத்தியத்தால் எமனிடமிருந்து தன்  கணவனின் உயிர் மீட்ட பஞ்ச கன்னிகளில் ஒருத்தியான சாவித்திரிக்கும், அதர்மத்தையும் அக்கிரமத்தையும் சுட்டு பொசுக்கும் அக்னி தேவனுக்கும் காட்சியளித்த தலம். இம்மூவருக்கும் சத்தியத்திற்கு ஜெயம் அளிப்பவராக, "சத்திய நாராயணராக", ஆதி சேஷன் குடை பிடிக்க தர்மமே  வெல்லும்  என்பதை விளக்கும் வகையில் தர்மத்தின் மேல் அமர்ந்து விஜயாசனராக உபய நாச்சியார்களுடன் சேவை சாதிக்கின்றார். ஒரே பிரகாரத்துடன் அமைந்துள்ளது இந்த தலம்.       


No comments: