Friday, July 18, 2008

ஆனி + சுவாதி + கருடன் = ? ? ?

ஸ்ரீநிவாசப்பெருமாள்

என்னங்க தலைப்புக்குப் பதிலா ஒரு சமன்பாட்டை போட்டு வைத்திருக்கின்றேன் என்று பார்க்கிறீர்களா? விடை என்ன என்று சரி பார்க்க பதிவின் இறுதிக்கு வரவும், அவசரமில்லை, மெதுவாக பெருமாளின் அழகையும் ஆழ்வாரின் அழகையும் கண்டு இரசித்து விட்டே வரவும்.

 
வாழ்த்தின் பயன் வாழ்த்து பெறுபவர்க்கு மட்டுமல்லாமல் வாழ்த்துபவர்களுக்கும் பயன்படுகின்றது. நம்மை விட பெரியவர்களை நாம் வாழ்த்தும் போது அவர்கள் மனமகிழ்ந்து நமக்கு வேண்டிய நன்மைகளை செய்கின்றனர். இவ்வாறே நாம் இறைவனை வாழ்த்தினால் அந்த கருணாமூர்த்தி நமது கவலைகளை போக்கி நமக்கு எல்லா நன்மைகளையும் அருளுவார் அல்லவா. இவ்வாறு அந்த ஆதி மூலனுக்கே பல்லாண்டு பாடியவர்தான் பெரியாழ்வார்.

ஸ்ரீ வில்லிபுத்தூரிலே வடபத்ர சாயிக்கு புஷ்ப கைங்கரியம் செய்து வந்தவர் பெரியாழ்வார். இவரே சூடிக்கொடுத்த சுடர்க்கொடியாள், ஆண்டாள் நாச்சியாரை வளர்க்கும் பேறு பெற்றார். அக்காலத்தில் மதுரையை ஆண்டு வந்த வல்லப தேவன் என்ற பாண்டிய மன்னன் ஒரு சடசு நடதினான். அதில் அவன் " யார் முழு முதற் கடவுள்" ? என்ற கேள்வியை மக்கள் முன் வைத்தான். அதற்கு பரிசாக தங்க நாணயங்கள் அடங்கிய பொற்கிழி ஒன்றை தனது தவத்திறமையினால் எந்த வித பிடிப்புமில்லாமல் ஆகாயத்தில் தொங்க விட்டான். தனது கேள்விக்கு யார் சரியான விடை அளிக்கின்றார்களோ அவரது காலடியில் இந்த பொற்கிழி தானாக விழும் என்றும் அறிவித்திருந்தான். இந்த சடசிலே அனைத்து சமயத்தினரும் கலந்து கொண்டார்கள் தங்கள் தெய்வமே சிறந்தவர் என்று வாதிட்டனர். அதிலே பெரியாழ்வாரும் கலந்து கொண்டு, வேதப்பகுதியை எடுத்துக்காட்டியே விஷ்ணு சித்தர் கூடல் மாநகரில் பலசமய சான்றோர்கள் கூடிய அந்த சபையில் தனது வாதத் திறமையால் அனைவரையும் தோற்க்கடித்து "விஷ்ணுவே முழுமுதற் கடவுள், வைணவ சமயமே மிகச்சிறந்த சமயம்" என்பதை நிருபித்தார். மன்னன் அறிவித்த பொற்கிழியையும் தானாக அவரது காலில் விழுந்தது .


யானை மேல் பெரியாழ்வார்

வெற்றி பெற்ற பெரியாழ்வாரை மன்னன் தனது பட்டத்து யாணை மேலே ஏற்றி நகர் வலம் வரச்செய்தான் வல்லப தேவன். அவ்வாறு பொற்கிழியுடன் அவர் வலம் வரும் போது, தன் அன்பன் வலம் வரும் அழகை காண்பதற்காக வானில் கூடலழகர், வானோர் தனித்தலைவர், அயர்வரும் அமரர்கள் அதிபதி, மூவேழுகுக்கும் நாதன், ஆராவாமுதமான திருமால், ஸ்ரீ தேவியுடன் கருடாரூடராக வருகின்றார். பெருமாளைக் கண்டவுடன் , "எங்கே பெருமாளின் திருவுருவத்திற்க்கும் பெருமைகளுக்கும் கண்ணேறு பட்டுவிடுமோ" என்று அஞ்சி அவரை வாழ்த்தி பரபரப்புடன் யானை மேலிருந்த மணிகளையே தாளமாகக் கொண்டு திருப்பல்லாண்டை பாடுகின்றார், தன்னை யசோதையாகவும், பெருமாளை கண்ணனாகவும் பாவித்து பாசுரங்கள் பாடிய விஷ்ணு சித்தர் என்னும் பெரியாழ்வார்
.
பையுடை நாகப்பகை கொடியான்
பெரிய திருவடியில்


இனி தலைப்பு புதிருக்கான விடை:
(ஆனி + சுவாதி + கருடன் = ? ? ? )

நீங்கள் இப்பதிவில் படித்த பெரியாழ்வார்தான் இவர் கலி பிறந்த 47-வதான க்ரோதன வருடம் ஆனி மாதம், சுகல பக்ஷம், ஏகாதசி, ஞாயிற்றுக்கிழமை கூடிய சுவாதி நட்சத்திரத்தில், , வேயர் குலத்தில் புதுமையாருக்கும், முகுந்தாச்சார்யாருக்கும் புத்திரராக, கருடனின் அமசமாக அவதாரம் செய்தார்.

இவரது அவதார நட்சத்திரமான ஆனி சுவாதியன்று ஸ்ரீ வேதாந்த தேசிகர் தேவஸ்தானம் திருமயிலையில் இவ்விழா சிறப்பாக நடைபெற்றது. அந்த விழாவின் சில படங்களைஇப்பதிவில் கண்டீர்கள்.

பல்லாண்டு பாடிய பெரியாழ்வார்

பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு
பல கோடி நூறாயிரம்
மல்லாண்ட திண்டோள் மணி வண்ணா! உன்
செவ்வடி செவ்விதிருக்காப்பு.

அடியோமோடும்நின்னோடும் பிரிவின்றியாயிரம் பல்லாண்டு
வடிவாய்நின்வலமார்பினில் வாழ்கின்ற மங்கையும் பல்லாண்டு
வடிவார் சோதி வலத்துறையும் சுடராழியும் பல்லாண்டு
படைப்போர்புக்குமுழங்கும் அப்பாஞ்சசன்னியமும் பல்லாண்டே.

என்று பெருமாளுக்கும், பெரிய பிராட்டிக்கும், சங்கு, சக்கரங்களுக்கும் பல்லாண்டு பாடிய பெரியாழ்வார் திருவடிகளே சரணம்.
கருட சேவை தொடரும்..........

Tuesday, July 15, 2008

கருடாழ்வார்

அஹோபிலம் பாவன நரசிம்மர் சன்னதி கருடாழ்வார்

ஆழ்வார்கள் எம்பெருமானின் திருவருளினால் மயர்வற மதிநலம் பெற்று திருமாலாகிய அவரின் பேர் எழிற் பொய்கையுள் ஆழ மூழ்கிக் கவி பாடியவர்கள். ஆழ்வார்கள் திவ்ய சூரிகள். ஆழ்வார்களுடைய அருட்பாசுரங்கள் தென் தமிழ் நாட்டில் தென் கலை மரபை தோற்றுவித்தன என்றால் மிகையாகாது. ஆழ்வார்களின் அருளிச் செயல்களான திவ்ய பிரபந்தங்கள் உபய வேதாதங்கள் ஆகும். இவ்வாறு எம்பெருமானின் கல்யாண குணங்களில் ஆழ்ந்து பாசுரங்கள் பாடிய ஆழ்வார்கள் பன்னிருவர் ஆயினும் ஆழ்வார் என்று அழைக்கப்படுபவர்கள் இன்னும் சிலரும் உண்டு. இவர்கள் கருடாழ்வார், இளையாழ்வான், பிரகலாதாழ்வான், கஜேந்திராழ்வான் ஆகியோர் ஆவர். இப்பதிவில் பெருமாளின் வாகனமாகவும், கொடியாகவும் விளங்கும் பெரிய திருவடியாம் கருடன் எவ்வாறு கருடாழ்வார் என்னும் சிறப்புப் பெற்றார் என்பதை காண்போம்.

அதற்காக நாம் அஹோபிலம் செல்ல வேண்டும், செல்வோமா? கிருத யுகத்தில் இந்த அஹோபிலம்தான் ஹிரண்ய கசிபுவின் அரண்மனை, தன் தமையனாகிய ஹிரண்யாக்ஷனை வதம் செய்து விஷ்ணு பகவான் பூமிப்பிராட்டியாரை மீட்டதால் கோபம் கொண்ட ஹிரண்ய கசிபு அவர் மேல் கடும்கோபம் கொண்டிருந்தான், மேலும் அரிய வரங்கள் பெற்று தானே கடவுள் என்றும் யாரும் விஷ்ணுவை வணங்கக்கூடாது என்று கொடுங்கோலனாக ஆண்டு கொண்டிருந்தான். ஆனால் இறைவனின் திருவுள்ளப்படி அவன்து மகனாக பரம ப்க்தனாக , தாயின் கர்பத்தில் இருக்கும் போதே நாரத மஹரிஷியின் மூலம் "ஓம் நமோ நாராயணாய" என்னும் மந்திர உபதேசம் பெற்றவனாக பிறந்தான் பிரகலாதன். அவன் வளர வளர அவன்து விஷ்ணு பக்தியும் வளர்ந்தது. அவனைக் கண்டு ஹிரண்யகஷிபுவின் கோபமும் வளர்ந்தது. மகன் என்று கூடப் பாராமல் பல் வேறு வழிகளில் அவனைக் கொல்லப் பார்த்தான் ஆனால் ஒவ்வொரு முறையும் நாராயணன் தன் பக்தனைக் காப்பாறினார். இறுதியாக ஒரு நாள் கோபம் தலைக்கேறி "எங்கிருக்கிறான் உன் நாராயணன்" என்று ஆணவத்துடன் கேட்டான் ஹிரண்ய கசிபு . ஆக்ரோஷத்துடனும், ஆணவத்துடனும் தன் எதிரே பயமுறுத்தும் விதத்தில் நின்று மிரட்டிய தன் தந்தையானவனை கண்டு சிறிதும் கலங்காமல் திட பிரக்ஞனாய் அந்த சர்வேஸ்வரன் மேல் கொண்ட பக்தியால் அவர் எப்படியும் தன்னை காப்பார் என்ற நம்பிக்கையுடன் பிரகலாதன் அமைதியாக அவர் "தூணிலும் இருப்பார் துரும்பிலும் இருப்பார்" என்று பதிலிறுத்தான். மூர்க்கமாக தன் கதாயுதத்தால் ஒரு தூணை தாக்கினான் ஹிரண்யன். "அண்டமெல்லாம நடுக்கும் படி அந்த தூண் பிளந்தது அதிலிருந்து சிங்க முகமும், மனித உடலும் வஜ்ர நகங்களும் கொண்டு சிங்கப்பெருமான் ஆவிர்பவித்தார்" அதே க்ஷணத்தில் பெருமாள் தன் அன்பன் சொன்ன சொல்லை மெய்பிக்க, இந்த அற்புதத்தை பெரியாழ்வார் இவ்வாறு பாடுகின்றார்

அளந்திட்டதூணை அவன் தட்ட ஆங்கே
வளர்ந்திட்டு வாளுகிர்ச்சிங்கவுருவாய்
உளந்தொட்டிரணியன் ஒண்மார்வகலம்
பிளந்திட்ட கைகளால் சப்பாணி பேய்முலையுண்டானே! சப்பாணி .


ஜ்வாலா நரசிம்மர்

ஹிரண்யன் பெற்ற வரத்தின் படி, மனிதனாகவோ, மிருகமாகவோ, பறவையாகவோ, தேவராகவோ இல்லாத பெருமாள், உள்ளேயோ வெளியேயோ இல்லாமல் வாசற்படியில் அம்ர்ந்து ஆகாயத்திலோ, பூமியிலோ இல்லாமல் தன்து மடியில் ஹிரண்யனை போட்டுக் கொண்டு பகலோ இரவோ அல்லாத சந்தியா காலத்தில் ஆயுதமே அல்லாத தனது கூரிய நகங்களால் அவனது மார்பைக் கிழித்து அவன்து குடலை மாலையாகப் போட்டு ஜ்வாலா நரசிம்மராக அவனை வதம் செய்தார் ஓம் நமோ நாராயணா என்னும் நாமத்தின் மகிமையையும் பிரகலாதாழ்வானின் பக்தியின் பெருமையையும் நிலை நாட்டினார் பெருமாள். பெருமாளின் சீற்றம் கண்டு சகல தேவர்களும் நடுங்கி நிற்க பிரகலாதன் மட்டும் தனக்காக அவதாரம் எடுத்த பெருமாளை பக்தியுடன் நோக்கி அவரை சாந்தமதையும்படி வேண்டி பெருமாளை சாந்தப்படுத்தினான். இவ்வாறு பெருமாளின் பக்தியிலே ஆழ்ந்ததால்தான் பிரகலாதன் பிரகலாதாழ்வான் என்று போற்றப்படுகின்றான்.

என்னடா கருடாழ்வானைப்பற்றிக் கூறுகின்றேன் என்று ஆரம்பித்து பிரகலாதாழ்வானைப் பற்றி கூறிக்கொண்டிருக்கிறேனே என்று யோசிக்கிறீர்களா? சற்று பொறுங்கள் இரண்டுக்கும் உள்ள சம்பந்தம் புரியும்.

ப்ரகலாதாழ்வான் சொன்ன வார்த்தையை மெய்பிக்க பெருமாள் அதே நொடியில் ஹிரண்யனின் அரண்மணை தூணில் அவதாரம் செய்ததால் அவர் கருடன் மேல் எழுந்தருளி வராமல், கருடனை விடுத்து தனியாக வந்தார். அதனால் மிகவும் துக்கம் கொண்ட கருடன், பெருமாளிடம் தனக்கு நரசிம்ம அவதார சேவையை காட்டி அருளுமாறு வேண்டினான். கருடனின் பெருமையை உலகத்தோர்க்கு அறிய செய்ய திருவுளம் கொண்ட பெருமாள் நீ அஹோபிலம் சென்று தவம் செய் தக்க சமயத்தில் நான் வந்து சேவை சாதிக்கின்றேன் என்று அருளினார். பெருமாள் கூடாவிரணியனைக் கூருகிரால மார்பிட” அவதாரம் செய்த புண்ணிய பூமியாகிய அஹோபிலத்தில் வந்து கருடன் பெருமாளின் தரிசனம் வேண்டி தவம் செய்ய ஆரம்பித்தான். அவ்வளவு கடுமையாக தவம் செய்தான் கருடன், அவனுடைய தவத்தீயால் பூலோகம் ஸ்தம்பித்தது, தேவலோகத்தையும் அது விடவில்லை . தேவேந்திரனுக்கு பயம் பிடித்துக் கொண்டு விட்டது, ஒரு காலத்தில் தேவ லோகம் வந்து தேவர்கள் அனைவரையும் தோற்கடித்து அமிர்தத்தை எடுத்து சென்றவனல்லாவா கருடன்? எனவே இந்திரன் கருடனின் தவத்தை அறிந்து தன் லோகத்துக்கு தீங்கு வந்துவிடுமே என்று ஐயம் கொண்டான். நான்கு பக்கங்களிலும் கண்ணைச் செலுத்தினான். அழகாலே எல்லாரையும் மயக்கும் இயல்பு பெற்றுக் கர்வம் கொண்ட ஊர்வசி அவனருகில் நின்றாள். அவளைப் பார்த்தும் மனத்தில் ஒரு தீர்மானத்துக்கு வந்த இந்திரன், "ஊர்வசியே! தேவர்களின் நன்மைக்காக உடனடியாக ஒரு தந்திரம் செய்ய வேண்டும். கருடன் முனிவேடம் தரித்து அஹோபிலத்தில் தவம் புரிவது உனக்குத் தெரிந்ததே. அங்கே சென்று பல விலாசங்களைக் காட்டி அவனை உன்மீது மையல் கொள்ளச் செய்யவேண்டும். அவனது தவத்தைக் கெடுக்க வேண்டும். மகரிஷிகளும், உன் மோக வலையில் சிக்கினவர்கள். கருடனும் உன் மீது மோகம் கொள்வான் என்பதில் சந்தேகம் இல்லை, என்று சொல்லி அனுப்பினான்."


ஊர்வசியும் இந்திரனின் உத்திரவின்படி பல அப்ஸர ஸ்த்ரீகளுடன் அஹோபிலம் என்னும் மலைக்கு வந்து சேர்ந்தாள். மதுரமான வார்த்தைகளை பேசத்தொடங்கினாள். அழகிய கீதங்களையும் பாடினாள். தன்னுடன் வந்த பெண்மணிகளோடு நர்த்தனம் செய்யவும் ஆரம்பித்தாள். கருடன் அவளை பார்க்கவும் இல்லை. மதிக்கவும் இல்லை. 'இந்திரன் அனுப்பி வந்தவள் நான். ஊர்வசி என்பது என் பெயர். ஒரே கணத்தில் எல்லோரையும் என் வசமாக்க சக்தி உடையவள். என் கண்ணுக்கு இலக்கானவர்கள் எல்லோருமே எல்லா துன்பங்கினின்றும் விடுபட்டவர்கள் ஆவார்கள். பெண்ணின் உருவத்தை நேரில் பார்த்ததும், அதை ஆதரிக்காமல் வேறு பொருளை விரும்புகிறவன் மிக்க தாகத்தோடு இருந்தும் கையில் கிடைத்திருக்கும் தண்ணீரைவிட்டு ஆகாயத்தில் உள்ள மேகத்தை எதிர்பார்ப்பவனுக்கு சமானமாகிறான்' என்று பரிவுடன் கூடிய ஆயிரக்கணக்கான வார்த்தைகளால் கச்யபருடைய புதல்வனான கருடனை ஏமாற்ற முயன்றாள். "இத்தகைய அபத்தமான கேவல ஆடம்பரம் உபயோகமற்றது. தீமையைக் கொடுக்கக்கூடியது. கேட்பவர்களுக்கும் முரணானது' என்று நினைத்து முதலில் கருடன் பேசாமல் இருந்துவிட்டான்.பிறகு மறுபடியும் இரக்கத்தால் கருடன் சில வார்த்தைகளைச் சொல்லத் தொடங்கினான்; " ஊர்வசியே! கொடிய பெண்ணே! நீ உன் இருப்பிடம் செல். உன்னுடைய விருப்பம் என்னிடத்தில் பயன் பெறாது. கொட்டு மழையால் தாக்குண்டாலும் மலைகள் எப்படித் துன்பத்தை அடைவதில்லையோ அதுபோல் பகவானிடத்தில் மனத்தைச் செலுத்தியவர்கள் எந்தவிதத்திலும் துன்பப்படமாட்டார்கள். அச்சுதனிடத்தில் ஈடுபட்ட மஹா மனஸ்விகளின் உயர்ந்த குணம் எங்கே? பெண், புதல்வன், மனைவி, பணம் இவ்விஷயத்தில் அறிவிலிகள் கொள்ளும் பற்றுதல் எங்கே? தம் விருப்பப்படி இந்தப் பூலோகத்தில் ஏற்படும் சுகங்களில் ஈடுபட்டு நன்மை தீமை ஒன்றும் அறியாத ஆண்களுக்குத் தீங்கும் இன்பமாகப் படுகிறது. கையில் சிரங்கு வந்த போது அதை சொறிந்தால் மேல் தீமை ஏற்படும் என்றறிந்தும் தற்காலத்தில் உண்டாகும் இன்பத்துக்காக சொறிவது போல் உள்ளது மக்களின் செயல். ஆக தீங்கும் இன்பமாகத் தோன்றும். "பவவ்யதா ஸுகாயதே" ஆகையினாலன்றோ மாமிசம், ரத்தம் முதலியவற்றின் சேர்க்கையைப் பெற்ற கொடிய அழுக்கு உடம்பினிடம் மூடர்கள் ஆசை காட்டுகின்றனர்! இப்படிப் பட்டவர்கள் நரகத்திடமும் ஈடுபாடு கொள்வார்கள். வெறுப்புக் காட்டமாட்டார்கள். பெண்கள் சிலரிடத்தில் சிநேகம் பாராட்டுவார்கள். சிலரை மயக்குவார்கள்; ஓரிடத்திலும் நிலையுடன் இருக்கமாட்டார்கள். இவர்களுடைய மனத்திலேயே ஒரு நிச்சயமும் ஏற்படாது. இப்படிப் பலவகையில் வினதையின் சிறுவனான கருடன் ஊர்வசியை கடிந்து கூறி, ஹரியின் திருவடிகளில் மனத்தைச் செலுத்தி பெருமாளை ந்ருஸிம்ஹராய் தரிசிக்க வேண்டி ஒரே மனதுடன்

ஆடியாடி அகம்கரைந்து இசை பாடிப்பாடிக் கண்ணீர் மல்கி எங்கும் நாடிநாடி நரசிங்கா!
என்று ஊனும் உள்ளமும் உருக கடும் தவத்தை தொடர்ந்தான் வைனதேயன்.
ஊர்வசியும் வெட்கத்தால் முகந்தாழ்ந்து தேவேந்திரனிடம் திரும்பிச் சென்றாள். இந்திரனைப் பார்த்து " புரந்தரா! முன்பு பல இடங்களுக்கு என்னை அனுப்பியிருக்கிறாய். தபோ லோகத்திலோ, ப்ரம்ம லோகத்திலோ, அதற்கும் மேலான உலகத்திலோ, பாதாளம் முதலிய உலகங்களிலோ, என்னுடைய திறமையைக் காட்டி உன் விருப்பத்தை நிறைவேற்றிக் கொடுத்திருக்கிறேன். ஆனால் இந்த கருடனிடம் என் முயற்சி பலன் அளிக்கவில்லை. மதங்கொண்ட யானையைத் தாமரைத் தண்டின் நூலால் எப்படிக் கட்ட முடியாதோ, உக்ரமான க்ரணங்களை உடைய சூரியனை இருட்டால் எப்படி அழிக்க இயலாதோ, சமுத்ர ஜலத்தால் பாடவாக்கினியை (வடவைக் கனலை) எப்படி அணைக்க முடியாதோ, சமுத்ரத்தின் ஒலியை தவளையின் கூச்சலால் எப்படி அடக்கமுடியாதோ, அவ்வாறே பகவானிடத்தில் எல்லா புலன்களையும் செலுத்தி பேரறிவைப்பெற்ற மகான்களின் மனத்தை அழிக்க முடியாது" என்றாள். மேலும், "கருடன் தேவ லோகத்தையோ உன்னுடைய பதவியையோ ப்ரம்மாவின் ஸ்தானத்தையோ விரும்பித் தவம் புரியவில்லை. பகவானின் திருவடித்தாமரைகளை காணவேண்டும் என்று விரும்பியே தவம் புரிகின்றான். இதை நான் நன்கு அறிவேன்" என்று சொல்லி இந்திரனுடைய பயத்தை ஒருவாறு போக்கினாள் ஊர்வசி.

கருடனின் திட பக்தியைக் கண்டு மகிழ்ந்த பெருமாள் சத்திய சொரூபனாய் மலைக்குகையில் நெருப்பின் உக்ரத்தோடு அவன் விரும்பியபடியே உக்ர நரசிம்மராய் அன்று எவ்வாறு இருந்தாரோ அது போலவே சேவை சாத்தித்தார். பிரகலாதன் கை கூப்பி நிற்க ஹிரணியணை மடியில் போட்டுக் கொண்டு உக்ரமாய் அவனது மார்பைப் பிளக்கும் கோலத்தில் முன் நரசிங்கமதாகி அவுணன் முக்கியத்தை முடிப்பான் என்ற படி பெருமாள் கருடாழ்வாருக்கு சேவை சாதித்தார். சங்கம், சக்கரம், கதை முதலிய ஆயுதங்களை தரித்தவரும், நான்கு கைகளை உடையவரும், இந்திரன் முதலிய தேவ கணங்களால் பூஜிக்கப்பட்டு நீர் கொண்ட மேகத்திற்கு ஒப்பானவரும் செந்தாமரைக்கண்ணை உடையவரும் ஒரே சமயத்தில் உதித்த கோடிக்கணக்கான சூரியர்களின் ஒளியைப் பெற்ற க்ரீடத்தால் விளங்கியவரும், அழகிய உன்னதமான மூக்குடன் கூடியவரும் கருத்த கேசங்களுடன் கூடியவரும் அழகிய தளிர் போன்றவரும், குண்டலதாரியாய் கெளஸ்துபம் உடையவரும், பீதாம்பரதாரியுமான பகவானை கருடன் தன் கண்களால் கண்டு ஆனந்த பரவசனாய் நின்றான். நக்ஷத்திர மண்டலத்தோடு கூடிய சந்திரன் போலவும், மேருமலையின் நடுவிலுள்ள சூரியன் போலவும், அநந்தன் முதலிய சுரகணங்களோடு சேவை அளிக்கும் பகவான், கருடனின் முன் வந்து அழகிய வார்த்தை சொல்லத் தொடங்கினார். "குழந்தாய்! விநதையின் மனத்துக்கு இனியவனே! உனது உக்கிரமான தவத்தால் மகிழ்ச்சியுற்றேன். எழுந்திருப்பாய். உன் விருப்பம் என்ன? நான் அதை நிறைவேற்றுகிறேன்" என்றார். இதைக் கேட்டதும் கருடன் பலதடவை பகவானை வணங்கி அபூர்வமான அவரது ரூபத்தைக் கண்டு மலர்ந்த கண்களைப் பெற்றவனாய் உடல் முழுவதும் மயிர்க்கூச்சலடைந்தவனாய் கடவுளை துதி செய்ய ஆரம்பித்தான்.

"எல்லா உலகத்தையும் ஆக்கவும், நிலைபெறுக்கவும், அழிக்கவும், திறமைப்பெற்ற உன்னை நமஸ்கரிக்கிறேன். காரிய காரண ரூபனான உன்னை நமஸ்கரிக்கிறேன். பல ரூபங்களை எடுத்து எங்கும் வியாபித்த உன்னை வணங்குகிறேன். சார்ங்கம் முதலிய ஆயுதங்களை ஏந்திய உன்னை வணங்குகிறேன். அடியவர்களிடத்தில் இரக்கமுள்ளவனே! உன் மகிமையைச் சொல்லி துதிசெய்ய யாருக்குத்தான் சக்தி உண்டு? ஜகத்குருவே! மந்தமதியுள்ளவனான நான் எப்படித் துதிப்பேன்?என் நாக்கு எப்படி முன் வரும் ?. என்று கருட பகவான் துதி செய்து விநயத்துடன் நின்றான்.

மிகத் தெளிவு பெற்ற முகத்துடன் பகவான் கருடனைப் பார்த்து சொல்லத் தொடங்கினான்: "விநதையின் புதல்வா! நான் உன் தவத்தை மெச்சுகிறேன். உனக்கு எல்லா மங்களங்களும் உண்டாகட்டும். உன் விருப்பம் என்ன? சொல்லாய்! அதை நான் நிறைவேற்றி வைக்கிறேன்." என்றார். கருடன் "தேவ தேவா! நான் பூமியிலோ மூன்று உலகங்களிலோ ஜயம் பெற விரும்பி தவம் புரியவில்லை. இன்று முதல் வாகனமாக எனது தோளில் தேவரீர் அமர வேண்டும். இதுதான் எனக்கு மகிழ்ச்சியைக் கொடுக்கக் கூடியது. எல்லாவற்றுக்கும் ஆதாரனான உனக்கு நான் ஆதாரமாக வேண்டும். இந்த மகிமை எவற்கும் கிடைக்கத் தகுந்ததன்று. இந்த பெரும் பாக்கியம் எனக்கு கிட்டவேண்டும்" என்றான். பின்பு அவன் மேலும் சொல்லத் தொடங்கினான். "புருஷோத்தமா! இந்த மலையில் இருந்துகொண்டு நான் கடும் தவம் புரிந்தேன். இங்கே என் தவம் வெற்றி அடைந்தது. உன்னை தரிசிக்கும் பாக்யத்தை கொடுத்தபடியால் இந்த மலைக்கு ஒரு பெருமை ஏற்பட்டுள்ளது. எனவே, இதற்கு கருடமலை என்ற பெயர் வழங்க வேண்டும் தாங்களும் இந்த கருடாசலத்தில் எனக்கு சேவை சாதித்தது போலவே எப்போதும் சேவை சாதிக்க வேண்டும் . இந்த இரு வரங்களையும் கொடுக்க வேண்டும்" என்று கேட்டுக் கொண்டான்.

பகவான், "கருடா! நீ இளம்பிராயம் உள்ளவனாக இருந்த போதிலும் புத்தியால் பெரியவனாக விளங்குகிறாய். உன்னைக்காட்டிலும் உயர்ந்தவன் யாரும் இல்லை. பல முனிவர்கள் தவம் புரிந்தனர். நானும் அவர்களுக்கு ஸேவை தந்தேன். அவர்கள் வேறு எதையோ பலனாக விரும்பி வேண்டிக் கொண்டார்களே தவிர தங்களை எனக்கு வாகனமாக்கிக் கொள்ள விரும்பவில்லை. நீ விரும்பியபடி இரு வரமும் தந்தேன். உன்னை கருடன் என்றும், ஸர்ப்பங்களுக்கு சத்ரு என்றும், வேத ஸ்வரூபி என்றும், பக்ஷீராஜன் என்றும், நாராயண ரதம் என்றும் சொல்லி அழைப்பார்கள்" என்று சொல்லி, பகவான் அங்கேயே அந்தர்த்தியாமானார்.

இன்றும் கருடாத்ரியில் ஒரு குகையில் பெருமாள் அஹோபில நவ நரசிம்மர்களுள் முக்கியமானவராக அஹோபில நரசிம்மராக, உக்ர நரசிம்மராக இன்றும் சேவை சாதிக்கின்றார். குகையில் பெருமாளுக்கு எதிரே கருடன் தவ நிலையில் சேவை சாதிக்கின்றார். இவ்வாறு பெருமாள் அவதாரம் செய்த தலத்தில் நாம் எல்லோரும் உய்ய பெருமாள் கோவில் கொள்ள காரணமாக இருந்தார் கருடன். இவ்வறு மாறாத பக்தி கொண்டு பகவான் சேவையே பிரதானம் என்று அவரிடம் பூரண சரணாகதி அடைந்ததால் அவரது திருவடிகளைத் தாங்கும் பேறு பெற்றதால் , கருடாழ்வார் என்று போற்றப்படுகின்றார் விநதையின் சிறுவன்.


இந்த சிங்கவேள் குன்றத்தின் சிறப்பை திருமங்கையாழ்வார் இவ்வாறு பாடுகின்றார்.
அங்கண்ஞாலம்அஞ்ச அங்குஓராளரியாய் அவுணன்
பொங்காஆகம்வள்ளுகிரால் போழ்ந்தபுனிதனிடம்
பைங்கணானைக்கொம்புகொண்டு பத்திமையால் அடிக்கீழ்ச்
செங்கணாளிஇட்டிறைஞ்சும் சிங்கவேள் குன்றமே. அலகு இரு இறக்கைகள் என மூன்று சிகரங்களாக காட்சி அளிக்கும் கருடாத்ரி

பெருமாள் அவ்தாரம் செய்த உக்ர ஸ்தம்பத்திலிருந்து கருடாத்ரியைப் பார்த்தால் அப்படியே கருடன் தன் இரு சிறகுகளையும் விரித்து மத்தியில் உயர்ந்த அலகுடனும் மூன்று பகுதிகளாகவும் அஞ்சலி ஹஸ்தத்துடன் ( கை கூப்பிய நிலையில்) நிற்பதை இன்றும் காணலாம். அஹோபிலத்தில் இன்று கருடாத்ரிக்கும் வேதாத்ரிக்கும் இடையே பிறவிப் பிணியை நீக்கும் பவ நாசினி ஆறு ஓடுகின்றது. கருடாத்ரியில் தான் நவநரசிம்மரில் இன்னொரு நரசிம்மரான பாவன நரசிம்மரும் தாயார் செஞ்சு லக்ஷ்மித்தாயாருடன் லக்ஷ்மி நரசிம்மராக சேவை சாதிக்கின்றார். இவ்வளவு பெருமைகள் பெற்ற அஹோபிலம் செல்ல வாய்ப்பு கிடைத்தால் சென்று தரிசனம் செய்து விட்டு வாருங்கள்.


கருடாழ்வரின் கூப்பிய கரங்கள்


இனி அஹோபில ஷேத்திரத்தின் சிறப்புகள் சில

அஹோபிலே கருடசைல மத்யே க்ருபா வசாத் கல்பித ஸந்நிதாநம் லக்ஷ்ம்யா ஸமாலிங்கித வாம பாகம் லக்ஷ்மி ந்ருஸிம்ஹம் சரணம் பிரபத்யே

என்றபடி அஹோபில ஷேத்திரத்தில் கருட மலையின் கர்பத்தில் கருணையின் காரணமாக கோவில் கொண்டு இடது பக்கத்தில் பெரிய பிராட்டியாரை அனைத்த வண்ணம் சேவை சாதிக்கும் லக்ஷ்மி ந்ருஸிம்ஹரை சரணம் அடைகின்றேன்.

அஹோபிலம் நவநரசிம்மர்கள்
இவ்வாறு எப்போதும் அகலகில்லேன் இறையும் என்று அலர்மேல மங்கை மஹாலக்ஷ்மியுடன் சேர்ந்தே இருக்கும் மாலோலனாகவும் மற்றும் எட்டு கோலங்களிலும் பெருமாள் எழுந்தருளி அருள் பாலிக்கும் தலம் தான் அஹோபிலம். திருமங்கையாழ்வார் தம் பாசுரத்தில் ஒரு பாடலில் "தெய்வங்களால் மட்டுமே சென்று தரிசிக்க முடியும்" என்று சிங்கவேள் குன்றம் என்று பாடிய தலம். காசியில் ஆயிரம் யுகங்கள், ப்ரயாகையில் இருபது யுகங்கள், கயையில் நூறு யுகங்கள் வாழும் பயனை அஹோபில ஷேத்திரத்தில் ஒரு நாள் வாசம் செய்தால் கிட்டும் எனது அஹோபிலத்தின் சிறப்பு. இராமாவாதாரத்தில் இராமருக்கு இளையவராக பிறந்து அவர் சேவை ஒன்றையே எப்போதும் சிந்தித்து இராமரை இணை பிரியாது எப்போதும் தொண்டு செய்து பின் கிருஷ்ணாவதாரத்திலே அவருக்கு மூத்தவராக பலராமராக அவதாரம் செய்து, இக்கலிகாலத்தில் இராமானுஜராக அவதாரம் செய்த பெருமாளின் பாம்பணையாம் அயிரம் பணங்களார்ந்த ஆதி சேஷன் இளையாழ்வான் என்று கொண்டாடபப்டுகிறான். மேற்கு தொடர்ச்சி மலையே ஆதி சேஷன் என்பது ஐதீகம். அந்த ஆதிசேஷனின் தலை - திருவேங்கடம், முதுகு- ஸ்ரீ சைலம் வால்- அஹோபிலம் ஆகும்.

மேலும் அஹோபில திவய தேசத்தின் தரிசனம் பெற இங்கே செல்க

இனி கஜேந்திராழ்வானைப் பற்றி ஒரு சிறு குறிப்பு ஆயிரம் வருடங்கள் தன் பலத்தின் மீதும் மற்ற தன் கூட்டத்தின் மீதும் நம்பிக்கை வைத்து போராடிக்கொண்டிருந்த போது அவனுக்கு பெருமாள் உதவ முன்வரவில்லை. ஆனால் அதையெல்லாம் விடுத்து எப்போது அவன் அந்த ஆதிமூலத்திடம் பூரண சரணாகதி அடைந்த போது அடுத்த நொடியே கருடன் மேல் ஆரோகணித்து வந்து கஜேந்திரனுக்கு அருளினார் பெருமாள். எனவேதான் பராசர பட்டர் தமது போற்றியில் தங்களது கருணையை விட தங்களது அந்த வேகத்திற்காக தலை வணங்குகின்றேன் என்று பாடுகின்றார்.

இவையனைத்திலும் நாம் கற்கும் பாடம் கண்னன் கீதையிலே கூறிய படி
ஸர்வ தர்மாந் பரித்யஜ்ய மாம் ஏகம் சரணம் வ்ரஜ
அஹம் த்வா ஸர்வ பாபேப்யோ மோக்ஷயிஷ் யாமி மாசுச

அதாவது மோடசத்திற்கு உதவும் மற்ற எல்லா தர்மங்களையும் விடுத்து என்னை மட்டுமே உபாயமாக பற்றினால் உன்னை சகல பாவங்களிலும் விடுத்து உன்னை கடைத்தேற்றுவேன் என்று அருளிய படி பூரண சரணாகதி ஒன்றே நாம் உய்யும் வழி.

ஓம் நமோ நாராயணாய.