Wednesday, July 20, 2016

ஆடி கருடன்

மேற்கு மாம்பலம் கோதண்டராமர் ஆலய
கஜேந்திர மோட்சம்

நஞ்சை அமுதாக்கிய பெருமாளாக ஸ்ரீராமர் அருள் பாலிக்கும் சென்னை மேற்கு மாம்பலம் கோதண்டராமர் ஆலயத்தில் வருடத்தில் மூன்று முறை கருட சேவை உற்சவம் நடைபெறுகின்றது. சித்திரை மாதம் பிரம்மோற்சவத்தின் ஐந்தாம் நாள் இரவு இராமர் கருட சேவை தந்தருளுகின்றார். 

வைகுந்தத்தில் இருந்து புறப்படும் பெருமாள்

இவ்வாலயத்தில் கோதண்டராமர், அரங்கநாதர், நரசிம்மர் என்று நின்றான், கிடந்தான், அமர்ந்தான் என்று மூன்று கோலங்களில் பெருமாள் சேவை சாதிக்கின்றார். பௌர்ணமியன்று ஸ்ரீநரசிம்மர் கருட சேவை தந்தருளுகின்றார். ஆடி கருடன் என்றழைக்கப்படும் ஆடி பௌர்ணமியன்று அரங்கநாதர் கருடசேவை தந்தருளி கஜேந்திரனுக்கு  மோட்சம்  தந்தருளுகின்றார்.    அந்த கஜேந்திர மோட்ச காட்சிகளைத்தான் இப்பதிவில் காண்கின்றீர்கள் அன்பர்களே. 

 முதலை வாயில் அகப்பட்ட கஜேந்திராழ்வான் 
ஆதி மூலமே என்று அலறும் காட்சி

ஹனுமந்த தீர்தத்தில் வாத்துக்கள்

குளக்கரையில் பெருமாள் 

சுதர்சன சக்கரம் புறப்பட்டு விட்டது 

முதலையை துணிக்க சக்கரம்  வேகமாக செல்லும் சக்கரம்  

முதலையை கொன்று கஜேந்திரனுக்கு மோட்சம் 


அரங்கநாதப் பெருமாள் கருடசேவை 


பின்னழகு

கஜேந்திரமோக்ஷம்
விசிஷ்டாத்வைதத்தின் மையக் கருத்தே பூரண சரணாகதிதான் அந்தச் சரணாகதி தத்துவத்தை உணர்த்தும் நிகழ்ச்சிதான் கஜேந்திர மோக்ஷம். ஜீவாத்மாவாகிய கஜேந்திரன் தன் பலத்தின் மேல் ஆணவம் கொண்டு சம்சாரமாகிய குளத்தில் உள்ள துன்பம் மற்றும் இறப்பாகிய முதலையுடன் ஆயிரம் வருடங்கள் போராடியும் அதனால் முதலையின் பிடியிலிருந்து விடுபட முடியவில்லை. அது தன் ஆணவத்தை விட்டு பூரண சரணாகதியுடன் "ஆதிமூலமே" என்று அலறிய அடுத்த கணமே அதிருங்கடல் வண்ணன், அஞ்சன வண்ணன், கொண்டல் வண்ணன், பூவைப் பூ வண்ணன், நீல மேனி  மணி  வண்ணன், வேத சொரூபியான கருடன் மேல் ஆரோகணித்துக் கையில் சுதர்சன சக்கரத்துடன் வந்து யானையின் துயர் தீர்த்தான் பக்தவத்சலன்கரி வரதன்மஹா விஷ்ணு. ஆகவே பூரண சரணாகதியை விளக்குவதே இந்தக் கஜேந்திர மோக்ஷம்.

பெருமாளின் முத்தொழிலை விளக்குவதே கஜேந்திர மோக்ஷம்.  உலக இன்பமாகிய மலர்களை பறிக்க இறங்கிய யானை கஜேந்திரனை உலக பற்றாகிய முதலை பற்றிக் கொண்டு முக்தி அடைய முடியாமல் தடுக்கின்றது. அதனை மறைத்து  மோக்ஷம் அருள விரும்பிய பெருமாள் உலக பற்றாகிய முதலையை அழித்து  மறைத்து இன்பமாகிய வீட்டை அருளுகிறார் என்றொரு விளக்கமும் தருவர் பெரியோர்.

வாழ்க்கையில் வறுமைப் பிடியில் சிக்கித் தவிப்பவர்கள், தொழிலில் நஷ்டமடைந்து வேறு எதுவும் செய்வதறியாமல் துடிப்பவர்கள், விரோதிகளின் மத்தியில் மாட்டிக் கொண்டு உயிருக்குப் பயந்து கொண்டிருப்பவர்கள், நல்லவர்களின் சாபத்தினால் பலவாறு அவதிப்படுபவர்கள், நோயினால் ஒவ்வொரு நாளும் துடித்துக் கொண்டிருப்பவர்கள். அத்தனை பேர்களும் தங்கள் கஷ்டங்கள் நீங்க பிரார்த்தனை செய்து சரணாகதி செய்தால் அவர்களுக்கு பகவான் கருடன் மூலம் பறந்து வந்து கஷ்டங்களைப் போக்கி உயிர் காத்து அருள்வான் என்பதை உணர்த்துவதே கஜேந்திர மோக்ஷம் ஆகும்.

கஜேந்திரனும், பிரஹலாதனும், திரௌபதியும் ஆபத்தை அடைந்த போது அவர்களை பகவான் ரக்ஷித்தது பிரசித்தம். இதனை எம்பார் சுவாமிகள் குறிப்பிடும் போது, இவர்கள் மூவருக்கும் ஆபத்து வந்தது என்பதை விட எம்பெருமானுக்கே மூன்று ஆபத்து வந்து கழிந்ததுஎன்று கூறுவார். இவர்களை ரக்ஷிக்காமல்  விட்டிருந்தால் மக்கள் பகவான் இருந்தால் காப்பாற்றியிருப்பானே?”  என்று ஈச்வரத்வத்தையையே சந்தேகப்படுவார்கள் அதனாலன்றோ அவர்கள் ரக்ஷணம் என்பார். எனவே தான் பெருமாளை பெரியாழ்வார் நம்பன்என்று மங்களாசாசனம் செய்கின்றார்.

பரிக்ஷித் மஹாராஜாவிற்குச் சுகபிரம்ம ரிஷி கூறிய பாகவத புராணத்தின் 8வது ஸ்கந்தத்தில் இந்த வரலாறு விரிவாகக் கூறப்பட்டுள்ளது.   இனி பாகவதத்தில் கஜேந்திர மோக்ஷம் எவ்வாறு கூறப்பட்டுள்ளது என்று பார்ப்போமா? கிருத யுகத்தில் நான்காவது மனுவான தாமஸமனுவின் காலத்தில் திரிகூட மலையில் நடந்த சரித்திரம் இது. பாற்கடலால் சூழப்பட்டதும், பதினாயிரம் யோஜனை உயரமும் உள்ளதுமான த்ரிகூடம் என்றொரு பர்வதம் உண்டு. அதில் மூன்று முக்கிய சிகரங்கள் உண்டு. அம்மலையின் தாழ்வரையில் வருணன் உருவாக்கிய ருதுமத் என்ற அழகிய தோட்டம் ஒன்றும் உண்டு. அதன் அருகில் மிக அழகிய  இரு குளமும் இருந்தன.   கம்பீரமும் வீரமும் மிகுந்த யானைகளின் அரசனான கஜேந்திரன் தன் பிடிகளுடனும் குட்டிகளுடனும் காட்டில் மரங்களை உடைத்தும் மூங்கிலை உண்டும் உலாவிக் கொண்டிருந்தது அதன் அந்தச் சப்தத்தைக் கேட்டதுமே சிங்கம் புலி முதலிய பலம் மிகுந்த மிருகங்கள் பயந்து ஓட மற்ற சிறிய மிருகங்களான மான், முயல் முதலியவை பயமில்லாமல் அதனுடன் ஒட்டி வந்து கொண்டிருந்தன.

அப்போது எங்கிருந்தோ தாமரை மலரின் நறுமணம் அவனது துதிக்கையை எட்டியது. உடனே தனது பரிவாரங்கள் சூழ அந்த பொய்கையை நோக்கி ஓடத்தொடங்கினான். வழியில் உள்ளவற்றையெல்லாம் துவம்சம் செய்து கொண்டு பொய்கையை அடைந்த கஜராஜன் தன் துதிக்கையால் தாமரைப்பூ, அல்லி ஆகியவற்றின் மகரந்தங்கள் நிறைந்த அந்த இனிய பொய்கை நீரை உறிஞ்சி உளம் குளிர பருகி, அந்த நீரை தன் பரிவாரங்களுக்கும் வழங்கினான் ஒரு குடும்பத்தலைவனைப் போல பின் ஒரு தாமரை மலரை தான் வணங்கும் பெருமாளுக்கு சமர்ப்பிக்க பறிக்கப் பொய்கைக்குள் காலை வைத்த போது அந்த பொய்கையிலிருந்த முதலை கஜேந்திரனின் காலைக் கவ்விக்கொண்டு கஜேந்திரனை தண்ணீருக்குள் இழுக்க முயன்றது.

பின்னிருந்து மற்ற பெண் யானைகளும், குட்டிகளும் சேர்ந்து இழுத்தன ஆனால் முதலைக்கு தண்ணீரில் பலம் அதிகமல்லவா? இந்த இழுபறி நீடித்தது. ஒரு நாள் இரு நாள் அல்ல, ஆயிரம் வருடங்கள் நீடித்தது. தேவர்கள் எல்லாரும் கூடி நின்று இந்த போராட்டத்தைக் கண்ணுற்றனர்.  500 வருடங்கள் இது ஒரு தண்ணீரில் வாழும் ஜந்துதானே அதை  தரையில் இழுத்து தேய்த்து விடலாம் என்று தன் பலத்தின் மேல் கொண்ட அகங்காரத்தினாலும், மேலும் 500 வருடங்கள் மற்ற யானைகள் தன்னைக் காப்பாற்றும் என்று மமகாரத்திலும் யானை  முதலையை இழுத்துக் கொண்டு இருந்தது. மெள்ள மெள்ள கஜேந்திரன் தன் சக்தி குறைந்து வருவதை உணர்ந்தான், மற்ற பிடிகள் எல்லாம் இனி பயனில்லை என்று கஜேந்திரனை விட்டு,   ஓடி விட்டன, கஜேந்திரன் தன் துர்கதியான நிலையை உணர்ந்தான், அதன் உடலிலும் சோர்வு, மனதிலும் சோர்வு, ஆத்மாவிலும் சோர்வு.  மரணத்தின் வாயிலில் நின்ற அந்த வேளையில் அந்த பரம்பொருளைத் தவிர தனக்கு எந்த பற்றுக்கோடும் இல்லை என்று உணர்ந்தான். முன் ஜென்மத்தில் தான் அந்த ஆதிமூலத்தை துதித்த துதிகள் அவனுக்கு ஞாபகம் வந்தன. அவன் அவற்றை பாராயணம் செய்தான்.

அந்தத் துதியின் பொருள்யாரால் இந்தப் பிரபஞ்சம் உருவாகி, உயிரூட்டப்பட்டதோ அந்த புருஷனாகவும், பிரகிருதியாகவும் விளங்கும் பரம்பொருளுக்கு வந்தனம் செய்கின்றேன். யாருடைய வடிவாக இந்தப் பிரபஞ்சம் விளங்குகின்றதோ, யார் காரிய காரணத்திற்கப்பாற்பட்டவரோ, தானாகவே தோற்றமானவரோ, அந்தப் பரம்பொருளை சரணமடைகிறேன். யார் தேவர்களாலும், ரிஷிகளாலும் அறிய முடியாதவரோ, அவர் என்னை காத்து இரட்சிக்கட்டும். யாருக்கு பெயர், குணம், தொழில்வடிவம், முதலியவை இல்லாமல் இருப்பினும் உலகத்தின் நன்மைக்காக இவற்றைத் தன் மாயையால் காலத்திற்கேற்றவாறு அடைகிறாரோ, யார் அளவற்ற சக்தியுடைய பரம்பொருளோ, வடிவமுள்ளதும், வடிவமற்றதுமான பரபிரம்மமோ அவருக்கு என்  வந்தனம்.

பரிசுத்த மனமுடையவர்களாலும், ஞானிகளாலும் மட்டுமே அடையக்கூடியவர் எவரோ, ஞானத்தின் ஸ்வரூபமாக விளங்குபவர் எவரோ, எல்லாவற்றுக்கும் சாட்சியாகவும், பிரபுவாகவும் விளங்குபவர் எவரோ, இந்திரியங்களின் போக்குக்கு காரணமாக இருப்பவரும், அனைத்திற்கும் காரணமாக விளங்குபவரும், தனக்குக் காரணம் இல்லாதாவரும், சரணமடைந்தோரின் தளைகளைக் களைபவரும், அளவு கடந்த கருணையுள்ளம்  கொண்டவராக இருப்பவர் எவரோ அவருக்கு வந்தனம்,

யார் அனைத்துயிரினுள்ளும் அந்தர்யாமியாய் உறைகிறாரோ, ஆத்ம ஸ்வரூபமாக விளங்கும் அந்தப் பரம்பொருளை நமஸ்கரிக்கின்றேன். யாருடைய மாயா சக்தியினால் சூழப்பட்ட ஜீவன், அந்த ஆத்ம ஸ்வரூபத்தை அறிந்து கொள்ளவில்லையோ, யாருடைய ஸ்வரூபத்தை, யோகத்தில் சித்தியடைந்த யோகிகள் தம் அகக்கண்களினால் காண்கின்றனரோ, அந்தப் பரம் பொருளுக்கு வந்தனம்,

நான் மோக்ஷத்தையே விரும்புகின்றேன், மாயத்தால் சூழப்பெற்ற இந்த யானைப் பிறவியால் ஆவது ஒன்றுமில்லை, ஆகவே பரப்பிரம்ம்மும், பரமபதமுமாக விளங்குகின்ற பகவானை சரணமடைகின்றேன்.  உன்னை விட்டால் எனக்கு வேறு பற்றுக்கோடு யாருமில்லை, உன் சரணமே சரணம். ஆதிமூலமே!என்று தாமரைப் பூவை தனது தும்பிக்கையில் வைத்துக்கொண்டு அலறினான் கஜேந்திரன்.

கஜேந்திரனின் அந்த அபயக் குரல் கேட்டவுடனே தெய்வத் திருமாமலர் மங்கை தங்கு மார்பன், பன்றியாய் அன்று பார் மகள் பயலை தீர்த்த பஞ்சவர் பாகன், சரணமாகும் தான்தாளடைந்தார்க்கெல்லாம் மரணமானால் வைகுந்தம் கொடுக்கம் பிரான்,   வேத சொருபனான அஞ்சிறைப்  புள்ளேறி, கையில் சுதர்சன சக்கரத்துடன் விரைந்து வந்து சக்கராயுதத்தால் முதலையை வதைத்தார். முதலையும் சாப விமோசனம் பெற்று பகவானை சுற்றி வந்து வணங்கி தன் இருப்பிடம் சேர்ந்தான். இவ்வாறு கஜேந்திரனைக் காப்பாற்றி அவனுக்கு மோக்ஷமும் அளித்தான் அந்த பக்தவத்சலன். கஜேந்திரனும் மஞ்சள் பட்டு அணிந்து சதுர் புஜங்களுடன் சாரூப நிலையை அடைந்தான்.

மேலும் பகவான், “யார் இந்த கஜேந்திர மோக்ஷ சரிதத்தைப்  பக்தியுடன் பாராயணம் செய்கின்றார்களோ, கேட்கிறார்களோ, விடியற்காலையில் ஸ்மரிக்கிறார்களோ, அவர்களின் பிராண பிராயண காலத்தில் என்னை நினைக்கும் தெளிவான மதியை அளிக்கின்றேன்என்று அருளிவிட்டு, சங்க நாதம்  முழங்க கஜேந்திரனுடன் வைகுண்டம் அடைந்தார்.  

இந்தக் கதையைப் படித்தவுடன் தங்களுக்கு சில சந்தேகம் ஏற்பட்டிருக்கலாம் அதற்கான விடைகள் இதோ. முதலாவது அத்தனை யானை கூட்டத்தில் கஜேந்திரனை மட்டும் முதலை இழுக்க காரணம் என்ன? முற்பிறவியில் யானை பாண்டிய மன்னன் இந்திரதும்யுனாக பிறந்து மஹாவிஷ்ணு மீது மிகவும் அதீத பக்தி கொண்டு வாழ்ந்து கொண்டிருந்தான். இவன் கண்ணனெம்பெருமானுக்கு பூஜை செய்யும் போது மிகவும் ஈடுபாட்டுடன் செய்பவன்ஒரு  சமயம் அவன் பூஜை செய்து கொண்டிருந்த போது அகத்திய முனிவர் அவனைக் காணவந்தார். பூஜையில் ஈடுபட்ட மன்னன் முனிவரை வெகுநேரம் காக்க வைத்துவிட்டான். அதனால் கோபமடைந்த அகத்தியர், என்னை மதிக்காமல் மதம் கொண்டு நடந்த நீ, மதம் கொண்ட யானையாக மாறக்கடவது என்று சாபம் கொடுத்தார். மன்னன் முனிவர் தாள் படிந்து வேண்டி, அடுத்த பிறவியிலும் தான் பெருமாள்  மேல் கொண்ட பக்தி தொடர வேண்டும் என்று வேண்ட, முனிவரும்  நீ யானையாக பிறக்கும் போது சிறந்த விஷ்ணு பக்தனாய் இருப்பாய், எம்பெருமானுக்காக பூப்பறிக்க செல்லும் போது, குளத்தில் ஒரு முதலை உன் காலைக் கவ்வும், நீ ஸ்ரீமந் நாராயணனை ரக்ஷிக்க கூப்பிடும் போது அவர் வந்து முதலையையும் ஒழித்து உன் சாபத்தையும் தீர்ப்பார்  என்று  வரம் கொடுத்தார் இவ்வாறு  அந்த மஹாவிஷ்ணுவாலேயே உனக்கு மோக்ஷமும் கிட்டும் என்று சாப விமோசனமும் அளித்தார்.

இனி முதலை, முற்பிறவியில் அவன் ஹூஹூ என்னும் கந்தர்வனாக இருந்தான். பொய்கைக்குக் கால் கழுவ வருபவர்களின் காலைப் பற்றி இழுத்து விளையாடும் வழக்கத்தைக் கொண்டிருந்தான். ஒரு சமயம் தேவல முனிவரின் காலை இவ்வாறு இழுத்த போது முனிவர் அவனுக்குத் தண்ணீரில் கிடந்து தவிக்கும் முதலையாக ஆகும் சாபம் அளித்தார். அவன் தன் தவறை உணர்ந்து சாபவிமோசனம் வேண்ட மஹாவிஷ்ணுவின் சுதர்சன சக்கரம் பட்டு உனக்குச் சாபவிமோசனம் ஏற்படும் என்றார்.

கஜேந்திரன் ஏன் ஆயிரம் வருடங்கள் காத்திருந்தான் ஏன் முதலிலேயே சரணாகதி அடைந்திருக்கக் கூடாது?. மனித மனம் இவ்வாறு தான் உள்ளது. சம்சார மாயையில் மயங்கி நாம் ஏதோ நாம் தான் நம் உறவினர்களைத் தாங்குவது போல் மாயையில் உழல்கின்றோம். அவனன்றி ஒரு அணுவும் அசையாது”  என்பதை உணர்ந்து எப்போது நாம் பூரண சரணாகதி அடைகின்றோமோ அப்போதுதான் அவன் அருள் நமக்கு கிட்டும்.

பெருமாள் ஏன் ஆயிரம் வருடம் காத்திருக்க வேண்டும், உடனே வந்து காத்திருக்கக் கூடாதா? அது வரை கஜேந்திரன் தன் வலிமையின் மேலும் தனது பிடிகள் தன்னைக் காப்பாற்றும் என்ற நம்பிக்கையிலும் இருந்ததால்தான் பகவான் தன் பஞ்சாயுதங்களுடன் எப்போதும் தன் பக்தர்களைக் காப்பாற்ற தயாராக இருந்தாலும் அவன் உண்மையை உணரும் வரை காத்திருந்தார்.

ஏன் தானே வந்திருக்க வேண்டும்? சுதர்சன சக்கரத்தை அனுப்பியிருந்தாலும் பணி முடிந்திருக்குமே, அவரது சௌலப்பியத்தையும், பக்தவத்சல குணத்தையும் காட்டத்தான்ஸ்ரீஹரி, தானே கருடன் மேல் ஏறி வந்தார்.
பூர்வாசார்யர்கள் இதை வைகுண்டம் எவ்வளவு தூரம்? கூப்பிடு தூரம் தான்”,  ஆதி மூலமே என்று அழைத்த குரல் கேட்ட உடனே வந்து அவனைக் காப்பற்றினார் என்று கூறுவர். எனவே தான் பராசரபட்டர் தமது போற்றியில் தங்களது கருணையை விட கஜராஜனை காப்பாற்ற தாங்கள் வந்த  தங்களது அந்த வேகத்திற்காக தலை வணங்குகின்றேன் என்று பாடுகின்றார்.

முக்கூரார்தமது  உபன்யாசத்தின்  போது  கஜேந்திரனைக்  காக்க பெருமாள்  கொண்ட அவசரத்தை சுவைபட இவ்வாறு  கூறுவார் ! 'ஆதிமூலமே' என்ற கஜேந்திரனின்  அலறலைக்  கேட்ட  மாத்திரத்தில்வைகுண்டத்தில் பிராட்டியுடன் அளவளாவிக்  கொண்டிருந்த   பெருமாள்  அவசர  அவசரமாகக்  கிளம்ப  யத்தனித்த போதுஅவரது  உத்தரீயம்  (மேல் துணி)  தாயாரின் கையில் சிக்கிக்  கொள்ள, அதையும் விடுத்து  பெருமாளின்  எண்ணம்  புரிந்த  கருடன் அவரை விட வேகமாக பறந்து  வந்து  அவர்  முன்  நிற்க, சக்ராயுதமானதுபெருமாள் கருடன்  மேலேறி பயணத்தைத்  தொடங்கி  விட்டபடியால்தானாகவே  பறந்து  வந்து  அவரது  வலது திருக்கரத்தில்   சரியாக  அமர்ந்து  கொள்ள, ரத்ன பாதுகைகளை அணியாமல்,   பகவான்  அதி விரைவில்  சென்றுகஜேந்திரனுக்கு  அபயம்  அளித்ததாக  அழகாக விளக்கம் கூறுவார் .

தன்னை  வேண்டி அழைத்த  அடியவரைக்  காக்க  விரைந்த  பெருமாளுக்குக்  கருடனின் உதவியோ, சக்கரத்தின் தேவையோ தோன்றவே இல்லை !  அபயம் அளிப்பது ஒன்றே குறி ! அப்பேர்ப்பட்ட கருணாமூர்த்தி எம்பெருமான்  ஆவார் ! கீழே விழுந்து அடிபட்டு அழும் குழந்தையை, கையில் ஏந்தி  ஆசுவாசப்படுத்தி ஆறுதல் சொல்ல எப்படி ஒரு  தாய் அவசரமாக ஓடி வருவாளோஅது போலவேஎம்பெருமான்  ஓடோடி  வந்துதன் அடியாரின் துயர் தீர்த்து அபயம் அளிப்பார் என்பது திண்ணம். வேண்டியதெல்லாம் அகங்காரம் மமகாரம்  நீங்கி  பூரண சரணாகதி ஒன்று தான், நான், எனது என்றிருக்கும் வரையில் அவர் அருள் கிட்டாது. நீயே சரணம் என்று சரணமடைவதே உய்ய வழி .
இவையனைத்திலும் நாம் கற்கும் பாடம் கண்னன் கீதையிலே கூறியபடி
ஸர்வ தர்மாந் பரித்யஜ்ய மாம் ஏகம் சரணம் வ்ரஜ
அஹம் த்வா ஸர்வபாபேப்யோ மோக்ஷயிஷ்யாமி மாசுச:  ||
அதாவது மோட்சத்திற்கு உதவும் மற்ற எல்லா தர்மங்களையும் விடுத்து என்னை மட்டுமே உபாயமாகப் பற்றினால் உன்னைச் சகல பாவங்களிலும் விடுத்து உன்னை கடைத்தேற்றுவேன் என்று சரம ஸ்லோகத்தில்   அருளியபடி பூரணசரணாகதி ஒன்றே நாம் உய்யும் வழி. இனி இந்த கஜேந்திர மோக்ஷத்தை ஆழ்வார்கள் எப்படிப் பாடியுள்ளனர் என்று பார்ப்போமா?

தாழைத் தண்ணாம்பல் தடம் பெரும் பொய்கை வாய்
வாழு முதலை வலைப்பட்டு வாதிப்புண்
வேழந்துயர்  கெட விண்ணோர் பெருமானாய்
ஆழிப் பணி கொண்டானாலின்று முற்றும்
அதற்கருள் செய்தானாலின்று முற்றும். (பெரி. தி 3-28)
பொருள்: யசோதையே! இக்கண்ணன் கரையில் தாழை மடல்களையும், நீரில் குளிர்ந்த ஆம்பல்களையுமுடைய பெரிய குளத்திலே வசிக்கின்ற முதலையாகிய  வலையிலே அகப்பட்டுக்கொண்டு துன்பப்பட்ட கஜேந்திராழ்வானது துன்பம் தீர, தேவர்களுக்கு தலைவன் என்று தோன்ற கருடன் மேல் வந்து சக்ராயுதத்தை ஏவி முதலையைக் கொன்று அந்த யானைக்குக் கருணை செய்தான். ஆனால் (தன் அருகிலேயே நிற்கும் நாங்கள் வருந்தும்படி) எங்களிடம் கருணை காட்டாமல் இருக்கின்றான். இவனால் நாங்கள் அழிவோம்.

என்று கோபியர்கள் யசோதையிடம் சென்று கண்ணன் மேல் குற்றம் கூறுவது போல் உண்மையில் அவரது பெருமையைப் பாடுகின்றார் பெரியாழ்வார்.
பெண்ணுலாம் சடையினானும் பிரமனு முன்னைக் காண்பான்
எண்ணிலா வூழியூழி தவம் செய்தார் வெள்கிநிற்ப
விண்ணுளார் வியப்ப வந்து ஆனைக் கருளையீந்த
கண்ணறா உன்னையென்னோ? களை கணாக் கருதுமாறே ( திரு.மா44)
பொருள்: கங்கை இருக்கும் சடையை உடைய சிவனும், பிரம்மாவும் உன்னை காண்பதற்காக பல ஊழி காலமாகத் தவம் செய்தவர்கள் காண முடியாமையால் வெட்கி தலை கவிழ்ந்திருக்கின்றனர். அக்காலத்திலே கஜேந்திர ஆழ்வானுக்காக மடுவின் கரைக்கு வந்து நித்ய சூரிகளும் ஆச்சரியப்படும்படியாகக் கருணை செய்து அருளிய உன்னை எல்லாருக்கும் தஞ்சமாக நினைப்பது எவ்வாறுஎன்று பிரமனுக்கும் சிவனுக்கும் கிடைக்காத பாக்கியத்தை யானைக்கு அருளியதை போற்றுகின்றார் தொண்டரடிப் பொடியாழ்வார்.

ஆழ்வார்கள் இந்த கஜேந்திர மோக்ஷத்தை  பலவிதமாக எவ்வாறு கொண்டாடியுள்ளார்கள் என்று காணலாமாவேழந்துயர் கொடுத்த விண்ணோர் பெருமான், ஆனைக்கருள் புரிந்த பிரான், பருந்தாட் களிறுக்கருள் செய்த பரமன், விண்ணூளார் வியப்ப வந்து ஆணைக்கருளையீந்த கண்ணன்ஆனையின் அருந்துயர் தீர்த்த அரங்கத்தம்மான், காரானையிடர் கடிந்த கற்பகம், திண் கைம்மா துயர் தீர்த்தவன், தூம்புடைத்திண் கை வன் தாள் களிற்றின் துயர் தீர்த்தவன், வாரணம் கொள் இடர் கடிந்த மால், யானை படிதுயரங் காத்தளித்த செங்கண்மால், மதமொழுகு வாரணமுய்யவளித்த எம் அழகனார், கைம்மான மதயானை இடர்தீர்த்த கருமுகில், சூழி மால் யானைத்துயர் கெடுத்த தூயவன், என்று பலவாறு ஆழ்வார்கள் அனைவரும் பெருமாளின் எளிமையை பலவாறு மங்களாசாசனம் செய்துள்ளனர்


முதலை (தனது சாப விமோசனத்திற்காக) யானையைப் பிடித்தது. யானையோ (தனது சாப விமோசனத்திற்காக) ஆதி மூலத்தை, எல்லாவற்றுக்கும் முதலை, ஸ்ரீமந்நாராயணனை பற்றியது. ஆசார்யன் கிருபையினால் பற்றற்றான் பற்றினைப் பற்றினால் பற்று விட்டுப் பரமபதம் அடைவோம் என்பதில் ஐயமென்ன”.  இதை உணர்ந்து கருட சேவையைச் சேவித்தால் வைகுண்டம்தானே.

Thursday, April 28, 2016

திருமலை பௌர்ணமி கருடசேவை

நானேயோ தவம் செய்தேன் 

இராஜ கோபுரம் 

திருமலையில் பிரம்மோற்சவ கருட சேவை மிகவும் பிரசித்தம். அன்று மூலவர் அணியும் லக்ஷ்மி ஹாரம், மகரகண்டி, ஆண்டாள் சூடிக்களைந்த மாலை  அணிந்து மூலவராகவே ஸ்ரீநிவாசப் பெருமாள் கருடசேவை தந்தருளுகின்றார். ஆகவே அன்றைய தினம் லட்சக்கணக்கில் பக்தர்கள் திருமலையில் குழுமுகின்றனர். அன்றைய தினம் பெருமாளை சேவிக்க முடிந்தால் அதுவே மிகுந்த பாக்கியம். 


மத கஜங்கள் முன் செல்கின்றன

கோலாட்டக்குழுவினர் பலர் 


கருட சேவை ஆரம்பம் 

அடுத்து  இரதசப்தமி அன்று பெருமாள் ஏழு வாகனத்தில் அதிகாலையிகிருந்து இரவு வரை  சேவை தந்து அருளுகின்றார் என்பதால் அன்றும் பக்தர் கூட்டம் அதிகமாக இருக்கும். மேலும் கருட சேவை  சமயத்தில் திருமலையில் இருந்தால்தான் பெருமாளை கருடனில் சேவிக்க முடியும். 


இராஜகோபுரத்திற்கு எதிரே பெருமாள் 



தெற்கு மாட வீதியில் 


இன்றும் பெருமாள் லக்ஷ்மிஹாரத்துடன் சேவை சாதிக்கின்றார். 


பின்னழகு 







இப்போது சில வருடங்களாக ஒவ்வொரு பௌர்ணமியன்றும் கருடசேவை தந்தருளுகின்றார் திருமலையப்பன். அடியேன் ஒரு பௌர்ணமியன்று திருமலையில் தங்கும் பாக்கியம் கிட்டியது. கூட்டம் அதிகமில்லை என்பதால் மலையப்பசுவாமி அலங்கார மண்டபத்தில் இருந்து எழுந்தருளி  திரும்பி வரும் வரை பெருமாளுடன் வந்து அவரது கருடசேவையை முழுதுமாக சேவிக்கும் பாக்கியமும் கிட்டியது. அப்போது எடுத்த படங்கள் இப்பதிவில் இடம் பெறுகின்றன. 

கிழக்கு மாடவீதியில் பெருமாள்




 சுவாமி புஷ்கரிணி 

சுவாமிக்கு அடுக்கு தீபாராதனை

 கிழக்கு மாட வீதியில் சுவாமி புஷ்கரிணி கரைக்கு  வந்தவுடன் பெருமாள்  புஷ்கரிணி நோக்கி திரும்பி நிற்கிறார். ஏக காலத்தில் பெருமாளுக்கும் புஷ்கரிணிக்கும் தீபாராதணை நடைபெறுகின்றது. 


பக்தர்களுக்கு சேவை சாதித்தவாறே பின்புறமாக மலையப்பசுவாமி
 அலங்கார மண்டபத்திற்கு எழுந்தருளுகின்றார்.



கருட சேவை நிறைவாக திரையிடப்படுகின்றது. 



தூரத்தில் இருந்துதான் புகைப்படம் எடுக்க முடிந்தது என்பதால் படங்கள் தெளிவாக இல்லை மன்னிக்கவும். 


"நானேயோ தவம் செய்தேன்"  என்றபடி ஸ்ரீவாரி சேவையில் ஒரு வாரம் திருமலையிலேயே  பெருமாளின் திருவடியிலேயே  தங்கி பல்வேறு சேவைகளையும் சேவித்து  திருவேங்கடவனின் தரிசனமும் பல்முறை பெற்ற ஒரு ஆனந்த,  அற்புத கிடைத்தற்கரிய  வாய்ப்பின் போது இந்த பௌர்ணமி கருட சேவையை முழுதுமாக சேவிக்கும் பாக்கியம் கிட்டியது.