Tuesday, April 22, 2014

திருக்குளந்தை மாயகூத்தர் கருட சேவை

                               ஆழ்வார் திருநகரி ஒன்பது கருட சேவை -11


பெருங்குளம் என்று தற்போது அழைக்கப்படும் இந்த திருக்குளந்தை திருத்தலம், திருநெல்வேலியிலிருந்து இருந்து திருச்செந்தூர் சாலையில் திருநெல்வேலியிலிருந்து சுமார் 38 கி.மீ தூரத்திலும், திருப்புளிங்குடி தலத்தில் இருந்து 5 கி.மீ தூரத்திலும், ஸ்ரீவைகுண்டம் தலத்தில் இருந்து 7 கி.மீ தூரத்திலும் அமைந்துள்ளது.

பெருமாள்: ஸ்ரீநிவாசன்(வேங்கடவாணன்), நின்ற கோலம், கிழக்கு நோக்கிய திருமுக மண்டலம்.
உற்சவர் : மாயக்கூத்தன் (சோர நாட்டியன்)
தாயார் : குளந்தைவல்லி(கமலா தேவி), அலர்மேல்மங்கை. (தனி சன்னதி இல்லை.)
விமானம்; ஆனந்த நிலையம்.
தீர்த்தம்: பெருங்குளம்.
பிரத்யட்சம்: பிரகஸ்பதி.
ஆகமம் : வைகானஸம் – சம்பிரதாயம்: தென்கலை.
மங்களாசாசனம்: நம்மாழ்வார் ஓர்  (8ம் பத்து -2ம் திருவாய் மொழி) பாடலால் மங்களாசாசனம் செய்துள்ளார். 
கிரகம்: சனி ஸ்தலம்
திவ்ய தேசங்களுள் 86வது நவதிருப்பதிகளில் 7வது.
சிறப்பு: கமலாவதியை மார்பில் ஏற்றது. கருடன் (ஆடல்பறவை) ஏக ஆசனத்தில் உற்சவருடன் எழுந்தருளியுள்ளார்.



கமலாவதியை மார்பில் ஏற்றது:  துலைவில்லி மங்கலத்திற்கு வடகிழக்கில் உள்ள தாடக வனம் என்ற இத்தலத்தில் விப்ர குலத்தைச் சார்ந்த வேதசாரன் என்ற அந்தணன் தன் மனைவி குமுதவல்லியுடன் மகப்பேறு வேண்டி பகவானை வழிபட்டு வந்தான். பெருமாளின் அனுகிரகத்தினால் அவர்களுக்கு அலர்மேல் மங்கை அம்சமாக ஒரு பெண் மகவு  பிறந்தது. “அக்குழந்தைக்கு “கமலாதேவி” என்று பெயரிட்டு சீரும் சிறப்புமாக வளர்த்து வந்தனர். அவளும்  ஆண்டாளைப் போல “மானிடர்க்கென்று பேச்சுப்படில் வாழகில்லேன் கண்டாய் மன்மதனே”, என்று வைராக்கியத்துடன்  பெருமாளையே மணப்பேன் என்று, பெற்றோர் உற்றார், உறவினர், கூறியும் கேளாமல் வனம் சென்று அருந்தவம் இயற்றினாள். தயாபரன் தவம் செய்யும் தையல் முன் தோன்றி இவ்விளம் வயதில் இவ்வாறு கடும் தவம் இயற்றக் காரணம் யாது? என்று வினவ, அவளும் "ஸ்ரீமந் நாராயணனையே மணாளனாக அடைய" என்று மறு மொழி கூறினாள். பகவானும் தம் கௌஸ்துபமணியோடு அவளை ஆலிங்கனம் செய்து கொண்டார். தேவர்கள் பூமாரி பொலிந்தனர். பாலிகை தவம் செய்த இடமாதலால், 'பாலிகைவனம்' என்ற பெயரடைய வேண்டும் என்று தேவர்கள் வேண்டினார்கள். வேதசாரனும் தன் செல்லப்புதல்வியை பெருமாள் தனது மார்பில் தாங்கியிருப்பதைக் கண்டு மகிழ்ந்து பெருமாளை பூசித்து வந்தான்.



மாயக்கூத்தாடியது (சோர நாட்டியன்): ஒரு நாள் வேதசாரனின் மனைவி குமுதவல்லி குளத்திற்க்கு நீராட சென்ற போது அச்மநாரன் என்ற அவுணன் அவளை அபகரித்துச் சென்று இமயமலையில் ஒரு குகையில் சிறை வைத்தான். வேதசாரன் பூச நட்சத்திரத்துடன் கூடிய ஒரு தை பௌர்ணமியன்று  கலச தீர்த்தத்தினால் பெருமாளுக்கு திருமஞ்சனம் செய்வித்து, பெருமாளே! “அடியேன் மனையாளை ஒரு அவுணன் அபகரித்துச் சென்று விட்டான், மனைவி இல்லாதவன் ஒரு கர்மத்திற்கும் பாத்திரவானல்லன் எனவே அருள் புரிய வேண்டும் என்று வேண்டினான்.

உடனே பகவான் கருடவாகனத்தில் ஆரோகணித்து இமயமலை சென்று குமுதவல்லியை மீட்டு வேதசாரனுக்கு அருள் புரிந்தார். இதை அறிந்த அச்மநாரன் பெருமாளுடன் போர் புரிய பாலிகாவனம்  வந்தான். பெருமாள் அவனை காலைப் பிடித்து தரையில் மோதி அவனது தலையில் நின்று நர்த்தனம் புரிந்து அவனை வதம் செய்தார். தேவர்கள் மகிழ்ந்து கங்கா தீர்த்தத்தினால் திருமஞ்சனம் செய்தனர். சோரன் மேல் நாட்டியம் செய்தபடியால்  பகவானுக்கு “சோர நாட்டியன்” அதாவது "மாயக்கூத்தன்" என்ற திருநாமம் ஏற்பட்டது.



இங்கிருந்து கருடாழ்வார் மீது பெருமாள் புறப்பட்டு இமயம் சென்றதால் கருடன் இங்கு உற்சவராகவும் எழுந்தருளியுள்ளார். மேலும் உதவி புரிந்த கருடாழ்வாருக்கு   உற்சவர் மற்றும் உபயநாச்சியர்களுடன் ஏக ஆசனம் அளித்துள்ளார் பெருமாள்.  கருடன் இங்கே சிறகுகளை உயரே தூக்கிய வண்ணம் பறக்கும் கோலத்தில் ஆடல் பறவையாகக் சேவை  சாதிக்கின்றார். இத்திருக்கோயிலின் மதிலின் ஈசானிய மூலையில் வீற்றிருக்கும் கருடனுக்குப் பெருமாளுக்குச் சாற்றிய பூச்சட்டையை மறு நாள் சாற்றுவது வழக்கம். இதன் பிறகே பக்தர்களுக்குப் பிரசாதமாக விநியோகம் செய்யப்படுகின்றது. இத்தலத்தைப் மங்களாசாசனம்ச் செய்த நம்மாழ்வார்     “ ஆடல் பறவை” என்று  கருடனையும் மங்களாசாசனம் செய்துள்ளார். இதோ பாடல்

கூடச்சென்றேன் இனி என் கொடுக்கேன் கோள்வளை நெஞ்சத் தொடக்க மெல்லாம்
பாடற்றொழிய இழந்து வைகல் பல்வளை யார்முன் பரிசழிந்தேன்
மாடக்கொடிமதின் தென்குளந்தை வண்குட பால் நின்ற மாயக்கூத்தன்
ஆடல் பறவை உயர்த்த வெல்லோர் ஆழிவலவனை ஆதரித்தே!!




திருக்குளந்தை பெரிய அளவிலான குளங்கள், வளம் மிக்க வயல்கள் சூழ்ந்த பசுமையான பூமியாகும். இங்கு, மூலவர் ஸ்ரீனிவாச பெருமாள் நின்ற கோலத்தில் நெடியோனாக சதுர்புஜராய் சங்கு  சக்கரங்களுடன் சேவை சாதிக்கின்றார். குமுதவதியை மீட்டுவர எழுந்து சென்ற பெருமாள் அதன் பின்னர் அமராமல் பக்தர்களைக் காக்க வேண்டி உடனே செல்ல வசதியாக நின்ற திருக்கோலத்தில் சேவை சாதிப்பதாக ஐதீகம். பொதுவாக வைணவத் தலங்களில் பெருமாளின் திருவடி தரிசனம் பெரிய பாக்கியமாகக் கருதப் படுகிறது. அதன் காரணமாகவே, இத்தல பெருமாளின் திருவடியை நன்றாக தரிசிக்க அர்த்த மண்டபத்திற்கு வெளியே பெரிய கண்ணாடி ஒன்று உயரத்தில் வைக்கப்பட்டுள்ளது புதுமையான ஒன்றாகும்.   

இத்திருத்தலத்திலும் மற்ற பாண்டிய நாட்டித் திவ்ய தேசங்களைப் போலவே  கற்சிற்பங்களின் பேரழகு கண்ணையும் மனதையும்  கவர்கிறது. பல தூண்கள் சிற்பங்களின் அழகால் நிறைந்திருந்தாலும் குறிப்பாக ஒரு தூணில் குதிரையும் யாழியும் கலந்த ஒரு மிருகத்தை வாகனமாகக் கொண்டு கல்கி அவதாரம் வாளுடன் தோற்றமளிப்பது தனித்துவமாக உள்ளது.

“மாயக்கூத்தா! வாமனா! வினையேன் கண்ணா! கண்கைகால்
தூய செய்ய மலர்களாச் சோதிச் செவ்வாய் முகிழ்தா
சாயல் சாமத்திருமேனி தன் பாசடையா தாமரை நீள்
வாசத்தடம்போல் வருவானே! ஒருநாள் காண வாராயே
!” (8-5-1)


மாயக் கூத்தன் என அழைக்கின்றார் நம்மாழ்வார்  கண்ணனை. மாயக் கூத்தனான அந்தக் கண்ணனைக் காணவேண்டும், அவன் வடிவழகை இரு கண்ணாரக் காணவேண்டும் என்ற ஆவல் மீதூற அவனை அழைக்கின்றார். மாயக் கூத்தா, வாமனா, உன் கண்களும் கைகளும், கால்களும் மலர்களால் ஆனவையோ, உன் திருவாய் ஆம்பல் மலரின் அரும்போ? உன் கரிய திருமேனியைப் பார்த்தால் பச்சை இலை போல் உள்ளதே? இவைகள் அனைத்தையும் உன்னிடத்தில் வைத்திருக்கும் நீ நான் தாகம் தீர்த்துக் கொள்ள அமைந்த திருக்குளம்போல் உள்ளாய்! உன்னை நான் என் கண்ணாரக் காண நீ ஒரு நாள் நேரில் வரமாட்டாயா?” என்றும் அழைக்கின்றார் நம்மாழ்வார்.


இத்தலத்திற்கும் ஸ்ரீவில்லிபுத்தூருக்கும் நிறைய ஒற்றுமைகள் உள்ளன. அங்கு ஆண்டாள் திருவவதாரம் செய்து எம்பெருமானுக்கே  மாலையிடுவேன் என்று  மணங்கொண்டாள். அதே போல இங்கு கமலாதேவி அவதரித்து எம்பெருமானை மணங்கொண்டாள். அங்கும் ஆண்டாள் அரங்கமன்னார் கருடன் ஏக சிம்மாசனம். இங்கும் மாயக்கூத்தர் உபய நாச்சியார்கள் கருடன் ஏக சிம்மாசனம். 

இனி வரும் பதிவில் தென்திருப்பேரையின் மகரநெடுங்குழைக்காதரின் கருட சேவையைக் காணலாம் அன்பர்களே.