Tuesday, May 20, 2014

திருக்கோளூர் நிஷேபவித்தன் கருட சேவை

                                ஆழ்வார் திருநகரி ஒன்பது கருட சேவை -13




வைத்தமாநிதிப் பெருமாள்

உண்ணும் சோறு பருகுநீர் தின்னும் வெற்றிலையெல்லாம் கண்ணன் என்று நம்மாழ்வார் மங்களாசாசனம் செய்த வைத்தமாநிதியாம் மசுசூதனின் கருடசேவையை இப்பதிவில் காணலாம். மதுரகவியாழ்வாரின் அவதாரஸ்தலமான திருக்கோளூர் திருநெல்வேலியில் இருந்து சுமார்  36 கி. மீ   தொலைவிலும், தூத்துக்குடியில் இருந்து சுமார் 34 கி. மீ  தொலைவிலும், மற்றொரு நவதிருப்பதியான தென்திருப்பேரையில் இருந்து ஆழ்வார்திருநகரி செல்லும் சாலையில் 3 கி.மீ  வந்து பின்னர் கிளைச் சாலையில் சுமார் 2 கி.மீ  தூரத்தில் அமைந்துள்ளது.

மூலவர்:  வைத்தமாநிதிப் பெருமாள். மரக்காலை தலைக்கு வைத்துக்கொண்டு நவநிதிகளின் மேல் இடக்கையால் நிதி எங்கே என்று மை போட்டு பார்க்கும்  புஜங்க சயனம்,  கிழக்கே திருமுக மண்டலம்.
உற்சவர்: நிஷேபவித்தன்
தாயார்: கோளூர்வல்லி நாச்சியார், குமுதவல்லி நாச்சியார் தனி தனி சன்னதி.
விமானம்: ஸ்ரீஹர விமானம்.
தீர்த்தம்:  குபேர தீர்த்தம்.
பிரத்யட்சம்: குபேரன், மதுரகவி.
ஆகமம் : வைகானஸம் – சம்பிரதாயம்: தென்கலை.
மங்களாசாசனம்: நம்மாழ்வார் ஒரு பதிகம் (6ம் பத்து -7ம் திருவாய் மொழி).. 
கிரகம்: செவ்வாய் ஸ்தலம்.
சிறப்பு: மதுரகவியாழ்வாரின் அவதார ஸ்தலம்.

கொல்லை என்பர் கொலோ? – குணம் மிக்கனள் என்பர் கொலோ?
சில்லை வாய்ப்பெண்கள், அயல் சேரி உள்ளாரும் எல்லே!
செல்வம் மல்கி அவன் கிடந்த திருக்கோளூர்க்கே
இடை நுடங்க இளமான் செல்ல மேவினளே!  (6-7-4)

தோழியே! செல்வம் மிகும் படி அவர் சயனத்திருக்கின்ற திருக்கோலூர் என்ற திருத்தலத்திற்கு, என் இளமான் மெல்லிய இடையானது அசையும்படியாகச் செல்வதற்கு ஒருப்பட்டாள்; இதனால் பலவாறு பேசுகின்ற வாய்களையுடைய பெண்களும், அயல் ஊரிலுள்ள பெண்களும்,வரம்பு அழிந்த செயலை உடையவள் என்று என் மகளை கூறுவார்களோ? குணத்தால் மேம்பட்டவள் என்று கூறுவார்களோ? என்று ஆழ்வார் இருப்பு வளர்ச்சி இன்பம் இவை எல்லாம் கண்ணனென்று உணர்ந்து  திருக்கோலூரிலீடுபட்டதை,  தலைவன் நகர் நோக்கி சென்ற தலை மகளைப் பற்றி தாய்  இரங்கும் பாசுரத்தாலே அருளி செய்துள்ளார்.



தல வரலாறு: வடக்கு திசையின் திக்பாலகனும், செல்வத்திற்கு அதிபதியுமான குபேரன் அளகாபுரியில் வசித்து வந்தான். அவன் ஒரு சிறந்த சிவபக்தன். ஒரு சமயம் அவன்  சிவபெருமானை வழிபட திருக்கயிலாயம்  சென்றான். அங்கே உமையவள் சிவபெருமானுடன் இருக்க குபேரன் அன்னையை கெட்ட எண்ணத்துடன் பார்க்க, கோபம் கொண்ட மலைமகள் பார்வதி, குபேரனை சபித்தாள்.

எனவே அவனது ஒரு கண் குருடாயிற்று, அவன் உருவமும் விகாரமாயிற்று. சங்கம், பத்மம் முதலான  நவ நிதிகளும் அவனை விட்டு விலகியது. நவநிதிகளும் தவமிருந்து தாமிரபரணியின் தென் கரையில் உள்ள திருக்கோளூர் பெருமாளை சரண் அடைய பன்னகாசனும்  அவற்றுக்கு அடைக்கலம் அளித்தார். வைத்தமாநிதி என்ற திருநாமத்துடன் நவநிதிகளின் மேல் சயனங்கொண்டு அவற்றை காப்பாற்றியருளினார். 





தனபதி வைத்தமாநிதியை அடைந்து நிதி பெறுதல்: தன் தவறை உணர்ந்த குபேரன் சிவபெருமானை அடிபணிய அவரும் தன்னால் ஒன்றும் செய்யமுடியாது மலைமகளையே சரண் அடை என்று கூறினார். குபேரன் பார்வதியை அடி பணிய அவரும்; வியாச வம்சத்தில் வந்த தர்மகுப்தன் என்பவன் 10  குழந்தைகளுடன் தரித்திரனாகி மிகவும் கஷ்டப்பட, பரத்வாஜ முனிவரை அடிபணிந்தான். அவரும் தனது தவ வலிமையினால் தர்மகுப்தனது முன் ஜென்ம பாவங்களை அறிந்து கொண்டார். அதனை தர்மகுப்தனிடம், "நீ உனது முற்பிறவியில் அந்தணராகப் பிறந்து பெரும் செல்வந்தனாக வாழ்ந்தாய், அந்த சமயத்தில் அரசன் வந்து கேட்ட போது, அளவுக்கு மிஞ்சிய செல்வம் உன்னிடம் இருந்த போதும், அதனை மறைத்து உன்னிடம் எவ்வளவு செல்வம் உள்ளது என்பதை மறைத்து பொய் கூறினாய். உன்னுடைய செல்வத்தை நல்ல விதமாக யாருக்கும் உதவி செய்யும் நோக்கில் பயன்படுத்தாமல், பூட்டி வைத்து அழகு பார்த்தாய். அந்த செல்வம் உண்மையிலேயே கஷ்டப் படுகிறவர்களுக்குப் பயன்படாமல், அந்த செல்வங்கள் கள்வர்கள் கையில் சிக்கியது. அந்த வேதனையில் மனம் பாதிக்கப் பட்டு நீ உயிரிழந்தாய்.




முன் காலத்தில் அதர்மத்தினால் தர்மம் வெல்லப்பட்டு இந்த நிதி வனத்திற்கு வந்து எம்பெருமானை சரண் அடைந்தது. மற்ற இடங்களில் அதர்மம் தலை விரித்தாடியது. இதனால் தேவர்கள் அச்சம் கொண்டு தர்மத்தைத் தேடி நிதிவனம் வந்தனர்.  தர்மம் இங்கிருப்பதை அறிந்த அதர்மம் நிதிவனம் வந்து தர்மத்தோடு யுத்தம் செய்து தோற்று ஒடிவிட்டது. இதனால் இத்தலத்திற்கு ’அதர்மபிசுனம்’ என்ற பெயர் ஏற்பட்ட,  தாமிரபரணியின் தென் கரையில், உள்ள திருக்கோளூரில் குபேரனது நவநிதிகளும் இருக்கின்றன. அங்கு சென்று வைத்தமாநிதி பெருமாளை வழிபட்டால் இழந்த செல்வத்தினைப் பெறலாம்" என்று கூறினார். தர்மகுப்தனும் அவ்வாறே திருக்கோளூர் வந்து பெருமாளை வணங்கி செல்வம் பெற்றான். இந்தக் கதையினைக் குபேரனிடம் பார்வதி தேவி சொல்லி "நீயும் அத்தலம் சென்று பெருமாளை வேண்ட உன் செல்வம் திரும்பக் கிடைக்கும்" என்றாள் அன்னை பார்வதி.




 குபேரனும் திருக்கோளூர் வந்து வைத்தமாநிதியை வந்து அனந்தசயனனை  அடிபணிந்தான். பெருமாளும் இயக்கர் தலைவனே! செல்வம் யாவையும்  இப்பொழுது உனக்கு தரமுடியாது. அதி ஒரு பாகம் தருகிறேன் பெற்றுக்கொள் என்ரார்.  தான் இழந்த நிதியில் ஒரு பகுதியை, மாசி மாத சுக்லபட்ச துவாதசியில் பெருமாளிடம் இருந்து பெற்றான். திரும்ப பெற்ற செல்வங்களை ஓரிடத்தில் நிலையாக நில்லாமல் ஓடிக்கொண்டே இருக்கும் தன்மையுடன் லக்ஷ்மி தேவிக்கு கொடுத்தான்.

இத்தலத்தில் பெருமாள் செல்வம் அளந்ததால், மரக்காலைத் தலைக்கு வைத்து படுத்திருக்கிறார். மரக்காலைத் தலைக்கு வைத்து, கையில் அஞ்சனம், மை தடவி நிதி எங்குள்ளது என பார்த்துக் கொண்டிருப்பதாகக் கூறப்படுகிறது. மாசி மாத சுக்லபட்ச துவாதசியில் நிதி தீர்த்தத்தில் நீராடி வைத்தமாநிதியை வழிபடுபவர் செல்வம் பெற்று அச்சுதன அருளுக்கு ஆளாவர்.







திருக்கோளூர் பெண்பிள்ளை இரகசியம்: இராமாநுஜருக்கு திருக்கோளூரில் இருக்கும் வைத்தமாநிதிப் பெருமாள் மீது பெரும்பற்றி இருந்தது. பராங்குச நாயகி அனுபவித்த இறைவனை தானும் அனுபவிக்கும் பொருட்டு நம்மாழ்வாரை மனதில் எண்ணிக்கொண்டே அவர் அருளிய

உண்ணுஞ்சோறுபருகுநீர் தின்னும்வெற்றிலையுமெல்லாம்
கண்ணன் எம்பெருமானென்றென்றே கண்கள்நீர்மல்கி
மண்ணிணுளவன் சீர் வளம்மிக்கவனூர்வினவி
திண்ணம் என்னிளமான்புகுமூர் திருக்கோளூரே!    என்ற பாசுரத்தை இசைத்தவாறே சென்று கொண்டிருந்தார். அப்போது அவர் எதிரே ஓர் வைணவப் பெண் எதிர்ப்பட்டு ஊரிலிருந்து வெளியேறி வேற்றூருக்கு பிரயாணப்பட்டுக் கொண்டிருந்தாள்.  இராமாநுஜருக்கு வியப்பு அதிகமாயிற்று. அவர் அந்தப் பெண்ணிடம்,  “ எனக்கு திருக்கோளூர் புகும் ஊராகி இருக்க, உனக்கு வெளியேறும் ஊராக ஆகிவிட்டதன் காரணம் என்ன”?  என்று வினவினார். அந்தப்பெண்ணும், “தேவகி, யசோதை, மண்டோதரி, த்ரிசடை, ஆண்டாள், அனுசுயா, திரௌபதி போன்ற எண்பத்தொரு வைணவப் பெரியோர்களின் வாழ்க்கையில் அவர்கள் செய்த நல்ல காரியம் செய்யும் வாய்ப்புக் கிடைக்கப் பெறாதவளாகிவிட்டேன்”    என வருந்தினாள். மேலும் அப்பெண் இராமாநுஜரிடம் சுவாமி முயற்புழுக்கை வரப்பில் இருந்தால் என்ன, வயலில் இருந்தால் என்ன?  அதைப்போல் ஞானமற்ற நான் எங்கிருந்தால் என்ன? எனக் கூறினாள்.

திருக்கோளூர் பெண் பிள்ளையின் அறிவுத்திறன் கண்டு வியந்த இராமானுஜர், எம்பெருமானின் திருவருள் வாய்க்கப்பெற்ற அப்பெண்ணை அழைத்துக் கொண்டு திருக்கோளூர் சென்று வைத்தமாநிதியை கண்டு மகிழ்ந்து, அப்பெண்ணின் இல்லத்தில் விருந்துண்டு மகிழ்ந்தார்.



மதுரகவி ஆழ்வார் அவதரித்த தலம் இந்த திருக்கோளூர் தலம் என்பது கூடுதல் சிறப்பாகும். இங்கு வசித்த  விஷ்ணுநேசர்  என்பவருக்கு மகனாகப் பிறந்தவர்தான் மதுரகவி ஆழ்வார்.. மதுரகவி ஆழ்வாரைப் பற்றி சொல்லும் போது கேள்விப்படும்போது, குரு பக்தி என்னும் மேலான விஷயம் ஒருவரை வாழ்வில் எத்தனை உயரத்திற்கு கொண்டு செல்கிறது என்பதை உணர்த்தும் வண்ணம் உள்ளது. 80 வயதான மதுரகவி, தமது வடதேச பிரயாணத்தின்போது தன் வாழ்வில் தனக்கு ஒரு குரு கிடைத்தால்தான் உய்வடையலாம் என்று உணர்ந்து, பின்னர் தெற்கு நோக்கிப் பயணித்து, 16 வயதே நிரம்பிய நம்மாழ்வாரைக் குருவாக ஏற்றுக்கொண்டார். தனது ஆச்சார்யனின் அருளுக்குப் பாத்திரமாகி, அவரை மட்டுமே பாடியவர், பெருமாளைப் பற்றி ஒரு பாசுரம் கூடப் பாடவில்லை. தேவுமற்றறியேன் குருகூர் நம்பி பாவின்னிசை பாடித்திரிவனே” தனது ஆச்சாரியனைத் தவிர வேறு தெய்வத்தையும் அறிய மாட்டேன் என்று பாடுகின்றார்.   தனக்குக் கடவுளை உணர்த்திய குருவைப் பாடினால் அவரே தன்னை மேன்மை அடையச் செய்வார் என்ற மாறாத நம்பிக்கையை அவர் மேல் கொண்டு 11 பாசுரங்கள் மட்டும் தன் குருவின் மேல் பாடி பரமனின் பாதங்களில் சரணடைந்தார். குருவின் மூலமாகவே, ஆழ்வார் என்ற பெரும் பேறு அவருக்குக் கிடைத்தது. இந்த மதுரகவி ஆழ்வாரின் உயர்ந்த செயல், நம் அனைவருக்கும் ஆச்சாரியனின் பெருமையை உணர்த்தும் என்பதில் துளியும் ஐயமில்லை.




நிஷேபவித்தனும் மதுரகவியாழ்வாரும்

ஒன்பது கருட சேவையின் போது மதுரகவியாழ்வாரும் நிஷேபவித்த பெருமாளுடன் ஆழ்வார் திருநகரிக்கு எழுந்தருளுகின்றார். மங்களாசாசனத்தின் போது நம்மாழ்வாரை சுற்றி வந்து மங்களாசாசனம்  செய்கின்றார். இரவு கருட சேவையின் போது பரங்கி நாற்காலியில் சேவை சாதிக்கின்றார்.



வைத்த மா நிதியாம் மசுசூதனையே அலற்றி,
கொத்து அலர் பொழில் சூழ் குருகூர்ச் சடகோபன் சொன்ன,
பத்து நூற்றுள் இப்பத்து அவன் சேர் திருக்கோலூர்க்கே,
சித்தம் வைத்து உரைப்பார் திகழ் பொன் – உலகு ஆள்வாரே.

திருக்கோளூர்ப் பெருமான் சேர்த்து வைத்த சேமநிதி போன்றவன்; அந்த மசுசூதனனாகிய என்பெருமானைக் கொத்து கொத்தாய் மலர் சோலைகள் சூழ்ந்த திருக்குருகூர் சடகோபர் ஆயிரம் திருப்பாடுரங்களில் துதித்துள்ளார். அவற்றுள் இப்பத்து பாசுரங்களையும் பெருமான் எழுந்தருளியுள்ள திருக்கோளூரை எண்ணி அவனை நெஞ்சில் பதித்துக் கொண்டு சொல்ல வல்லவர்கள் உயர்ந்த பரமபதத்தை ஆள்வர்.  

இவ்வாறு ஒன்பது பெருமாள்களின் கருட சேவையையும் கண்டு களித்தீர்கள் இனி பெருமாள்கள் அனைவரும் நம்மாழ்வாரின் தீந்தமிழ் பாடலை அரு~ண்திய வண்ணம் விடைபெறும் அழகைக் காண்போமா?

Saturday, May 17, 2014

தென் திருப்பேரை நிகரில் முகில் வண்ணன் கருட சேவை

                           ஆழ்வார் திருநகரி ஒன்பது கருட சேவை -12



தாமிரபரணியாற்றின் தென் கரையில் திருநெல்வேலி- திருச்செந்தூர் சாலையில்  திருச்செந்தூருக்கு அருகில், ஆழ்வார் திருநகரியிலிருந்து     5 கி.மீ தொலைவில் தென்திருப்பேரைத்தலம் அமைந்துள்ளது. திருக்கோளூரிலிருந்து பேருந்திலும் நடந்தும் வரலாம்.  வாருங்கள் பெருமாள் ஏன் மகரநெடுங்குழைக்காதர் என்றழைக்கப்படுகின்றார் என்று காணலாம்.

மூலவர்:  மகரநெடுங்குழைக்காதர், உபய நாச்சியார்களுடன் அமர்ந்த திருக்கோலம் கிழக்குப்பார்த்த திருமுக மண்டலம்.
உற்சவர்: நிகரில் முகில் வண்ணன்
தாயார்: குழைக்காது வல்லி, திருப்பேரை நாச்சியார்.
விமானம்: பத்ர விமானம்.
தீர்த்தம்: சுக்ர புஷ்கரணி, சங்க தீர்த்தம், 
பிரத்யட்சம்: சுக்கிரன், ஈசான்ய ருத்திரன், பிரம்மா.
ஆகமம் : வைகானஸம் – சம்பிரதாயம்: தென்கலை.
மங்களாசாசனம்: நம்மாழ்வார் ஒரு பதிகம் (7ம் பத்து -3ம் திருவாய் மொழி)..  
கிரகம்: சுக்கிரன் ஸ்தலம்.


தாய்மாரும் தோழிமாரும்  தடுக்கவும், பராங்குச நாயகியாகிய தலைவி திருப்பேரைக்கு செல்வேன் என்று துணிந்து கூறும்படி பாடியுள்ளார் அதில் ஒரு பாசுரம்

கண்டதுவே கொண்டு எல்லாரும் கூடி கார்கடல் வண்ணனோடு என் திறத்துத்
கொண்டு, அலர் தூற்றிற்று; அது முதலாக் கொண்ட என் காதல் உரைக்கில், தோழி,
மண் திணி ஞாலமும் ஏழ் கடலும் நீள் விசும்பும் கழியப் பெரிதால்;
தென் திரை சூழ்ந்து அவன் வீற்றிருந்த  தென் திருப்பேரெயில் சேர்வன் – சென்றே.

தோழீ! எம்பெருமானிடத்து நான் கொண்டுள்ள காதலின் தன்மை எவ்வளவு பெரியது தெரியுமா? அவனை நான் காதலித்ததால் என் உடம்பில் பலவகை மெய்ப்பாடுகள் தோன்றின. அவற்றைப் பார்த்த பலரும் ஒன்று கூடி கரிய நிறம் கொண்ட கடல் போன்ற எம்பெருமானிடத்தில் நான் வைத்துள்ள காதலைப் பற்றி இழிவாகப் பேசினார்கள். ஊராரெல்லாம் இதனைக் காரணமாகக் கொண்டு என்னை பழித்தார்கள். இதனால் என் காதல் குறைந்ததா? இல்லை: மாறாக அது மேன் மேலும் வளர்ந்தது, எவ்வளவு பரந்து வளர்ந்தது தெரியுமா?   மண் நிறைந்த இப்பூவுலகமும், ஏழு கடல்களும்,  மற்றும் நீண்ட வானமும், ஆக இவையாவும் எவ்வளவு பெரியவையோ, அவற்றை விடவும் பெரிதாக வளர்ந்து விட்டது. ஆகவே அக்காதலுக்கு உரியவனாகிய பெருமான் வீற்றிருக்கும் தெளிந்த அலைகளையுடய நீர் சூழ்ந்த தென்திருப்பேரெயில் என்னும் தலத்தை நான் அடைவேன்: ஆள் விடுதல், அவன் வரவு பார்த்தல் செய்யாமல் நானே அங்குச் சென்று சேர்வேன்.    



 பூமாதேவி மகரக்குழை அளித்த வரலாறு:  பெண்களுக்கு  பொறாமை மற்றும் கர்வம் கூடாது என்பதை விளக்கும் வகையில் இத்திருக்கோவிலின் தல வரலாறு அமைந்துள்ளது. ஒரு சமயம் மஹாலக்ஷ்மி தன்மை விட பூமாதேவியிடம் பெருமாள் அதிக ஈடுபாடு கொண்டிருப்பதாக நம்பி, துர்வாச முனிவரிடம் தான் பூமாதேவியை விட அழகாக இல்லாதத் காரணத்தால்தான் ஸ்ரீமந்நாராயணன் தன்னை வெறுக்கின்றார். அதனால் பூமாதேவியைப் போலவே அழகும் திறமும் தனக்கு ஏற்பட வேண்டும் என்று கேட்டார்.  துர்வாசரும் பூமாதேவியைக் காண வந்த பொழுது தனது வடிவில் கர்வம் கொண்ட பூமாதேவி பெருமாளின் மடியை விட்டு எழுந்திருக்கவில்லை அவரை உபசரிக்கவில்லை. கோபம் கொண்ட துர்வாசர் “ நீ லக்ஷ்மியின் ரூபத்தை அடையக் கடைவாய்” என்று சபித்தார். பூமிதேவியும் முனிவரிடம் சாப விமோசனம் வேண்ட, தாமிரபரணி நதியின் தென் கரையில் உள்ள ஹரிபதம் என்னும்  க்ஷேத்திரத்தில் சென்று  நதியில் நீராடி தவம் புரிய  உனக்கு சாப விமோசனம் கிட்டும் என்றார்.

துர்வாசர் உபதேசித்த திருவெட்டெழுத்தை ஜபித்துக்கொண்டு பூமிதேவி, ஸ்ரீபேரை(லக்ஷ்மியின் உடல்) என்ற நாமத்தை தரித்து தவம் செய்து வரும் போது ஒரு பங்குனி பௌர்ணமி தினத்தன்று ஜெபம் செய்து ஆற்றின் நீரைக் கையில் எடுத்த போது இரண்டு அழகிய மகர குண்டலங்கள் (மீன் வடிவிலான  காதில் அணியும் ஒரு அணிகலன்) கிட்டியது. உடனே பூமிதேவியும் இவை பெருமாளின் திருக்காதுகளுக்கே இவை உகந்தவை என்று நினைத்தவுடன், பெருமாள் அங்கு தோன்றி பிரியே! அந்த மகர குண்டலங்களை எனக்கு  தர வேண்டும் என்று கூற , அவளும் மகிழ்ச்சியுடன் அவற்றை பெருமாளுக்கு கொடுத்தாள். அவரும் தனது அழகிய நீண்ட திருக்காதுகளில் அவற்றை அணிந்து கொண்டார். தேவர்கள் பூமாரி பொழிந்தனர், தேவ துந்துபிகள் முழங்கின. பூமாதேவியின் திருமேனி முன் போலவே அழகானது.  தேவர்கள் வேண்டிக்கொண்டபடி பெருமாள் மகர நெடுங்குழைக்காதர் என்னும் திருநாமத்துடன் இன்றும் சேவை சாதிக்கின்றார். அந்த தீர்த்தமும் மத்ஸ்ய தீர்த்தம் என்று வழங்கப்படலாயிற்று. இத்தலத்தின் பெயரும் பூமிதேயின் பெயரான திருப்பேரை ஆயிற்று. சோழ நாட்டு திவ்ய தேசங்களில்  திருப்பேர் நகர் என்னும் திவ்ய தேசம் உள்ளதால் இத்தலம் தென்திருப்பேரை என்று அழைக்கப்படுகின்றது.



வருணன் பாசம் பெற்ற வரலாறு: இந்திரனால் தோற்கடிக்கப்பட்ட அசுரர்கள் மேற்கே சென்று வருணனுடன் போரிட்டனர். குருவின் சாபத்தினால் நாகத்தையும் பாசத்தையும் இழந்தார். உடனே அவன் மனைவி குருவை சரணடையக் கூற, அவனுன் குருவிடம் சென்று வேண்ட, அவரும் நீ முன் போல் உன் ஆயுதங்களைப்பெற தெற்கு திக்கில் பார்வதி தேவியின் சரீரத்தில் இருந்து உண்டான் தாமிரபரணி நதி தீரத்தில் உள்ள “ஸ்ரீபேரை” என்னும் தலத்தில் பூமி தேவியுடன் சேவை சாதிக்கும் பெருமாளை திருவெட்டெழுத்தால் வழிபட உன் எண்ணம் நிறைவேறும் என்று அருளினார்.  வருணனும் தென்திருப்பேரை வந்து மகர தீர்த்தத்தில் நீராடி  மகரநெடுங்குழைக்காதரை பங்குனி பௌர்ணமியன்று வழிபட, மாதவன் மகிழ்ந்து தீர்தத்தை தாரையாக விட அது பாசமாயிற்று. அப்பாசத்தைக் கொண்டு வருணன் அசுரர்களை வென்றான். எனவே இத்தலத்திம் மழை வேண்டி செய்யுன் பிரார்த்தணைகள் பொய்ப்பதில்லை.

விதர்ப்ப தேசத்தில் பஞ்சம் நீங்கிய வரலாறு: ஒரு சமயம் விதர்ப்ப தேசத்தில்12 வருடம் மழையில்லாமல் கொடிய பஞ்சம் ஏற்பட்டது. எனவே விதர்ப்ப மன்னன் குருவை அழைத்து பரிகாரம் கேட்க, அவரும் தென்திருப்பேரை சென்று மகரநெடுங்குழைக்காதரை பூஜிக்க பஞ்சம் நீங்கும் என்றார். அரசனும்  அவ்வாறே செய்ய பஞ்சம் நீங்கியது.


சுந்தர பாண்டியன் வரலாறு: சுந்தர பாண்டியன் பிள்ளை வரம்வேண்டி பெருமாளுக்கு பூசை செய்வதற்காக 108  அந்தணர்களை அழைத்து வந்தான்.  வரும் வழியில் ஒருவர் காணாமல் போய்விட்டார்.  ஊர் வந்து சேர்ந்தபோது 107 பேர்தான் இருந்தனர். ஆனால் அரசம் வந்து பார்த்தபோது 108 பேர் சரியாக இருந்தனர். பெருமாளே காணாமல் போனவர் வடிவில் வந்து அரசன் முன் தோன்றினார் எனவே பெருமாள் எங்களில் ஒருவர் என்று இந்த ஊர்          அந்தணர்கள்  கூறுகின்றனர். பல அறக்கட்டளைகளை ஏற்படுத்தி பல்வேறு கைங்கரியங்களை செய்து வருகின்றனர்.

இக்கோவில் மிகப்பெரிய கோவில். மூலவர் மகர நெடுங்குழைக்காதர் நீண்ட மீன் போன்ற குழைகளை காதணியாக அணிந்து கொண்டு குழைக்காது நாச்சியார், திருப்பேரை நாச்சியார் இருவருடனும் எழிலாக அமர்ந்த் கோலத்தில் ஈசான்ய ருத்திரருக்கும், பிரம்மனுக்கும் காட்சி தரும் பரமபத திருக்கோலத்தில் சேவை சாதிக்கின்றார்.


வேதம் ஒதி வரும் வேத வித்களைக் காணவும், குழந்தைகள் விளையாடுவதைக் காணவும் பெருமாள், கருடனை இடப்பக்கமாக விலகி இருக்குமாறு கூறியதால்.கருடாழ்வார் சன்னதி பெருமாளுக்கு நேராக இல்லாமல் இடப்பக்கம் சிறிது விலகி உள்ளது. இதை நம்மாழ்வார்
  
வெள்ளைச்ச்சுரிசங்கொடாழியேந்தித் தாமரைக் கண்ணன் என்னெஞ்சினூடே
புள்ளைக் கடாகின்ற வாற்றைக்காணீர் என் சொல்லிச் சொல்லுகேன் அன்னைமீர்காள்!
வெள்ளச் சுகமவ வீற்றிருந்த வேதவொலியும் விழாவொலியும்
பிள்ளைக் குழா விளையாட்டொலியுமராத் திருப்பேரெயில் சேர்வன் நானே.

என்ற பாசுரம்  இதையே காட்டுவதாகக் கூறப்படுகின்றது.

இத்தலத்தில்  பங்குனி பிரம்மோற்சவத்தின் போது ஐந்தாம் திருநாள் இரவு பெருமாள் கருட சேவையில் பிரதான வாயிலில் இருந்து வெளி மண்டபத்திற்கு எழுந்தருளும் போது பெருமாளை சேவிக்கும் அழகே அழகு. வார்த்தகளால் வர்ணிக்க முடியாத காட்சி அது.


திருவரங்கனின் அழகை முகில்வண்ணன்( அழகுடையவன்) என்று பாடிய நம்மாழ்வார் தமது  

நகரமும்நாடும்பிறவும்தேர்வேன் நாணெனக்கில்லைஎன்தோழிமீர்காள்
சிகரமணிநெடுமாடநீடு தென்திருபேரெயில்வீற்றிருந்த
மகரநெடுங்குழைக்காதன்மாயன் நூற்றுவரையன்றுமங்கநூற்ற
நிகரில்முகில்வண்ணன்நேமியான் என் நெஞ்சங்கவர்ந்தென்னையூழியானே.
   
என்னும் பாசுரத்தில் நிகரில் முகில் வண்ணன் (ஈடு இணையற்ற அழகுடையவன்) என்று மங்களாசாசனம் செய்துள்ளார்.

“கூடுபுனல் துறையும் குழைக்காதன் திருமாலையும் கிடைக்க கொடுத்து வைத்திருக்க வேண்டும்” என்று போற்றப்படும் நிகரில் முகில் வண்ணரின் கருட சேவையை இப்பதிவில் கண்டீர்கள் இனி வரும்பதிவில் திருக்கோளூர் நிக்ஷேபவித்தரின் கருட சேவையைக் காணலாம் அன்பர்களே.