Monday, June 23, 2008

கருட சேவை-7

தக்ஷிண பத்ராசலம் மேற்கு மாம்பலம்
கோதண்டராமர் கருடசேவை
வையத்தெவரும் வணங்க அணங்கெழு மாமலை போல
தெய்வப்புள் ஏறிவருவான் சித்திரக்கூடத்துள்ளானே - திருமங்கையாழ்வார்

தெய்வப்புள்ளான கருட பகவான் ஒப்பற்ற மேன்மையுடையவர். மஹாவிஷ்ணுவுடைய இரண்டாவது வியுகமான ஸ்ரீ சங்கர்ஷண மூர்த்தியின் அம்சமாக விளங்குபவர்.

மனித உடலிலுள்ள ஐந்து வாயுக்களான ப்ராணன், அபாநன், வ்யானன்,உதானன், ஸமானன் என்பவற்றுக்கு ஸத்யர், ஸுபர்ணர், கருடர், தார்க்ஷ்யர். விஹகேஸ்வரர் என்னும் ஐந்து மூர்த்திகளாய் விளங்குகின்றார்.

இவர் ஞானம், சக்தி, பலம், ஐச்வர்யம், வீர்யம், தேஜஸ் என்னும் ஆறு குணங்கள் நிரம்பப்பெற்றவர்.

 ஏழு சுரங்களையுடைய சாம வேதத்தின் வடிவமானவர். அணிமா, மஹிமா, லகிமா,கரிமா,வசித்வம்,ஐச்வர்யம், ப்ராப்தி, ப்ராகாம்யம் என்னும் அட்டமஹா சித்திகள் பெற்றவர்.

கருடன் வேறு, பகவான் வேறு என்று நினைக்க வேண்டாம். பகவானே கருடனாக அவதரித்து விஷ்ணு என்றும் கருடன் என்றும் பெயர் பெற்றார் என்று மஹாபாரதம் கூறுகின்றது.

கருடன் எம்பெருமானின் வாகனமாக எவ்வாறு ஆனார் என்பதற்கு இரு ஐதீகங்கள் வழங்குகின்றது அவை என்ன என்று பார்ப்போமா? சப்த ரிஷிகளில் ஒருவரான காசயபர் ஒரு சமயம் ஒரு மாபெரும் வேள்வியை நடத்தினார். அதற்கு பல மஹரிஷிகள் எழுந்தருளியிருந்தனர். ஒவ்வொரு மஹரிஷியும் தங்களது சக்திகேற்ப அவ்வேள்விக்கு உதவி புரிந்தனர். இம்மஹரிஷிகளில் வாலகில்யகர்கள் என்று சொல்லப்படும் மஹரிஷிகளும் இருந்தனர். இவர்கள் அறிவிலும், தவத்திலும் சிறந்தவர்கள் ஆனால் உருவத்தில் மிக மிகச் சிறியவர்கள். இவர்கள் வேள்விக்காக சிறு ஸமித்துக்களை எடுத்துக் கொண்டு வரும்போது குளம்படியளவுள்ள நீர்த்தேக்கத்தை கண்டு அதை கடக்க முடியாமல் நின்ற போது , அவ்வழியில் தேவராஜன் இந்திரன் ஐராவதத்தில் அவ்வழியாக சென்ற்வன் இவர்களைப் பார்த்து கேலியாக சிரித்தான். இதனால் கோபமடைந்த இவர்கள் இப்படி செருக்குடன் செல்லும் இந்திரனே உனனையும் அடக்கி ஆளக்கூடிய மாவீரன் ஒருவன் பிறப்பான் அவனால் உனக்கு படுதோல்வி ஏற்படக் கடவது என்று சாபம் கொடுத்தனர். பிறகு வால்கிய மஹரிஷிகள் பெரும் தவம் இயற்றி அத்தவத்தின் பயனாய்த் கச்யபர் விநதைக்கு மகனாக கருட பகவான் பிறந்தார்.

கொற்றப்புள்ளொன்றேறி மன்றூடே வருகின்ற
காரைக்கால் திருமலைராயன் பட்டிணம் வீழி வரதராஜப் பெருமாள்

இரண்டாவது ஐதீகம் , தன் தாயாரை அடிமைத்தளையிலிருந்து விடுவிக்க தேவலோகம் சென்ற கருடன் இந்திரனை தோற்கடித்து அமிர்த குடம் பெற்று திரும்பி வரும் போது ஒரு மரத்தல் வேகமாக உட்கார்ந்தான். அப்போது அம்மரத்தில் தூங்கிக்கொண்டிருந்த வாலகிய முனிவர்கள் மரம் ஆடிய வேகத்தில் விழுந்து விட்டனர், இதைக் கண்ட கருடன், வெகு கரிசனத்துடன் அவர்களை தூக்கி மரத்தின் மேல் விட்டான். இதனால் மகிழ்ச்சி அடைந்த மஹரிஷிகள் கருடனை நீ பகவானின் வாகனமாகும் பேறு பெருவாய் என்று வாழ்த்தி வரம் கொடுத்தனர். இவ்வாறு வீரம், பலம், கருணை, சாதுர்யம், ஞானம், வேகம், நிதானம், அழகு மிகுந்த கருடன் பெருமாளின் வாகனமானார்.

கருடனுக்கு ருத்ரை, ஸுகீர்த்தி என்று இரு மனைவியர்கள். இவரது நட்சத்திரம் சுவாதி. பெருமாளுக்கு எப்போதும் சேவை புரியும் நித்ய சூரிகளில் ஒருவர் கருடன்.
தூவாய புள்ளூர்ந்து வந்து துறை வேழம்
மூவாமை நல்கி முதலை துணித்தானை
தேவாதி தேவனை செங்கலமலக் கண்ணானை
நாவாயுளானைநறையூரில் கண்டேன்

கெண்டையும் குறளும் புள்ளும் கேழலும் அரியும் மாவும்அண்டமும் சுடரும் அல்லாவாற்றலும் ஆய எந்தை ஆதி கேசவர் கருட சேவை



பெரும்பாலும் திருக்கோவில்களில் கருடன் நின்ற கோலத்தில் தான் பிரதிஷ்டை செய்யப்பட்டிருப்பார். சில தலங்களில் அமர்ந்த கோலத்திலும் பிரதிஷ்டை செய்யப்பட்டிருக்கிறார். மிகக்குறைவான திருத்தலத்தில் கையில் அமிர்த குடத்துடன் உள்ள கோலத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளார். இவ்வாறு கருடன் எழுந்தருளி அருள் பாலிக்கும் தலங்களைப்பற்றி இன்னொரு பதிவில் காண்போம்.
கருட சேவை தொடரும்...............

Friday, June 20, 2008

ஸ்ரீநிவாசர் கருட சேவை

சென்னை திருமயிலை வேதாந்த தேசிகர் தேவஸ்தானம்
ஸ்ரீநிவாசர் ஏகாந்த ஸேவை


நமது இந்து மதத்தில் ஒவ்வொரு தெய்வத்திற்கும் ஒரு வாகனம் உண்டு. மஹா விஷ்ணுவின் வாகனம் தான் கருடன். திருக்கோவில்களில் பிரம்மோற்சவ காலங்களின் பெருமாள் காலையும் மாலையும் பல்வேறு வாகனங்களில் கோவிலுக்கு வெளியே வந்து , கோவிலுக்குள் வந்து வழிபட முடியாதவர்களான முதியவர்கள், முடியாதவர்கள், நோய் வாய்ப்பட்டவர்கள் ஆகியோருக்கு தரிசனம் அளிக்க எளி வந்த கருணையால் தானே கோவிலுக்கு வெளியே திருவீதியில் வெளியே வந்து தரிசனம் அளிப்பார். சில கோவில்களில் மூலவருக்கு சமனான சிதம்பரம் நடராஜர், திருவாரூர் தியாகராஜர் ஆகியோர் யதாஸ்தானத்தை விடுத்து தெருவில் வெளியே வந்து தரிசனம் அளித்து அருளுவார்கள். இவ்வாறு பல்வேறு வாகனங்களில் சிறப்பான ஆபரண, மலர் அலங்காரங்களுடன் இறைவன் தானே வந்து தரிசனம் தருவது "வாகன சேவை" எனப்படும்.

பொன்மலை மேல் கரும்புயல்

மஹா விஷ்ணுவானவர் தனது வாகனமும் கொடியுமான கருடனில் இவ்வாறு ஊர்வலம் வந்து தரிசனம் தருவது கருட சேவை எனப்படும் என்பது சாதாரணமான விளக்கம். எம்பெருமானை கருட வாகனத்தில் தரிசனம் செய்தவர்களுக்கு மறு பிறவி கிடையாது என்பது ஐதீகம் எனவே கருட சேவை காண்பது புண்ணியமானதாக கருதப்படுகின்றது அது ஏன் அவ்வாறு என்பதின் உள்ளார்த்தத்தை உணர்த்துவதுதான் இப்பதிவு.

இனி கருட சேவையின் தத்துவ விளக்கம் என்ன என்று காண்போம். " தாஸ:, ஸகா, வாஹனம் ". என்றபடி பெருமாளுக்கு 1. சேவை புரியும் அடிமையாக, எப்போது அவரது திருவடிகளை தாங்கி இருக்கின்ற பெரிய திருவடியாகவும், 2. தோழனாகவும், எப்போதும் பெருமாளின் அருகில் இருப்பவர்.

ஆழ்வார்கள் இதனால் கருடனை காய்சினப்பறவை என்று குறிப்பிடுகின்றனர்.  

பவளநண்படர்க்கீழ்சங்குறைபொருநல் தண்திருப்புளிக்கிடந்தாய்! கவளமாகளிற்றினிடர்கெடத் தடத்துக் காய்சினப்பறவையூர்ந்தானே!

அது என்ன காய்சினப்பறவை? [கொத்தி புரட்டி எடுத்துவிடும் கோபம் கொண்ட பறவை (கருடன்). ஆனால் யாரை கொத்தும் பக்தர்களையா? இல்லை! இல்லை! பெருமாள் பக்தர்களை காப்பவர் அல்லவா? அவர்களை கருடன் ஒன்றும் செய்யாது. ஆனால் பெருமாளின் பகைவர்களை பெருமாளுக்கு சிரமம் கொடுக்காமல் தானே முதலில் சென்று கொத்தி புரட்டிப் போட்டுவிடும்.

ஸ்ரீநிவாசர் கருட சேவை அருகாமையில்

இவ்வாறு கருடனில் ஆரோகணித்து பெருமாள் வரும் அழகை வேதம் தமிழ் செய்த மாறன்  நம்மாழ்வார் எவ்வாறு பாடுகின்றார் பாருங்கள்.

காய்சினப்பறவையூர்ந்து பொன்மலையின் மீமிசைக்கார்முகில்போல் மாசினமாலிமாலிமானென்று அங்குஅவர்படக்கனன்றுமுன்நின்ற
காய்சின வேந்தே! கதிர்முடியானே! கலிவயல்திருப்புளிங்குடியாய்! காய்சினவாழிசங்கு வாள் வில் தண்டேந்தி எம்மிடர்கடிவானே!


கோபப்பறவையான கருடனில் ஒய்யாரமாக அமர்ந்து ஜிவ்வென்று பறந்து பெருமாள் வரும் அழகானது பொன் மலை மீது ஒரு கார்முகில் அமர்ந்திருப்பது போல் இருக்குமாம். எம்பெருமானும் கோபமாக சென்று தன் எதிரிகளை அழிப்பவன், தீ உமிழும் கோப சக்கரமும், சங்கும், தண்டமும் ஏந்தி பக்தர்கள் துன்பங்களைக் களைபவன்.

ஆழ்வார்கள் மட்டுமா? முருகனை ( மால் மருகனை)ப் பாடிய அருணகிரி நாதரும் இவ்வாறு பாடுகின்றார்.

கருடன் மிசைவரு கரிய புயலென கமல மணியென...

கருடன் மேல் ஆரோகணித்து வருகின்ற கருமேகப் புயல் என்று அருணகிரி நாதரும் பாடுகின்றார்.

 ஆகவே கருட சேவைப்பதிவுகளைப்பார்க்கும் போது இப்படி கற்பனை செய்து பாருங்கள் அந்த ஆனந்தம் உங்களுக்கு புரியும்.

3. வாகனமாகவும் கொடியாகவும் விளங்குபவர்தான் கருடன். எம்பெருமானின் ஆசனமும் கருடன். எங்கே பெருமாள் செல்ல வேண்டுமென்றாலும் தயார் நிலையில் அமர்ந்திருப்பவர். ஆதீ மூலமே என்று கஜேந்திரன் அலறிய மறு நொடி இந்த ஓடும் புள்ளேறி ( பறவை) எம்பருமான் யானைக்கு மோக்ஷம் கொடுக்க பறந்து வந்தான். இது எம்பெருமான் எப்போதும் தன் பக்தர்களுக்கு உதவ காத்திருக்கும் எளிமையைக் குறிக்கின்றது. இவ்வாறு தன் பக்தர்களிடம் பெருமாள் வருவதைக் குறிக்க கொடி.

குலத்தலையமதவேழம்பொய்கைபுக்குக் கோள்முதலைபிடிக்கஅதற்குஅனுங்கிநின்று நிலத்திகழும்மல்ர்சுடரேய்சோதீ! என்ன நெஞ்சிடர்தீர்த்தருளிய என்நின்மலன் காண்மின்         

  ன்று பாடுகின்றார் திருமங்கையாழ்வார்.

தன்னுடைய தாய் மாற்றாந்தாயிடம் அடிமையாக இருப்பதைக்கண்டு மனம் பொருக்க முடியாமல் அமிர்தம் கொண்டு வர இந்திர லோகம் சென்று பெருமாளுடனும் சண்டையிட்டு தன் வீரத்தையும் மாத்ரு பக்தியையும்( தாய்ப்பாசம்) உணர்த்தியவன் கருடன்


தங்க கருடன்- பொன் மலை


அமிர்தம் கொண்டு வரும் போது எம்பருமானுக்கும் கருடனுக்கும்  கடும் போர் ஏற்பட்டது இதில் கருடனுக்கே வெற்றி ஏற்பட்டது. கருடனின் வீரத்தை பகவான் மிகவும் புகழ்ந்து , 'நீயொரு வரம் கேள் கொடுக்கிறேன் என்றார்". கருடன் கேட்பதற்கு முன்பாகவே எம்பெருமானே, " நீ எனக்கு வாகனமாக இருக்க வேண்டும். அதே போல எனது கொடியில் எப்போதும் இருந்து கொண்டு வெற்றியைப் பெற்றுத்தர வேண்டும்" என்றார். எனவே கருடத்வஜனான எம்பெருமானுக்கு என்றும் தோல்வியே கிடையாது.


பெருமாளின் கொடியாக கருடன் விளங்குவதை ஆழ்வார்கள் இவ்வாறு அனுபவிக்கின்றனர்.

புட்கொடியாய்! 
சுருளக்கொடியொன்றுடையீர்!
புள்ளூர் கொடியானே
சுருளப்புட்கொடி சக்கரப்படை வான நாடன்.


இனி எவ்வாறு கருட சேவையை காண்பது முக்திக்கு வழி வகுக்கும் என்பதைக் காணலாம். சில தலங்களில் கருட சேவையின் போது ஒரு வெள்ளைத்துணியை கருட வாகனத்தின் அலகால் கிழித்து நான்கு திசைகளிலும் திசைக்கு ஒன்றாக தூக்கி எறிவார்கள். இது மனிதனின் மும்மலங்கள் அவனிடமிருந்து கிழிக்கப்பட்டு திசைக்கு ஒன்றாக வீசப்பட்டு அவன் தூயமையாவதைக் குறிக்கின்றது.

எனவே கருட சேவையை காணும் போது நம்மிடம் உள்ள ஆணவம், கன்மம், மாயை ஆகிய மும்மலங்கள் நீங்கும்( நீக்க நாம் முயற்சி செய்தால்) இவ்வாறு மலங்கள் நீங்கும் போது மனிதன் நிர்மலன் ஆகின்றான். இவ்வாறு ஆணவத்தை தொலைத்தால் சீவனில் உள்ள ஆணவமாகிய சுழி இறங்கும் போது சீவன் சிவன் ஆகிறான். அவன் தன்னை உணர்கிறான். இறை தரிசனம் கிட்டும்.முக்திக்கு வழி பிறக்கும் எனவே தான் பெருமாளின் கருட சேவையைக் காண்பதால் மோக்ஷம் கிட்டும் என்பது ஐதீகம்.

மோக்ஷபேறு என்பதற்கான இன்னொரு விளக்கம். கருடன் வேதமயமானவன், அதாவது "வேத சொரூபன்". விநதையின் புதல்வனான கருடனின் ஒவ்வொரு அவயமமும் வேதத்தின் பகுதி. "ஸ்தோமம்" என்னும் ஸாம வேத பாகமே அவரது ஆத்மஸ்வரூபம். "காயத்ரம்" என்கிற ஸாமம் அவருக்கு கண்கள். "த்ரிவ்ருத்" என்ற ஸாமம் அவருக்கு சிரசு. யஜுர் வேதங்கள் அவருடைய திருநாமங்கள். சந்தஸ்ஸுக்கள் அவரது திருக்கரங்கள். "திஷ்ண்யம்" எனப்படும் வேள்வி மேடைகள் அவரது திருப்பாதங்கள். "வாமதேவ்யம்" என்கிற ஸாமம் அவரது திருமேனி, "ப்ருஹத்" , "ரதந்தரம்" என்னும் ஸாமங்கள் அவருடைய இரு சிறகுகள். "யஜ்ஞாயஜ்ஞியம்" என்கிற ஸாமம் அவருக்கு வால். இவ்வாறு வேத பாகங்களெல்லாம் கருடனுடைய திருமேனிகளாய் விளங்குவதால் கருடனை "வேதஸ்வரூபன்" என்கிறார்கள் பெரியோர்.

கருட சேவை பின்னழகு

இவ்வாறு பெரிய திருவடி என்றும் புள்ளரையன் என்றும் காகேந்திரன் என்றும் போற்றப்படும் பக்ஷிராஜனான கருடன் மேல் பெருமாள் ஆரோகணித்து பவனி வரும்போது நாம் காண்பது என்ன? கருட வேதசொரூபி. எம்பெருமான் அவ்வேதத்தினால் அறியப்படுபவன், போற்றப்படுபவன், எனவே பெருமாள் கருட சேவை தந்து எழுந்தருளும் பொது "மறை போற்றும் இறை" இவனே என்றும். "மறைமுடி" இவனே என்றும் காட்டித்தருகின்றது. அந்த வேதச்செழும் பொருளை நாம் உணர்ந்தால் நமக்கு மோட்சம் தானே எனவே தான் கருட வாகனத்தில் பெருமாளை தரிசித்தவர்களுக்கு மறு பிறவி கிடையாது என்பது ஐதீகம்.

கருட வாகனத்தில் பெருமாள் திருவீதி புறப்பாடு

எனவே அடுத்த தடவை கருட சேவையைக் காணும் போது ( நேரிலோ அல்லது இப்பதிவிலோ) மும்மலம் நீக்கி. முக்தி தா பெருமாளே என்று வேண்டிக்கொண்டு சேவியுங்கள். நமது தர்ம நெறியின் ஒவ்வொரு விதிக்கும் விஞ்ஞான பூர்வமான ஓர் அர்த்தம் உண்டு என்று உணர்ந்து இறைவனை வேண்டினால் முக்தி நிச்சயம் என்பதை மனதில் கொள்ளவும்.

இப்பதிவில் இடப்பட்டுள்ள கருட சேவைப் படங்கள் எல்லாம் சென்னை திருமயிலை வேதாந்த தேசிகர் தேவஸ்தானத்தில் தற்போது நடந்த பிரம்மோற்சவத்தின் காட்சிகள். மேலும் மற்ற உற்சவங்களின் படங்களைக் காண செல்லுங்கள் SVDD
கருட சேவை இன்னும் தொடரும்.............