Showing posts with label கருட சேவை. Show all posts
Showing posts with label கருட சேவை. Show all posts

Sunday, September 6, 2009

ஸ்ரீ சத்ய நாராயணப் பெருமாள் கருட சேவை-1

ஸ்ரீயப்பதியாய், அவாப்த ஸமஸ்த காமனாய், ஸகல கல்யாண குணாத்மனாய், ஸ்ரீ வைகுண்ட நிகேதானாய் ஸ்ரீ பூமி, நீளா தேவி ஸமேத ஸ்ரீ நாராயணன், உலகோர் உய்யுமாறு ஸ்ரீ மஹா லக்ஷ்மி ஸமேத ஸ்ரீ சத்ய நாராயண பெருமான் எழுந்தருளி அருள் பாலிக்கும் தலம்தான் மாபில ஷேத்திரம் என்று அழைக்கப்படும் சென்னை மேற்கு மாம்பல சத்யநராயண திருக்கோவில் ஆகும். கொண்டு பக்தர்களை காக்கும் சத்ய நாராயணப் பெருமாள் ஆலயம் ஆகும்.

ஆந்திர மாநிலம் அன்னவரத்தில் மலைக் கோவில் கொண்டு சேவை சாதிக்கும் சத்ய நாராயணப் பெருமாளை இங்கு நாம் எல்லாரும் சேவித்து, அருள் பெருமாறு 1956 ஆண்டு பிரதிஷ்டை செய்தவர் P.V. சேஷாத்திரி பட்டர் ஆவார். பின் 1976 , 1998. 2008 ஆண்டுகளில் இத்திருக்கோவிலுக்கு சம்பரோஷணம் நடை பெற்றது. சமீபத்திலே நிறுவப்பட்ட ஆலயம் என்றாலும் தன் கருணையினாலும் மகிமையினாலும் அனேக பக்தர்களை தன்னிடம் ஈர்த்து அருள் பாலிக்கின்றார் ஸ்ரீசத்ய நாராயணர். ஒவ்வொரு நாளும் அதிகமாகிக் கொண்டு செல்லும் பதர்களின் கூட்டமே இந்த பெருமாளின் சக்திக்கு ஒரு சான்று.

மூலவர் ஸ்ரீ சத்ய நாராயணப் பெருமாள், வடக்கு நோக்கிய திருமுக மண்டலம், பிரசன்ன வதனத்துடனும், கமல நயனங்களுடன், பவழம் போல சிவந்த இதழில் குமிண் சிரிப்புடன், நிர்மலமான பட்டுப் பீதாம்பரங்களுடன், கிரீட, ஹார, கேயூர கடகாதி திவ்ய ஆபரணங்களுடன், சங்கும், சக்கரமும், கதையும் தாங்கி அபய ஹஸ்தத்துடன் நின்ற கோலத்தில் சேவை சாதிக்கின்றனர் . முத்தங்கியில் பெருமாளையும், தாயாரையும் தரிசிக்க ஆயிரம் கண் கூடப் போதாது அவ்வளவு சௌந்தர்யம் எம்பெருமானுக்கும் தாயாருக்கும். கல்யாணக் கோலமாக பெருமாளுக்கு வலப்பக்கத்தில் பத்மாசனத்தில் அமர்ந்த கோலத்தில் மேல் கரமிரண்டிலும் பத்ம மலரை ஏந்தி கீழ் கரங்களில் அபய, வரத ஹஸ்தங்களுடன் நமக்கு பதினாறு செல்வங்க€ளையும் வழங்கும் ஐஸ்வர்ய லக்ஷ்மியாய் மஹா லக்ஷ்மித் தாயார் எழுந்தருளி அருள் பாலிக்கின்றாள்.

சக்ரவர்த்தி திருமகன் கையிலே வில்லேந்தி கோதண்ட ராமராக, அன்னை ஜானகி, மற்றும் இளைய பெருமாளுடன் தனி சன்னதியிலும் , சிறிய திருவடியாம் மாருதி வலக்கையிலே சஞ்žவி மலையையும் இடக்கையில் சௌகந்தி மலரையும் ஏந்திய வண்ணம் சஞ்சிவி ஆஞ்சனேயராகவும் சேவை சாதிக்கின்றனர். லக்ஷ்மி நரசிம்மருக்கும், சூடிக் கொடுத்த சுடர்க் கொடியாள் ஆண்டாள் நாச்சியாருக்கும் தனி சன்னதிகள் உள்ளன. சகல கலைகளையும் நமக்கு வழங்க வல்ல சரஸ்வதி தாயாருக்கே குருவான லக்ஷ்மி ஹயகிரீவருக்கும் ஒரு சன்னதி இத்தலத்திலே உள்ளது. வியாழக்கிழமையன்று ஏல மாலை சார்த்தி இவரை வழிபட்டால் மாணவர்களுக்கு நன்றாகக் கல்வி விருத்தியடையும் என்பது ஐதீகம். முன் பக்கம் அறு கோண சக்கரத்தில் பதினாறு கரங்களுடன் சக்கரத்தழ்வாரும், பின் பக்கம் முக்கோண சக்கரத்தில் யோக நரசிம்மரும் விள்ங்கும் சக்கரத்தாழ்வாருக்கும் தனி சன்னதி உள்ளது. வடகலை சம்பிரதாய இத்திருக்கோவிலில், வைகானச ஆகமப்படி பூஜைகள் நடைபெறுகின்றன.

வருடம் முழுவதும் கோலாகலமாக பல்வேறு உற்சவங்கள் நடைபெறுகின்றது இத்திருக்கோவிலில். தமிழ் வருடப்பிறப்பன்று புஷ்பாங்கியில் பெருமாளும் தாயாரும் சேவை சாதிக்கின்றனர், மற்றும் இரவு புஷ்பப்பல்லக்கிலே ஊர்வலம் வருகின்றார். ஆனி மாதம் அவதார உற்சவத்தையொட்டி 10 நாள் பிரம்மோற்சவம் சிறப்பாக நடைபெறுகின்றது. பத்து நாட்களும் காலையும் மாலையும் பெருமாள் பல் வேறு வாகனங்களில் எழுந்தருளி சேவை சாதிப்பதுடன், பத்தி உலாத்தலும், ஊஞ்சல் சேவையும் தந்தருளுகின்றார். திவ்ய தேசங்களிலே உள்ளது போல் பெருமாள் சத்ய கோடி விமானத்ததில் 10 நாள் இரவு சேவை சாதிக்கின்றார். பிரம்மோற்சவத்தின் ஐந்தாம் நாள் இரவு கருட சேவை கண்டருளுகின்றார் சத்ய நாராயணப் பெருமாள் அந்த கருட சேவையின் சில காட்சிகளை இப்பதிவில் காணுகின்றீர்கள். இக்கருடன் பழைய கருடன் 2008ம் ஆண்டு நடைபெற்ற சம்ப்ரோக்ஷணத்தின் போது அன்பர்கள் புது கருடன் சமர்ப்பணம் செய்தனர் அக்கருடசேவையை அடுத்த பதிவில் காணலாம்.
பையுடை நாகப்பகையானில் எழிலாக பவனி வரும்
சத்ய நாராயணப் பெருமாள்

திருமலையில் எவ்வாறி மலையப்ப சுவாமி மூலவரின் லக்ஷ்மி ஹாரம் அணிந்து மூலவராக சேவை சாதிக்கின்றாரோ, அது போலவே சத்ய நாராயணப் பெருமாளும் லக்ஷ்மி ஹாரம் அணிந்து செங்கோல் தாங்கி ஓடும் புள்ளேறி நாம் எல்லோரும் உய்ய பவனி வரும் அழகை எப்படி வர்ணிப்பது என்றே புரியவில்லை தாங்களே கண்டு மகிழுங்கள்.


விநதை சிறுவன் மேல் லோக சரண்யன்


பதகமுதலைவாய்ப் பட்டகளிறு
கதறி கை கூப்பி என் கண்ணா! கண்ணா! வென்ன
உதவ புள்ளூர்ந்து அங்குயர் தீர்த்த
எம் முகில் வண்ணன், குன்றெடுத்த குடமாடீ

 அங்கமலக்கண்ணன் கருடனில் ஆரோகணித்து எழிலாக
 மாட வீதி வலம் வரும் அழகு.

 பன்றியுமாமையும் மீனமுமாகிய பாற்கடல் வண்ணர் ஸத்ய நாராயணர், ஸத்ய தேவர், சத்யர், காம தேவர
 எரிசினப் பறவையேறி ஊர்ந்து வரும் அழகு

அஞ்சுடராழி கையகத்தேந்தும் அஞ்சனவண்ணரின் பின்னழகு
-->
ஆடியிலே ஆடிப்பூர பத்து நாள் உற்சவத்தின் போது மாலை பல் வேறு அலங்காரத்தில் ஆண்டாள் நாச்சியாருடன் சேவை சாதிக்கின்றார் பெருமாள். புரட்டாசி சனிக்கிழமைகளில் சிறப்பு அலங்காரத்தில் மூலவரும் உற்சவரும் சேவை சாதிக்கின்றனர். நவராத்திரியின் போது பத்து நாட்களும் பெருமாளும் தசாவதார மூர்த்தியாக, தாயாருடன் கொலுக் காட்சி தருகின்றார், இது இத்தலத்தின் ஒரு சிறப்பு. விஜய தசமியன்று குதிரை வாகனத்தில் எழுந்தருளி வன்னி மரத்தில் அம்பு போடுகின்றார் பெருமாள். ஐப்பசியில் பவித்ரோத்ஸவம் நடைபெறுகின்றது. மார்கழியில் 21 நாள் அத்யயன உற்சவத்தில் பல் வேறு கோலங்களில் சேவை சாதிக்கும் பெருமாள், வைகுண்ட ஏகாதசியன்று பெருமாளும் தாயாரும் புஷ்பாங்கியிலே சேவைசாதிக்கின்றனர். .இராப்பத்து உற்சவத்தின் போது பரமபத வாசல் வழியாக வெளிவந்து பல் வேறு நடையழகை நமக்கு காண்பிக்கிறார்.. நம்மாழ்வார் மோட்சமும் சிறப்பாக நடைபெறுகின்றது. போகியன்று ஆண்டாள் திருக்கல்யாணம் நடைபெறுகின்றது. மற்றும் ஸ்ரீ இராம நவமி 10 நாள் உற்சவத்தின் போது இராமாயணத்தின் பல் வேறு நிகழ்ச்சிகளை உணர்த்தும் வகையில் ஸ்ரீ ராமருக்கு அலங்காரம் நடைபெறுகின்றது. மேலும் ஸ்ரீ லக்ஷ்மி நரசிம்ம ஜயந்தி 10 நாள் உற்சவமும், ஸ்ரீ ஜயந்தி, அனுமந் ஜயந்தி, தீபாவளிப் புறப்பாடு, கனுப் பொங்கல், கார்த்திகை தீபம், பங்குனி உத்திர திருக்கல்யாணம் முதலிய பண்டிகைகள் ஒரு நாள் உற்சவமாக சிறப்பாக கொண்டாடப்படுகின்றன. இந்த உற்சவங்களின் ஸ்ரீ சத்ய நாராயணர், உபய நாச்சியார்கள், தாயார் ஆகியோர்களின் திவ்ய அழகைக் கண்டு அனுபவிக்க ஆயிரம் கண் தேவை. இவ்வாறு ஆண்டுக்கு ஏறக்குறைய 200 நாட்கள் உற்சவமாகவே திகழ்கின்றன இத்திருகோவிலில்.
இவ்வாலயத்திற்கே உரித்தான பிரத்யேக பூஜை பௌர்ணமி தினத்தன்று நடை பெறும் சத்ய நாராயண பூஜை ஆகும். இப்பூஜையின் மகத்துவத்தைப் பற்றி அடுத்த பதிவில் புது கருடனில் பெருமாள் பவனி வரும் காட்சிகளுடன் கண்டு அனுபவிக்கலாம் வந்து சேவியுங்கள் அன்பர்களே.

Thursday, February 26, 2009

வைகுண்ட ஏகாதசி கருட சேவை

அமிர்த கலச கருடன்

வைகுண்ட ஏகாதசி சமயத்தின் போது திருவரங்கம் சென்று பெரிய பெருமளையும் நம்பெருமாளையும் சேவிக்கும் பாக்கியத்தை பெருமாள் அளித்தார் அப்போது நெடிதுயர்ந்து அமர்ந்த கோலத்தில் இருக்கும் கருடாழ்வாரையும் மற்றும் அமிர்த கலச கருடனையும் சேவிக்கும் பாக்கியமும் கிட்டியது, இப்பதிவில் அமிர்த கலச கருடனையும் மற்றும் வைகுண்ட ஏகாதசியன்று பெருமாள் அளித்த கருட சேவையும் காணலாம் அன்பர்களே.
முதலில் பெரிய பெருமாளை நமஸ்கரிப்போம்


காவேரி விரஜாஸேயம் வைகுண்டம் ரங்கமந்திரம் |
ஸவாஸு தேவோ ரங்கேஸ: ப்ரத்யக்ஷம் பரமம் பதம் |
விமானம் ப்ரணவாகாரம் வேதஸ்ருங்கம் மஹாத்புதம் |
ஸ்ரீரங்க ஸாயி பகவான் ப்ரணவார்த்த ப்ரகாஸ: ||

அநேகமாக எல்லா விஷ்ணு ஆலயங்களிலும் பெரிய திருவடியை நின்ற கோலத்தில் பெருமாளை வழிபடும் காலத்திலேயே சேவிப்போம். ஆனால் இங்கு திருவரங்கத்தில் அவர் அமர்ந்த கோலத்தில் காணப்படுகிறார் அதற்கு காரணம் என்ன தெரியமா?

பெருமாள் வைகுண்டத்தை விட்டு நாம் எல்லோரும் உய்ய காவேரியின் நடுவே வந்து கோவில் கொண்டு விட்டதால் இனி எங்கும் செல்லவேண்டிய அவசியமில்லை எனவே கருடா தயாராக நிற்க வேண்டாம், அமர்ந்தே இரு என்று பெருமாள் பணித்ததால் அமர்ந்து சேவை சாதிப்பதாக ஐதீகம். ப்ராணாவாகார விமானத்தை வைகுண்டத்திலிருந்து பூலோகத்திற்கு கொண்டு வந்தது கருடன் தானே. என்ன பிரம்மாண்டம் கருட பகவானின் மூர்த்தம், அற்புதமாக அமைந்துள்ளது, புகைப்படம் எடுக்கமுடியவில்லை, திருவரங்கம் செல்லும் போது தரிசித்து கொள்ளுங்கள் அன்பர்களே.

 
இந்த சன்னதி கருடன் தவிர மேலும் அமிர்த கலச கருடன் சன்னதியும் உள்ளது திருவரங்கத்தில், தன் தாயின் அடிமைத்தளையை நீக்க கருடன் தேவாலோகம் சென்று இந்திரனை வென்று அமிர்த கலசம் கொண்டு வந்த கதையை அனைவரும் அறிவோம். அந்த அமிர்த கலசம் தாங்கியவனாகவும் பல் வேறு தலங்களில் சேவை சாதிக்கின்றார் வேத சொரூபனான கருடன் இதோ ஸ்ரீரங்கத்தில் அருள் பாலிக்கும் அமிர்த கலச கருடன்.

வலமேற்கரத்தில் அமிர்த கலசமும் இடமேற்கரத்தில் நாகமும் ஏந்தி அஞ்சலி ஹஸ்தத்துடன் அருமையாக சேவை சாதிக்கின்றார் வைநதேயன்.
கருடாய நமஸ்துப்யம் நமஸ்தே பக்ஷீணாம் பதே |
ந போகமாதி ராஜாய ஸுபர்ணாய நமோ நம : |
விநதா தந்த ரூபாய கச்ய பஸ்ய ஸுதாசய |
அஹீநாம் வைரிணே துப்யம் விஷ்ணு பத்ராய தே நம: | |

ரக்தரூபாய தே பக்ஷீந் ஸ்வேதமஸ்தக பூஜிதே |
அம்ருதா ஹரணே ஹ்ருஷ்ட தஸ்மை தேவாய தே நம: ||

என்று ஸ்ரீ கருட பகவானை அவருக்குரிய மாலை நேரத்தில் விளக்கேற்றி அர்ச்சனை செய்து தியானிக்க நற்பலன்களும் நற்செய்திகளும் கிட்டும்.

ஸ்ரீ கருட பகவானை தினமும் வழிபட கிடைக்கும் நன்மைகள்
ஞாயிறு : பாவங்கள் குறையும், மனக்குழப்பம் தீரும், திருமணத்தடைகள் விலகும்.
திங்கள், செவ்வாய் : குடும்பத்தில் ஏற்படும் குழப்பங்கள் குறையும், பகைவர்கள் மறைந்து போவார்கள்.
புதன், வியாழன் : காரிய சித்தி, எடுத்த காரியத்தில் வெற்றி நிச்சயம்.
வெள்ளி, சனி : கொடிய நோய்கள் மறையும், ஆயுள் வளரும், ஆர்வமும் நம்பிக்கையும் வளரும்.

கருடனின் கதையை ஒரு கல்லிலே கலை வண்ணம் கண்டோம் என்ற தளத்தில் விஜய் என்னுமொரு அன்பர் இப்படி கூறியுள்ளார் அதையும் சென்று பாருங்களேன். கருடனின் கதை

இனி வைகுண்ட ஏகாதசி கருட சேவையை கண்டு களியுங்கள் அன்பர்களே.

திருமயிலை ஆதி கேசவப் பெருமாள் வெள்ளி கருட சேவை

பின்னழகு

பேயாழ்வார்

கருடாழ்வார்
********************
திருமயிலை வேதாந்த தேசிகர் தேவஸ்தானம் ஸ்ரீநிவாசப் பெருமாள் கருட சேவை

Saturday, October 4, 2008

மலையப்ப சுவாமி கருட சேவை

ஸ்ரீவாரி பிரம்மோற்சவத்தில் கருட சேவை


பிரம்மோற்சவமாம் பிரம்மோற்சவம் எங்கள் மலையப்ப சுவாமிக்கு பிரம்மோற்சவம்
புரட்டாசி மாதம் ஆனந்த பிரம்மோற்சவம் திருவோண நட்சத்திர பிரம்மோற்சவம். ( பிரம்மோ)


காலையும் மாலையும் கோலாகலம் வித வித வாகனங்களில் அற்புத ஊர்கோலம் சேஷ வாகனத்தில் வைகுந்த நாதன்
அன்ன வாகனத்தில் கலை மகள் கோலம் (பிரம்மோ)

சிம்ம வாகனத்தில் அவர் யோக நரசிம்மம் முத்துப்பந்தலில் புள்ளின் வாய் கீண்ட கோலம் கற்பக விருக்ஷத்தில் அவர் கலியுக வரதர் சர்வ பூபால வாகனத்தில் அவரே ஜகந்நாதர் (பிரம்மோ)

மோகினியாய் வருபவரும் அவரே தெய்வப்புள்ளின் மேல் மூலவராய் திருக்கோலம் சிறிய திருவடியில் ஸ்ரீராமர் அவரே தங்கத்தேரிலே அற்புத வீதி உலா (பிரம்மோ)

அத்தி வாகனத்திலே அற்புத சக்கரவர்த்தி சூரியப்பிரபையிலே சூரிய நாராயணர் சந்திரப்பிரபையிலே வெண்ணெய்த்தாழி கண்ணன் திருத்தேரிலே உல்லாச இரதோற்சவம் (பிரம்மோ)

பாயும் பரியிலே ஸ்ரீரங்கராஜா சுவாமி புஷ்கரணியில் சக்ரஸ்நானம் கோலாகலமாய் பிரம்மோற்சவம் பிரம்மன் நடத்தி வைத்த பிரம்மோற்சவம்.(பிரம்மோ)

புரட்டாசி மாதம் திருவோண நடசத்திரம் எம்பெருமான் கண்கண்ட தெய்வம் கலியுக வரதன் வேங்கடவனின் அவதாரத் திருநாள், அந்நாளை தீர்த்த நாளாக கொண்டு திருப்பதி திருமலையிலே எழுமலையானுக்கு, எங்கள் குல தெய்வத்திற்க்கு, பார் புகழும் பாலாஜிக்கு, பரந்தாமனுக்கு, ஸ்ரீநிவாசனுக்கு, மலையப்ப சுவாமிக்கு ஒன்பது நாள் கோலாகலமாக பிரம்மோற்சவம்.
வேங்கடாசலபதி மூலவர்

ஆனந்த நிலைய விமானம்

பெருகுமதவேழம் மாப்பிடிக்குமுன்னின்று
இருகணிள மூங்கில்வாங்கி - அருகிருந்த
தேன்கலந்து நீட்டும் திருவேங்கடம்கண்டீர்
வான்கலந்தவண்ணன் வரை.

பெரிய திருவடி கருடாழ்வார்

சிறிய திருவடி அனுமன்

திருமலையில் பிரம்மோற்சவத்தின் சில சிறப்புகள் 1) முதல் நாள் கொடியேற்றம் மாலையில் நடைபெறுவது, 2)இரண்டு தடவை சேஷ வாகன சேவை, 3) தங்கத்தேர். 4) கருட சேவையன்று மூலவராக உற்சவர் சேவைசாதிப்பது.


காலையும் மாலையும் வெவ்வேறு வாகனங்களில் மலையப்ப சுவாமி அற்புத அலங்காரத்தில், சர்வாபரண பூஷிதராக, விலையுயர்ந்த முத்தும், பொன்னும் மணியும், மாலைகளும் இலங்க நாம் எல்லோரும் உய்ய மாட வீதி வலம் வந்து சேவை சாதிக்கின்றார்.

எல்லா ஆலயங்களிலும் மோக்ஷமளிக்கும் கருட சேவை சிறப்பு, திருமலையில் இன்னும் சிறப்பு என்னவென்றால் கலியுகத்தில் பெருமாள் ஸ்ரீநிவாசராக திருப்பதி வந்த போது அவர் ஓடி விளையாட வைகுண்டத்தில் உள்ளது போல இயற்கை அழகு மிக்க இடம் வேண்டுமென்று பெருமாள் சொல்ல கருடன் வைகுண்ட மலையை பெயர்த்து பூலோகத்திற்கு கொண்டு வந்தார். ஏழு மலையும் சேர்ந்து பூலோகம் வந்தது. இதற்காக தன்னை தரிசிக்க வரும் பக்தர்கள் வாசலில் அமர்ந்திருக்கும் கருடனை தரிசித்த பின்னரே தன்னை வணங்க வேண்டும் என்று அருள் பாலித்தார். அதன்படி எல்லா பெருமாள் கோவில்களிலும் வாசலில் கருடனை தரிசிக்கலாம்.


புரட்டாசி பிரம்மோற்சவத்தின் ஐந்தாம் நாள் இரவு கருட சேவை. தங்க கருடனில் மலையப்ப சுவாமி மூலவராக சேவை சாதிக்கின்றார். மூலவருக்கு அணிவிக்கப்படும் லக்ஷ்மி ஹாரம், சகஸ்ரநாம ஹாரம், மகர கண்டி, சூடிக்கொடுத்த சுடர்க்கொடியாளின் மாலை, கிளி, வஜ்ர கிரீடம், அற்புத ஆபரணங்கள் அணிந்து ஆனந்த சேவை சாதிக்கின்றார் ஸ்ரீ வெங்கடாசலபதி. மூலவரே அன்று வெளியே வந்து சேவை சாதிப்பதாக ஐதீகம் என்பதால் ஒரு காலத்தில் கருட சேவை முடியும் வரை நடை அடைக்கப்பட்டது. தற்போது கூட்டம் கருதி சில நிமிடங்கள் மட்டுமே அடைக்கப்படுகின்றது. மலையப்பனை தெய்வப்புள் ஏறி வலம் வரும் போது தரிசித்தால் குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிட்டும், மேலும் சகஸ்ர நாம ஹாரம், லக்ஷ்மி ஹாரம், மகர கண்டி அணிந்து பல லட்சம் பேர் தரிசிக்க தானே வேங்கடாசலபதி வெளியே வருவதால் அவரை சேவிப்பதால் பீடை விலகி அஷ்ட ஐஸ்வர்யங்கள் ஒரு சேர கிடைக்கும் என்பதால்தான் திருமலையில் அன்று என்றுமில்லாத பக்தர் கூட்டம் கூடுகின்றது.

நேற்றைய கருட சேவையின் சில புகைப்படங்களை சேவியுங்கள் அன்பர்களே.


செடியாய வல்வினைகள் தீர்க்கும் திருமாலே!
நெடியானே! வேங்கடவா! நின் கோயிலின் வாசல்
அடியாரும்வானவரும் அரம்பையரும்கிடந்தியங்கும்
படியாய்க்கிடந்து உன் பவளவாய்காண்பேனே.

Friday, June 20, 2008

ஸ்ரீநிவாசர் கருட சேவை

சென்னை திருமயிலை வேதாந்த தேசிகர் தேவஸ்தானம்
ஸ்ரீநிவாசர் ஏகாந்த ஸேவை


நமது இந்து மதத்தில் ஒவ்வொரு தெய்வத்திற்கும் ஒரு வாகனம் உண்டு. மஹா விஷ்ணுவின் வாகனம் தான் கருடன். திருக்கோவில்களில் பிரம்மோற்சவ காலங்களின் பெருமாள் காலையும் மாலையும் பல்வேறு வாகனங்களில் கோவிலுக்கு வெளியே வந்து , கோவிலுக்குள் வந்து வழிபட முடியாதவர்களான முதியவர்கள், முடியாதவர்கள், நோய் வாய்ப்பட்டவர்கள் ஆகியோருக்கு தரிசனம் அளிக்க எளி வந்த கருணையால் தானே கோவிலுக்கு வெளியே திருவீதியில் வெளியே வந்து தரிசனம் அளிப்பார். சில கோவில்களில் மூலவருக்கு சமனான சிதம்பரம் நடராஜர், திருவாரூர் தியாகராஜர் ஆகியோர் யதாஸ்தானத்தை விடுத்து தெருவில் வெளியே வந்து தரிசனம் அளித்து அருளுவார்கள். இவ்வாறு பல்வேறு வாகனங்களில் சிறப்பான ஆபரண, மலர் அலங்காரங்களுடன் இறைவன் தானே வந்து தரிசனம் தருவது "வாகன சேவை" எனப்படும்.

பொன்மலை மேல் கரும்புயல்

மஹா விஷ்ணுவானவர் தனது வாகனமும் கொடியுமான கருடனில் இவ்வாறு ஊர்வலம் வந்து தரிசனம் தருவது கருட சேவை எனப்படும் என்பது சாதாரணமான விளக்கம். எம்பெருமானை கருட வாகனத்தில் தரிசனம் செய்தவர்களுக்கு மறு பிறவி கிடையாது என்பது ஐதீகம் எனவே கருட சேவை காண்பது புண்ணியமானதாக கருதப்படுகின்றது அது ஏன் அவ்வாறு என்பதின் உள்ளார்த்தத்தை உணர்த்துவதுதான் இப்பதிவு.

இனி கருட சேவையின் தத்துவ விளக்கம் என்ன என்று காண்போம். " தாஸ:, ஸகா, வாஹனம் ". என்றபடி பெருமாளுக்கு 1. சேவை புரியும் அடிமையாக, எப்போது அவரது திருவடிகளை தாங்கி இருக்கின்ற பெரிய திருவடியாகவும், 2. தோழனாகவும், எப்போதும் பெருமாளின் அருகில் இருப்பவர்.

ஆழ்வார்கள் இதனால் கருடனை காய்சினப்பறவை என்று குறிப்பிடுகின்றனர்.  

பவளநண்படர்க்கீழ்சங்குறைபொருநல் தண்திருப்புளிக்கிடந்தாய்! கவளமாகளிற்றினிடர்கெடத் தடத்துக் காய்சினப்பறவையூர்ந்தானே!

அது என்ன காய்சினப்பறவை? [கொத்தி புரட்டி எடுத்துவிடும் கோபம் கொண்ட பறவை (கருடன்). ஆனால் யாரை கொத்தும் பக்தர்களையா? இல்லை! இல்லை! பெருமாள் பக்தர்களை காப்பவர் அல்லவா? அவர்களை கருடன் ஒன்றும் செய்யாது. ஆனால் பெருமாளின் பகைவர்களை பெருமாளுக்கு சிரமம் கொடுக்காமல் தானே முதலில் சென்று கொத்தி புரட்டிப் போட்டுவிடும்.

ஸ்ரீநிவாசர் கருட சேவை அருகாமையில்

இவ்வாறு கருடனில் ஆரோகணித்து பெருமாள் வரும் அழகை வேதம் தமிழ் செய்த மாறன்  நம்மாழ்வார் எவ்வாறு பாடுகின்றார் பாருங்கள்.

காய்சினப்பறவையூர்ந்து பொன்மலையின் மீமிசைக்கார்முகில்போல் மாசினமாலிமாலிமானென்று அங்குஅவர்படக்கனன்றுமுன்நின்ற
காய்சின வேந்தே! கதிர்முடியானே! கலிவயல்திருப்புளிங்குடியாய்! காய்சினவாழிசங்கு வாள் வில் தண்டேந்தி எம்மிடர்கடிவானே!


கோபப்பறவையான கருடனில் ஒய்யாரமாக அமர்ந்து ஜிவ்வென்று பறந்து பெருமாள் வரும் அழகானது பொன் மலை மீது ஒரு கார்முகில் அமர்ந்திருப்பது போல் இருக்குமாம். எம்பெருமானும் கோபமாக சென்று தன் எதிரிகளை அழிப்பவன், தீ உமிழும் கோப சக்கரமும், சங்கும், தண்டமும் ஏந்தி பக்தர்கள் துன்பங்களைக் களைபவன்.

ஆழ்வார்கள் மட்டுமா? முருகனை ( மால் மருகனை)ப் பாடிய அருணகிரி நாதரும் இவ்வாறு பாடுகின்றார்.

கருடன் மிசைவரு கரிய புயலென கமல மணியென...

கருடன் மேல் ஆரோகணித்து வருகின்ற கருமேகப் புயல் என்று அருணகிரி நாதரும் பாடுகின்றார்.

 ஆகவே கருட சேவைப்பதிவுகளைப்பார்க்கும் போது இப்படி கற்பனை செய்து பாருங்கள் அந்த ஆனந்தம் உங்களுக்கு புரியும்.

3. வாகனமாகவும் கொடியாகவும் விளங்குபவர்தான் கருடன். எம்பெருமானின் ஆசனமும் கருடன். எங்கே பெருமாள் செல்ல வேண்டுமென்றாலும் தயார் நிலையில் அமர்ந்திருப்பவர். ஆதீ மூலமே என்று கஜேந்திரன் அலறிய மறு நொடி இந்த ஓடும் புள்ளேறி ( பறவை) எம்பருமான் யானைக்கு மோக்ஷம் கொடுக்க பறந்து வந்தான். இது எம்பெருமான் எப்போதும் தன் பக்தர்களுக்கு உதவ காத்திருக்கும் எளிமையைக் குறிக்கின்றது. இவ்வாறு தன் பக்தர்களிடம் பெருமாள் வருவதைக் குறிக்க கொடி.

குலத்தலையமதவேழம்பொய்கைபுக்குக் கோள்முதலைபிடிக்கஅதற்குஅனுங்கிநின்று நிலத்திகழும்மல்ர்சுடரேய்சோதீ! என்ன நெஞ்சிடர்தீர்த்தருளிய என்நின்மலன் காண்மின்         

  ன்று பாடுகின்றார் திருமங்கையாழ்வார்.

தன்னுடைய தாய் மாற்றாந்தாயிடம் அடிமையாக இருப்பதைக்கண்டு மனம் பொருக்க முடியாமல் அமிர்தம் கொண்டு வர இந்திர லோகம் சென்று பெருமாளுடனும் சண்டையிட்டு தன் வீரத்தையும் மாத்ரு பக்தியையும்( தாய்ப்பாசம்) உணர்த்தியவன் கருடன்


தங்க கருடன்- பொன் மலை


அமிர்தம் கொண்டு வரும் போது எம்பருமானுக்கும் கருடனுக்கும்  கடும் போர் ஏற்பட்டது இதில் கருடனுக்கே வெற்றி ஏற்பட்டது. கருடனின் வீரத்தை பகவான் மிகவும் புகழ்ந்து , 'நீயொரு வரம் கேள் கொடுக்கிறேன் என்றார்". கருடன் கேட்பதற்கு முன்பாகவே எம்பெருமானே, " நீ எனக்கு வாகனமாக இருக்க வேண்டும். அதே போல எனது கொடியில் எப்போதும் இருந்து கொண்டு வெற்றியைப் பெற்றுத்தர வேண்டும்" என்றார். எனவே கருடத்வஜனான எம்பெருமானுக்கு என்றும் தோல்வியே கிடையாது.


பெருமாளின் கொடியாக கருடன் விளங்குவதை ஆழ்வார்கள் இவ்வாறு அனுபவிக்கின்றனர்.

புட்கொடியாய்! 
சுருளக்கொடியொன்றுடையீர்!
புள்ளூர் கொடியானே
சுருளப்புட்கொடி சக்கரப்படை வான நாடன்.


இனி எவ்வாறு கருட சேவையை காண்பது முக்திக்கு வழி வகுக்கும் என்பதைக் காணலாம். சில தலங்களில் கருட சேவையின் போது ஒரு வெள்ளைத்துணியை கருட வாகனத்தின் அலகால் கிழித்து நான்கு திசைகளிலும் திசைக்கு ஒன்றாக தூக்கி எறிவார்கள். இது மனிதனின் மும்மலங்கள் அவனிடமிருந்து கிழிக்கப்பட்டு திசைக்கு ஒன்றாக வீசப்பட்டு அவன் தூயமையாவதைக் குறிக்கின்றது.

எனவே கருட சேவையை காணும் போது நம்மிடம் உள்ள ஆணவம், கன்மம், மாயை ஆகிய மும்மலங்கள் நீங்கும்( நீக்க நாம் முயற்சி செய்தால்) இவ்வாறு மலங்கள் நீங்கும் போது மனிதன் நிர்மலன் ஆகின்றான். இவ்வாறு ஆணவத்தை தொலைத்தால் சீவனில் உள்ள ஆணவமாகிய சுழி இறங்கும் போது சீவன் சிவன் ஆகிறான். அவன் தன்னை உணர்கிறான். இறை தரிசனம் கிட்டும்.முக்திக்கு வழி பிறக்கும் எனவே தான் பெருமாளின் கருட சேவையைக் காண்பதால் மோக்ஷம் கிட்டும் என்பது ஐதீகம்.

மோக்ஷபேறு என்பதற்கான இன்னொரு விளக்கம். கருடன் வேதமயமானவன், அதாவது "வேத சொரூபன்". விநதையின் புதல்வனான கருடனின் ஒவ்வொரு அவயமமும் வேதத்தின் பகுதி. "ஸ்தோமம்" என்னும் ஸாம வேத பாகமே அவரது ஆத்மஸ்வரூபம். "காயத்ரம்" என்கிற ஸாமம் அவருக்கு கண்கள். "த்ரிவ்ருத்" என்ற ஸாமம் அவருக்கு சிரசு. யஜுர் வேதங்கள் அவருடைய திருநாமங்கள். சந்தஸ்ஸுக்கள் அவரது திருக்கரங்கள். "திஷ்ண்யம்" எனப்படும் வேள்வி மேடைகள் அவரது திருப்பாதங்கள். "வாமதேவ்யம்" என்கிற ஸாமம் அவரது திருமேனி, "ப்ருஹத்" , "ரதந்தரம்" என்னும் ஸாமங்கள் அவருடைய இரு சிறகுகள். "யஜ்ஞாயஜ்ஞியம்" என்கிற ஸாமம் அவருக்கு வால். இவ்வாறு வேத பாகங்களெல்லாம் கருடனுடைய திருமேனிகளாய் விளங்குவதால் கருடனை "வேதஸ்வரூபன்" என்கிறார்கள் பெரியோர்.

கருட சேவை பின்னழகு

இவ்வாறு பெரிய திருவடி என்றும் புள்ளரையன் என்றும் காகேந்திரன் என்றும் போற்றப்படும் பக்ஷிராஜனான கருடன் மேல் பெருமாள் ஆரோகணித்து பவனி வரும்போது நாம் காண்பது என்ன? கருட வேதசொரூபி. எம்பெருமான் அவ்வேதத்தினால் அறியப்படுபவன், போற்றப்படுபவன், எனவே பெருமாள் கருட சேவை தந்து எழுந்தருளும் பொது "மறை போற்றும் இறை" இவனே என்றும். "மறைமுடி" இவனே என்றும் காட்டித்தருகின்றது. அந்த வேதச்செழும் பொருளை நாம் உணர்ந்தால் நமக்கு மோட்சம் தானே எனவே தான் கருட வாகனத்தில் பெருமாளை தரிசித்தவர்களுக்கு மறு பிறவி கிடையாது என்பது ஐதீகம்.

கருட வாகனத்தில் பெருமாள் திருவீதி புறப்பாடு

எனவே அடுத்த தடவை கருட சேவையைக் காணும் போது ( நேரிலோ அல்லது இப்பதிவிலோ) மும்மலம் நீக்கி. முக்தி தா பெருமாளே என்று வேண்டிக்கொண்டு சேவியுங்கள். நமது தர்ம நெறியின் ஒவ்வொரு விதிக்கும் விஞ்ஞான பூர்வமான ஓர் அர்த்தம் உண்டு என்று உணர்ந்து இறைவனை வேண்டினால் முக்தி நிச்சயம் என்பதை மனதில் கொள்ளவும்.

இப்பதிவில் இடப்பட்டுள்ள கருட சேவைப் படங்கள் எல்லாம் சென்னை திருமயிலை வேதாந்த தேசிகர் தேவஸ்தானத்தில் தற்போது நடந்த பிரம்மோற்சவத்தின் காட்சிகள். மேலும் மற்ற உற்சவங்களின் படங்களைக் காண செல்லுங்கள் SVDD
கருட சேவை இன்னும் தொடரும்.............