கல்கி அவதாரம்தான் இன்னும் எடுக்கவில்லையே, எப்படீங்க கல்கியின் கருட சேவைன்னு தலைப்பு தப்பா இருக்குதேன்னு யோசிக்கறிங்களா?
அடியேன் சொன்னதில்லீங்க இது ஆழ்வார்களின் கடைகுட்டி, பெருமாளிடமே அஷ்டாக்ஷ்ர மந்திரோபதேசம் பெற்று, அதிகமான திவ்ய தேசங்களை மங்களாசாசனம் செஞ்ச திருமங்கையாழ்வார் இப்பெருமாளை இப்படித்தாங்க மங்களாசாசனம் செய்திருக்கறாருங்க.
.....தடம்பருகுகருமுகிலைத் தஞ்சைக்கோயில் தவநெறிக்குஓர்பெருநெறியை,
வையம்காக்கும் கடும்பரிமேல்கற்கியைநான் கண்டுகொண்டேன்
வையம்காக்கும் கடும்பரிமேல்கற்கியைநான் கண்டுகொண்டேன்
கடிபொழில் சூழ் கடல்மல்லைத் தலசயனத்தே.
இப்ப தெருஞ்சுதுங்களா எந்த திவ்ய தேசம்ன்னு, ஆமாங்க திருக்கடல்மல்லை ( மஹாபலிபுரம்) தாங்க இந்த திவ்ய தேசம்.
பெருமாள்: தல சயனப் பெருமாள் ( ஆதி சேஷன் இல்லாமல் தரையில் நான்கு திருக்கரங்களுடன், வலத் திருக்கரத்தை திருமார்பில் ஞான முத்திரையாக, கிழக்கு நோக்கிய திருமுக மண்டலத்துடன், ஒரு கரத்தை தலைக்கு வைத்துக் கொண்டு பெருமாள் சேவை சாதிக்கின்றார்)
தாயார் : பெருமாள் போலவே தாமரை இல்லாமல் நிலத்தில் அமர்ந்து சேவை சாதிக்கும் நில மங்கைத் தாயார்.
உற்சவர் : உலகுய்ய நின்றான், தலசயனத்துறைவார்.
தீர்த்தம் : புண்டரீக புஷ்கரிணி , கருடநதி
விமானம் : ஆனந்த விமானம்
திருமங்கை மன்னன் இத்தலசயனப்பெருமாளை நின்றவூர் நித்திலமாகவும் கண்டு சேவித்திருக்கின்றார்.
இனி இத்தலத்தின் மற்ற சிறப்புகளைக் காண்போமா?
திருக்கடல் மல்லை என்னும் இத்தலம் மாமல்லபுரம், மஹாபலிபுரம் என்றும் அழைக்கப்படுகின்றது. மஹாபலி சக்கரவர்த்தி வாமனனிடம் கேட்டுப்பெற்ற வரத்தின் மூலம் இந்த ஊரை ஆண்டு வந்ததால் மஹாபலிபுரம் என்று ஆயிற்று என்பர். நரசிம்மவர்ம பல்லவன் மாமல்லன் என்று அழைக்கப்பட்டான் அவன் ஆண்ட ஊரானதால் மாமல்லபுரம் என்றாயிற்று என்பர்.
தமருள்ளம் தஞ்சை தலையரங்கம்தண்கால் தமருள்ளந்தண்பொருப்புவேலை - தமருள்ளும் மாமல்லை கோவல் மதிக்குடந்தையென்பரே
ஏவல்லஎந்தைக்கிடம் -
என்று பெருமாள் உரையும் இடங்களை பட்டியிலிட்ட முதல் ஆழ்வார்களில் ஒருவரான, கவுமோதகி என்னும் கதையின் அம்சமான பூதத்தாழ்வார் ஐப்பசி மாதம் அவிட்ட நட்சத்திரத்தில் குருக்கத்தி மலரில் திருவவதாரம் செய்த தலம்.
என்று பெருமாள் உரையும் இடங்களை பட்டியிலிட்ட முதல் ஆழ்வார்களில் ஒருவரான, கவுமோதகி என்னும் கதையின் அம்சமான பூதத்தாழ்வார் ஐப்பசி மாதம் அவிட்ட நட்சத்திரத்தில் குருக்கத்தி மலரில் திருவவதாரம் செய்த தலம்.
பெருமாள் 27 திவ்ய தேசத்தில் கிடந்த கோலத்தில் சேவை சாதிக்கின்றார். அவற்றில் ஆதிசேஷன் இல்லாமல் நிலத்தில் ஸ்தல சயனப் பெருமாளாக ( தரை கிடந்தான்) சேவை சாதிக்கும் தலம். மனித உருவில் வந்ததால் சங்கு சக்கரங்களும் இல்லை, ஸ்ரீதேவி , பூதேவியும் நாபியில் இருந்து பிரம்மனும் இல்லை. புண்டரீக முனிவர் சமர்பித்த ஆயிரம் இதழ் தாமரையில் திருவடிகளை வைத்த வண்ணம் சேவை சாதிக்கின்றார் பெருமாள்.
புண்டரீக முனிவருக்காக பாற்கடலில் இருந்து நிலமங்கையுடன் ஓடிவந்து தரிசனம் தந்த தலம்.
அயோத்தி, மதுரா, மாயாபுரி, காசி, காஞ்சி, அவந்திபுரி, துவாரகை என்னும் மோட்சத்தலங்களில் கிடைக்கும் புண்ணியத்தை விட பல ஆயிரம் மடங்கு புண்ணியம் கிடைக்கும் ஸ்தலம்.
மாசி மகத்தன்று (கும்ப மாதம் பௌர்ணமி) சூரிய உதய காலத்தில் தீர்த்த ஸ்நானம் செய்ய புண்ணியம் வழங்கும் ஸ்தலம்.
திருமங்கையாழ்வார் 26 பாசுரங்களாலும், பூதத்தாழ்வார் ஒரு பாசுரத்தாலும் பெருமாளை மங்களாசாசனம் செய்துள்ளனர்.
பூதத்தாழ்வார் தாம் பாடிய இரண்டாந்திருவந்தாதியில் "அன்பே தகளியா" என்னும் பாசுரத்தில், நாரணற்கு ஞானத்தமிழ் புரிந்த நான் என்று பாடியிருப்பதால், இவரை "பெருந் தமிழன்" என்று அழைக்கின்றனர்.
உலகுய்ய நின்றானின் முன்னழகு
( படத்தை கிளிக்கி பெரிதாக்கி பார்க்கவும்)
( படத்தை கிளிக்கி பெரிதாக்கி பார்க்கவும்)
ஸ்தல புராணம்: புண்டரீக முனிவர் ஒரு சமயம் பாற்கடலில் பள்ளி கொள்ளும் பரந்தாமனுக்கு ஆயிரம் இதழ் கொண்ட ஒரு அற்புதத் தாமரை மலரை அர்ப்பணம் செய்ய அவா கொண்டார். அதற்காக கடலைக் கடப்பதற்காக கடல் நீரை தன் கைகளினாலேயே இறைத்து வற்றச் செய்யும் முயற்சியில் ஈடுபட்டார். கடலை கையால் இறைப்பது என்பது ஆகின்ற காரியமா? இல்லைதான் ஆனாலும் பெருமாளின் மேல் அதீத நம்பிக்கைக் கொண்ட புண்டரீக முனிவர் பெரும் நம்பிக்கையில் அப்பணியில் ஈடுபட்டார். தன் கருமத்திலேயே கண்ணாக ஈடுபட்டிருக்கும் புண்டரீக முனிவருக்கு அருள அந்த க்ஷீராப்தி நாதன் நிலமங்கைத் தாயாருடன் ஒரு வயோதிகர் உருவத்தில் வந்து என்னய்யா? கடல் தண்ணீரை கையால் இறைப்பது சாத்தியமா? என்று வினவினார். முனிவரும் சளைக்காமல் அகத்தியர் கடல் முழுவதையும் குடிக்கவில்லையா? என்று பதில் தர, முனிவரின் திட பக்திக்கு பிரசன்னமான பெருமாள் ஐயா நானும் உங்களுடன் இறைக்கிறேன் என்று கூறி சிறிது நேரம் இறைத்தபின், தான் களைத்து விட்டதாகவும் எனவே தனக்கு பசிப்பதாகவும் உணவு தருமாறு புண்டரீக முனிவரிடம் வேண்ட தமது பர்ணசாலைக்கு சென்று உணவு கொண்டுவந்து பார்த்த போது முதியவரைக் காணவில்லை.
ஆனால் அவர் கண்டது பெருமாளை வலக் கரத்தை தலைக்கு வைத்துக் கொண்டு இருக்கரங்களால் தனது திருவடியே உய்யும் வழி என்று சுட்டிக்காட்டும் கோலத்தில் புண்டரீக முனிவரின் தாமரை மலரில் கால்களை வைத்த வண்ணம் ஸ்தல சயனப் பெருமாளாக சங்கு சக்ரதாரியாக, வைர கிரீடத்துடன், பீதாம்பரதாரியாய், ஸ்ரீவத்ஸம், வனமாலாதாரியாய் சேவை சாதித்துக் கொண்டிருந்தார். இன்றும் கை கூப்பிய நிலையில் பெருமாளை சேவிக்கும் புண்டரீக ரிஷியை கருவறையில் சேவிக்கலாம்.
உற்சவர் உலகுய்ய நின்றான் தமது திருக்கரத்தில் புண்டரீக மஹாரிஷி சமர்பித்த தாமரை மலரை ஏந்திய வண்ணம் சேவை சாதிக்கின்றார். அதாவது புண்டரீகரின் பக்தியை உலகத்தோர்க்கு உணர்த்தும் வண்ணம் பெருமாள் சேவை சாதிக்கின்றார்.
பெருமாள் தன் கரத்தினால் கடல் அலைகளை தொட்டு சாந்தி படுத்தியதால் இக்கடல் "அர்த்த சேது" என்று அழைக்கப்படுகின்றது. மாசி மகத்தன்று அதிகாலை சூரிய உதய காலத்தில் நீராட புண்ணியம். வருடத்தில் 365 நாட்களும் முன்னோருக்கு தர்ப்பணம் செய்யலாம்.
முதலில் கடற்கரையில் கோவில் இருந்திருக்க வேண்டும், 14ம் நூற்றாண்டில் விஜய நகர மன்னன் பராங்குசன் தற்போது ஊர் நடுவில் உள்ள இக்கோவிலை கட்டியுள்ளார்.
தாயார் நிலமங்கைத்தாயாருக்கு துளசி அர்ச்சனை செய்ய கணவன் மனைவியிடையே ஒற்றுமை வளரும். குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் தாயார் சந்நி்தி முகப்பில் நெய்யால் மெழுகி சக்கரையினால் கோலமிடுகின்றனர்.
ஏனத்தினுருவாகி நிலமங்கையெழில் கொண்டான்
வானத்திலவர் முறையால் மகிழ்ந்தேத்தி வலங்கொள்ள
கானத்தின் கடல்மல்லை தலசயனத்து உறைகின்ற
ஞானத்தினொளியுருவை நினைவார் என் நாயகரே
என்று நிலமங்கைத்தாயாரையும், பெருமாள் ஞானப்பிரானாக விளங்கும் பாங்கையும் மங்களாசாசனம் செய்கின்றார் ஆலி நாடன். இந்த மஹா வராகர் அகிலவல்லித் தாயாரை வலத்தொடையில் தாங்கி சரம சுலோகத்தை உபதேசிக்கும் கோலத்தில் சேவை தனிக் குடவறைக் கோவிலில் வலவெந்தையாக சேவை சாதிக்கின்றார்.
சித்திரை மாதம் விசாக நட்சத்திரத்தை தீர்த்த நாளாகக் கொண்டு பத்து நாள் பிரம்மோற்சவம் சிறப்பாக நடைபெறுகின்றது. விசாகத்தன்று புண்டரீக புஷ்கரிணியில் தீர்த்தம் கொடுக்கின்றார் பெருமாள். இப்பிரம்மோற்சவத்தின் ஐந்தாம் நாள் இரவு கருட சேவை. வைகானச ஆகம முறைப்படி பூஜைகள் நடைபெறுவதால் ஐந்தாம் நாள் இரவு கருட சேவை. (வைகானச ஆகமக் கோவில்களில் மூன்றாம் நாள் அதிகாலை கருட சேவை நடைபெறும். காலை கருட சேவையில் கோபுர வாசல் தரிசனம் சிறப்பு. )
சித்திரை மாதம் விசாக நட்சத்திரத்தை தீர்த்த நாளாகக் கொண்டு பத்து நாள் பிரம்மோற்சவம் சிறப்பாக நடைபெறுகின்றது. விசாகத்தன்று புண்டரீக புஷ்கரிணியில் தீர்த்தம் கொடுக்கின்றார் பெருமாள். இப்பிரம்மோற்சவத்தின் ஐந்தாம் நாள் இரவு கருட சேவை. வைகானச ஆகம முறைப்படி பூஜைகள் நடைபெறுவதால் ஐந்தாம் நாள் இரவு கருட சேவை. (வைகானச ஆகமக் கோவில்களில் மூன்றாம் நாள் அதிகாலை கருட சேவை நடைபெறும். காலை கருட சேவையில் கோபுர வாசல் தரிசனம் சிறப்பு. )
ஐப்பசியில் பூதத்தாழ்வார் பத்து நாள் அவதாரத்திருவிழா, திருத்தேரில் பூதத்தாழ்வார் எழுந்தருளி அருள் பாலிக்கின்றார். 10ம் நாள் இவர் பெருமாளை மங்களாசாசனம் செய்யும் நிகழ்ச்சி சிறப்பாக நடைபெறுகின்றது. மாத அவிட்ட நட்சத்தி்ரத்தன்று இவருக்கு சிறப்பு திருமஞ்சனம் நடைபெறுகின்றது. கோவில் எதிரே இவர் பிறந்த நந்தவனம் உள்ளது.
அஞ்சிறைப் புள் தனிப்பாகன்
மன்னும்
கடல் மல்லை மாயவன் எழிற்கோலம்
கடல் மல்லை மாயவன் எழிற்கோலம்
கண்டியூர் அரங்கம் மெய்யம் கச்சிப் பேர் மல்லை என்று
மண்டினார் உய்யல் அல்லால் மற்றையார்க்கு உய்யலாமே
மண்டினார் உய்யல் அல்லால் மற்றையார்க்கு உய்யலாமே
ஆதி வராகர் : இப்பகுதியை ஆண்ட ஹரிசேகர மன்னன், இடவெந்தைப்பிரானான, திருவிடந்தைப் பெருமாளை தினமும் சேவித்த பின் அடியவர்களுக்கு அன்னமிட்டு அதன் பின்னரே உணவு உண்ணும் பழக்கத்தைக் கொண்டிருந்தான். ஒரு நாள் மஹா விஷ்ணு பூமிதேவித் தாயாருடன் மனித ரூபத்தில் வந்து மன்னரிடம் உணவு கேட்டார். மன்னன் தான் வராகரைத் தரிசித்த பின் அன்னமிடுவதாக கூறியும் அவர்கள் கேட்காததால் அவர்களுக்கு அன்னம் படைத்தான். அதை உண்ட மஹாவிஷ்ணு வலது தொடையில் தாயாரை அமர்த்தி லக்ஷ்மிவராகராக சேவை சாதித்தார். அதைக் கண்டு மகிழ்ந்த மன்னன் வராகருக்கு தனிக்கோவில் அமைத்தான். ஸ்தல சயனப் பெருமாளுக்கும் முந்தைய மூர்த்தி என்பதால் இவர் ஆதி மூர்த்தி என்று அழைக்கப்படுகின்றார்.
**********************
புலங்கொள் நிதிக்குவையோடு புழைக்கைம்மா களிற்றினமும் நலங்கொள்நவமணிக்குவையும் சுமந்து எங்கும் நான்றொசித்து கலங்களியங்கும் மல்லைக் கடல்மல்லைத்தலச்சயனம்
வலங்கொள்மனத்தாரவரை வலங்கொள் என்மடநெஞ்சே.
என்று திருமங்கையாழ்வார் மங்களாசாசனம் செய்த கடல் மல்லைத் தலசயன ஆலயத்தின் இராஜ கோபுர வாசலில் உள்ள சில சிற்பங்கள்
எப்போதும் போல் புகைப்படங்கள் கொடுத்து உதவிய தனுஷ்கோடி அவர்களுக்கு நன்றி.
2 comments:
மிகவும் அருமையான கட்டுரை. மிக்க நன்றி.
மிக்க நன்றி பிரகாஷ்
Post a Comment