Showing posts with label ஒன்பது கருட சேவை. Show all posts
Showing posts with label ஒன்பது கருட சேவை. Show all posts

Friday, June 6, 2014

ஒன்பது கருட சேவை விடையாற்றி மங்களாசாசனம்

                            ஆழ்வார் திருநகரி ஒன்பது கருட சேவை -14

அன்ன வாகனத்தில் நம்மாழ்வார் 

இது வரை நவதிருப்பதி எம்பெருமான்கள் தங்க ஹம்ஸ வாகனத்தில் எழுந்தருளிய நம்மாழ்வாருக்கும் தங்க பரங்கி நாற்காலியில் எழுந்தருளியுள்ள மதுரகவியாழ்வாருக்கும் அளித்த கோபுர வாசல் சேவையை கண்டு களித்தீர்கள்திருமஞ்சனத்திற்கு பிறகு திருக்கோயில் இராஜகோபுர திருக்கதவங்கள் சார்த்தப்படுகின்றது. பக்தர்கள் அனைவரும் பெருமாள்களுக்கும் ஆழ்வாருகளுக்கும் அலங்காரம் ஆகி வெளியே எழுந்தருள கோபுரக் கதவின் மேல் விழி வைத்து  காத்துக்கொண்டிருக்கிறனர் நேரமாக  நேரமாக கூட்டமும் அதிகமாகிக்கொண்டே போகின்றது.




 திருக்குருகூர் பொலிந்து நின்ற பிரான் கருடவாகனத்தில் 

சிறப்பாக நம்மாழ்வாரின் பாசுர மாலை சார்த்தியுளளனர்.

மெள்ள மெள்ள திருக்கதவங்கள் திறக்க முதலில் ஹம்ச வாகனத்தில் நம்மாழ்வார் சேவை சாதித்து எம்பெருமான்களின் கருட சேவையை சேவிக்க ஏதுவாக வெளியே வந்து திருக்கதவத்தை நோக்கி நிற்கின்றார். பின்னர் மதுரகவியாழ்வார் பரங்கி நாற்காலியில் எழுந்தருளி திருக்கதவத்தின் இடது பக்கம் நிற்கின்றார்.



திருவைகுண்டம்  கள்ளர் பிரான் கருடசேவை


முதலில் ஆழ்வார் திருநகரி பொலிந்து நின்ற பிரான்  ஆழ்வாருக்கு சேவை சாதிக்கின்றார். பக்தர்கள் அனைவரும் கோவிந்தா கோவிந்தா என்று பரவசத்துடன் கருட வாகனத்தில் பெருமாளையும் அன்ன வாகனத்தில் ஆழ்வாரையும் சேவிக்கின்றார். பெருமாள் கோபுர வாசல் சேவை சாதிக்கும் போது மத்தாப்புக்கள் ஏற்றப்படுகின்றன. பல வர்ணங்களின் பெருமாளின் அழகு அப்படியே பக்தர்களின் மனதில் பதிவாகின்றது. பெருமாளுக்கு கற்பூர ஆரத்தி நடைபெறுகின்றது. இரட்டை திருவாசியுடன் ( இரண்டு திருவாசிகளுடன் பிரம்மாண்டமாக பெருமாள்  கருட சேவையை முதல் தடவையாக சேவிக்கும் பாக்கியம்  அடியேனுக்கு இங்கு கிட்டியது).


திருவரகுணமங்கை எம் இடர் கடிவான்
( இரண்டு திருவாசிகளை தெளிவாக காணலாம்) 

ஒவ்வொரு பெருமாளும் ஒவ்வொரு விதமான அழகு, அருமையான ஆபரணங்கள்,  பல  வர்ண கிளிகள், ஆப்பிள் மாலைகள், பிரம்மாண்ட மலர்மாலைகள், பாசுர மாலைகள், சிறப்பு பரிவட்டங்கள், கருடனுக்கும் சிறப்பாக  மலர் மாலை அலங்காரம், தாமரை மலர் மாலைகள்  என்று ஆனந்தமாக இவ்வரிசைசையில்  பெருமாள்கள் கோபுர வாசல் சேவை சாதிக்கின்றனர். இரண்டாவதாக திருவைகுண்டம் கள்ளர் பிரானும் , மூன்றாவதாக திருவரணகுணமங்கை எம் இடர் கடிவானும், நான்காவதாக திருப்புளிங்குடி காய்சின வேந்தரும், ஐந்தாவது ஆறாவதாக  திருத்தொலைவில்லி மங்கலத்தின்  செந்தாமரைக் கண்ணரும், தேவர்பிரானும், ஏழாவதாக திருக்குளந்தை மாயக்கூத்தரும், அடுத்து தென்திருப்பேரை நிகரில் முகில் வண்ணரும் நிறைவாக திருக்கோளூர் நிக்ஷேபவித்தரும் கோபுர வாசல் சேவை சாதிக்கின்றனர். பின்னர் அனைத்து பெருமாள்களும் ஆழ்வார்களும் மாடவீதி வலம் வருகின்றனர். பக்தர்கள் அனைவரும் அருகில் வந்து பெருமாள்கள் அனைவரையும் அற்புதமாக சேவித்து செல்கின்றனர். மாடவீதி புறப்பாடு முடிந்து பெருமாள்கள் அனைவரும் திருக்கோவிலுக்கு எழுந்தருளும் போது அதிகாலை ஆகிவிடுகின்றது.


காய்சினப்பறவையில் காய்சினவேந்தர்

பின்னர் பெருமாள்கள் அனைவரும் தோளுக்கினியானில் எழுந்தருளுகின்றனர். ஆழ்வார் திருநகரியின் திருவைகாசி பிரம்மோற்சவத்தின் ஆறாம்நாள் காலை  பெருமாள்கள் அனைவரும் மீண்டுமொருமுறை சடகோபரின் தீந்தமிழ் பாசுரங்களை செவி மடுத்துவிட்டு விடைபெற்று செல்கின்றனர். முதலில் திருக்குளந்தை மாயக்கூத்தரை

கூடச்சென்றேன் இனி என் கொடுக்கேன் கோள்வளை நெஞ்சத் தொடக்க மெல்லாம்
பாடற்றொழிய இழந்து வைகல் பல்வளை யார்முன் பரிசழிந்தேன்
மாடக்கொடிமதின் தென்குளந்தை வண்குட பால் நின்ற மாயக்கூத்தன்
ஆடல் பறவை உயர்த்த வெல்லோர் ஆழிவலவனை ஆதரித்தே!!
 என்று மங்களாசாசனம் செய்கின்றார். அந்த மகிழ்ச்சியில் தனது திருக்கோவிலுக்கு கிளம்புகின்றார் மாயக்கூத்தர்.

அடுத்து திருப்புளிங்குடி காய்சினவேந்தர், திருவரகுணமங்கை எம் இடர் கடிவான், திருவைகுண்டம் கள்ளர்பிரான் ஆகிய மூன்று பெருமாள்களும்

புளிங்குடிக்கிடந்து வரகுணமங்கையிருந்து வைகுந்தத்துள்நின்று
தெளிந்தவென்சிந்தையகங்கழியாதே என்னையாள்வாய்! எனக்கருளி
நளிர்ந்தசீருலகமூன்றுடன்வியப்ப நாங்கள்கூத்தாடிநின்றார்ப்ப
பளிங்குநீர்முகிலின்பவளம்போல்கனிவாய் சிவப்ப நீகாண வாராயே.

என்னும் பாசுரம் செவிமடுத்து ஆழ்வாருக்கு பிரியாவிடை கொடுக்கின்றனர்.





நம்மாழ்வார் தந்தை தாய் என்றடைந்த
 தேவர் பிரான் ஆடும் புள்ளில் சேவை

கிளி மாலை 



அடுத்து நம்மாழ்வாரிடம் மங்களாசாசனம் பெற்று  விடைபெறுபவர்கள் இரட்டைத்திருப்பதி பெருமாள்கள் ஆவர்.

சிந்தையாலும் சொல்லாலும் செய்கையினாலும் தேவபிரானையே
தந்தை தாய் என்று அடைந்த வண் குருகூர்ச் சடகோபன்
முந்தை ஆயிரத்துள் இவை தொலைவில்லி மங்கலத்தைச் சொன்ன
செந்தமிழ் பத்தும் வல்லார் அடிமை செய்வர் திருமாலுக்கே.

என்று திருத்தொலைவில்லி மங்கலத்தின் தேவர்பிரானையே தனது தந்தை தாய் என்று நம்மாழ்வார் கொண்டதால்  இவர்களை தானே கூடவந்து  வழியனுப்பி வைக்கின்றார் வகுளாபரணர். கிழக்கு மாட வீதியின் நாயக்கர் மண்டபம் தாண்டும் வரை இவர்களை நம்மாழ்வார் வாத்சல்யத்துடன் வழியனுப்பி பின் தொடர்கிறார்.


மாயக்கூத்தர்  கருட சேவை
பச்சைக்கிளி மாலை , தாமரை மாலை


நவகருடசேவையின் நிறைவாக திருதென்திருப்பேரையின் நிகரில் முகில் வண்ணரும், திருக்கோளூரின்  நிக்ஷேபவித்தரும் நம்மாழ்வாரின் மங்களாசாசனம் பெற்று மீண்டும் அடுத்த வருடம் தங்களின் செந்தமிழ் பாசுரங்களை செவிமடுக்க வருகின்றோம் என்று விடைபெற்று செல்கின்றனர்.மதுரகவியாரும் தம் குருநாதரிடம் விடைபெற்று செல்கின்றார்.





திருக்கோளூர் நிஷேபவித்தன் கருட வாகனத்தில்


பின்னர் இந்த நவகருட சேவையின் முத்தாய்ப்பு நிகழ்ச்சியான நம்மாழ்வாரின் புறப்பாடு மிகவும் சிறப்பாக நடைபெறுகின்றது. கோயில் மரியாதையுடன் நம்மாழ்வார் பந்தல் மண்டபத்தில் இருந்து உள் சன்னதிக்கு எழுந்தருளுகின்றார். அந்த அழகைக் காண கண் கோடி வேண்டும் பக்தர்களின் வெள்ளத்தில் மெல்ல மெல்ல நீந்தி நம்மாழ்வார் சன்னதி அடைய சுமார் மூன்று மணி நேரம் ஆகும். ஒவ்வொருவரும் தம் வாழ்வில் ஒரு முறையாவது காண வேண்டிய உற்சவம் ஆகும். சமயம் கிடைத்தால் சென்று நவதிருப்பதி பெருமாள்களையும் திவ்யமாக சேவித்து விட்டு வாருங்கள்.


பரங்கி நாற்காலியில் மதுரகவியாழ்வார்


பெருமாளின் கருணையினால் இன்றைய தினம் (06.06.2014) ஆழ்வார் திருநகரியில் ஒன்பது கருட சேவை நடை பெறும் நன்னாளில் இத்தொடர் நிறைவடைகின்றது. இது வரை வந்து நவகருட சேவையை சேவித்த அன்பர்கள் அனைவரும் அந்த கோவிந்தன் அருளால் எந்த குறையும் இல்லாமல் வாழ பிரார்த்திக்கின்றேன். இனி அடுத்த தொடராக மலை நாட்டு திவ்ய தேசங்களை சேவிக்கலாம் கூட வாருங்கள் அன்பர்களே.   

Tuesday, April 22, 2014

திருக்குளந்தை மாயகூத்தர் கருட சேவை

                               ஆழ்வார் திருநகரி ஒன்பது கருட சேவை -11


பெருங்குளம் என்று தற்போது அழைக்கப்படும் இந்த திருக்குளந்தை திருத்தலம், திருநெல்வேலியிலிருந்து இருந்து திருச்செந்தூர் சாலையில் திருநெல்வேலியிலிருந்து சுமார் 38 கி.மீ தூரத்திலும், திருப்புளிங்குடி தலத்தில் இருந்து 5 கி.மீ தூரத்திலும், ஸ்ரீவைகுண்டம் தலத்தில் இருந்து 7 கி.மீ தூரத்திலும் அமைந்துள்ளது.

பெருமாள்: ஸ்ரீநிவாசன்(வேங்கடவாணன்), நின்ற கோலம், கிழக்கு நோக்கிய திருமுக மண்டலம்.
உற்சவர் : மாயக்கூத்தன் (சோர நாட்டியன்)
தாயார் : குளந்தைவல்லி(கமலா தேவி), அலர்மேல்மங்கை. (தனி சன்னதி இல்லை.)
விமானம்; ஆனந்த நிலையம்.
தீர்த்தம்: பெருங்குளம்.
பிரத்யட்சம்: பிரகஸ்பதி.
ஆகமம் : வைகானஸம் – சம்பிரதாயம்: தென்கலை.
மங்களாசாசனம்: நம்மாழ்வார் ஓர்  (8ம் பத்து -2ம் திருவாய் மொழி) பாடலால் மங்களாசாசனம் செய்துள்ளார். 
கிரகம்: சனி ஸ்தலம்
திவ்ய தேசங்களுள் 86வது நவதிருப்பதிகளில் 7வது.
சிறப்பு: கமலாவதியை மார்பில் ஏற்றது. கருடன் (ஆடல்பறவை) ஏக ஆசனத்தில் உற்சவருடன் எழுந்தருளியுள்ளார்.



கமலாவதியை மார்பில் ஏற்றது:  துலைவில்லி மங்கலத்திற்கு வடகிழக்கில் உள்ள தாடக வனம் என்ற இத்தலத்தில் விப்ர குலத்தைச் சார்ந்த வேதசாரன் என்ற அந்தணன் தன் மனைவி குமுதவல்லியுடன் மகப்பேறு வேண்டி பகவானை வழிபட்டு வந்தான். பெருமாளின் அனுகிரகத்தினால் அவர்களுக்கு அலர்மேல் மங்கை அம்சமாக ஒரு பெண் மகவு  பிறந்தது. “அக்குழந்தைக்கு “கமலாதேவி” என்று பெயரிட்டு சீரும் சிறப்புமாக வளர்த்து வந்தனர். அவளும்  ஆண்டாளைப் போல “மானிடர்க்கென்று பேச்சுப்படில் வாழகில்லேன் கண்டாய் மன்மதனே”, என்று வைராக்கியத்துடன்  பெருமாளையே மணப்பேன் என்று, பெற்றோர் உற்றார், உறவினர், கூறியும் கேளாமல் வனம் சென்று அருந்தவம் இயற்றினாள். தயாபரன் தவம் செய்யும் தையல் முன் தோன்றி இவ்விளம் வயதில் இவ்வாறு கடும் தவம் இயற்றக் காரணம் யாது? என்று வினவ, அவளும் "ஸ்ரீமந் நாராயணனையே மணாளனாக அடைய" என்று மறு மொழி கூறினாள். பகவானும் தம் கௌஸ்துபமணியோடு அவளை ஆலிங்கனம் செய்து கொண்டார். தேவர்கள் பூமாரி பொலிந்தனர். பாலிகை தவம் செய்த இடமாதலால், 'பாலிகைவனம்' என்ற பெயரடைய வேண்டும் என்று தேவர்கள் வேண்டினார்கள். வேதசாரனும் தன் செல்லப்புதல்வியை பெருமாள் தனது மார்பில் தாங்கியிருப்பதைக் கண்டு மகிழ்ந்து பெருமாளை பூசித்து வந்தான்.



மாயக்கூத்தாடியது (சோர நாட்டியன்): ஒரு நாள் வேதசாரனின் மனைவி குமுதவல்லி குளத்திற்க்கு நீராட சென்ற போது அச்மநாரன் என்ற அவுணன் அவளை அபகரித்துச் சென்று இமயமலையில் ஒரு குகையில் சிறை வைத்தான். வேதசாரன் பூச நட்சத்திரத்துடன் கூடிய ஒரு தை பௌர்ணமியன்று  கலச தீர்த்தத்தினால் பெருமாளுக்கு திருமஞ்சனம் செய்வித்து, பெருமாளே! “அடியேன் மனையாளை ஒரு அவுணன் அபகரித்துச் சென்று விட்டான், மனைவி இல்லாதவன் ஒரு கர்மத்திற்கும் பாத்திரவானல்லன் எனவே அருள் புரிய வேண்டும் என்று வேண்டினான்.

உடனே பகவான் கருடவாகனத்தில் ஆரோகணித்து இமயமலை சென்று குமுதவல்லியை மீட்டு வேதசாரனுக்கு அருள் புரிந்தார். இதை அறிந்த அச்மநாரன் பெருமாளுடன் போர் புரிய பாலிகாவனம்  வந்தான். பெருமாள் அவனை காலைப் பிடித்து தரையில் மோதி அவனது தலையில் நின்று நர்த்தனம் புரிந்து அவனை வதம் செய்தார். தேவர்கள் மகிழ்ந்து கங்கா தீர்த்தத்தினால் திருமஞ்சனம் செய்தனர். சோரன் மேல் நாட்டியம் செய்தபடியால்  பகவானுக்கு “சோர நாட்டியன்” அதாவது "மாயக்கூத்தன்" என்ற திருநாமம் ஏற்பட்டது.



இங்கிருந்து கருடாழ்வார் மீது பெருமாள் புறப்பட்டு இமயம் சென்றதால் கருடன் இங்கு உற்சவராகவும் எழுந்தருளியுள்ளார். மேலும் உதவி புரிந்த கருடாழ்வாருக்கு   உற்சவர் மற்றும் உபயநாச்சியர்களுடன் ஏக ஆசனம் அளித்துள்ளார் பெருமாள்.  கருடன் இங்கே சிறகுகளை உயரே தூக்கிய வண்ணம் பறக்கும் கோலத்தில் ஆடல் பறவையாகக் சேவை  சாதிக்கின்றார். இத்திருக்கோயிலின் மதிலின் ஈசானிய மூலையில் வீற்றிருக்கும் கருடனுக்குப் பெருமாளுக்குச் சாற்றிய பூச்சட்டையை மறு நாள் சாற்றுவது வழக்கம். இதன் பிறகே பக்தர்களுக்குப் பிரசாதமாக விநியோகம் செய்யப்படுகின்றது. இத்தலத்தைப் மங்களாசாசனம்ச் செய்த நம்மாழ்வார்     “ ஆடல் பறவை” என்று  கருடனையும் மங்களாசாசனம் செய்துள்ளார். இதோ பாடல்

கூடச்சென்றேன் இனி என் கொடுக்கேன் கோள்வளை நெஞ்சத் தொடக்க மெல்லாம்
பாடற்றொழிய இழந்து வைகல் பல்வளை யார்முன் பரிசழிந்தேன்
மாடக்கொடிமதின் தென்குளந்தை வண்குட பால் நின்ற மாயக்கூத்தன்
ஆடல் பறவை உயர்த்த வெல்லோர் ஆழிவலவனை ஆதரித்தே!!




திருக்குளந்தை பெரிய அளவிலான குளங்கள், வளம் மிக்க வயல்கள் சூழ்ந்த பசுமையான பூமியாகும். இங்கு, மூலவர் ஸ்ரீனிவாச பெருமாள் நின்ற கோலத்தில் நெடியோனாக சதுர்புஜராய் சங்கு  சக்கரங்களுடன் சேவை சாதிக்கின்றார். குமுதவதியை மீட்டுவர எழுந்து சென்ற பெருமாள் அதன் பின்னர் அமராமல் பக்தர்களைக் காக்க வேண்டி உடனே செல்ல வசதியாக நின்ற திருக்கோலத்தில் சேவை சாதிப்பதாக ஐதீகம். பொதுவாக வைணவத் தலங்களில் பெருமாளின் திருவடி தரிசனம் பெரிய பாக்கியமாகக் கருதப் படுகிறது. அதன் காரணமாகவே, இத்தல பெருமாளின் திருவடியை நன்றாக தரிசிக்க அர்த்த மண்டபத்திற்கு வெளியே பெரிய கண்ணாடி ஒன்று உயரத்தில் வைக்கப்பட்டுள்ளது புதுமையான ஒன்றாகும்.   

இத்திருத்தலத்திலும் மற்ற பாண்டிய நாட்டித் திவ்ய தேசங்களைப் போலவே  கற்சிற்பங்களின் பேரழகு கண்ணையும் மனதையும்  கவர்கிறது. பல தூண்கள் சிற்பங்களின் அழகால் நிறைந்திருந்தாலும் குறிப்பாக ஒரு தூணில் குதிரையும் யாழியும் கலந்த ஒரு மிருகத்தை வாகனமாகக் கொண்டு கல்கி அவதாரம் வாளுடன் தோற்றமளிப்பது தனித்துவமாக உள்ளது.

“மாயக்கூத்தா! வாமனா! வினையேன் கண்ணா! கண்கைகால்
தூய செய்ய மலர்களாச் சோதிச் செவ்வாய் முகிழ்தா
சாயல் சாமத்திருமேனி தன் பாசடையா தாமரை நீள்
வாசத்தடம்போல் வருவானே! ஒருநாள் காண வாராயே
!” (8-5-1)


மாயக் கூத்தன் என அழைக்கின்றார் நம்மாழ்வார்  கண்ணனை. மாயக் கூத்தனான அந்தக் கண்ணனைக் காணவேண்டும், அவன் வடிவழகை இரு கண்ணாரக் காணவேண்டும் என்ற ஆவல் மீதூற அவனை அழைக்கின்றார். மாயக் கூத்தா, வாமனா, உன் கண்களும் கைகளும், கால்களும் மலர்களால் ஆனவையோ, உன் திருவாய் ஆம்பல் மலரின் அரும்போ? உன் கரிய திருமேனியைப் பார்த்தால் பச்சை இலை போல் உள்ளதே? இவைகள் அனைத்தையும் உன்னிடத்தில் வைத்திருக்கும் நீ நான் தாகம் தீர்த்துக் கொள்ள அமைந்த திருக்குளம்போல் உள்ளாய்! உன்னை நான் என் கண்ணாரக் காண நீ ஒரு நாள் நேரில் வரமாட்டாயா?” என்றும் அழைக்கின்றார் நம்மாழ்வார்.


இத்தலத்திற்கும் ஸ்ரீவில்லிபுத்தூருக்கும் நிறைய ஒற்றுமைகள் உள்ளன. அங்கு ஆண்டாள் திருவவதாரம் செய்து எம்பெருமானுக்கே  மாலையிடுவேன் என்று  மணங்கொண்டாள். அதே போல இங்கு கமலாதேவி அவதரித்து எம்பெருமானை மணங்கொண்டாள். அங்கும் ஆண்டாள் அரங்கமன்னார் கருடன் ஏக சிம்மாசனம். இங்கும் மாயக்கூத்தர் உபய நாச்சியார்கள் கருடன் ஏக சிம்மாசனம். 

இனி வரும் பதிவில் தென்திருப்பேரையின் மகரநெடுங்குழைக்காதரின் கருட சேவையைக் காணலாம் அன்பர்களே. 

Tuesday, March 25, 2014

திருத்தொலைவில்லி மங்கலம் செந்தாமரைக் கண்ணன் கருடசேவை

                                 ஆழ்வார் திருநகரி ஒன்பது கருட சேவை -9





திருத்தொலைவில்லி மங்கலம் இரண்டு திருப்பதிகளை அருகருகே கொண்டுள்ளதால் இரட்டைத்திருப்பதி என்றும் அழைக்கப்படுகின்றது. தன்பொருநை நதியின் வடகரையில் திருப்புளியங்குடி திருப்பதியின் தென் கிழக்கிலும் நெற்பயிர்களும், மலர்களும் நிறைந்த இந்தத்தலம் திருப்பெருங்குளத்திற்கு மேற்கில் சுமார் 5 கி.மீ தூரத்தில்   இத்தலம் அமைந்துள்ளது.  திவ்ய தேசங்களுள் 84வது நவதிருப்பதிகளில் எட்டாவது மற்றும் ஒன்பதாவது. இத்திருத்தலங்களுக்கு மேற்கே  ஒன்றரை கி.மீ தூரத்தில் நம்மாழ்வாரின் அவதார ஸ்தலம் அப்பன் கோவில் உள்ளது. இதுவும் குக்கிராமம்தான் அதிக வீடுகள் கிடையாது. 

தெற்குக் திருக்கோவில்:

மூலவர்:  ஸ்ரீநிவாசன், உபய நாச்சியார்களுடன் நின்ற திருக்கோலம் கிழக்குப்பார்த்த திருமுக மண்டலம்.
உற்சவர்: தேவர் பிரான்
தாயார்: அலர்மேல் மங்கை, பத்மாவதி தனி சந்நிதி இல்லை.
விமானம்: குமுத விமானம்.
தீர்த்தம்: வருண தீர்த்தம், தாமிரபரணி
பிரத்யட்சம்: இந்திரன், வாயு, வருணன்.
ஆகமம் : வைகானஸம் – சம்பிரதாயம்: தென்கலை.
மங்களாசாசனம்: நம்மாழ்வார் 12 (6ம் பத்து -5ம் திருவாய் மொழி) பாடல்களால் மங்களாசாசனம் செய்துள்ளார். 
கிரகம்: இராகு ஸ்தலம்.



செந்தாமரைக் கண்ணன் கருட சேவை 

வடக்குத் திருக்கோயில்:

மூலவர் : அரவிந்த லோசனர் (அமர்ந்த திருக்கோலம்) கிழக்குப் பார்த்த திருமுக மண்டலம்.
உற்சவர்: செந்தாமரைக்கண்ணன்.
தாயார் : கருந்தடங்கண்ணித் தாயார்.
விமானம்: குமுத   விமானம்.
தீர்த்தம் : வருண தீர்த்தம்.
பிரத்யட்சம் : வருணன், இந்திரன், வாயு.
ஆகமம் : வைகானஸம் – சம்பிரதாயம்: தென்கலை.
மங்களாசாசனம்:நம்மாழ்வார் 12 (6ம் பத்து -5ம் திருவாய் மொழி) பாடல்களால் மங்களாசாசனம் செய்துள்ளார். 
கிரகம்: கேது ஸ்தலம்.




தேவர் பிரான் வைபவம். திருப்புளியங்குடி திவ்ய தேசத்தில் தென்கிழக்கில் அமைந்துள்ள இத்தலத்தில் நெற்பயிர்களும், மலர்களும் நிறைந்த கேதாரம் என்ற திருப்பதியில் ஆத்திரேய கோத்திரத்தில் உதித்த சுப்பரபர் என்ற முனிவர் இங்கு வந்தவுடன்  இவ்விடத்தின் பொலிவைப் பார்த்து ஒரு  வேள்வி இயற்ற  முடிவு செய்தார். யாக சாலைக்காக பூமியை உழுத போது அவருக்கு அவ்விடத்தில் ஒர் தராசையும் வில்லையும் கண்டு வியப்படைந்தார். பிறகு அவர் இவை யாருடையவை? எக்காலத்தில் இங்கு கொண்டுவரப்பட்டன என்று எண்ணிக்கொண்டு தன் கரங்களினால் அவற்றை தூக்க  தராசு ஒரு பெண்ணாகவும், வில் ஒரு ஆணாகவும் மாறினர். அவர்களைப் பார்த்து சுப்பரர் எவ்வாறு இப்படி மாறினீர்கள் என்று வினவ, அதற்கு அந்த ஆண், காமம், வெகுளி, மயக்கம் என்ற மூன்றையும் வென்ற முனிவர்களே! முற்பிறவியில் நான் ஒரு வித்யாதரன் என்ற தேவனாயிருந்தேன், இவள் என் பத்தினி, நான் இவளிடத்தில் மோகம் கொண்டு திகம்பரனாயிருந்த சமயத்தில் யாத்ரா மார்க்கமாக சென்ற குபேரன் பார்த்து விட்டான். அவன் மிகுந்த கோபம் கொண்டு எங்கள் இருவரையும்  வில்லாகவும், தராசாகவும் போகும்படி சபித்தான். நாங்கள் சாப விமோசனம் வேண்ட வெகு காலத்திற்குப்பிறகு சுப்பிரபர் என்ற முனி எங்கும் தம்து யாகம் சித்தியாகாமல்  முடிவில் இங்கு வந்து சேர்வார். அவர் யாகத்திற்காக பூமியை உழும் போது அவர் கரம் பட்டு உங்கள் சாபம் நீங்கும் என்று கூறிச்சென்றார். அது போலவே இன்று தங்கள் கரம் பட்டு எங்கள் சாபம் நீங்கியது என்றான். பின்னர் இருவரும் முக்தியும் அடைந்தனர்.


குழையும் வாள்முகத்தேழையைத் தொலைவில்லி மங்கலம் கொண்டு புக்கு
இழைகொள் சோதிச் செந்தாமரைக்கண் பிரான் இருந்தமை காட்டினீர்
மழைபெய்தாலொக்குங்கண்ணநீரினொடுஅன்று தொட்டும்மையாந்து  இவள்
நுழையுஞ்சிந்தயளன்னைமீர்! தொழும் அத்திசையுற்று நோக்கியே.

பெருமாளைக் கண்ட பின் வேறு எதுவும் நினைவில் இல்லாத பராங்குச நாயகியாய் தன்னை பாவித்து நம்மாழ்வார் பாடிய தோழிப் பாசுரம். 


பின் முனிவர்கள் ஒன்று கூடி யாகத்தை பூர்த்தி செய்து மஹாவிஷ்ணுவை ஆராதித்தனர். அங்கு ஆவீர்பவித்த தேவ பிரானை, தேவரீர் இந்த யாக சாலையில் ஸ்ரீநிவாசன் என்ற திருநாமத்துடன் எழுந்தருளியிருந்து  பக்தர்களுக்கு அருள் புரிய வேண்டும். இங்கு துலையும் வில்லும் முக்தியடைந்தபடியாலும், இங்கு யாவருக்கும் மங்களம் உண்டாகின்றபடியாலும் இவ்விடம் ’துலைவில்லி மங்கலம்’ என்ற பெயருடன் விளங்க வேண்டும் என்று விண்ணப்பிக்க சுப்பிரபர் பிரார்த்தனையை ஆங்கீகரித்தான் அயர்வறு அமரர்கள் அதிபதி. திருச்சீரங்கநாதன் பள்ளி திருச்சிராப்பள்ளியாகத் திரிந்தது போல திருத்துலைவில்லிமங்கலம், தொலைவில்லி மங்கலமானது (துலை – தராசு).  





வில் என்பது ஏக பத்னி விரதத்தை குறிக்கின்றது. ஸ்ரீ இராமபிரான், இப்பிறவியில் உன்னையல்லாம் வேறு ஒரு மாதரை கனவிலும் நினையேன் என்று சீதா பிராட்டிக்கு வரம் கொடுத்து ஏக பத்னி விரதனாக இருந்ததால்தான் அவர் சிவ தனுசை அநாசயமாக தூக்க முடிந்தது,  காகாசுரன், வாலி இராவணன் ஆகியோரை  வெல்ல முடிந்தது. தராசு எவ்வாறு தன் மேல் வைக்கப்படும் இரு பக்க பொருட்களின்  சம நிலையைக் காட்டுகின்றதோ அது போல நம்முடைய நல் வினைகள், தீவினைகளை பொறுத்து நமது வாழ்க்கை அமைகின்றது.  தேவர்பிரான் பூமிக்கு அதிபதியான இந்திரனுக்கும், மழைக்கு அதிபதியான  வருணனுக்கும், வாயு பகவானுக்கும் பிரத்யக்ஷம். நாம் உயிர் வாழ காற்று, நீர் மற்றும் உணவு விளைகின்ற பூமி ஆகிய மூன்றும்  இன்றியமையாதது  என்பதை உணர்த்துகின்றார் பெருமாள். இங்கு வில்லாளி சகல கல்யாண குணங்களையும் தன்னிடம் கொண்ட ஸ்ரீநிவாசப்பெருமாள். அவர் நின்ற கோலத்தில் உபய நாச்சியார்களுடன் சேவை சாதிக்கின்றார்.








காய்சினவேந்தரை அடுத்து இரட்டைத்திருப்பதிகளின் செந்தாமரைக் கண்ணன்  நம்மாழ்வாருக்கு சேவை சாதிக்கின்றார். அந்த புகைப்படங்களி இப்பதிவில் காணுகின்றீர்கள். அடுத்த பதிவில் தேவ்ர் பிரானின் கருடசேவையைக் காணலாம். 









        


Monday, December 30, 2013

திருவரகுணமங்கை(நத்தம்) எம் இடர் கடிவான் கருடசேவை

ஆழ்வார் திருநகரி ஒன்பது கருட சேவை -7

விஜயாசனர் 

ஸ்ரீவைகுண்டம் தலத்திற்கு கிழக்கே சுமார் மூன்று கி.மீ தூரத்தில் திருவரகுண மங்கை தலம் அமைந்துள்ளது. நத்தம் என்ற பெயரே வழங்கப்படுகின்றது. குக்கிராமம்தான் ஆனால் பேருந்து வசதி உள்ளது. ஆழ்வார்கள் மங்களாசாசனம் செய்த திவ்ய தேசங்களுள் 82வது தலம். நவதிருப்பதிகளில் இரண்டாவது திருப்பதி. நவகிரகத்தில் இது சந்திரன் ஸ்தலமாகும்.

மூலவர் : விஜயாசன பெருமாள் (வெற்றிருக்கைப் பெருமாள்), ஆதிசேஷன் குடை பிடிக்க அமர்ந்த திருக்கோலம், கிழக்குப் பார்த்த திருமுக மண்டலம்.
உற்சவர்: எம் இடர் கடிவான்.
தாயார் : வரகுணவல்லி, வரகுண மங்கை( தனி சன்னதி இல்லை)
விமானம்: விஜய கோடி விமானம்.
தீர்த்தம் : அக்னி தீர்த்தம், தேவ புஷ்கரணி.
பிரத்யட்சம் : அக்னி, உரோமச முனிவர், சத்தியவான்.
ஆகமம் : பஞ்சராத்ரம் – சம்பிரதாயம்: தென்கலை.
மங்களாசாசனம் : நம்மாழ்வார். 
கிரகம்: சந்திர ஸ்தலம்.



கோபுர வாசல் சேவை ( கற்பூர ஆரத்தியுடன்)

செம்படவன் முக்தி பெற்றது: இந்த வரகுணமங்கை தலத்தில் ’ரோமசர்’ என்னும் முனிவர் தவம் செய்து வந்தார். அவருக்கு சத்தியவான் என்பவன் சீடனாயிருந்தான். அவன் ஒரு சமயம் அகநாச தீர்த்தத்தில் நீராடி திரும்புகையில், அந்த குளத்தில் ஒரு செம்படவன் வலை வீசி மீன் பிடித்துக் கொண்டிருந்த போது ஒரு நாகம் அவனைத் தீண்ட அவன் மரணமடைந்தான். நாகமும் மறைந்தது.  தேவலோகத்திலிருந்து கந்தவர்கள் கொண்டு வந்த விமானத்திலேற்றி சுவர்க்கம் அடைந்தான். அவனது சரீரத்தையும் பக்ஷிகள் புசித்தன.







ஆடும்புட்கொடி அம்மான் எம் இடர் கடிவான் 

இதைக் கண்ட சத்தியவான், தனது குருவான ரோமசரிடம் சென்று சுவாமி! மகாபாவியான இந்த வலைஞனுக்கு என்ன புண்ணியத்தால் சொர்க்கம் கிட்டியது என்று வினவினான். அதற்கு ரோமசர், சத்தியவானே இந்த செம்படவன் கொடுந்தொழில் புரிந்த பாவியென்றாலும் "இந்த வரகுணமங்கை தலத்தில் உயிரை விட்டதால் அவன் நற்கதியடைந்தான்" என்று கூறினார். இவன் முற்பிறவியில் விதர்ப்பதேசத்து அரசன் மகன். முன் செய்த வினைப் பயனால் அவன் தீயவர்களுடன் நட்புக்கொண்டு தீயவழியில் வாழ்ந்தால் இப்பிறப்பு ஏற்பட்டது. ஒரு புண்ணிய விசேஷத்தால் வரகுணமங்கையில் வந்து பிறந்தான், அதனால் நற்கதியடைந்தான் என்றார்.


வரகுண மங்கை எம் இடர் கடிவான் கருட சேவை 

வேதவித் விண்ணுலகெய்தியது: மீண்டும் ரோமசர் தொடர்கிறார். என் பிரிய சிஷ்யனே! முன்னொரு காலத்தில் ரேவா நதிக்கரையில் புண்ணியகோசம் என்ற அக்ரஹாரத்தில் வேதவித் என்னும் அந்தணன் இருந்தான். அவன் மாத,பிதா, குரு மூவரையும் வழிபட்டு அவர்களுக்கு வேண்டிய பணிவிடைகளை செய்து திருமாலை நோக்கி ஆஸனதை என்னும் மந்திரம் ஜெபித்து தவமிருக்க பெருமாளும் கிழ உருவத்தில் தோன்றி வரகுண மங்கை தலத்திற்கு சென்று  தவம் செய் என்று கூறினார். அவரும் அதுபோலவே இங்கு வந்து தவம் செய்து  திருமாலின் அருள் பெற்று பரமபதம் அடைந்தார். எனவே இத்தலம் "மோக்ஷபுரி" என்றும் அழைக்கப்படுகின்றது.  



இராமாயணத்தில் சீதா தேவியை இராமன் தீக்குளிக்க கூறிய போது அவள் தர்மத்தின் வழியில் நின்றதால் அக்னியால் ஒன்றும் செய்ய முடியவில்லை.  பிரமனின் கர்வத்தை அழித்த ரோமசமுனிவருக்கும், சத்தியத்தால் எமனிடமிருந்து தன்  கணவனின் உயிர் மீட்ட பஞ்ச கன்னிகளில் ஒருத்தியான சாவித்திரிக்கும், அதர்மத்தையும் அக்கிரமத்தையும் சுட்டு பொசுக்கும் அக்னி தேவனுக்கும் காட்சியளித்த தலம். இம்மூவருக்கும் சத்தியத்திற்கு ஜெயம் அளிப்பவராக, "சத்திய நாராயணராக", ஆதி சேஷன் குடை பிடிக்க தர்மமே  வெல்லும்  என்பதை விளக்கும் வகையில் தர்மத்தின் மேல் அமர்ந்து விஜயாசனராக உபய நாச்சியார்களுடன் சேவை சாதிக்கின்றார். ஒரே பிரகாரத்துடன் அமைந்துள்ளது இந்த தலம்.       


Sunday, December 29, 2013

ஸ்ரீவைகுண்டம் கள்ளர் பிரான் கருட சேவை


ஆழ்வார் திருநகரி ஒன்பது கருட சேவை -6




இத்தலம் திருநெல்வேலி திருச்செந்தூர் நெடுஞ்சாலையில் திருநெல்வேலியிலிருந்து 28 கி.மீ தொலைவிலும்ஸ்ரீவைகுண்டம் ரயில் நிலையத்திலிருந்து 1 கி.மீ  தொலைவிலும் தாமிரபரணியாற்றின் வடகரையில் உள்ளது.

மூலவர் : வைகுந்த நாதன், நின்ற திருக்கோலம், கிழக்குப் பார்த்த திருமுக மண்டலம்.
உற்சவர்: கள்ளர் பிரான் (சோர நாதர்)
தாயார் : வைகுந்த வல்லி, கள்ளர்பிரான் நாச்சியார்( தாயார்களுக்கு தனித்தனி சன்னதி)
விமானம்: சந்திர விமானம்
தீர்த்தம் : தாமிரபரணி,பிருகு தீர்த்தம், கலச தீர்த்தம்
தல விருட்சம்: பவள மல்லி  
பிரத்யட்சம் : பிரம்மா, இந்திரன் , பிருகு  சக்ரவர்த்தி
ஆகமம் : பஞ்சராத்ரம் – சம்பிரதாயம்: தென்கலை.
மங்களாசாசனம் : நம்மாழ்வார் 
கிரகம்: சூரியஸ்தலம்



பெருமாளின் மங்களாசாசனம் பெற்ற 108 திவ்ய தேசங்களில் இது 81 வது திவ்ய தேசம். நவதிருப்பதிகளில் முதலாவதாகவும்நவகிரக ஸ்தலங்களில் சூரிய ஸ்தலமாகவும் இந்த ஸ்ரீ கள்ளபிரான் திருக்கோயில் அமைந்துள்ளதுஸ்ரீ கள்ளபிரான் சுவாமி சந்திர விமானத்தின் கீழ் காட்சி தருகிறார்நான்கு புஜங்களுடன், கையில் தண்டத்துடன்ஆதி சேஷனைக் குடையாகக்  மார்பில் மஹா லக்ஷ்மியுடன்  நின்ற கோலத்தில் அருள் பாலிக்கிறார்பிரகாரத்தில் வைகுந்தவல்லித் தாயார் சன்னதி உள்ளதுமேலும் நரசிம்மர் சன்னிதிகோதண்ட ராமர் சன்னிதியும் உள்ளன. சித்திரை மற்றும் ஐப்பசி மாதங்களில்பௌர்ணமி நாளன்றுசூரியனின் கதிர்கள் பெருமாளின் பாதத்தில் படும்படிஇதற்கு ஏற்றாற் போல் சுவாமி சன்னதி எதிரிலுள்ள கொடி மரம்மேரு வடிவ  பலிபீடம் தென்புறம் விலகியிருக்கிறது.  இத்தலம் சூரிய தோஷ பரிகார ஸ்தலம் ஆகும். ஆதித்ய ஹ்ருதயம் சேவிக்க அருமையான பலன் உண்டு. 



கள்ளர்பிரான் கருடசேவை

இரண்டு திருவாசிகளும் மற்றும் கருடாழ்வாருக்கும் முழுதும் மலர் மாலை அலங்காரமும் இங்கு மட்டுமே சேவிக்க கிட்டியது. ஒவ்வொரு பெருமாளுக்கும் ஒரு சிறப்பு அலங்காரம்  காணக்கண் கோடி வேண்டும். 


தல வரலாறு: முன்பு ஒரு சமயம் சத்யலோகத்தில் பிரளயம் ஏற்பட்டது. அப்போது அயன் ஆழ்ந்த நித்திரையில் இருந்தார். அதையறிந்த கோமுகசுரன், அவரிடமிருந்து வேதங்களை அபகரித்து சென்றான். துயில் நீங்கி எழுந்த பிரம்மன் அதற்காக வருந்தி, அதனை அவனிடமிருந்து மீட்கும் பொருட்டு மஹாவிஷ்ணுவைக் குறித்து தவம் செய்ய எண்ணி,  தன் கையிலிருந்த தண்டத்தை ஒரு பிரம்மாச்சாரியாக மாற்றி ”பூவுலகில் தாமிரபரணி நதிக்கரையில்   தவம் புரிய ஒரு இடத்தை பார்த்து வா” என்று அனுப்பினார். அவனும் நதியின் இரு கரையிலும் பார்த்து விட்டு இறுதியாக திருக்கோளுருக்கு அருகில் உள்ள ஜயந்திபுரிக்கு வந்தான். அங்கு ஒரு மோகினியைக் கண்டு மோகித்து அவளுடன் காலம் கழித்து நான்முகன் கட்டளையை மறந்தான்.

இதையறிந்த சதுர்முகன் தன் கையிலிருந்த  கெண்டியை ஓர் பெண்ணாக்கி “ பெண்ணே! தவம் இயற்ற தாமிரபரணி நதிக்கரையில் ஒரு நல்ல இடம் பார்த்து வா” என்று அனுப்பினார்.  அவளும் வெகு நாள் பூவுலகில் சுற்றி  சோலைகள் நிறைந்த இந்த பரமபாவனமான இடமே தவத்திற்குரியது என்று பிரம்மனிடம் தெரிவித்தாள்.  பிரம்மனும் இங்குவந்து கடும் தவம் செய்ய, திருமால் அதற்கு இரங்கி சதுர்முகனுக்கு நேரில் காட்சி கொடுத்து, கோமுகாசுரனை முடித்து அவனிடமிருந்த வேதங்களை மீட்டு பிரம்மனிடம் அளித்தார்.
பிரமனும் “அகல் விசும்பும் நிலனும் இருளார் வினைகெட செங்கோல் நடாத்துவீர்” எப்படி வைகுந்தத்திலிருந்து இங்கு எழுந்தருளி சேவை சாதித்தீரோ அவ்வண்ணமே இங்கு எப்பொழுதும் சேவை சாதித்து அடியார்களின் “செடியாய வல்வினைகளை தீர்த்து அருள் புரிய   வேண்டும்”  இத்திருப்பதியும் ஸ்ரீ வைகுண்டம் என்ற திருநாமத்துடன் விளங்க வேண்டும் என்று விண்ணப்பம் செய்ய, பெருமாளும் அவ்வாறே இங்கு கோயில் கொண்டார். பிரமனும் தனது கெண்டியால் தாமிரபரணி தீர்த்தத்தை எடுத்து  பெருமாளுக்கு திருமஞ்சனம் செய்ததாலும், நதிக்கரையில் கலசத்தை ஸ்தாபித்ததாலும், இத்தீர்த்தம் “ கலச தீர்த்தம்” என்று வழங்கப்படுகின்றது. பிரமன் வைகுண்ட நாதருக்கு சைத்ர உற்சவம் நடத்தி பின் சத்திய லோகம் சென்றார்.


காய்சின பறவையில் கள்ளர்பிரான் 


வைகுந்தநாதன் சோரநாதன் ஆன வரலாறு: இத்தலத்தில் காலதூஷகன் என்ற கள்வன் ஒருவன் இருந்தான். அவன் திருடச்செல்லும் போது வைகுந்த நாதரிடம், தேவா! நான் எவ்விடத்தில் திருடச்சென்றாலும்  ஒருவரும் அறியாவண்ணம் திருடிவர வேண்டும். அவ்வாறு திருடிய பணத்தில் பாதியை உமக்கு காணிக்கையாகத் தருவேன் என்று வணங்கிச் செல்வான். குறுகிய காலத்தில் ஏராளமான செல்வத்தை கொள்ளை அடித்தான், தான் கூறியது போலவே அதில் பாதியை பெருமாளுக்கு காணிக்கையாக்கி வந்தான்.

ஒரு நாள் அரசன் அரண்மனையில் திருடும் போது அவனது சில சகாக்கள் அரச சேவகர்களிடம் மாட்டிக்கொண்டனர். அவர்கள் அரச தண்டனைக்கு பயந்து காலதூஷகனை காட்டிக்கொடுத்து விடுவதாக கூற அவனும் பகவானை சரணடைந்து  துதி செய்ய, கருணைக் கடலான கார்முகில் வண்ணரும் வயது முதிர்ந்த வேடத்தில் வந்து அப்பா நீ அஞ்ச வேண்டாம் தஞ்சமென்றவரை ஆதரிப்பது என் கடமை என்றார்.    

பிறகு பகவான் கால்தூஷகனாக வடிவெடுத்து அரண்மனைக்கு செல்ல வழியில் திருடர்கள் இவரை நோக்கி இவனே எங்கள் தலைவன் என்று கூற சேவகர்கள் அவரை அரண்மனைக்கு  அழைத்து சென்று அரசன் முன்னர் நிறுத்தினர். மன்னனும் நீ யார்? நீ இருப்பது எவ்விடம்? எதற்காக அரண்மனையில் புகுந்து கொள்ளையடித்தாய்? என்று வினவினான். அது கண்ட வைகுந்தநாதனாக இருந்து சோரநாதனான, காலதூஷகனான பெருமாள் அரசே! என் பெயர் கள்ளர் பிரான், ஸ்ரீவைகுண்டம் எனது இருப்பிடம், என் பிழைப்புக்காக உன் பணம் முழுவதையும் திருடினேன். உன் குற்றத்தை நீ தெரிந்து கொள்ளவில்லை பணத்திற்கு பங்காளிகள் நால்வர். அவர்கள் தர்மம், அக்னி, திருடன், ராஜா. இவற்றில் முந்தியது தருமம், தருமம் செய்யப்படாத செல்வம் கள்வனாகிய  என்னால் அபகரிக்கப்பட்டது. எனவே இனி தர்மம் செய்வாய் என்றார்.



அது கேட்ட அரசனும் சிங்காதனத்திலிருந்து எழுந்து  நமக்கு நற்புத்தி புகட்டியவர் பகவானே என்று தீர்மானித்து வைகுந்த நாதா! கள்ளர் பிரானே! இன்று முதல் தாங்கள்  சோரநாதன் (கள்ளர் பிரான்) என்ற திருநாமத்துடன் எழுந்தருளியிருத்தல் வேண்டும் என்று விண்ணப்பித்தான். அது முதல் உற்சவர் கள்ளர்பிரான் என்று வழிபடப்படுகின்றார். 





பால் திருமஞ்சனம்:
தென்னகத்தில் குறிப்பாக மதுரை, திருநெல்வேலி பகுதிகளில் பால்பாண்டி என்ற பெயரை மக்கள் தங்கள் பிள்ளைகளுக்கு சூட்டும் வழக்கம் உள்ளது. இது இத்தலத்து பெருமாளின் பெயராகும். பூவுலகில் ஸ்ரீவைகுண்டபதி பிரமன் தவத்திற்கு மகிழ்ந்து அர்ச்சா மூர்த்தியாக எழுந்தருளிய பிறகு அந்த சிறிய சன்னதியும்  மூர்த்தியும் பூமியில் புதையுண்டன.  பின்னர் பாண்டிய மன்னர் காலத்தில்,  இங்கு மேய்ச்சலுக்கு வந்த அரண்மனை பசு, தொடர்ச்சியாக இங்கிருந்த புற்றில் பால் சுரந்தது. இதையறிந்து வந்த பாண்டிய மன்னன், அவ்விடத்தில் சுவாமி சிலை இருந்ததைக் கண்டு  வெகு ஆனந்தம் கொண்டு ஆச்சரியமான பெரிய கோயில் எழுப்பினான். அன்றிலிருந்து தினமும் சுவாமிக்கு பால் அபிஷேகம் செய்து பூஜித்தான். இதனடிப்படையில் தற்போதும் தினமும் காலையில் இவருக்கு பால் திருமஞ்சனம் (அபிஷேகம்) செய்யப்படுகிறது. பாண்டியன் பால் அபிஷேகத்துக்கு ஏற்பாடு செய்தமையால் இந்த சுவாமிக்கும் "பால்பாண்டி' என்ற பெயர் ஏற்பட்டது.

நம்மாழ்வார் பெருமாளை இரு பாடல்களால் வைப்புத்தலமாக  மங்களாசாசனம் செய்துள்ளார். அவையாவன

புளிங்குடிக்கிடந்து வரகுணமங்கையிருந்து வைகுந்தத்துள்நின்று
தெளிந்தவென்சிந்தையகங்கழியாதே என்னையாள்வாய்! எனக்கருளி
நளிர்ந்தசீருலகமூன்றுடன்வியப்ப நாங்கள்கூத்தாடிநின்றார்ப்ப
பளிங்குநீர்முகிலின்பவளம்போல்கனிவாய் சிவப்ப நீகாண வாராயே

ஆச்சாரியாரின் அழகிய விளக்கம்: நம்மாழ்வார் தனது பாசசுரத்தில் "புளிங்குடி கிடந்து வரகுணமங்கை இருந்து வைகுந்தத்தில் நின்று" என்று மங்களாசாசனம் செய்துள்ளார். "பசியாக இருக்கும் ஒருவர்  சமையல் முடியும்வரையில் படுத்திருந்து காத்திருப்பார். பசி கூடும்போது, ஆர்வத்தில் எழுந்து அமர்ந்து கொள்வார். சமையல் முடிய இன்னும் தாம்தமானால் பொறுமையிழந்து எழுந்து நிற்பார். இதைப்போலவே நம்மாழ்வாருக்கு அருளவந்த பெருமாள், அவர் பக்தியில் உயர்நிலை அதையும் வரையில் முதலில் புளியங்குடியில் கிடந்தும் (பள்ளி கொண்ட கோலம்), பின் வரகுணமங்கையில் அமர்ந்தும், இந்த ஸ்ரீவைகுண்டத்தில் நின்றும் சேவை சாதிக்கின்றார்" என்று வைணவ ஆச்சாரியாரான அழகிய மணவாளப்பெருமான், நம்மாழ்வாரின் இந்த பாசுரத்திற்கு  வியாக்கியானம் செய்துள்ளார்.     

எங்கள் கண் முகப்பே உலகர்கள் எல்லாம் இணைஅடி தொழுது எழுந்து இறைஞ்சி
தங்கள் அன்பு ஆர தமது சொல் வலத்தால் தலை தலைச் சிறந்து பூசிப்ப
திங்கள் சேர் மாடத் திருப்புளிங்குடியாய்! திருவைகுந்துள்ளாய்! தேவா!
இங்கண் மா ஞாலத்து இதனுளும் ஒரு நாள் இருந்திடாய்- வீற்று இடம் கொண்டே.(3575)

எங்கள் முன்னால் கண்ணுக்குத் தெரியும்படி உலகத்தவர் அனைவரும் உன் இணையார் திருவடிகளைத் தொழுதபடியும் பின் எழுந்தபடியும் வணங்கி உன்னைத் துதிக்கிறார்கள். அவர்கள் மிகுந்த பக்தியுடன் தத்தம் வார்த்தைகளால் உன்னைப் போற்றி வழிபடுகிறார்கள். இப்படிப்பட்ட மேன்மையுடைய நீ, சந்திரனைத் தொடும் அளவுக்கு உயர்ந்துள்ள மாடங்கள் நிறைந்த திருப்புளிங்குடியில் பள்ளி கொண்டுள்ளாய். நீயே ஸ்ரீவைகுண்டத்தில் நின்ற திருக்கோலத்தில் காட்சி தருகின்றாய். நீயே ஸ்ரீவைகுண்டத்தில் நின்ற திருக்கோலத்தில் காட்சி தருகின்றாய். தேவனே!  அகன்ற இந்த உலகத்தில், பரமபதத்தைப் போலவே இத்திருப்புளிங்குடியிலும் ஒரு நாள் வீற்றிருந்த திருக்கோலத்தில் எங்களுக்குக் காட்சி தர வேண்டும். 

மதுரகவியாழ்வார் 

நம்மாழ்வார் மங்களாசாசனம்: சித்திரை பெருந்திருவிழாவின் போது நம்மாழ்வார், பொலிந்து நின்ற பெருமாளுடன் ஸ்ரீவைகுண்டம் எழுந்தருளுவார். பெருமாளை மங்களாசாசனம் செய்தபின் அன்ன வாகனத்தில் எழுந்தருளும் சடகோபருக்கு கள்ளபிரான், பொலிந்து நின்ற பிரான், வரகுண மங்கை எம் இடர் கடிவான், திருப்புளிங்குடி காய்சினவேந்தன் ஆகிய நான்கு பெருமாள்களும் கருட வாகனத்தில் சேவை சாதிக்கின்றனர்.  



108 திவ்ய தேச சேவை: 
தை மாதம் முதல் நாள் அன்று கள்ளபிரானை 108 போர்வைகளால் போர்த்தி கொடி மரத்தை சுற்றி வந்த பின் பூஜை செய்து ஒவ்வொரு போர்வையாக களைகின்றனர். அன்றைய தினம் ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப்பட்ட 108  திவ்யதேசத்து எம்பெருமான்களாக கள்ளபிரான் சேவை சாதிப்பதாக ஐதீகம்.



ஆச்சரியப்பட வைக்கும் சிற்பங்கள்: பாண்டி நாட்டு திருக்கோயில்களின் சிறப்ப்பம்சமே உலகமே வியந்து போற்றும் சிற்பங்கள் ஆகும். இந்த ஸ்ரீவைகுண்டம் கோவிலும் அதற்கு விதிவிலக்கல்ல. 9 நிலைகளும் 110  அடி உயரமும் கொண்டுள்ள இராஜ கோபுரத்தில் அற்புதமான பல சுதை சிற்பங்கள் உள்ளன. இக்கோவிலின் திருவேங்கடமுடையான் சன்னதியில் நாயக்கர் காலத்தை சார்ந்த அற்புதமான கற்சிற்பங்கள் உள்ளன. அவை அனைவரது கண்ணையும் கருத்தையும் கவர்கின்றன.  குறிப்பாக ஆதிசேஷனை குடையாகக் கொண்டு அமர்ந்த கோலத்தில் உபய நாச்சியார்களுடன் காட்சி தரும் வைகுண்ட பெருமாள் சிற்பம், மூன்று உலகங்களும் தன்னுள் அடக்கம் என்று உணர்த்தும்  அம்பரமூடறுத்து ஓங்கி உலகளந்த பெருமாள் சிற்பம், அன்பிற்கும்  உண்டோ அடைக்கும் தாழ்  என்பதை உணர்த்தும் இராமர், அனுமன் சிற்பம்,




 கணவனின் காலில் இருந்து முள்ளுடன் சேர்த்து வலியையும் எடுக்கும் மனைவி, யாழியின் வாலுக்குள்ளே ஆஞ்சநேயர், பலவித கோலங்களில் வானரங்கள் என ஆயிரம் கதை சொல்லும் சிற்பங்கள் அனைத்தும் தத்ரூபம்.  இனி வரும் பதிவில் திருப்புளிங்குடி காய்சின வேந்தரின் கருடசேவையைக் காணலாம் அன்பர்களே.