Wednesday, August 19, 2015

கருட யாத்திரை -1

திருவெள்ளியங்குடி சதுர்புஜ கருடன் 


அன்பர்கள் அனைவருக்கும் முதற்கண் கருட பஞ்சமி நல்வாழ்த்துக்கள். வெகு நாட்களுக்குப்பின் ஒரு தொட்ர் பதிவினை துவங்குகின்றேன்.      அனைத்து  விஷ்ணு ஆலயங்களிலும்  பெருமாளுக்கு எதிராக  அஞ்சலி ஹஸ்தத்துடன்    அதாவது இரு கரம் குவித்து  பெருமாளை வணங்கும்  நிலையில் நின்ற கோலத்தில் கருடாழ்வார் சந்நிதி அமைந்துள்ளது. சில ஆலயங்களில் வைநதேயன்  பல்வேறு சிறப்பு கோலங்களிலும் சேவை சாதிக்கின்றார். அவற்றில் சிலவற்றை ஒரு யாத்திரையாக சென்று தரிசித்து விட்டு வந்தோம். தங்களையும் அந்த சிறப்புக்கோல கருடன்களை தரிசிக்க அன்புடன் இரு கரம் கூப்பி அழைக்கின்றேன் வாருங்கள், 

முதலில் திருவெள்ளியங்குடியில் சதுர்புஜ அமர்ந்த கோல கருட பகவானை சேவித்தோம். அடுத்து திருநறையூரில் கல் கருட பகவானையும் தரிசித்தோம் அருகில் ஒப்பிலியப்பனை சேவித்துவிட்டு திருகண்ணமங்கை செல்லும் வழியில் திருச்சேறையில் சாரநாதரை அருமையாக தங்க கவசத்தில் அருமையாக சேவித்தோம்.  திருக்கண்ண மங்கையில் கருடபகவானை சேவித்தோம். நிறைவாக முதல் நாள் எண்கண்ணில் நித்ய கருட சேவை தந்தருளும் ஆதி நாராயணப்பெருமாளை சேவித்தோம்.  


இரண்டாம் நாள் அதிகாலை திருக்கண்ணங்குடியில் உற்சவ கருட பகவான் வைகுண்டத்தில் உள்ளது போல நியம கருடனாக சேவித்தோம். அடுத்து திருநாகையில் அமர்ந்த கோல கருடனை சேவித்தோம்.  பிறகு திருக்கண்ணபுரத்தில் பெருமாளுடன் கருவறையில் பெருமாளுடன் சேவை சாதிக்கும் அழ்கை சேவித்தோம். பின்னர் தேரழுந்தூர் சென்று சகாவாக சேவை சாதிக்கும் அழகை சேவித்தோம். 

திருவெள்ளியங்குடி இராஜகோபுரம்

மூன்றாம் நாள் திருநாங்கூர் திவ்ய தேசங்களை சேவித்தோம், அவற்றில் மணீமாடக்கோவிலில்  பெருமாளின் பாதத்திற்கு மிகவும் கீழாக கொடி மரத்திற்கு அருகில் சேவை சாதிக்கும் அமர்ந்த கோல கருடனையும் சேவித்து இந்த யாத்திரையை நிறைவு செய்தோம். இப்பதிவில் திருவெள்ளியங்குடி சதுர்புஜ கருடனை சேவிக்கலாமா? அன்பர்களே 




கங்கையினும் புனிதமாய காவிரியின் கரையில் வெள்ளியார் வணங்க அருள் புரிந்த கோலவில்லி இராமர் ஆலயத்தில் கருடாழ்வார் மேற்திருக்கரங்களில் சங்கு சக்கரம் ஏந்தி சதுர் புஜங்களுடன் நின்ற கோலமும் அமர்ந்த கோலமும் இல்லாமால் எழிலாக சேவை சாதிக்கின்றார் வாருங்கள் அந்த எழிலைக் காணலாம்.

இத்தலத்தில் கோலவில்லி இராமரை சேவித்தால் 108 திருப்பதி பெருமாள்களையும் சேவித்த பலன் கிட்டும் என்பது ஐதீகம். வாமனாவதாரத்தில் தான் இழந்த கண்ணை இத்தலத்தில் தவம் செய்து திரும்பப்பெற்றதால் சுக்கிர பகவான் அணையா தீபமாக இத்தலத்தில் பிரகாசித்துக் கொண்டிருக்கிறார். எனவே இத்தலம் சுக்கிரத் தலமாகவும் போற்றப்படுகின்றது. இத்தலத்தில் கருங்கல் தரையில் செங்கதலி வாழை முளைத்து வருடத்திற்கு ஒரு தார் என்று வாழையடி வாழையாக இருந்து வருகின்றது.


 திருவெள்ளியங்குடி கோலவில்லி இராமர்

மூலவர்: கோலவில்லி இராமர், க்ஷீராப்திநாதன்
உற்சவர்: சிருங்கார சுந்தரர்.
தாயார் : மரகதவல்லி
தல விருட்சம்: செவ்வாழை
தீர்த்தம்: சுக்கிர தீர்த்தம், பிரம்ம தீர்த்தம், பரசுராம தீர்த்தம், இந்திர தீர்த்தம்.
விமானம் புஷ்கலாவர்த்தக விமானம்.
மங்களாசாசனம் திருமங்கையாழ்வார்



ஆநிரை மேய்த்து அன்று அலைகடலடைத்திட்டு அரக்கர் தம் சிரங்களையுருட்டி
 கார்நிறை மேகம் கலந்த தோருருவக் கண்ணனார்க் கருதியகோவில் 
 பூநிரைச் செருத்தி புன்னை முத்தரும்பிப் பொதும்பிடை வரிவண்டுமிண்டி
தேனிரைத்துண்டு அங்கு இன்னிசை முரலும் திருவெள்ளியங் குடியதுவே (பெ.தி 4-10-2)

பொருள்: ( முன்னொரு காலத்தில் கோபால கிருஷ்ணனாய்ப் பிறந்து) பசுக்கூட்டங்களை மேய்த்தவனும், அலை வீசுகின்ற கடலில் அணைகட்டி இலங்கை சென்று அரக்கர்களுடைய தலைகளை அறுத்துத் தள்ளியவனும், மழைக்கால மேகம் போன்ற ஒப்பற்ற வடிவை உடைய கண்ணனானவனும் திருவுள்ளம் உவந்து எழுந்தருளியுள்ள  திருத்தலம் எதுவென்றால் வரிசை வரிசையாக பூத்திருக்கின்ற சுரபுன்னை மரங்கள், முத்துப்போன்ற  மொக்குகள் அரும்பியுள்ள புன்னை மரங்கள் ஆகியவற்றின் பொந்துகளிலே வண்டுகள் நெருங்கி இருந்து தேனை ஆரவாரத்தோடு பருகி இனிய இசைகளைப் பாடும் திருவெள்ளியங்குடியாகும்.

 திருஇந்தளூரில் பரிமள ரங்கநாரின்  சேவை தனக்குக் கிடைக்கத் தாமதம் ஆனதால், மனம் நொந்தார் திருமங்கை ஆழ்வார். இவரை சாந்தப்படுத்தும் விதமாக திருவெள்ளியங்குடி பெருமாளான க்ஷீராப்திநாதரே, தன் தலத்துக்குத் திருமங்கை ஆழ்வாரை அழைத்துத் தரிசனம் தந்ததாகக் கூறுவர். க்ஷீராப்திநாதரே இங்கு மூலவர் என்றாலும், 'ஸ்ரீகோலவில்லி ராமர்' என்கிற திருநாமமே மங்களாசாசனப் பெயர். எனவே, மூலவரை கோலவில்லி ராமர் என்றே அழைப்பது வழக்கத்தில் இருக்கிறது.


மரகதவல்லித்தாயார் சன்னதி

திருவெள்ளியங்குடி எனும் இந்தத் திருத்தலம் நான்கு யுகங்களிலும் புகழ் பெற்று இருந்துள்ளது. கிருத யுகத்தில் - பிரம்ம புத்திரம் என்றும், திரேதா யுகத்தில் - பராசரம் என்றும், துவாபர யுகத்தில் - சைந்திர நகரம் என்றும், கலியுகத்தில் - பார்க்கவபுரம் என்றும் திருவெள்ளியங்குடி போற்றப்படுகிறது.

சுக்கிரன், பிரம்மன், பராசரர், இந்திரன், பிருகு முனிவர், அசுர சிற்பியான மயன், மார்க்கண்டேய மகரிஷி, பூமாதேவி ஆகியோருக்கு பெருமாள் பிரத்யக்ஷம்.  ஒவ்வொரு தலமாகத் தரிசித்தபடி சோழ நாட்டில் பயணித்துக் கொண்டிருந்தார் திருமங்கை ஆழ்வார். திருவெள்ளியங்குடி திருத்தலத்துக்கு வந்தவர், மூலவர் க்ஷீராப்திநாதர் திருமேனியின் அழகில் சொக்கிப் போனார்.



காற்றிடைப் பூளை கரந்தன அரந்தையுறக் கடலரக்கர்தம் சேனை
கூற்றிடைச் செல்லக் கொடுங்கணை துரந்த கோலவில் இராமன்றன் கோயில்
ஊற்றிடை நின்ற வாழையின் கனிகள் ஊழ்த்து வீழ்ந்தன உண்டு மண்டி
சேற்றிடைக் கயளுகள் திகழ் வயல்சூழ் திருவெள்ளியங்குடியதுவே   (பெ.தி 4-10-6)

பொருள்:  வீசுகின்ற பெரும் காற்றிலே இலவம் பஞ்சானது தன் அடையாளத்தை எங்கேயோ தொலைத்து அழிந்து போய் விடுகிறது. அதுபோல், அரக்கர்களுடைய கடல் போன்ற பெரும் படைகள் தோல்வியுற்று, அல்லலுற்று மெள்ள மெள்ள எமலோகம் சென்று சேர்கின்றன. இது எப்படி நிகழ்கிறது? தன்னிடம் உள்ள அழகிய வில்லில் - கொடிய அம்புகளைத் தொடுத்து இந்த அரக்கர் படைகளை அழித்தாராம் ஸ்ரீராமபிரான். இத்தகைய ஸ்ரீகோல வில்லிராமர்  (அழகிய வில்லை உடைய ராமர் என்பது பொருள்) திருக்கோயில் கொண்டுள்ள திருக்கோயில் எதுவென்றால், நீரூற்று உள்ள நிலங்களில் முளைத்திருக்கின்ற வாழை மரங்களிலிருந்து  இற்ற உதிர்ந்த பழங்களை கயல் மீன்கள் மேல் விழந்து  தின்று  சேற்று நிலங்களிலே துள்ளி விளையாடப் பெற்ற வயல்கள் சூழ்ந்த  திருவெள்ளியங்குடி ஆகும். இத்தலத்தின் தல விருட்சமான செவ்வாழையையும் சேர்த்து மங்களாசாசனம் செய்துள்ளார் ஆழ்வார்.


 திருவெள்ளியங்குடி
சதுர்புஜ கருடன்


தலவரலாறு: புராண காலத்தில் தேவர்கள், அசுரர்கள் என்று இரு பிரிவினர் இருந்தனர். தேவர்களின் சிற்பியாக விஸ்வகர்மாவும், அசுரர்களின் சிற்பியாக மயனும் இருந்து வந்தனர். மயன், இராவணனின் மனைவி  மண்டோதரியின் தகப்பனார் ஆவார். தேவர்களுக்கான மாளிகைகளைக் கட்டிக் கொடுத்து நற்பெயர் பெற்றார் விஸ்வகர்மா. அதோடு, ஸ்ரீமந் நாராயணன் உறையும் திருக்கோயில்களை - அவரது பரிபூரண அருள் பெற்று, நிர்மாணிக்கும் பேறு பெற்றார் அவர்.

தேவ சிற்பியான விஸ்வகர்மாவுக்கு இப்படியொரு வாய்ப்பு கிடைத்ததில் ஒன்றும் ஆச்சரியம் இல்லை. ஆனால், இதே ஆசை அசுர குல சிற்பியான மயனுக்கும் வந்தது. அதாவது, சர்வ வியாபியான ஸ்ரீநாராயணனின் அருள் பெற்று, அழகிய விமானத்துடன் கூடிய திருக்கோயில் ஒன்றை அந்தப் பரந்தாமனுக்குக் கட்ட விரும்பினான். விஸ்வகர்மாவுக்குக் கிடைத்த பேரும் புகழும் தனக்கும் கிடைக்க வேண்டும் என ஆசைப்பட்டான் மயன்.

எனவே மயன் பிரம்மதேவரை அடி பணிந்து தனது விருப்பத்தை தெரிவித்தான். பிரம்மதேவரும், “இதுவும் அந்த நாராயணரின் விளையாட்டுத்தான் போலும்!” என்று  மெள்ள புன்னகைத்தார். “ ஓர் உபாயம் உள்ளது. புண்ணிய நதியான காவிரியின் கரையில் உனக்கு பிடித்தமான ஓர் இடத்தில் அமர்ந்து நாராயணனை நினைத்து தவம் செய், உனக்கும் தேவ சிற்பி விஸ்வகர்மாவிற்கு கிட்டிய பாக்கியம் கிட்டும் என்று ஆசி வழங்கி அனுப்பினார்.

                                                


பிரம்ம தேவரின் அறிவுரைப்படி , பூலோகம் வந்து காவிரிக் கரையோரமாக பயணித்து தவம் இருப்பதற்குத் தகுந்த இடம் தேடினான் மயன். இப்போது திருவெள்ளியங்குடி என்று அழைக்கப்படும் இந்த திருத்தலத்துக்கு வந்தான். இங்கு மார்க்கண்டேய முனிவர் தவம் செய்வதைக்கண்டு  தானும் இங்கு தவத்தில் அமர்ந்தான்.
ஸ்ரீமந்நாராயணரும் மயனின் தவத்திற்கு மகிழ்ந்து சேவை சாதித்தார். எப்படித் தெரியுமா?  தன் திருக்கரங்களில் சங்கு, சக்கரம் முதலான ஆயுதங்களைத் தரித்துத் திருமாலாக மயனுக்குக் காட்சி கொடுத்தார். ஆனால், இரண்டே திருக்கரங்கள் கொண்டு  அவற்றில் வில்லும் அம்பும் தரித்துக் கோலவில்லி ராமனாக தனக்குக் காட்சி தர வேண்டும் என்று வேண்டினான் மயன். பக்தனது வேண்டு கோளுக்கு இணங்கி, தன் மேற்கரங்களில் இருந்த சங்கு,  சக்கரம் ஆகிய ஆயுதங்களை அருகில் இருந்த கருடாழ்வாரிடம் கொடுத்து விட்டு, மயன் விரும்பிய கோலத்திலேயே அவனுக்குக் காட்சி தந்தாராம் பெருமாள். இதில் பெரிதும் மகிழ்ந்த மயன்  அழகிய மதில்கள், சுற்றுப் பிராகாரங்கள், மண்டபங்கள், விமானங்கள் என்று இந்த ஆலயத்தை அழகுற அமைத்ததாகத் தல புராணம் கூறுகிறது.

மயனுக்குக் கோலவில்லி ராமனாகக் காட்சி தருவதற்காகத் தன் கைகளில் இருந்த சங்கு மற்றும் சக்கரத்தைக் கருடாழ்வாரிடம் கொடுத்தார் அல்லவா? அப்போது கருடாழ்வார் அதை எப்படிப் பெற்றுக் கொண்டார் தெரியுமா? அமர்ந்த நிலையிலும் இல்லாமல், நின்ற நிலையிலும் இல்லாமல் எழுகின்ற நிலையில், பெருமாளிடம் இருந்து இந்த ஆயுதங்களை பெற்றுக் கொண்டாராம்!


வெள்ளிக்கவசத்தில் சதுர்புஜ கருடாழ்வார்


எனவே, திருவெள்ளியங்குடியில் மூலவர் சந்நிதிக்கு நேர் எதிரே அருள் பாலிக்கும் கருடாழ்வாருக்கு நான்கு திருக்கரங்கள். ''இப்படியொரு கோலத்தில் அருள் பாலிக்கும் கருடாழ்வாரை வேறு எங்கும் தரிசிப்பது அபூர்வம். இந்த கருடாழ்வாரை வழிபடுவோர்க்கு சகல நலன்களும் கிடைக்கும். வாகனங்களில் செல்பவர்கள் இவரை வேண்டி வழிபட்டால், விபத்துகள் ஏதும் நிகழாது'' என்பது ஐதீகம்.

இந்தத் தலம், ஸ்ரீமந் நாராயணனின் தசாவதாரங்களில் ஒன்றான வாமன அவதாரத்துடனும் தொடர்பு உடையது. மஹாபலியின் செருக்கை அடக்க வாமன அவதாரம் எடுத்து வந்த பெருமாள், அவனிடம் மூன்றடி நிலத்தை யாசகமாகக் கேட்டார். மகா பலிக்குக் குருவாக இருந்தவர் சுக்கிராச்சார்யர். அசுர குலத்துக்கே இவர்தான் குரு. 'வந்திருப்பவன் சாதாரணமானவன் அல்ல ஸ்ரீமந் நாராயணனே' என்பதை அறிந்த சுக்கிராச்சார்யர், வாமனன் கேட்டபடி மூன்றடி நிலத்தை மகாபலி தாரை வார்த்துக் கொடுக்கக் கூடாது என்று விரும்பினார். திருமாலின் அவதார நிகழ்வையும், தானம் கொடுத்த பின் மகாபலியின் நிலையையும் சுக்கிராச்சார்யர் நன்றாகவே அறிவார். இருந்தாலும், தாரை வார்த்துக் கொடுப்பது என்கிற தன் முடிவில் இருந்து பின்வாங்க மறுத்தான் மகாபலி சக்ரவர்த்தி.
மகாபலி தானம் கொடுப்பதைத் தடுக்க நினைத்த சுக்கிராச்சார்யர், ஒரு முடிவுக்கு வந்தார். மகாபலியின் கமண்டலத்தில் இருந்து நீர் வரும் வழியை, ஒரு வண்டு உருவில் வந்து அடைத்துக் கொண்டார் சுக்கிராச்சார்யார். எனவே, மகாபலியின் கமண்டலத்தில் இருந்து நீர், வாமனன் கையில் வந்து விழவில்லை. வாமனன், சாமான்யனா? ஒரு தர்ப்பைப் புல்லால் கமண்டலத்தின் துளையில் சரேலென்று குத்தினார். அந்தத் தர்ப்பைப் புல், வண்டின் ஒரு கண்ணை ஏகத்துக்கும் பாதிக்கச் செய்து விட்டது.

பெரியாழ்வார் இந்த செயலை இவ்வாறு பாடுகின்றார்

மிக்க பெரும்புகழ் மாவலி வேள்வியில்
தக்கதிதறென்று தானம் விலக்கிய
சுக்கிரன் கண்ணைத் துரும்பாற்கிளறிய
சக்கரகையனே! அச்சோவச்சோ சங்கமிடத்தானே! அச்சோவச்சோ.
( பெரி.தி 1- 8 – 7)

பொருள்: மிகுந்த புகழினை உடைய மகாபலிச் சக்கரவர்த்தி செய்த யாகத்திலே நீ வாமனனாய் சென்று மூவடி மண் வேணடினாய், மகாபலி நீ கேட்டதை தர முயலும் போது, நீ கொடுக்கின்றது தகுதியானதன்று என்று முறையிட்டு, பூமி தானத்தை (அவன் தத்தம் செய்யும் போது நீர் விழவொட்டாமல் தடுத்த  அவனது குருவான)  சுக்கிராச்சாரியார் ஒரு கண்ணை  உன் கையில் அணிந்திருந்த தர்ப்ப பவத்திரத்தின் நுனியால்  கலக்கிய  சக்கராயுதமேந்திய   பெருமானே! என்னை வந்து அனைத்துக் கொள்! பாஞ்சஜன்யம் என்னும் சங்கை இடக்கையில் தரித்திருப்பவனேஎன்னை வந்து அனைத்துக் கொள்

இராஜ கோபுரம் பின்புறம்


தனது தகாத செயலால் இப்படி ஆகி விட்டதே என்று வருந்திய சுக்கிராச்சார்யர், இழந்த பார்வையை மீண்டும் பெற இந்தத் தலத்துக்கு வந்து வண்டு வடிவில் ஒரு மண்டல காலம் தவம் இருந்தார். இங்குள்ள பிரம்ம தீர்த்தத்தில் நீராடினார். அப்போது, தான் சேகரித்து வைத்திருந்த தேன் துளிகளை எல்லாம், இந்தத் தீர்த்தத்தில் கலந்தாராம். அவரது தவத்துக்கு இரங்கிய எம்பெருமான், உளம் கனிந்து அவருக்குக் காட்சி தந்து பார்வையையும் கொடுத்து அருளினார். அன்று சுக்கிரனுக்குக் கொடுக்கப்பட்ட ஒளி, இப்போதும் தூண்டா விளக்காக (நேத்திர தீபம்) கருவறை அருகே, இரவும் பகலும் சுடர் விட்டுப் பிராகாசிக்கிறது. சுக்கிர பகவானுக்குப் பெருமாள் தந்த ஒளி, இன்றும் இந்த தீபத்தில் உயிர்ப்புடன் இருப்பதாக நம்பப்படுகிறது.

கொடிமர கருடாழ்வார்

சுக்கிர பகவான் வணங்கியதால், இது சுக்கிரபுரி ஆயிற்று. சுக்கிரனுக்குத் தமிழில் வெள்ளி என்று பெயர். எனவே, இந்தத் திருத்தலம், 'திருவெள்ளியங்குடி'. தஞ்சை மாவட்டத்தில் உள்ள வைணவ நவக் கிரகத் தலங்களில், இது சுக்கிரனுக்கான திருக்கோயில் (இதர தலங்கள்: சூரியன்- சாரங்கபாணி திருக்கோயில், குடந்தை; சந்திரன்- ஸ்ரீநாதன் கோயில், நந்திபுர விண்ணகரம்; அங்காரகன்- திருநறையூர், நாச்சியார்கோவில்; புதன்- திருப்புள்ள பூதங்குடி; குரு- திருஆதனூர்; சனி- திருவிண்ணகர், ஒப்பிலியப்பன்கோயில்; ராகு- கபிஸ்தலம்; கேது- திருக்கூடலூர், ஆடு துறை பெருமாள்கோயில்). சுக்கிர தோஷம் உள்ளவர்களும், சுக்கிரனின் அருள் வேண்டு பவர்களும் இங்கு வந்து தரிசித்துச் சென்றால் நற்பலன்கள் விளையும். பார்க்கவ முனிவர் இந்தத் தலத்தில் நீண்ட காலம் தவம் இருந்ததால் பார்கவபுரி என்றும், தான் இழந்த சிருஷ்டி பதவியை இந்தத் தலத்தில் தவம் இருந்து மீண்டும் பிரம்மன் பெற்றதால் பிரம்மபுரி என்றும் அழைக்கப்படுவதுண்டு.

கருட வாகனம்

கிழக்கு நோக்கிய பிரமாண்ட திருக்கோயில். மூன்று நிலை இராஜகோபுரத்தைத் தாண்டி உள்ளே சென்றதும், பலிபீடம்; கொடிமரம். கருடாழ்வார் சந்நிதி. சங்கு சக்கரத்துடன் அருள் பாலிக்கும் அற்புதமான திருமேனி. இடக் காலை மடித்து, வலக் காலைக் குத்திட்டு அமர்ந்திருக்கும் வடிவம். இரண்டாம் பிராகாரத்தில் மரகதவல்லித் தாயார் மற்றும் ஆண்டாளின் சந்நிதிகள். மரகதவல்லித் தாயாரின் சந்நிதி விஸ்தாரமானது. நான்கு திருக்கரங்களுடன் அருள் பாலிக்கும் பச்சைக்கல் வடிவம். அமர்ந்த நிலை. தவிர யோக நரசிம்மர், வரதராஜ பெருமாள், நம்மாழ்வார், திருமங்கை ஆழ்வார், பேயாழ்வார், குலசேகர ஆழ்வார், ராமானுஜர், தேசிகர், விஷ்வக்சேனர் சந்நிதிகள் உள்ளன. ஆலயத்துக்கு வெளியே ஸ்ரீஆஞ்சநேயர் கோயில் கொண்டுள்ளார்.

 மூலவர் க்ஷீராப்திநாதர்  அத்தி மரத்திருமேனியர்புஜங்க சயனத்தில் பெருமாளின் பிரமாண்டத் திருமேனிசிலா விக்கிரத்தின் மேல் வர்ண கலாபம் பூசப்பட்டுள்ளதுஅழகான திருக்கோலம்க்ஷீராப்திநாதரின் தலைமாட்டில் ஸ்ரீமார்க்கண்டேய மகரிஷியும்கால்மாட்டில் பூதேவியும் தரிசனம் தருகிறார்கள்.



அடியோங்கள் சென்ற சமயம் திருப்பணி நடந்து கொண்டிருந்தது. அதன் சில காட்சிகளைக் காண்கிறீர்கள். அடுத்த பதிவில்  கல் கருடன் அருள் பாலிக்கும் திருநறையூரை சேவிக்கலாம் அன்பர்களே. 






No comments: