Showing posts with label திருத்தேவனார் தொகை. Show all posts
Showing posts with label திருத்தேவனார் தொகை. Show all posts

Thursday, February 7, 2008

திருநாங்கூர் பதினொரு கருட சேவை- 4

பதினொரு பெருமாள்களின் மங்களாசாசனமும் கருட சேவையும்

அரங்கனே நடத்தி வைத்த மஞ்சள் குளி, மணிகர்ணிகையாற்றில் கண்ட ஆழ்வாரும் குமுதவல்லி நாச்சியாரும், சிந்தனைக்கினியானும் திருமணிமாடக் கூடத்தில் ஆஸ்தானத்தில் இரவில் எழுந்தருளுகின்றனர். கருடசேவையன்று காலை முதலில் ஆழ்வார் முன் திருப்பாவை சாற்றுமுறை செய்யப்படுகின்றது. கருடசேவைக்காக மற்ற பத்து திவ்ய தேசத்து பெருமாள்களும் பல்லக்கில் திருமணிமாடக்கூடத்திற்க்கு எழுந்தருளுகின்றனர். ஒவ்வொரு பெருமாளுக்கும் ஒவ்வொரு வித அலங்காரம். தன் அன்பனைக் காண அற்புத அலங்காரத்தில் வருகின்றனர் பெருமாள்கள் அனைவரும். அவர்கள் வந்த அழகைக் காணுங்களேன்.



வேடார் திருவேங்கடம் மேய விளக்கான திருவெள்ளக்குளம் அண்ணன் பெருமாள் பட்டுப் பீதாம்பரங்கள் தொங்க எழிலாக பல்லக்கில் வந்தார் திருமணிமாடக் கூட கோவில் மற்றும் புஷ்கரிணிக்கு இடையில் அமைக்கப்பட்டுள்ள பிரம்மாண்ட பந்தலுக்கு.



திருசெம்பொன்செய் கோயிலினுள்ளே அல்லிமாமலராள் த்ன்னொடும் அஞ்சனக்குன்றம் நின்றதொப்ப ஹேமரங்கர் திருமேனி முழுவது செம்பொன்னாக மின்ன வந்தார் .

 
மின்னனைய நுண்மருங்குல் மெல்லியற்கா இலங்கை வேந்தன் முடியொருபதும் தோளிருபதும் போயுதிர தன்னகரிற் சிலை வளைத்து அன்று இலங்கை பொடி செய்த திருவைகுந்த விண்ணகரத்து வைகுண்ட நாதர் ஆதி சேஷன் குடை பிடிக்க அழகாக அம்ர்ந்து வந்தார் பல்லக்கில்

அங்கையால் அடி மூன்று நீரேற்று அயன் அலர் கொடு தொழுதேத்த கங்கை போதரக்கால் நிமிர்த்தருளிய திருவண்புருடோத்தமத்து புருடோத்தமர் செங்கோல் தாங்கி செழுமையாக வந்தார் அன்ன நடையிட்டு.

  கன்றதனால் விளவெறிந்து கனியுதிர்த்த காளை காமருசீர் முகில் வண்ணன், காலிகள் முன் காப்பான் குன்றதனால் மழை தடுத்த திருஅரிமேய விண்ணகத்து குடமாடு கூத்தர் கூத்தாடி வந்தார் எழிலாக.

 
இவ்வாறு மெல்ல மெல்ல எல்லா திவ்ய தேசத்துப் பெருமாள்களும் எழுந்தருளுகின்றனர் பந்தலுக்கு முதலில் சிறிதாக் இருந்த மக்கள் கூட்டம் பெரிதாகிக் கொண்டே போகின்றது, ஒவ்வொரு பெருமாளாக வர வர மலர்களை நாடி வண்டுகள் செல்வது போல பக்தர்களின் கூட்டம் அப்பெருமாளை சேவிக்க நகர்ந்து செல்கின்றனர். புகைப்படம் எடுப்பவர் சிலர், வீடியோப் படம் எடுப்பவர் சிலர், பாசுரம் சேவிப்போர் சிலர், பெருமாளை கண்ணாரக் கண்டு சேவிப்போர் பல்ர் என்று தமிழகத்தின் அனைத்து பிரதேசங்களிலிருந்து வந்த பக்தர்கள் குழுமுகின்றனர் பந்தலில். சுமார் பன்னிரண்டு மணியளவில் அனைத்து பெருமாள்களும் வந்து சேர அவர்களை மங்களாசாசனம் செய்ய எழுந்தருளுகின்றார் குமுதவல்லி மணாளர் மணவாள மாமுனிகளுடன்.


 
பின் மங்களாசாசனம் துவங்குகின்றது ஒவ்வொரு பெருமாளாக ஆழ்வாருக்கு சேவை சாதிக்கும் போது அந்தப் பெருமாளை ஆழ்வார் மங்களாசாசனம் செய்கிறார் அந்த திவ்ய தேசத்து பாசுரத்தின் முதல் பாடலை பக்தர்கள் அனைவரும் சேவிக்கின்றனர். பின் ஆழ்வார் பெருமாளை வலம் வருகின்றார், ஆழ்வாருக்கு அந்தந்த திவ்ய தேசங்களிலிருந்து வந்த பரிவட்டம் கட்டப்பட்டு மரியாதை செய்யப்படுகின்றது. பதினோரு திவ்ய தேசப் பெருமாள்களின் மங்களாசாசனம் நிறைவுற்றதும் மணவாள மாமுனிகள் எழுந்தருளுகின்றார்.



 
அவர் தம் ஆச்சார்யராம் திருமங்கையாழ்வாரை தாம் திருமங்கையாழ்வாரின் வடிவழகிலீடுபட்டு அருளிய வடிவழகு சூர்ணிகையும் மற்றும்


வேலணைத்தமார்பும், விளங்கு திருவெட்டெழுத்தை
மாலுரைக்கத்தாழ்த்த வலச்செவியும்,
தாளிணைத் தண்டையும், தார்க்கலையன் நன்முகமும்
கண்டு களிக்குமென்கண்

என்று மற்ற தனியன்களாலும் மங்களாசாசனம் செய்கின்றார். அப்போது பகதர்களும் அந்த தனியன்களை சேவிக்கின்றனர். பின் அனைத்து பெருமாள்களும் மணிமாடக்கோவிலின் உள்ளே எழுந்தருளுகின்றனர்.
மாலை 4 மணி அளவில் பதினொரு திவ்ய தேசத்து எம்பெருமான்களுக்கும் திருமங்கை ஆழ்வாருக்கும் ஏக காலத்தில் திருமஞ்சனம் நடைபெறுகின்றது. திருமங்கையாழ்வாரின் சிறப்பு ததியாரதனை ( அன்ன தானம்) என்பதால் அனைத்து திவ்ய தேசங்களிலும் ததியாராதானை சிறப்பாக நடைபெறுகின்றது. கருட சேவைக்கு செல்பவர்கள் உணவைப் பற்றி கவலைப்படத்தேவையில்லை.

மாலை 6 மணியளவில் திருமஞ்சனம் முடிந்து பெருமாள்கள் அனைவரும் கருட வாகனத்திலும் ஆழ்வார் ஹம்ஷ வாகனத்திலும் எழுந்தருளுகின்றனர். பின்னர் அலங்காரம் துவங்குகின்றது. மாலைகள் வர ஆரம்பிக்கின்றன. மாலைகள் மேல் மாலைகள் அமர்கின்றன, நடு நடுவே பட்டு பீதாம்பரங்கள் வருகின்றன அவையும் பெருமாள்களுக்கு சார்த்தப்படுகின்றன. பதினொரு கருட சேவையைக் காண வரும் பக்தர்கள் கூட்டம் அதிகரித்துக் கொண்டே செல்கின்றது , கூட்டம் அலை மோதுகின்றது என்றுதான் சொல்ல வேண்டும். அலை அலையாக பக்தர்கள் ஒவ்வொரு பெருமளாக சென்று சேவித்து புறப்பாட்டிற்க்காக காத்து நிற்கின்றனர். பெருமாளின் கருட சேவையை கண்டு களியுங்கள்.

ஹம்ச வாகனத்தில் குமுதவல்லி நாச்சியாருடன் 
திருமங்கையாழ்வார். திருமணிக்கூட வரதராஜப் பெருமாள்
 திருத்தேவனார்தொகை மாதவப்பெருமாள் திருஅரிமேய விண்ணகரம் குடமாடு கூத்தர் திருதெற்றியம்பலம் பள்ளி கொண்ட பெருமாள் திருமணிமாடக்கோவில் நாராயணப் பெருமாள் திருத்தேவனார்தொகை மாதவப்பெருமாள் திருவெள்ளக்குளம் அண்ணன் பெருமாள்
அன்று நள்ளிரவு மணவாள மாமுனிகள் முன் செல்ல, ஹம்ச வாகனத்தில் திருமங்கையாழ்வாரும் குமுத வல்லித் தாயாரும் தொடர, ஏகாதச பெருமாள்களும் எம்பெருமானை எப்போதும், எல்லா காலத்திலும் தாங்கும் பேறு பெற்ற பெரிய திருவடியாம், வேத சொரூபன் கருட வாகனத்தில் எழுந்தருளி சேவை சாதிக்க திருவீதிப் புறப்பாடு நடைபெறுகின்றது. பதினோரு பெருமாள்களும் தெய்வப்புள்ளேறி ஒரே சமயத்தில் திருநாங்கூரின் நான்கு மாட வீதிகளையும் சுற்றி வரும் அந்த அழகைக் காண கண் கோடி வேண்டும். பூர்வ ஜன்ம புண்ணியத்தால் மட்டுமே அந்த தெய்வீக அழகைக் காணும் பேறு நமக்கு கிட்டும். புறப்பாடு நிறைவு பெற அதிகாலை ஆகி விடும். 

திருமங்கையாழ்வாரின் முக அழகு


அடுத்த நாள் காலை ஆழ்வாருக்கு திருமஞ்சனம் திருப்பாவை சாற்றுமறை நடைபெறுகின்றது. மாலை திருநாங்கூரிலிருந்து புறப்பட்டு, திருவெள்ளக்குளத்து ஸ்ரீ அண்ணன் பெருமாளை இடர் களைய சரணம் புகுகிறார், பிறகு வரிவண்டு தேதென என்று இசைபாடும் அழ்கை திருத்தேவனார் தொகையில் ஸ்ரீ மாதவனை அனுபவித்து மங்களாசாசனம் செய்கிறார் நீலன். பிறகு திருவாலி எழுந்தருளி ஸ்ரீ லக்ஷ்மி நரசிம்மரை மங்களாசாசனம் செய்கின்றார் ஆழ்வார். திருநகரியை அடையும் போது பெரிய திருவடியில் வயலாலி மணவாளன் ராஜ கோபுரத்தின் முன்னே ஆழ்வாரை எதிர் கொள்ள காத்திருக்கின்றார். பின் ஆழ்வார் அங்கு அடைந்தவுடன் , பெருமாளும் ஆழ்வாரும் திருக்கோவிலில் செல்வதுடன் திருனாங்கூர் பதினோரு கருட சேவை இனிதே நிறைவு பெறுகின்றது. அப்போது 



  கற்றார் பற்றறுக்கும் பிறவிப் பெருங்கடலே 
பற்றா வண் தடியேன் பிறந்தேன் பிறந்த பின்னை
 வற்றா நீர் வயல் சூழ் வயலாலி அம்மானைப் 
பெற்றேன் பெற்றதுவும் பிறவாமை பெற்றேன்.

என்ற பாசுரசாற்று மறையுடன் இந்த தெய்வீக விழா இனிதே நிறைவடைகின்றது. பெருமாளை கருட வாகனத்தில் சேவை சாதிக்கக் காண்போருக்கு மறு பிறவி கிடையாது என்பது ஐதிகம். ஆகவே நாம் அனைவரும் உய்ய பதினோரு திவ்ய பெருமாள்களும் தரும் கருட சேவையை காணவும், ஆழ்வாரை நெல் வயல்களின் நடுவே நெற்கதிர்களை சாய்த்து மிதித்துக் கொண்டு பக்தர்கள் ஏழப்பண்ணி கொண்டு செய்யும் அழகையும் கண்டு களிக்க எத்தனை கோடி தவம் செய்திருக்க வேண்டுமோ, எனவே கிளம்பிவிட்டீர்களா திருநாங்கூருக்கு? சென்று வந்து உலகளந்த ஊழி பிரானாம், உம்பர் தொழும் திருமாலின் அருள் பெற பிரார்த்திக்கின்றேன். * * * * * *

Tuesday, February 5, 2008

திருநாங்கூர் பதினொரு கருட சேவை- 2

திருநாங்கூர் ஏகாதச திவ்ய தேச பெருமாள் தரிசனம்

திருநறையூர் (நாச்சியார் கோவில்) பெருமாளால் வைணவராக சமஸ்ராணம் செய்யப் பெற்ற, திருமங்கை மன்னன், பரகாலன், நீலன், ஆலிநாடன், கலிகன்றி, மங்கையர் கோன், மங்கை வேந்தன், கலியன் என்றெல்லாம் அழைக்கப்படும் திருமங்கை ஆழ்வார் இந்த திவ்ய தேசங்களில் திருக்குறையலூரிலேதான் அவதரித்தார். மணக் கோலத்தில் பெரிய பிராட்டியாரோடு வந்த பெருமாளால் திருமணங்கொல்லையில் அஷ்டாத்திர மந்திரோபதேசமும் பெற்றார், இந்த பதினோரு திவ்ய தேசங்களையும் இவர் மட்டுமே மங்களாசாசனமும் செய்துள்ளார். திருமங்கையாழ்வாரோடு பெரிதும் தொடர்புடையவை இத்திவ்ய தேசங்கள். 

  இத்தகைய சிறப்புகளைக் கொண்ட திருநாங்கூர் திவ்ய தேசங்களாவன:

1. திருமணி மாடக் கோவில்:

மூலவர்-நாராயணன், நந்தா விளக்கு அமர்ந்த திருக்கோலம்,
உற்சவர்- நாராயணன், அளந்தற்கரியான்,
தாயார்- புண்டரீக வல்லி,
தீர்த்தம்- இந்திர புஷ்கரிணி, ருத்ர புஷ்கரிணி,
விமானம்- பிரணவ விமானம்.

நந்தா விளக்கே! அளத்தற்கு அரியாய்! நரநாராயணனே! கருமாமுகில் போல்
எந்தாய்! எமக்கே அருளாயென நின்று இமையோர் பரவும் இடம் எத்திசையும்
கந்தாரம் அந்தேன் இசைபாடமாடே களிவண்டுமிழற்ற நிழல்துதைந்து
மந்தாரம் நின்று மணமல்குநாங்கூர் மணிமாடக்கோயில் வணங்கு என் மனனே!

2.திருவைகுந்த விண்ணகரம் :

மூலவர்- திருவைகுந்த நாதன், தாமரைக் கண்ணுடைய பிரான் உபய நாச்சியார்களுடன் அமர்ந்த திருக்கோலம்,
தாயார்- வைகுந்த வல்லி.
தீர்த்தம்- லக்ஷ்மீ புஷ்கரிணி, உதங்க புஷ்கர்ணி, விரஜா தீர்த்தம்,
விமானம்-அனந்த சத்யா வர்த்த விமானம்.

சலங்கொண்ட இரணியனது அகல்மார்வம் கீண்டு
தடங்கடலைக்கடைந்து அமுதம் கொண்டுகந்தகாளை
நலங்கொண்ட கருமுகில்போல் திருமேனி அம்மான்
நாள்தோறும்மகிழ்ந்து இனிதுமருவியிறை கோயில்
சலங்கொண்டுமலர் சொரியும் மல்லிகைஒண்செருந்தி
சண்பகங்கள் மணம் நாறும் வண்பொல்ழிலினூடே
வலங்கொண்டு கயலோடிவிளையாடுநாங்கூர்
வைகுந்தவிண்ணகரம் வணங்குமடநெஞ்சே!

3.திரு அரிமேய விண்ணகரம் :

மூலவர்- குடமாடுங் கூத்தர் அமர்ந்த திருக்கோலம்,
உற்சவர்- சதுர் புஜ கோபாலர்,
தாயார்- அம்ருத கட வல்லி.
தீர்த்தம்- கோடி தீர்த்தம், அமுத தீர்த்தம்,
விமானம்- உச்ச சிருங்க விமானம்.

திருமடந்தைமண்மடந்தை இருபாலும் திகழ
தீவினைகள்போயகலஅடியவர்கட்கு என்றும்
அருள்நடந்து இவ்வேழுலகத்தவர்பணிய வானோர்
அமர்ந்தேத்தஇருந்தஇடம் பெரும்புகழ்வேதியர் வாழ்
தரும்இடங்கள்மலர்கள்மிகுகைதைகள்செங்கழுநீர்
தாமரைகள்தடங்கள்தொறும் திகழ
அருவிடங்கள்பொழில்தழுவி எழில்திகழும்நாங்கூர்
அரிமேய விண்ணகரம் வணங்குமடநெஞ்சே!

4.திருத் தேவனார் தொகை :

மூலவர்- தெய்வ நாயகன் நின்ற திருக்கோலம்,
உற்சவர்- மாதவப் பெருமாள்,
தாயார்-கடல் மகள் நாச்சியார்.
தீர்த்தம்- சோபன தீர்த்தம்,
விமானம்- சோபன விமானம்.
போதலர்ந்தபொழிற்சோலைப் புறமெங்கும்பொருதிரைகள்
தாதுதிரவந்தலைக்கும் தடமண்ணிதென்கரைமேல்
மாதவன்தானுறையுமிடம் வயல்நாங்கை வரிவண்டு
தேதெனவென்றுஇசைபாடும்திருத்தேவனார்தொகையே.

5.திருவண் புருடோத்தமம் :

மூலவர்- புருடோத்தமன் நின்ற திருக்கோலம்,
தாயார்- புருடோத்தம நாயகி.
தீர்த்தம்- திருப்பாற் கடல் தீர்த்தம்,
விமானம்- சஞ்žவி விமானம்.
கம்பமாகடலடைத்துஇலங்கைக்குமன் கதிர்முடியவை பத்தும்
அம்பினாலறுத்து அரசுஅவன்தம்பிக்குஅளித்தவனுறை கோயில்
செம்பலாநிரைசண்பகம்மாதவி சூதகம்வாழைகள்சூழ்
வம்புலாம்கமுகோங்கியநாங்கூர் வண்புருடோத்தமமே.
6.திருச்செம்பொன் செய்கோவில் :
மூலவர்- பேரருளாளன், ஹேம ரங்கர்,செம் பொன் செய் அரங்கர், தாமோதரன் நின்ற திருக்கோலம்,
உற்சவர்-ஹேமாங்கர்(செம்பொன் அரங்கர்),
தாயார்- அல்லி மாமலர் நாச்சியார்.
தீர்த்தம் - ஹேம புஷ்கரிணி,
விமானம்- கனக விமானம்.
பேரணிந்துஉலகத்தவர்தொழுதேத்தும் பேரர்ளானன்எம்பிரானை
வாரணிமுலையாள்மலர்மகளோடு மண்மகளும்உடன்நிற்க
சீரணிமாடநாங்கைநன்னடுவுள் செம்பொன்செய்கோயிலினுள்ளே
காரணிமேகம்நின்றதொப்பானைக் கண்டுகொண்டுஉய்ந்தொழிந்தேனே.
7.திருத்தெற்றியம்பலம் :
மூலவர்-செங்கண்மால்,அரங்கநாதர், லக்ஷ்மிரங்கர் புஜங்க சயன திருக்கோலம்,
தாயார்- செங்கமலவல்லி
தீர்த்தம்- சூரிய புஷ்கரிணி,
விமானம்- வேத விமானம்.
மாற்றரசர்மணிமுடியும்திறலும்தேசும்
மற்றவர்தம்காதலிமார் குழையும் தந்தை
கால்தளையும்உடன்கழலவந்துதோன்றிக்
கதநாகம்காத்தளித்த கண்ணர்கண்டீர்
நூற்றிதழ்கொளரவிந்தம்நுழைந்தபள்ளத்து
இளங்கமுகின்முதுபாளைபகுவாய்நண்டின்
சேற்றழையில்வெண்முத்தம்சிந்தும் நாங்கூர்த்
திருத்தெற்றியம்பலத்துஎன்செங்கண்மாலே.
8.திருமணிக்கூடம் : மூலவர்-மணிக்கூட நாயகன், வரதராசப் பெருமாள்,
தாயார்- திருமாமகள் நாச்சியார்.
தீர்த்தம்- சந்திர புஷ்கரிணி,
விமானம் சாம்பூந்தம் என்ற பொன்னாலானது.
தூம்புடைப்பனைக்கைவேழம் துயர்கெடுத்தருளி மன்னு
காம்புடைக்குன்றமேந்திக் கடுமழைகாத்தஎந்தை
பூம்புனற்பொன்னிமுற்றும்புகுந்து பொன்வரண்ட எங்கும்
தேம்பொழில்கமழும்நாங்கூர்த் திருமணிக்கூடத்தானே.
9.திருக்காவளம்பாடி :

மூலவர்-கோபாலகிருஷ்ணன்(இராஜ கோபாலன்) ருக்மணி சத்ய பாமையுடன் நின்ற திருக்கோலம்,
தாயார் -மடவரல் மங்கை, செங்கமல வல்லி.
தீர்த்தம்- தடமலர்ப் பொய்கை,
விமானம்- சுயம்பு விமானம்.
தாவளந்துஉலகமுற்றும் தடமலர்ப்பொய்கைபுக்கு
நாவளம்நவின்றங்கேத்த நாகத்தின்நடுக்கம்தீர்த்தாய்!
மாவளம்பெருகி மன்னுமறையவர்வாழும்நாங்கை
காவளம்பாடிமேய கண்ணனே! களைகண் நீயே.
10.திருவெள்ளக்குளம்(அண்ணன் கோவில்):
மூலவர்- ஸ்ரீநிவாசன், கண்ணன், நாராயணன், அண்ணன் பெருமாள், நின்ற திருக்கோலம்,
தாயார்- அலர்மேல் மங்கை.
தீர்த்தம்-வெள்ளைக்குளம்,
விமானம்-தத்துவ விமானம்.
இத்தலத்திலே தான் திருமங்கை ஆழ்வாரின் தர்ம பத்தினி குமுத வல்லி நாச்சியார் கண்டெடுக்கப்பட்டார்.
கண்ணார்கடல்போல் திருமேனிகரியாய்!
நண்ணார்முனை வென்றிகொள்வார் மன்னு நாங்கூர்
திண்ணார்மதிள்சூழ் திருவெள்ளக்குளத்துள்
அண்ணா! அடியேனிடரைக்களையாயே.
11. திருப்பார்த்தன் பள்ளி :

மூலவர்: தாமரையாள் கேள்வன்,
உற்சவர்- பார்த்தசாரதி,
தாயார்- தாமரை நாயகி.
தீர்த்தம் - சங்கசரஸ் கங்கைத் தீர்த்தம்,
விமானம்- நாராயண விமானம்.
கவளயானைக்கொம்பொசித்த கண்ணனென்றும் காமருசீர்
குவளைமேகமன்னமேனிகொண்டகோன் என்னானை யென்றும்
தவளமாடுநீடுநாங்கைத் தாமரையாள்கேள்வனென்றும்
பவளவாயாள்என்மடந்தை பார்த்தன்பள்ளி பாடுவாளே.


இவ்வாறு பொன்னி நதி பாய்ந்து வளம் சிறக்கும் திருநாங்கூர்ப்பதிகளை மங்களாசாசனம் செய்த இந்த திவ்ய தேசப் பெருமாள் அனைனவரும், திருமங்கையாழ்வரும் கலந்து கொள்ளும் மிக சிறப்பு வாய்ந்த ஏகாதச கருட சேவை திருவிழா வெகு சிறப்பாக ஒவ்வொரு வருடமும் தை அமாவாசைக்கு அடுத்த நாள் நடைபெறுகின்றது. அந்த தெய்வீக அனுபவத்தை தாங்களும் பெற தங்களை என்னுடன் வருமாறு தங்களை அழைக்கின்றேன். " பெருமாளை பெரிய திருவடியாம் கருட வாகனத்தில் சேவித்தால் மறு பிறவி கிடையாது என்பது ஐதீகம்", இங்கு பதினோரு பெருமாள்களையும் ஒரே நேரத்தில் சேவிக்கும் அற்புதமான வாய்ப்பு கிடைக்கின்றது. அடுத்த பதிவில் அந்த தெய்வீக அனுபவத்தை பெருமாள் கொடுத்த சேவையை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.
புதிருக்கான விடை அடுத்த பதிவில்.