Showing posts with label பத்மினி நாச்சியார். Show all posts
Showing posts with label பத்மினி நாச்சியார். Show all posts

Sunday, June 8, 2014

பரதவர் குல மருமகன் கருட சேவை -2

திருகண்ணபுரம் சௌரிராஜப்பெருமாள்
 மாசி மக தீர்த்தவாரி

சௌரிராஜப்பெருமாள்


இவர் சௌரிராஜன் என்று அழைக்கப்படுவதற்கு ஒரு சுவையான கதை  உண்டுகோவிலுக்கு தரிசனத்திற்கு வந்த அரசனுக்கு  பிரசாதமாக  அளிக்கப்பட்ட மலர் மாலையில் தலை முடி இருந்ததைக் கண்டு அரசன்  கோபப்படஅர்ச்சகரும் பெருமாள் திருமேனியில் தலையில் சௌரி  இருப்பதாக சொல்லி சமாளித்தார்இதை சோதனை செய்ய அரசன்  மீண்டும் வந்த  போதுதன் பக்தனைக் காப்பாற்ற பெருமாள் தன்  தலையில் கட்டி குடுமியோடு சேவை சாதித்தாராம்எனவே உற்சவருக்கு இத்தலத்தின் சிறப்பான  கிரீடம் வைரம் அல்ல சௌரிதான்.

ஒவ்வோர் ஆண்டும் மாசி மகத்தன்று ஸ்ரீசௌரிராஜப் பெருமாள் 70  கி.மீ  தூரம் பயணம் செய்து பத்மாவதி நாச்சியாரின் கிராமமான  திருமலைராயன் பட்டினத்திற்கு எழுந்தருளிகிறார்கடற்கரையில்  தீர்த்தவாரி கண்டருளுகிறார்.


கடற்கரையில் காத்திருக்கும் பக்தர் கூட்டம்


திருமலைராயன் பட்டினத்திற்கு செல்லும் வழியில் உள்ள பட்டினஞ்சேரி என்ற கடற்கரைக் கிராமத்தில் உள்ள மீனவ இன மக்கள் ஊர் எல்லையில்பெருமாளை பட்டும்மாலைகளும் ஏந்தி எதிர் கொண்டு அழைக்கின்றனர்தங்கள் மாப்பிள்ளையைநெற்கதிர்களால் அலங்கரிக்கப்பட்ட பவளக்கால் சப்பரத்தில் சௌரிராஜப்பெருமாளை ஏழப்பண்ணி தங்கள் தோள்களில்
  தூக்கி வைத்துக் கொண்டு   மாப்ளேமாப்ளேஎன்று கூப்பிட்டவாறே  குலுக்குகின்றனர்


ஆடும் புள்ளில் ஆதி மூர்த்தி

இவருடன் திருமருகல் வரதராஜப்பெருமாளும்    வருகின்றார்.   தங்கள் பகுதிக்கு வரும்  இவர்களை காரைக்கால் பகுதியை சார்ந்த  திருமலைராயன் பட்டினம் ஸ்ரீ பிரசன்ன வெங்கடேச பெருமாள்ஸ்ரீ வீழி வரதராஜப் பெருமாள்நிரவி ஸ்ரீ கரிய மாணிக்கப் பெருமாள்வரிச்சிக்குடி ஸ்ரீ வரதராஜப் பெருமாள்தென்னங்குடி ஸ்ரீ வரதராஜப் பெருமாள்காரைக்கால் கோவில்பத்து கோதண்டராமர், ஆகிய எழு பெருமாள்கள் எதிர் கொண்டு  கடற் கரைக்குஅழைத்துச் செல்கின்றனர்கடற்கரைக்கு வந்த பெருமாள் கடலில்  இறங்கி தீர்த்தம் கொடுத்தருளுகின்றார்பின்னர்  கரையில் கட்டு  மரங்களால் அமைக்கப்பட்டுமீன் வலை கொண்டு  விதானம் கட்டபட்ட  பந்தலில் மீன் காய வைக்கும் பாயை ரத்ன கம்பளமாக விரிக்கின்றனர்அன்று பெருமாள் நெற்கதிர்களால் எழிலாக அலங்கரிக்கப்பட்ட பவளக்கால் சப்பரத்தில் சௌரி முடியுடன் தங்க கருட வாகனத்தில் சேவை சாதித்து  அருளுகின்றார்.  மற்ற எட்டு பெருமாள்களும் தோளுக்கினியானில்  பக்தர்களுக்கு சேவை சாதிக்கின்றனர்.


மாசிமக தீர்த்தவாரி கருடசேவை


ஸ்ரீ சௌரிராஜப்பெருமாள் தங்கள் கிராமத்திற்கு எழுந்தருளுவதை ஒட்டி  இந்த மீனவர்கள் முதல் நாளும்மாசிமகத்தன்றும் மறு நாளும் கடலுக்கு மீன் பீடிக்க செல்வதில்லைபுலால் உணவு உண்பதையும் தவிர்க்கின்றனர்பெருமாள் தங்கள் சேரிக்குள் நுழையும் போதுஅந்த மீனவக்குலப்  பெண்கள் நேராக வந்து வணங்குவதில்லைமருமகனுக்கு முன்னால்  வந்து பெண்கள் நிற்கக் கூடாது என்பது மரபாம்மீனவர்களுக்கு  அதாவது பெண்  வீட்டாருக்கு வெற்றிலைபாக்கு துளசி மாலை  ஆகியவற்றுடன் பத்து தோசைகளும் பிரசாதமாக வழங்கப்படுகின்றது. இத்தலத்தில் வருடத்தில் ஒரு நாள்  இந்த மீனவர் குலத்தினருக்காக ஆண்டுக்கொரு முறை விசேஷ பூஜைகள் ஆராதணைகள் செய்யப்படுகின்றன.  

ஸ்ரீசௌரிராஜப் பெருமாள் தங்கள் இல்லங்களில் பணியாளாக இருந்து, தங்கள் இனத்தை சார்ந்த பத்மாவதி என்ற இராஜ குமாரியை விரும்பி  திருமணம் செய்துதன்னோடு அழைத்துச் சென்றதாக ஒரு கர்ண  பரம்பரை கதையை சொல்லி இவர்கள் மகிழ்கின்றனர்.


தீர்த்தவாரி முடிந்து திருமலைராயன் பட்டினம்
 திரும்புகின்றனர் 




கீழைக் கடற்கரைக்கு செல்ல திருமலைராயன் பட்டினம் கிராமத்தில்  இருந்து சுமார் 2 கி.மீ தூரம் வயல்வெளிகளில் நடந்து செல்ல வேண்டும். அறுவடை முடிந்த பின் வெற்றாக இருக்கும் நிலத்தின் வரப்பில் நடந்து  செல்வதே ஒரு தனி அனுபவம்ஆயிரக்கணக்கான பக்தர்கள்  குடும்பத்தினருடன் அனைத்து பெருமாள்களையும் காண செல்லுவதை  காண்பதே ஒரு   பரவசம்


கடற்கரையில் மீன் வலைப்பந்தலில்  தங்க கருட வாகனத்தில் சௌரி  கிரீடத்துடன் சவுரிராஜப்பெருமாளை

இல்லையலல் எனக்கேல் இனியென்குறை
அல்லி மாதரமரும் திருமார்பினன்
கல்லிலேயந்த மதில்சூழ் திருக்கண்ணபுரம்
சொல்ல நாளும் துயர் பாடு சாரவே.

என்று நம்மாழ்வாரின் பாசுரம் சேவித்து கத்தும் கடற் கரையில்உப்பு  காற்றின்  மணத்தில் மணலில் நடந்து தோளுக்கினியானில் மற்ற  பெருமாள்களையும் கருட வாகனத்தில் திருமாமகள் தன் கேள்வன், நினைத்ததை   நிறைவேற்றும்   பேராற்றல்   பெற்றவன், தாயெடுத்த  கோலுக்கு   உளைந்தோடி   அத்தயிருண்ட வாய் தொடைத்த மைந்தன்கண்டவர் தம் மனம்   வழங்கும் கண்ணபுரத்தாம்மான்கிருஷ்ணண்கண்ணபுரத்து   அமுதன்,  வைகுந்தம் வழங்குபவன், காவிரி நல் நதி பாயும்  கண்ணபுரத்து   என்   கண்மணி, சௌரிப்பெருமாளை  சேவிப்பதே ஒரு   அற்புத   பரவசம். அவசியம் சென்று சேவியுங்கள் அதை எப்போதும்   மறக்கமாட்டீர்கள்.   




தமிழகத்தை சுனாமி தாக்கிய வருடம்   இந்த விழா தடைப்பட்டதுஇவ்வளவு தூரம் பெருமாள் சென்று  வர வேண்டுமாஎன்று ஒரு வாதம் எழுந்து இவ்விழா நின்று விடும் நிலை ஏற்பட்டபோது இந்த பரதவ குல மக்கள் முடியாது தங்கள் மாப்பிள்ளை தங்கள் ஊருக்கு வந்து தான் ஆக வேண்டும் என்றும் அதற்காக எந்த சிரமமானாலும் தாங்கள் ஏற்றுக் கொள்ள சித்தமாக இருப்பதாக கூறியதால் இன்றும் பெருமாள் மாசி மகத்தன்று திருமலைராயன் பட்டினம் எழுந்தருளி அந்த எளிய பக்தர்களுக்கு சேவை  சாதித்து அருளுகின்றார். வாய்ப்புக்கிடைத்தால் மாமியார் வீட்டிற்கு கருட வாகனத்தில் வரும் எளிமையானவரை சென்று சேவித்து அருள்பெறுங்கள். 

புகைப்படங்கள்: பொன். மனோகரன், காரைக்கால்


சில புகைப்படங்கள் Anudinam.org வலைதலத்தில் இருந்து எடுத்தாளப்பட்டுள்ளது.