Showing posts with label லலக்ஷ்மி ஹாரம். Show all posts
Showing posts with label லலக்ஷ்மி ஹாரம். Show all posts

Monday, July 3, 2017

மேற்கு மாம்பலம் சத்ய நாராயணர் கருட சேவை

சென்னை மேற்கு மாம்பலத்தில் அமைந்துள்ள ஸ்ரீமஹாலக்ஷ்மி சமேத சத்ய நாராயணப் பெருமாள் ஆலயத்தின். 2017ம் ஆண்டு ,  17வது  வருட ஆனி பிரம்மோற்சவம் வெகு சிறப்பாக நடைபெற்றது.  


இரத்ன அங்கியில் சத்ய நாராயணப் பெருமாள்



பெருமாளின் அவதார நாளை தீர்த்தநாளாகக்கொண்டு ஆனி மாதத்தில் பிரம்மோற்சவம் கொண்டாடப்படுகின்றது.  இப்பிரமோற்சவத்தின் ஐந்தாம் நாள் இரவு பெருமாள் கருட சேவை தந்தருளினார். அக்கருட சேவையின் சில காட்சிகள் இப்பதிவில் இடம் பெறுகின்றன. 





திருமலையில் மலையப்ப சுவாமி  மகர ஹண்டி, லக்ஷ்மி ஹாரத்துடன் கருட சேவை சாதித்தருள்வது போல இவ்வாலயத்தின்  கருட சேவையின் போதும் சிறப்பாக  சத்ய நாராயணப்பெருமாள் லக்ஷ்மி ஹாரத்துடன்  சேவை சாதிக்கின்றார்   என்பது ஒரு தனி சிறப்பு . 




மாலை பத்தி உலாத்தல் மற்றும் ஊஞ்சல் சேவை தந்தருளும்  பெருமாள் பின் கருட வாகனத்தில் எழுந்தருளுகின்றார். அலங்காரம் நடைபெறுகின்றது. பின் வேதாந்த தேசிகர் லக்ஷ்மி  ஹாரத்துடன் எழுந்தருளி பெருமாளுக்கு சமர்ப்பணம் செய்தருளுகின்றார்.  



பின் லக்ஷ்மி ஹாரம் பெருமாளுக்கு அணிவிக்கப்படுகின்றது. பெருமாள்  திருவீதி வலம் மற்றும் மண்டகப்படி கண்டருளுகிறார். 







பெருமாளின் பின்னழகு 



சிறுவர்கள் பெருமாளின் அதே வாகன சேவையில் தங்கள் ஆராதனப்பெருமாளை எழுந்தருள செய்கின்றனர் அக்கருடசேவை. 


இன்றைய தினம் கருடனின் அம்சமாக அவதரித்த பெரியாழ்வார் அவதரித்த ஆனி சுவாதி. பல்வேறு வைணவ ஆலயங்களில் ஆனி கருடன் என்று சிறப்பாக கருட  சேவை நடைபெறும் நாள் எனவே பெரியாழ்வாரின் வைபவத்தைப் பற்றி காணலாம். 


வாழ்த்தின் பயன் வாழ்த்து பெறுபவர்க்கு மட்டுமல்லாமல் வாழ்த்துபவர்களுக்கும் பயன்படுகின்றது. நம்மை விடப் பெரியவர்களை நாம் வாழ்த்தும் போது அவர்கள் மனமகிழ்ந்து நமக்கு வேண்டிய நன்மைகளைச் செய்கின்றனர். இவ்வாறே நாம் இறைவனை வாழ்த்தினால் அந்த கருணாமூர்த்தி நம் கவலைகளைப் போக்கி நமக்கு எல்லா நன்மைகளையும் அருளுவார் அல்லவா?. இவ்வாறு அந்த ஆதிமூலனுக்கே பல்லாண்டு பாடியவர்தான் பெரியாழ்வார்.

இவர் கலி பிறந்த 47-வதான க்ரோதன வருடம்  ஆனி மாதம், சுக்லபக்ஷம், ஏகாதசி, ஞாயிற்றுக்கிழமை கூடிய  சுவாதி நட்சத்திரத்தில்வேயர் குலத்தில் புதுமையாருக்கும், முகுந்தாச்சார்யாருக்கும் புத்திரராககருடனின் அம்சமாக  அவதாரம் செய்தார். பெரியாழ்வார் பிறந்ததும் கருடன் பிறந்த ஜோதிட சாஸ்திரத்தில் உயர்வாக சொல்லப்படும் சுவாதி நட்சத்திரத்தில் தான். பெருமாள் நரசிம்மராக அவதாரம் செய்ததும் இந்த சுவாதி நட்சத்திரத்தில் தான்.

ஸ்ரீவில்லிபுத்தூரிலே வடபெருங்கோயிலுடையானுக்கு (வடபத்ரசாயிக்கு) நந்தவனம் அமைத்து மலர் மாலைகள் கட்டி சமர்பித்துக் கைங்கர்யம்  செய்து வந்தார். இவரே சூடிக்கொடுத்த சுடர்க்கொடியாள், ஆண்டாள் நாச்சியாரை வளர்த்து, அரங்கனுக்கே அளித்து, அவருக்கு  மாமனார் ஆகும் பேறு பெற்றார்.

அப்போது கூடல் நகராம் மதுரையை வல்லபதேவன் என்ற பாண்டிய மன்னன் ஆண்டு வந்தான். ஒரு சமயம் அவன் இரவில் நகர் வலம் வந்த போது திண்ணையில் உறங்கிய  ஒரு  புதியவனைக்  கண்டான், அவனை நீ யார்? என்று வினவ அவனும் நான் ஒரு அந்தணன், கங்கையில்  நீராடி வருகிறேன் என்றான்.  மன்னன் அவனை  உனக்கு தெரிந்த நீதி ஒன்றைச் சொல் என்று கேட்க அவனும் மழைக் காலத்தின் தேவையை  மற்ற எட்டு மாதங்களிலும், இரவின் தேவையை பகலிலும், முதுமையின் தேவையை இளமையிலும், மறுமையின் தேவையை இம்மையிலும் தேட முயல வேண்டும்என்றான்.

இதைக் கேட்ட மன்னன், தாம் மறுமைக்கு இதுவரை ஒன்றும் செய்யாமல் காலம் கழித்தோமே என்று வருந்தினான். வைணவப் பெரியாரான செல்வ நம்பிகளிடம் அரசன் தன் வருத்தத்தைக் கூறினான். செல்வ நம்பிகளும் நாடெங்கும் பறை அறிவித்து, வித்வான்களைத் திரட்டி, வேத அர்த்தங்களைக் கொண்டு பரம்பொருளைப் பற்றி நிர்ணயித்து, அவ்வழியாலேயே பெறலாம் என்றார். எனவே அரசனும் ஒரு சதஸ் நடத்தினான். தங்கக் காசுகளை துணியில் முடிந்து, அப்பொற்கிழியை சபை நடுவே கட்டி வைக்க ஏற்பாடு செய்தான் தனது தவத்திறமையினால் எந்தவிதப் பிடிப்புமில்லாமல் ஆகாயத்தில் நிறுத்தினான்தனது கேள்விக்கு யார் சரியான விடை அளிக்கின்றார்களோ அவரது காலடியில் அந்தப் பொற்கிழி தானாக விழும் என்றும் அறிவித்தான்.

செய்தி திருவில்லிபுத்தூரையும் அடைந்தது. அங்கே கோயில் கொண்ட பெருமான் வடபெருங்கோயிலுடையான் தனக்குப்  பூ மாலை கட்டி அழகு பார்க்கும் விஷ்ணுசித்தரின் கனவில் தோன்றி, "நீர் போய் அந்த சதஸில் கலந்து கொண்டு  பொற்கிழியை அறுத்து வாரும்' என்று கட்டளையிட்டார். விஷ்ணு சித்தரோ, "அது சகல சாத்திரங்களும் கற்ற பண்டிதர்கள் செய்யவேண்டியது... நானோ சாத்திரம் முழுதும் கற்றவன் அல்லேன். சகலகலா வல்லவர்களான அந்த மாயாவாத பண்டிதர்கள் நிறைந்த சபையில் எப்படி நான் பரதத்துவ நிர்ணயம் செய்யப் போகிறேன்?' என்று கேள்வி எழுப்பினார். அதற்கு இறைவன், "அதைப்பற்றி உமக்கு என்ன கவலை? செய்யப் போவது நாமே... நீர் செல்லும்' என்று ஆணையிட்டார்.

விஷ்ணுசித்தரும் பெருமாளின் ஆணையை  ஏற்றுக் கூடல் நகருக்குப் பயணமானார். செய்தி மன்னனுக்குக் கிடைக்க, செல்வநம்பியோடு சேர்ந்து அவரை எதிர்கொண்டு அழைத்தான் மன்னன். வேதத்தின் விழுப்பொருளான பரதத்துவத்தை நிச்சயித்து அருள வேண்டும் என்று பிரார்த்தித்தான்.

விஷ்ணுசித்தரும் மடை திறந்த வெள்ளம் போல் வேதத்தின் விழுப்பொருளை உரைக்கலானார். "இந்த உலகுக்குக் காரணமான வஸ்து எவரோ அவனே தியானத்துக்குரியவர். எவரிடத்திலிருந்து அனைத்துப் பொருளும் உண்டாகின்றனவோ, எவரால் இவை யாவையும் நிலை பெற்றிருக்கின்றனவோ, முடிவில் எவரிடத்தில் இவையனைத்தும் லயமாகின்றனவோ அவரே பரபிரும்மம்.

சிலந்திப் பூச்சியானது எவ்வாறு நூலை உருவாக்கிக்கொண்டு, உணவாகிற பூச்சிகளைப் பிடித்துக் கொள்ளுமோ அவ்வாறே சகல உயிர்களையும், பொருள்களையும் அந்தப் பரன் படைத்தார், அந்தப் பரன் விஷ்ணு என்னும் பெயருடையவனாய், சாத்விகனாய், அனைவராலும் தொழப்படுகின்றவனாய் இருக்கிறான் என்றும், ஓம்கார வடிவினனான அந்த விஷ்ணு ஒருவனே என்றும், வேத வசனங்களுக்கும் நாயகன் அவனே என்றும், ஜீவர்கள் அந்த ஓம்காரத்தை உச்சரித்த மாத்திரத்திலேயே நலன் அடைகிறார்கள் என்றும், அந்த நாராயணன் ஒருவனே பாவங்களைக் களைபவன் என்றும், ஸ்ரீமந் நாராயணனிடத்திலிருந்து பிரம்மா, ருத்ரன் முதலான முப்பத்து முக்கோடி தேவர்களும் பிறந்தார்கள் என்றும், நாராயணனே பரபிரும்மம் என்றும், பகவான் வியாசரும், எந்தக் காலங்களிலும் நாராயணனுக்கு மிஞ்சிய பர தெய்வமில்லை என்று வேதங்களும், புராணங்களும் சத்ய பூர்வமாகச் சொல்லி இருப்பதை ரிஷிகளாகிய உங்கள் மத்தியில் பிரமாண பூர்வமாகச் சொல்ல விழைகிறேன் என்றும் கையை மேலே உயர்த்தி சத்தியம் செய்து, நாராயணன் ஒருவனே பரனாயிருப்பது போல, சர்வ மந்திரங்களில் அஷ்டாக்ஷரம் ஒன்றே பரதத்வ நிர்ணயம் செய்யவும் உயர்ந்த மந்திரமாக இருக்கிறது என்றும் அருளிச் செய்தார்.

இவ்வாறு வேத வாக்கியம், ஸ்ம்ருதி, இதிகாசம், புராணம் முதலான பிரமாணங்களைக் கொண்டும் அனைத்து வித்வான்களும் ஏற்றுக்கொள்ளும் வண்ணம் "விஷ்ணுவே முழு முதற் கடவுள், வைணவ சமயமே மிகச் சிறந்த சமயம்" என்பதை நிரூபித்தார். பொற்கிழி இவர் பக்கம் தாழ வளைய இவரும் அக்கிழியை அறுத்துக் கொண்டு உருவினார். இதனைக் கண்ட அரசன், மற்ற வித்வான்கள் வியந்தனர்.  வேதங்களோதி விரைந்து கிழியறுத்தவிஷ்ணுசித்தரை வல்லபதேவன் தனது பட்டத்து யானையின் மேல் ஏற்றி, நகர் வலமாக அழைத்துச் சென்றான். விஷ்ணு           சித்தருக்கு பட்டர்பிரான்அதாவதுஅறிவாளிகளின் தலைவன்என்னும் பட்டம் அளித்து கௌரவித்தான் அரசன். இந்நிகழ்வை

பாண்டியன் கொண்டாடப் பட்டர்பிரான் வந்தானென்று
ஈண்டியசங்க மெடுத்தூத வேண்டிய
வேதங்களோதி விரைந்து கிழியறுத்தான்
பாதங்கள் யாமுடைய பற்று. 
என்று பாண்டிய பட்டர் போற்றுகின்றார்.

விருது, சங்கம் போன்ற பல வாத்திய கோஷங்களுடன் பட்டத்து யானையின் மேல் விஷ்ணுசித்தர் எழிலாக நகர்வலம் அழகைக் காண வியப்பூட்டும் வகையில் வானில் கூடலழகர், வானோர் தனித்தலைவர், அயர்வரும் அமரர்கள் அதிபதி, பத்துடையடியவர்க்கு எளியவன், மூவேழுகுக்கும் நாதன், சார்ங்கம் என்னும் வில்லாண்டான் ஆராவமுதமான பவித்திரரான   திருமால், பரமேட்டியான  பெரிய பிராட்டியார் மற்றும் பரிவாரங்களுடன் கருடாரூடராக வருகின்றார்.

இவ்வாறு பெரிய திருவடியில் தண் துழாய் மாலையுடன் பெருமாளைக் கண்டவுடன் , "எங்கே பெருமாளின் திருவுருவத்திற்கும் பெருமைகளுக்கும் கண்ணேறு பட்டு விடுமோ" என்று அஞ்சி அவரை வாழ்த்திப் பரபரப்புடன் யானை மேலிருந்த மணிகளையே தாளமாகக் கொண்டு திருப்பல்லாண்டைப் பாடுகின்றார் விஷ்ணுசித்தர். இவ்வாறு பரந்தாமனுக்கே பல்லாண்டு பாடியதால் இவர் "பெரியாழ்வார்" என்று அழைக்கப்படலானார்.



இவ்வாறு பெரியாழ்வார் பரதத்துவ நிர்ணயம் செய்த விழா, மார்கழி மாதம்  மதுரை கூடல் அழகர் திருக்கோயிலில் பெரும் உற்சவமாகக் கொண்டாடப் படுகிறது. மற்றும்  எல்லா பெருமாளின் திருத்தலங்களிலும் (கருடாழ்வாரின்) பெரியாழ்வாரின் திருநட்சத்திரமான ஆனி சுவாதி அன்று இந்த பரத்துவ நிர்ணயத்தை விளக்கும் வகையில்  கருட சேவை நடைபெறுகின்றது. இது ஆனி கருடன் என்று அழைக்கப்படுகின்றது. அன்று பெருமாள் கருட வாகனத்திலும் பெரியாழ்வார் யானை வாகனத்திலும் எழுந்தருள

பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு
பல கோடி நூறாயிரம்
மல்லாண்ட திண்டோள் மணிவண்ணா! உன்
செவ்வடி செவ்வி திருக்காப்பு. (தி -1)

பொருள்: மல்லர்களை வென்ற வலிமையுள்ள தோள்களையுடைய நீல இரத்தினம் போன்ற நிறத்தையுடையவனே! பற்பல ஆண்டுகளிலும், அனேக கோடி இலட்சம் ஆண்டுகளிலும் உமது சிவந்த திருவடிகளின் அழகுக்குக் குறைவற்ற பாதுகாப்பு உண்டாவதாக.

அடியோமோடும் நின்னோடும் பிரிவின்றி யாயிரம் பல்லாண்டு
வடிவாய் நின் வலமார்பினில் வாழ்கின்ற மங்கையும் பல்லாண்டு
வடிவார் சோதி வலத்துறையும் சுடராழியும் பல்லாண்டு
படைப்போர்புக்கு முழங்கும் அப்பாஞ்சசன்னியமும் பல்லாண்டே. (தி 2)
பொருள்: அடியவர்களான எங்களுக்கும் சுவாமியான தங்களுக்கும், பிரிவு இல்லாமல் பல ஆயிரம் ஆண்டுகள் நித்திய மங்களமாய்க் கழிய வேண்டும். உனது திருமேனியின் பிரகாசத்திற்கு காரணமாய், தங்களின் மார்பின் வலப்பக்கத்தில் வாழும் மகா லட்சுமியும் பல ஆண்டுகளிலும் மங்களத்துடன் இருக்கவும். உன் வலத் திருக்கையில் ஒளி வீசிக் கொண்டிருக்கும்  சக்கரமும், போரிலே பேரொலியைச் செய்யும் பாஞ்ச்சன்னியம் என்னும் சங்கமும் எப்போதும் மங்களம் உள்ளவையாய் இருக்க வேண்டும்.
என்று அன்பர்கள் பல்லாண்டு சேவிக்கின்றனர்.  பெருமாளுக்கும், பெரிய பிராட்டிக்கும், பாஞ்சஜன்யம், திருவாழிக்கும்  பல்லாண்டு பாடிய பெரியாழ்வார் திருவடிகளே சரணம்.