Showing posts with label Thiruvallur. Show all posts
Showing posts with label Thiruvallur. Show all posts

Friday, May 8, 2009

வைத்தியர் கருட சேவை

திருஎவ்வுள் திவ்ய தேசம்
இராஜ கோபுரம்

இப்பதிவில் நாம் காணப்போகும் கருட சேவை திருவள்ளூர் வைத்திய வீரராகவ பெருமாளுடையது ஆகும். இவர் சாலிஹோத்ர முனிவர் பர்ண சாலையில் தானே வந்து கிடந்த பெருமாள். மது கைடபர்களை அழித்து வேதியர்களை காப்பாற்றிய பெருமாள். வள்ளலாரின் தீராத வயிற்று வலியை தீர்த்து வைத்த வைத்திய வீரராகவப் பெருமாள். இக்கலியுகத்தில் சாலிஹோத்ர முனிவரின் தலைமேல் கையை வைத்த நிலையில் புஜங்க சயனத்தில் அற்புதமாக சேவை சாதிக்கும் பெருமாள். திருமழிசையாழ்வார் மற்றும் திருமங்கையாழ்வார் மங்களாசாசனம் செய்த பெருமாள். இன்றும் தன்னை நம்பி வந்து சரணடைபவர்களின் பிறவி நோயை மட்டும் அல்லாது உடல் நோயையும் தீர்க்கும் பெருமாள்.


வீரராகவப்பெருமாள் உபய நாச்சிமார்களுடன்
இந்த வீக்ஷாரண்ய க்ஷேத்திரத்தில் பத்ரிகாசிரமத்திலிருந்து வந்த சாலிஹோத்ர முனிவர், ஹ்ருதபாப நாசினி குளக்கரையில் பர்ணசாலை அமைத்து ஸ்ரீமந்நாராயணை நினைத்து பரமபதம் வேண்டி தவம் செய்து வந்தார். சாலிஹோத்ரர் என்பது காரணப்பெயர்.  சாலி என்றால் நெல் அளக்கும் படி. இவரது பெற்றோர் சந்தான பாக்கியம் வேண்டி 28000 சாலி நெல் கொண்டு ஒரு வருடம் யாகம் செய்து, இவரை பிள்ளையாகப் பெற்றனர். எனவே இவருக்கு சாலிஹோத்திரர் என்று பெயரிட்டனர்.


 இவர் ஒரு வருடம் முழுவதும் உண்ணாவிரதம் இருந்து தான் வருடன் முழுவதும் சேகரித்த நெல்லைக் கொண்டு அமுது பண்ணி அதை தை அமாவாசையன்று பெருமாளுக்கு நிவேதனம் செய்தார். அப்போது ஒரு முதிய வேதியர் அங்கு வந்தார், தங்கள் பர்ணசாலைக்கு வந்த அதிதியை அன்புடன் வரவேற்று அவருக்கு பாத பூஜை செய்து அவருக்கு அன்னத்தின் ஒரு பகுதியை அளித்தார். அதை உண்ட முதியவர், இன்னும் பசியாக உள்ளது என்று மறு பகுதியையும் உண்டு விட்டு சென்றார். 
சாலிஹோத்திரர் பசியுடனே தவத்தை தொடர்ந்தார். 
அடுத்த வருடம் அதே நாள் அதே முதியவர் வந்தார், இப்போதும் அவரை உபசரித்த சாலிஹோத்ர முனிவர் அவருக்கு அன்னத்தைப் படைத்தார். அனைத்து அன்னத்தையும் உண்ட முதியவர் உண்டு முடித்த பின் படுக்க எவ்வுள்? என்று வினவினார். அதாவது எங்கே படுத்து சிறிது சிரமப்பரிகாரம் செய்து கொள்ளலாம் என்றார். முனிவரும் தனது பர்ண சாலை குடிசையைக் காட்ட அதில் சென்று படுத்துக் கொண்டார் அந்த முதியவர். மாலை நேரம் ஆகியும் அவர் வெளியே வராததைக் கண்ட முனிவர் சன்னலின் வழியே உள்ளே நோக்க அப்படியே ஆனந்தத்தில் கூத்தாட ஆரம்பித்து விட்டார். உள்ளே பெருமாள் தனது பாம்பணையில் ஒய்யாரமாக சயனித்து பீதம்பரதாரியாய், சங்கு சக்கரம் ஏந்தி, மார்பில் ஸ்ரீவஸ்தம், கௌஸ்துபம் மின்ன, வனமாலை, துளசிமாலை அசைந்தாட பிரசன்ன வதனத்துடன் ஒய்யாரமாக சேவை சாதித்து கொண்டிருந்தார். திருப்பாற்கடலில் பள்ளிகொண்ட பெருமாளே, நஞ்சரவில் துயில் கொண்ட நாதனே, படுத்த பைந்நாகணைப் துயிலமர்ந்த வேந்தே, அரவினணை மேலானே , அனந்த சயனனே, பையரவினணைப் பாற்கடலுள் பள்ளி கொண்ட பரம மூர்த்தியே இங்கு அடியேன் பொருட்டு தானே வந்து சேவை சாதித்தீரே என்று அவரை பலவாறு போற்றிய சாலிஹோத்ர முனிவரைப் பார்த்து என்ன வரம் வேண்டும் என்று பெருமாள் வினவ, ஐயனே எமக்கு சேவை சாதித்த கோலத்திலேயே இங்கு தாங்கள் இருந்து பக்தர்களின் குறை தீர்க்க வேண்டும் என்று வேண்ட பெருமாளும் அவ்வாறே நாம் எல்லோரும் உய்ய இன்றும் அதே கிடந்த கோலத்தில் புஜங்க சயனத்தில் இன்றும் சேவை சாதித்துக்கொண்டிருக்கிறார் வைத்திய வீரராகவராக.
பெருமாள் கேட்ட எவ்வுள் என்ன என்று யோசித்தீர்களா? எல்லாவற்றிலும் அந்தர்யாமியாக இருப்பவர் பெருமாள். ஆகவே உன் இதயத்தின் உள்ளேயா அல்லது இந்த வீட்டின் உள்ளேயா? என்று பெருமாள் கேட்டார் என்று பரனூர் மகாத்மா அவர்கள் எவ்வுள் என்பதற்கு அருமையான விளக்கம் தருவார்.
ஸ்ரீ வைத்திய வீரராகவப் பெருமாள் திருஎவ்வுள்

பாலனாகிஞாலமேழுமுண்டு பண்டு ஆலிலைமேல்
 சாலநாளும் பள்ளிகொள்ளும் தாமரைக்கண்ணன், எண்ணில் நீலமார்வண்டுண்டுவாழும் நெய்ந்தலந்தண் கழனி
 ஏலநாறும்பைம்புறவில் எவ்வுள் கிடந்தானே



-->
இத்தலத்தில் பெருமாளை வேண்டிக்கொண்டு உப்பும் மிளகும் சேர்த்து வேண்டிக்கொண்டும், ஹுருத பாப நாசினி தீர்த்தத்தில் வெல்லம் கரைத்து வழிபட்டும் நோய் தீர்ந்தவர்கள் பல்லாயிரம் பேர்.


ஸ்ரீ விஜயகோடி விமானம்
குளக்கரையிலிருந்து திருக்கோயில்
ஹ்ருதபாபநாசினி திருக்குளம்
-->

இத்தலத்தின் தீர்த்தம் ஹுருதபாப நாசனி என்று அழைக்கப்படுகின்றது. கங்கையினும் சிறந்த தீர்த்தம் இத்திருக்குளம். இக்குளத்தின் தண்ணீர் எவரது உடலில் படுகின்றதோ அவர்களின் பாபங்கள் எல்லாம் கரைந்து விடுகின்றன, மனக்குறைகள் எல்லாம் தீருகின்றன. அமாவாசை தினங்களில் அதிலும் பெருமாள் இத்தலம் வந்து கிடந்த தை அமாவாசையன்று இத்தீர்த்ததில் நீராடி விஜய கோடி விமானத்தில் பள்ளி கொண்ட பெருமாளை சேவிக்க அனைத்து பாபங்களிலும் இருந்தும் விடுபடுவர் என்பது ஐதீகம். பக்தர்கள் தங்கள் சர்ம நோய் தீர பால், மற்றும் வெல்லத்தை கரைக்கின்றனர். வெல்லம் கரைவது போல் நோய் கரைவதாக ஐதீகம். வருடத்தில் இரண்டு முறை இத்திருக்குளத்தில் தெப்போற்சவம் கண்டருளுகின்றார் வீரராகவப்பெருமாள். பிரம்மாண்டமாக இருந்த திருக்குளம் தற்போது தகுந்த பராமரிப்பு இல்லாமல் சுருங்கி விட்டது நீர் நீராழி மண்டபத்தை சுற்றி மட்டுமே சிறிது தண்ணீர் உள்ளது மற்ற இடம் நந்தவனமாகி விட்டது.

கன்றை நினைத்து ஓடி வரும் பசு போல அஞ்சிறைப் புள் ஏறி நாம் எல்லோரும் உய்ய ஓடி வரும் அச்சுதன் வீர ராகவப் பெருமாள்

. ....செங்கண் மாற்(கு) என்றும் படையாழி புள்ளூர்தி
பாம்பணையான் பாதம் அடையாழி நெஞ்சே! ...

-->
தை அமாவாசையை தீர்த்த நாளாகக் கொண்டு ஒரு பிரம்மோற்சவம், மற்றும் சித்ரா பௌர்ணமியை தீர்த்த நாளாகக் கொண்டு ஒரு பிரம்மோற்சவம் என வருடத்தில் இரு பிரம்மோற்சவங்கள் நடைபெறுகின்றன. தினமும் காலையும் மாலையும் பெருமாள் பல்வேறு வாகனங்களில் சேவை சாதிக்கின்றார்.
--> தங்க கருட சேவை மூன்றாம் நாள் காலை நடைபெறுகின்றது.
இப்பதிவில் தாங்கள் காணும் கருட சேவைப் படங்கள் சித்திரை பிரம்மோற்சவத்தின் போது எடுக்கப்பட்டவை


வீரராகவர் பின்னழகு


தை மாதம் குளிர் காலம் என்பதால் கருட சேவை காலை 5:30 மணிக்கு கோபுர வாசல் தரிசனம். ஈகாடு செல்கின்றார் பெருமாள். ஈகாடு கனகவல்லித் தாயாரின் பிறந்த வீடு. மஹா லக்ஷ்மித் தாயார் தர்மசேனன் என்னும் மன்னன் மகளாக பிறந்து வசுமதி என்னும் திருநாமத்துடன் வளர்ந்து வந்தாள். தாயாரை ஆட்கொள்ள பெருமாள் ஒரு இராஜகுமாரனாக வந்து ஒளிந்திருந்த மது கைடபர்களை அழிக்க சுதர்சன சக்கரம் ஏவி அவர்களை அழித்து, பின் வசுமதியைக் கண்டு சொக்கி தர்மசேனனிடம் வசுமதியின் கரம் வேண்டினார். முதலில் வீரராகவரை சேவித்து வரும்படிக்கூற இரு மனம் ஒன்றினால் தெய்வம் அங்கே தோன்றுவார் என்று கூறிய இராஜ குமாரன், தான் வசுமதியை திருமணம் செய்து கொண்டு அங்கேயே இருந்து விட சம்மதிக்கின்றார். எனவே இருவர் திருமணமும் நடைபெறுகின்றது. அவர்கள் குல வழக்கப்படி புது மணமக்கள் வீரராகவப் பெருமாளை சேவிக்க சென்றனர் அப்போது அனைவரும் வியக்கும் வண்ணம் இருவரும் மறைந்தனர். அன்று தர்மசேனனுக்கு கொடுத்த வாக்கிற்காக பெருமாள் தை பிரம்மோற்சவத்தின் போது தனது மாமியார் அகமான ஈகாடு செல்கின்றார். சித்திரை பிரம்மோற்சவம் கோடைக்காலத்தில் நடைபெறுவதால் கோபுர வாசல் சேவை அதிகாலை நான்கு மணிக்கு நடைபெறுகின்றது. அஞ்சிறைப் புள் ஏறி அச்சுதன் Toll gate , மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரில் உள்ள மண்டபம் எழுந்தருளி பக்தர்களுக்கு சேவை சாதித்து திருவமுது கண்டருளி திருக்கோவிலுக்கு திரும்பி வருகின்றார்.



குழற்கோவலர் மடப்பாவையும் மண்மகளும் திருவும் நிழற்போல் வளர்கண்டு நிற்கும் கொல்? மீளும் கொல் ! அழற்போல் அரும் சக்கரத்தண்ணல் விண்ணோர் தொழக் கடவும் தழற்போல் சினந்த அப்புள்ளின் பின்போன தனி நெஞ்சம்.

குளிர்ந்த அழகிய திருத்துழாய் மாலை அணிந்தவனும், நெருப்பினைப் போல அழிக்கும் ஆற்றல் பெற்ற திருச்சக்கரத்தை ஏந்தியவனும், நித்திய சூரிகள் தொழுது வணங்கும்படியாக தீப்போலும் சினமிக்க கருடாழ்வானை வாகனமாகக் கொண்டு விளங்கும்படியனவனுமான எம்பெருமான் அக்கருடப் பறவை ஏறிச்செல்லும் போது என் தனியான மனதானது அக்கருட வாகன எம்பெருமான் மீது சென்று விட்டது. குழலூதும் ஆயர் குலத்தில் தோன்றிய நப்பின்னைப் பிராட்டி, பூமி பிராட்டியும், பெரிய பிராட்டியும் எப்போதும் நிழல் போல் பிரியாது விளங்கும் அவர்களைக் கண்டு எனது மனம் அவ்விடத்து விடாது நிற்குமோ? அல்லது என்னிடம் திரும்பி வருமோ?


-->
என்னங்க உங்க மனத்தையும் கொள்ளை அடிச்சுட்டு போயிட்டாரா? காய்சினப் பறவை ஏறி பறந்து வரும் காய்சின வேந்தர் வைத்திய வீரராகவர்.


பின்னழகு மூன்றாம் நாள் மாலை ஹனுமந்த வாகனத்தில் சேவை சாதிக்கின்றார் பெருமாள்.