Showing posts with label thiruvallikeni Parthasarathi. Show all posts
Showing posts with label thiruvallikeni Parthasarathi. Show all posts

Sunday, May 15, 2011

சித்திரை கருட சேவை

மேற்கு சைதாபேட்டை
பிரசன்ன வேங்கட நரசிம்ம பெருமாள்
சித்திரை பிரமோற்சவ மூன்றாம் நாள் காலை
கருட சேவை
கருடனுடைய கண்களை கவனித்தீர்களா? வாகனங்கள் ஆங்கிலேயர்களின் காலத்தில் செய்த போது தனியாக இங்கிலாந்திலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட கண்ணாடியில் செய்யப்பட்ட கண்கள் இவை.ஒளி இக்கண்களில் நேரடியாக விழும் போது இவை ஒளிரும்

கருட சேவை பின்னழகு

பெரிய திருவடியின் பாதம் கவனித்தீர்களா?

**************************

  திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப்பெருமாள்
கருடசேவை

திருவல்லிக்கேணியிலும் பார்த்தசாரதிப் பெருமாள் மூன்றாம் நாள் காலை தங்க கருட வாகனத்தில் பிரம்ம முகூர்த்தத்தில் கோபுர வாசல் தரிசனம் தந்து பின் மாட வீதியில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்து. பின்னர் ஒற்றை ரோஜா மாலையுடன் ஏகாந்த சேவை சாதித்து அருளுகின்றார் .

பெருமாளின் பின்னழகு இந்த வருடம் மேற்கு மாட வீதியில் பெருமாள் வழங்கும் அற்புத தரிசனம் காணும் வாய்ப்பு கிட்டியது, முதலில் கங்கை கொண்டான் மண்டபம் வரை பக்தர்களின் தேங்காய் பழம் மற்றும் பட்டு துண்டுகளை ஏற்றுக்கொண்டு சேவை சாதித்த பெருமாள் மண்டபம் வந்தவுடன் அப்படியே பின் நோக்கி மாட விதியின் இறுதி வரை சென்று பின்னர் கருடனில் பறந்து வருவது போலவே அற்புதமாக மேள சத்ததிற்கு ஏற்றவாறு ஆடி வரும் அந்த அழகை எப்படி வர்ணிப்பது என்றே தெரியவில்லை. நேரில் வந்து தரிசித்தால் மட்டுமே அதை உணர முடியும்.
மண்டபத்தில் பெருமாள்

பார்த்தசாரதி பெருமாளின் ஏகாந்த சேவை

பின்னர் மண்டபத்தில் மண்டகப்படி கண்டு அருளுகிறார் பெருமாள். பின்னர் அங்கிருந்து புறப்பட்டு தெற்கு மற்றும் கிழக்கு மாடவீதிகள் வழியாக அலங்கார மண்டபம் அடைந்து பின்னர் அங்கிருந்து ஏகாந்த சேவை சாதித்து ஆலயத்திற்குள் வருகின்றார் பெருமாள்.



மஹாபாரதப்போரில் பீஷ்மரின் அம்பு பட்ட காயங்களின் வடுக்களை பெருமாளின் முகத்தில் தெளிவாகக் காணலாம். தன் அன்பன் அர்ச்சுனுனனுக்காக இந்த புண்களை பெருமாள் இந்த கலிகாலத்திலும் தன்னுடைய எளிமையை காட்டி அருள் பாலிக்கின்றான். மூன்று முறை இந்த பார்த்தசாரதிப் பெருமாளை வார்த்த போதும் முகத்தில் இவ்வாறு வடுவுடன் பெருமாள் அமைந்தாரம், பின்னர் அசரீரியாக பெருமாள் இவ்வுண்மையை உணர்த்தினார் என்பார்கள் பெரியோர்கள். மேலும் பெருமாளின் இடுப்பில் யசோதை உரலில் கட்டிய கயிற்றின் தழும்பும் உள்ளது என்றும் கூறுகின்றனர். எனவே பெருமாளுக்கு தங்க கவசம் சார்த்தி மிகவும் பத்திரமாக காக்கின்றனர்.

சித்திரை மாதம் என்பதால் வெயில் அதிகமாக இருக்கும் என்பதால் பெருமாள் குளிர்ச்சியாக இருக்க வேண்டும் என்று திருமேனி முழுவதும் சந்தனம் சார்த்தியிருக்கும் அந்த பக்தியை என்னவென்று சொல்ல.


திருவல்லிக்கேணியில் பெருமாள் பல்வேறு வாகனங்களில் சேவை சாதிக்கும் போது அவரைப் போலவே சிறிய பெருமாள்களை அதே போலவே அலங்காரம் செய்து பின்னே பக்தர்கள் வலம் வருவார்கள். அது போல வந்த ஒரு கருட சேவையை தாங்கள் காண்கின்றீர்கள்.


இது கருட சேவையின் ஐம்பதாவது பதிவு. வரதரின் கருட சேவை மற்றும் திருநறையூர் கல் கருட சேவை பதிவுகளை மிகவும் அதிகமான அன்பர்கள் தரிசனம் செய்தனர்.

இது வரை வந்து பெருமாளை சேவித்த அன்பர்கள் அனைவருக்கும் அந்த பெருமாள் அருள் புரியட்டும். இன்னும் பல கருட சேவைகளை அன்பர்களுக்கு வழங்க பெருமாள் தனது கருட சேவை தரிசனத்தை தர அவர் தாள் பற்றி இறைஞ்சுகிறேன்.