Saturday, July 12, 2008

கருட கம்பம்

முந்நீர் ஞாலம் படைத்த முகில் வண்ணன், பூமன்னு மாது பொருந்திய மார்பன், மாமலர் மன்னிய மங்கை மகிழ்ந்துறை மார்பன், விஷ்ணு பகவானின் வாகனமான கருடனுக்கு மட்டும் ஒரு தனி சிறப்பு உண்டு அது என்னவென்றால வைஷ்ணவ ஆலயங்களில் கொடி மரம் கருட கம்பம் என்று அழைக்கப்படுகின்றது. பெருமாள் ஆலயங்களில் துவஜஸ்தம்பங்களில் பெரிய திருவடி நித்ய வாஸம் செய்வதால் அவை கருடஸ்தம்பம் என்றும் அழைக்கப்படுகின்றன என்பது ஐதீகம் . பெருமாள் கருடனை வாகனமாக ஏற்ற போது வெற்றிக்கு அறிகுறியாக நீ எனது கொடியிலும் விளங்குவாய் என்று வரக் கொடுத்தார் எனவே எம்பெருமானின் கொடியிலும் கருடனே விளங்குகின்றான்.

மேலும் சுப நிகழ்ச்சிகள் நடைபெறுவதை அறிவிக்கும் ஆற்றலும் கருடனுக்கே உள்ளது. கருட தரிசனம் மங்களகரமானது என்று கருடனின் பெருமைகளைச் சொல்லிக் கொண்டே போகலாம்.

சபரி மலையில் மகர ஜோதிக்காக ஐயப்பனுக்கு அணிவிக்க பந்தள இராஜா அர்பணித்த திருவாபரணங்கள் கொண்டு வரப்படும் போது கருடன் வட்டமிட்டு வருவதை எல்லோரும் அறிவோம். அது போலவே பெரிய திருக்கோவில்களின் கும்பாபிஷேகம் நடக்கும் போது கருடன் வந்து வட்டமிடும் என்பது உண்மை. ஒரு முறை திருமயிலை கபாலீச்சுரத்தில் கும்பாபிஷேகம் நடைபெற்றவுடன் மூன்று கருடன் வந்து இராஜ கோபுரத்தின் உயரே கருடன் வந்து வட்டமிட்டதை அடியேன் அனுபவித்துள்ளேன். இவ்வாறு மங்கள்த்திற்கு அறிகுறியாக விளங்குபவர் கருடன்.

மையோ! மரகதமோ, மறிகடலோ, மழை முகிலோ ஐயோ! இவன் வடிவழகென்பதோர் அழகுடைய எம்பெருமானின் எதிரே சேவை சாதிப்பவர் தான் கருடன். எவ்வாறு நிலைக் கண்ணாடி தன் எதிரே உள்ள பிம்பத்தை பிரதிபலிக்கின்றதோ அது போல எம்பெருமானின் திவ்ய சொரூபத்தை, திவ்ய கல்யாண குணங்களை காட்டியருள்பவர் கருடன்.

ஆகமம் என்றால் வருகை என்று பொருள். உபதேச வழியாக வருபவை அவை. ஆன்மாக்கள் மோட்சம் அடைய மல நாசம் செய்பவை ஆகமங்கள். திருக்கோவில் கட்டுவதற்கு நிலம் தேர்ந்தெடுப்பது முதல் பூஜை முறைகள் முடிய அனைத்தும் ஆகமங்களில் கூறப்பட்டுள்ளன. ஆகமங்களின் படி ஐந்து நாட்களுக்கு மேற்பட்ட திருவிழாக்களின் போது கொடியேற்றம் அவசியம். எனவே வைணவத்தலங்களில் பிரம்மோற்சவத்தின் போது என்பெருமானுடைய கொடியாகிய கருடக்கொடி ஏற்றப்படுகின்றது. அது ஏற்றப்படும் கொடிக்கம்பம் கருட கம்பம் என்றும் அழைக்கப்படுகின்றது. திருமலையில் அகலகில்லேன் இறையும் என்று அலர்மேல் மங்கை உரை மார்பன் மலையப்ப சுவாமியின் பிரம்மோற்சவத்தின் முதல் நாள் கருடக்கொடி கருட கம்பத்தில் ஏற்றும் அழகைக் காணுங்கள்.


சில தலங்களில் இராஜ கோபுரத்திற்க்கு வெளியே எந்தப் பறவையும் பறக்க முடியாத உயரத்தில் பறக்கும் கருடனுக்கு ஒரு ஸ்தம்பத்தின் மேல் உயர்ந்த சன்னதி அமைக்கின்றனர். இவையும் கருட கம்பம் என்றே அழைக்கப்படுகின்றன. இவ்வாறு அமைக்கப்பட்ட இரண்டு உயர்ந்த கருட கம்பங்களை தரிசனம் செய்யலாம்.


பூவராகர் - ஸ்ரீமுஷ்ணம்

மிக உயர்ந்த கருட கம்பத்தை நாம் ஸ்ரீ முஷ்ணத்தில் தரிசிக்கலாம். நமக்கும் பூவின் மிசை நங்கைக்கும் இன்பன், பந்திருக்கும் மென் விரலாள் பனி மலராள் வந்திருக்கும் மார்பன், எம்பெருமான் பூவராகராக எழுந்த்ருளி அருள் பாலிக்கும் அபிமான ஷேத்திரம்தான் ஸ்ரீமுஷ்ணம். இரண்யாக்ஷனை வதைத்து பூமி பிராட்டியாரை மீட்ட பெருமாள் இங்கே முஸ்லீம்களும் வணங்கும் பெருமாளாய் சேவை சாதிக்கின்றார் இத்தலத்தில். பெருமாளையும் ஏழு நிலை இராஜ கோபுரத்தின் உயரத்திற்கு இனையாக ஓங்கி உயர்ந்திருக்கும் கருட கம்பம்.


அதன் உச்சியில் உள்ள கருட மண்டபத்தில் கருடன் சேவை சாதிக்கின்றார்

. அந்த கருட கம்பத்தின் அழகைத்தான் கண்டு களியுங்களேன்.

 
சிறிய திருவடியான ஆஞ்சனேயர் ஸ்ரீஇராமாவதாரத்தின் போது இராமரின் தூதராக இலங்கைக்கு ஸ்ரீ சீதா பிராட்டியாரிடம் சென்றது போல, பெரிய திருவடியான ஸ்ரீ கருடன் கிருஷ்ணாவதாரத்தில் தாயாரான ஸ்ரீ ருக்மணி பிராட்டியார் எழுதிக் கொடுத்த ஓலையை எடுத்துக் கொண்டு எம்பெருமானான ஸ்ரீ கிருஷ்ணனிடம் தூது சென்றவன் கருடன்.

பெருமாள் ருக்மிணி பெருமாட்டியாருடன் ஸ்ரீ வித்யா இராஜ கோபாலராய் கையில் செண்டாயுதம் ஏந்தி ஒய்யாரமாய் எழில் கொஞ்சும் குழந்தையாக எழுந்தருளி சேவை சாதிக்கும் இராஜ மன்னார்குடி அபிமான ஷேத்திரத்தில் உள்ள கருட கம்பம் இரண்டாவது உயரமான கருட கம்பம் ஆகும்.

மன்னார்குடி கருட கம்பத்தையும் கண்டு களியுங்கள்.

பாடும் குயில்காள்! ஈதென்ன பாடல்? நல்வேங்கட
நாடர்நமக்கொருவாழ்வு தந்தால் வந்துபாடுமின்
ஆடும்சுருளக்கொடியுடையார் வந்தருள் செய்து
கூடுவாராயிடில் கூவி நும்பாட்டுக்கள் கேட்டுமே.
அடுத்த பதிவில் கருடன் கருடாழ்வான் ஆன சரிதத்தைக் காண்போம்.

Monday, June 23, 2008

கருட சேவை-7

தக்ஷிண பத்ராசலம் மேற்கு மாம்பலம்
கோதண்டராமர் கருடசேவை
வையத்தெவரும் வணங்க அணங்கெழு மாமலை போல
தெய்வப்புள் ஏறிவருவான் சித்திரக்கூடத்துள்ளானே - திருமங்கையாழ்வார்

தெய்வப்புள்ளான கருட பகவான் ஒப்பற்ற மேன்மையுடையவர். மஹாவிஷ்ணுவுடைய இரண்டாவது வியுகமான ஸ்ரீ சங்கர்ஷண மூர்த்தியின் அம்சமாக விளங்குபவர்.

மனித உடலிலுள்ள ஐந்து வாயுக்களான ப்ராணன், அபாநன், வ்யானன்,உதானன், ஸமானன் என்பவற்றுக்கு ஸத்யர், ஸுபர்ணர், கருடர், தார்க்ஷ்யர். விஹகேஸ்வரர் என்னும் ஐந்து மூர்த்திகளாய் விளங்குகின்றார்.

இவர் ஞானம், சக்தி, பலம், ஐச்வர்யம், வீர்யம், தேஜஸ் என்னும் ஆறு குணங்கள் நிரம்பப்பெற்றவர்.

 ஏழு சுரங்களையுடைய சாம வேதத்தின் வடிவமானவர். அணிமா, மஹிமா, லகிமா,கரிமா,வசித்வம்,ஐச்வர்யம், ப்ராப்தி, ப்ராகாம்யம் என்னும் அட்டமஹா சித்திகள் பெற்றவர்.

கருடன் வேறு, பகவான் வேறு என்று நினைக்க வேண்டாம். பகவானே கருடனாக அவதரித்து விஷ்ணு என்றும் கருடன் என்றும் பெயர் பெற்றார் என்று மஹாபாரதம் கூறுகின்றது.

கருடன் எம்பெருமானின் வாகனமாக எவ்வாறு ஆனார் என்பதற்கு இரு ஐதீகங்கள் வழங்குகின்றது அவை என்ன என்று பார்ப்போமா? சப்த ரிஷிகளில் ஒருவரான காசயபர் ஒரு சமயம் ஒரு மாபெரும் வேள்வியை நடத்தினார். அதற்கு பல மஹரிஷிகள் எழுந்தருளியிருந்தனர். ஒவ்வொரு மஹரிஷியும் தங்களது சக்திகேற்ப அவ்வேள்விக்கு உதவி புரிந்தனர். இம்மஹரிஷிகளில் வாலகில்யகர்கள் என்று சொல்லப்படும் மஹரிஷிகளும் இருந்தனர். இவர்கள் அறிவிலும், தவத்திலும் சிறந்தவர்கள் ஆனால் உருவத்தில் மிக மிகச் சிறியவர்கள். இவர்கள் வேள்விக்காக சிறு ஸமித்துக்களை எடுத்துக் கொண்டு வரும்போது குளம்படியளவுள்ள நீர்த்தேக்கத்தை கண்டு அதை கடக்க முடியாமல் நின்ற போது , அவ்வழியில் தேவராஜன் இந்திரன் ஐராவதத்தில் அவ்வழியாக சென்ற்வன் இவர்களைப் பார்த்து கேலியாக சிரித்தான். இதனால் கோபமடைந்த இவர்கள் இப்படி செருக்குடன் செல்லும் இந்திரனே உனனையும் அடக்கி ஆளக்கூடிய மாவீரன் ஒருவன் பிறப்பான் அவனால் உனக்கு படுதோல்வி ஏற்படக் கடவது என்று சாபம் கொடுத்தனர். பிறகு வால்கிய மஹரிஷிகள் பெரும் தவம் இயற்றி அத்தவத்தின் பயனாய்த் கச்யபர் விநதைக்கு மகனாக கருட பகவான் பிறந்தார்.

கொற்றப்புள்ளொன்றேறி மன்றூடே வருகின்ற
காரைக்கால் திருமலைராயன் பட்டிணம் வீழி வரதராஜப் பெருமாள்

இரண்டாவது ஐதீகம் , தன் தாயாரை அடிமைத்தளையிலிருந்து விடுவிக்க தேவலோகம் சென்ற கருடன் இந்திரனை தோற்கடித்து அமிர்த குடம் பெற்று திரும்பி வரும் போது ஒரு மரத்தல் வேகமாக உட்கார்ந்தான். அப்போது அம்மரத்தில் தூங்கிக்கொண்டிருந்த வாலகிய முனிவர்கள் மரம் ஆடிய வேகத்தில் விழுந்து விட்டனர், இதைக் கண்ட கருடன், வெகு கரிசனத்துடன் அவர்களை தூக்கி மரத்தின் மேல் விட்டான். இதனால் மகிழ்ச்சி அடைந்த மஹரிஷிகள் கருடனை நீ பகவானின் வாகனமாகும் பேறு பெருவாய் என்று வாழ்த்தி வரம் கொடுத்தனர். இவ்வாறு வீரம், பலம், கருணை, சாதுர்யம், ஞானம், வேகம், நிதானம், அழகு மிகுந்த கருடன் பெருமாளின் வாகனமானார்.

கருடனுக்கு ருத்ரை, ஸுகீர்த்தி என்று இரு மனைவியர்கள். இவரது நட்சத்திரம் சுவாதி. பெருமாளுக்கு எப்போதும் சேவை புரியும் நித்ய சூரிகளில் ஒருவர் கருடன்.
தூவாய புள்ளூர்ந்து வந்து துறை வேழம்
மூவாமை நல்கி முதலை துணித்தானை
தேவாதி தேவனை செங்கலமலக் கண்ணானை
நாவாயுளானைநறையூரில் கண்டேன்

கெண்டையும் குறளும் புள்ளும் கேழலும் அரியும் மாவும்அண்டமும் சுடரும் அல்லாவாற்றலும் ஆய எந்தை ஆதி கேசவர் கருட சேவை



பெரும்பாலும் திருக்கோவில்களில் கருடன் நின்ற கோலத்தில் தான் பிரதிஷ்டை செய்யப்பட்டிருப்பார். சில தலங்களில் அமர்ந்த கோலத்திலும் பிரதிஷ்டை செய்யப்பட்டிருக்கிறார். மிகக்குறைவான திருத்தலத்தில் கையில் அமிர்த குடத்துடன் உள்ள கோலத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளார். இவ்வாறு கருடன் எழுந்தருளி அருள் பாலிக்கும் தலங்களைப்பற்றி இன்னொரு பதிவில் காண்போம்.
கருட சேவை தொடரும்...............

Friday, June 20, 2008

ஸ்ரீநிவாசர் கருட சேவை

சென்னை திருமயிலை வேதாந்த தேசிகர் தேவஸ்தானம்
ஸ்ரீநிவாசர் ஏகாந்த ஸேவை


நமது இந்து மதத்தில் ஒவ்வொரு தெய்வத்திற்கும் ஒரு வாகனம் உண்டு. மஹா விஷ்ணுவின் வாகனம் தான் கருடன். திருக்கோவில்களில் பிரம்மோற்சவ காலங்களின் பெருமாள் காலையும் மாலையும் பல்வேறு வாகனங்களில் கோவிலுக்கு வெளியே வந்து , கோவிலுக்குள் வந்து வழிபட முடியாதவர்களான முதியவர்கள், முடியாதவர்கள், நோய் வாய்ப்பட்டவர்கள் ஆகியோருக்கு தரிசனம் அளிக்க எளி வந்த கருணையால் தானே கோவிலுக்கு வெளியே திருவீதியில் வெளியே வந்து தரிசனம் அளிப்பார். சில கோவில்களில் மூலவருக்கு சமனான சிதம்பரம் நடராஜர், திருவாரூர் தியாகராஜர் ஆகியோர் யதாஸ்தானத்தை விடுத்து தெருவில் வெளியே வந்து தரிசனம் அளித்து அருளுவார்கள். இவ்வாறு பல்வேறு வாகனங்களில் சிறப்பான ஆபரண, மலர் அலங்காரங்களுடன் இறைவன் தானே வந்து தரிசனம் தருவது "வாகன சேவை" எனப்படும்.

பொன்மலை மேல் கரும்புயல்

மஹா விஷ்ணுவானவர் தனது வாகனமும் கொடியுமான கருடனில் இவ்வாறு ஊர்வலம் வந்து தரிசனம் தருவது கருட சேவை எனப்படும் என்பது சாதாரணமான விளக்கம். எம்பெருமானை கருட வாகனத்தில் தரிசனம் செய்தவர்களுக்கு மறு பிறவி கிடையாது என்பது ஐதீகம் எனவே கருட சேவை காண்பது புண்ணியமானதாக கருதப்படுகின்றது அது ஏன் அவ்வாறு என்பதின் உள்ளார்த்தத்தை உணர்த்துவதுதான் இப்பதிவு.

இனி கருட சேவையின் தத்துவ விளக்கம் என்ன என்று காண்போம். " தாஸ:, ஸகா, வாஹனம் ". என்றபடி பெருமாளுக்கு 1. சேவை புரியும் அடிமையாக, எப்போது அவரது திருவடிகளை தாங்கி இருக்கின்ற பெரிய திருவடியாகவும், 2. தோழனாகவும், எப்போதும் பெருமாளின் அருகில் இருப்பவர்.

ஆழ்வார்கள் இதனால் கருடனை காய்சினப்பறவை என்று குறிப்பிடுகின்றனர்.  

பவளநண்படர்க்கீழ்சங்குறைபொருநல் தண்திருப்புளிக்கிடந்தாய்! கவளமாகளிற்றினிடர்கெடத் தடத்துக் காய்சினப்பறவையூர்ந்தானே!

அது என்ன காய்சினப்பறவை? [கொத்தி புரட்டி எடுத்துவிடும் கோபம் கொண்ட பறவை (கருடன்). ஆனால் யாரை கொத்தும் பக்தர்களையா? இல்லை! இல்லை! பெருமாள் பக்தர்களை காப்பவர் அல்லவா? அவர்களை கருடன் ஒன்றும் செய்யாது. ஆனால் பெருமாளின் பகைவர்களை பெருமாளுக்கு சிரமம் கொடுக்காமல் தானே முதலில் சென்று கொத்தி புரட்டிப் போட்டுவிடும்.

ஸ்ரீநிவாசர் கருட சேவை அருகாமையில்

இவ்வாறு கருடனில் ஆரோகணித்து பெருமாள் வரும் அழகை வேதம் தமிழ் செய்த மாறன்  நம்மாழ்வார் எவ்வாறு பாடுகின்றார் பாருங்கள்.

காய்சினப்பறவையூர்ந்து பொன்மலையின் மீமிசைக்கார்முகில்போல் மாசினமாலிமாலிமானென்று அங்குஅவர்படக்கனன்றுமுன்நின்ற
காய்சின வேந்தே! கதிர்முடியானே! கலிவயல்திருப்புளிங்குடியாய்! காய்சினவாழிசங்கு வாள் வில் தண்டேந்தி எம்மிடர்கடிவானே!


கோபப்பறவையான கருடனில் ஒய்யாரமாக அமர்ந்து ஜிவ்வென்று பறந்து பெருமாள் வரும் அழகானது பொன் மலை மீது ஒரு கார்முகில் அமர்ந்திருப்பது போல் இருக்குமாம். எம்பெருமானும் கோபமாக சென்று தன் எதிரிகளை அழிப்பவன், தீ உமிழும் கோப சக்கரமும், சங்கும், தண்டமும் ஏந்தி பக்தர்கள் துன்பங்களைக் களைபவன்.

ஆழ்வார்கள் மட்டுமா? முருகனை ( மால் மருகனை)ப் பாடிய அருணகிரி நாதரும் இவ்வாறு பாடுகின்றார்.

கருடன் மிசைவரு கரிய புயலென கமல மணியென...

கருடன் மேல் ஆரோகணித்து வருகின்ற கருமேகப் புயல் என்று அருணகிரி நாதரும் பாடுகின்றார்.

 ஆகவே கருட சேவைப்பதிவுகளைப்பார்க்கும் போது இப்படி கற்பனை செய்து பாருங்கள் அந்த ஆனந்தம் உங்களுக்கு புரியும்.

3. வாகனமாகவும் கொடியாகவும் விளங்குபவர்தான் கருடன். எம்பெருமானின் ஆசனமும் கருடன். எங்கே பெருமாள் செல்ல வேண்டுமென்றாலும் தயார் நிலையில் அமர்ந்திருப்பவர். ஆதீ மூலமே என்று கஜேந்திரன் அலறிய மறு நொடி இந்த ஓடும் புள்ளேறி ( பறவை) எம்பருமான் யானைக்கு மோக்ஷம் கொடுக்க பறந்து வந்தான். இது எம்பெருமான் எப்போதும் தன் பக்தர்களுக்கு உதவ காத்திருக்கும் எளிமையைக் குறிக்கின்றது. இவ்வாறு தன் பக்தர்களிடம் பெருமாள் வருவதைக் குறிக்க கொடி.

குலத்தலையமதவேழம்பொய்கைபுக்குக் கோள்முதலைபிடிக்கஅதற்குஅனுங்கிநின்று நிலத்திகழும்மல்ர்சுடரேய்சோதீ! என்ன நெஞ்சிடர்தீர்த்தருளிய என்நின்மலன் காண்மின்         

  ன்று பாடுகின்றார் திருமங்கையாழ்வார்.

தன்னுடைய தாய் மாற்றாந்தாயிடம் அடிமையாக இருப்பதைக்கண்டு மனம் பொருக்க முடியாமல் அமிர்தம் கொண்டு வர இந்திர லோகம் சென்று பெருமாளுடனும் சண்டையிட்டு தன் வீரத்தையும் மாத்ரு பக்தியையும்( தாய்ப்பாசம்) உணர்த்தியவன் கருடன்


தங்க கருடன்- பொன் மலை


அமிர்தம் கொண்டு வரும் போது எம்பருமானுக்கும் கருடனுக்கும்  கடும் போர் ஏற்பட்டது இதில் கருடனுக்கே வெற்றி ஏற்பட்டது. கருடனின் வீரத்தை பகவான் மிகவும் புகழ்ந்து , 'நீயொரு வரம் கேள் கொடுக்கிறேன் என்றார்". கருடன் கேட்பதற்கு முன்பாகவே எம்பெருமானே, " நீ எனக்கு வாகனமாக இருக்க வேண்டும். அதே போல எனது கொடியில் எப்போதும் இருந்து கொண்டு வெற்றியைப் பெற்றுத்தர வேண்டும்" என்றார். எனவே கருடத்வஜனான எம்பெருமானுக்கு என்றும் தோல்வியே கிடையாது.


பெருமாளின் கொடியாக கருடன் விளங்குவதை ஆழ்வார்கள் இவ்வாறு அனுபவிக்கின்றனர்.

புட்கொடியாய்! 
சுருளக்கொடியொன்றுடையீர்!
புள்ளூர் கொடியானே
சுருளப்புட்கொடி சக்கரப்படை வான நாடன்.


இனி எவ்வாறு கருட சேவையை காண்பது முக்திக்கு வழி வகுக்கும் என்பதைக் காணலாம். சில தலங்களில் கருட சேவையின் போது ஒரு வெள்ளைத்துணியை கருட வாகனத்தின் அலகால் கிழித்து நான்கு திசைகளிலும் திசைக்கு ஒன்றாக தூக்கி எறிவார்கள். இது மனிதனின் மும்மலங்கள் அவனிடமிருந்து கிழிக்கப்பட்டு திசைக்கு ஒன்றாக வீசப்பட்டு அவன் தூயமையாவதைக் குறிக்கின்றது.

எனவே கருட சேவையை காணும் போது நம்மிடம் உள்ள ஆணவம், கன்மம், மாயை ஆகிய மும்மலங்கள் நீங்கும்( நீக்க நாம் முயற்சி செய்தால்) இவ்வாறு மலங்கள் நீங்கும் போது மனிதன் நிர்மலன் ஆகின்றான். இவ்வாறு ஆணவத்தை தொலைத்தால் சீவனில் உள்ள ஆணவமாகிய சுழி இறங்கும் போது சீவன் சிவன் ஆகிறான். அவன் தன்னை உணர்கிறான். இறை தரிசனம் கிட்டும்.முக்திக்கு வழி பிறக்கும் எனவே தான் பெருமாளின் கருட சேவையைக் காண்பதால் மோக்ஷம் கிட்டும் என்பது ஐதீகம்.

மோக்ஷபேறு என்பதற்கான இன்னொரு விளக்கம். கருடன் வேதமயமானவன், அதாவது "வேத சொரூபன்". விநதையின் புதல்வனான கருடனின் ஒவ்வொரு அவயமமும் வேதத்தின் பகுதி. "ஸ்தோமம்" என்னும் ஸாம வேத பாகமே அவரது ஆத்மஸ்வரூபம். "காயத்ரம்" என்கிற ஸாமம் அவருக்கு கண்கள். "த்ரிவ்ருத்" என்ற ஸாமம் அவருக்கு சிரசு. யஜுர் வேதங்கள் அவருடைய திருநாமங்கள். சந்தஸ்ஸுக்கள் அவரது திருக்கரங்கள். "திஷ்ண்யம்" எனப்படும் வேள்வி மேடைகள் அவரது திருப்பாதங்கள். "வாமதேவ்யம்" என்கிற ஸாமம் அவரது திருமேனி, "ப்ருஹத்" , "ரதந்தரம்" என்னும் ஸாமங்கள் அவருடைய இரு சிறகுகள். "யஜ்ஞாயஜ்ஞியம்" என்கிற ஸாமம் அவருக்கு வால். இவ்வாறு வேத பாகங்களெல்லாம் கருடனுடைய திருமேனிகளாய் விளங்குவதால் கருடனை "வேதஸ்வரூபன்" என்கிறார்கள் பெரியோர்.

கருட சேவை பின்னழகு

இவ்வாறு பெரிய திருவடி என்றும் புள்ளரையன் என்றும் காகேந்திரன் என்றும் போற்றப்படும் பக்ஷிராஜனான கருடன் மேல் பெருமாள் ஆரோகணித்து பவனி வரும்போது நாம் காண்பது என்ன? கருட வேதசொரூபி. எம்பெருமான் அவ்வேதத்தினால் அறியப்படுபவன், போற்றப்படுபவன், எனவே பெருமாள் கருட சேவை தந்து எழுந்தருளும் பொது "மறை போற்றும் இறை" இவனே என்றும். "மறைமுடி" இவனே என்றும் காட்டித்தருகின்றது. அந்த வேதச்செழும் பொருளை நாம் உணர்ந்தால் நமக்கு மோட்சம் தானே எனவே தான் கருட வாகனத்தில் பெருமாளை தரிசித்தவர்களுக்கு மறு பிறவி கிடையாது என்பது ஐதீகம்.

கருட வாகனத்தில் பெருமாள் திருவீதி புறப்பாடு

எனவே அடுத்த தடவை கருட சேவையைக் காணும் போது ( நேரிலோ அல்லது இப்பதிவிலோ) மும்மலம் நீக்கி. முக்தி தா பெருமாளே என்று வேண்டிக்கொண்டு சேவியுங்கள். நமது தர்ம நெறியின் ஒவ்வொரு விதிக்கும் விஞ்ஞான பூர்வமான ஓர் அர்த்தம் உண்டு என்று உணர்ந்து இறைவனை வேண்டினால் முக்தி நிச்சயம் என்பதை மனதில் கொள்ளவும்.

இப்பதிவில் இடப்பட்டுள்ள கருட சேவைப் படங்கள் எல்லாம் சென்னை திருமயிலை வேதாந்த தேசிகர் தேவஸ்தானத்தில் தற்போது நடந்த பிரம்மோற்சவத்தின் காட்சிகள். மேலும் மற்ற உற்சவங்களின் படங்களைக் காண செல்லுங்கள் SVDD
கருட சேவை இன்னும் தொடரும்.............

Sunday, May 25, 2008

எங்கே வரதர்? எங்கே வரதர்?

காஞ்சிபுரம் கருடசேவை (தொட்டாச்சாரியார் சேவை)



வரதராஜப்பெருமாளாய், தேவாதிதேவனாய், பேரருளாரராய், அத்திகிரி வரதராய், அத்தியூரனாய், தேவப்பெருமாளாய், பிரணதாரத்திஹரனாய், ஸ்ரீசெல்வராய், ஸ்ரீ மணவாளராய், பெருமாள் எழுந்தருளி அருள் பாலிக்கும் கச்சியம்பதி என்னும் காஞ்சியின் கருட சேவை மிகவும் பிரசித்தி பெற்றது.

ஏனென்றால் தன் அன்பன் ஒருவனுக்காக கச்சி வரதர் நடத்திய ஒரு அற்புதம்.
அது என்ன என்பதை பார்ப்போமா?


தடம் சுழ்ந்து அழகாய் கச்சி ஒளி மாடங்கள் சூழ்ந்து அழகாய கச்சி மணி மாடங்கள் சூழ்ந்து அழ்காய கச்சி கல்லுயர்ந்த நெடுமதிள் சூழ் கச்சி என்று ஆழ்வார்கள் பாடிப்பரவிய சத்யவ்ரத ஷேத்திரத்தில், அன்று காலை வைகாசி திருவோண பிரம்மோற்சவத்தின் மூன்றாம் நாள், அன்றைய தினம் பராங்குசர், சடகோபன், காரி மாற பிரான், வகுளாபரணர், வேதம் தமிழ் செய்த மாறன் என்றெல்லாம் போற்றப்படும் நம்மாழ்வாரின் அவதாரத்திருநாளும் இனைந்து வந்ததினால் கூட்டம் தாங்க முடியவில்லை. லட்சத்திற்க்கும் மேற்பட்ட மக்கள் அங்கு கூடியிருந்தனர்.

கருட சேவைக்கு முதல் நாளே மக்கள் கூட்டம் காஞ்சியில் குவியத் தொடங்கியது. அத்தி வரதா உன் தங்க கருட சேவை காணும் பாக்கியம் பெறப்போகிறோம் உனது கருணையே கருணை என்று ஆனந்த பரவசத்துடன் பக்தர் குழாம் கோவிந்த நாமம், விட்டலா, விட்டலா, பாண்டுரங்கா, பண்டரிநாதா, கண்ணா கார் மேக வண்ணா என்று பல வகையிலும் பஜனைப் பாடல்கள் பாடிக்கொண்டு காத்திருந்தனர். இரவும் மெள்ள மெள்ள வளர்ந்து அருணோதய காலம் வந்ததும் கோபுர வாசலின் முன் பக்தர்கள் கூடத் தொடங்கினர். அனைவரும் ஆவலுடன் காத்திருந்தனர் எப்போது கோபுர வாசல் கதவு திறக்கும் கச்சி வரதரின் மோட்சமளிக்கும் கருட சேவையைக் காணலாம் என்று சூரியனை எதிர்பார்த்து மலர காத்திருக்கும் தாமரை மலர் போல லட்சக்கணக்காண மக்கள் காத்துக்கொண்டிருந்தனர் கச்சிபதியெங்கும் ஒரே ஆரவாரம் மற்றும் மகிழ்ச்சி ஆனால் சோழ சிம்மபுரம் என்னும் திருக்கடிகையில், பெருமாள் யோக நரசிம்மராய் மலை மேலும், ஆக்வான முத்திரையுடன் பக்தோசிதராய் மலை அடிவாரத்திலும் எழுந்தருளி அருள் பாலிக்கும் சோளிங்கரில் மட்டும் ஒரு பக்தர் துடித்துக் கொண்டிருந்தார். அவருக்கு வயதாகி விட்டதால் காஞ்சி செல்ல முடியவில்லை தள்ளாமை அவரை சாய்த்து விட்டது, நினைவு தெரிந்த நாளிலிருந்து காஞ்சி வரதரின் கருட சேவையை தவறவிட்டதில்லை அவர், சோழ சிம்ம புரத்திலிருந்து வருடம் தவறாமல் நடந்து சென்று கருட சேவையை தரிசித்து வந்தவ்ர். . ஆனால் இவ்வருடம் அவரால் நடந்து செல்ல முடியவில்லை, மதில் சூழ் அழகார் கச்சி செல்ல முடியவில்லை ஆனால் அவ்ர் மனம் முழுவதும் அந்த வரதர்தான் நிறைந்திருந்தார். அவருடைய கருட சேவை கிடைக்கவில்லையே என்று ஏங்கிக் கொண்டிந்தார் "தொட்டாச்சாரியார் "என்னும் அந்த பரம பக்தர்.

 ஆற்றாமையால் அந்த அன்பர் கதறிக்கொண்டிருந்தார்., பிரம்மா அன்று நடத்திய வேள்வியில் தோன்றிய பிரபுவே இன்று ஏன் இந்த நாயேனை இவ்வாறு செய்து விட்டீர்? கோபம் கொண்டு நதியாக ஓடி வந்த சரஸ்வதியின் குறுக்கே சேதுவாக படுத்த அவளது கோபத்தை அடக்கிய திருவெஃகா சொன்ன வண்ணம் செய்த பெருமாளே ஏன் இந்த சோதனை உன் அன்பனுக்கு? திருமங்கை மன்னன் மன்னனுக்கு கட்ட பணம் இல்லாமல் தவித்த போது பொருள் காட்டி அவர் துயர் தீர்த்த பேரருளாளரே! இன்று மட்டும் ஏன் ஐயா தங்கள் மனம் உருகவில்லை? இராமனுஜரை காக்க காட்டுக்குள்ளே பெருந்தேவித்தாயாருடன் வேடுவ உருவில் சென்று காத்து இரட்சித்த கருணைக் கடலே என் தேவாதி தேவா! என் கூக்குரல் உன் காதில் விழவில்லையா ஐயனே உன் சித்தம் இரங்காதா? திருகச்சி நம்பிகளுடன் பேசி இராமானுஜர் கேட்ட கேள்விகளுக்கெல்லாம் பதில் தந்த அத்திகிரி வரதா! எனக்கு மட்டும் பதில் தர மனம் வரவில்லையா? கேட்டவ்ர்க்கு கேட்ட வரம் அருளும் திருவரதா! களிற்றுக்குகு அன்று அருள் புரிய கடுகி கருடனில் வந்த பிரபோ! என்னை உன் தரிசனம் காண அந்த கருடனை அனுப்பி தூக்கிச்செல்ல சொல்லக் கூடாதா? என்றெலலாம், அழுது துவள்ந்து கிடந்தார் சோளிங்கரில் தொட்டாச்சாரியார்.

காலை நான்கு மணி வெளியே நின்று கொண்டிருந்த பக்தர்களுக்கு பகவான் கருட வாகனத்தில் புறப்பட்டதற்கு அறிகுறியாக மேள சத்தமும், திவ்ய பிரபந்த ஒலியும், வேத ஒலியும் காதில் இன்ப நாதமாக வந்து விழுந்தது, தூங்கிக் கிடந்தவர்களை எல்லாம் எழுப்பினார்கள். எங்கும் வரதா, கோவிந்தா, கண்ணா, பெருமாளே என்ற சத்தம் அலை கடல் சத்தம் போல ஒலித்தது. ஆழ்வார் சுற்றில் வலம் வந்து ஆழ்வார்களுக்கு மரியாதை செய்த வரதர் கோபுர வாசலுக்கு வந்தார். மெதுவாக கோபுர வாசல் கதவுகள் திறந்தன எங்கும் அல்லோலகல்லம் சென்னியில் அஞ்சலி கூப்பி கச்சி வரதா! அத்தி வரதா! சத்ய வரதா! என்று மெய் புளகாங்கிதம் அடைந்து கண்ணில் நீர் சோர பக்தர் குழாம் நின்றிருந்த போது தான் அந்த அதிசயம் நடந்தது.

திடீரென்று வரதர் மாயமாய் மறைந்து விட்டார்.

அப்போது தான் முதலில் நாம் கேடட எங்கே வரதர்? எங்கே வரதர் என்ற கூக்குரல்கள் கிளம்பின. அன்பர்கள் அனைவரும் திகைத்து நின்றனர். யார் என்ன அபசாரம் செய்தோமோ? இவ்வாறு நடந்தது என்று அவர்கள் மயங்கி நின்ற வேளையில்... அங்கே சோளிங்கரில் இது வரை நடக்க முடியாமல் படுக்கையில் கிடந்த தொட்டாச்சாரியார் எழுந்து ஓட ஆரம்பித்தார் தக்கான் குளத்தை நோக்கி, அங்கே அவருக்காக வரதராஜப் பெருமாள் காத்திருந்தார் கருட வாகனத்தில், என் அன்பனே, நீ வர முடியாவிட்டால் என்ன, நானே வந்து விட்டேன் உனக்காக என்று பறவை ஏறும் பரம்புருடன் சேவை சாதித்தான். தொட்டாச்சாரியார் தண்டனிட்டு பெருமாளை வணங்கி, கண்களில் ஆனந்த கண்ணீர் வழிய பெருமாளே, எமக்காக நீர் இவ்விடம் வந்தீரே உமது கருணையே கருணை நீர் உண்மையில் ப்கத வத்சலன் தான், பக்தோஷிதன் தான், பேரருளாளர் தான் என்றும் பலவாறு துதி செய்து போற்றினார். அடுத்த கணம் ....

காஞ்சியில் முன் போல் வரதர் ஒய்யாரமாக நின்றார். தனது அன்பரின் தூய பக்திக்காக தாம் சோளிங்கர் சென்று சேவை சாதித்ததை உணர்த்தினார் பெருமாள். பக்தர்கள் அனைவரும் பக்தி பரவசத்தில் தெண்டனிட்டி வீழ்ந்து வணங்கினார் தேவராஜரின் கருணையை எண்ணி. எனவே இன்றும் கருட சேவையன்று கோபுர வாசல் சேவை முடிந்தவுடன் பெருமாளை வஸ்திரம் கொண்டு மறைக்கின்றனர். இச்சேவை "தொட்டாச்சாரியார் சேவை" என்று அழைக்கப்படுகின்றது. வரதராஜப்பெருமாளின் இந்த எளி வந்த கருணையை உணர்த்தும் வகையில் சோளிங்கரில் தக்கான் குளக்கரையில் கருடன் மேல் அமர்ந்த கோலத்தில் வரத ராஜப் பெருமாளாக சேவை சாதிக்கும் ஒரு ஆலயம் கட்டப்பட்டுள்ளது.

கோபுர வாசல் தரிசனம் முடித்து ஓடி புள்ளேறி சேவை சாதிக்கும் பேரருளாளர் 6 கி.மீ தொலைவில் பெரிய காஞ்சிபுரத்தில் பாண்டவ தூதர் திருக்கோவிலுக்கு அருகில் உள்ள கங்கை கொண்ட சோழன் மண்டபம் சென்று மண்டகப்படி கண்டருளி மெள்ள நடையிட்டு திருக்கோவிலுக்கு திரும்பி வருகின்றார். கோவிலுக்குள் பெருமாள் நுழையும் அந்த நடையழகை வர்ணிக்க வார்த்தைகள் இல்லை. முடிந்தால் காஞ்சி சென்று தேவாதி தேவரின் கருட சேவையை கண்டு களியுங்கள்.

ஆவியே! ஆரமுதே! என்னையாளுடை
தூவியம்புள்ளுடையாய்! சுடர்நேமியாய்!
பாவியேன்நெஞ்சம் புலம்பப்பலகாலும்
கூவியும்காணப்பெற்றேன் உனகோலமே.

வருடத்தில் இன்னும் இரண்டு தடவை கருட சேவை நடைபெறுகின்றது. ஆனி மாதம் பரதத்வ நிர்ணயத்தை குறிக்கும் ஆனி கருட சேவை. ஆடியில் கஜேந்திர மோக்ஷத்தை குறிக்கும் கருட சேவை.

காஞ்சிபுரம் செல்ல முடியாத நிலையில் எனது நண்பர் திரு. தனுஷ்கோடி அவர்களை, காஞ்சி சென்று கருட சேவை தரிசித்து புகைப்படங்கள் வழங்குங்கள் என்று வேண்டினேன். அவரும் அவ்வாறே செய்தார். அவருக்கு ஆயிரம் நன்றிகள் .

Friday, May 9, 2008

மாதவப் பெருமாள் கருட சேவை

மாதவன் என்று ஓதவல்லீரேல் தீதொன்றும் அடையா ஏதம் சாராவே - நம்மாழ்வார்


மயூரபுரி என்னும் திருமயிலையில் திருமகளும், மண்மகளும் உடன் அமர ஆனந்த நிலைய விமானத்தில் அமர்ந்த கோலத்தில் கல்யாண மாதவனாக சேவை சாதிக்கின்றார் பெருமாள். தாயார் அமிர்தவல்லியாகவும், பெருமாள் ஸ்ரீ ராமராகவும், மஹா லக்ஷ்மி தாயாருக்கு சமர ஸ்லோகத்தை உபதேசிக்கும் பூவராஹராகவும் கூட சேவை சாதிக்க்கின்றனர் இத்தலத்தில் , ஆண்டாள் நாச்சியாருக்கும் தனி சன்னதி உள்ளது.

 
இத்தலத்தில் அமைந்துள்ள சந்தான புஷ்கரணி முன்பு பிருகு முனிவரின் ஆசிரமாக இருந்தது. மாசி மாதம் மக நட்சத்திரத்தன்று சகல தீர்த்தங்களும் இப்புஷ்கரணியில் கலப்பதாக ஐதீகம். அன்று இக்குளத்தில் நீராடினால் புத்திபப்பேறு கிட்டும், சகல செலவமும் கிட்டும் என்று பிரம்மண்ட புராணத்தில் மயூரபுரி மகாத்மியத்தில் கூறப்பட்டுள்ளது.

ஓடும் புள்ளேறி ஊர்ந்து வரும் மாதவப் பெருமாள்
பெருமாளின் அருட்கோலம் அருகாமையில்



"மாதவன் பேர் சொல்வதே ஒத்தின் சுருக்கு", அதாவது வேதத்தின் சாரம் மாதவன் என்னும் நாமாவை கூறுதலே என்று பாடுகின்றார் பூதத்தாழ்வார்.


கருட சேவை பின்னழகு
பேயாழ்வார்
ஹம்ச வாகனத்தில் பேயாழ்வார்
சோடச நாமாக்கள்

மருந்து உண்ணும் போது விஷ்ணு என்றும்
உணவு உட்கொள்ளும் போது ஜனார்த்தனா என்றும்
படுக்கச் செல்லும் போது பத்மநாபா என்றும்
திருமண காலத்தில் பிரஜாபதி என்றும்
யுத்த களத்தில் சக்ரதாரி என்றும்
இறுதி காலத்தில் நாராயணா என்றும்
நண்பர்களிடம் ஸ்ரீதரா என்றும்
கெட்ட சொப்பனம் கண்ட பின் கோவிந்தா என்றும்
சங்கட காலங்களில் மதுசூதனா என்றும்
தனி வழி செல்லும் போது நரசிம்மா என்றும்
நெருப்பினால் துன்பம் உண்டாகும் போது ஜலசாயினே என்றும்
தண்ணீரில் துன்பம் உண்டாகும் போது வராஹா என்றும்
மலை ஏறும் போது ரகு நந்தனா என்றும்
வீதியில் நடக்கும் போது வாமனா என்றும்
எங்கும் எப்போதும் மாதவா என்றும்

பெருமாளின் பதினாறு நாமாக்களை கூற நன்மை என்று இத்திருக்கோவிலில் ஒரு கல் வெட்டில் கண்டதை அன்பர்களாகிய உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.


சோர்வினால் பொறுள் வைத்ததுண்டாகில்
சொல்சொல்லென்று சுற்றமிருந்து
ஆர்வினாலும் வாய் திறவாதே
அந்தக்காலம் அடைவதன் முன்னம்
மார்வமென்பதோர் கோயிலமைத்து
மாதவன் என்பதோர் தெய்வத்தை நாட்டி
ஆர்வமென்பதோர் பூவிட வல்லார்க்கு
அரவதண்டத்திலுய்யலுமாமே. _ பெரியாழ்வார்



வானுடைய மாதவா! கோவிந்தா! என்றழைத்தக்கால்
நலமுடை நாரணன் தன் அன்னை நரகம்புகாள்.


ப்ருந்தாரண்ய ஸமீபிஸ்த மயூரபுரி வாஸினே அம்ருதவல்லி நாதாய மாதவாயாஸ்து மங்களம்
மஹதஹ்வய மஹத: ப்ரதயக்ஷ பலதாயினே ஸ்ரீமதே மாதவாயாஸ்து நித்யஸ்ரீர்: நித்ய மங்களம்

Wednesday, April 23, 2008

சித்திரை பிரம்மோற்சவ கருட சேவைகள்

சித்திரை திருவோண நாளை தீர்த்த நாளாகக் கொண்டு பல்வேறு பெருமாள் கோவில்களில் பிரம்மோற்சவம் நடைபெறுகின்றது. பிரம்மோற்சவத்தின் மூன்றாம் நாள் காலை பெருமாள் கருட சேவை சாதிக்கும் இரண்டு தலங்களில் இன்று கருட சேவையை தரிசிக்கும் பாக்கியம் கிட்டியது அந்த அற்புத சேவையை தாங்களும் கண்டு களியுங்கள்.

ஸ்ரீ பார்த்த சாரதிப் பெருமாள் தங்க கருட சேவை
திருவல்லிக்கேணி திவ்ய தேசம்
கருட சேவை பின்னழகு பார்த்த சாரதி சுவாமி ஏகாந்த சேவை


பின்னழகு


கோடைக்காலம் என்பதால் சுவாமிக்கு வெப்பம் அதிகமாகக் கூடாது என்று சிரத்தையுடன் சந்தனம் சார்த்தியிருக்கின்ற நேர்த்தியைப் பாருங்கள்.

***********

சைதாப்பேட்டை ஸ்ரீ பிரசன்ன வேங்கட நரசிம்மப் பெருமாள் அந்த இரண்டு தலங்களில் முதலாவது திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் தங்க கருட சேவை. இரண்டாவது சென்னை சைதாபேட்டை பிரசன்ன வேங்கட நரசிம்மப் பெருமாள் ஆலயத்தின் கருட சேவை. ஆம் இத்தலத்தில் பெருமாள் வேங்கடவராகவும் நரசிம்மராகவும், உபய நாச்சியார்களுடன் நின்ற கோலத்தில் சேவை சாதிக்கின்றார். பிரம்மோற்சவம் ஒன்றாக நடைபெறும் இந்த இரண்டு திருகோவில்களுக்கும் இனி ஒரு சம்பந்தமும் உண்டு. தை மாதத்தில் திருவூரல் உற்சவத்திற்க்காக ஈக்காட்டுத்தாங்கல் எழுந்தருளும் ஸ்ரீ பார்த்தசாரதிப் பெருமாள் இத்தலத்திற்கு விஜயம் செய்கின்றார். பின்னர் இரு பெருமாள்களும் ஒன்றாக மாட வீதி வலம் வருகின்றனர்.



கருடனின் கண்களில் ஒரு ஒளி வட்டம் தெரிகின்றதா? ஆம் கூர்ந்து கவனியுங்கள் நிச்சயம் தெரியும் ஏனென்றால் அவை கண்ணாடி குண்டுகள். வாகனங்கள் செய்த காலத்தில் சிறப்பாக இங்கிலாந்திலிருந்து இறக்குமதி செய்யப்பட்டு இந்த சிறப்பு குண்டுகள் அனைத்து வாகனங்களிலும் பதிக்கப் பட்டனவாம்.

வேங்கட நரசிம்மர் அனுமந்த வாகன சேவை

மூன்றாம் நாள் இரவு பெருமாள் அனுமந்த் வாகனத்தில் பெருமாள் சேவை சாதிக்கும் போது சிறிய திருவடிக்கு வடை மாலை சார்த்துவது இத்தலத்தின் சிறப்பு.

Tuesday, March 25, 2008

ஆதி கேசவப் பெருமாள் கருட சேவை

மயிலை. மயூராபுரி, மயிலாப்பூர் என்று அழைக்கப்படும் தலத்தில் பெருமாள், ஆண்டாள் நாச்சியார் வங்கக்கடல் கடைந்த மாதவனை கேசவனை என்று அனுபவித்தபடி கேசவனாயும் மாதவனாயும் எழுந்தருளி சேவை சாதிக்கின்றார். அந்த ஆதி கேசவரின் பங்குனி பிரம்மோற்சவத்தின் ஐந்தாம் நாள் காலை கருட சேவையை அன்பர்களுடன் பகிர்ந்து கொள்கிறேன் வந்து சேவித்து விட்டு செல்லவும். கைரவணி புஷ்கரணி தீரத்தில் பிருகு முனிவர் செய்த சயன யாகத்தில் பெரிய பிராட்டியுடன் தோன்றியவர் சயன கேசவர். இவருடைய சுருள் சுருளான கருமையான கேசத்தைக் கண்டு ரிஷிகள் கேசவன் என்று அழைத்தனர். சுமங்கனன் என்ற அரசனக்கு மயூர கொடியை அளித்ததால் மயூர கேசவன் எனப்பட்டார். தற்போது சர்வ சக்தி படைத்த மயூரவல்லித்தாயாருடன் ஆதி கேசவர் என்ற நாமத்துடன் சேவை சாதிக்கின்றார் பெருமாள்.

ஆதி கேசவர் பிரம்மோற்சவ வெள்ளி கருட சேவை


லக்ஷ்மி ஹாரத்துடன் பெருமாள் சேவை சாதிக்கும் அழகே அழகு

பெருமாள் கருட சேவை பின்னழகு
திருக்கண்டேன் பொன்மேனி கண்டேன் என்று பாடிய
பேயாழ்வார்


ஆதி கேசவர் இரத சப்தமி வெள்ளி கருட சேவை

ஆதிகேசவப் பெருமாள் வைர அங்கி

வெள்ளி கருட வாகன சேவை வைகுந்த ஏகாதசியன்று

சின்ன கருடனில் ஆதி கேசவப்பெருமாள் சேவை



சென்னை மேற்கு மாம்பலம் பாஷ்யக்கார சென்ன ஆதி கேசவப்பெருமாள் ஆலயத்தின் கருட சேவை காட்சிகள். ஒரு காலத்தில் இவ்விடம் அடர்ந்த காடு தற்போதைய மாம்பலம் மாபிலம்( பெரிய குகை) ஆக இருந்த்து. ஆகையால் முஸ்லிம்களின் படையெடுப்பின் போது மற்ற பெருமாள்கள் இக்கோவிலில் பாதுகாப்பாக இருந்ததால் இவர் அடைக்கலம் தந்த கேசவன் என்றும் அறியபப்டுகின்றார்.

சென்ன ஆதி கேசவர் வைகுண்ட ஏகாதசி கருட சேவை
சென்ன ஆதி கேசவர் பிரம்மோற்சவ கருட சேவை