Wednesday, January 28, 2009

திருநாங்கூர் பதினொரு கருட சேவை- 2 (2008)


திருநாங்கூர் கருட சேவை உற்சவத்தின் முதல் நாள் நிகழ்ச்சியாக தை அமாவாசையன்று திருமங்கையாழ்வாருக்கு "மஞ்சள் குளி திருவிழா" நடைபெறுகின்றது. திருவரங்கத்தில் திருமங்கையாழ்வார் தங்கியிருந்த போது அரங்கநாதர் முன் திருநெடுந்தாண்டகம் சேவித்தார், அதனால் மிகவும் பிரசன்னமான பெருமாள் ஆழ்வாரை ஏதாவது வரம் வேண்டுமாறு கூற, அவரும் புரட்டாசி மாதம் நடைபெறுகின்ற அத்யயன உற்சவத்தின் போது வேதங்களுடன், நம்மாழ்வாரின் திருவாய்மொழியும் சாற்றுமுறை செய்ய அருள் புரிய வேண்டும் என்று வேண்ட பெருமாளும் அவ்வண்ணமே அருளிச் செய்தார். அன்று முதல் நாலாயிர திவ்விய பிரபந்தமும் அத்யயன உத்சவத்தின் போது சாற்றுமுறை செய்யப்படலாயிற்று. ஆழ்வாரின் இந்த பக்திக்காக, பெருமாள் ஆழ்வாரை சிறப்பிக்க வேண்டி தனக்கு நடை பெறும் மஞ்சள் குளி இனி அவருக்கும் நடைபெற வேண்டும் என்று அருள் பாலித்தார். திருமங்கை ஆழ்வாருக்கு ஒவ்வொரு வருடமும் வட காவேரியாம் கொள்ளிடக் கரையில் மஞ்சள் குளி நடைப்பெற்றது, முதல் குளியலை நம்பெருமாளே, தானே தன் கையால் நடத்தி வைத்தார்.
ஆழ்வாரின் அந்திம காலத்திற்குப் பிறகு அவரது சகோதரியின் கணவர், திருவரங்கத்தை விடுத்து ஆழ்வாரின் அவதாரத் தலமான திருக்குறையலூர் வந்து தங்கினார். ஆழ்வாரின் மூர்த்திக்கு நாங்கூரை ஒட்டி ஓடும் மணிகர்ணிகை ஆற்றங்கரையில் அவர் மஞ்சள் குளியல் உற்சவத்தை 8ம் நூற்றாண்டிலே தொடங்கினார் அன்று முதல் இன்று வரை அது தொடர்கிறது.
கருட சேவைக்கு திருவாலியிலிருந்து குமுதவல்லி நாச்சியாருடன் புறப்படும் திருமங்கையாழ்வார்
வயல்களில் பயிர்களை மிதித்துக் கொண்டு வரும் ஆழ்வார்
தை அமாவாசையன்று அதிகாலை 3 மணிக்கு திருவாலி திருநகரியிலிருந்து திருமங்கையாழ்வார், தன் தர்ம பத்தினி குமுத வல்லி நாச்சியாருடன் , அவர் ஆராதித்த சிந்தனைக்கினியான் பெருமாள், உபய நாச்சியார்களுடன் பல்லக்கில் புறப்பாடு கண்டருளி வயல் வழியில் இறங்கி பயிரை மிதித்துக்கொண்டு முதலில் திருக்குறையலூர் ஸ்ரீ உக்ர நரசிம்மப் பெருமாள் கோவிலை அடைந்து அவரை மங்களாசாசனம் செய்கின்றார். அடுத்து ஸ்ரீ வீர நரசிம்மப் பெருமாள் கோவிலை அடைந்து அவரை மங்களாசாசனம் செய்கின்றார் பரகாலர்.
இராஜகோபாலன் , காவளம்பாடி
திருநாங்கூரில் உள்ள திருக்காவளாம்பாடி ஸ்ரீ கோபாலனை , "காவளம்பாடி மேய கண்ணனே! களை கண் நீயே" என்று சேவிக்கின்றார் கலிகன்றி.
வரதராஜப்பெருமாள்
பின் திருமணிக்கூடத்தில் உள்ள ஸ்ரீ வரதராஜப்பெருமாளை, "திருமகள் மருவும் நாங்கூர்த் திருமணிக் கூடத்தானே" என்று மங்களாசாசனம் செய்கின்றார் பரகாலன்.

பார்த்தசாரதி
அன்று நிறைவாக திருபார்த்தன் பள்ளி ஸ்ரீ பார்த்த சாரதியை பரகால நாயகியின் தாயாய் "பவள வாயாள் என் மடந்தை பார்த்தன்பள்ளி பாடுவாளே" என்று மங்களாசாசனம் செய்கின்றார் ஆலி நாடன்.
உச்சிக் காலத்திற்கு முன் மணிகர்ணிகை ஆற்றை அடைகிறார். பக்தர்கள் அனைவரும் பக்தி பரவசத்துடன் இடுப்பளவு தண்­ணிரில் ஆழ்வாரின் பெரிய திருமொழியில் இருந்து ஆழ்வாரின் ஆச்சாரியரான திரு நறையூர் நம்பியையும், திருவரங்கத்து அழகிய மணவாளானையும் மங்களா சாசனம் செய்து ஆழ்வார் பாடிய பாசுரங்களை சேவிக்கின்றனர். இவ்விரு திவ்ய தேசங்களில் இருந்து கொண்டுவரப்பட்ட மாலை மற்றும் பீதாம்பரங்களினால் பரிவட்டத்தால் ஆழ்வாருக்கு மரியாதை செய்யப்படுகின்றது.
மஞ்சள் குளியலின் போது திருமங்கை ஆழ்வார் சிந்தனைக்கினியானுடன்
பின் மஞ்சள் குளியல் மண்டபத்தில் எழுந்தருளும் ஆழ்வாருக்கு சஹஸ்ர தாரா மஞ்சள் குளி என்னும் திருமஞ்சனம் நடை பெறுகின்றது. சஹஸ்ர தாரை தட்டில் ஆழ்வார் வழிபட்ட சிந்தனைக்கு இனியன் என்னும் பெருமாளின் திருமூர்த்ததிற்க்கு செய்யப்படும் மஞ்சள் நீர் முதலில் பெருமாளுக்கு திருமஞ்சனம் ஆகி பின் ஆழ்வாருக்கும் திருமஞ்சனம் ஆகின்றது. பின் திருப்பாவை சாற்று மறை நடைபெறுகின்றது.

மாலையில் அலங்கரிக்கப்பட்ட ஆழ்வார் திருமணிமாடக்கோவில் ஸ்ரீ நாராயணப் பெருமாளை"மணிமாடக் கோயில் வணங்கு என்மனனே" என்று மங்களாசாசனம் செய்கின்றார் அருள்மாரி.
திருமணிமாடக்கோவிலில் ஆழ்வார் ஆஸ்தானம்
பின், நல்ல "வெந்தழல் மூன்று நால் வேதம் ஐவேள்வியோடு ஆறங்கம் வல்ல அந்தணர் வாழும்" திருவண்புருடோத்தமத்தில் ஸ்ரீ புருஷோத்தமனை மங்களாசாசனம் செய்கின்றார் மான வேற் கலியன்.
புருஷோத்தமன்
திருவைகுந்த விண்ணகரத்தில் ஸ்ரீ வைகுந்த நாதனை நாங்கூர் "வைகுந்த விண்ணகரம் வணங்கு மடநெஞ்சே" என்று மங்களாசாசனம் செய்கிறார் வாள் கலியன்.
வைகுந்த நாதன்
திருசெம்பொன்செய் கோவிலில் அல்லி மாமலராளுடன் ஸ்ரீ செம்பொன் செய் அரங்கரை "நாங்கை நன்னடுவுள் செம்பொன் செய் கோயிலினுள்ளே கடல்நிறவண்ணன் தனனை நான் அடியேன் கண்டுகொண்டு உய்ந்தொழிந்தேனே" என்று மங்களாசாசனம் செய்கிறார் நம் கலியன்.
செம்பொன் செய் அரங்கர்
ஒரு கிளி மற்றொரு கிளிக்குக் கல்வி கற்பித்ததை திருத்தெற்றியம்பலத்தில் ஸ்ரீ பள்ளிகொண்ட பெருமாளை "திருத்தெற்றியம்பலத்து என் செங்கண்மாலே" என்று வணங்குகிறார் குமுதவல்லி மணாளர்.
பின்னர் அரிமேய விண்ணகரத்தில் குடங்களை எடுத்தேறவிட்டு கூத்தாடிய கோவை "அண்டமுறும் அலைகடலினொலி திகழும் நாங்கூர் அரிமேய விண்ணகரம் வணங்கு மடநெஞ்சே" என்று அனுபவிக்கின்றார் ஆழ்வார்.

அன்றைய தினம் இறுதியாக திருமணிமாடக் கோவிலில் ஆஸ்தானம் கண்டருளுகிறார் ஆழ்வார். இங்கு அர்த்த ஜாம பூஜை நடைபெறுகின்றது.
************ தை அமாவாசை அன்று (26-01-09) சூரிய கிரகணம் வந்ததால் இவ்வருட திருநாங்கூர் கருட சேவை பௌர்ணமியன்று அதாவது 09-02-09 மற்றும் 10-02-09 அன்று நடைபெற உள்ளது. ******** இப்பதிவை ஒட்டிய முந்தையப் பதிவுகள் திருநாங்கூர் பதினொறு திவ்ய தேசங்களைப்பற்றி அறிய கிளிக்குக திருநாங்கூர்

Tuesday, January 27, 2009

திருநாங்கூர் பதினொரு கருட சேவை- 1 (2008)

தை அமாவாசை அன்று (26-01-09) சூரிய கிரகணம் வருவதால் இவ்வருட திருநாங்கூர் கருட சேவை பௌர்ணமியன்று அதாவது 09-02-09 மற்றும் 10-02-09 அன்று நடைபெற உள்ளது.

சென்ற வருடம் அடியேன் தரிசித்த திருநாங்கூர் 11 கருட சேவையை கண்டு களித்தீர்கள் இப்பதிவுகளில் திரு. தனுஷ்கோடி அவர்கள் சென்ற வருடம் தரிசித்த கருட சேவையை கண்டு களியுங்கள். கருடன்கள் எல்லாம் தங்க கவசம் பூண்டுள்ளனர், காணக் கிடைக்காத காட்சியை கண்டு களியுங்கள்.
*****************

திருநாங்கூர் ஏகாதச திவ்ய தேச பெருமாள் தரிசனம்

திருநறையூர் (நாச்சியார் கோவில்) பெருமாளால் வைணவராக சமாஸ்ரணம் செய்யப் பெற்ற, திருமங்கை மன்னன், பரகாலன், நீலன், ஆலிநாடன், கலிகன்றி, மங்கையர் கோன், மங்கை வேந்தன், கலியன் என்றெல்லாம் அழைக்கப்படும் திருமங்கை ஆழ்வார் இந்த திவ்ய தேசங்களில் திருக்குறையலூரிலேதான் அவதரித்தார். மணக் கோலத்தில் பெரிய பிராட்டியாரோடு வந்த பெருமாளால் திருமணங்கொல்லையில் அஷ்டாத்திர மந்திரோபதேசமும் பெற்றார், இந்த பதினோரு திவ்ய தேசங்களையும் இவர் மட்டுமே மங்களாசாசனமும் செய்துள்ளார். திருமங்கையாழ்வாரோடு பெரிதும் தொடர்புடையவை இத்திவ்ய தேசங்கள். இத்தகைய சிறப்புகளைக் கொண்ட திருநாங்கூர் திவ்ய தேசங்களாவன: 

  1. திருமணி மாடக் கோவில்:

மூலவர்-நாராயணன், நந்தா விளக்கு அமர்ந்த திருக்கோலம்,
உற்சவர்- நாராயணன், அளந்தற்கரியான்,
தாயார்- புண்டரீக வல்லி,
தீர்த்தம்- இந்திர புஷ்கரிணி, ருத்ர புஷ்கரிணி,
விமானம்- பிரணவ விமானம்.

 
திருமங்கையாழ்வார் பாசுரம்:

  நந்தா விளக்கே! அளத்தற்கு அரியாய்! நரநாராயணனே! கருமாமுகில் போல் எந்தாய்! எமக்கே அருளாயென நின்று இமையோர் பரவும் இடம் எத்திசையும்
கந்தாரம் அந்தேன் இசைபாடமாடே களிவண்டுமிழற்ற நிழல்துதைந்து
மந்தாரம் நின்று மணமல்குநாங்கூர் மணிமாடக்கோயில் வணங்கு என் மனனே!

2.திருவைகுந்த விண்ணகரம் :

மூலவர்- திருவைகுந்த நாதன், தாமரைக் கண்ணுடைய பிரான் உபய நாச்சியார்களுடன் அமர்ந்த திருக்கோலம்,
தாயார்- வைகுந்த வல்லி.
தீர்த்தம்- லக்ஷ்மீ புஷ்கரிணி, உதங்க புஷ்கர்ணி, விரஜா தீர்த்தம்,
விமானம்-அனந்த சத்யா வர்த்த விமானம்.
திருமங்கையாழ்வார் பாசுரம்: சலங்கொண்ட இரணியனது அகல்மார்வம் கீண்டு
தடங்கடலைக்கடைந்து அமுதம் கொண்டுகந்தகாளை
நலங்கொண்ட கருமுகில்போல் திருமேனி அம்மான்
நாள்தோறும்மகிழ்ந்து இனிதுமருவியிறை கோயில்
சலங்கொண்டுமலர் சொரியும் மல்லிகைஒண்செருந்தி
சண்பகங்கள் மணம் நாறும் வண்பொல்ழிலினூடே
வலங்கொண்டு கயலோடிவிளையாடுநாங்கூர்
வைகுந்தவிண்ணகரம் வணங்குமடநெஞ்சே!
3.திரு அரிமேய விண்ணகரம் :

மூலவர்- குடமாடுங் கூத்தர் அமர்ந்த திருக்கோலம்,
உற்சவர்- சதுர் புஜ கோபாலர்,
தாயார்- அம்ருத கட வல்லி.
தீர்த்தம்- கோடி தீர்த்தம், அமுத தீர்த்தம்,
விமானம்- உச்ச சிருங்க விமானம்.
திருமங்கையாழ்வார் பாசுரம்: திருமடந்தைமண்மடந்தை இருபாலும் திகழ
தீவினைகள்போயகலஅடியவர்கட்கு என்றும்
அருள்நடந்து இவ்வேழுலகத்தவர்பணிய வானோர்
அமர்ந்தேத்தஇருந்தஇடம் பெரும்புகழ்வேதியர் வாழ்
தரும்இடங்கள்மலர்கள்மிகுகைதைகள்செங்கழுநீர்
தாமரைகள்தடங்கள்தொறும் திகழ
அருவிடங்கள்பொழில்தழுவி எழில்திகழும்நாங்கூர்
அரிமேய விண்ணகரம் வணங்குமடநெஞ்சே!
4.திருத் தேவனார் தொகை :

மூலவர்- தெய்வ நாயகன் நின்ற திருக்கோலம்,
உற்சவர்- மாதவப் பெருமாள்,
தாயார்-கடல் மகள் நாச்சியார்.
தீர்த்தம்- சோபன தீர்த்தம்,
விமானம்- சோபன விமானம்.
திருமங்கையாழ்வார் பாசுரம்: போதலர்ந்தபொழிற்சோலைப் புறமெங்கும்பொருதிரைகள்
தாதுதிரவந்தலைக்கும் தடமண்ணிதென்கரைமேல்
மாதவன்தானுறையுமிடம் வயல்நாங்கை வரிவண்டு
தேதெனவென்றுஇசைபாடும்திருத்தேவனார்தொகையே.
5.திருவண் புருடோத்தமம் :

மூலவர்- புருடோத்தமன் நின்ற திருக்கோலம்,
தாயார்- புருடோத்தம நாயகி.
தீர்த்தம்- திருப்பாற் கடல் தீர்த்தம்,
விமானம்- சஞ்žவி விமானம்.
திருமங்கையாழ்வார் பாசுரம்: கம்பமாகடலடைத்துஇலங்கைக்குமன் கதிர்முடியவை பத்தும்
அம்பினாலறுத்து அரசுஅவன்தம்பிக்குஅளித்தவனுறை கோயில்
செம்பலாநிரைசண்பகம்மாதவி சூதகம்வாழைகள்சூழ்
வம்புலாம்கமுகோங்கியநாங்கூர் வண்புருடோத்தமமே.
6.திருச்செம்பொன் செய்கோவில் :
மூலவர்- பேரருளாளன், ஹேம ரங்கர்,செம் பொன் செய் அரங்கர், தாமோதரன் நின்ற திருக்கோலம்,
உற்சவர்-ஹேமாங்கர்(செம்பொன் அரங்கர்),
தாயார்- அல்லி மாமலர் நாச்சியார்.
தீர்த்தம் - ஹேம புஷ்கரிணி,
விமானம்- கனக விமானம்.
திருமங்கையாழ்வார் பாசுரம்: பேரணிந்துஉலகத்தவர்தொழுதேத்தும் பேரர்ளானன்எம்பிரானை
வாரணிமுலையாள்மலர்மகளோடு மண்மகளும்உடன்நிற்க
சீரணிமாடநாங்கைநன்னடுவுள் செம்பொன்செய்கோயிலினுள்ளே
காரணிமேகம்நின்றதொப்பானைக் கண்டுகொண்டுஉய்ந்தொழிந்தேனே.
7.திருத்தெற்றியம்பலம் :
மூலவர்-செங்கண்மால்,அரங்கநாதர், லக்ஷ்மிரங்கர் புஜங்க சயன திருக்கோலம்,
தாயார்- செங்கமலவல்லி
தீர்த்தம்- சூரிய புஷ்கரிணி,
விமானம்- வேத விமானம்.
திருமங்கையாழ்வார் பாசுரம்: மாற்றரசர்மணிமுடியும்திறலும்தேசும்
மற்றவர்தம்காதலிமார் குழையும் தந்தை
கால்தளையும்உடன்கழலவந்துதோன்றிக்
கதநாகம்காத்தளித்த கண்ணர்கண்டீர்
நூற்றிதழ்கொளரவிந்தம்நுழைந்தபள்ளத்து
இளங்கமுகின்முதுபாளைபகுவாய்நண்டின்
சேற்றழையில்வெண்முத்தம்சிந்தும் நாங்கூர்த்
திருத்தெற்றியம்பலத்துஎன்செங்கண்மாலே.
8.திருமணிக்கூடம் : மூலவர்-மணிக்கூட நாயகன், வரதராசப் பெருமாள்,
தாயார்- திருமாமகள் நாச்சியார்.
தீர்த்தம்- சந்திர புஷ்கரிணி,
விமானம் -சாம்பூந்தம் என்ற பொன்னாலானது.
திருமங்கையாழ்வார் பாசுரம்: தூம்புடைப்பனைக்கைவேழம் துயர்கெடுத்தருளி மன்னு
காம்புடைக்குன்றமேந்திக் கடுமழைகாத்தஎந்தை
பூம்புனற்பொன்னிமுற்றும்புகுந்து பொன்வரண்ட எங்கும்
தேம்பொழில்கமழும்நாங்கூர்த் திருமணிக்கூடத்தானே.
9.திருக்காவளம்பாடி :

மூலவர்-கோபாலகிருஷ்ணன்(இராஜ கோபாலன்) ருக்மணி சத்ய பாமையுடன் நின்ற திருக்கோலம்,
தாயார் -மடவரல் மங்கை, செங்கமல வல்லி.
தீர்த்தம்- தடமலர்ப் பொய்கை,
விமானம்- சுயம்பு விமானம்.
திருமங்கையாழ்வார் பாசுரம்: தாவளந்துஉலகமுற்றும் தடமலர்ப்பொய்கைபுக்கு
நாவளம்நவின்றங்கேத்த நாகத்தின்நடுக்கம்தீர்த்தாய்!
மாவளம்பெருகி மன்னுமறையவர்வாழும்நாங்கை
காவளம்பாடிமேய கண்ணனே! களைகண் நீயே.
10.திருவெள்ளக்குளம்(அண்ணன் கோவில்):
மூலவர்- ஸ்ரீநிவாசன், கண்ணன், நாராயணன், அண்ணன் பெருமாள், நின்ற திருக்கோலம்,
தாயார்- அலர்மேல் மங்கை.
தீர்த்தம்-வெள்ளைக்குளம்,
விமானம்-தத்துவ விமானம்.
இத்தலத்திலே தான் திருமங்கை ஆழ்வாரின் தர்ம பத்தினி குமுத வல்லி நாச்சியார் கண்டெடுக்கப்பட்டார்.
திருமங்கையாழ்வார் பாசுரம்: கண்ணார்கடல்போல் திருமேனிகரியாய்!
நண்ணார்முனை வென்றிகொள்வார் மன்னு நாங்கூர்
திண்ணார்மதிள்சூழ் திருவெள்ளக்குளத்துள்
அண்ணா! அடியேனிடரைக்களையாயே.
11. திருப்பார்த்தன் பள்ளி :

மூலவர்: தாமரையாள் கேள்வன்,
உற்சவர்- பார்த்தசாரதி,
தாயார்- தாமரை நாயகி.
தீர்த்தம் - சங்கசரஸ் கங்கைத் தீர்த்தம்,
விமானம்- நாராயண விமானம்.
திருமங்கையாழ்வார் பாசுரம்: கவளயானைக்கொம்பொசித்த கண்ணனென்றும் காமருசீர்
குவளைமேகமன்னமேனிகொண்டகோன் என்னானை யென்றும்
தவளமாடுநீடுநாங்கைத் தாமரையாள்கேள்வனென்றும்
பவளவாயாள்என்மடந்தை பார்த்தன்பள்ளி பாடுவாளே.
இவ்வாறு பொன்னி நதி பாய்ந்து வளம் சிறக்கும் திருநாங்கூர்ப்பதிகளை மங்களாசாசனம் செய்த இந்த திவ்ய தேசப் பெருமாள் அனைனவரும், திருமங்கையாழ்வரும் கலந்து கொள்ளும் மிக சிறப்பு வாய்ந்த ஏகாதச கருட சேவை திருவிழா வெகு சிறப்பாக ஒவ்வொரு வருடமும் தை அமாவாசைக்கு அடுத்த நாள் நடைபெறுகின்றது. அந்த தெய்வீக அனுபவத்தை தாங்களும் பெற தங்களை என்னுடன் வருமாறு தங்களை அழைக்கின்றேன். " பெருமாளை பெரிய திருவடியாம் கருட வாகனத்தில் சேவித்தால் மறு பிறவி கிடையாது என்பது ஐதீகம்", இங்கு பதினோரு பெருமாள்களையும் ஒரே நேரத்தில் சேவிக்கும் அற்புதமான வாய்ப்பு கிடைக்கின்றது. அடுத்த பதிவில் அந்த தெய்வீக அனுபவத்தை பெருமாள் கொடுத்த சேவையை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.
படங்கள் உதவி : திரு. தனுஷ்கோடி அவர்கள். 2008 கருட சேவையின் படங்கள். இவ்வருட கருட சேவை 10.102.09 அன்று நடைபெறுகின்றது.
திருநாங்கூர் கருட சேவை இன்னும் தொடரும் ...............

Sunday, December 7, 2008

அலர்மேல் மங்கை தாயார் கருட சேவை

அகலகில்லேன் இறையும் என்று திருமாலின் திருமார்பில் நித்ய வாசம் செய்யும் திருச்சானூர்  அலர்மேல் மங்கைத்தாயாருக்கு கார்த்திகை பஞ்சமி திதியை தீர்த்த நாளாகக் கொண்டு பிரம்மோற்சவம் நடைபெறுகின்றது. அது போலவே   சென்னை திருமயிலை வேதாந்த தேசிகர் தேவஸ்தானத்திலும் தாயாருக்கு பிரம்மோற்சவம் சிறப்பாக நடைபெற்றது.

அப்பிரம்மோற்சவத்தின் மூன்றாம் நாள் மாலை தாயார் கருட வாகன சேவை தந்தருளுகின்றார். அன்னையின் அருட்கோலத்தின் சில காட்சிகள்.

விளக்கே திருவிளக்கே வேந்தன் உடன்பிறப்பே சோதி மணி விளக்கே சீதேவி பொன்மணியே அந்தி விளக்கே அலங்கார நாயகியே காந்தி விளக்கே காமாக்ஷித் தாயாரே பசும்பொன் விளக்கு வைத்துப் பஞ்சுத் திரிப்போட்டுக் குளம் போல எண்ணெய் விட்டு கோலமுடன் ஏற்றி வைத்தேன் ஏற்றினேன் நெய் விளக்கு எந்தன் குடிவிளக்கு வைத்தேன் திருவிளக்கு மாளிகையும் தான் விளங்க மாளிகையில் சோதியுள்ள மாதாவைக் கண்டு மகிழ்ந்தேன் யான் மாங்கல்யப் பிச்சை மடிப் பிச்சை தாரும் அம்மா சந்தான பிச்சையுடன் தனங்களும் தாரும் அம்மா பெட்டி நிறைய பூஷணங்கள் தாரும் அம்மா பட்டி நிறைய பால் பசுவை தாரும் அம்மா கொட்டகை நிறைய குதிரைகளைத் தாரும் அம்மா புகழுடம்பைத் தாரும் அம்மா பக்கத்தில் நில்லும் அம்மா அல்லும் புகழும் அண்டையிலே நில்லும் அம்மா.

கருட வாகனத்தில் அலர்மேல் மங்கைத் தாயார்


சேவித்து எழுந்திருந்தேன் தேவி வடிவம் கண்டேன்
வச்சிர கிரீடம் கண்டேன் வைடூரிய மேனி கண்டேன்
முத்துக்கொண்டை கண்டேன் முழுப்பச்சை மாலை கண்டேன்
உரிமுடி கண்டேன் தாழை மடல் சூடக்ண்டேன்

தாயாரின் அருட்கோல முன்னழகு்



பின்னழகு கண்டேன் பிறை போல நெற்றி கண்டேன்
சாந்துடன் நெற்றி கண்டேன் தாயார் வடிவம் கண்டேன்
கமலத்திருமுகத்தில் கஸ்தூரிப் பொட்டு கண்டேன்
மார்பில் பதக்கம் மின்ன மாலையசையக் கண்டேன்
கைவளையல் கலகலென்னக் கனையாழி மின்னக்கண்டேன்

தங்க ஒட்டியாணம் தகதகென ஜொலிக்கக் கண்டேன்
காலில் சிலம்பு கண்டேன் காலாழி பீலி கண்டேன்
மங்கள நாயகியை மனங்குளிரக் கண்டு மகிழ்ந்தேன் அடியாள் நான்
அன்னையே அருந்துணையே அருகிருந்து காரும் அம்மா
வந்த வினை அகற்றி மஹாபாக்கியம் தாரும் அம்மா
தாயாகும் உந்தன் தாளடியில் சரணம் என்றேன்
மாதாவே உந்தன் மலரடியில் நான் பணிந்தேன்.



* * * * * * * *
சென்னை சௌகார்பேட்டை ஜெனரல் முத்தையா முதலி தெரு பிரசன்ன வெங்கடேச பெருமாள் திருக்கோவிலில் தாயாரின் கார்த்திகை பிரம்மோற்சவத்தின் போது தாயார் பெண் கருட வாகனத்தில் சேவை சாதிக்கின்றார் பிரம்மோற்சவத்தின் ஆறாம் நாளன்று. அது போலவே பெண் சிறிய திருவடியில் எட்டாம் நாள் தாயார் சேவை சாதிக்கின்றார்.
பெண் கருட வாகனம்

இக்கோவிலைப்பற்றி படிக்க நேர்ந்தது, கருட சேவையன்று சென்று தரிச்சிக்கலாம் என்று அடியேன் நினைத்திருந்தேன், ஆனால் மழை காரணமாக செல்ல முடியவில்லை . இவ்வருடம் வெறும் பெண் கருட வாகனத்தை தரிசனம் செய்யலாம். சென்ற தாயார் கருட சேவையின் போது வட நாட்டில் மஹா லக்ஷ்மி தாயாருக்கு வாகனமாக கருதப்படுவது எது என்று கேட்டிருந்தேன், அதற்கான பதில் ஆந்தை, ஆமாம் நாம் அபசகுன பறவையாகக் கருதும் ஆந்தைதான் தாயாரின் வாகனமாக கருதபப்டுகின்றது. வங்காளத்தில் துர்கா பூஜையின் போது துர்க்கையம்மனுடன் மகள்களாக மஹாலக்ஷ்மியும், மஹா சரஸ்வதியும் எழுந்தருளும் போது ஆந்தை வாகனத்தை காணலாம்.

Saturday, October 11, 2008

நாச்சியார் கோவில் கல் கருட சேவை - 3

கல் கருட சேவையின் போது ஒரு அற்புதம் நடைபெறுகின்றது. அதாவது கருடனின் கனம் (எடை) அதிகமாகிக்கொண்டே போவதுதான். சன்னதியிலிருந்து வெளியே வரும்போது கருடனை நான்கு பேரால் ஏழப்பண்ண முடியும் அதுவே பிரகாரத்தை சுற்றி வரும்போது எட்டு பேர் வேண்டும், அடுத்து பதினாறு பேர், பின்னர் வெளியே வரும் போது முப்பத்திரெண்டு பேர் வெளியே வந்தவுடன் அறுபத்து நான்கு என்று நான்கின் மடங்கில் அதிகமாகிகொண்டே போகும் அதிசயம் நடைபெறும், அதே பெருமாள் திரும்பி வரும் போது அதே விகிதத்தில் எடை குறைந்து கொண்டே வரும்.


முனையார் சீயமாகி அவுணன் முரண் மார்வம் 
புனை வாளுகிரால் போழ்படஈர்ந்த புனிதனூர் 
சினையார் தேமாஞ் செந்தளிர் கோதிக்குயில் கூவும்
நனையார் சூழ்ந்த அழகான நறையூரே.

இப்பாசுரம் திருநறையூர் நம்பியையே ஆச்சாரியனாக பெற்ற திருமங்கையாழ்வார்  இந்த திவ்ய தேசத்தை மங்களாசாசனம் செய்த 110 பாசுரங்களுள் ஒன்று.


இவ்வாறு ஏன் நடைபெறுகின்றது. ஒரு விளக்கம் பெருமாள் மேதாவி முனிவருக்கு கொடுத்த வரம், தாயார் அன்ன வாகனத்தில் எழுந்தருளுகின்றாள் அன்னமோ நளினமான பறவை, பெருமாளோ கருடனில் எழுந்தருளுகின்றார். கருடன் பலம் மிகுந்த அதே சமயம் வேகமாக செல்லக்கூடிய பறவை. எனவே கருடன் அன்னத்தின் பின்னே செல்ல வேண்டுமல்லாவா? எனவே கல் கருடனின் எடை கூடிக்கொண்டே செல்கின்றது. ஆகவே இப்போதும் தாயாருக்கு முதலிடம் .

 இரண்டாவது விளக்கம். நாம் பெருமாளுடன் ஒன்றியிருக்கும் போது நம் வினைகளின் சுமை குறைவாக இருக்கும், அதுவே நாம் பெருமாளை விட்டு விலகி செல்லும் பொது அதுவே மிகப்பெரிய சுமையாகி விடுகின்றது என்பதை இது குறிப்பால் உணர்த்துகின்றது. அதாவது பூரண சரணாகதி ஒன்று தான் நாம் உய்ய ஒரே வழி என்பதைத்தான் இதுவும் உணர்த்துகின்றது.


அது போலவே பெருமாளை தாங்கி உலா வருவதால் கல் கருடன் முகத்தில் வியர்வை வரும் அதிசயத்தையும் காணலாம். ( தகவலுக்கு நன்று வல்லி சிம்ஹன் அம்மா)

திருநறையூர் நம்பியின் பேரெழிலை திருமங்கை மன்னன் பெரிய திருமடலில் பாடியவாறு

மன்னு மறையோர் திருநறையூர் மாமலைபோல் பொன்னியலு மாடக் கவாடம் கடந்து புக்கு என்னுடைய கண் களிப்ப நோக்கினேன் - நோக்குதலும் மன்னன் திருமார்பும் வாயுமடியிணையும் பன்னுகரதலமும் கண்களும் - பங்கயத்தின் பொன்னியல் காடு ஓர் மணிவரை மேல் பூத்தது போல் மின்னொளி படைப்ப வீழ்நானும் தோள் வளையும் மன்னிய குண்டலமும் ஆரமும் நீள் முடியும் துன்னுவெயில் விரித்த சூளாமணியிமைப்ப மன்று மரகதக்குன்றின் மருங்கே - ஓர் இன்னிளவஞ்சிக் கொடியொன்று நின்றதுதான் அன்னமாய் மானாய் அணி மயிலாய்......

பெருமாளின் ஓடும் புள்ளேறி ஊர்ந்து வரும் அழகைக் கண் களிப்ப நோக்கி களியுங்கள் அன்பர்களே.
பொங்கேறுநீள்சோதிப் பொன்னாழிததன்னோடும் சங்கேறுகோலத் தடக்கைப்பெருமானை கொங்கேறுசோலைக் குடந்தைகிடந்தானை நங்கோனைநாடி நறையூரில் கண்டேனே.

என்று நம் கலியன் அனுபவித்த ஸ்ரீநிவாசப்பெருமாளின் கல் கருட சேவை படங்களை அளித்த அன்பர் தனுஷ்கோடிக்கு ஆயிரம் நன்றிகள்.