Friday, January 30, 2009

திருநாங்கூர் பதினொரு கருட சேவை- 4(2008)

திருநாங்கூர் பதினொரு கருட சேவை


மாலை 6 மணியளவில் திருமஞ்சனம் முடிந்து பெருமாள்கள் அனைவரும் கருட வாகனத்திலும் ஆழ்வார் ஹம்ஷ வாகனத்திலும் மணவாள மாமுனிகள் ஷேச வாகனத்திலும் எழுந்தருளுகின்றனர். பின்னர் அலங்காரம் துவங்குகின்றது. மாலைகள் வர ஆரம்பிக்கின்றன. மாலைகள் மேல் மாலைகள் அமர்கின்றன, நடு நடுவே பட்டு பீதாம்பரங்கள் வருகின்றன அவையும் பெருமாள்களுக்கு சார்த்தப்படுகின்றன. பதினொரு கருட சேவையைக் காண வரும் பக்தர்கள் கூட்டம் அதிகரித்துக் கொண்டே செல்கின்றது , கூட்டம் அலை மோதுகின்றது என்றுதான் சொல்ல வேண்டும். அலை அலையாக பக்தர்கள் ஒவ்வொரு பெருமளாக சென்று சேவித்து புறப்பாட்டிற்க்காக காத்து நிற்கின்றனர். பெருமாளின் கருட சேவையை கண்டு களியுங்கள்.

மணவாள மாமுனிகள் சேஷ  வாகனத்தில் முன் செல்ல கருட சேவை புறப்பாடு துவங்குகின்றது.
சேஷ  வாகனத்தில் மணவாள மாமுனிகள்


அடுத்து குமுதவல்லி நாச்சியாருடன் தங்க ஹம்ஸ( அன்னம்) வாகனத்தில் திருமங்கை மன்னன் பின் செல்கின்றார்.

  ஹம்ச வாகனத்தில் குமுதவல்லி நாச்சியாருடன் ஆலிநாடன், கலிகன்றி, நம் கலியன் ,கொற்ற வேல் பரகாலன், மங்கையர் கோன்,அருள் மாரி, அரட்டமுக்கி, அடையார் சீயம், திருமங்கையாழ்வார்.

மென்மையான அன்னம் முன்னே செல்ல அதன் வேகத்திற்க்கு ஏற்றவாறு பின்னே காய்சினப்பறவையான வலிமை மிகுந்த கருடன் செல்லும் ஆச்சரியம்தான் என்னே.

அன்று நள்ளிரவு மணவாள மாமுனிகள் முன் செல்ல, ஹம்ச வாகனத்தில் திருமங்கையாழ்வாரும் குமுத வல்லித் தாயாரும் தொடர, ஏகாதச பெருமாள்களும் எம்பெருமானை எப்போதும், எல்லா காலத்திலும் தாங்கும் பேறு பெற்ற பெரிய திருவடியாம், வேத சொரூபன் கருட வாகனத்தில் எழுந்தருளி சேவை சாதிக்க திருவீதிப் புறப்பாடு நடைபெறுகின்றது. பதினோரு பெருமாள்களும் தெய்வப்புள்ளேறி ஒரே சமயத்தில் திருநாங்கூரின் நான்கு மாட வீதிகளையும் சுற்றி வரும் அந்த அழகைக் காண கண் கோடி வேண்டும்.

பொன் பக்ஷிராஜனில் ஆரோகணித்து ஒய்யாரமாக ஊர்ந்து வரும் பாலகனாய் பார் முழுதும் உண்டு ஆலிலையில் பள்ளி கொண்ட பிரான் திருத்தேவனார்தொகை மாதவப்பெருமாள்


காகேந்திரனில் ஆனந்தமாய் கூத்தாடி வரும்
திருமடந்தை மண் மடந்தை இருபாலும் திகழ நாங்கை நடுவுள் நின்ற திருஅரிமேய விண்ணகரம் சதுர்புஜ கோபாலர்

ஊழி வெள்ளம் முன்னகட்டிலொடுக்கிய திருதெற்றியம்பலம் செங்கண் மால் பள்ளி கொண்ட பெருமாள் சுபர்ணன் மேல்

நந்தா விளக்கு, அளத்தற்கு அரியான் திருமணிமாடக்கோவில் நாராயணப் பெருமாள்
பெரிய திருவடியில்

பையுடை நாகபப்டை கொடியான் திருத்தேவனார்தொகை மாதவப்பெருமாள்
தங்கப் புள்ளேறி வரும் அழகு

வேடார் திருவேங்கடம் மேய விளக்கு திருவெள்ளக்குளம் அண்ணன் பெருமாள் வினதை சிறுவன் தோளின் மேல்

யானையின் துயரம் தீர்த்த
திருக்காவளம்பாடி கோபாலர்
ஆடும் புள்ளேறி பவனி வரும் அருட்காட்சி

கருத்மான் மேல் பார்த்தன்பள்ளி செங்கண்மால் பார்த்தசாரதிப் பெருமாள்

யானையின் துயர் தீர ஆழி தொட்ட திருவண்புருடோத்தமம் புருஷோத்தமர்
புள்ளூர்தியில்

மலர்மகளோடு மண்மகளும் உடன் நிற்ப மணிமாட நாங்கை நின்ற தி்ருச்செம்பொன்கோயில் ஹேமரங்கர் வேத சொரூபனான கருடனில் உலா

நாகப்பகையானில் அடலாழிக்கையன் திருவைகுந்த விண்ணகரம் வைகுந்தப்பெருமாள்

தூம்புடைப் பனைக்கை வேழம் துயர் கெடுத்தருளிய திருமணிக்கூடம் வரதராஜப்பெருமாள்
புள்ளூர்தியில் எழிலாக
பூர்வ ஜன்ம புண்ணியத்தால் மட்டுமே அந்த தெய்வீக அழகைக் காணும் பேறு நமக்கு கிட்டும். புறப்பாடு நிறைவு பெற அதிகாலை ஆகி விடும்.
திருமங்கையாழ்வாரின் முக அழகு

அடுத்த நாள் காலை ஆழ்வாருக்கு திருமஞ்சனம் திருப்பாவை சாற்றுமறை நடைபெறுகின்றது. மாலை திருநாங்கூரிலிருந்து புறப்பட்டு, திருவெள்ளக்குளத்து ஸ்ரீ அண்ணன் பெருமாளை இடர் களைய சரணம் புகுகிறார், பிறகு வரிவண்டு தேதென என்று இசைபாடும் அழகை திருத்தேவனார் தொகையில் ஸ்ரீ மாதவனை அனுபவித்து மங்களாசாசனம் செய்கிறார் நீலன்.

பிறகு திருவாலி எழுந்தருளி ஸ்ரீ லக்ஷ்மி நரசிம்மரை மங்களாசாசனம் செய்கின்றார் ஆழ்வார். திருநகரியை அடையும் போது பெரிய திருவடியில் வயலாலி மணவாளன் ராஜ கோபுரத்தின் முன்னே ஆழ்வாரை எதிர் கொள்ள காத்திருக்கின்றார். பின் ஆழ்வார் அங்கு அடைந்தவுடன் , பெருமாளும் ஆழ்வாரும் திருக்கோவிலில் செல்வதுடன் திருநாங்கூர் பதினோரு கருட சேவை இனிதே நிறைவு பெறுகின்றது. அப்போது

கற்றார் பற்றறுக்கும் பிறவிப் பெருங்கடலே
பற்றா வண் தடியேன் பிறந்தேன் பிறந்த பின்னை வற்றா நீர் வயல் சூழ் வயலாலி அம்மானைப்
பெற்றேன் பெற்றதுவும் பிறவாமை பெற்றேன்.
என்ற பாசுரசாற்று மறையுடன் இந்த தெய்வீக விழா இனிதே நிறைவடைகின்றது.

பெருமாளை கருட வாகனத்தில் சேவை சாதிக்கக் காண்போருக்கு மறு பிறவி கிடையாது என்பது ஐதிகம். ஆகவே நாம் அனைவரும் உய்ய பதினோரு திவ்ய பெருமாள்களும் தரும் கருட சேவையை காணவும், ஆழ்வாரை நெல் வயல்களின் நடுவே நெற்கதிர்களை சாய்த்து மிதித்துக் கொண்டு பக்தர்கள் ஏழப்பண்ணி கொண்டு செய்யும் அழகையும் கண்டு களிக்க எத்தனை கோடி தவம் செய்திருக்க வேண்டுமோ?

என்னங்க ஆழ்வார், பெருமாள்களின் அழகைக் கண்டு தங்களுக்கும் திருநாங்கூர் செல்ல வேண்டும் என்று ஆவல் எழுகின்றதா? 

வரும் ஒன்பது மற்று பத்தாம் தேதிக்கு பொறுத்திருங்கள்.
சென்று வந்து உலகளந்த ஊழி பிரானாம், உம்பர் தொழும் திருமாலின் அருள் பெற பிரார்த்திக்கின்றேன்.
* * * * * *
இப்பதிவை ஒட்டிய முந்தையப் பதிவுகள்
திருநாங்கூர் பதினொறு திவ்ய தேசங்களைப்பற்றி அறிய கிளிக்குக
திருமங்கையாழ்வார் மஞ்சக்குளி உற்சவம் பற்றி காண கிளிக்குக மஞ்சக்குளி
ஏகாதச பெருமாள்களின் மங்களசாசன வைபத்தைப்பற்றிக் காண கிளிக்குக மங்களாசாசனம்
* * * * * *
தை அமாவாசை அன்று (26-01-09) சூரிய கிரகணம் வந்ததால் இவ்வருட திருநாங்கூர் கருட சேவை பௌர்ணமியன்று ,அதாவது 09-02-09 ஆழ்வார் திருநகரியிலிருந்து புறப்பட்டு மஞ்சக்குளி கண்டு திருமணிமாடக்கோவில் அடைதல். 10-02-09 பகலில் மங்களாசாசனம் இரவு கருடசேவை. 11-02-09 ஆழ்வார் திருநகரி திரும்புதல்.
படங்கள் உதவி :
திரு. தனுஷ்கோடி அவர்கள்.
2008 கருட சேவையின் படங்கள்.

10 comments:

வடுவூர் குமார் said...

இந்த படங்கள் மூலம் கிடைக்கும் புண்ணியம் - உங்களுக்கே கொடுத்துவிடுகிறேன்.

Anonymous said...

very nice

thanks for putting these lovely pictures and narration.

S.Muruganandam said...

//இந்த படங்கள் மூலம் கிடைக்கும் புண்ணியம் - உங்களுக்கே கொடுத்துவிடுகிறேன்.//

அனைத்தும் கிருஷ்ணார்ப்பணம்.

ஆட்டுவிக்கின்றவன் அவன் நாம் அனைவரும் வெறும் பாவைகள் தானே வடுவூர் குமார் அவர்களே.

S.Muruganandam said...

Thank You very much.

Kannabiran, Ravi Shankar (KRS) said...

அத்தனை படங்களும் பார்த்து....ஒரு வித திருப்தி என்றால்....
திருமங்கை மன்னன் முக விலாசம் பாத்து ஒரு இனம் புரியாத மகிழ்ச்சி!

நன்றி கைலாஷி ஐயா!

//வரும் ஒன்பது மற்று பத்தாம் தேதிக்கு பொறுத்திருங்கள்//

எதற்கு?
மஞ்சக் குளிக்கா? :)

S.Muruganandam said...

ஆமாம் , ஆழ்வார் மஞ்சக்குளிக்கு.

jeevagv said...

அருமை, தீர்க்க தரிசனம் ஆயிற்று!
உங்கள் இருவருக்கும் நீண்ட நன்றிகள்!

S.Muruganandam said...

அருமையான தரிசனத்திற்கு நன்றி ஜீவா ஐயா.

Anonymous said...

படங்கள் மிகவும் அருமை.

தங்கள் பதிவை www.newspaanai.com இல் சேர்த்து பலருடன் பகிர்ந்து கொள்ளுங்கள். www.newspaanai.com தமிழ் சோசியல் பூக்மர்கிங் சைட் தங்கள் பதிவில் newspaanai பட்டனை சேர்த்து பதிவுகளை www.newspaanai.com ல் எளிதாக சேர்க்கலாம். மேலும் விபரங்களுக்கு கீஷே உள்ள லிங்க்கை கிளிக் செய்யவும். http://www.newspaanai.com/easylink.php நன்றி.

Unknown said...

Veryverythankyouforyoumessege