Sunday, June 2, 2013

வரதா! வரதா! உனக்கு கைங்கர்யம் செய்ய முடியுமா? -2

பூவிருந்தவல்லி மூன்று கருடசேவை -2


மேனா பல்லக்கில் திருக்கச்சி நம்பிகள்


வரதராஜப் பெருமாள் கோபுராஹார விமானத்தின் கீழ்  ஸ்ரீதேவி பூதேவியுடன் நின்ற கோலத்தில் சூரிய மண்டலத்துடன் மேற்கு நோக்கிய முக மண்டலத்துடன்  அன்று திருக்கச்சி நம்பிகளுக்கு சேவை சாதித்த அதே கோலத்தில் அற்புதமாக சேவை சாதிக்கின்றார். ஜோதிட ரீதியாக சூரிய திசை நடப்பவர்கள், தந்தையுடன் கருத்து வேறுபாடு உள்ளவர்கள், உடல் நலம் பாதிக்கப்பட்டவர்கள் வரதராஜ பெருமாளுக்கு செவ்வரளி மாலை சார்த்தி வழிபட நன்மை.  பட்டர் அருமையாக சேவை பண்ணி வைத்து தீர்த்தமும் சடாரியும் வழங்கினார். பெருமாளை திவ்யமாக சேவித்து விட்டு வெளியே வந்து அருகில் உள்ள தாயார் சன்னதிக்கு செல்வோமா?.  


மூன்று கருட சேவை கோபுர வாசல் தரிசனம் 

பொதுவாக தாயார் மற்றும் ஆண்டாள் சன்னதி பெருமாளுக்கு வலப்பக்கதிலும் இடப்பக்கதிலுமாக இருக்கும் ஆனால் இத்தலத்தில் மாறியுள்ளது. தாயார் பூவில் இருந்தவள் என்பதால் பூவிருந்தவல்லி,  புஷ்பவல்லி என்பது தாயாரின் இன்னொரு திருநாமம். தாயார் சன்னதி தனிக்கோவிலாக  பல அற்புத கற்சிற்பங்கள் கொண்ட அர்த்த மண்டபம் மற்றும் மஹா மண்டபத்துடன் கிழக்கு நோக்கி அமைந்துள்ளது.  மல்லி வனத்தில் மல்லிகைப்பூவில் இருந்த புஷ்பவல்லித்தாயாருக்கு மல்லிகை மாலை சார்த்தி வழிபடுவது மிகவும் விசேஷம். வைகாசி பிரம்மோற்சவத்தின் போது தாயாருக்கு புஷ்பயாகம் நடைபெறும் அன்று சுவாமி பள்ளியறைக்கு சயன கோலத்தில் சேவை சாதிப்பார். பங்குனி உத்திரத்தன்று வரதராஜர், ஸ்ரீதேவி, பூ தேவி, புஷ்பவல்லித் தாயார் ஆண்டாள் ஆகியோருடன் சேர்த்தி சேவை அளிக்கின்றார்.


அரங்கநாதர் கருட சேவை

தாயார் சன்னதிக்கு இடப்புறம் திருக்கச்சி நம்பிகளின்  ஆச்சாரியரும் நாதமுனி அவர்களின் பேரனுமான, ஆளவந்தாருக்கு   தனி சன்னதி கிழக்கு நோக்கிய திருமுக மண்டலம் இவர் சன்னதியிலும் மஹா மண்|டபம் அர்த்த மண்டபம் உள்ளது. இவருக்கு ஆடியில் திருநட்சத்திர விழா நடைபெறுகின்றது. அடுத்து வேங்கடவனை சேவிக்கலாமா அன்பர்களே.  
வேங்கடேசர் சன்னதி இராஜ கோபுரம் தீபஸ்தம்பத்திற்கு அருகில் கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. நெடியோனாக நின்ற கோலத்தில் ஸ்ரீ தேவி, பூ தேவியுடன் சேவை சாதிக்கின்றார் பெருமாள். இவர் சன்னதியின் முன் மண்டபம் அருமையான கற்தூண்களில் சிற்பங்களுடன் எழிலாக அமைந்துள்ளது. திருக்கச்சி நம்பிகளுக்காக இங்கு வந்து கோவில் கொண்ட திருமலையப்பனை நாமும் மனதார சேவிக்கின்றோம்.  


வருடம் முழுவதும் திருவிழாக்கள் தான் இத்தலத்தில். மூன்று பெருமாள்களுக்கும் தனித்தனியாக பிரம்மோற்சவம் நடைபெறுகின்றது. சித்திரையில் 10 நாட்கள் ஸ்ரீரங்கநாதர் பிரம்மோற்சவம், வைகாசியில் 10 நாட்கள் வரதராஜர் பிரம்மோற்சவம், ஆனியில் மிருக சீரிஷத்தன்று சத(108) கலஸ ஸ்தாபன திருமஞ்சனம் வரதராஜர், புஷ்பவல்லித் தாயார் ஆண்டாள், திருக்கச்சி நம்பிகளுக்கு சிறப்பு திருமஞ்சனம், ஆடியில் ஆண்டாள் திருவவதார ஆடிப்பூர உற்சவம், ஆளவந்தார் திருநட்சத்திரம் உற்சவம், ஆவணியில் ஸ்ரீ ஜெயந்தி உற்சவம், புரட்டாசியில் பவித்ர உற்சவம் 3 நாட்கள், ஸ்ரீ ஸ்ரீநிவாசர் பிரம்மோற்சவம் மற்றும் நவராத்திரி உற்சவம், ஐப்பசியில் மணவாள மாமுனிகள்  10 நாள்  அவதார உற்சவம். கார்த்திகையில் ஸ்ரீ கார்த்திகை தீப உற்சவம், மார்கழியில் அத்யயனோற்சவம், வைகுண்ட ஏகாதசி. தையில் கனு உற்சவம். மாசியில் ஸ்ரீ திருக்கச்சி நம்பிகள் அவதார 10 நாட்கள் உற்சவம், மிருகசீரிஷத்தன்று காலை வரதராஜப் பெருமாள் எழுந்தருள, திருக்கச்சி நம்பிகள் இயற்றிய தேவராஜ அஷ்டகம் சேவித்து,  மூலவருக்கு சிறப்பு அலங்கார திருமஞ்சனம், பல்லக்கில் திருவீதிப் புறப்பாடு, மாலை உற்சவருக்கு சிறப்பு திருமஞ்சனம், ஈரவாடை தீர்த்தம் மற்றும் சாத்துமுறை பின்னர் இரவு புறப்பாடு. பங்குனியில் ஸ்ரீ மங்களாசாசனம் மூன்று கருட சேவை, காலை 9 மணி அளவில் மேனா பல்லக்கில் எழுந்தருளியுள்ள திருக்கச்சி நம்பிகளுக்கு மூன்று பெருமாள்களும் கோபுர வாசல் சேவை பின்னர் மாட வீதி புறப்பாடு.

கோவிலுக்கே வெளியே இராஜ கோபுரத்திற்கு அருகிலேயே உள்ளது வெண் தாமரைக்குளம், சில வருடங்கள் முன்பு ஒரே குப்பைகள் கொட்டப்பட்டு கிடந்தது. தற்போது சீரமைக்கும் பணிகள் நடந்து வருகின்றன. தற்போது திருத்தேர் அமைக்கும் பணியும் நடந்து வருகின்றது. விரும்பும் அன்பர்கள் இந்த  கைங்கரியங்களில் பங்கு கொள்ளலாம்.


அரங்க நாதர் பின்னழகு

இனி திருக்கச்சி நம்பிகளை குறித்து வழங்கும் சில சம்பவங்களைக் காணலாம். திருக்கச்சி நம்பிகள் தினமும் நீராடிவிட்டு வரும் போது அவருடைய திருவடிகள் பட்ட மண்ணை ஒரு பாகவதர் தன் தலையிலும், உடம்பிலும் பூசி வந்தார். ஒரு நாள் இதைக் கண்ட நம்பிகள் அதற்கான காரணத்தை அவரிடம் கேட்க, அதற்கு, “நீங்கள் தான்  பெருமாளிடம் தினமும் பேசுகிறீர்களே, உங்கள் திருவடி பட்ட மண்ணை நான் பூசிக்கொள்வதால் எனக்கு மோட்சம் கிடைக்குமா? என்று பெருமாளிடம் கேட்டு சொல்லுங்கள் என்றாராம். திருக்கச்சி நம்பிகள் வரதராஜப் பெருமாளிடம் இதைப் பற்றிக் கேட்க, வரதராஜப் பெருமாளும், “அவனுக்கு நிச்சயம் மோட்சம் உண்டு” என்று கூறினார்.


திருவேங்கடவன் கருட சேவை

தினமும் தான் பெருமாளிடமே பேசுகிறோமே, நிச்சயம் தனக்கும் மோட்சம் உண்டு என்று நம்பிய நம்பி, “எனக்கு உண்டா?” என்று கேட்க அதற்குப் பெருமாள், “நீர் விசிறி வீசினீர்; நான் பேசினேன், இரண்டும் சரியாயிற்று” என்று பதில் சொல்லியிருக்கிறார். “சரி மோட்சம் அடைய என்ன வழி?” என்று கேட்க அதற்குப் பெருமாள் ஆசார்ய கைங்கரியம் (தொண்டு) செய்ய வேண்டும் என்று சொல்ல, நம்பிகள் திருக்கோட்டியூர் நம்பியிடம் அவர் மடத்து மாடுகளை மேய்க்கும் கைங்கர்யத்தை மாறுவேடமிட்டுச் செய்கிறார். ஒரு நாள் மழை பெய்த போது இவர் தனது போர்வையை பசுவிற்கு போர்த்தி விட்டு தான் அதன் கீழே அமர்ந்திருந்தார். இதைப் பார்த்து திருக்கோட்டியூர் நம்பி ஏன் என்று வினவ, பசு மாடு மழையில் நனைந்தால் அதற்கு சீதளம் பிடிக்கும் அதன் பாலைப் பருகும் தங்களுக்கும் சீதளம் பிடிக்கும் எனவேதான் இவ்வாறு செய்தேன் என்று கூறினார். இவர் வெறும் மாட்டுக்கரர் அல்ல உயர்ந்தவர் என்று கண்டுபிடித்த திருக்கோட்டியூர் நம்பி இவரை ‘நம் பையல்’ என்று தழுவிக்கொண்டார் என்று கதை. இன்றும் திருக்கச்சி நம்பிகள் மூலவர் கீழே சில மாடுகள் இருப்பதைக் காணலாம். பகவத் சேவையை விட  பாகவத சேவையே சிறந்தது என்பதை உணர்த்தவும், மேலும் தான்  பெருமாளிடம் நேரில் பேசுகின்றோம் என்ற நம்பிகளின் கர்வத்தை குறைக்க பெருமாள் இவ்வாறு நாடகமாடினார் என்பார்கள் பெரியோர்.  


திருக்கச்சி நம்பிகள் நற்குணங்களைப் பார்த்துவிட்டு இராமானுஜர் அவரைத் தன் குருவாக ஏற்க வேண்டும் என்று கேட்க அதற்கு திருக்கச்சி நம்பிகள் வர்ணாசரம தர்மத்துக்கு அது ஒத்து வராது என்று மறுத்துள்ளார். எப்படியாவது திருக்கச்சி நம்பிகளின் ஆசி தனக்கு கிடைக்க வேண்டும் என்று நினைத்த இராமானுர்,  ஆசார்யராக நினைத்த திருக்கச்சி நம்பி சாப்பிட்ட மிச்சத்தை, தான் சாப்பிடுகிற வாய்ப்பு கிடைத்தால் அது பெரும் பாக்கியம் என்று நினைத்தார்;  எப்படி பெருமாளுக்கு நாம் நைவேத்தியம் செய்யும் உணவை பிரசாதம் என்று சொல்லுகிறோமோ அதே போல. அதற்காக திருக்கச்சி நம்பிகளைத் தன் வீட்டிற்கு சாப்பிட அழைக்க, அவரும் சம்மதித்தார். இராமானுஜர் தன் மனைவியிடம் உணவு தயாரிக்கச் சொல்லிவிட்டு காத்துக்கொண்டு இருந்தார். நேரம் ஆகவே அவர் திருக்கச்சி நம்பிகளைத் தேடிக்கொண்டு  கோவிலுக்குப் போக, வேறு வழியாக திருக்கச்சி நம்பிகள் இராமானுஜரின் வீட்டை அடைந்தார். இராமானுஜர் வீட்டில் இல்லாவிட்டால் பரவாயில்லை, தனக்கு கோயில் வேலை இருப்பதால் சீக்கிரம் போக வேண்டும் என்றுசொல்லி அவர் வீட்டுத் திண்ணையில் உட்கார்ந்து சாப்பிட்டுவிட்டுச் சென்றுவிடுகிறார்.

திருவேங்கடவன் பின்னழகு

அவர் சென்றபின் இராமானுஜரின் மனைவி தஞ்சமாம்பா அவர் சாப்பிட்ட இலையை ஒரு குச்சியால் தள்ளிவிட்டு, அவர் சாப்பிட்ட இடத்தை சாணத்தால் மெழுகிவிட்டு, தானும் குளித்துவிடுகிறாள். திரும்பி வந்த இராமானுஜர், தனது மனைவி செய்த செயலைக் கண்டு வருந்துகிறார் “அவர் சாப்பிட்டு விட்டு மீதியாக வீட்டு சென்ற ஏதாவது இருக்கிறதா?” என்று கேட்க அதற்கு அவர் மனைவி “கீழ் ஜாதியைச் சேர்ந்தவர் சாப்பிட்ட மிச்சத்தை இங்கே யார் சாப்பிடுவது, பிச்சைக்காரர்களுக்குப் போட்டுவிட்டேன்,” என்று பதில் சொல்லுகிறார்.
ஒரு நல்ல பாகவதரான திருக்கச்சி நம்பி சாப்பிட்ட மீதியைச் சாப்பிடுகிற பாக்கியம் தனக்குப் போய்விட்டதே என்று மனம் வருந்துகிறார் இராமானுஜர். அதனால் இன்றும் ஸ்ரீரங்கம் கோயியில் இராமானுஜர் காலத்தில் அவருக்கு ஏற்பட்ட இந்தக் குறையைப் போக்க அத்யயன  உற்சவத்தின் போது நம்பெருமாள் அமுது செய்தருளியபின் நைவேத்தியம் ஆழ்வார்கள், ஆசார்யர்களுக்கு சமர்ப்பிக்கப்படும். அப்போது முதலில் திருக்கச்சி நம்பிகளுக்கு நைவேத்தியம் பண்ணிய அமுது பிறகு இராமானுஜருக்கு சமர்ப்பிக்கப்படும் வழக்கம் இருக்கிறது.

ஸ்ரீ கிருஷ்ணர் விமானம்



இவ்வளவு சிறப்புகள் பெற்ற தலத்திற்கு முடிந்தால் சென்று மூன்று பெருமாள்களையும், திருக்கச்சி நம்பிகளையும் , பூவிருந்த வல்லியையும்  சேவித்து விட்டு வாருங்கள். 

4 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

தரிசனம் கிடைத்தது... மிக்க நன்றி...

படங்கள் சிறப்பு... வாழ்த்துக்கள்...

S.Muruganandam said...

மிக்க நன்றி தனபாலன்

Kavinaya said...

// பகவத் சேவையை விட பாகவத சேவையே சிறந்தது என்பதை உணர்த்தவும், மேலும் தான் பெருமாளிடம் நேரில் பேசுகின்றோம் என்ற நம்பிகளின் கர்வத்தை குறைக்க பெருமாள் இவ்வாறு நாடகமாடினார் என்பார்கள் பெரியோர். //

ஆஹா! அருமை. படங்களைப் பற்றிச் சொல்லவே வேண்டாம். மிக்க நன்றி!

S.Muruganandam said...

இன்னும் ஆழ்வார் திருநகரி 9 கருடசேவை பதிவுகளும் வர உள்ளன வந்து அவசியம் சேவியுங்கள் கவிநயா.