பங்குனி உத்திரத் திருக்கல்யாணம்
வேதவல்லித்தாயார் ஸ்ரீமந்நாதர் திருக்கல்யாணம்
திருவல்லிக்கேணி திவ்ய தேசத்தில் நெடியோனாய் நின்ற கோலத்தில், தேர் சாரதிக்கு உரிய முறுக்கு மீசையுடன் வலக்கையில் சங்கமேந்தி சக்கரம் இல்லாமல், என்னை சரணடைவாயாக நான் உன்னை ஈடேற்றுவேன் என்று இடக்கரம் திருப்பாதத்தை சுட்ட, வேங்கட கிருஷ்ணன் என்று மூலவராயும், திருமுக மண்டலத்தில் பீஷ்மரின் அம்பு காயங்களுடன் பார்த்தசாரதி என்று உற்சவராயும், வால்மீகி முனிவர் வணங்கும் இராவணாந்தகனாய், இராமனாய், மைதிலி மற்றும் தம்பி இலக்குவனோடும் சக்கரவர்த்தி திருமகனாகவும், பள்ளி கொண்ட ஸ்ரீமந்நாதராய் அரங்கனாகவும், பிரகலாதனுக்கு அருள் புரிந்து யோக நிலையில் அமர்ந்த தெள்ளிய சிங்கராகவும், நித்ய கருட சேவை வழங்கும் கஜேந்திர வரதராகவும் பெருமாள் ஐந்து கோலங்களில் சேவை சாதிக்கின்றார்.
கண்ணாடி கருட சேவை
ஐந்து பெருமாள்களும் பிரம்மோற்சவத்தின் மூன்றாம் நாள் காலை கருட சேவை தந்தருளுகின்றனர். மேலும் கஜேந்திர மோஷம் ஆடி பௌர்ணமியன்றும், மாசி மகத்தன்று தீர்த்தவாரி கருட சேவையும், பங்குனி உத்திரத்தன்று ஸ்ரீமந் ரங்கநாதர் கண்ணாடி கருட சேவை தந்தருளுகின்றார். இந்த கண்ணாடி கருட சேவையை இப்பதிவில் காணலாம்.
திருவரங்கம் பங்குனி உத்திர சேர்த்தி சேவை
பங்குனி உத்திரம் எனது கல்யாண விரதம் என்றும் அழைக்கப்படுகின்றது. அன்று தான் சீதா இராமர் திருக்கல்யாணம் நடைபெற்றது. பூலோக வைகுண்டமாம் திருவரங்கத்தில் இன்றுதான் "நம்பெருமாளும், அரங்கநாயகியும் சேர்த்தி சேவை" சாதிக்கின்றனர். அது போலவே பல வைஷ்ணவ ஆலயங்களில் இன்று திருக்கல்யாணமும், சேர்த்தி சேவையும் நடைபெறுகின்றது. திருநறையூர், திருவாலி திருநகரி வேடுபறி உற்சவம், தேரழுந்தூர் ஆகிய பல திவ்ய தேசங்களில் பிரம்மோற்சவம் நடைபெறுகின்றது. இந்த திவ்ய தேசத்திலும் பங்குனி உத்திரத்தன்று ஸ்ரீமந் நாதர் என்னும் அரங்கநாதர் மற்றும் வேதவல்லித் தாயார் திருக்கல்யாணம் நடைபெறுகின்றது.
திருவல்லிக்கேணியில் "என்னையாளுடையப்பன்" என்று அழைக்கப்படும் அரங்கநாதர், வெங்கடகிருஷ்ணருக்கும் முன்பாக இங்கு கோவில் கொண்டதாக ஐதீகம். ஒரு சமயம் பெரிய பிராட்டியார் திருமாலுடன் கோபம் கொண்டு துளசி செடிகள் நிறைந்த இந்த பிருந்தாரண்யத்தில் அல்லி மலர்கள் நிறைந்த கைரவணி புஷ்கரணி தடாகத்தில் ஒரு அல்லி மலரில் தோன்றினார். பிருகு மகரிஷிக்கு அந்தக் குழந்தை வேத ஸ்வரூபமாக காட்சியளித்ததாலும் அல்லி மலரில் தோன்றியதாலும் "வேதவல்லி" என்று பெயரிட்டு வளர்த்தார். வேத வல்லித்தாயார் திருவரங்கனை தம் நாதனாக ஏற்று வாரீர் "எம் நாதரே" என்று அழைக்கவே இத்தலத்தில் ஸ்ரீ ரங்கநாதர் "ஸ்ரீமந்நாதன்" என்றும் போற்றப்படுகின்றார். தாயாரை திருக்கல்யாணம் செய்து கொள்வதற்காக ஸ்ரீரங்கநாதர் இத்திருத்தலத்திற்கு எழுந்தருளினார் என்பது ஐதீகம்.
பார்த்த சாரதி பெருமாளின் கருவறைக்கு இடப்புறத்தில் அரங்கநாதரின் சன்னதி அமைந்துள்ளது. பாம்பனையில் புஜங்க சயனத்துடன் பள்ளி கொண்ட கோலத்தில் இரு புறமும் தேவியர் அமர்ந்திருக்க, நாபியிலிருந்து பிரம்ம தேவருடன் சேவை சாதிக்கின்றார் பெருமாள். அனந்த சயன பெருமாளுக்கு அருகே உள்ளே மறைவாக சிரித்தபடி வராகரும் அமர்ந்திருக்கின்றார். உற்சவர் ஸ்ரீ தேவி பூதேவி தாயாருடன் சேவை சாதிக்கின்றார். பங்குனி உத்திரத்தன்று வேதவல்லித் தாயார் அரங்கநாதர் திருக்கல்யாணம்.இவரை திருமங்கையாழ்வார்
பார்த்த சாரதி பெருமாளின் கருவறைக்கு இடப்புறத்தில் அரங்கநாதரின் சன்னதி அமைந்துள்ளது. பாம்பனையில் புஜங்க சயனத்துடன் பள்ளி கொண்ட கோலத்தில் இரு புறமும் தேவியர் அமர்ந்திருக்க, நாபியிலிருந்து பிரம்ம தேவருடன் சேவை சாதிக்கின்றார் பெருமாள். அனந்த சயன பெருமாளுக்கு அருகே உள்ளே மறைவாக சிரித்தபடி வராகரும் அமர்ந்திருக்கின்றார். உற்சவர் ஸ்ரீ தேவி பூதேவி தாயாருடன் சேவை சாதிக்கின்றார். பங்குனி உத்திரத்தன்று வேதவல்லித் தாயார் அரங்கநாதர் திருக்கல்யாணம்.இவரை திருமங்கையாழ்வார்
வேதத்தை வேதத்தின் சுவைப்பயனை விழுமிய முனிவர் விழுங்கும்
கோதிலின் கனியை நந்தனார்க் களிற்றைக் குவலயத்தோர் தொழுதேத்தும்
ஆதியை அமுதை என்னையாளுடை யப்பனை ஒப்பவரில்லா
மாதர்கள் வாழும் மாடமாமயிலைத் திருவல்லிக் கேணிக் கண்டேனே என்று மங்களாசாசனம் செய்துள்ளார்.
பங்குனி உத்திரத்தை ஒட்டி ஸ்ரீமந்நாதருக்கு ஐந்து நாட்கள் பல்லவ உற்சவம் நடைபெறுகின்றது. ஐந்து நாட்களும் பெருமாள் முன்பு " ப்ருந்தாரண்ய புராணம்" என்னும் திருவல்லிக்கேணி புராணம் சேவிக்கப்படுகின்றது. நிறை நாள் பங்குனி உத்திரத்தன்று மாலை பௌர்ணமி நிலவொளியில் ஸ்ரீ ரங்கநாதர் கண்ணாடி கருட சேவை தந்தருளுகின்றார்.
அற்புதமாக திருக்கர விரல்களில் நவரத்ன மோதிரங்கள், திருக்கரம் மற்றும் திருப்பாத நகங்களில் கண்ணாடி, திருக்கர கங்கணங்கள், கிரீடம் ஆகியவற்றில் பல வர்ண கண்ணாடிகள், மற்றும் பிரபை முழுவதும் அற்புதமாக கண்ணாடி வேலைப்பாட்டுடன்,சர்வ அலங்கார பூஷிதராக பெருமாள் கண்ணாடி கருட சேவை சாதிக்கின்றார்.
அற்புதமாக திருக்கர விரல்களில் நவரத்ன மோதிரங்கள், திருக்கரம் மற்றும் திருப்பாத நகங்களில் கண்ணாடி, திருக்கர கங்கணங்கள், கிரீடம் ஆகியவற்றில் பல வர்ண கண்ணாடிகள், மற்றும் பிரபை முழுவதும் அற்புதமாக கண்ணாடி வேலைப்பாட்டுடன்,சர்வ அலங்கார பூஷிதராக பெருமாள் கண்ணாடி கருட சேவை சாதிக்கின்றார்.
கண்ணாடி கருட சேவை படங்களை தெளிவாக பார்க்க இங்கு செல்க கண்ணாடி கருடன்
பௌர்ணமி நிலவொளியில் பெரிய மாட வீதியில் சேவை சாதித்தபின் பெருமாள் ஆஸ்தான மண்டபம் எழுந்தருளி மறு அலங்காரம் கண்டருளி தாயார் சன்னதிக்கு எழுந்தருளுகிறார். சர்வலங்கார பூஷிதையாக தாயார் தன் நாதருக்காக காத்திருக்கின்றாள். பின் திருக்கல்யாணம். சேர்த்தி சேவையின் போது கத்யத்ரயம் சேவிக்கப்படுகின்றது. (கத்யத்ரயம் என்பது இராமானுஜர் இயற்றிய சரணாகதி கத்யம், ஸ்ரீரங்க கத்யம், வைகுண்ட கத்யம் என்ற மூன்று நூல்கள். சரணாகதி கத்யம் பிரபத்தி என்ற சரண்புகுதலைப் பற்றியது. ஸ்ரீ ரங்க கத்யம் ரங்கநாதப் பெருமானை தன்னை தாசனாக்கிக் கொள்ளும்படி வேண்டுவது, வைகுண்ட கத்யம் மஹா விஷ்ணுவின் இருப்பிடமான வைகுண்டத்தை நேரில் பார்ப்பது போல விவரிப்பது). இதன்மூலம் இராமானுஜர் சரணாகதி செய்துகொண்டு இறைவனை அடைந்தார்.
பெருமாளுடன் தாயார் இருக்கும் சமயமாகப் பார்த்து இராமானுஜர் இங்கு கத்யத்ரயம் சேவித்தார் என்பார்கள். அதனால் இன்றும் இந்த உற்சவத்தின்போது கத்யத்ரயம் சேவிப்பது வழக்கம். தாயாரின் சிபாரிசு கிடைக்கும் அல்லவா?
4 comments:
அருமையான படங்களின் மூலம் தரிசனம் கிடைத்தது... நன்றி...
மிக்க நன்றி தனபாலன்
அழகான படங்களுக்கு மிக்க நன்றி
மிக்க நன்றி, இசை, புகைப்படம் ஆகியவற்றில் இரசனை உள்ள யோகன் பாரிஸ்.
Post a Comment