Friday, June 6, 2014

ஒன்பது கருட சேவை விடையாற்றி மங்களாசாசனம்

                            ஆழ்வார் திருநகரி ஒன்பது கருட சேவை -14

அன்ன வாகனத்தில் நம்மாழ்வார் 

இது வரை நவதிருப்பதி எம்பெருமான்கள் தங்க ஹம்ஸ வாகனத்தில் எழுந்தருளிய நம்மாழ்வாருக்கும் தங்க பரங்கி நாற்காலியில் எழுந்தருளியுள்ள மதுரகவியாழ்வாருக்கும் அளித்த கோபுர வாசல் சேவையை கண்டு களித்தீர்கள்திருமஞ்சனத்திற்கு பிறகு திருக்கோயில் இராஜகோபுர திருக்கதவங்கள் சார்த்தப்படுகின்றது. பக்தர்கள் அனைவரும் பெருமாள்களுக்கும் ஆழ்வாருகளுக்கும் அலங்காரம் ஆகி வெளியே எழுந்தருள கோபுரக் கதவின் மேல் விழி வைத்து  காத்துக்கொண்டிருக்கிறனர் நேரமாக  நேரமாக கூட்டமும் அதிகமாகிக்கொண்டே போகின்றது.




 திருக்குருகூர் பொலிந்து நின்ற பிரான் கருடவாகனத்தில் 

சிறப்பாக நம்மாழ்வாரின் பாசுர மாலை சார்த்தியுளளனர்.

மெள்ள மெள்ள திருக்கதவங்கள் திறக்க முதலில் ஹம்ச வாகனத்தில் நம்மாழ்வார் சேவை சாதித்து எம்பெருமான்களின் கருட சேவையை சேவிக்க ஏதுவாக வெளியே வந்து திருக்கதவத்தை நோக்கி நிற்கின்றார். பின்னர் மதுரகவியாழ்வார் பரங்கி நாற்காலியில் எழுந்தருளி திருக்கதவத்தின் இடது பக்கம் நிற்கின்றார்.



திருவைகுண்டம்  கள்ளர் பிரான் கருடசேவை


முதலில் ஆழ்வார் திருநகரி பொலிந்து நின்ற பிரான்  ஆழ்வாருக்கு சேவை சாதிக்கின்றார். பக்தர்கள் அனைவரும் கோவிந்தா கோவிந்தா என்று பரவசத்துடன் கருட வாகனத்தில் பெருமாளையும் அன்ன வாகனத்தில் ஆழ்வாரையும் சேவிக்கின்றார். பெருமாள் கோபுர வாசல் சேவை சாதிக்கும் போது மத்தாப்புக்கள் ஏற்றப்படுகின்றன. பல வர்ணங்களின் பெருமாளின் அழகு அப்படியே பக்தர்களின் மனதில் பதிவாகின்றது. பெருமாளுக்கு கற்பூர ஆரத்தி நடைபெறுகின்றது. இரட்டை திருவாசியுடன் ( இரண்டு திருவாசிகளுடன் பிரம்மாண்டமாக பெருமாள்  கருட சேவையை முதல் தடவையாக சேவிக்கும் பாக்கியம்  அடியேனுக்கு இங்கு கிட்டியது).


திருவரகுணமங்கை எம் இடர் கடிவான்
( இரண்டு திருவாசிகளை தெளிவாக காணலாம்) 

ஒவ்வொரு பெருமாளும் ஒவ்வொரு விதமான அழகு, அருமையான ஆபரணங்கள்,  பல  வர்ண கிளிகள், ஆப்பிள் மாலைகள், பிரம்மாண்ட மலர்மாலைகள், பாசுர மாலைகள், சிறப்பு பரிவட்டங்கள், கருடனுக்கும் சிறப்பாக  மலர் மாலை அலங்காரம், தாமரை மலர் மாலைகள்  என்று ஆனந்தமாக இவ்வரிசைசையில்  பெருமாள்கள் கோபுர வாசல் சேவை சாதிக்கின்றனர். இரண்டாவதாக திருவைகுண்டம் கள்ளர் பிரானும் , மூன்றாவதாக திருவரணகுணமங்கை எம் இடர் கடிவானும், நான்காவதாக திருப்புளிங்குடி காய்சின வேந்தரும், ஐந்தாவது ஆறாவதாக  திருத்தொலைவில்லி மங்கலத்தின்  செந்தாமரைக் கண்ணரும், தேவர்பிரானும், ஏழாவதாக திருக்குளந்தை மாயக்கூத்தரும், அடுத்து தென்திருப்பேரை நிகரில் முகில் வண்ணரும் நிறைவாக திருக்கோளூர் நிக்ஷேபவித்தரும் கோபுர வாசல் சேவை சாதிக்கின்றனர். பின்னர் அனைத்து பெருமாள்களும் ஆழ்வார்களும் மாடவீதி வலம் வருகின்றனர். பக்தர்கள் அனைவரும் அருகில் வந்து பெருமாள்கள் அனைவரையும் அற்புதமாக சேவித்து செல்கின்றனர். மாடவீதி புறப்பாடு முடிந்து பெருமாள்கள் அனைவரும் திருக்கோவிலுக்கு எழுந்தருளும் போது அதிகாலை ஆகிவிடுகின்றது.


காய்சினப்பறவையில் காய்சினவேந்தர்

பின்னர் பெருமாள்கள் அனைவரும் தோளுக்கினியானில் எழுந்தருளுகின்றனர். ஆழ்வார் திருநகரியின் திருவைகாசி பிரம்மோற்சவத்தின் ஆறாம்நாள் காலை  பெருமாள்கள் அனைவரும் மீண்டுமொருமுறை சடகோபரின் தீந்தமிழ் பாசுரங்களை செவி மடுத்துவிட்டு விடைபெற்று செல்கின்றனர். முதலில் திருக்குளந்தை மாயக்கூத்தரை

கூடச்சென்றேன் இனி என் கொடுக்கேன் கோள்வளை நெஞ்சத் தொடக்க மெல்லாம்
பாடற்றொழிய இழந்து வைகல் பல்வளை யார்முன் பரிசழிந்தேன்
மாடக்கொடிமதின் தென்குளந்தை வண்குட பால் நின்ற மாயக்கூத்தன்
ஆடல் பறவை உயர்த்த வெல்லோர் ஆழிவலவனை ஆதரித்தே!!
 என்று மங்களாசாசனம் செய்கின்றார். அந்த மகிழ்ச்சியில் தனது திருக்கோவிலுக்கு கிளம்புகின்றார் மாயக்கூத்தர்.

அடுத்து திருப்புளிங்குடி காய்சினவேந்தர், திருவரகுணமங்கை எம் இடர் கடிவான், திருவைகுண்டம் கள்ளர்பிரான் ஆகிய மூன்று பெருமாள்களும்

புளிங்குடிக்கிடந்து வரகுணமங்கையிருந்து வைகுந்தத்துள்நின்று
தெளிந்தவென்சிந்தையகங்கழியாதே என்னையாள்வாய்! எனக்கருளி
நளிர்ந்தசீருலகமூன்றுடன்வியப்ப நாங்கள்கூத்தாடிநின்றார்ப்ப
பளிங்குநீர்முகிலின்பவளம்போல்கனிவாய் சிவப்ப நீகாண வாராயே.

என்னும் பாசுரம் செவிமடுத்து ஆழ்வாருக்கு பிரியாவிடை கொடுக்கின்றனர்.





நம்மாழ்வார் தந்தை தாய் என்றடைந்த
 தேவர் பிரான் ஆடும் புள்ளில் சேவை

கிளி மாலை 



அடுத்து நம்மாழ்வாரிடம் மங்களாசாசனம் பெற்று  விடைபெறுபவர்கள் இரட்டைத்திருப்பதி பெருமாள்கள் ஆவர்.

சிந்தையாலும் சொல்லாலும் செய்கையினாலும் தேவபிரானையே
தந்தை தாய் என்று அடைந்த வண் குருகூர்ச் சடகோபன்
முந்தை ஆயிரத்துள் இவை தொலைவில்லி மங்கலத்தைச் சொன்ன
செந்தமிழ் பத்தும் வல்லார் அடிமை செய்வர் திருமாலுக்கே.

என்று திருத்தொலைவில்லி மங்கலத்தின் தேவர்பிரானையே தனது தந்தை தாய் என்று நம்மாழ்வார் கொண்டதால்  இவர்களை தானே கூடவந்து  வழியனுப்பி வைக்கின்றார் வகுளாபரணர். கிழக்கு மாட வீதியின் நாயக்கர் மண்டபம் தாண்டும் வரை இவர்களை நம்மாழ்வார் வாத்சல்யத்துடன் வழியனுப்பி பின் தொடர்கிறார்.


மாயக்கூத்தர்  கருட சேவை
பச்சைக்கிளி மாலை , தாமரை மாலை


நவகருடசேவையின் நிறைவாக திருதென்திருப்பேரையின் நிகரில் முகில் வண்ணரும், திருக்கோளூரின்  நிக்ஷேபவித்தரும் நம்மாழ்வாரின் மங்களாசாசனம் பெற்று மீண்டும் அடுத்த வருடம் தங்களின் செந்தமிழ் பாசுரங்களை செவிமடுக்க வருகின்றோம் என்று விடைபெற்று செல்கின்றனர்.மதுரகவியாரும் தம் குருநாதரிடம் விடைபெற்று செல்கின்றார்.





திருக்கோளூர் நிஷேபவித்தன் கருட வாகனத்தில்


பின்னர் இந்த நவகருட சேவையின் முத்தாய்ப்பு நிகழ்ச்சியான நம்மாழ்வாரின் புறப்பாடு மிகவும் சிறப்பாக நடைபெறுகின்றது. கோயில் மரியாதையுடன் நம்மாழ்வார் பந்தல் மண்டபத்தில் இருந்து உள் சன்னதிக்கு எழுந்தருளுகின்றார். அந்த அழகைக் காண கண் கோடி வேண்டும் பக்தர்களின் வெள்ளத்தில் மெல்ல மெல்ல நீந்தி நம்மாழ்வார் சன்னதி அடைய சுமார் மூன்று மணி நேரம் ஆகும். ஒவ்வொருவரும் தம் வாழ்வில் ஒரு முறையாவது காண வேண்டிய உற்சவம் ஆகும். சமயம் கிடைத்தால் சென்று நவதிருப்பதி பெருமாள்களையும் திவ்யமாக சேவித்து விட்டு வாருங்கள்.


பரங்கி நாற்காலியில் மதுரகவியாழ்வார்


பெருமாளின் கருணையினால் இன்றைய தினம் (06.06.2014) ஆழ்வார் திருநகரியில் ஒன்பது கருட சேவை நடை பெறும் நன்னாளில் இத்தொடர் நிறைவடைகின்றது. இது வரை வந்து நவகருட சேவையை சேவித்த அன்பர்கள் அனைவரும் அந்த கோவிந்தன் அருளால் எந்த குறையும் இல்லாமல் வாழ பிரார்த்திக்கின்றேன். இனி அடுத்த தொடராக மலை நாட்டு திவ்ய தேசங்களை சேவிக்கலாம் கூட வாருங்கள் அன்பர்களே.   

No comments: