Showing posts with label ஸ்ரீநிவாசர். Show all posts
Showing posts with label ஸ்ரீநிவாசர். Show all posts

Saturday, October 11, 2008

நாச்சியார் கோவில் கல் கருட சேவை - 2

நாச்சியார் கோவில் கல் கருடன்


எல்லா கருடனிலும் அஷ்ட நாகங்கள் ஆபரணமாக விளங்கும் ஆனால் இந்த கல் கருடனில் ஒன்பது நாகங்கள் ஆபரணமாக உள்ளன, ஒன்பதாவது நாகம் கருடனின் வாளை அலங்கரிக்கின்றது.


பெரிய திருவடியாகிய கருடன் பெருமாளுக்கு எப்படி எப்படியெல்லாம் சேவை செய்கின்றார் பாருங்கள்.


பெருமாள் அசுரர்களை கொல்லும் போது மேலாப்பாய், குளிர்ந்த விசிறியாக எம்பெருமானின் வெற்றிக் கொடியாக காய்சினப்பறவையாய் பெருமாளின் பகைவர்களுக்கு தானே எதிரியாக குதிரை பூட்டாத தேராய் பெருமாளுக்கு வாகனமாய் புறக்கணிக்க முடியாத அடியவராய் இவ்வாறு பல் வேறு நிலைகளிலும் பெருமாளுக்கு வேறு துணை வேண்டாத துணையாய் திகழ்பவன்தான் கருடன்.


சன்னதியிலிருந்து கருட சேவைக்காக கல் கருடனை 
ஏழப்பண்ணிக்கொண்டு வரும் காட்சிகள்.


கருடனில் வந்து யானையின் துயரம் திருநறையூர் நம்பி தீர்த்த அழகை அவரிடம் பஞ்ச சமஸ்காரம் பெற்ற திருமங்கையாழ்வார் இவ்வாறு பாடுகின்றார்.

தூவாயபுள்ளுர்ந்துவந்து துறைவேழம்
மூவாமைநல்கி முதலை துணித்தானை
தேவாதிதேவனைச் செங்கமலக் கண்ணானை
 நாவாயுளானை நறையூரில்கண்டேனே.


ஆடும் புள்ளேறி பக்தர் துயர் தீர்க்க ஓடி வரும் பெருமாள்
(கருடன் திருமுகம் மிக அருகில்)





இனி கல் கருடன் இத்தலத்திற்கு வந்த வரலாறு. அருகில் இருந்த ஒரு கிராமத்தில் ஒரு சிற்பி கல்லினால் கருடன் செதுக்கி சிறகுகளை அமைத்து பிராணப்பிரதிஷ்டை செய்த போது அந்த கல் கருடன் திடீரென்று பறக்க ஆரம்பித்து விட்டதாம், அதைக்கண்ட சிற்பி ஒரு கல்லை வீச அது கருடனின் அலகை தாக்க கருடன் திருநறையூரில் விழுந்ததாம். பெருமாள் கருடனை இங்கேயே இருக்க வரம் அளித்தார். கல் கருடன் தனி சன்னதியில் எழுந்தருளி அருள் பாலிக்கின்றார்.

 இவரை 7 வியாழக்கிழமைகள் தொடர்ந்து வழி பட பிரார்த்தனைகள் நிறைவேறும். இவர் விநாயகர் போல மோதகப்பிரியர் இவருக்கு அமிர்த கலசம் என்னும் மோதகம் நைவேத்யம் செய்யப்படுகின்றது, இவ்வாறு மோதகம் படைத்து வழிபடுபவர்களுக்கு நீண்ட ஆயுள், நல்ல ஆரோக்கியம், மற்றும் எல்லா செல்வங்களும் அருளுகின்றார் இவர். 

 அடுத்த பதிவில் கல் கருடனில் பெருமாள் சேவை சாதிக்கும் போது நடக்கும் ஒரு அற்புதத்தையும் அதற்கான விளக்கத்தையும் காணலாம்.