ஸ்ரீவாரி பிரம்மோற்சவத்தில் கருட சேவை

பிரம்மோற்சவமாம் பிரம்மோற்சவம்
எங்கள் மலையப்ப சுவாமிக்கு பிரம்மோற்சவம்
புரட்டாசி மாதம் ஆனந்த பிரம்மோற்சவம்
திருவோண நட்சத்திர பிரம்மோற்சவம். ( பிரம்மோ)
காலையும் மாலையும் கோலாகலம்
வித வித வாகனங்களில் அற்புத ஊர்கோலம்
சேஷ வாகனத்தில் வைகுந்த நாதன்
அன்ன வாகனத்தில் கலை மகள் கோலம் (பிரம்மோ)
சிம்ம வாகனத்தில் அவர் யோக நரசிம்மம்
முத்துப்பந்தலில் புள்ளின் வாய் கீண்ட கோலம்
கற்பக விருக்ஷத்தில் அவர் கலியுக வரதர்
சர்வ பூபால வாகனத்தில் அவரே ஜகந்நாதர் (பிரம்மோ)
மோகினியாய் வருபவரும் அவரே
தெய்வப்புள்ளின் மேல் மூலவராய் திருக்கோலம்
சிறிய திருவடியில் ஸ்ரீராமர் அவரே
தங்கத்தேரிலே அற்புத வீதி உலா (பிரம்மோ)
அத்தி வாகனத்திலே அற்புத சக்கரவர்த்தி
சூரியப்பிரபையிலே சூரிய நாராயணர்
சந்திரப்பிரபையிலே வெண்ணெய்த்தாழி கண்ணன்
திருத்தேரிலே உல்லாச இரதோற்சவம் (பிரம்மோ)
பாயும் பரியிலே ஸ்ரீரங்கராஜா
சுவாமி புஷ்கரணியில் சக்ரஸ்நானம்
கோலாகலமாய் பிரம்மோற்சவம்
பிரம்மன் நடத்தி வைத்த பிரம்மோற்சவம்.(பிரம்மோ)
புரட்டாசி மாதம் திருவோண நடசத்திரம் எம்பெருமான் கண்கண்ட தெய்வம் கலியுக வரதன் வேங்கடவனின் அவதாரத் திருநாள், அந்நாளை தீர்த்த நாளாக கொண்டு திருப்பதி திருமலையிலே எழுமலையானுக்கு, எங்கள் குல தெய்வத்திற்க்கு, பார் புகழும் பாலாஜிக்கு, பரந்தாமனுக்கு, ஸ்ரீநிவாசனுக்கு, மலையப்ப சுவாமிக்கு ஒன்பது நாள் கோலாகலமாக பிரம்மோற்சவம்.
பெருகுமதவேழம் மாப்பிடிக்குமுன்னின்று
இருகணிள மூங்கில்வாங்கி - அருகிருந்த
தேன்கலந்து நீட்டும் திருவேங்கடம்கண்டீர்
வான்கலந்தவண்ணன் வரை.
திருமலையில் பிரம்மோற்சவத்தின் சில சிறப்புகள் 1) முதல் நாள் கொடியேற்றம் மாலையில் நடைபெறுவது, 2)இரண்டு தடவை சேஷ வாகன சேவை, 3) தங்கத்தேர். 4) கருட சேவையன்று மூலவராக உற்சவர் சேவைசாதிப்பது.
காலையும் மாலையும் வெவ்வேறு வாகனங்களில் மலையப்ப சுவாமி அற்புத அலங்காரத்தில், சர்வாபரண பூஷிதராக, விலையுயர்ந்த முத்தும், பொன்னும் மணியும், மாலைகளும் இலங்க நாம் எல்லோரும் உய்ய மாட வீதி வலம் வந்து சேவை சாதிக்கின்றார்.
எல்லா ஆலயங்களிலும் மோக்ஷமளிக்கும் கருட சேவை சிறப்பு, திருமலையில் இன்னும் சிறப்பு என்னவென்றால் கலியுகத்தில் பெருமாள் ஸ்ரீநிவாசராக திருப்பதி வந்த போது அவர் ஓடி விளையாட வைகுண்டத்தில் உள்ளது போல இயற்கை அழகு மிக்க இடம் வேண்டுமென்று பெருமாள் சொல்ல கருடன் வைகுண்ட மலையை பெயர்த்து பூலோகத்திற்கு கொண்டு வந்தார். ஏழு மலையும் சேர்ந்து பூலோகம் வந்தது. இதற்காக தன்னை தரிசிக்க வரும் பக்தர்கள் வாசலில் அமர்ந்திருக்கும் கருடனை தரிசித்த பின்னரே தன்னை வணங்க வேண்டும் என்று அருள் பாலித்தார். அதன்படி எல்லா பெருமாள் கோவில்களிலும் வாசலில் கருடனை தரிசிக்கலாம்.
புரட்டாசி பிரம்மோற்சவத்தின் ஐந்தாம் நாள் இரவு கருட சேவை. தங்க கருடனில் மலையப்ப சுவாமி மூலவராக சேவை சாதிக்கின்றார். மூலவருக்கு அணிவிக்கப்படும் லக்ஷ்மி ஹாரம், சகஸ்ரநாம ஹாரம், மகர கண்டி, சூடிக்கொடுத்த சுடர்க்கொடியாளின் மாலை, கிளி, வஜ்ர கிரீடம், அற்புத ஆபரணங்கள் அணிந்து ஆனந்த சேவை சாதிக்கின்றார் ஸ்ரீ வெங்கடாசலபதி. மூலவரே அன்று வெளியே வந்து சேவை சாதிப்பதாக ஐதீகம் என்பதால் ஒரு காலத்தில் கருட சேவை முடியும் வரை நடை அடைக்கப்பட்டது. தற்போது கூட்டம் கருதி சில நிமிடங்கள் மட்டுமே அடைக்கப்படுகின்றது.
மலையப்பனை தெய்வப்புள் ஏறி வலம் வரும் போது தரிசித்தால் குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிட்டும், மேலும் சகஸ்ர நாம ஹாரம், லக்ஷ்மி ஹாரம், மகர கண்டி அணிந்து பல லட்சம் பேர் தரிசிக்க தானே வேங்கடாசலபதி வெளியே வருவதால் அவரை சேவிப்பதால் பீடை விலகி அஷ்ட ஐஸ்வர்யங்கள் ஒரு சேர கிடைக்கும் என்பதால்தான் திருமலையில் அன்று என்றுமில்லாத பக்தர் கூட்டம் கூடுகின்றது.




செடியாய வல்வினைகள் தீர்க்கும் திருமாலே!
நெடியானே! வேங்கடவா! நின் கோயிலின் வாசல்
அடியாரும்வானவரும் அரம்பையரும்கிடந்தியங்கும்
படியாய்க்கிடந்து உன் பவளவாய்காண்பேனே.
2 comments:
அடடா, அருமையிலும் அருமை. திருமலையப்பரின் எழிலில் மெய்சிலிர்த்தது. அத்தனை லட்சம் மக்களோடு மக்களாய் போனாலும் இப்படி காணக் கிடைக்குமோ? மிக்க நன்றி.
//அடடா, அருமையிலும் அருமை. திருமலையப்பரின் எழிலில் மெய்சிலிர்த்தது.//
ஓம் நமோ நாராயணா, ஓம் நமோ நாராயணா.
Post a Comment