Showing posts with label மேற்கு மாம்பலம். Show all posts
Showing posts with label மேற்கு மாம்பலம். Show all posts

Monday, April 18, 2016

அடைக்கலம் தந்த ஆதி கேசவர் கருட சேவை

இப்பதிவில் நாம் சேவிக்கின்ற கருடசேவை சென்னை மேற்கு மாம்பலம் கோவிந்தன் சாலையில் அமைந்துள்ள ஆதிகேசவப் பெருமாளின் கருடசேவை ஆகும். இவ்வாலயத்தில் உள்ள சேசவனை உடையவர் ஆராதித்துள்ளார் என்பதால் இவர் அருள்மிகு பாஷ்யக்காரசுவாமி சென்னை ஆதிகேசவப் பெருமாள் என்றழைக்கப்படுகின்றார்.முஸ்லிம்களின் படையெடுப்பின் போது மாபிலமாக அதாவது பெரிய குகையாக இருந்த இத்தலத்தில் மற்ற ஆலயங்களின் உற்சவ மூர்த்த்திகள் பாதுகாக்கப்பட்டதால் இவர் சென்னை ஆதிகேசவன் ஆனார்.

ஆகாசாத் பதிதம் தோயம் யதாகச்சதி ஸாகரம் |
ஸர்வதேவ நமஸ்கார: கேசவம் ப்ரதி கச்சதி ||

ஆகாயத்திலிருந்து விழுகின்ற மழைத்துளியானது எந்த இடத்தில் விழுந்தாலும் எப்படி சமுத்திரத்தை அடைகின்றதோ, அது போல எந்த தெய்வத்தை தொழுதாலும்  அது  கேசவனையே போய் சேருகின்றது என்பது ஆன்றோர் வாக்கு. வாருங்கள் அன்பர்களே அந்த ஆதிகேசவன் இங்கு திருக்கோவில் கொண்டலீலையைப் பற்றிக் காண்போம்.


பலஆயிரம்ஆண்டுகளுக்கும் முன் திருவரங்கத்தில் அரங்கனுக்கு சேவை செய்து வந்த மாதாவாச்சார் என்ற அன்பருக்கு பிள்ளையில்லாக்குறை இருந்தது, அவரும்மனமுருகிஅரங்கனிடம் வேண்ட, அரங்கனும் இவரது கனவில் தோன்றி திருவல்லிக்கேணியில்  பார்த்தசாரதிப் பெருமாளையும். திருமலையில் வேங்கடேசப் பெருமாளையும் சேவித்த வர உனது குறை தீரும் என்று அருளினார்.

அரங்கனின் கூற்றுப்படி மாதவாச்சார் மனைவியுடன் திருவரங்கத்திலிருந்து திருவல்லிக்கேணிக்குப் நடைப்பயணமாக புறப்பட்டார். பல நாட்கள்  மைல் கணக்காக நடந்து திருவல்லிக்கேணியை அடைய ஒரு காத தூரம் இருந்த போது  ஒரு காட்டை அடைந்தனர். சூரியனுடைய கதிர்கள் கூட நுழையமுடியாத அடர்ந்த காடு அது.   அந்தி சாயும் நேரத்தில் அடைந்த இருவரும்  இப்படி கொடிய மிருகங்கள் வாழும் காட்டில் வந்து சிக்கிக்கொண்டோமோ என்ன ஆகுமோ என்று வியந்து நின்றனர். 
.
இவ்வாறு அடர்ந்த காட்டில் சிக்கிக்கொண்ட தம்பதியருக்கு முன் ஒரு மாடு மேய்க்கும்  பாலகன் வந்து அவர்கள் இரவில் தங்கிக்கொள்ள ஒரு பாழடைந்த மண்டபத்தை காண்பித்து விட்டு சென்றான்.  தம்பதியர் இருவரும் அந்த பாழடைந்த மண்டபத்தில் உறங்கினர், இரவில் இருவர் கனவிலும் அந்த கோபாலன் தோன்றி உங்கள் தலைப்பக்கம் உள்ள என்னுடைய விக்கிரகத்தை எடுத்து பூஜித்தால் உனது குறை தீரும் என்றருளி மறைந்தார்.


மறு நாள் காலை அருகில் இருந்த கிராமத்தாரின் உதவியுடன் அங்கு ஒரு கோவிலை உருவாக்கினார். பின்னர் அரங்கன் ஆணைப்படி திருவல்லிக்கேணி சென்று பார்த்தசாரதிப் பெருமாளையும், திருமலையில் திருவேங்கடமுடையானையும் சேவித்து வந்து தன் கனவில் வந்து அருளிய ஆதி கேசவனுக்கு தன் கைங்கரியத்தைத் தொடர்ந்தார். அவனருளால் அவர்கள் குறை தீர்ந்த்தது.  அவரின் சந்ததியினர் இன்றும் கேசவனுக்கு தொண்டு செய்து வருகின்றனர். இது தான் ஆதி கேசவன் இங்கு கோவில் கொண்ட லீலை ஆகும்.



ஸ்ரீபாஷ்யக்காரர் என்றும் உடையவர் என்றும் இராமனுஜர் என்றும் வைணவ சித்தாந்த ஸ்தாபகர் என்றும் போற்றி ஆராதிக்கப்படும் எம்பெருமானார் திருவல்லிக்கேணி  பார்த்தசாரதிப்பெருமாளை  மங்களாசாசனம் செய்ய எழுந்தருளும் போது ஓர் இரவு தங்க நேரிட்டது அப்போது கேசவனின் நியமனப்பட்டி இத்திருக்கோவிலில் தங்கி இப்பெருமானை ஆராதித்து சென்றார். எனவே இத்திருக்கோயில் உடையவர் சந்நிதி என்னும் பெயர் பெற்றது. இன்று பாஷ்யக்கார சுவாமி சென்னை ஆதி கேசவப்பெருமாள்  என்றழைக்கப்படுகின்றார்.


சரித்திரம் தொடங்கிய காலத்தில் இருந்தே போர்களும் பூசல்களும் கலவரங்களும், எல்லைத் தகராறும், இனத்தகராறும் மானிட வர்க்கத்தை அலைக்கழித்துள்ளது. நமது பாரத தேசத்தை முஸ்லிம்கள் கைப்பற்ற முயன்ற போது கலவரங்கள் நடைபெற்றன. கொள்ளை கொலைகள் எங்கும் அரங்கேறிக்கொண்டிருந்தன. ஆண்டவன் சந்ந்திக்குள்ளேயே புகுந்து ஆபரணங்கள், விலை மிகுந்து பூஜைப் பொருட்கள் சூறையாடப்பட்டன. ஏன் ஆண்டவனையே களவாட ஆரம்பித்தனர். இப்படிப்பட்ட ஒரு கால கட்டத்தில் , கோயில்களை பாதுகாக்க முடியாத நிலை ஏற்பட்டபோது, பொன்னும், பொருளும் போனாலும் பரவாயில்லை என்று லோக  சுபிட்சத்திற்காக உற்சவ மூர்த்திகளையாவது காப்பாற்ற வேண்டும் என்ற சீரிய நோக்கத்துடன் திருவல்லிக்கேணி முதலிய திவ்ய தேச எம்பெருமான்கள், யாருக்கும் புலப்படாத, எளிதாக அடைய முடியாதபடி மரங்கொடிகளால் மறைக்கப்பெற்ற  மாபிலம் என்னும் இந்த க்ஷேத்திர சன்னதியில் எழுந்தருளப்பண்ணி வைத்து ஒராண்டு காலம் பாதுகாத்து வந்தார்கள். இவ்வாறு அனைத்து மூர்த்திகளையும் அடைக்கலம் தந்து காத்ததினால் இவர் ஆதி கேசவன் ஆனார். இவர் இத்திருக்கோவிலில் செங்கமலவல்லித்தாயாருடன் சேவை சாதித்து அருள் புரிகின்றார்.  எனவே பார்த்தசாரதிப்பெருமாள் ஈக்காட்டுத்தாங்கல் எழுந்தருளும் போது ஆதி கேசவன் சந்ந்திக்கு எழுந்தருளுகின்றார்.



ஆயிரம்ஆண்டுகள்பழமையானஇந்தஆலயத்தில்மாசிமாதம்திருவோணநாளைதீர்த்தநாளாகக்கொண்டுபெருவிழாநடைபெறுகின்றது.அப்பெருவிழாவின்மூன்றாம்நாள்காலைஆதிகேசவர்கருடசேவைதந்தருளுகின்றார்.மேலும்வைகுண்டஏகாதசியன்றும்கருடசேவையில்பெருமாளைசேவிக்கலாம்.இந்தவருடபெருவிழாவின்கருடசேவைக்காட்சிகள்இப்பதிவில்இடம்பெறுகின்றன.


“கேசவ!த்ருதசவிதரூப!” என்று ஜெயதேவர் தமது கீதகோவிந்தத்தில் பாடியபடி பத்துவித அவதாரனாகி, தானே தனக்காக, தனக்குள்ளே தானாகி, தானே எல்லாமாகி நின்ற கேசவனைத் தொழுவாருக்கு துயரமில்லை.

கேசவனேக்லேசநாசன்! 

இவர் சந்நிதி வந்து வேண்டுபவர்களின் குறைகளை எல்லாம் தீர்த்து வைக்கின்றார் இந்த ஆதிகேசவர். எனவேதான் சூடிக்கொடுத்த சுடர்க்கொடியாளும் தனது திருப்பாவையில்

வங்கக்கடல்கடைந்தமாதவனைக்கேசவனை
திங்கள்திருமுகத்துசேயிழையார்சென்றிறைஞ்சி
அங்கப்பறைகொண்டவாற்றைஅணிபுதுவைப்
பைங்கமலத்தண்தெரியல்பட்டர்பிரான்கோதைசொன்ன
சங்கத்தமிழ்மாலைமுப்பதும்தப்பாமே
இங்கிப்பரிசுரைப்பார்ஈரிரெண்டுமால்வரைத்தோல்
செங்கண்திருமுகத்துச்செல்வத்திருமாலால்
எங்கும்திருவருள்பெற்றுஇன்புருவரெம்பாவாய்

என்றுமங்களாசாசனம்செய்துள்ளாள்.




பெருவிழாவின் மூன்றாம் நாள் இரவு ஆதிகேசவப்பெருமாள் அனுமந்த வாகனத்தில் சேவை சாதித்தருளுகின்றார் அக்காட்சிகளையும் காண்கின்றீர்கள். 



நாமும்அடைக்கலம்தந்தஆதிகேசவனிடம்அடைக்கலம்அடைவோமாக

Sunday, September 6, 2009

ஸ்ரீ சத்ய நாராயணப் பெருமாள் கருட சேவை-1

ஸ்ரீயப்பதியாய், அவாப்த ஸமஸ்த காமனாய், ஸகல கல்யாண குணாத்மனாய், ஸ்ரீ வைகுண்ட நிகேதானாய் ஸ்ரீ பூமி, நீளா தேவி ஸமேத ஸ்ரீ நாராயணன், உலகோர் உய்யுமாறு ஸ்ரீ மஹா லக்ஷ்மி ஸமேத ஸ்ரீ சத்ய நாராயண பெருமான் எழுந்தருளி அருள் பாலிக்கும் தலம்தான் மாபில ஷேத்திரம் என்று அழைக்கப்படும் சென்னை மேற்கு மாம்பல சத்யநராயண திருக்கோவில் ஆகும். கொண்டு பக்தர்களை காக்கும் சத்ய நாராயணப் பெருமாள் ஆலயம் ஆகும்.

ஆந்திர மாநிலம் அன்னவரத்தில் மலைக் கோவில் கொண்டு சேவை சாதிக்கும் சத்ய நாராயணப் பெருமாளை இங்கு நாம் எல்லாரும் சேவித்து, அருள் பெருமாறு 1956 ஆண்டு பிரதிஷ்டை செய்தவர் P.V. சேஷாத்திரி பட்டர் ஆவார். பின் 1976 , 1998. 2008 ஆண்டுகளில் இத்திருக்கோவிலுக்கு சம்பரோஷணம் நடை பெற்றது. சமீபத்திலே நிறுவப்பட்ட ஆலயம் என்றாலும் தன் கருணையினாலும் மகிமையினாலும் அனேக பக்தர்களை தன்னிடம் ஈர்த்து அருள் பாலிக்கின்றார் ஸ்ரீசத்ய நாராயணர். ஒவ்வொரு நாளும் அதிகமாகிக் கொண்டு செல்லும் பதர்களின் கூட்டமே இந்த பெருமாளின் சக்திக்கு ஒரு சான்று.

மூலவர் ஸ்ரீ சத்ய நாராயணப் பெருமாள், வடக்கு நோக்கிய திருமுக மண்டலம், பிரசன்ன வதனத்துடனும், கமல நயனங்களுடன், பவழம் போல சிவந்த இதழில் குமிண் சிரிப்புடன், நிர்மலமான பட்டுப் பீதாம்பரங்களுடன், கிரீட, ஹார, கேயூர கடகாதி திவ்ய ஆபரணங்களுடன், சங்கும், சக்கரமும், கதையும் தாங்கி அபய ஹஸ்தத்துடன் நின்ற கோலத்தில் சேவை சாதிக்கின்றனர் . முத்தங்கியில் பெருமாளையும், தாயாரையும் தரிசிக்க ஆயிரம் கண் கூடப் போதாது அவ்வளவு சௌந்தர்யம் எம்பெருமானுக்கும் தாயாருக்கும். கல்யாணக் கோலமாக பெருமாளுக்கு வலப்பக்கத்தில் பத்மாசனத்தில் அமர்ந்த கோலத்தில் மேல் கரமிரண்டிலும் பத்ம மலரை ஏந்தி கீழ் கரங்களில் அபய, வரத ஹஸ்தங்களுடன் நமக்கு பதினாறு செல்வங்க€ளையும் வழங்கும் ஐஸ்வர்ய லக்ஷ்மியாய் மஹா லக்ஷ்மித் தாயார் எழுந்தருளி அருள் பாலிக்கின்றாள்.

சக்ரவர்த்தி திருமகன் கையிலே வில்லேந்தி கோதண்ட ராமராக, அன்னை ஜானகி, மற்றும் இளைய பெருமாளுடன் தனி சன்னதியிலும் , சிறிய திருவடியாம் மாருதி வலக்கையிலே சஞ்žவி மலையையும் இடக்கையில் சௌகந்தி மலரையும் ஏந்திய வண்ணம் சஞ்சிவி ஆஞ்சனேயராகவும் சேவை சாதிக்கின்றனர். லக்ஷ்மி நரசிம்மருக்கும், சூடிக் கொடுத்த சுடர்க் கொடியாள் ஆண்டாள் நாச்சியாருக்கும் தனி சன்னதிகள் உள்ளன. சகல கலைகளையும் நமக்கு வழங்க வல்ல சரஸ்வதி தாயாருக்கே குருவான லக்ஷ்மி ஹயகிரீவருக்கும் ஒரு சன்னதி இத்தலத்திலே உள்ளது. வியாழக்கிழமையன்று ஏல மாலை சார்த்தி இவரை வழிபட்டால் மாணவர்களுக்கு நன்றாகக் கல்வி விருத்தியடையும் என்பது ஐதீகம். முன் பக்கம் அறு கோண சக்கரத்தில் பதினாறு கரங்களுடன் சக்கரத்தழ்வாரும், பின் பக்கம் முக்கோண சக்கரத்தில் யோக நரசிம்மரும் விள்ங்கும் சக்கரத்தாழ்வாருக்கும் தனி சன்னதி உள்ளது. வடகலை சம்பிரதாய இத்திருக்கோவிலில், வைகானச ஆகமப்படி பூஜைகள் நடைபெறுகின்றன.

வருடம் முழுவதும் கோலாகலமாக பல்வேறு உற்சவங்கள் நடைபெறுகின்றது இத்திருக்கோவிலில். தமிழ் வருடப்பிறப்பன்று புஷ்பாங்கியில் பெருமாளும் தாயாரும் சேவை சாதிக்கின்றனர், மற்றும் இரவு புஷ்பப்பல்லக்கிலே ஊர்வலம் வருகின்றார். ஆனி மாதம் அவதார உற்சவத்தையொட்டி 10 நாள் பிரம்மோற்சவம் சிறப்பாக நடைபெறுகின்றது. பத்து நாட்களும் காலையும் மாலையும் பெருமாள் பல் வேறு வாகனங்களில் எழுந்தருளி சேவை சாதிப்பதுடன், பத்தி உலாத்தலும், ஊஞ்சல் சேவையும் தந்தருளுகின்றார். திவ்ய தேசங்களிலே உள்ளது போல் பெருமாள் சத்ய கோடி விமானத்ததில் 10 நாள் இரவு சேவை சாதிக்கின்றார். பிரம்மோற்சவத்தின் ஐந்தாம் நாள் இரவு கருட சேவை கண்டருளுகின்றார் சத்ய நாராயணப் பெருமாள் அந்த கருட சேவையின் சில காட்சிகளை இப்பதிவில் காணுகின்றீர்கள். இக்கருடன் பழைய கருடன் 2008ம் ஆண்டு நடைபெற்ற சம்ப்ரோக்ஷணத்தின் போது அன்பர்கள் புது கருடன் சமர்ப்பணம் செய்தனர் அக்கருடசேவையை அடுத்த பதிவில் காணலாம்.
பையுடை நாகப்பகையானில் எழிலாக பவனி வரும்
சத்ய நாராயணப் பெருமாள்

திருமலையில் எவ்வாறி மலையப்ப சுவாமி மூலவரின் லக்ஷ்மி ஹாரம் அணிந்து மூலவராக சேவை சாதிக்கின்றாரோ, அது போலவே சத்ய நாராயணப் பெருமாளும் லக்ஷ்மி ஹாரம் அணிந்து செங்கோல் தாங்கி ஓடும் புள்ளேறி நாம் எல்லோரும் உய்ய பவனி வரும் அழகை எப்படி வர்ணிப்பது என்றே புரியவில்லை தாங்களே கண்டு மகிழுங்கள்.


விநதை சிறுவன் மேல் லோக சரண்யன்


பதகமுதலைவாய்ப் பட்டகளிறு
கதறி கை கூப்பி என் கண்ணா! கண்ணா! வென்ன
உதவ புள்ளூர்ந்து அங்குயர் தீர்த்த
எம் முகில் வண்ணன், குன்றெடுத்த குடமாடீ

 அங்கமலக்கண்ணன் கருடனில் ஆரோகணித்து எழிலாக
 மாட வீதி வலம் வரும் அழகு.

 பன்றியுமாமையும் மீனமுமாகிய பாற்கடல் வண்ணர் ஸத்ய நாராயணர், ஸத்ய தேவர், சத்யர், காம தேவர
 எரிசினப் பறவையேறி ஊர்ந்து வரும் அழகு

அஞ்சுடராழி கையகத்தேந்தும் அஞ்சனவண்ணரின் பின்னழகு
-->
ஆடியிலே ஆடிப்பூர பத்து நாள் உற்சவத்தின் போது மாலை பல் வேறு அலங்காரத்தில் ஆண்டாள் நாச்சியாருடன் சேவை சாதிக்கின்றார் பெருமாள். புரட்டாசி சனிக்கிழமைகளில் சிறப்பு அலங்காரத்தில் மூலவரும் உற்சவரும் சேவை சாதிக்கின்றனர். நவராத்திரியின் போது பத்து நாட்களும் பெருமாளும் தசாவதார மூர்த்தியாக, தாயாருடன் கொலுக் காட்சி தருகின்றார், இது இத்தலத்தின் ஒரு சிறப்பு. விஜய தசமியன்று குதிரை வாகனத்தில் எழுந்தருளி வன்னி மரத்தில் அம்பு போடுகின்றார் பெருமாள். ஐப்பசியில் பவித்ரோத்ஸவம் நடைபெறுகின்றது. மார்கழியில் 21 நாள் அத்யயன உற்சவத்தில் பல் வேறு கோலங்களில் சேவை சாதிக்கும் பெருமாள், வைகுண்ட ஏகாதசியன்று பெருமாளும் தாயாரும் புஷ்பாங்கியிலே சேவைசாதிக்கின்றனர். .இராப்பத்து உற்சவத்தின் போது பரமபத வாசல் வழியாக வெளிவந்து பல் வேறு நடையழகை நமக்கு காண்பிக்கிறார்.. நம்மாழ்வார் மோட்சமும் சிறப்பாக நடைபெறுகின்றது. போகியன்று ஆண்டாள் திருக்கல்யாணம் நடைபெறுகின்றது. மற்றும் ஸ்ரீ இராம நவமி 10 நாள் உற்சவத்தின் போது இராமாயணத்தின் பல் வேறு நிகழ்ச்சிகளை உணர்த்தும் வகையில் ஸ்ரீ ராமருக்கு அலங்காரம் நடைபெறுகின்றது. மேலும் ஸ்ரீ லக்ஷ்மி நரசிம்ம ஜயந்தி 10 நாள் உற்சவமும், ஸ்ரீ ஜயந்தி, அனுமந் ஜயந்தி, தீபாவளிப் புறப்பாடு, கனுப் பொங்கல், கார்த்திகை தீபம், பங்குனி உத்திர திருக்கல்யாணம் முதலிய பண்டிகைகள் ஒரு நாள் உற்சவமாக சிறப்பாக கொண்டாடப்படுகின்றன. இந்த உற்சவங்களின் ஸ்ரீ சத்ய நாராயணர், உபய நாச்சியார்கள், தாயார் ஆகியோர்களின் திவ்ய அழகைக் கண்டு அனுபவிக்க ஆயிரம் கண் தேவை. இவ்வாறு ஆண்டுக்கு ஏறக்குறைய 200 நாட்கள் உற்சவமாகவே திகழ்கின்றன இத்திருகோவிலில்.
இவ்வாலயத்திற்கே உரித்தான பிரத்யேக பூஜை பௌர்ணமி தினத்தன்று நடை பெறும் சத்ய நாராயண பூஜை ஆகும். இப்பூஜையின் மகத்துவத்தைப் பற்றி அடுத்த பதிவில் புது கருடனில் பெருமாள் பவனி வரும் காட்சிகளுடன் கண்டு அனுபவிக்கலாம் வந்து சேவியுங்கள் அன்பர்களே.