Thursday, September 3, 2015

கருட யாத்திரை -4

எண்கண்  ஆதிநாராயணப் பெருமாள்  நித்ய கருட சேவை




எண்கண் என்றவுடன் கண் இழந்த சிற்பிக்கு ஒளி கொடுத்த  சுப்பிரமணியத்தலம் என்பதை பலர் அறிவார்கள். ஆனால் அந்த ஆலயத்தின் அருகிலேயே பெருமாள் கருடாரூடராக  சேவை சாதிக்கின்றார் என்பது ஒரு சிலருக்கே தெரியும். அடியோங்கள் இந்த கருட யாத்திரையின் போது நித்ய கருட சேவை தந்தருளும் ஆதிநாராயணப்பெருமாளை சேவித்தோம்.   தாங்களும் அந்த அனுபவத்தை பகிர்ந்து கொள்ள அடியேனுடன் வாருங்கள். 


இதோ இத்தலத்தின் தலபுராணம். முன்னொரு சமயம் பிருகு முனிவர் சமீவனம் (வன்னி மரக்காடு) என்றழைக்கப்படும் இத்தலத்தில் ஸ்ரீமந்நாராயணைக் குறித்து தவம் செய்து கொண்டிருந்தார். அப்போது சோழ மன்னன் ஒருவன் தன் படைகளுடன்  பெருங்குரல் எழுப்பியபடி சிங்க வேட்டையாட வந்தான். இந்த சப்தத்தினால் முனிவருடைய தவம் கலைந்தது. கோபம் கொண்ட முனிவர்வனத்தில் சிங்க வேட்டையாட வந்து தவத்தைக் கலைத்ததனால்   அரசனை சிங்க முகத்துடன் அலையும் படி சபித்தார். மனம் வருந்திய மன்னன் தனக்கு சாப விமோசனம் தரும்படி வேண்ட, மனம் இரங்கிய முனிவர் விருத்தகாவிரி எனப்படும் வெற்றாற்றில் நீராடி, இத்தல பெருமாளை வழிபட்டு வா, ஒரு தைப்பூச நன்னாளில் கருட வாகனத்தில் மாலும்மரகத மயில் வாகனத்தில் மால் மருகன் முருகனும் எழுந்தருளி ஒன்றாக  சேவை சாதிப்பர்  அப்போது உனக்கு சாப விமோசனம் ஆகும் என்று வரமளித்தார்.




அரசனும் வெற்றாற்றில் நீராடி தினமும் பெருமாளை வழிபட்டு வர ஒரு தைப்பூச நாளன்று திருமால் கருடவாகனத்திலும், முருகர் பச்சை மயில் வாகனத்திலும் வன்னி மரத்தடியில் ஏக காலத்தில்  சேவை சாதித்தனர். மன்னனின் சாபமும் நீங்கியது அவன் தனது சுய உருவை அடைந்தான். முனிவரும் இருவரையும் தரிசனம் பெற்று பெரும் பேறு பெற்றார். பின்னர் அரசன் பல் வேறு வாகனங்களில் பெருமாளை ஏழப் பண்ணி திருவிழா நடத்தினான்.



அன்று அரசனுக்கு கருடன் மேல் சேவை சாதித்த கோலத்தில் இன்றும் மூலஸ்தானத்தில் ஆதி நாராயணப் பெருமாள் நித்ய கருட சேவாரூடராய் சேவை சாதிக்கின்றார்கருடாழ்வாரும் பெருமாளும் ஒரே கல்லில் செதுக்கப்பட்டிருப்பது இம்மூர்த்தியின் சிறப்பாகும்.  உற்சவர்  பிரயோக சக்கரத்துடன் ஸ்ரீதேவி  பூதேவி சமேத நாராயணப் பெருமாளாக சேவை சாதிக்கின்றார்.  மூலவர் கருடவாகனத்தில் சேவை சாதிப்பதால் பௌர்ணமியன்று வழிபடுவோர்களுக்கு நாக தோஷம், பக்ஷி தோஷம் நீங்கி நல்வாழ்வு பெறுவர். மேலும்  மிருகசிரீடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு பரிகாரத் தலமாக இத்தலம் விளங்குகின்றது. படிப்புக்கேற்ற வேலை கிடைக்காதவர்கள், நல்ல சம்பளத்துடன் கூடிய உயர் பதவி வேண்டுபவர்கள் புதன் சனிக்கிழமைகளில் பெருமாளுக்கு திருமஞ்சனம் செய்து வழிபட்டால் சிறந்த பலன் கிடைக்கும்தைப்பூச பிரம்மோற்சவத்தின் போது கருட சேவை சிறப்பாக நடைபெறுகின்றது. கருட வாகனத்தில் பெருமாளும், மயில் வாகனத்தில் ஷண்முகரும் ஒரே சமயத்தில்  எழுந்தருளி மன்னனுக்கு சாப விமோசனம் அளிக்கும் உற்சவம் சிறப்பாக நடைபெறுகின்றது.



 இராஜ கோபுரத்துடன் அமைந்துல்லது ஆலயம். மூலவர் கருடாரூடராக சேவை சாதிப்பதால் பௌர்ணமியன்று சேவிப்பதால் நாக தோஷம், பக்ஷி தோஷம் நீங்கும். இந்த யாத்திரையின் முதல் நாள் நிறைவாக திருக்கண்ண மங்கையில் பக்ஷி ராஜனை சேவித்தோம் அந்த அனுபவத்தை அடுத்த பதிவில் காணலாம். 

2 comments:

Nagendra Bharathi said...

அருமை

S.Muruganandam said...

மிக்க நன்றி பாரதி ஐயா.