Monday, September 14, 2015

கருட யாத்திரை - 7

திருநாகை அமர்ந்த கோல கருடன்



நாகை அழகியார்




உற்சவர்- சௌந்தர்யராஜப் பெருமாள் 


கருடனுக்கு பகைவனே என்றாலும் நாகங்கள் கூட எம்பெருமானை சரணடைந்து பெரிய திருவடியின் கோபத்தில் இருந்து தப்பியுள்ளன என்று ஆழ்வார்கள் பாடியுள்ளனர்

அடுத்த கடும் பகைஏற் காற்றேன் என்றோடி
படுத்த பெரும் பாழி ஆழ்ந்தவிடத்தரவை
வல்லாளன் கைகொடுத்த மாமேனி மாயவனுக்
அல்லாது மாவரோ ஆள்?  (மு.தி 80)

பொருள்: பாதாளத்தில் வாழ்ந்த வாசுகி என்னும் நாகராஜனின் மகன்  கமுகன் என்றொரு பாம்பினை கருடாழ்வார் திருவமுது செய்ய வேண்டுமென்று நினைத்தபோது, அதையறிந்த கமுகன் எம்பெருமானுடைய திருப்பள்ளிக்கட்டிலாகிய ஆதிசேடனை  கட்டிக்கொண்டு அவரிடம் சரணடைந்தது. பெரிய திருவடி கமுகன் நிலையைக் கண்டு இழிவாகப் பேச எம்பெருமான் திருவாழியை அக்கருட பகவானிடம் கொடுத்து அதன் பலத்தை சோதித்தார். தோல்வியடைந்த பெரிய திருவடி எம்பிரானிடமே சரணடைந்து தன்னை பொறுத்தருளுமாறு வேண்டினான். எம்பெருமானும் பெரிய திருவடியின் கையிலேயே அப்பாம்பினைக் கொடுத்து இரட்சித்தார். அந்த சிறந்த திருமேனியை உடைய எம்பெருமானுக்குத் தவிர ( மற்ற தெய்வங்களுக்கு) அடிமை ஆவார்களோ? என்று வினவுகிறார் பொய்கையாழ்வார் இதையே திருமங்கையாழ்வார்

நஞ்சுசேர்வதோர் வெஞ்சினவரவம் வெருவ வந்து நின் சரணெனச்சரணா
நெஞ்சில் கொண்டு நின்னஞ்சிறைப் பறவைக்கு அடைக்கலம் கொடுத்து அருள் செய்ததறிந்து
வெஞ்சொலாளர்கள் நமன்தமர்கடியர் கொடிய செய்வனவுள அதற்கு அடியேன்  
அஞ்சி வந்து நின்னடியிணையடைந்தேன் அணிபொழில் திருவரங்கத்தம்மானே!.  ( பெ.தி 5-8-4)

பொருள்: திருவரங்கத்து அம்மானே! நஞ்சை உமிழ்வதும், கொடிய கோபத்தை உடையவனுமான கமுகன் என்னும் ஒரு பாம்பானது, (தன்னைக் கொல்ல இருக்கின்ற கருடனுக்கு) பயந்து தங்களிடம் வந்துதங்களுக்கு அடைக்கலப்பொருளாகிறேன் நான்என்று சொல்லி சரணடைய, தாங்கள் அதற்குப் பாதுகாப்பவனாகி தங்கள் திருவுள்ளத்தில் கொண்டு தங்கள் அடியவனான கருடனிடம் அப்பாம்பை அடைக்கலப்பொருளாக ஒப்புவித்து பாதுகாத்து அருளிய திறத்தை அடியேன் தெரிந்து கொண்டு கொடிய சொற்களைப் பேசும் யமதூதர்கள் செய்யும் கொடுந்தொழில்கள் பலவற்றிற்கு அஞ்சி வந்து நன் திருவடிகளை சரணமாக அடைந்தேன்.

என்று திருவரங்கத்தாமானிடம் சரணம் அடைகின்றார்அந்த கமுகன் என்னும் நாகம் வழிபட்ட பெருமாள்தான் நாகபட்டினம் சௌந்தரராஜப்பெருமாள்.
பிரம்மாண்ட புராணத்தின் உத்தர பாகத்தில் 10 அத்தியாங்களில்  இந்த சௌந்தாரண்யத்தின் மகிமை கூறப்பட்டுள்ளதுகிருத யுகத்தில் ஆதி சேஷன் இந்த சௌந்தாரண்யத்தில் தவம் செய்து எப்போதும் பெருமாளுக்கு சயனமாக இருக்க வரம் பெற்றான். ஆதிசேஷன் வழிபட்ட காரணத்தாலேயே இவ்வூர் நாகன்பட்டினம் என்றாகி, பின்னர் நாகப்பட்டினம் என மாறியது..  

தாயார் கருடி வாகனத்திலும் பெருமாள் கருட வாகனத்திலும் 
 சேவை சாதிக்கும் அழகு
அதே யுகத்தில் உத்தானபாத மகாராஜாவின் குமாரன் துருவன் தன் தந்தை மாற்றாள் மகனை ஏற்று தன்னை உதாசீனப்படுத்துவதை கண்டு மனம் வெறுத்து நாரதர் மூலம் இத்தலத்தின் பெருமையை அறிந்து ஸ்ரீமந்நாராயணனைக் குறித்து கடும் தவம் செய்தான். அவனது தவத்தை கலைக்க தேவர்கள் முயன்றும் முடியவில்லை. அவன் தவத்தால் மகிழ்ந்த பெருமாள் கருடன் மேல் அமர்ந்து பேரழகு பொருந்தியவராக சேவை சாதித்தார். உலகை ஆளவேண்டும் என்ற வரம் செய்த துருவன் பெருமாளின் சௌந்தர்யத்தில் மயங்கி தான் கேட்க நினைத்தை மறந்து அதே கோலத்தில் பெருமாள் இங்கே  சேவை சாதிக்க வேண்டும் என்று வேண்டினான். எனவே பெருமாளும் இங்கே நின்ற கோலத்தில் சௌந்தர்யராஜனாக இன்றும் சேவை சாதிக்கின்றார்.


தாயார் கருடி வாகன சேவை 
ஆனி மாதம் தாயார் பிரம்மோற்சவத்தின் போது நான்காம் திருநாள் இரவு  தாயார் கருட வாகனத்திலும் பெருமாள் கருட வாகனத்திலும் ஒரு சேர சேவை சாதிக்கின்றனர். 
படங்களுக்கு நன்றி  www.anudinam. org

திரேதாயுகத்தில் பூமாதேவியும், துவாபரயுகத்தில் மார்க்கண்டேயரும் தவமிருந்த திருத்தலம். கலியுகத்தில் சாலிசுக சோழன் என்னும் மன்னன் இப்பெருமாளின் அருளால் நாககன்னிகையை கண்டு காதல் கொண்டான். அவள் ஒரு பிலத்துவாரத்தில் மறைந்ததைக் கண்டு பெருமாளிடம் தங்கள் இருவரையும் இனைத்து வைக்குமாறு  வேண்ட பெருமாளும் நாகராஜனிடம் தனது கன்னிகையை சாலிசுக மன்னனுக்கு மணம் முடித்து கொடுக்குமாறு பணிக்க இருவர் திருமணமும் இனிதாக நிறைவேறியது. சாலிசுக மன்னன்     தற்போதைய ஆலயத்தை அமைத்தான் பிரம்மோற்சவமும் நடத்தினான்
இந்த சௌந்திரராஜப் பெருமாளின் சௌந்தர்யத்தில் மயங்கிய திருமங்கைமன்னன்,  9 பாசுரங்களைப் பாடிவிட்டு பத்தாவது பாடலில்தான் இத்தலத்தின் பெயரைக் குறிப்பிடுகின்றார். பொன்னிற  கருடன் மேல் கரிய புயல் போல் பெருமாள் ஆரோகணித்து வரும் அழகை,    தன்னை பரகால நாயகியாக பாவித்துக்கொண்டு  அச்சோ, ஒருவர் அழகியவா! என்று  இவ்வாறு மங்களாசாசனம் செய்துள்ளார்.
மஞ்சு உயர் மா மதி தீண்ட நீண்ட மாலிருஞ் சோலை மணாளர் வந்து, என்
நெஞ்சுள்ளும் கண்ணுள்ளும் நின்று, நீங்கார் நீர் மலையார் கொல்? நினைக்கமாட்டேன்
மஞ்சு உயர் பொன் மலை மேல் எழுந்த மா முகில் போன்று உளர் வந்து காணீர்!
அஞ்சிறைப் புள்ளும் ஒன்று ஏறி வந்தார் அச்சோ, ஒருவர் அழகியவா! (பெ.தி 9-2-8)
பொருள்: மேக மண்டலத்தளவும் உயர்ந்ததாய் சந்திரன் படும்படியாக உயர்ந்திருப்பதான திருமாலிருஞ்சோலையில் எழுந்தருளியிருக்கின்ற மணவாளர் அவ்விடத்தை விட்டு வந்து என் நெஞ்சினுள்ளும் கண்களினுள்ளும் நிலை நின்று நீங்க மாட்டாமல் இருக்கின்றார். திருநீர்மலை எம்பெருமானோ இவர்? இன்னாரென்று  தெரிந்து உணரமாட்டேன். “அழகிய சிறகுகளை உடைய பெரிய திருவடியின் மீது ஏறி வந்த இவர் மேக மண்டலத்தளவும் ஓங்கிய ஒரு பொன் மலை மேல் எழுந்த காளமேகம் போன்று இருக்கிறார், வந்து வணங்குங்கள். அச்சோ! ஒருவர் அழகை என்னென்பேன்”. என்று கருடன் மேல் சௌந்தரராஜப்பெருமாள் ஆரோகணித்து வரும் அழகை கண்டு அதிசயிக்கின்றாள் பரகால நாயகி.
மூலவர்: நாகை அழகியார் என்று திருமங்கையாழ்வார் மங்களாசாசனம் செய்த  நீலமேகப்பெருமாள், நின்ற திருக்கோலம்  கிழக்கு நோக்கிய திருமுக மண்டலம். மேலும் அமர்ந்த கோலத்திலும், கிடந்த கோலத்திலும் சேவை சாதிக்கின்றார்.
உற்சவர்: சௌந்தர்யராஜப்பெருமாள்
தாயார்: சௌந்தர்யவல்லித்தாயார்.
உற்சவர்: கஜலக்ஷ்மித் தாயார்
தீர்த்தம்: சார புஷ்கரிணி
விமானம்: சௌந்தர்ய விமானம்
தலமரம்: மா மரம்
ஆகமம்: பாஞ்சராத்ரம்
பிரத்யக்ஷம்: ஆதி சேஷன் (நாக ராஜன்) துருவன், திருமங்கையாழ்வார், சாலிசுக மன்னன்

நின்ற, இருந்த, கிடந்த என்ற மூன்று திருக்கோலச் சேவையும் இத்தலத்தில் உண்டு. மூலவர் நின்ற திருக்கோலம். “வீற்றிருந்த பெருமாள்” என்றுஅமர்ந்த திருக்கோலமும், பள்ளி கொண்ட திருக்கோலத்தில் அரங்கநாதனும்இங்கு காட்சி தருகின்றனர். நாகராஜனுக்கு மூன்று திருக்கோலங்களிலும் எம்பெருமான் சேவை சாதித்ததாக ஐதீகம் . 


கண்டன், சுகண்டன் என்ற இரண்டு அந்தண சகோதரர்கள் எண்ணற்ற கொடுஞ்செயல்கள் செய்து இறுதியில் ஒரு நாள் இங்குள்ள ஆதி சேஷன் உருவாக்கிய  சார புஷ்கரிணியில்   தமது உடலை நனைத்து வைகுந்தம் பெற்றனர். இவ்விருவரின் சிற்பங்களும் அரங்கநாதரின் சன்னதியில்   கைகூப்பிய நிலையில் வைக்கப்பட்டுள்ளன.
70 அடி ஏழு நிலை இராஜகோபுரத்துடனும், மூன்று பிரகாரங்களுடனும்உயர்ந்த மதில் சுவர்களுடனும்    பிரம்மாண்டமாக அமைந்துள்ளது ஆலயம். பெருமாள், தாயார் மற்றும் ஆண்டாள் ஆகிய மூவருக்கும் தனித்தனியாக பிரம்மோற்சவம் நடைபெறுவதால் மூன்று கொடி மரங்கள் அமைந்துள்ளன இத்தலத்தில். இராஜகோபுரத்தைக் கடந்தவுடன் நான்கு கால் மண்டபம், அடுத்து கொடிமரம், கொடி மரத்தை அடுத்து கருட மண்டபம் அதன் மையத்தில்  கருடன் சன்னதி. சிறகுகளை விரித்த நிலையில் யோக கோலத்தில் அஞ்சலி ஹஸ்தத்துடன் அமர்ந்த கோலத்தில்  எழிலாக  சேவை சாதிக்கின்றார் கருடாழ்வார். இவ்வாலயத்தில் உள்ள அனைத்து தெய்வ மூர்த்தங்களும் சௌந்தர்யமாக அமைந்துள்ளது போல கருடாழ்வாரும் சௌந்தர்யமாக உள்ளார். அடியேன் இவரை தரிசித்த போது தங்க கவசத்தில் இவரின் அழகு பல மடங்கு அதிகமாக தெரிந்தது.




ஆடிப்பூர  உற்சவத்தின் போது 
சூடிக் கொடுத்த சுடர்க்கொடியாள் 
கருடி வாகன சேவை 

ஆழ்வார்கள் சன்னதி மற்றும் வசந்த மண்டபம் வலப்பக்கம் உள்ளன அதன் அருகில் சௌந்தர்ய புஷ்கரணி. ஆதி சேஷன் உருவாக்கிய  சார புஷ்கரணி ஆலயத்திற்கு வடக்கில் உள்ளது. சௌந்தர்ய புஷ்கரணியின் தெற்கில் வீற்றிருந்த கோலத்தில் அருள் பாலிக்கும் வைகுண்ட நாதர் சன்னதி அமைந்துள்ளது

பெருமாள் கருட வாகன சேவை 
மூலஸ்தானத்திற்குள் நுழையும் போது  துவாரபாலகர்களின் கண்கள் நவரத்தின கற்கள் என்பதால் மின்னுகின்றன. இவர்களுக்கும் தங்க கவசம் சார்த்தியிருந்தனர். ஜக்குலு நாயக்கர் மண்டபத்தில் நின்று நாம் பெருமாளை  தரிசனம் செய்கின்றோம். இவர் டச்சுக்காரர்களின் அதிகாரியாக இருந்தார் இவ்வாலயத்தில் திருப்பணிகள் செய்துள்ளார். கலங்கரை விளக்கம் கட்டவதற்கான பணத்தைக் கொண்டு இராஜகோபுரத்தை இவர் கட்டினார். இதன் உச்சியில் ஒரு காலத்தில் விளக்கு ஏற்றப்பட்டது அது இப்பகுதியில் வந்த மரக்கலங்களுக்கு வழிகாட்டியாக இருந்தள்ளது. இவர் மற்றும் இவரது துணைவியாய் விழுந்து பெருமாளை வணங்கும் சிற்பம் இம்மண்டபத்தில் அமைத்துள்ளனர்.


கருடக்கொடி 
கருவறையில் நின்ற கோலத்தில் நெடியோனாக  வடிவாய் மார்பில் பெரிய பிராட்டியாருடன் சங்கு, சக்கரம், கதை தாங்கி தான முத்திரையுடன் எழிலாக, மந்தகாச புன்னகையுடன்   திருமங்கையாழ்வாரை மயக்கிய நாகை அழகியாராக நீலமேகப்பெருமாள் சேவை சாதிக்கின்றார். தங்க கவசத்தில் பெருமாளை சேவிக்க ஆயிரம் கண் வேண்டும். இவர் இடையை இத்திருத்தலத்திற்கே உரிதான சிறப்பான தசாவதார ஒட்டியாணம் அலங்கரிக்கின்றது. உற்சவர் சௌந்தர்யராஜ பெருமாள் உபய நாச்சியார்களுடன் சேவை சாதிக்கும் அழகே அழகு. “அன்னமும் கேழலும் மீனும் ஆய ஆதியை நாகை அழகியாரைஅதாவது முன்னம் அன்னமாகவும். வராகமாகவும், மீனாகவும் அவதரித்து உலகிற்கு முழுமுதற் கடவுளாக திருநாகையில் எழுந்தருளியுள்ள அழகிற் சிறந்த பெருமாள் என்று திருமங்கையாழ்வார் அச்சோ ஒருவர் அழகியவா!” என்று ஆச்சரியப்பட்டுப் பாடிய பெருமாளை விட்டு அகல வெகு நேரம் பிடித்தது. பிள்ளைப் பெருமாள் ஐயங்கார், திருக்குருகைப் பெருமான் கவிராயர், முத்துசுவாமி தீக்ஷிதர் ஆகியோரும் பெருமாளின் அழகில் சொக்கி பாடல்கள் பாடியுள்ளனர்.


தாயார் விமானம் 

இம்மண்டபத்தின் வடக்குப்பகுதியில் கிடந்த கோலத்தில் சேவை சாதிக்கும் அரங்கநாதர் சன்னதி அமைந்துள்ளது.  இந்த சன்னதியில்  எழிலான சிஷ்ட பரிபாலன துஷ்ட நிக்ரஹ நரசிம்மர் மூர்த்தம் உள்ளது.  எட்டுக்கரத்துடன் அஷ்டபுஜ நரசிம்மராக அருள் பாலிக்கின்றார். ஒரு கரம் பிரகலாதனை ஆசீர்வதிப்பது போலவும், ஒரு கரம் அபய முத்திரையாகவும் மற்ற கரங்கள்  கூடா இரணியணை வதம் செய்யும் கோலத்திலும், மேற்கரங்களில்  சங்கமும், சக்கரமும் தாங்கி  அற்புதமாக சேவை சாதிக்கின்றார்.  ஒரே சமயத்தில் பக்தனான பிரகலாதாழ்வானை காத்து அதே சமயம் துஷ்டனான இரணயனின் மார்பை பிளக்கும் அருமையான கோலம். 

கோஷ்டத்தில் அமைந்துள்ள அஷ்டபுஜ துர்க்கையும்  மிகவும் சக்தி வாய்ந்தவள். இம்மண்டபத்தின் உட்புற சுவற்றில் இந்த திவ்யதேசத்தின் புராணம் எழில் ஓவியமாக வரையப்பட்டுள்ளது. ஆலயம் மிகவும் சுத்தமாக புது வர்ண கலாபத்துடன் மின்னியது. இரண்டாம் பிரகாரத்தில் பிரம்மோற்சவ  காட்சிகளை அற்புத ஓவியமாக்கி மாட்டியுள்ளனர்மூலவரின் விமானம் ஐந்து தங்க கலசங்களுடன் தனி சிறப்பாக அமைந்துள்ளது. இவ்விமானம் சௌந்தர்ய விமானம் என்றும் பத்ரகோடி விமானம் என்றும் அழைக்கப்படுகின்றது.
சௌந்தர்ய விமானம் 
 தாயாரின் சன்னதிக்கு எதிரே உள்ள ஊஞ்சல் மண்டபம் எழிலாக பளபளக்கும் கருப்பு கிரேனைட் கற்களால் அருமையாக அமைந்துள்ளது. தாயார் மற்றும் ஆண்டாள்  விமானத்தில் கருடிகள்  காவல் காக்கின்றன. ஆண்டாள் நின்ற கோலத்தில் சேவை சாதிக்கின்றார்.  
கஜேந்திர மோட்ச சுதை சிற்பம் 


பறவை ரூபத்தில் கருடன் 
ஸ்ரீசௌந்தரராஜப்பெருமாள் ஆலயத்தில் மட்டுமே, ஸ்ரீசௌந்தர்யவல்லி தாயாருக்கு கருடிவாகனம் என்பது வேறெங்கிலும் இல்லாத தனிச்சிறப்பு. இத்திருக்கோயிலில் கருடபகவானை  ஸ்ரீசௌந்தரராஜ  பெருமாளே வீற்றிருக்கச் செய்ததால், இந்த சந்நிதியில் மட்டும் கருடபகவானுடன்  கருடியும் வாகனமாக சேர்ந்து எழுந்தருளி உள்ளார். ஆகையால், பெருமாள் கருடவாகனத்திலும், தாயார் கருடிவாகனத்திலும் சேர்ந்துஎழுந்தருளி, பக்தர்களுக்கு சேவை சாதிப்பர். அதன் படி, ஸ்ரீசௌந்தர்யவல்லித் தாயாரின் ஆனி பிரம்மோற்சவத்தின் நான்காம்   திருநாள் காலை 10 மணிக்கு மூலவர் ஸ்ரீசௌந்தர்யவல்லித் தாயாருக்கு சிறப்பு அலங்காரத் திருமஞ்சனம் நடைபெறுகின்றது. மாலை 6 மணிக்கு உற்சவர் ஸ்ரீசௌந்தர்யவல்லித் தாயார், வெள்ளி கருடி வாகனத்திலும், ஸ்ரீசௌந்தரராஜ பெருமாள் வெள்ளி கருட வாகனத்திலும் எழுந்தருளி , கோயில் நந்தவனத்தில் வலம் வந்து சேவை சாதிக்கின்றனர். கருட வாகனத்தின் சிறகுகள் மேல் நோக்கிய நிலையில் உள்ளன. கருடி வாகனத்தின் சிறகுகள் கீழ் நோக்கிய நிலையில் உள்ளன.  கோதை நாச்சியாரும் திருவாடிப்பூர அவதார பிரம்மோற்சவத்தின் போது நான்காம் திருநாள் இரவு கருடி வாகனத்தில் சேவை சாதிக்கின்றார்

     அன்னமும் கேழலும் மீனு மாய
     ஆதியை நாகை யழகியாரை
     கன்னிநன் மாமதின் மங்கை வேந்தன்
   காமறு சீர்கலி கன்றி...
என்று திருமங்கையாழ்வார் , பரகால நாயகியாக அனுபவித்த பெருமாளை,   
 நாகை அழகியாரை  திவ்யமாக சேவித்த பின்னர் திருக்கண்ணபுரம் சென்றோம். அந்த அனுபவத்தை அடுத்த பதிவில் காணலாம் அன்பர்களே. 

3 comments:

துளசி கோபால் said...

ஹைய்யோ!!!!!

எதைச் சொல்ல எதை விட?


கருடியைச் சுட்டுக்கொண்டேன். நன்றி.

S.Muruganandam said...

எந்தப்படம் வேண்டுமென்றாலும் பயன் படுத்திக்கொள்ளுங்கள் துளசி அம்மா.

துளசி கோபால் said...

மனம் நிறைந்த நன்றி கைலாஷி.

இன்றையப்பதிவு நம்ம நாகை சௌந்தர்யராஜன் தான்:-)