திருக்கண்ணமங்கை நெடிய கருடன்
பக்தவத்சல பெருமாள்
திருமணத்தில் தடை உள்ளவர்கள், குழந்தை பாக்கியம் வேண்டுபவர்கள், வேலை வேண்டுபவர்கள், நினைத்தது நடக்க வேண்டுபவர்கள் இவரை வலம் வந்து வழிபாடு செய்கிறார்கள். கருடனுக்கு பக்தர்கள் புடவையை காணிக்கையாக அணிவிக்கின்றனர். பாம்புக்கு கருடன் பகையாதலால் பாம்பின் தோலை உரித்து புடவையாக கருடன் அணிந்து கொள்வதாக ஐதீகம். எட்டு கஜத்திற்கும் நீளமான, கட்டங்கள் அச்சிடப்பட்ட புது சேலைகளை கருடனுக்கு இத்தலத்தில் சார்த்தப்படுகின்றது. இதனால் சர்ப்ப தோஷம் விலகுகிறது என்பது ஐதீகம். மிகவும் வரப்பிரசாதியான இவரை ஞாயிற்று கிழமைகளிலும், இவரது திருநட்சத்திரமான ஸ்வாதியன்றும் விசேஷமாக திருமஞ்சனம் செய்தும் அமிர்த கலசம் நிவேதனம் செய்யும் அன்பர்கள் தங்கள் விருப்பங்கள் நிறைவேறப் பெறுகிறார்கள்.
பண்ணினைப் பண்ணில் நின்றதோர் பான்மையைப்
பாலுள் நெய்யினை மாலுருவாய் நின்ற
விண்ணினை விளங்கும் சுடர்ச் சோதியை
வேள்வி யைவிளக் கினொளி தன்னை
மண்ணினை மலையை யலை நீரினை
மாலை மாமதியை மறையோர் தங்கள்
கண்ணினைக் கண்களாரளவும் நின்று
கண்ணமங்கையுள்கண்டுகொண்டேன் என்று திருமங்கையாழ்வார் மங்களாசாசனம் செய்த திருக்கண்ணமங்கை தலத்தில்
மூலவர்: பக்தவத்சலப் பெருமாள். பத்தராவிப் பெருமாள் கிழக்கு நோக்கி நின்ற திருக்கோலம். மிகவும் பிரம்மாண்டமான பேரழகு பொருந்திய கோலம்.
தாயார் : கண்ணமங்கை நாயகி
உற்சவர் : பெரும் புறக்கடல்
தாயார் : ஸ்ரீ அபிஷேகவல்லி
தீர்த்தம் : தர்சன புஷ்கரிணி
விமானம் : உத்பாலவதக விமானம்.
தல விருட்சம் : மகிழ மரம்
இரத சபதமி புறப்பாடு
திருக்கண்ண மங்கை ஆனி மாத ஜேஷ்டாபிஷேக
கருட சேவை
நன்றி : www.anudinam.org
இத்தலத்தின் தல வரலாறு பாற்கடலைக் கடைந்த போது மற்ற மங்கலப்பொருட்களுடன் மஹா லக்ஷ்மியும் தோன்றினாள். பாற்கடல் கடைந்த தோற்றத்துடன் இருந்த பெருமானின் நிலைகண்டு, மிகவும் நாண முற்ற திருமகள், அவரை நேரில் பார்த்துக்கொண்டிருக்க வெட்கப்பட்டு இத்தலத்திற்கு வந்து பாற்கடலிலிருந்து வெளியேறிய அத்தோற்றத்தையே கண்ணுள் கொண்டு எம்பெருமாளைக் குறித்து தவம் இருக்கலானாள். மஹா லக்ஷ்மியின் தவமறிந்த திருமால் அவளை ஏற்றுக் கொள்ள நினைத்து விஷ்வக்சேனரிடம் முகூர்த்த நாள் குறித்துக் கொடுத்தனுப்ப விஷ்வக்சேனர் அதைக் கொணர்ந்து பிராட்டியிடம் சேர்ப்பிக்க, பிறகு முப்பத்து முக்கோடி தேவர்கள் புடை சூழ்ந்து காண இவ்விடத்தே எம்பெருமான் திருமகளை மணம் புரிந்துகொண்டார். மகாலட்சுமியை அடைய எம்பெருமான் தன்னுடைய (சிந்துவை) பாற்கடலை விட்டு புறத்தே வந்து இங்கு எழுந்தருளியதால் “பெரும்புறக்கடல்" என்பதே பெருமாளின் திருநாமம். எனவே இத்திருத்தலத்தில் விஷ்வக்சேனர் இரண்டு திருக்கரங்களுடன் சேவை சாதிக்கின்றார்.
ஆடும் புள்ளேறி ஓடி வந்த மாயன்
மஹா லக்ஷ்மி தவம் இருந்ததால் "லக்ஷ்மி வனம்" என்றும், ஒரு தலத்திற்கு இருக்க வேண்டிய விமானம், ஆரண்யம், மண்டபம், தீர்த்தம், க்ஷேத்திரம், நதி, நகரம் ஆகிய ஏழு லட்சணங்களும் அமைந்துள்ளதால், "ஸப்த புண்ய க்ஷேத்திரம்" அல்லது "ஸப்தாம்ருத க்ஷேத்திரம்" என்றழைக்கப்படுகின்றது. மந்திர சித்தி இல்லாவிட்டாலும், ஒரு இரவில் இந்த தலத்தில் வாசம் செய்தால் மோட்சம் கிட்டும் என்பது ஐதீகம்.பக்தர்களுக்கு விரைந்து வந்து அருள் புரிவதால் "பத்தராவிப்பெருமாள்" என்றும் அழைக்கப்படுகின்றார். பெரும் புறக்கடல் பத்தராவி என்ற இவ்விரண்டு திருநாமங்களையும் திருமங்கையாழ்வார் தமது பாசுரத்தில்,
“பெரும்பு றக் கடலையட லேற்றினைப்
பெண்ணை யாணை, எண்ணில் முனிவர்க்கருள்
அருந்தவத்தை முத்தின்திரள் கோவையை பத்தராவியை” என்று மங்களாசாசனம் செய்துள்ளார்.
தர்சன புஷ்கரணி
அம்பரமூடுறுத்து ஓங்கி உலகளந்த போது பிரம்மா பாத பூஜை செய்த போது சிதறிய துளியிலிருந்து தோன்றியதே "தர்சன புஷ்கரணி" ஆகும். இந்த தர்சன புஷ்கரிணியின் நீரினை எடுத்து பிராட்டிக்கு பட்டமகிஷியாக பகவானால் அபிஷேகம் செய்யப்பட்டதால் இந்தப் பிராட்டிக்கு "அபிஷேகவல்லி" என்ற திருநாமமும் உண்டு. சந்திரன் தனது குருவின் பத்னியுடன் கூடியதால் உண்டான பாவம் தீர இந்த தர்சன புஷ்கரணியில் நீராடி பக்தவத்சல பெருமாளை வழிபட்டு தன் பாவமும் சாபமும் தீரப்பெற்றான்.
இத்தலத்தில் நடந்த திருமால் - திருமகள் திருமணத்தை காண தேவர்கள் கூட்டம் கூட்டமாக வந்து குவிந்ததோடு, எப்போதும் இந்த திருக்கோலத்தை கண்டு கொண்டே இருக்க வேண்டும் என நினைத்தார்கள். எனவே தேனீக்கள் வடிவெடுத்து கூடுகட்டி அதில் இருந்து கொண்டு தினமும் பெருமாளின் தரிசனம் கண்டு மகிழ்கிறார்கள்.
பெருமாள் விமானம்
இத்தலத்தின் கோஷ்டத்தில் அருமையான பல சிலைகள் உள்ளன அவற்றுள் மிகவும் சிறப்பானவை ஆதி சேஷன் குடைபிடிக்க அமர்ந்த கோல வைகுண்ட நாதன் சிலையும், கஜேந்திர மோட்ச, கருடன் சேவை சிலையும் மிகவும் அருமை.
நாத முனிகளின் சீடர் திருக்கண்ணமங்கையாண்டான் என்பவர் இவ்வூரில் பிறந்தவர். அவர் இப்பெருமானிடம் மிகுந்த ஈடுபாடு கொண்டு இக்கோவிலின் உட்புறத்தே புல்லினைச் செதுக்கிச் சுத்தப்படுத்திக்கொண்டு இப்பெருமானே அடைக்கலம் என்று இருந்தவர். ஒரு நாள் இவர் வேத பாராயணஞ் செய்து கொண்டு இக்கோவிலுக்குள் நுழையும் பொழுது திடீரென நாய் வடிவங்கொண்டு மூலஸ்தானத்திற்குள் ஓடி ஜோதியாகி இறைவனுடன் கலந்தார். இன்றும் ஆனி மாதம் திருவோண நட்சத்திரம் இவரின் நட்சத்திரமாகக் கொண்டாடப்படுகிறது.
இவ்வளவு பெருமைகள் பெற்ற இவ்வாலயத்தில் பெருமாள் நெடியோனாக சேவை சாதிப்பதால் திருக்கோவில் முழுவதும் மிகவும் உயராமாக அமைந்துள்ளது. முன் மண்டபத்தில் காற்றும் வெளிச்சமும் வரும்படி அமைத்துள்ள பலகணிகள் இத்தலத்திற்கே ஒரு தனி சிறப்பு ஆகும். பட்டர் தல புராணத்தை கூரியபடியே அருமையாக சேவை செய்து வைத்தார். குறிப்பாக எம்பெருமானின் திருவடிகளையும் அமர்ந்து சேவிக்கலாம் என்று காட்டிக்கொடுத்தார் இதற்குப்பிறகு அடியோங்கள் சேவித்த அனைத்து பெருமாள்களின் திருவடி சேவையும் பெற்றோம்.
பட்டர் கூறிய வியாக்கியான சக்கரவர்த்தி பெரியவாச்சான் பிள்ளையைப் பற்றிய ஒரு அருமையான வரலாறு. இத்தலத்தின் பாசுரத்தின் நிறைவில் திருமங்கையாழ்வார்
மெய்ம்மை சொல்லின் வெண்சங்கம் ஒன்று ஏந்திய
கண்ணா நின்தனக்குக் குறிப்பாகில்,
கற்கலாம் கவியின் பொருள்தானே"
என்று திருக்கண்ணமங்கைக் கண்ணன் தம் திருமொழியின் அர்த்தங்களை அறிந்துகொள்ள வேண்டும் என்று ஆசைப்படுவதை அறிந்து “நீ என்னிடமிருந்து கவியின் பெருளைக் கற்றுக் கொள்ளலாம்” என்று கூறியதை கேட்ட கண்ணனும் அவசியம் கற்றுக்கொள்கிறேன் என்றார்.
பின்னர் ஆழ்வார் தாம் அவதரித்த அதே கார்த்திகையில் கார்த்திகை நட்சத்திரத்தில் நம்பிள்ளையாக அவதரித்தார். பெருமாளும் கண்ணன் அவதரித்த ஆவணியில் ரோகிணி நட்சத்திரத்தில் பெரியவாச்சான் பிள்ளையாக அவதரித்து, நம்பிள்ளையின் சீடராக இருந்து திவ்ய பிரபந்தங்களின் பொருள்களையெல்லாம் கற்று நாம் எல்லோரும் உய்ய வியாக்கியானம் செய்து அருளினார்.
பிறகு தாயார் சன்னதியில் தாயாரை திவ்யமாக சேவித்தோம். தாயார் சன்னதியின் அர்த்த மண்டபத்தின் இரு பக்கமும் தேனீக்கள் கூடு கட்டுகின்றன. உத்தராயணம் மற்றும் தட்சணானயத்தில் இரு பக்க்மும் மாறி மாறி கூடு கட்டுகின்றவாம். தற்போது துணி போட்டு மறைத்து வைத்திருக்கின்றனர். பிறகு சூடிக்கொடுத்த சுடர்க்கொடியாளை சேவித்தோம். மறுபடியும் பெரிய தனி சன்னதியில் அஞ்சலி ஹஸ்தத்துடன் சேவை சாதிக்கும் கருடபகவானை சேவித்தோம்.
இத்தலத்தாயார் மேல் சைவரான இராமலிங்க சுவாமிகள்
"உலகம் புரக்கும் பெருமான்றன்
உளத்தும் புயத்தும் அமர்ந்தருளி
உவகையளிக்கும் பேரின்ப உருவே
எல்லாம் உடையாளே
உளத்தும் புயத்தும் அமர்ந்தருளி
உவகையளிக்கும் பேரின்ப உருவே
எல்லாம் உடையாளே
திலகஞ் செறி வாணுதற் கரும்பே
தேனே, கனிந்த செழுங்கனியே
தெவிட்டா தன்பர் உள்ளத்துள்ளே
தித்தித்தெழுமோர் தெள்ளமுதே
மலகஞ் சகத்தேர் கருளளித்த வாழ்வே
யென் கண்மணியே யென்
வருத்தந் தவிர்க்க வரும் குருவாம்
வடிவே ஞான மணிவிளக்கே
வடிவே ஞான மணிவிளக்கே
சலகந்தரம் போல் கருணை பொழி
தடங்கண் திருவே கண்ணமங்கை
தாயே சரணஞ் சரணமிது தருணங்
கருணை தருவாயே”
இப்பெருமாளைப் பற்றிக் காளமேகப்புலவர்
“நீல நெடுங்கடலோ நீலமணிக் குன்றமோ”
கோலம் சுமந்தெழுந்த கொண்டலோ - நீல நிறக்
காயா மலரோ களங்கனியோ கணமங்கை மாயா உனது வடிவு என்று அனுபவித்து பாடியுள்ளார்.
இத்தலத்திற்கும் திருநின்றவூருக்கும் நிறைய ஒற்றுமைகள் உள்ளன, இரு தலமும் தாயார் பெயரால் அறியப்படுகின்றன. இரு தலத்திலும் பெருமாளின் திருநாமம் பக்தவத்சலன் நின்ற கோலம். திருமங்கையாழ்வார் "குருமாமணிக்குன்றினை நின்றவூர் நின்ற நித்திலத் தொத்தினை, காற்றினை புனலைச் சென்றுநாடிக் கண்ணமங்கையுள் கண்டு கொண்டேனே" என்று பாடியுள்ளார்.
பின்னர் திருவாரூர் வந்து இரவு தங்கினோம். இன்றைய தினம் திருவெள்ளியங்குடியில் சங்கு சக்கரங்களுடன் அமர்ந்த கோல கருடனையும், திருநறையூரில் கல் கருடனையும், எண்கண் தலத்தில் நித்ய கருட சேவையையும், நிறைவாக திருக்கண்ணமங்கையில் நெடிய கருடனையும் சேவித்தோம். மறுநாள் எந்தெந்த திவ்ய தேசங்களில் எந்தெந்த சிறப்புக் கோல கருடன்களை சேவித்தோம் என்பதை அடுத்த பதிவில் காணலாம் அன்பர்களே.
2 comments:
அருமை
மிக்கநன்றி பாரதி
Post a Comment